சிறுகதை: 'அன்னக் குட்டி'

Friday, 08 November 2019 00:03 - ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்., நெல்லை, தமிழகம்) - சிறுகதை
Print

ஶ்ரீராம் விக்னேஷ்எனக்கு  நல்லா  நினைவிருக்கு….., இருவத்தஞ்சு  வரியமாகுது….   தைப்பொங்கல் கழிஞ்சு  மற்றநாள்  மாட்டுப்பொங்கல்  அண்டைக்குத்தான்  எங்கடை  அன்னக்குட்டியும்  பிறந்தது.

“அன்னக்குட்டி…….”

ஓமோம்….   நான்  அப்படித்தான்  கூப்பிடுவேன்.

அன்னக்குட்டியிலையிருந்து  நான் பத்து  வயது  மூப்பு.  என்னோடை  கூடப்பிறந்த  பொம்பிளைபிள்ளையள்  ஒருத்தரும்  இல்லையே எண்டதாலையும் , அது  என்ரை  அம்மம்மா  யாழ்ப்பாணத்திலையிருந்து ஆசையாய்  வாங்கி  அனுப்பிவிட்ட  மாட்டின்ரை  முதல்  பசுக்கண்டு  எண்டதாலையும்,  அன்னலச்சுமி  எண்ட  அவ பேரை  வைச்சோம். என்னைப் பொறுத்தமட்டிலை,  அன்னக்குட்டி  எங்கடை குடும்பத்திலை  ஒருத்தி. என்ரை  தங்கச்சி…..!

“அன்னக்குட்டி …..  அண்ணை  பள்ளிக்குடம்  போட்டு  வாறன்…. நீ  அம்மாட்டை  பால்குடிச்சிட்டு  நல்லபிள்ளையா  பேசாமல்  இருக்கவேணும்  தெரியுமோ….. துள்ளிப்பாஞ்சு  விளையாடுறோமே  எண்டு  நினைச்சுக்கொண்டு  கிணத்தடிப்பக்கம்  போவுடாதை…. சரியோ…. கிணத்துக்கை  ஒரு  கிழவன்  இருக்குது…. உன்னைப் பிடிச்சுப்போடும்….”

பள்ளிக்குடம்  போகத்  துவங்கிறத்துக்கு  முதலெல்லாம், என்ரை அம்மாவும்  இப்பிடித்தான் என்னட்டையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி வெருட்டிறவ….

நானும்  அதுமாதிரிச்  சொல்லிக்கில்லி  வெருட்டி வைக்காட்டா, உது  சும்மா  கிடக்காது  கண்டியளோ….

பள்ளிக்கூடத்தில  இருக்கையுக்கையும்  அன்னக்குட்டியின்ரை  நினைவுதான்…..

வீட்டுக்கு  வந்தாலும், நேரா கொட்டிலுக்குப்  போய், பத்து  நிமிசமாவது  அன்னக்குட்டியோடை  கதைச்சுப்போட்டுப்  போனாத்தான்  எனக்குப்  பத்தியப்படும்….

என்ரை  பெரிய அண்ணைக்கு  கலியாணமாகி,  அவையள்  தனிக்குடித்தனம்  போகையுக்கை, பெரிய  பாடுபட்டும்  கையோடை  கொண்டுபோக  ஏலாமல்  போன சாமான்,  இந்த  அன்னக்குட்டி  மட்டுந்தான்…. அதுக்கு  முக்கிய  காரணம்  நான்தான்….

“கோழி  வளத்தாலும்…. கோறணமென்ற்றிலை” எண்டு, அரசாங்க உத்தியோகத்துக்கு  ஒரு மதிப்பு இருக்கிறதால,          நானும்  வளந்து  பள்ளிக்கூட  வாத்தி  உத்தியோகத்துக்கு  வந்திட்டன்….  எனக்கும்  கலியாணமாகி, பத்து  வயசில ஒரு மகனும், எட்டு  வயசில  ஒரு  மகளும்  இருக்கினம்…..அன்னக்குட்டியும்  வளந்து,  நிறைய  கண்டுகளைப்  போட்டுட்டுது….  அதிலை  வளந்தது  அரைவாசி…. துலைஞ்சது  அரைவாசி….

எத்தினைதான்  மாடு,கண்டு  இருந்தாலும்….. என்ரை  கவனமெல்லாம்  அன்னக்குட்டியில  மட்டுந்தான்….

