இலக்கியம்: தீவகம் தந்த தேன்தமிழ்க் கவிஞர்

Thursday, 13 July 2017 12:15 - முனைவர் பால. சிவகடாட்சம், மேனாள் சிரேட்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் - இலக்கியம்
Print

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -- முனைவர் பால. சிவகடாட்சம், மேனாள் சிரேட்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் -மரபுக்கவிதை எழுதுவது இலகுவான விடயம் அல்ல என்பது கவிதை எழுத முயன்றவர்கள் கண்டறிந்த அனுபவ உண்மை. யாப்பு எதுகை, மோனை, முரண், இயைபு எல்லாம் கவிதை இலக்க ணத்துக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இலக்கணம் மீறாத கவிதையாக இருந்தாலும் அந்தக்கவிதை எத னைச் சொல்ல வருகின்றது என்பதும் முக்கியம். எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேடி எடுத்துக் கவிதை யாக்கும்போது சொல்லவந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லையோ என்ற ஏக்கம் வேறு தோன்றுவது உண்டு.  சொல்ல வந்ததைச் சுவைபடச் சொல்லிவிட்டாலே போதுமே. இதற்கு இலக்கணம் எதற்கு? எதுகையும் மோனையும் எதற்கு? என்ற உணர்வுடன் தம் எண்ணப்படி எழுதிவிட்டு இதுவும் கவிதைதான் என்று சொல்லும் கவிஞர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்களையும் இன்று இரசிப்பவர்கள் ஏராளம். இத்தகைய ஒரு காலகட்டத்தில் மரபுக்கவிதை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது.

தனது  முதற்பாடலின் முதற்சொல்லிலேயே ‘திகழ்தசக்கர’த் தைத் ‘திகடசக்கரம்’ என்று புணர்த்திப் பாடிவிட்டுத் திண்டாடிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கதை பலரும் அறிந்ததே. எனினும் அந்த இலக்கணத்தை விளக்கும் வீரசோழியம் என்னும் நூல்பற்றி கச்சியப்பரே அறிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். தமது பாட்டிலே எதுகை மோனை சரிவரவேண்டும் என்பதற்காக ‘ நாராயணன்’ என்னும் சொல்லில் ஒரு சீர் குறைத்து ‘நராயணன்’ என்று பாடிவிட்டாராம் கம்பர். அவர் மகாகவி என்பதற்காக அவரை மன்னித்து விடுவீர்களா? அப்படியானால் நான் இனிமேல் ‘ நார்’ என்ப தை ‘நர்’ என்றும் ‘வாள்’ என்பதை ‘வள்’ என்று ‘நான்’ என்பதை ‘நன்’ என்றும் பாடப்போகிறேன் என்று பயமுறுத்துகின்றார்

நாராயணனை நராயணன் என்றே கம்பன்
ஓராமல் சொன்ன உறுதியால்-நேராக
வார்என்றால் வர்என்பேன் வாள்என்றால் வள்என்பேன்
நார்என்றால் நர்என்பேன் நன்


மரபுக்கவிதை பாடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வெண்பா விருத்தம் அகவற்பா வஞ்சிப்பா என்றும் பாடிக்கொண்டிருக்கும் தீவகம் தந்த தேன்தமிழ்க்கவிஞர் இராஜலிங்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. “ பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்...”


என்று பாடிய பாரதிதாசனின் தமிழ்க்காதலுக்கு எந்தவிதத்திலும் குறைவற்ற தமிழ்ப்பற்றை இவரது கவிதைகளில் காணமுடியும்.

அகதிகளாக ஓடிவந்தவர்களை அரவணைத்து அமைதியாக வாழ வழிகாட்டிய கனடா நாட்டின்மீது அவர் கொண்டிருக்கும் நன்றி யுணர்வு இந்நூல் முழுவதும் தடையின்றி வெளிப்படுகின்றது.

“கனடிய நாடே எம்மைக் காத்தபொன் வீடே மக்கள்
அனலிடைப்பட்ட போதும் அகதியாய் ஏற்ற நாடே...”


என்று போற்றுவதுடன் நின்றுவிடாது

“இனனும்உன் மேனியாம் பொன்எழில் நாட்டிலே
இனங்களின் போர்கள் இல்லை
எடுத்திடும் வாக்கிலே பிரெஞ்சிடும் மக்களின்
பிரிவினை வெல்லவில்லை...”


