எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களுக்கான அஞ்சலி!

Friday, 13 October 2017 08:05 - முல்லை அமுதன் - இலக்கியம்
Print

"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று" – குறள் 236

நுணாவிலூர் கா.விசயரத்தினம்சில சமயங்கள் நாட்கள் நகரக்கூடாது என்றே சிந்திக்கத்தோன்றும். மகிழ்வான பொழுதுகளில் இருந்து நழுவிப்போக மனது இடம் தராது.எனினும் காற்று சேதி சொல்லியது.மனதில் அதிர்வைத் தந்தது. நாட்களும் அதிகம் கடந்துவிடவில்லையே. தொலைபேசி அழைப்பு வரும் போது நான் இல்லாத பொழுதெனிலும் அவரின் குரல் பதிவை மீள கேட்கையில் ஆர்வம் மீள எழும்.பேசிக்கொண்டிருந்த நாட்களும் அதிகம்.அந்த குரல் 'பிறகு..பிறகு..' என்று பேச்சை நகர்த்தும் விதம் அலாதியானது. காற்றுவெளி மின்னிதழில் அவரின் கட்டுரைகள் அதிகமாகவே வந்திருக்கின்றன.ஆய்வுக்கட்டுரைகள் என இதழை புரட்டிப்பார்த்தால் அவர் கண்முன் வந்து நிற்பார்.அந்த வெறுமை எனி காற்றுவெளியில் தெரியும்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி/நுணாவில் மேற்கில் 02/03/2031இல் கார்த்திகேசு தங்கமுத்து தம்பதியர்க்கு மகனாக பிறந்தவர்.கார்த்திகேசு விசயரத்தினம் ஆரம்பக் கல்வியை மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாசாலையிலும்,தொடர்ந்து சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் கற்றார்.தொஅர்ந்து மேற்படிப்பை கொழும்பில் தொடர்ந்து ஒரு கணக்கியற் பட்டதாரியானார்.கொழும்பிலேயே தன் தொழில் வாய்ப்பைப் பெற்றார். கொழும்பு கணக்காய்வு அதிபதி தினைக்களத்தில் அரச கணக்காய்வாளராக கடமையேற்றார்.மேலும், போட்டிப்பரீட்சைகளில் தோற்றி கணக்காய்வு அத்தியட்சராகவும் தரமுயர்ந்தார்.பல அரச,கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளை ஆய்வு செய்து அரச நாடாளுமன்றிற்கு சமர்ப்பிப்பதனால் நாடாளுமன்ற விவாதங்களிலும் பங்குபற்றுபவருமானார். கலை இலக்கிய ஆர்வலர்.நல்ல நூல்களை வாசிக்கும் ஆவல் மிகுந்தவர்.அதனால் தானோ இலக்கியம் படைக்கும் திறமையையும்,ஆற்றலையும் உருவாக்கிக்கொள்ள அவரால் முடிந்தது. தொல்காப்பியம்,நன்நூல், சிலப்பதிகாரம், நன்நூல்,திருக்குறள், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, மகாபாரதம், கலிங்கத்துப்பரணி, பகவத்கீதை ,திருமந்திரம், கம்பராமாயணம் ,திருவாசகம், நாலடியார் சங்க இலகியங்கள் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை ஆழமாக,நேசிப்புடன் கற்றறிந்து அதனை நம்மவர்களுக்கு கட்டுரைகளாக தந்துமுள்ளார். காதல், காமம், பிள்ளைப்பெறு, மடலேறுதல், களவியல், இன்னும் வாழ்வின் ஒழுக்கநெறிகள்,கல்வி,இசை இன்னும் இன்னும் தொட்டு மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். சில சமயங்களில் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். ஒவ்வொரு காலங்களில் உள்வாழ்க்கை முறைமை,உணவுப்பழக்க முறைகள்,திருமண சடங்குகள்,களவியல் ஒழுக்கம்,காதல்,தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல்,ப்ரிவு,துன்பம் இதர சடங்குகள், அக் காலத்து அக,புறச் சூழல் ,அந்தந்தக் காலத்து மன்னர்கள் பற்றியெல்லாம் தொட்டு ஆய்ந்துள்ளமையை வாழ்த்த வார்த்தையில்லை

இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை தினக்குரல், வீரகேசரி, தினகரன், காலைக்கதிர், தமிழர் தகவல், வடலி, பூங்காவனம், பதிவுகள் (இணையம்) ,காற்றுவெளி (மின்னிதழ்), லண்டன் இசை மகாநாட்டு மலர்  ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தன. எம்மைப் போலவே அவரும்  விசயன், கா.வி,நுணாவிலூரான், நுணாவிலூர்.கா.விசயரத்தினம் எனும் பெயர்களிலே எழுதி வந்தாலும் நுணாவிலூர்.கா.விசயரத்தினம் எனும் பெயரே நிலைத்து நிற்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசவும்,எழுதவும் இவரால் முடிந்திருக்கிறது. கூடவே,இலக்கணப்பிழையின்றி எழுதுவதிலும் வல்லவர். இதற்கு இலக்கணநூல் (ஆங்கிலம்) உதாரணம். பலருக்கும் சிறந்த ஊக்கத்தைக் கொடுக்கவும் அந் நூல் உதவும் என நம்பலாம். இவர் வெளியிட்ட நூல்களின் மூலம்  இவரின்  புலமையை  அறிந்து கொள்ளலாம். அவற்றுள்  கணினியை விஞ்சும் மனித மூளை (2005),  Essentials  of English Grammer (2007), பூந்துணர்(தொகுப்பாளர்), தொல்காப்பியத் தேந்துளிகள் ( 2008),  பண்டையத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும் (2010), இலக்கிய- அறிவியல் நுகர்வுகள்   (2012), வியக்க வைக்கும் பிரபஞ்சம் (2013), பல்வேறு பயன் தரும் பனைமரம் (2014), காலத்தை வென்ற காவிய மகளிர் (2015), சங்க கால தமிழர் வாழ்வியல்  (2017)   சிறப்பிடத்தைப்  பெற்றிருக்கின்றன. மேலும், இவரின் நூல்களுக்கான விருதினை பல நிறுவனங்கள் வழங்கின.

"பண்டைத்தமிழரும்,சமுதாயச் சீர்கேடும்" எனும் சிறந்த இலக்கிய ஆய்வு நூல் எனத் தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 'தமிழியல் விருதை'(2010) வழங்கி கௌரவித்தனர். அதே நிறுவனம் தமிழியல் மேம்பாட்டிற்கு உழைத்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்து "தமிழியல் விருது" (2011)' வழங்கி இவரின் தொடர்ச்சியான இலக்கிய முயற்சிகளுக்கு அங்கீகாரமும் கிடைக்கச்செய்தனர். அதே போலவே, இலங்கை&லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இவரின்  "காலத்தை வென்ற காவிய மகளிர்" எனும் நூலை தெரிவு செய்து 'இரா.உதயணன் இலக்கிய விருது' வழங்கி (2016) கௌரவித்தது. லண்டனில் நடந்த தமிழியல் ஆய்வு கருத்தரங்கில்  ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பித்திருந்தார் என அறியமுடிகிறது.அதன் தொகுப்பு நூல் வெளிவராததால் அதன் கனதியை நம்மால் உணரமுடியாது போயுள்ளது.

இவரின் எழுத்தாற்றலை பலரும் வியப்புடனேயே பார்த்தனர் .நண்பர்களுடன் இணைந்து  பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம்  ஒன்றை நிறுவி வாராந்த இலக்கியக் கூட்டம்,கட்டுரைகள் வாசித்தல்,அதனை கருத்தாய்வு செய்வதன் ஊடாகவும் இலக்கியப்பங்களிப்பை செய்து வருகையிலவர்களின் கூட்டு முயற்சியாக கட்டுரைகள் & ஆய்வுகள் அடங்கிய தொகுதியாக " பூந்துணர்" தொகுப்பை வருடம் ஒன்றென கொணர்ந்தார்கள். அதன் தொகுப்பாசிரியராகவும் அமரர் நுணாவிலூர்.கா.விசயரத்தினம் தன் பங்களிப்பைச் செய்திருந்தார். மேற்படி இலக்கியச் சங்கம் பல்வேறு பட்டறைகள் மூலம் கட்டுரைகள் வழங்கி அவை பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டு ஒவ்வொருவர் எழுத்தையும் புதிய பரிமாணத்திற்கு கொண்டுசெல்ல உதவியது.அச் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும்,தலமை ஒருங்கிணைப்பாளராகவும் கடமையாற்றியுமுள்ளார். காற்றுவெளி மின்னிதழுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.இதழுக்காக அவர் அனுப்பிய கட்டுரைகளிலிருந்தே எழுத்தின் ஆழத்தை கண்டு கொள்ளலாம். கட்டுரைத் தலைப்புக்களைப் பாருங்கள்:

