எதிர்வினை: யுகதர்மம் - நிர்மலாவின் மொழிபெயர்ப்பு

Monday, 02 October 2017 16:40 - மு.நித்தியானந்தன் , லண்டன் - இலக்கியம்
Print

- மு.நித்தியானந்தன்பேர்டோல்ட் பிரெக்ட் என்ற ஜெர்மன் நாடகாசிரியரின் The exception and the Rule என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாடகத்தை, தமிழில் யுகதர்மம் என்ற தலைப்பில் இலங்கை அவைக்காற்று கலைக்கழகம் 9.12.1979 இல் யாழ் வீரசிங்;கம் மண்டபத்தில் மேடையேற்றியது. இந்த நாடக மேடையேற்றத்தின் போது, இந்நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் நிர்மலா நித்தியானந்தன் என்றும் இந்நாடகத்தில் இடம் பெறும் பாடல்களை மொழிபெயர்த்தவர் ச.வாசுதேவன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நாடகம் இலங்கையில் 29 மேடையேற்றங்களைக் கண்டுள்ளது. இந்த நாடகம் அரங்கேறி 38 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், ‘யுகதர்மம் - நாடகமும் பதிவுகளும்’ என்ற தலைப்பில் அந்நாடகத்தை அச்சிட்டு, இவ்வாண்டு வெளியிட்டிருக்கிறார் நாடகநெறியாளர் க. பாலேந்திரா. அந்த நூலில் நாடக நெறியாளரின் தொகுப்புரையில் பாலேந்திரா தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியதாகும்.

அவர் இந்நூலின் தொகுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘எனது நண்பன், கவிஞன் ச. வாசுதேவனிடம் இந்த நாடகத்தைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன்... வாசுதேவனே முதலில் முழு நாடகத்தினையும் மொழிபெயர்த்துத் தந்தார்... நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘யுகதர்மம்’ நாடகத்தயாரிப்பின்போது நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்.. முதலில் நாடக மேடையேற்றத்தின்போது, தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா (1994) மலரில் பதிவு செய்துள்ளார். தமிழ் மொழியாக்கம் வாசுதேவன் - நிர்மலா என்பதே சரியானது’ என்று எழுதுகிறார் பாலேந்திரா.

இந்த நாடகத்தை முதலில் வாசுதேவன் மொழிபெயர்த்தார் என்றும், அந்த நாடகப் பிரதியை நிர்மலா செம்மைப்படுத்திக் கொடுத்தவர் மட்டுமே என்றும் வாசுதேவன் மறைந்து 24 ஆண்டுகள் கழித்துக் கூறுகிறார் பாலேந்திரா. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்துத் தந்ததை சுவிஸ் நாடக விழா (1994) மலரில் நான் பதிவு செய்திருப்பதாக பாலேந்திரா குறிப்பிட்டிருக்கிறார். க.பாலேந்திரா ஆதாரம் காட்டும் சுவிஸ் நாடக விழா மலர்க்கட்டுரையில் ‘யுகதர்மம்’ என்ற நாடக மொழியாக்கம் பற்றிக் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தருகிறேன்.

‘பெர்டோல்ட் ப்ரெச்டின் ஆங்கில நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்டபோது, மனமுவந்து தமிழ்ப்பிரதியைத் துரிதமாகவே செய்து தந்தவர் வாசுதேவன். ஆனால், வாசுதேவனின் பாடல்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவரின் நாடகப்பிரதியை விட்டுவிட்டு, வேறு தமிழ்ப்பிரதியை மேடைக்குத் தேர்ந்தபோது, அதனால் ஒரு சிறிதும் மனங்கோணாத விரிந்த மனம் கொண்டவராய் அவர் இருந்தார். அவருடைய அந்த நாடகப் பிரதி உண்மையில் மேடையேற்றத்திற்கு உகந்ததென்றுதான் நினைக்கிறேன்’ என்று 14.3.1994 இல் நான் எழுதியிருக்கிறேன்.