“இஞ்சாருங்கோ….  எப்ப  பாத்தாலும்  மாட்டுக்கொட்டிலுக்கையே  தலையை  வைச்சுக்கொண்டிராதையுங்கோ….  உங்களுக்கு  வீடு, குடும்பம்  எண்டு  ஒண்டிருக்கு…..”

என்ரை  பொஞ்சாதிக்காறி,  புஷ்பாவின்ரை  அருச்சனை  இது.

கத்தத்  துவங்கினாளெண்டால்    அவ்வளவுதான்…. அகண்டு விரிஞ்ச  வங்காளவிரிகுடா  உள்ளை போனாலும்,  அறுவாள்  லேசிலை  வாயை  மூடாள்….!  சத்தம்போட்டு, நல்லா  மாய்மாலம்  பண்ணி -  ஊரைக்  கூட்டுறதிலை  உவளை  அடிக்கிறத்துக்கு  ஆளே  இல்லை….  சண்டை  பிடிக்கிற  நிலமை  வந்தா  கண்ணீர்  வழிய வழிய  அழுதபடி  போய்  கேற்றடியிலை  நிப்பாள்…. உப்பிடி ஏன்  நிக்கிறாயெண்டு  ஆரும்  கேட்டால்,  அப்பதான்  உவையின்ரை சுத்துமாத்துகள்,  பொட்டுக்கேடுகள்  எல்லாருக்கும்  தெரியவரும்  எண்டு  சொல்லிக்கொண்டே  எங்கடை  வீட்டைக்  காட்டுவாள்….

இந்த  லட்சணத்திலை  மூதேசிக்கு,  வலு தொங்கலா  தத்துவம்  கதைக்கவும்  வரும்…..

“வீட்டில  வளக்கிற  சீவனுகளிலை இரக்கம்  காட்டவேணும் எங்கிறது  உண்மைதான்….  அதுக்காக, வேலைக்குப்  போட்டு  வந்ததும், வராததுமா  அன்னக்குட்டி  மேச்சலுக்குப் போனதா….புல்லுத்  திண்டுதா…. புண்ணாக்குத்தண்ணி  குடிச்சிதா  எண்டு  கேக்கிறது…. உதெல்லாம்  என்ன  கதையெண்டு  கேக்குறன்…. அருவல் நொருவலா  ரண்டு  பிள்ளையளைப்  பெத்து வைச்சிருக்கிறோமே…. அதுகளயும் நல்லவடிவாய்  காமாந்து  பண்ணி வளதெடுக்க  வேணுமே  எண்ட  எண்ணமே  இல்லை…. எப்ப  பாத்தாலும்   மாடு….   மாடு…..   மாடு….”

அவளைச்  சமாதானப்படுத்துறதுக்குள்ளை  நான்  படுறபாடு ……

“புஷ்பா….. மாடு  எண்ட  சொல்லை  நீ  சிம்பிளா  நினையாதை  கண்டியோ….. திருக்குறளிலை  கூட  வள்ளுவர் சொல்லியிருக்கிறார்,  மாடு  எண்ட  சொல்லுக்கு  கருத்து,  செல்வம்….. தெரியுமோ…….”

வாயை  மூடுற  பிறப்பெண்டு நினைச்சா  அது  பிழை…. அவளிட்டையா….?

“வள்ளுவர்தான்  சொன்னதோடை  விட்டிட்டாரெல்லா….  எப்பபாத்தாலும், அதையே  கட்டிப்பிடிச்சுக்கொண்டு  கிடக்கையில்லையே....உவள்  என்னகத்துக் கத்தினாலும்,  விசரி  கத்திப்போட்டுப் போகட்டும்  எண்டு  நினைச்சுக்கொண்டு  உங்கட  வேலையை  பாத்துக்கொண்டிருந்தியள்  எண்டால்  நான்  எப்பவும்போலை  இருக்க  மாட்டேன் ….  உண்மையிலை  விசராட்டம்  ஆடிப்போடுவன்  கண்டியளோ…..”

