சிறுவர் இலக்கியத்தில் மொழிநடைச் சிக்கல்கள்

Saturday, 28 December 2019 01:05 - முனைவர். செ.சாந்திகுமாரி - இலக்கியம்
Print

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


இலக்கியப் படைப்பாக்கம் என்பது வாசகரை மையமிட்டு அமைவது. அவ்வகையில் சிறுவர்களை மையமிட்டு இயற்றப்பெறும் சிறுவர் இலக்கியங்கள் சிறுவர்களுக்கானவையாகவும், சிறுவர்களைப் பற்றியவையாகவும் இருவேறு கோணங்களில் அமைகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் சிறந்த சிறுவர் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளன. சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் பெரும்பாலும் அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இந்நிலையில் சிறுவர்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகச் சிறுவர் இலக்கியங்கள் அமைய வேண்டும் என்ற கருத்தாக்கமும் உள்ளது. இந்நிலையில் சிறுவர்களின் மனம் எத்தகையது? அவர்கள் பெரியவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள்? சிறுவர்கள் இப்பிரபஞ்சத்தோடு கொள்ளும் உறவுநிலை எத்தகையது? என்பன போன்ற குறிப்பிட்ட சில கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் அமைகின்றன. இப்போக்கை அடியொற்றிய படைப்புகளைச் சிறுவர் இலக்கியங்கள் என்று ஏற்றுக்கொள்வது சிக்கலுக்குரியது. காரணம், சிறுவர்களின் மனத்தை அறிந்து கொள்ளாதவர்கள் பெரியவர்கள். சிறுவர்களைப்; பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் படைக்கப்பெறுபவை. ஆனால், இதனைப் பெரும்பாலான படைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. படைப்பாளர்களின் நிலை இத்தகையது எனில் வாசகர்களின் மனநிலையைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான், கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, புதுமைப்பித்தனின் மகாமசானம், கி.ரா.வின் கதவு போன்ற சிறுகதைகள் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புகளாக இன்றுவரை கருதப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சிறுவர் இலக்கியத்தை வளர்த்தெடுப்பவர்கள் படைப்பாளர்களாகவே உள்ளனர். படைப்பாளர்கள் படைத்துள்ள சிறுவர்களுக்கான இலக்கியங்களில் அவரவர்க்கான தனித்தன்மைகளும், குறிப்பிடத்தக்க சில பொதுத்தன்மைகளும் காணப்படுகின்றன. படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறுவர் இலக்கியத்தைப் படைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறுவர் இலக்கியத்திற்கென்று தனித்த வரையறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரியவில்லை. அவரவர்களுக்குத் தக்கவாறு வரையறைகளை வரையறுத்துக்கொண்டு இலக்கியம் படைக்கின்றனர் என்பதைச் சிறுவர் இலக்கியப் படைப்பாளர்களின் வரையறைகள் புலப்படுத்துகின்றன.

உதாரணமாக, அழ.வள்ளியப்பா, பூவண்ணன், ஆர்வி, கல்வி கோபாலகிருஷ்ணன், பெ.தூரன், செல்ல கணபதி. நாரா.நாச்சியப்பன், அம்புலிமாமா சுவாமிநாதன், வாண்டுமாமா, ராஜரங்கன், ஜோதிர்லதா கிரிஜா, ஆனந்தி ராமசந்திரன், கூத்தபிரான், மலையமான், கொ.மா.கோதண்டம், பி.வி.கிரி போன்ற படைப்பாளர்களின் வரையறைகள் குறிப்பிடத்தக்கவை. இவர்களின் வரையறைகள் சிறுவர் பாடல்கள், கதைகள், நாவல், நாடகம், கட்டுரை என்று வகை சார்ந்தும், வயது, மொழி எனப் பாடுபொருள் சார்ந்தும் அமைந்துள்ளன.

சிறுவர் இலக்கியத்தில் மொழிநடை முக்கியப் பங்கு வகிக்கின்றது. சிறுவர் இலக்கியத்துக்கான மொழிநடை என்னும் நிலையில் சிலர் பேச்சு வழக்கிற்கும் சிலர் எழுத்து வழக்கிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர்.