*  திருக்குறள் காட்டும் நட்பியல்
*மதுரை ஈழத்துப் பூதன் தேவனாரின் இடைச் சங்ககாலப் பாடல்கள்;..
*தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல்
*புத்துணர்வும் புதுவாழ்வும் பேசும் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம்
*அன்று நாற்கால்களுடன் தோன்றிய பாம்பு இன்று கால்களின்றி ஊர்ந்து உலாவும் விந்தை
*மகளிர் மாண்பை மேம்படுத்திச் சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர்
*சீவக சிந்தாமணியில் உலாவும்; கதாநாயகியர்
*அணியிளையாரை விழிப்புடன் வைத்திருக்கும் அணிகலன்கள்
*சங்க இலக்கியங்களில் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகள்
*குண்டலகேசி நூலின் கதாநாயகி குண்டலகேசி
*மனிதநேயத் தொடர்புகள்
*நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள்


இப்படிப் பல பல..

அவர் எழுதி நான் வாசித்த கட்டுரைகளில் கவர்ந்தவைகள்:

*மங்கையர் உடன்கட்டை ஏறல்,
*மதங்கள், புராணங்கள் எழுப்பிய உயிர்ப் பலிகள்,
*இன்றைய உலகும் தமிழர் கலாசாரமும,
*மேல் நாட்டுக்கேற்ற சைவமுறைகள்,

எனக்குள் ஆச்சர்யம். கணக்கியல் பட்டதாரியான இவரிடம் இத்தனை ஆளுமையா? ஒரு கட்டுரை எழுதுவதென்றாலே எத்தனை நூல்களை வாசிக்கவேண்டும்? ஊடகங்களுக்கு அனுப்பி வெளிவரும் கட்டுரைகளைப் பார்க்கையில் ஆழமாகவும்,கருத்தூன்றியும் ஆய்ந்து எழுதியிருப்பார் என்றே தோன்றும். அப்படி எழுதி அனுப்பிவிட்டு அந்த இதழாசிரியர்களிடம் கட்டுரை பற்றி சிலாகித்து,நெறி பிறழாது இதழுக்கான வாழ்த்தையும் சொல்லி இதழின் தேவை பற்றிச் சொல்வதன் ஊடாக எம்மை ஆகர்சிக்கவைப்பார். வழமையான எதிர்ப்புக்கள், இருட்டடிப்புக்கள், ஊடகங்களின் அனுசரனை எதுவுமில்லாது, அதனையும் கடந்தபடி தன் எழுத்தை வரலாற்றில் பதிவுசெய்தவர். அவர் இன்று நம்முடன் இல்லை என்று நினைக்கும் போது மன ஆழத்தில் சோகம் குடிகொள்ளும்.. ஒவ்வொரு நாளும் மின்னஞ்சலைத் திறக்கும் போதும்,எனக்கென தொலைபேசி ஒலிக்கும் போதும் அவரை தேடவும்,குரல் ஒலியைக் கேட்கவும் முடியாத பொழுதில் எல்லாம் வெறுமையாய் இருக்கும் வலிகளுடன், அவரின் எழுத்தை மட்டுமே மீண்டும், மீண்டும் வாசித்தபடி இருக்கும். காலம்  நமக்காய், நமக்கென தந்த நல்ல நண்பன், அளுமையாளன், கல்வியாளன். அவரின் வாழ்வு நிறைவில் (07/10/2017) ஆழ்ந்த துயருற்றிருக்கும் யாவர்க்கும் படைப்பாளர்கள் சார்பாக அஞ்சலியை செலுத்திக்கொள்வோமாக.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   13/10/2017

Last Updated on Friday, 13 October 2017 12:26