அது  எல்லாருக்கும்தான்  தெரியுமே….  உன்ரை  குணத்தை  அறிஞ்சுதான்  உன்னோடை  கூடப்பிறந்ததுகளே  உன்னைவிட்டு  நாலடி  தள்ளி  நிக்கிதுகள்…. என்ன  செய்ய,  நான்  ஒரு  உலக்கையன்…. உன்னைப்பற்றி  உங்கடை  சொந்தக்காரர்  சிலபேர்  சொல்லியும்  கேளாமை  உன்னைப்போய்  லவ் பண்ணி………

ஒவ்வொரு  குடும்பத்துக்கையும், ஏதோ  ஒருவிதத்திலை  பிரச்சனை  வரத்தான்  செய்யும்….  ஆனால்,  எங்கடை  குடும்பத்துக்கை,  இப்ப  அன்னக்குட்டியை  வைச்சுத்தான்  பிரச்சனை !

இத்தனை  நாள்  பிரச்சனையள் கூட  ஒண்டுமில்லை….  ஆனால், முந்த நாள்   ஞாயிற்றுக் கிழமை  காலம்பிறை  மேச்சலுக்குப்போன  அன்னக்குட்டி  பகல்  பயினொருமணிக்கு  புண்ணாக்குத்தண்ணி  குடிக்க  வரயில்லை….  அண்டைக்கு  பள்ளிக்குடம்  லீவெண்டாலும்,  மேல்வகுப்புப்  பிள்ளையளுக்கு  ஸ்பெசல்  வகுப்பு  வைக்கவேண்டிய சூழ்நிலை…..  மத்தியானச்  சாப்பாட்டுக்கு  வந்த நான்,   காலம்பிறை கொட்டுக்கை  ஊத்திப்போட்டுப் போன  புண்ணாக்குத்தண்ணி  அப்பிடியே  கிடந்ததைப்  பாத்த கையோடை  திடுக்கிட்டுப் போனேன் ! 

இதுக்கு  மேலையும்  என்னாலை  பொறுத்துக்கொண்டிருக்க  ஏலாது. வந்த  கோவத்துக்கு  நல்லா கத்திப்போட்டன்.

“ ஏய்  புஷ்பா…. உங்கை  வீட்டுக்கை  இருந்து  முட்டை இடுறியா….  சரியா பத்தரை பயினொண்டுக்கெல்லாம்  வந்திட்டுப்போற  அன்னக்குட்டி  இன்னும் ஏன்  வரயில்லை ?”

அடுத்த  நிமிசம்  உள்ளையிருந்து………..

“ஓமோம்…. இப்ப அதைத்தான் கம்மக்கையா  பாக்கிறன்…. உங்கடை  அன்னக்குட்டியை  பாக்கிறதுக்கும், மேய்க்கிறதுக்கும்தானே என்ரை  ஆத்தையும் அப்பனும் என்னைப் பெத்துப்போட்டிருக்கினம்…. கிழடுபத்திப்போய்  ஒண்டுக்கும்  ஆகாததாய்  அங்கங்கை  எலும்பு தள்ளினபிறகும்…. அன்னக் குட்…..டீ…….!  எனக்கு  வாயில  நல்லாத்தான் வருகுது…. விளக்குமாத்துக்கு  பட்டுக்குஞ்சமாம்…. கழுதைக்கு  முத்துமாலையெண்டு  பேர் வைச்சினமாம்…..... நானும் தெரியாமைத்தான்  கேக்குறன்….    இனியும்  இதை  வைச்சிருந்து  என்ன  செய்யப்போறியள் ? அடிமாட்டுக்காக  மாசாமாசம்  கொழும்பிலையிருந்து  சிங்கள யாவாரிமார்  லொறி கொண்டந்து  மாடுகளை விலைக்கு வாங்கிக்கொண்டு போறாங்கள்…. கேக்கிற விலைக்குத்  தள்ளிப்போட்டு, நிம்மதியா  இருக்கவேண்டியதுதானே…. எங்களிட்டை  இன்னும்  நிறைய  மாடுகள்  இருக்கெல்லா…. அதுகளை  வைச்சிருந்தாக்  காணாதா…..”

எனக்கு  வந்த  கோவத்துக்கு, விறகுகட்டை  ஒண்டை எடுத்து, அவளை  விளாசு  விளாசெண்டு  விளாசிப்போட்டுப்  போகவேணும்போலை  இருந்துது….

“சும்மா  விளல்க்கதை  கதையாதை  புஷ்பா….  பற்றுப்பாசம்  எண்டா  என்னண்டு  தெரியுமா  உனக்கு…..பிறப்பிலை  மிருகமாயிருந்தாலும், வாழ்க்கையிலை  என்ரை  உயிரோடை  கலந்துபோன  உறவெடி  அது……  நேற்றுவந்த  உனக்கென்ன  தெரியும்…….”