இந்தக் குறிப்பு அவைக்காற்று கலைக்கழகத்தின் விழா மலரிலேயே, பாலேந்திராவின் புரிதலுடன் வெளியாகியிருக்கிறது. இந்நாடகத்தை முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் வாசுதேவன் என்பதில் வாதம் எதுவுமில்லை. ஆனால், அந்தப்பிரதியை விட்டுவிட்டு, பாடல்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, நாடக மேடையேற்றம் கண்ட பிரதி வாசுதேவனின் பிரதியல்ல, வேறு பிரதி என்பதை இக்குறிப்பு மிகத் துல்லியமாகக் கூறுகிறது. இந்த நாடகத்திற்கு இரண்டு மொழிபெயர்ப்புப்பிரதிகள் உள்ளன. ஒன்று, வாசுதேவன் மொழிபெயர்த்த பிரதி. மற்றது, நிர்மலா மொழிபெயர்த்து, ஆற்றுகைக்குப் பயன்படுத்தப்பட்ட பிரதி. இலங்கை அவைக்காற்று கலைக்கழகம் இலங்கையில் நிகழ்த்திய 29 மேடையேற்றங்களிலும் தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும், பாடல்கள் வாசுதேவன் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது மிகச்சரியானதாகும். இந்த மேடையேற்றங்களின்போது வாசுதேவன் உயிருடன் இருந்தார்.

‘முதல் நாடக மேடையேற்றத்தின்போது தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும், பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது’ என்று க.பாலேந்திரா தான் தொகுத்து வெளியிட்டிருக்கும் யுகதர்மம் நூலில் எழுதுகிறார். விளம்பரப்படுத்தப்பட்டது என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இது என்ன? க.பி.சொக்கலால் ராம்சேட் பீடி விளம்பரமா? அறிவு வளர்ச்சிக்கு ஆனை மார்க் பீடி என்பதுபோல க.பாலேந்திரா எதையாவது சும்மா விளம்பரப்படுத்துவாரா? .

வாசுதேவன் அவுஸ்திரேலியாவில் 30.12.1993 இல் தற்கொலை செய்துகொண்டு மரணித்தபோது, அவருக்கு எழுதிய அஞ்சலிக்குறிப்பில், யுகதர்மம் நாடகத்தை அவர் முதலில் மொழிபெயர்த்ததைக் குறிப்பிட்டது கூட, அந்தப் பிரதியைக் கைவிட்டுவிட்டு, வேறு ஒரு பிரதியை மேடைக்குத் தேர்ந்தபோது, அதை எளிதில் ஏற்றுக்கொண்டுவிட்ட அவரின் விரிந்த உள்ளத்தைப் பெருமைப்படுத்துவதற்குத்தான். உண்மைகள் வஜ்ரங்களாக ஒளிர்கின்றன.

க.பாலேந்திரா இப்போது கூறுவது போல, வாசுதேவனின் பிரதியைத்தான் நிர்மலா செம்மைப்படுத்திக் கொடுத்தார் என்பது உண்மையல்ல. எனது குறிப்பினையே திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பாக பாலேந்திரா இப்போது எழுதியும் பேசியும் வருவது வியப்பைத் தருகிறது. வாசுதேவனின் பிரதியைத்தான், நாடகத்தயாரிப்பின்போது, நிர்மலா செம்மைப்படுத்திக் கொடுத்தார் என்று பாலேந்திரா இப்போது கூறுவாரானால், நாடகப்பிரதியின் மொழியாக்கம் என்று நிர்மலாவின் பெயரை விளம்பரப்படுத்திய செயல் வாசுதேவனுக்குச் செய்த அறிவுலக மோசடி ஆகாதா? இந்த மோசடியை 36 ஆண்டுகளாக பாலேந்திரா நெஞ்சார்ந்து செய்து வந்திருக்கிறாரா? நாடக விமர்சகர்களுக்கும் நாடக ரசிகர்களுக்கும் இவர் தொடர்ச்சியாகப் பிழையான தகவலைக் கூறி வந்திருக்கிறாரா?

இதேபோன்று, ரென்னஸி வில்லியம்ஸ் எழுதிய The Glass Menagarie  நாடகத்தையும் பாலேந்திராவும் அவரது சகோதரி மல்லிகாவும் மொழிபெயர்த்ததாகவும், ஒத்திகை வேளைகளில் நிர்மலா செம்மைப்படுத்தியதாகவும் பாலேந்திரா குறித்திருப்பதை நிர்மலா மறுத்திருக்கிறார். பாலேந்திரா மல்லிகாவுடன் சேர்ந்து இந்த நாடகத்தை முதலில் மொழிபெயர்க்கமுயன்று, பின்பு சரிப்பட்டு வராததால் நிர்மலாவை மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டார் என்றும் முழு நாடகத்தையும் தானே ஆரம்பத்திலிருந்து மொழிபெயர்த்ததாகவும் நிர்மலா கூறியிருக்கிறார்- ‘அவைக்காற்று கலைக்கழகத்தின் நாடகங்களில் கண்ணாடி வார்ப்புகள், யுகதர்மம், ஒரு பாலைவீடு, புதிய உலகம் - பழைய இருவர், இடைவெளி ஆகிய நாடகங்களை நான்தான் முழுமையாக மொழிபெயர்த்தேன்’ என்று நவஜோதி ஜோகரட்னத்துடனான பேட்டியில் நிர்மலா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார். (மகரந்தச்சிதறல், நவஜோதி ஜோகரட்னம், 2016)

