இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான 'புதுமை இலக்கியத்தில்'யில் வெளியான அ.ந.க'வின் 'கவிதை' கட்டுரையிலிருந்து சில பகுதிகள்! (பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம்)

Wednesday, 13 February 2019 00:08 - அறிஞர் அ.ந.கந்தசாமி - இலக்கியம்
Print

அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் ஜெயமோகன் ஈழத்துக் கவிஞர்கள் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வாதப்பிரதிவாதங்களை  எதிர்கொண்டு வருமிச்சூழலில் எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமி 1962இல் வெளியான 'புதுமை இலக்கியம்' சஞ்சிகையில் (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடு)  வெளிவந்த 'கவிதை' என்னும் தலைப்பிலான கட்டுரையின் ஞாபகம் வந்தது. அக்கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ஈழத்துக் கவிதை பற்றிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன். பெப்ருவரி 14 அ.ந.க.வின் நினைவு தினம் என்பதால் அதனையொட்டிய நினைவு கூர்தலாகவும் இப்பதிவினைக் கருதலாம்.


அ.ந.க.வின் 'கவிதை' கட்டுரையிலிருந்து:

"செந்தமிழின் பொற்காலம் என்று புகழப்படும் சங்க காலத்தில் கூட , ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவியிருந்தமைகுப் போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் போக்கை  எடுத்து விளக்க நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை போன்ற கவிதைத்திரட்டுகளைத் தமிழ்ச் சங்கம்  வெளியிட்டது.  இவற்றில், குறுந்தொகை, அகநானூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கின்றார்.  தமிழிலக்கியத்தின் சுவையறிந்து போலும் அவாமேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும்  உட்கொண்டுவிட்டது.  பெரியதோர் கவிஞர் பட்டியலில்  எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனாரும் ஒருவர்.  ஆனால் அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன்? இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களைப்பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கின்றது.

இன்றைய ஈழத்தில் தமிழின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் , ஒரு கவிவாணனின் கவிதையில் மலர்ந்த நாடு என்று கர்ண பரம்பரை கூறுகிறது. 'மணற்றி' என்ற பெயருடன் விளங்கிஅ இப்பிரதேசம், அந்தகக் கவி ஒருவனுக்கு அரசனொருவனால் அளிக்கப்பட்ட அன்பளிப்பு. எனவே தமிழ் ஈழத்தின் தந்தை  ஒரு கவிஞனென்று இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படலாம். "

"இதன் பின்னுள்ள காலத்தில் ஈழத்துக் கவிதை எந்நிலையில் இருந்தது?  இக்கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முடியாதிருக்கிறது.  முற்றிலும் இருள் சூழ்ந்த பல நூற்றாண்டுகள் இவ்வாறு கழிந்து போக, அரசகேசரி என்ற குறுநில மன்னன் காலத்தில் மீண்டும் மின்னலடித்தது போல் ஒளி வீசுகிறது.  அவ்வொளியிலே நாம் ஒரு பார காவியத்தைக் காண்கிறோம்.  அப்பாரகாவியத்தின் பெயர் 'இரகுவம்சம்'. காளிதாசனை முதநூலாகக்கொண்டு புலவனும் புரவலனுமாகிய அரசகேசரியே இதனைத் தமிழுலகத்திற்கு யாத்தளித்தான். அருகிவரும் இந்நூலைத் தமிழர்கள் யாராவது மீண்டும் பதிப்பிக்க முன்வர வேண்டும்.

அரசகேசரிக்குப் பிந்திய காலத்தில் ஈழத்தில் பல கவிஞர்கள் தோன்றிப்பல நூல்களை எழுதினர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பறாளை விநாயகர் பள்ளுப்பாடிய சின்னத்தம்பிப்புலவர், கனகி புராணம் பாடிய சுப்பையாப்புலவர், 'மேக தூதம்' , 'இராச மோதந்தம்' பாடிய சுன்னாகம் குமாரசாமிப்புலவர் முதலியவர்களாம். இவர்களைத்தாண்டியதும் நாம் நமது பரம்பரைக்கே வந்து விடுகின்றோம்."