பேச்சு வழக்கைப் பொருத்தவரை மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், புழங்குபொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் வாழ்கின்ற குழந்தைகளுக்குத் தெரியும் சொற்களுக்கும், கிராமப்புறங்களில் வாழ்கின்ற குழந்தைகளுக்குத் தெரியும் சொற்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. மேலும் தமிழ்நாட்டில் வட்டார நிலைகளுக்கு ஏற்ப சொற்கள் மாறுபடுகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இலக்கியம் படைக்கப்பெறுவது சாத்தியம் குறைவான ஒன்றே ஆகும்.  இந்நிலையைத் தவிர்க்கப் படைப்பாளர்கள் பெரும்பாலும் எழுத்து வழக்கில் எளிமையைக் கையாண்டு இலக்கியம் படைக்க வேண்டியுள்ளது. இங்கு, பெ.தூரனின்  மொழிநடை குறித்த கருத்துக் குறிப்பிடத்தக்கது.

'பட்டணங்களில் வாழ்கின்ற குழந்தைகளுக்குத் தெரியும் சொற்களுக்கும், நாட்டுப்புறங்களில் வாழும் குழந்தைகளுக்குத் தெரியும் சொற்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. கிராமங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளை எண்ணிப்பார்க்கும்போது இந்த வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கும். மேலும் நெல்லைத் தமிழ், செட்டிநாட்டுத் தமிழ், கொங்குநாட்டுத் தமிழ், மதுரைத் தமிழ் -இப்படித் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் புழக்கத்திலிருக்கும் சொற்கள் மாறுபடுகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான இலக்கியம் படைக்கப்பெறல் வேண்டும்.'  

பெ.தூரன் கூறுவதுபோல் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கும், நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கும் சொல் மாறுபாடு, சொற்களைப் பயன்படுத்;தும் முறை ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடு உண்டு. இதே நிலையை வட்டாரம் சார்ந்தும் பார்க்க வேண்டியுள்ளது. வட்டார மொழிநடையைக் கருத்திற்கொண்டு இலக்கியம் படைத்தல் சிறப்பானதாகவே இருந்தாலும் அது நடைமுறைக்கு வந்தால் இலக்கியப் பொதுமையாக்கம் இல்லாமல் போகும். அது வட்டார இலக்கியமாக மட்டுமே கருதப்படும். எனவே எளிமையாக அனைத்து வட்டாரச் சிறுவர்களுக்கும் பொருந்தும்படியான இலக்கிய நடையே சரியானதாக இருக்க முடியும். 

குழந்தைகளின் வயதிற்குத் தகுந்தபடி அவர்கள் அறிந்துள்ள மொழிவளத்திற்கேற்ப எளிய சொற்களையும், இனிய சந்தங்களையும் பயன்படுத்தி எழுத வேண்டும் என்பதில் அழ.வள்ளியப்பா, பூவண்ணன், வாண்டுமாமா, அம்புலிமாமா போன்ற பலரும் ஒத்த கருத்துடையவர்களாகக் காணப்படுகின்றனர். ஜோதிர்லதா கிரிஜா,

'சிறுவர் இலக்கியத்தில் வழக்கில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துதல் சரியில்லை. சொற்கள் வழக்கில் உள்ளவை என்பதோடு சிறுவர்களுக்குப் புரியக்கூடிய எளிமை கொண்டு அவை விளங்க வேண்டும்'    என்று புலப்படுத்துகின்றார்.  ஆயினும் ஆனந்தி ராமசந்திரன், இவர்களிலிருந்து சற்று மாறுபட்ட கருத்தை வலியுறுத்துகிறார்.

'மிகவும் எளிய வார்த்தைகளையே உபயோகித்து எழுதுவது சரியென்று தோன்றவில்லை. புதிய வார்த்தைகளை அறிந்து, அவற்றின் ஒலி நயம், பொருள் நயங்களைக் குழந்தைகள் அனுபவிக்கும்படி செய்ய வேண்டும். குழந்தையின் மன வளர்ச்சிக்கு இதுவும் அவசியம்;.' 

இவர்தம் கருத்து ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும், இதிலும் சில சிக்கல்கள் உள்ளன.    சிறுவர்களுக்கான இலக்கியம் இயற்றுபவர்கள் புதிய சொற்களை, சொற்கூட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பெயரில் சில இடங்களில் கடினமான சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அச்சொற்கள் சிறுவர்களுக்குப் பழக்கமில்லாத சொற்களாக இருப்பதால் அவர்களால் எளிதில் பொருள் புரிந்துகொள்ள இயலுவதில்லை. அவ்வாறு கடினச் சொற்களைப் பயன்படுத்தினாலும் அச்சொற்களுக்குரிய பொருளை அப்பக்கத்தின் இறுதியில் கொடுத்தால் பொருள் அறிதலுக்கு உதவியாக இருக்கும். பெரும்பாலான படைப்பாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு செய்தால் மட்டுமே ஆனந்தி ராமசந்திரன் கூறுவது சரியானதாக அமையும். இந்நிலையில் சொற்களுக்குப் பொருள் கூறுதலும் தவறு என்று கூறும் படைப்பாளர்களும் உள்ளனர்.