உண்மையில், வாசுதேவனுக்கு அவர் மறைந்து கால் நூற்றாண்டைக் கடக்கப்போகும் நிலையில், பாலேந்திராவின் கைவசமிருக்கும் வாசுதேவனின் மொழிபெயர்ப்பை வெளியிட்டு, மறைந்த அந்தக் கவிஞனுக்கு அவர் அஞ்சலி செலுத்துவதே நயத்தகு நாகரிகமாகும். க.பாலேந்திரா இன்று அச்சிட்டு, வெளியிட்டிருக்கும் ‘யுகதர்மம்’ நாடகப்பிரதி, பாடல்கள் தவிர முழுமையாக நிர்மலாவின் உழைப்பிலேயே தயாரானதாகும். வரிக்குவரி அந்நாடகம் நிர்மலாவின் மொழிபெயர்ப்பு என்பதை அவரது நாடகமொழியாக்கங்களில் பரிச்சயம் கொண்டவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு நாடகப்பிரதியின் மொழியாக்கத்தைச் செம்மைப்படுத்துவதை, ஓட்டை விழுந்த சைக்கிள் ரியூபிற்கு ஒட்டுப்போடும் வேலை என்று பாலேந்திரா கருதிக்கொண்டிருப்பது பெரும் அவலம். யாரோ ஒருவர் செய்த மொழியாக்கத்தை, நாடகத்தயாரிப்பின்போது அல்லது ஒத்திகையின்போது பிரதியை ‘ரிப்பேர்’ பண்ணித் தரும் ஆளாக அவர் நிர்மலாவைக் காட்டமுனைவது  அபத்த நாடகத்தின் உச்சம்.

தமிழ்நாட்டில் பேர்டோல்ட் ‘The Exception and the Rule’ என்ற நாடகத்தை ‘ஒரு பயணத்தின கதை’ என்ற தலைப்பில், பத்தண்ணா (இளைய பத்மநாதன்), அ. மங்கை ஆகியோர் இணைந்து 1990 இல் மேடையேற்றினர். இந்நாடகத்தைத் தழுவி ‘கானல்’ என்ற பெயரில் தழுவல் செய்யப்பட்ட பாடம் ஒன்று சிறுபத்திரிகை ஒன்றில் கிடைத்திருக்கிறது. அதனை நிகழ்த்த இயலாது என்ற நிலையில் பிரெக்டின் பாடத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்த கதையை சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைப்பேராசிரியர் வீ. அரசு பின்வருமாறு விபரிக்கிறார்:

‘The Exception and the Rule’ என்ற நாடகத்தின் மூலபாடத்தின் ஒரு சொல்லும் கூட மொழியாக்கத்தில் விட்டுப்போகாமல் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளப்பட்டது. மூலபாடத்தின் ஜெர்மன் மரபு ஆங்கிலத்தில் உள்வாங்கப்பட்டதை அறிய , சென்னை மார்க்ஸ் முல்லர் பவனுக்குச் சென்று, ஜெர்மன் மொழியில் இருக்கும் பாடத்தை நேரடியாக, அம்மொழி அறிந்தவர்கள் வாயிலாக அறிந்து, அதனை ஆங்கிலப்பாடத்தோடு ஒப்பிட்டனர். பின்னர் அதனைத் தமிழ் மரபுசார்ந்த பாடமாக உருவாக்கினர். இப்பாடத்தில் காணப்படும் ‘மாம்பூவுக்கு காம்பு ஆயிறவன்’ போன்ற மரபுத்தொடர்ப் பயன்படுத்தம் இவ்வகையில் அமைந்ததே. எனவே மூலபாட மரபுகளை மொழியாக்க மூலமரபுகளாகவே வெளிப்படுத்த, இக்குழு பெரிதும் கவனம் கொண்டது. மொழியாக்கம் தொடர்பான நடைமுறைக்கோட்பாடுகள், தன்னளவில் உருவாக, இக்குழுவின் மொழியாக்கப்பணி உதவும் என்பதை, மொழியாக்கத்தில் ஈடுபடுவோர் புரிந்துகொள்ள, இப்பாடம் சான்றாக அமையும். நிகழ்த்தலை நோக்கிய இம்மொழியாக்கம் மூலபாட மரபுகளைப் பாதுகாப்பதில் பெரிதும் வெற்றிபெற்றுள்ளது’ என்று பெர்டோல்ட் பிரெக்டின் தமிழாக்கமான ‘ஒரு பயணத்தின் கதை’ என்ற நூலின்(1999) அறிமுகவுரையில் பேராசிரியர் வீ. அரசு எழுதுகிறார்.