கடைசியாய்  நான்   சொன்ன  வார்த்தை  அவளின்ரை  நெஞ்சிலை  நல்லாக்  குத்தியிருக்க  வேணுமெண்டு  நினைக்கிறன்…. மனதுக்கை  கறுவிக்கொண்டு  போனாள்…..

எனக்கு,  வலு  புழுகமாய்  இருந்துது….. விறகுகட்டையாலை  விளாசினா  உடம்புதான்  நோகும்…..  இப்ப மனதுக்கை  நோகட்டும்….

என்ரை  மகனிட்டைக்  கேட்டன்…..

“மோனே…. அப்பாக்கு  பள்ளிக்குடத்தில  பின்னேரம்  முக்கியமான  கிளாஸ்  இருக்கப்பா….. நீ  ஒருக்காப்  போய்  எங்கடை  அன்னக்குட்டியை  தேடிப்பாத்திட்டு  வாறியேயப்பு…..”

பிரயோசனம்  இல்லை.

“போங்கோப்பா…. நீங்களும்  உங்கடை  அன்னக்குட்டியும்…..  கிழமையில  ஞாயிற்றுக் கிழமை  ஒருநாளைக்குத்தான்  ரீவீயில  நல்ல புறோக்கிராமுகள்  போடுறாங்கள்…..  அதையும்  பாக்கவிடாமல், நீங்களும், உங்கடை  அன்னக்குட்டியும்  தடுத்துப்போடுவியோ  போலை  இருக்கு…..” 

மனசளவிலை  நொந்துபோனேன்….

“வந்ததும்   அப்பிடி……   சிவன் – தந்ததும்  அப்பிடி……  ஆத்தையின்ரை  புத்தி   அப்பிடியே  இருக்கு……” 

அன்னக்குட்டிக்கும்  எனக்கும்  இருக்கிற  பாசத்தை  விளங்கிற  அளவுக்கு  அறிவிருந்தா…………

இதுகளெல்லாம்  பிறந்தவீட்டுக்கையே  செத்திருக்குங்கள்…..!

“பறவாயில்லை….. பிறின்சிப்பலிட்டை  கெஞ்சி மண்டாடியெண்டாலும்  ஒரு  மணித்தியாலத்துக்கு  பொமிசன்லீவு  வாங்கிக்கொண்டு போனாப்  போதும்….. என்ரை  அமுதாக்குட்டியைத்  தேடிப்  பிடிச்சுப்போடுவன்…..”

இடை வேளை  விட்டமாதிரி,  மூண்டு  நாள்  அமைதி………   

அதுமட்டுமில்லாமல்,   அண்டைக்கு  காலம்பிறை எழும்பின  நேரத்திலையிருந்து,    பள்ளிக்குடத்துக்கு   வெளிக்கிடுற வரைக்கும், புஷ்பா  விழுந்து விழுந்து  காட்டின  அன்பு, அண்டைக்கு  எனக்கு  சம்பள நாள்  எண்டதை  ஓட்டமெற்றிக்கா  ஞாபகப்படுத்திச்சு…..!

“இஞ்சாருங்கோ…. பின்நேரம் கோயிலுக்குப்  போகவேணும்….. நானும் பிள்ளையளும் வெளிக்கிட்டு  றெடியாய்  நிப்போம்….. நீங்க  அங்கினை  இங்கினை  நிண்டு  மினைக்கெடாமை  வந்திடுங்கோ…..”

புஷ்பாவின்ரை  அன்புக் கட்டளை   இது…… பாக்கிறவைக்கும், கேக்கிறவைக்கும்  கோயிலுக்குப்  போறதுதான்  தெரியும்….. ஆனால், ஓட்டமா  ஓடியோடி  சலூற்று அடிச்சமாதிரி  அவசர  அவசரமா  சாமி  கும்பிட்டிட்டு…… சினிமா  தியேட்டருக்கை  போற ரகசியம்,  எனக்கெல்லோ  தெரியும்……

பின்நேரம், பள்ளிக்குடத்திலையிருந்து  வெளிக்கிட்டு,  இடையிலை  எங்கையுமே  நிக்கப்பிடாது….. நிண்டு ஆரோடையும் கதைச்சு  மினைக்கெடப்பிடாது  எண்ட  முடிவோடை  ஸ்கூட்டரை நிதானமாய்  ஓட்டிக்கொண்டு  போனேன்…….
பக்கத்து  ஊர்க்காறர்  நாலுபேர், என்னைப்  பாக்கிறதுக்காக  வீடுதேடி வந்து  காத்துக்கொண்டிருந்தினம்….. புஷ்பாவின்ரை  முகத்திலை  எள்ளும், கொள்ளுமா  வெடிச்சுக்கொண்டிருந்துது…..