சிறுவர்களுக்கான மொழிநடை குறித்து அம்புலிமாமா சுவாமிநாதன் பின்வருமாறு விளக்குகிறார்.

'சிறுவருக்கு எழுதும் எழுத்தாளர்கள் தமது புலமையை வெளிப்படுத்தாமல், எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். வழக்கிலுள்ள சொற்களைப் பயன்படுத்த வேண்டும். வழக்கிலுள்ள சொல் எந்த மொழியிலிருந்து வந்ததானாலும் அதுபற்றிக் கவலைப் படாமல் உபயோகப்படுகிற விதத்திலேயே தம் எழுத்துகளிலும் கையாள வேண்டும். ஆங்கிலம், வடமொழி, பாரசீகம் ஆகிய மொழிகளிலிருந்து வந்த பல சொற்கள் நம் அன்றாடப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றை அப்படியே பயன்படுத்தினால்தான் சிறுவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படி உபயோகப்படுத்தாமல் தூய தமிழாக்கிக் கொடுத்தால் அது சிறுவர்களுக்குத் திருப்தியையோ மகிழ்ச்சியையோ அளிக்காது. படிக்க ஆசைப்பட்டால் கூடச் சில சமயங்களில் இத்தகைய புதுத் தமிழாக்கச் சொற்களைக் கண்டு மிரண்டு அத்தகைய புத்தகங்களை ஆரம்பத்தில் சில வரிகளைப் படித்ததுமே கீழே வைத்துவிடுவார்கள்.'  

இவரது கருத்து ஏற்புடையதாக உள்ளது. இங்கு மொழிநடை குறித்த அழ.வள்ளியப்பாவின் கருத்தும் குறிப்பிடத்தக்கது.

'கொச்சைச் சொற்களையும் ஆங்கிலச்  சொற்களையும் சிலர் பாடல்களில் கையாண்டு வருகின்றனர். ஒருசில சந்தர்ப்பங்களில், அவசியமான இடங்களில் இவற்றைச் சேர்ப்பதில் தவறில்லை. அளவுக்கு அதிகமாகப் பிறமொழிச் சொற்களைச் சேர்த்தால், குழந்தைகளால் குறிப்பாகக் கிராமப்புறக் குழந்தைகளால் புரிந்துகொள்ள இயலாது. சொற்களின் உண்மையான வடிவத்தைச் சரியாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பே வடிவம் சிதைந்த கொச்சைச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தினால், குழந்தைகள் உள்ளத்தில் குழப்பந்தான் விளையும்.'  

பிறமொழிச் சொற்களை முற்றிலும் நீக்க வேண்டுமென்று அழ.வள்ளியப்பா குறிக்காவிட்டாலும்  அவரது கருத்து பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை மறைமுகமாக கூறுவதாக உள்ளது.

தாய் மொழியோடு கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களாகிய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆனந்தி ராமசந்திரன், அம்புலிமாமா சுவாமிநாதன் ஆகியோர் கூறுகின்றனர். இவ்வாறு சொற்களைப் பயன்படுத்துவதில் படைப்பாளர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இருப்பினும் பொதுவான மொழிப்பயன்பாடு என்பது சிறுவர் இலக்கியத்தைப்; பொறுத்தவரை, தெளிவுபடுத்தப்படாத நிலையில் உள்ளது.

ஒட்டுமொத்தமாகச் சிறுவர் இலக்கியம் என்பது உருவம், உள்ளடக்கம், உத்திமுறை ஆகியவற்றின் அடிப்படையில் இதுதான் என்பதை வரையறுப்பதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் சிறுவர் இலக்கியத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் வேறுபட்ட கருத்துகளுக்கு படைப்பாளர் ஒவ்வொருவரிடமும் காணப்படும் தனிப்பட்ட கருத்து நிலைகள், வாழ்வியல் பணியிடச் சூழல்கள், சமூக, சமய இயக்கப் பின்னணிகள், மொழி பற்றிய கருத்தாக்கங்கள், அறவியல் சார்ந்த சமூக விழுமியங்கள் ஆகியவை காரணிகளாக அமைகின்றன.

*கட்டுரையாளர்: முனைவர். செ.சாந்திகுமாரி, உதவிப் பேராசிரியர், ராஜேஸ்வரி மகளிர் கலை, மற்றும் அறிவியல் கல்லூரி, பொம்மையபாளையம்.

Last Updated on Saturday, 28 December 2019 01:41