ஒப்பீட்டு நோக்கில் கடைநிலைத்துறை (தொல்காப்பியம், புறநானூறு)

Tuesday, 13 March 2018 16:10 - சு.வினோதா, முனைவர் பட்ட ஆய்வாளா, தமிழ்த்துறை உயராய்வு மையம, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -- சு.வினோதா, முனைவர் பட்ட ஆய்வாளா, தமிழ்த்துறை உயராய்வு மையம, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. - இலக்கியம்
Print

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இலக்கியங்களைப் பொதுவாக அகம், புறம் என்று பிரிப்பர். குடும்பம்; சார்ந்தவை அகம் என்றும் சமூகம் சார்ந்தவை புறம் என்றும் கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் புறத்திணையியலும் சங்க இலக்கியத்தின் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறம் சார்ந்தவை. அத்தகைய இலக்கிய இலக்கணங்களுள் தொல்காப்பியத்தின் பாடாண் திணை சார்ந்த கடைநிலைத் துறையை புறநானூற்று கடைநிலைத் துறைப் பாடல்களோடு பொருத்தி  ஆய்வதை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு அமைகின்றது.

தொல்காப்பிய கடைநிலைத்துறை
உள்ளத்துணர்வால் உணரும் இன்பம் தவிர்ந்த அனைத்து உலக வாழ்வும் புற வாழ்வாகும். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் புறத்திணையியல் மட்டுமே புறம் சார்ந்தது. புறத்திணையியலில் தொல்காப்பியர் ஏழு திணைகள் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார்.  அவ்வெழுவகைத் திணைகளுள் ஒன்று பாடாண் திணை. பாடாண் திணை இருபது துறைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் கடைநிலைத் துறையும் ஒன்று.  இதனை

“கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும்
……   ……  …….   ……..  ……..
வழிநடை வருத்தம் வீட வாயில்
காவலர்க்குரைத்த கடைநிலையானும்
…….        …….       ……. “        (தொல்-1036)

என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். கடைநிலைத் துறை குறித்து தமிழண்ணல் அவர்கள்

“மிக நீண்ட தூரத்திலிருந்து வந்த வருத்தம் தீருமாறு வாயில் காவலரிடம் தன் வருகையை அரசனிம் கூறுமாறு சொல்லும் கடைநிலை”
என்று விளக்கம் அளித்துள்ளார்.

புறநானூற்றில் கடைநிலைத் துறை
புறநானூற்றில் பதினொரு பாடல்கள் கடைநிலைத் துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. இவை மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறும் நோக்கத்துடனும் பரிசில் அளித்தமைக்காக வாழ்த்தும் நோக்கத்துடனும் பாடப்பட்டவையாக அமைந்துள்ளன. மன்னனது கொடைச் சிறப்பைப் பாடும் பாடல்களில் புலவர்கள் வற்கடம் நேர்ந்த காலத்தில் கூட புரப்போரின் வள்ளண்மையால் தான் பாதுகாக்கப்படும் உறுதியுடன்  பாடியுள்ளனர். மேலும் தனது உள்ளக் கிடக்கையினை நன்றி உணர்வினை கிணைப் பொருநன் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளனர்.

கிணைப் பொருநன் கூற்று
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள கடைநிலைத் துறைப் பாடல்களுள் கிணைப் பொருநன் கூற்றாக இரண்டு பாடல்கள் அமைந்துள்ளன. புலவர்கள் புரவலர்களின் வள்ளண்மையால் வறுமை நீங்கி வளம் பெற்று வாழ்வதால் ஏற்பட்ட நன்றி உணர்வினைக் கிணைப்பொருநன் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளனர். சேரி நாட்டுப் பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடிய பாடல் கிணைப் பொருநன் கூற்றாக அமைந்துள்ளது. நக்கீரர்  பெருஞ்சாத்தனைக் காணச் சென்ற போது பெருஞ்சாத்தன் அவரை இனிது வரவேற்றுச் சீரிய உணவும் நல்கி மிகுதியான செல்வத்தினையும் வழங்கிச் சிறப்பித்தான். இவ்வாறு நக்கிரருக்குப் பெருஞ் சிறப்புக்களைச் செய்தும் நிறைவு அடையாதவனாய் தன் மனைவியை வருவித்து அவளுக்கு நக்கீரரைக் காட்டி இவரை என்னைப் போல் போற்றுக என்று பணித்தான். அது கண்டு பெரு வியப்புற்ற நக்கீரர் தான் உற்ற வியப்பைக் கிணைப் பொருநன் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளார்.

“அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் பெரும என
…….      …….       …….   ……..
ஐயென உரைத்தன்றி நல்கத் தன்மனைப்
பொன் போல் மடந்தையைக் காட்டி இவனை
என் போல் போற்றுக என்றோனே”                 (புறம் -398)
என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம்.

கிணைப் பொருநன் கூற்றின் நோக்கம்
புறநானூற்றில் புலவர்கள் தமது உள்ளத்து உணர்வினை பாணர்கள் அல்லது பொருநர்களின் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளனா.; அவ்வாறு பாணர் மற்றும் பொருநர் கூற்றாக அமைத்துப் பாட வேண்டிதன் நோக்கம் சங்க இலக்கியப் பாடல்கள் பொது மக்களுக்குப் பாடிக் காட்டும் நோக்கத்துடனும், நடித்துக் காட்டும் நோக்கத்துடனும் படைக்கப்பட்டவை. எனவே தான் புலவர்கள் ஓசை நயத்துடன் கூடிய சந்த அமைப்புடன் அமைந்த பாடல்களைப் பாடியுள்ளனர். மேலும் யாப்பு அடிப்படையில் பாக்களை அமைத்துப் பாடியுள்ளனர். இன்னிசை அளபெடைகளும்  சொல்லிசை அளபெடைகளும் செய்யுளில் ஓசை நயத்தையும் இசைநயத்தையும் சீர்ப்படுத்த உதவும் காரணியாக அமையும் திறம் இதற்கு சிறந்த சான்றாகும். கிணைப் பொருநன் கூற்றாக அமைந்த பாடல்கள் நடித்துக் காட்டும் நோக்கத்துடன் படைக்கப்பட்டவையாக இருக்கலாம். புறநானூற்றில் சேரமான் வஞ்சனைத் திருத்தமனார் பாடிய பாடலில் பொருநன் தன் கிணைப் பறையை அறைந்து ,நினைந்து வரும் பரிசிலர் ஏந்திய கலங்களில் அவர் வேண்டுவன தந்து நிறைந்து மகிழ்விக்கும் வேந்தே , எம்மை அருளுபவனாகுக” என்று கூறித் தன் வரவை அறிவித்ததாகப் பாடல் பாடியுள்ளார்.

“மதியத் தன்ன என் அரிக்குரல் தடாரி
இரவுரை நெடுவார் இரப்ப வட்டித்
துள்ளி வருநர் கொள்கல நிறைப் போய்
தள்ளா நிலையை ஆகியர் எமக்கென
என் வரவறீச்  …….    ….”            (புறம் -398)

என்னும் பாடல் வரிகளின் மூலம் நடித்துக் காட்டுவதற்கேற்ப புலவர்கள் பொருநர், பாணர் கூற்றுப் பாடல்களை அமைத்துப் பாடியுள்ளமையை அறிய முடிகின்றது.

கலைஞர்களின் ஆற்றுப்படை
புறத்திணைகளுள் பாடாண் திணையில் ஆற்றுப்படை ஒருதுறையாகும். கூத்தனோ பாணனோ பொரநரோ விறலியோ கலைஞர்களை வள்ளல்களிடம் வழிப்படுத்துவதை அத்துறைச் சுட்டுகின்றது. இதனை

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட’;சி உறழத் தோன்றிப்
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”           (புறத்.1037)

என்னும் தொல்காப்பிய நூற்பாவின் மூலம் அறியலாம். கலைஞர்கள் தத்தமக்குள் ஆற்றுப்படுத்திக் கொள்ளாது பிற கலைஞர்களை ஆற்றுப்படுத்தும் நிலை கடைநலைத் துறையுள் அமைந்துள்ளது.