விசாரிச்சு  விசயத்தைத்  தெரிஞ்ச   உடனை  எனக்குக்  கெடிக்கலக்கமாய்ப்  போச்சுது….. ஏழெட்டு  மாடுகளோடை  அன்னக்குட்டியும் சேந்து,  பக்கத்து  ஊரில  ஒரு  நெல்லு வயலுக்கை  போய்  நல்லா  மேஞ்சிருக்குதுகள்….. வயல்க்காறங்கள்  கலைச்சுப்  பிடிக்க  ஓட,  மற்ற  மாடுகளெல்லாம்  பாஞ்சிட்டுதுகள்…. அன்னக்குட்டி  கொஞ்சம்  வயதுபோனதாலை   அதால  சரியாய் ஓட ஏலாமல்ப்  போச்சுது….  வயல்க்காறன்,   மாடுபிடி காறன்  எண்டதாலை   சுருக்குப் போட்டு  கயிறு எறிஞ்சு  பிடிச்சுப் போட்டான்…. கொண்டுபோய்   விதானையார்  வீட்டிலை….. அதுதான் -  கிராமத்து தலைமைக்காறர்  வீட்டிலை  கட்டுறத்துக்கு  முடிவெடுத்த  நேரத்திலை, எங்களை  நல்லாத் தெரிஞ்ச  ஆரோ  தடுத்து,  என்ரை  விலாசத்தைக்  குடுத்து, என்னை  நேரிலை பாத்து, விசயத்தைச்  சொல்லி, பிரச்சினையை  சுமுகமாய்  முடிக்கச்சொல்லிச்  சொல்லியிருக்கினம்….. அவனும், கையோடை மூண்டுபேரைக்  கூட்டிக்கொண்டு  என்னைத்தேடி  வந்திட்டான்….

இல்லையெண்டால், விதானை  வீட்டுக்கு  போற  மாடு – நேரா  பொலிசுக்குப் போய்,  அங்கையிருந்து  கோட்டுக்குப் போய்…. வயல்க்காறனுக்கும், கோட்டுக்கும்  தெண்டம் கட்ட  வைச்சிடும்…. வேறை எந்த  வேலையும்  பாராமல், பள்ளிக்குடத்துக்கும்  லீவு போட்டுட்டு…. அலையோ  அலையெண்டு  அலைய வேணும்…..

இதிலை  கவனிக்கவேண்டிய  விசயம் என்னண்டா, வயலுக்கை மேஞ்ச மாடுகள்  ஏழெட்டு….  ஆப்பிட்டது  ஒண்டு….  ஆனால், வீணாப்போன  பயிர்  முழுத்துக்கும்  நான்தான்  தெண்டம் குடுக்க வேணும்….  வேறை  வழி  இல்லவே இல்லை…..

அவங்களோடை  பக்கத்து  ஊருக்குக்  கூடப்போய்  சமாதானமாய்  கதைச்சு,  தெண்டத்தைக்  குடுத்து,  அன்னக் குட்டியை  வீட்டுக்குக்  கூட்டிவந்து, கொட்டிலுக்கை  கட்டையுக்கை  நேரம்  இரவு  பத்துமணி  ஆகியிட்டுது….

மற்ற நேரங்களிலை, வானத்துக்கும்  பூமிக்குமாக  துள்ளிக் குதிக்கிற  புஷ்பா,  இப்ப  ஒண்டும்  சொல்லாமலும், என்னோடை  எதுவும்  கதையாமலும்  இருக்கிறதைப்  பாத்தவுடனை  எனக்கு  நெஞ்சுக்கை   பக்பக்  எண்டு  பயமாய் கிடக்கிது….  எந்த நேரம் - என்ன  செய்யப் - பிளான்  போட்டு  வைச்சிருக்கிறாளோ   எண்டு  பயந்துகொண்டு  சத்தம் காட்டாமை,  குசினிப் பக்கம்  போய்ப்  பாத்தேன்…. சாப்பிட  ஒண்டுமில்லை….