என்று இனப்பாகுபாடு காட்டாத சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் கனடா நாட்டின் வெற்றியை சிங்களத்தின் குறுகிய பார்வையின் தோல்வியுடன் ஒப்பிட்டுப் பாடுகின்றார். எனினும் உறைபனிச்சாரலில் நின்றுகொண்டு பெற்றதாயையும் பிறந்த பொன் நாட்டையும் நினைந்து நினைந்து,

பாக்கோடு வெற்றிலை படர்கின்ற மண்ணையான்
பாதமே துடைத்து வந்தேன்
தெரிகின்ற வானத்தில் நிலவோடு சோற்றையே
தீத்திய அன்னை விட்டேன்
என் தாயர் சுற்றத்தை இயமன்கை விட்டுமே
என்னாவி மீட்க வந்தேன்
...அகிலமதில் ஓடியான் அகதியெனும் சூரனாய்
அசகாயனாக வந்தேன்


என்று இவர் தாம் விட்டுவந்த சொந்தங்களை எண்ணியும் தனது இயலாமையை எண்ணியும் பாடும்போது மனது வலிக்கின்றது.

தமிழ்மக்களின் விடுதலை வேட்கையை வல்லாதிக்கக் கும்பல் ஏறிமிதித்துவிட்டதே என்று இவர் ஏங்கித் தவிப்பதைக் காண முடி கின்றது.

பாகிஸ்தான் சீன ரசியா
பாரதச் சோன்யா கூட்டம்
மோகித்து ஆயுதங்கள்
மூடையாக் கொடுத்துப்.
..

போரை முடித்து வைத்ததைக் கூறுகின்றார். அதேசமயம் ஈழத்தமிழ் மக்களின் அறவழிப் போராட்டம் பற்றியும் அப்போது அவர்கள் அனுபவித்த துயரங்கள் பற்றியும் வரலாறு தெரியாத எம் இளம் தலை முறைக்குப் பாடம் நடத்துகின்றார்.

நாற்பத் தெட்டிலே சுதந்திர வார்ப்பு
நாற்பத் தொன்பதில் நாறியது இலங்கை
வாழ்வு கொடுத்த மலையகத் தமிழரை
பாழ்வோர் ஆக்கிப் பறித்தனர் வாக்கு
ஐம்பத்தி எட்டில் அடங்கத் தமிழர்கள்
கும்பிட்டும் கூடக் கொலையே புரிந்தனர்
அறுபத்து ஏழு எழுபத்தி யேழு
முறுகுவெண் பத்தி மூன்றென வாண்டுகள்
கொல்லும் வன்முறைக் கூடாரத்துள்ளே
பல்லாயிரமாய்ப் பறித்தனர் தமிழரை


முன்னொருகாலத்தில் தாம் தாயகமண்ணில் வாழ்ந்த இனிய...

நீர்வயல்க ளோடும் நெடுந்தாரை புட்களொடும்
கார்மேக விண்குடிலிற் கட்டுண்டு வளர்ந்ததினால்
கோட்டானும் புள்ளும் குதிக்கும் பசுக்கன்றும்
நீட்டுச்செவியாடும் நேர் இருந்து காவலிடும்
பொன்னி எனும் நாயும் பெற்றதாய் தந்தையரும்
என்னோடு இயைந்த இளைஞர் சிறுவர்களும்
ஓடிப்பிடித்து ஒருமித்துப் பட்டமிட்டு
பாடிப்பறந்த ..
.

தன் இளமைக்காலத்தை கவிஞர் இராஜலிங்கம் இரைமீட்கும் போது ஓர் இனம் தெரியாத ஏக்கம் எமக்கும் ஏற்படுகின்றது.

வண்ணமயில் மீதிருக்க எண்ணமெலாம் தேன் இனிக்க
வடிவேலன் கோவில் எழில் வாசல்வருமா - நல்லை
மண்ணில் ஒருகோடிசனம் மத்தளங்கள் கூடவரக்
கண்ணில்வந்த காட்சியெனக் காணவருமா?
நான் நடந்த வயல்கள் எல்லாம் நரி இருக்குதே-இப்போ
நாய்பிய்த்த துணியெனவே நிலம் இருக்குதே


என்றெல்லாம் ஏங்கி நிற்கும் கவிஞர் இராஜலிங்கம் யாழ்ப்பாணத்தின் இன்றைய சீர்குலைவை எண்ணிக் குமுறுவதையும் பார்க்கின்றோம்.