கடைநிலைத் துறையில் ஆற்றுப்படை
புறநானூற்றில் புலவர்களைப் பாணர்கள் மன்னனிடம் ஆற்றுப்படுத்தியதாக செய்திகள் இடம்பெற்றுள்ளன. புலவர்கள் மன்னனிடம் பரிசில் பெற்று வளமுற்றிருக்கும் பாணர் மற்றும் பொருநர்களின் நிலை கண்டு ஏங்குகின்றனர். அவ்வளத்தினைத் தாங்களும் பெற்று உய்ய விரும்பியுள்ளனர். அதனை அறிந்த பாணர்கள் புலவர்களை மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த  செய்திகள் புறநானூற்றின் இரண்டு பாடல்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு அமைந்த பாடல்கள் கடைநிலைத் துறைப் பாடல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. சோழன் நலங்கிள்ளியின் பால் கோவூர்கிழார் சென்றுள்ளார். அங்கு மன்னன் அளித்த வளத்தால் பொருநரைக் கண்டார். அவர்கள் அவனால் பெற்ற வளத்தினைக் கூறி அவன் பால் செல்லின் நின் பசித் துன்பம் நீங்க அவன் நெய்யில் பொரித்த ஊனும் பல்வகைச் சோறும் சுவையுடைய பிறவும் நல்குவன் என்று ஆற்றுப்படுத்தினர். அதனைக் கேட்ட கோவூர் கிழார் சோழனை அடைந்து பொருநர் பெற்ற வளத்தையும் அவர் கூறிய செய்தியினையும் கூறித் தன் வறுமை நீங்கவும் தன்பால் இரந்து வருவோர்க்கு வழங்குவதற்கேற்பவும் வளம் பல தருவாயாக என்று இறைஞ்சுகின்றார். இதனை

“அவற் பாடுதும் அவன்தாள் வாழியவென
நெய்குய்ய ஊன் னவின்ற
பல சோற்றா னின்சுவைய
நல்குவனின் பசித்துன்பற
என்ப நின் பொருநர் பெரும அதற்கொண்டு”     (புறம் -382)

என்னும் வரிகளின் மூலம் அறியலாம்.

வற்கடத்தால் வருந்தாமை
கடைநிலைத் துறை சார்ந்த பாடல்களைப் பாடிய புலவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் வற்கடம் (பஞ்சம்) ஏற்பட்டாலும் வள்ளல்கள் மீது கொண்ட நம்பிக்கையால் வருந்தாது உள்ளனர். இத்தகைய செய்தி அமைந்த இரண்டு பாடல்கள் புறநானூற்றில் பதிவாகியுள்ளன. மாறோக்கத்து நப்பசலையார் அவியன் என்னும் மன்னனின் ஆதரவு பெற்று இனிதிருக்கையில் வெள்ளி மீன் தென்புலம் சாய்ந்து நாட்டில் வற்கடம் உண்டாவதற்குரிய குறிப்பைக் காட்டிற்று. அச்சமயம் நப்பசலையார் அவியனின் ஆதரவில் இருக்கும் காலம் வலையிலும் வெள்ளியின் பிறழ்ச்சிக்குச் சிறிதும் வருந்தேன் என்று பாடுகின்றார். இதனை

“கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன் என    
ஒருவனை உடையேன் மன்னே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே”     (புறம் -383)

என்னும் வரிகளின் முலம் அறியலாம். இத்தகைய பாடல்கள் வற்கடக் காலத்தில் வருந்தி இருக்கும் மன்னர்களை உரமூட்டும் விதமாக அமைந்துள்ளன.

மன்னர்களின் இயலாமை
புறநானூற்றுக் கடைநிலைத் துறைப் பாடல்களில் மன்னர்களின் இல்லாமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இரப்போர்க்குக் கொடுத்துக் கொடுத்து பொருள் இல்லாமல் போன நிலையைப் புறநானூற்றின் இரண்டு பாடல்களில் காணமுடிகின்றது. புலவர் ஏணிச்சேரி முடமோசியார், ஆய் என்னும் மன்னனின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து பாடும் பாடல்களில் அவரது இல்லாமை நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறருக்கு ஈயாது தாமே தனித்து உண்டு தம் வயிறு நிரப்பும் செல்வர் மனைகளில் காணப்படும் ஆரவாரமும் பொலிவும் சிறப்பற்றது. தன் பாலுள்ள களிறனைத்தையும் இரவலர்க்கு நல்கி தாலியைத் தவிர வேற ஆபரணம் அணியப் பெறாத மனைவியுடன் வாழும் ஆயின் கொடைச் சிறப்பும் கொடுத்ததினால் அவன் உற்ற வறுமை நிலையும் பதிவு செய்யபபட்டுள்ளன. இதனை