" இலங்கையின் கவிதை வளர்ச்சியில் இக்காலத்தைப்பற்றித்தான் நாம் தெளிவாகப் பேசக்கூடியதாயிருக்கிறது.  இப்பரம்பரையின் முக்கிய பிரதிநிதிகளாக மூன்று கவிஞர்களை நாம் முக்கியமாக எடுத்துக்கொண்டால் இவ்வளர்ச்சியின் போக்கை அளவிடுதல் நமக்குச் சுலபமாயிருக்கும்.  நவாலியூர் ஶ்ரீ சோமசுந்தரப் புலவர், மாவைக் கணியன் வெண்ணெய்க் கண்ணனார் என்றழைக்கப்படும் ஶ்ரீ நவநீத கிருஷ்ண பாரதியார், நவாலியூர் சோ.நடராஜன்  என்ற மூவருமே  இவ்விதக்
கண்ணோட்டத்துக்குப் பெரிதும் உதவுவார்கள் என்று நான் நம்புகின்றேன். இம்மூவரும் தமிழ்க் கவிதையின் மூன்று திசைகளில் சஞ்சரிப்பவர்களாவர்."

"நவநீத கிருஷ்ண பாரதியார் பண்டிதர்கள் மட்டுமே விளங்கக்கூடிய கடின நடையில் தமது கவிதைகளை அமைத்தார்.  சங்க இலக்கியங்களில் ஊறித் திளைத்த அவர் சங்கக் கவிதானோ என்று பார்த்தோர் மயங்கும்படியான கவிதைகள் எழுதினார்.  இவர் எழுதிய நூல்களில் 'உலகியல் விளக்கம்' பெரிய நூல். இதற்கு பண்டிதர் மயில்வாகனார் என்னும் சுவாமி விபுலானந்தர் விரிவுரை எழுதியுள்ளார்.  'பாலை' இவர் எழுதிய சிறு நூல்.  இந்நூலை எழுதியமையால் இவர் பாலை பாடிய வெண்ணெய்க் கண்ணனார் என்று புகழ்ந்துரைக்கப்படுவதுண்டு.

ஶ்ரீ சோமசுந்தரப் புலவர் பழமையின் மடியில் பிறந்து அக்கவிதை மரபில் மூழ்கித் திளைத்தவரானாலும் புதுமைப் புயலும் அவர் கவிதைப் பூங்கொடி மீது படிந்து சென்றிருக்கிறதென்பதை அவர் எழுதிய சில கவிதைகளேனும் நன்கு காட்டுகின்றன. இவர் பாடிய சில குழந்தைப் பாடல்கள் இன்று இந்நாட்டின் தமிழ்க் குழந்தைகள் யாவராலும் பாடப்பெற்று வருகின்றன. 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை', 'கத்தரித்தோட்டத்து மத்தியிலே ' என்ற இவரது இரு பாடல்கள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவையாகும்.

இவர் பள்ளு, அந்தாதி, கும்மி, மாலை, பதிகம் , நாடகம், பதிற்றுப்பத்து ஆகிய பலவிதக் கவிதை நூல்களையும் யாத்துள்ளார். 'உயிரிளங்குமாரன்' இவர் எழுதிய கவிதை நாடகம்.  இது சைவ சித்தாந்தக் கருத்துகளை உருவகக் கதையாகச் சித்திரிக்கிறது. இவரது பாடல்கள் ஓசை நயமும் தெளிவும் கொண்டவையாக இருப்பதால் இவர் வெண்ணெய்க் கண்ணனாரிலும் பார்க்க  மக்களிடையே அதிக செல்வாக்குப் பெற்று விளங்குகின்றார். 