நான்  அன்னக்குட்டி  விசயமாய்,  வயல்க்காறனோடை  போன கையோடையே  அவசர அவசரமாய்  புட்டைக்கிட்டை  அவிச்சு, பிள்ளையளுக்கும்  சாப்பிடக் குடுத்திட்டு,  தானும் விழுங்கியிருப்பாள்….

பசி,  வயித்தைக்  குடைஞ்சாலும்  ரோசம்  தடுத்துது….. புஷ்பா  கோவப்படுகிறதிலையும்  ஞாயம்  இருக்குத்தானே…. கொண்டுவந்த   சம்பளக்  காசிலை,  தெண்டத்துக்கும் குடுத்தாச்சு…. என்ன செய்ய, என்ரை  உயிராய்  வளத்த  வாயில்லாச்  சீவன்  அன்னக்குட்டி…. அதுக்கு  என்ன  தெரியும்…. வயல்க்காறன்  நல்லா  அடிச்சுப்போட்டான்  போலை…. பத்து நாள்  பட்டிணி  கிடந்தமாதிரி  காலை  நொண்டி நொண்டி  நடந்து வந்துது…..  என்னையறியாமல்  என்ரை  கண்ணிலை  வந்த  கண்ணீரைத்  துடைக்கையுக்கை  நித்திரையும் வந்துது…..

நேரம் இரவு ரண்டுமணி,  எங்கடை  சிவர்மணிக்கூட்டில  அடிச்ச கையோடை  அன்னக்குட்டியின்ரை  அலறல்சத்தம்  காதைப் பிழந்தது....

துடிச்சுப்பதைச்சு  எழும்பி, மாட்டுக் கொட்டில்  பக்கம்  ஓடினேன்…. அங்கை  புஷ்பா  பெரியொரு  விறகு கட்டையால  அன்னக்குட்டியைப் போட்டு  அடிச்சுக்கொண்டிருந்தாள்….

நான்  பயந்தது  சரியாப்போச்சு….. ஊமைச்சியாய் இருந்தது -  உயிரை எடுக்கிற திட்டத்தோடையா…. விசர்பிடிச்சவள்  மாதிரிக் கத்தினாள்….

“கிழட்டு  மூதேசி….  துலைஞ்சு  போ….  போ…. வயலுகளுக்கை  பாஞ்சு, கள்ளத்தீன்  தின்னத்  தெரியிது…. தப்பியோடத் தெரியயில்லை…. நீயும் வாழமாட்டாய்….  எங்களையும்  நிம்மதியாய்  வாழவிடமாட்டாய்…. மனிசன்  கஷ்ரப்பட்டு  உழைக்கிறது எல்லாத்தையும்  உனக்கு  வாய்க்கட்டை  போட்டுட்டு  நாங்க  தெருவில  நிக்கவேண்டியதுதானா….  உன்னைக்  காடாத்தி விட்டாத்தான்  நிம்மதி….”

அடி பாதகி….  அடுத்தவன்  வயலிலை  திண்டதுகூட  உனக்குக்  கவலையில்லை…. தப்பி  ஓடாமல்  மாட்டுப்பட்டதுதான்  வேதனை…..

“புஷ்பா…. போடி  அங்காலை…. இரக்கமே  இல்லாத  ராட்சசி…… ஊமைக்கொத்தியாய்  இருந்தது  இந்த  சதிர்  ஆடத்தானா….”

அவளின்ரை  கையிலை  இருந்த  விறகுகட்டையப்  பிடுங்கி, அங்காலை  சுழட்டி  எறிஞ்சுபோட்டன்….

அடுத்த  நிமிசம், கையில நஞ்சுமருந்துப்  போத்திலோடை  எனக்கு முன்னாலை  வந்தாள்…. வயலுக்கு  தெளிக்கிறத்துக்காக  வாங்கி வைச்ச  மருந்து  அது….

“ஒண்டில்  நான்  உயிரோடை  இருக்கவேணும்….  இல்லையெண்டா  இந்தக்  கிழட்டுமாடு  இருக்கவேணும்….  இப்ப  சொல்லுங்கோ…. நான்  குடிக்கவா…. இல்லை, இந்த மாட்டுக்குப்  பருக்கவா….”