‘The Exception and the Rule’ என்ற நாடகத்தை தமிழகத்தில் மொழிமாற்றம் செய்தபோது, அந்த நாடகப்பிரதியின் உருவாக்கத்தில், செம்மைப்படுத்துவதில் எத்துணை உழைப்பு நல்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.

வேறு யாரும் செய்த மொழிபெயர்ப்பைத் திருத்தும் வேலையை நிர்மலா ஒருபோதும் செய்ததில்லை. மொழியாக்கம் ஆங்கிலப்பிரதியோடு இசைந்து. நாடக மேடைக்குப் பொருந்தி வரவில்லை என்றால் அந்தப்பிரதியை அப்படியே கைவிட்டுவிட்டு, புதிதாக மொழிபெயர்க்கும் வேலையில், உற்சாகத்தோடும், முழு அர்ப்பணிப்போடும் இறங்கி விடுவார். மொழி பெயர்ப்பை வாய்விட்டுப் பேசிப்பார்த்து, நடிக்கும் பாவனையில் சீர்படுத்தி, மொழிபெயர்ப்பு செய்ததால்தான், அவர் செய்த மொழிபெயர்ப்புகள் மேடையேற்றத்தில் பெரும் வெற்றியைக் கண்டுள்ளன.

வாசுதேவன் செய்து தந்த யுகதர்மம் நாடகப்பிரதியில் பாலேந்திரா திருப்தியுறாத நிலையில்தான், அவர் நிர்மலாவின் மொழிபெயர்ப்பை நாடியிருந்தார். நிர்மலாவைக் கொண்டு, அந்த மொழிபெயர்ப்புகளை முடித்து எடுத்துக்கொள்வதில் பாலேந்திரா அதிக பிரயாசை எடுத்திருக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து, நிர்மலாவின் ‘யுகதர்மம்’ நாடக மொழியாக்கத்தை, வாசுதேவன் என்று எழுதி, அதற்குப் பக்கத்தில் சிறுகோடு போட்டு, நிர்மலா என்று எழுதி வைத்து, அதுதான் சரியானது என்று பாலேந்திரா அழிவழக்காடுவது வாசுதேவனுக்கும் நல்லதல்ல, நிர்மலாவுக்கும் நல்லதல்ல.

சீசருக்குரியதை சீசருக்குக் கொடுத்து விடுவது (Rendering  unto  Caesar)  அறிவார்ந்த மரபு சார்ந்தது.

ஒரு நாடக அமைப்பைப் பேணும் பாலேந்திராவிற்கு, அறம் சார்ந்த ‘தார்மீகப்பொறுப்பு’ உண்டு. நாடகம் போன்ற ஒரு கூட்டு முயற்சியில், முழுமையாகப் பங்களித்தோரின் பணியை மறைத்துவிட முயல்வது அறமாகாது. ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும்’ என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். ஒன்று சேர்ந்து ஒரு நாடக இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர்கள், பின்னர் கருத்து வேறுபாடுகொண்டு வெவ்வேறு திசைகளில் பயணிக்க நேரும் நிலைகளில், கடந்த காலங்களில் அவர்கள் செய்த பங்களிப்பை இருட்டடிப்புச் செய்ய முனைவது, தவறான தகவல்களை வழங்குவது ஒரு கலாசாரச் செயற்பாட்டாளனுக்கு பெருமை சேர்ப்பதில்லை. இன்றைய யுகத்தில், ஒன்று மாறி ஒன்று, புதுக்கதைகள் சொல்லிக் கொண்டிருப்பது, துரித கதியிலேயே வெளிறிப் போய்விடுகிறது.

நிர்மலாவின் மொழிபெயர்ப்பில் மேடையேறிய ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தின் இறுதியில் ஒரு வாசகம் வருகிறது:

‘இந்நாளில் மின்னல் ஒளியால் அல்லவா உலகம் ஒளியூட்டப்பட்டிருக்கிறது’

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Tuesday, 03 October 2017 06:36