இவர்களில் பின்னாளில் தோன்றியவரே இன்று ஜீவந்தராயருக்கும் சோ.நடராஜன். இவர் நவாலியூர்ப் புலவரின் புதல்வர்.  தந்தையின் நிழலில் கவியாக்க ஆரம்பித்த தனயன். எனினும் இவர் சென்ற பாதை வேறு. ரவீந்திரர், காளிதாசன் கவிதைகள் இவரைக் கவர்ந்தன. பாரதியாரின் குயிலிசை அவரை  மயக்கியது. தேசிக விநாயகன் தேனிசையில் அவர் சொக்கினார். யோகியாரின் கவியின்பம் அவர் கவியுள்ளத்தைத் தொட்டது.   மேலே கூறிய கவிஞர்களின் காவிய மந்தமாருதம் சுற்றிலும்  மெல்லென வீசி நின்ற சூழ்நிலையிலே நடராஜனின் கவிதை பிறந்தது..

இவரிடம் நாம் காண்பது முதிர்ந்த புதுமை - இனிய சொல்லாட்சி. இயற்கையான கவியின் தன்னம்பிக்கையுடன் தமது கவிதைகளை இவர் எழுதுகின்றார். இவர் தம் காவிய சிருஷ்டியின் வைகறையிலே 'மருதக் கலம்பகம்' என்ற சிறு காவியத்தைச் செய்யத் தொடங்கினார். இது நல்ல கவிதை.  ஆனால் முற்றுப்பெறவில்லை. முற்றுப்பெறின் ஒரு நல்ல சிறு காவியம் தமிழுலகுக்குக் கிடைக்கும்.

இவர் இதுவரை வெளியிட்ட நூல்கள் இரண்டு. ஒன்று 'மேகதூதம்'. மற்றது 'கீதாஞ்சலி'.  இரண்டும் மொழிபெயர்ப்புகளே.  அழகுக் கவி மன்னர்களான காளிதாசனும், தாகூரும்  எழுதிய இவ்விரண்டு நூல்களும் மணமகள் போல் அலங்கார சோபனம் பெற்றவை. இவற்றை மொழிபெயர்த்து நடராஜன் இரு உயிருள்ள காப்பியங்களைத் தமிழ் மொழிக்களித்துள்ளார்."

"ஆனால் இம்மூவரும் தான் , நமது காலத்தில் கவிதைகள் படைத்தார்கள் என்பதில்லை. இன்னும் பலர் பாடியிருக்கிறார்கள். பாடி வருகிறார்கள். அவர்களின் சிருஷ்டிகள்  யாவற்றையும் எடைபோடுவதற்கு இக்கட்டுரை இடந்தராது.  கவிதைப் பணியில் இன்று ஈடுபட்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் பகவத்கீதை பாடிய மட்டக்களப்புப் பெரியதம்பிப்பிள்ளை, சகுந்தலை வெண்பா பாடிய தமிழறிஞர் சு.நடேசபிள்ளை (இவர் நூல் முற்றுப்பெறவில்லை), காதலியாற்றுப்படை பாடிய கலாநிதி கணபதிப்பிள்ளை, வள்ளி பாடிய மகாகவி, முருகையன், தமிழரசின் தேசிய கீதம் பாடிய பரமஹம்சதாசன், 'சிலம்பொலி' பாடிய நாவற்குழியூர் நடராஜன், அசோகமாலா பாடிய கே.கணேஷ், க.இ.சரவணமுத்து, வித்துவான் வேந்தனார், சோ.வேலாயுதபிள்ளை, 'ஆனந்தத்தேன்' படைத்த சச்சிதானந்தன், புத்தர் சரிதை பாடிய சிதம்பரநாத பாவலர், வி.கே.ராஜதுரை, மாலைக்கு மாலை பாடிய யாழ்ப்பாணன், குழந்தைக்கவிஞர் மா.பீதாம்பரன், திமிலைத்துமிலன், நீலாவணன், 'புதிய வண்டு விடு தூது' பாடிய அல்வாயூர் மு.செல்லையா முதலியோரைக் குறிப்பிடலாம்.  இருது சங்காரம் பாடிய சதாசிவ ஐயரும், மரதனஞ்சலோட்டம் பாடிய புலவர் நல்லதம்பியும் நம்மை விட்டுப்பிரிந்து விட்டார்கள்.

