மணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்

Friday, 06 December 2019 08:19 - செ.மகாலட்சுமி ( கோவை ) - இலக்கியம்
Print

செ.மகாலட்சுமிகாப்பியத் தலைவியின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வியல் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.

மனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,

“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின்
மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையும் அல்லது
கண்டது இல்”  (மணி 25 – 228-231)


என்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
(மணி 11 – 95-96)

என்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

“ஆற்றுநர்க்கு அளிப்போர்அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை”
(மணி 11 – 92-94)

என்ற வரிகளின் மூலம் உண்மை நெறியில் வாழ்பவர், பசித்துயரால் ஆற்றாது தவிப்பவர்களின் துன்பத்தைத் துடைப்பவர்களே யாவர் என்று கூறுகிறார். பசிப்பிணியை மாற்றும் பணியில் ஈடுபடுத்தியது எத்தகையது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். பசிப்பிணி ஆற்றுவது ஒன்றே பயன் கருதாது செய்யப்படும் அறப்பணி என்ற கருத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அன்பு செலுத்துதல்
பிறருக்கு கொடுப்பது மட்டும் அறம் ஆகிவிடாது. எண்ணத்தளவிலும் துாய பண்புடையவராக வாழ்வதும் அடிப்படைத் தகுதியாகும் என்கிறார். அதனைக்,

“ கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவுமென்று உரவோர் துறந்தவை”
(மணி 24– 77-80)

என்ற வரிகள் மூலம் அன்புடையவராக வாழ்வதும் சிறந்த அறம் என்று கூறுகிறார். மனிதன், மனிதன் மேல் வைக்கும் அன்பு மட்டும் சிறந்ததாகக் கருதப்படாது பிற உயிர்களின் மேலும் அன்புடையவராக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது,

‘ எவ்வுயிர்க் காயினும் இரங்குதல் வேண்டும்’

என்கிறார்.ஆபுத்திரன் அந்தணர் வீட்டில் இருக்கும் போது பசு ஒன்று யாகத்தில் வீழ இருந்தது. அதனைக் காப்பாற்றுவதற்காக தன் வாழ்க்கையை திசை மாறிப் போனதை மணிமேகலையில் பார்க்க முடிந்தது. தன் வாழ்க்கையை இழந்தாலும் பிற உயிர்களின் மேல் அன்பு இருக்க வேண்டும் என்பதை இப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது. அவ்வாறு செய்தால்

“ நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லது செய்தோர் அருநரகு அடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்”
(மணி 16 – 88-90)

என்ற வரிகளின் மூலம் நல்லுலகம் அடைய வேண்டும் அனைவரும் நல்லறம் செய்ய வேண்டும் என்கிறார். ஆகையால் நல்லது செய்து நல்லுலகு அடைவதே மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

கற்புநெறி
தமிழரின் பண்பாட்டில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது கற்பு நெறியாகும். நாகரீக உலகில் கற்பு என்பது திசை மாறிப் போகிற சூழலில் இத்தகைய இலக்கியங்களே பழைய பண்பாடுகளைக் காத்து வருகிறது. பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட காப்பியத்தில் பெண்களுக்கு கற்பு வேண்டும் என்பது பெருமைக்குரியதாகும். இதனைத்தான்,

“நிறையில் காத்துப் பிறர்பிறா்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி”  (மணி 18– 100-120)

என்று கற்புக்கு இலக்கணம் கூறுகிறார். அவ்வாறு கற்புடைய பெண்கள் வாழ்ந்தார்களே என்றால் அந்த ஊரில் மும்மாரி மழை பொழியும் என்கிறார். இத்தகைய கூற்றினை வள்ளுவருடைய,
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் என்ற வரிகளும் கூறுகிறது. இதனையே சாத்தனார்,

“மண்டினி ஞாலத்து மழைவளம் தரும்
பெண்டி ராயின் பிறா்நெஞ்சு புகா அர்”
(மணி 22– 44-45)

என்ற வரிகளின் மூலம் முறையான பத்தினிகள் உள்ள ஊரில் அவர்களுக்காக வேணும் மழை பொழியும் என்று கூறுகிறார். அத்தகைய நெறியில் நடப்பவர்களை இந்த உலகம் போற்றுவதோடு கடவுளாக வணங்கும் என்பதை சிலப்பதிகாரத்திலும் பார்க்கிறோம். அதனைத்தான் மணிமேகலையிலும்,

“பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்
கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே”
(மணி 18– 15-16)

என்ற வரிகளின் மூலம் விளக்குகிறார். ஆகையால்தான் மாதவின் மகளாக இருந்தாலும் கூட மேகலையை உயர்ந்தோர் தொழுதனர்.

ஒரு படைப்பாளன் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் வெளியிடலாம் பிறருடைய படைப்புகளை எடுத்து அதனை மொழிபெயர்த்தும் தன்னை ஒரு புலவனாக காட்டிக் கொள்வதை இன்று நாம் பார்க்க முடிகிறது. ஆனால் சங்கப் புலவர்கள் அப்படிப்பட்டவள் அல்ல. தாம் ஒரு படைப்பை படைத்து வெளியிட்டாலும் இந்த சமூகம் இருக்கிற வரை அது பேசப்பட வேண்டும். அது மட்டுமல்லாது அந்த படைப்புகள் சமூகத்திற்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய தகுதி மிக்க இலக்கியங்களே இரட்டை காப்பியங்கள் ஆகும். காலத்தால் முற்பட்டதாக இருந்தாலும் கருத்துக்களால் என்றும் கவரப்படும் ஓர் இலக்கியம் அது இரட்டைக் காப்பியம் ஆகும். அதனடிப்படையில் எழுந்த மணிமேகலை சிறந்த வாழ்வியல் நூலாக இன்றளவும் வழங்கப்படுகிறது

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 06 December 2019 08:28