பேய்  பிடிச்சவள்  மாதிரி  இருந்தாள்  புஷ்பா…. அவள்  எதிர்பாக்காமை  இருக்கையுக்கை  பாஞ்சு மருந்துப்போத்திலைப் பறிச்செடுத்துப் போட்டன்  நான்…..

“நீங்கள்  ஆருமே  சாகவேண்டாம்….. நான்  இருக்கிறதுதான்  பிரச்சினை…. என்னைச்  சாகக்கொண்டுபோட்டு  என்ரை  அன்னக்குட்டியை  என்னண்டாலும்  செய்யுங்கோ….”

மருந்தைக்  குடிக்க  வாய்க்குக்கிட்ட  கொண்டுபோகையுக்கை  எனக்குப்  பின்னாலையிருந்து  ஆரோ  பறிச்சு எடுத்தினம்….. திரும்பிப்  பாத்தேன்…. திடுக்கிட்டுப்  போனேன்…..

எங்கடை  வீட்டுக்கு  முன்வீடு, பின்வீடு, அக்கம்  பக்கத்து வீடு எண்டு  எல்லாவீட்டுச்  சனமும்  அந்த  மாட்டுக்கொட்டிலுக்கை….. என்ரை  பெண்டிலின்ரை  இசையெண்ட  இன்ப நாதம்  கேட்டு  ஓடோடி வந்தவையள்…..

வெக்கம் ஒருபக்கமும்….. வேதனை  ஒரு பக்கமும்….. மேலெல்லாம்  உதறத்  துவங்க….. தலையிலை  ஆரோ  அடிச்சமாதிரி  வலி  எடுக்க…. கண்ணெல்லாம்  இருட்டாகி,  கிறுதி தூக்கி  எறியப்போகுது  எண்டது  எனக்கே  தெரிஞ்சிது….

தெளிவாய்  பாக்கையிக்கை  பொழுதும்  நல்லா  விடிஞ்சு, பயினொரு  மணி  ஆகியிருந்தது….  இரவு  என்னைக்  கிறுதி  தூக்கி  எறிஞ்ச கையோடை  எல்லாருமாச்  சேந்து  தூக்கிக்கொண்டந்து, உள்ளறையுக்கை  இருந்த  கட்டிலிலை  வளத்திப்போட்டு  போயிருக்கினம்…. காத்தோட்டத்துக்காக   கட்டிலை  யன்னலோடை  ஒட்டிப் போட்டிருக்கினம்…. அந்த  யன்னலுக்காலை  பாத்தால், வீட்டு முத்தம், கேற்றடி, மாடுகள்  போறத்துக்காக  போட்ட  கண்டாயம்  எல்லாம்  நல்ல  வடிவாய்த்  தெரியும்….

கட்டிலை விட்டு  எழும்புவோமெண்டு  பாத்தால்,  திடுக்கிட்டுப் போனேன்…. என்ரை இடது  கையும், காலும் அசையாமல் கிடக்க, வாயும்  கதைக்க   ஏலாமல்  நாக்கு,  உள்ளுக்கை  இளுத்தது….. 

முடிஞ்சிது…..  எல்லாமே முடிஞ்சிது….. பாரிசவாதமெண்டு  சொல்லுவினம்….. அதிலை  ஐமிச்சமே  இல்லை…..மனசுக்கை  பகல்  கூட ,  இரவு மாதிரி  இருக்கு…..

பிறகென்ன –

மருந்துகளும், குளிசையளுந்தான் ….. எனக்குப்  படைக்கிற  முக்கியமான  விருந்துகள்….

அவை  தாறதைத்  தின்னவேணும்…. அது  வேண்டாம், இது  வேண்டாம்  எண்டு  அருக்காணி  காட்ட  ஏலாது…..”

அன்னக்குட்டியின்ரை  நினைவு  வாற  நேரத்திலையெல்லாம்  கண்ணிலையிருந்து  கண்ணீர்  ஊத்தும்…. அது கண்டுக்குட்டியாப்  பிறந்த  நாளிலையிருந்து  இப்ப  வரைக்கும்,  என்ரை  நினைவிலை  உள்ளதை  மனதுக்கை  ஓடவிட்டுப்  பாத்தேன்….. என்ன சந்தோசம்….

வெளியிலை  மாட்டுக்கொட்டில் பக்கமாய்  ஆரோ  ரண்டுபேர்  சிங்களத்தில  கதைக்கிற  சத்தம்  கேட்டுது…. ஆராய்  இருக்கும்  எண்டு  யோசிச்சுக்கொண்டிக்க, அதோடை  சேந்து  புஷ்பாவின்ரை  குரலும்  கேட்டுது….