“கானமஞ்ஞை கணனொடு சேர்ப்ப
ஈகை அணிய இழையணி மகளிரொடு
சாயின்றென்ப ஆஅய் கோயில்”        (புறம் -127)

என்னும் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் பாணர்கள் பரிசில் பெற்றுக் கொண்டு போனமையால் இல்லாமல் போன களிறுகள் கட்டப்பட்டிருந்த தறியில் மயில்கள் தன் இனத்தோடு வதியும் என்னும் செய்தியும் பதிவாகியுள்ளது. இதனை

“பாடின் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடு வெளில்      (புறம.; 384)

என்னும் வரிகளின் மூலம் அறியலாம்.

துறைப் பொருத்தம்
தொல்காப்பியர் வகுத்த கடைநிலைத் துறையும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள கடைநிலைத் துறைப் பாடல்களும் வேறுபட்ட கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியர்

வழிநடை வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையும்“        - (தொல்.புறத். 1036)

என்று கூறியுள்ளார். ஆனால் புறநானூற்று கடைநிலைத்துறைப் பாடல் ஒன்றில் கூட காவலர்களிடம் நேரடியாகச் சென்று புலவர்கள் பேசியதாக செய்தியில்லை. மாறாக கடைநலை என்னும் துறையின் கீழ் அமைந்த பாடல்கள், பாணர், பொருநர் போன்றோர். மன்னனிடம் புலவர்களை ஆற்றுப்படுத்திய செய்தியும், மன்னர்களை ஏத்தும் பாடல்களில் தனது கூற்றை கிணைப் பொருநன் கூற்றாக வைத்துப் பாடும் பாடல்களும் மட்டுமே பதிவாகியுள்ளன. மேலும் புறநானூற்று உரையாசிரியர்கள் துறைக்கு வி;ளக்கம் கூறி பாடலோடு பொருத்திக் காட்டத் தவறியுள்ளனர். அவ்வாறு பொருத்திக் காட்டியிருந்தால் கடைநிலைத் துறைக்கு பொருத்தமான விளக்கம் கிடைத்திருக்கலாம் என எண்ண இடமளிக்கின்றது. ஒரு பாடல் மட்டும் (206) பாடாண் திணையின் பரிசில்  துறையில் ஒளவையார் அதியனைப் பாடும் பாடல் வாயில் காவலனிடம் உரையாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. அதுவும் தொல்காப்பியர் கூறியது போல் ‘வழி நடை வருத்தம் வீட தன்  வறுமை  நிலையை வாயில் காவலர்க்கு உரைக்கும் போக்கில் அமையாமல் பரிசில் நீட்டித்த அதியனைப் பழிப்பது போல் அமைந்துள்ளது. இதனை

“வாயிலோயே வாயிலோயே வள்ளியோர்
வாய் முதல் வயங்கிய வித்தித் தாம்
------------       -------      -------       -------      -------   
எத்திசை; செல்லினும் அத்திசைச் சோறே”    - (புறம் -206)

என்னும் வரிகளின் மூலம் அறியலாம்..

முடிவுரை
தொல்காப்பியர் வகுத்த கடைநிலைத் துறையும்; புறநானூற்றில் இடம்பெற்றுள்ள கடைநிலைத் துறைபபாடல்களும் வேறுபட்ட கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. "வழி நடை வருத்தம் வீட காவலர்க்கு உரைத்த கடைநிலையும்“ என்று தொல்காப்பியர் விளக்கம் தருகின்றார். புறநானூற்று கடைநிலைத்துறைப் பாடல் ஒன்றில் கூட காவலர்களிடம் நேரடியாகச் சென்று புலவர்கள் பேசியதாக செய்தியில்லை. வாயில் காவலனிடம் புலவர் உரையாற்றியதாக அமைந்த ஒரு பாடலும்  (206) பாடாண் திணையின் பரிசில் துறையில் அமைந்து, பரிசில் நீட்டித்தமைக்காக புலவர் சினமுற்ற செய்தியையே பதிவு செய்துள்ளது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர்: - சு.வினோதா, முனைவர் பட்ட ஆய்வாளா, தமிழ்த்துறை உயராய்வு மையம, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -

Last Updated on Friday, 08 June 2018 20:28