காளமேகம் முன்னைய முடியாட்சிக் காலத்தின் அங்கதக் கவியாக விளங்கினார். இலங்கையில் இப்பொழுது சில்லையூர் செல்வராசன் ஜனநாயக் காலத்தின் அங்கதக் கவியாகக் கவி எழுதி வருகின்றார்.  'தாந்தோன்றிக் கவிராயர்' என்ற பெயரில் இவர் எழுதும் கவிகள் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகின்றன."

" உலகப்படத்தில் ஒரு சிறு புள்ளியாக விளங்கும் இலங்கையில் சிறுபான்மையினராக விளங்குபவர்கள் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் வசிக்கும் தமிழ்ப்பிரதேசம் மிகக் குறுகிய எல்லையைக் கொண்டது. இந்நிலையில் இவர்கள் தமிழ் மீது கொண்டிருக்கும் ஆர்வமும், தமிழில் கவிதைகளை ஆக்குவதில் கொண்டிருக்கும் ஊக்கமும் அதிசயிக்கத்தக்கனவாகும்.

ஈழத்துக் கவிஞர்கள் இதுவரை சாதித்ததென்ன என்று கேட்டால் அவர்கள் இயற்றிய பல சிறு நூல்களை நாம் சுட்டிக் காட்டுவதோடு உலக மகா கவிஞன் காளிதாசனைத் தமிழில் மொழி பெயர்த்தளித்ததையும் குறிப்பிடலாம்.  அரசகேசரி அளித்தது 'இரகுவம்சம்'. குமாரசாமிப்புலவரும், சோ.நடராஜனும் அளித்தவை 'மேகதூதம்'. ( இருவரும் இரு நூலியற்றினர்).  'இருது சங்கார'மளித்தது சதாசிவ ஐயர். இவை மட்டுமல்ல நோபல் சங்கப்பலகையில் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழாக்கியது நடராஜன்.  இன்னும் பல நூல்கள் எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

பூதந்தேவனார் தொடக்கம் நடராஜா, மகாகவி வரை வாழையடி வாழையாக தமிழ் வளர்த்த கவிஞர் பரம்பரை வாழ்க! வாழ்க!"

[ அவரது காலக் கவிஞர்களின் பட்டியலில் சுய அடக்கத்துடன் கூடிய பெருந்தன்மையினால் அ.ந.க அவர்கள் தன் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகுக்குப் பங்களித்த முக்கியமான கவிஞர்களில் அவரும் ஒருவர். கவீந்திரன் என்னும் பெயரிலும் அவர் கவிதைகளை யாத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அ.ந.க ஈழத்தமிழ் இலக்கியம் தந்த சிறந்த விமர்சகர்களிலொருவர். தர்க்கச்சிறப்புடன் கூடிய அவரது இனிய, துள்ளுதமிழ் மொழி நடை அவரது விமர்சனங்களின் முக்கிய அம்சமாகும். அ.ந.கவின் கவிதை பற்றிய கட்டுரையினை எண்பதுகளின் இறுதியில் பெற்று அனுப்பிய எனது தம்பி பாலமுரளி , இக்கட்டுரை கிடைப்பதற்கு உதவியவர் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் என்றும் குறிப்பிட்டுள்ளார். - வ.ந.கி ]

நன்றி: 'புதுமை  இலக்கியம் ' (1962)

 

Last Updated on Wednesday, 13 February 2019 00:47