“நீங்கள்  தாறகாசைத்  தாங்கோ….  இனியும்  இதைவைச்சுக்  கட்டியழ  எங்களாலை  ஏலாது….”

அவ்வளவுதான்….  எனக்கு  நல்லா  விளங்கியிற்றுது….

என்ரை  அன்னக்குட்டி  கொழும்புக்காற  சிங்கள  யாவாரியள் கைக்குப்  போகப்போகுது…. நாளைக்கு  அது  அடிமாடாய்  போயிடும்….

ஏக்கம்….  பெருமூச்சு….  கண்ணீர்….

இதுகளை  விட்டா  வேறை ஒண்டும்  என்னட்டை  இல்லை…..

மாட்டுக் கொட்டில்  பக்கத்திலையிருந்து  வீட்டுமுத்தப் பக்கமா  ஆக்கள்  நடந்துவாற  சத்தம்  கேட்டுது….

இடது  கைதான்  ஏலாது…. மெல்லமா  வலது  முழங்கையை  ஊண்டி  யன்னலுக்காலை  பாத்தன்…..

அன்னக்குட்டியின்ரை  கழுத்தில  கயித்தைக்கட்டி  ஒருத்தன்  முன்னுக்கு  இழுத்துக்கொண்டு  போறான்….. பின்னாலை  போறவன் கையில  விறகுகட்டை  ஒண்டை  வைச்சுக்கொண்டு  என்ரை  அன்னக்குட்டியின்ரை  முதுகிலை…..

“போக்காறு  போவான்….. போறவழியில  லொறியோடை  பிரள…..” நல்லாத்  திட்டிப்போட்டன்….. 

அழிவார்  ரண்டுபேரும்  அவ்வளவுக்கு   கஸ்ரப்படுத்தியும்….. என்ரை  அன்னக்குட்டி  திரும்பித்திரும்பி  வீட்டையே  பாக்குது…..

என்ரை  கண்ணிலை  வடிஞ்ச  கண்ணீர்,  இப்ப  ரத்தமாய்  மாறி  நெஞ்சிலை  வடியிது….

இதுகள்  எதைப்பற்றியும்  கவலைப்படாமல்,  பல்லு  முப்பத்திரண்டும்  வெளியிலை  தெரிய, சிங்கள  யாவாரி  குடுத்த காசை திரும்பத் திரும்ப  எண்ணி எண்ணிப்  பாத்துக்கொண்டிருந்தாள்  என்னைப்  பிடிச்ச  மூதேசி…..

நித்திரையிலை  கனவுகண்டு  முடிஞ்சு….. முழிப்பு  வந்தமாதிரி, மனதுக்கை  ஒரு  தெளிவும்  வந்தது.

“அன்னக்குட்டி….. இனி உன்னை  நினைச்சு நான்  அழமாட்டன்…. எண்டைக்காயிருந்தாலும்,  பிறந்த  உயிர் ஒருநாள்  செத்துத்தான்  ஆகவேணும்…. என்னோடை  இருந்து  உனக்கு  ஏதும்  ஒண்டு  நடந்தா, எங்கடை  தோட்டத்துக்கையே  தாட்டு,  விளக்கு  வைச்சுக்  கும்பிடவேணுமெண்டு  நினைச்சுக்கொண்டிருந்தனான்…. 

வேண்டாம்…. தேவையில்லை…. எனக்குப்  பொஞ்சாதியா  வந்த பிசாசு  மாதிரி ஆக்கள்  மிதிக்கிற  நிலத்தில, நீ  நடமாட  வேண்டாம்…. அந்த மண்ணில  உன்னை  அடக்கம்பண்ண  நான்  நினைக்கவும்  வேண்டாம்….

நானும்  இனி கனநாளைக்கு இருக்கமாட்டன்…. நீ  முன்னாலை  போய்  எனக்காக  காத்துக்கொண்டிரு…. வலு  கெதியாய்  நான்  வந்திடுவேன்….

அடுத்த  பிறப்பெண்டு  ஒண்டிருந்தா, நீ  எனக்கு  எஜமானியாப் பிறக்க வேணும்…..   நான்  உங்கவீட்டுப்  பசுவாய்ப்  பிறக்கிறேன்…..”  

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 08 November 2019 00:06