முருகபூபதியின் 25 ஆவது நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'

Thursday, 04 February 2021 11:46 - பூபாலரட்ணம் சீவகன் அணிந்துரை ( ஆசிரியர் - அரங்கம் செய்திகள் ) - நூல் அறிமுகம்
Print

முருகபூபதியின் 25 ஆவது நூல்  'நடந்தாய் வாழி களனி கங்கை'கொழும்பு - பார்ப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை சொல்லும் ஒரு மண். இலங்கையின் தலைநகர் என்பதற்கு அப்பால் இலங்கையின் சரித்திரத்தில் மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாநகரம். இலங்கை வாழ் தமிழரைப் பொறுத்தவரையிலும் கூட அவர்களின் தாயகம் வெவ்வேறு நகரங்களாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் கடந்த காலங்களில் அவர்களின் கதையோடு இணைந்துவிட்ட ஒரு ஊர் அது.

தமிழர் சந்தித்த கலவரங்கள் பெரும்பாலும் மையம் கொண்ட இடமாக கொழும்பு இருந்துள்ளது. அவர்களது வாழ்விடமாக அது இருந்துள்ளது. அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வளம் கொடுத்த மண்ணாக அது இருந்துள்ளது.

வடக்கு - கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் தலைநகர் வாழ்க்கையை நோக்கி ஓடிவருவோருக்கு கொழும்பு காண்பிக்கும் கோலங்கள் பல. ஆனால், எங்களைவிட, கொழும்புக்கு அண்மித்த நகரான நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி அண்ணனுக்கு அது கொடுத்த காட்சிகள் வேறானவை. அனுபவங்கள் வேறானவை.

அவற்றைக் கொண்டு கொழும்பின், அதன் அடிநாதமான களனி கங்கையின் தீரத்தில் நடந்த நிகழ்வுகளை இங்கு காவியமாக வடிக்க அவர் முயற்சித்திருக்கிறார்.

வீரகேசரி பல எழுத்தாளர்களை விளைவித்த ஒரு களம். அங்கு உருவானவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் முருகபூபதி அண்ணர். அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் நான் அங்கு இல்லை.

ஆனால், அவரோடு அந்தக் காலங்களில் பணியாற்றிய பலர் பெரும் ஆளுமைகள். ஆனால், அவரது அனுபவம், கற்கை ஆகியன வெறுமனே வீரகேசரியை மாத்திரம் மையம் கொண்டவை அல்ல. அதனையும் கடந்து தான் பிறந்த மண்முதல் தான் இப்போது வாழும் ஆஸ்திரேலியா வரை உலகெங்கும் அவர் கண்ட அனுபவங்கள் அவரது எழுத்தில் தெரியும்.

கடினமான எழுத்து நடையல்ல. வீரகேசரி வாசகனுக்கும் மித்திரன் வாசகனுக்கும் ஒரே நேரத்தில் விளங்கங்கூடிய ஒரு நடை அது. நாங்களும் பார்த்துக் கற்க வேண்டிய மொழி நடை.

அதே எழுத்து நடை “நடந்தாய் வாழி களனி கங்கை” யையும் அழகுபடுத்தியுள்ளது. புதுவிதமான கொழும்பை, அதன் அண்டை இடங்களை எங்களுக்கு அது அறிமுகம் செய்துள்ளது.

அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் கதையை, உழைப்பை, உயர்வை, சுமையை, சோகத்தை, அழிவை, இரத்தத்தை, தன்னுள் கலந்து ஓடும் களனி கங்கை தனது தீரத்தில் பார்த்த கதை இது.

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு பத்திரிகை தேவை என்ற அடிப்படையில் உருவானது “அரங்கம் செய்திகள்” பத்திரிகை. கிழக்கு மக்களுக்கு தலைநகர் கொழும்பையும் அதன் அண்டிய இடங்களையும் பற்றி பல புதிய தகவல்களை முருகபூபதி அண்ணனின் இந்தத் தொடர் கூறியது.  

இது மாத்திரமன்றி இன்னும் பலவும் அவர் எங்களுக்கு எழுதியுள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் அவர் எழுதியுள்ளார். இந்த நூலை ஆக்கும் அவரது முயற்சிக்கு எமது வாழ்த்துகள் உரித்தாகும். அவர் இன்னும் படைக்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.

வெளியீடு : குமரன் புத்தக இல்லம்
கொழும்பு – சென்னை
39, 36 ஆவது ஒழுங்கை, கொழும்பு -06

மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

- கிழக்கிலங்கை அரங்கம் செய்தி இதழில் தொடராக வெளியான வரலாற்றின் பதிவு. பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பியவர் முருகபூபதி. -

Last Updated on Thursday, 04 February 2021 11:52