அரிசிக்குக் காசில்லை பருப்புக்கும் காசில்லை
விஸ்கிக்குக் காசுண்டு வெறிபோடத் தூள் உண்டு...

தமிழே தங்களது அடையாளம் என்பதைத் தமிழ்க்குழந்தைகள் ஒரு போதும் மறந்துவிட முடியாது என்பதைக் கவிஞர் இராஜலிங்கம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மீண்டும் மீண்டும் நினைவூட்டு கின்றார். இன்று இந்த நினைவூட்டல் அவசியமாகிவிட்டது என்பதை எண்ணிப் பார்க்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.

மொழியே இனத்தின் அழகாகும்-தமிழ்
மொழியே எங்கள் முகமாகும்
மொழியை மறந்தால் தமிழழியும்-தாய்
மொழியை இழந்தால் இனமழியும்!
வளரும் குழந்தை வாழ்வுகொடு-அந்த
வாழ்வே தமிழாய் வரைந்துவிடு
உளத்தில் தமிழை உறங்கவிடு-அந்த
உணர்வில் நிலத்தை உழுதுவிடு!


எமது செம்மொழியாம் தமிழ்மொழியில் பெயருக்குமா பஞ்சம் வந்துவிட்டது. சேயோன் என்றும் மாயோன் என்றும் வான்மதி என்றும் வளர்மதி என்றும் எத்தனை எத்தனை அருந்தமிழ்ப்பெயர்கள் எல்லோர் வாயிலும் எளிதில் நுழையக்கூடிய பெயர்கள் தேடினால் கிடைக்காமலா...

பாப்பாவோடு பைந்தமிழ் பேசி
பழகிப்பாரும் பெற்றோரே
கூப்பா மாப்பா காச்சா என்று
குழந்தைக்குப் பெயர்வை யாதே...
மாறன் அறிவோன் மன்னன் என்றே
மகிழும் பெயரை வைத்திடுவீர்!
நாறல் பெயரை சூட்டிச் தேச
நலத்தைக் கெடுத்தே வாழாதீர்!


கவிஞர் இராஜலிங்கம் போற்றிப் பாடியிருப்போர் ஏராளம். கவிஞர்களை, எழுத்தாளர்களை, ஊடகத்துறையினரை அரசியல் வாதிகளை, வணிகப்பெருமக்களை என்று அனைத்துத் தரப்பினரையும் வாய் நிறைய வாழ்த்துகின்றார். எவரையும் அவர் தூற்றிப்பாடியது கிடையாது. அவ்வாறு பாட அவருக்கு வரவும் வராது.

பாடல்களைத்தெரிவு செய்வதிலும் அவற்றைத் தொகுப்பதிலும் கவிஞர் இன்னும் சற்றுக் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. கூறியது கூறல் என்னும் குற்றம் வராமல் பார்த்துக்கொள்ளல் அவசியம். பாடல்களைத் தொகுப்பதில் மேலும் ஒரு இறுக்கமான திட்டவட்டமான ஒழுங்கைக் கடைப்பிடித்திருக்கலாம் என்பதும் எனது கருத்து.

ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து இது அருமையான ஒரு கவி தைத் தொகுப்பு. பேணிப் பாதுகாக்கப்பட வே;ண்டிய ஆவணப்பதிவு. கவிஞர் தொடர்ந்து அருமையான கவிதைகளைப் படைத்து அன்னைத் தமிழுக்கு அணிகலன்கள் பல செய்ய உடல் நலத்தையும் ஊக்கத்தையும் தொடர்ந்து அருளும்படி இறைவனை வேண்டி நிற்கின்றேன்.

தீவகம் தந்த மரபுக் கவிஞர்களாம் தில்லைநாதப்புலவர், வேந்தனார், தில்லைச்சிவன் என்போர் அமர்ந்த சங்கப்பலகையில் நிச்சயமாக இவருக்குமோர் இடம் உண்டு.

அனுப்பியவர்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 13 July 2017 12:26