சிறுகதை: நிக்கிலாக்கியின் நினைவில் இப்போது இருளரக்கன் இல்லை

Friday, 07 December 2018 07:57 - முனைவர் ஆ.சந்திரன் - சிறுகதை
Print

கிணற்றில் புதிதாய் வளர்ந்த மரத்தை அந்த ஊர் மக்கள் வந்து அதிசயமாகப் பார்த்தார்கள் என்றாலும், தங்களுடைய அவசரமான கடமைகளில் முழ்கியதால் அதை யாரும் பெருசாகக் கண்டுகொள்ளவில்லை. கையில் தடியுடன் தள்ளாடி வந்த ஒரு பாட்டி பாறையின் மீது படர்ந்திருந்த பச்சைப் பாம்புகள் போல் படர்ந்திருந்த கொடிகளை வணங்கிவிட்டு மெல்ல நடந்து சென்றவர் சரித்திரப் புகழ் மிக்க கோயிலில் இருந்த தெய்வத்தை வணங்கிச் சென்றார். அது அந்த ஊரில் இருந்த சிலருக்கு ஒருவித பதட்டத்தை அளித்தது. இது ஒரு பழைய கதை. இந்த விசயம் அந்த ஊரில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதும் தனிக்கதை.

மெல்ல மெல்ல அவ்வாறான  பல கதைகள் அந்த ஊரில் உள்ள மக்களின் நினைவுகளில் இருந்து காணாமல் போய்க்கொண்டிருந்தன.

ஊருணியாக இருந்த அந்த கிணற்றில் முதன் முதலில் யார் தம் வீட்டின் குப்பைகளைக் கொட்டினார்கள் என்பதே அப்போது யாருக்கும் நினைவில் இல்லை.

அப்போது நாட்டில் ஒரே கலவரம் நிலவியது. அந்தக் கலவரத்தில் அதுவரை அணிந்திருந்த வெள்ளை வேட்டிச் சட்டைகள் எல்லாம் குருதி படிந்து தன் வெண்மையைப் பறிகொடுத்தன.

கலவரத்தில் ஒருவன் இருளரக்கனைக் கண்டதாகக் கூறினான்.

அவன் பெயர் நிக்கிலாக்கி.

அவனது உரையாடலைச் செவிமடுக்க யாருக்கும் நேரம் கிடைக்கவில்லை.

உண்மையைக் கூற வேண்டுமென்றால் அவன் சொல்வது யாருடைய மூலைக்கும் எட்டவில்லை.

ஆனாலும் யாராவது ஒருத்தர் நான் சொல்லுவதைக் கேட்டுவிடுவார்களா?

நான் பார்த்துக்கொண்டிருக்கும் இருளரக்கனை அவர்களுக்கும் காட்டிவிட முடியாதா? என்று அவனுக்கு ஒரு நப்பாசை.

அதனால் அவன் தொடர்ந்து அவனைப்பற்றி மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

என்றாவது ஒருநாள் எல்லா மக்களும் இருளரக்கனையும் அவனது கூட்டாளிகளையும் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு மெல்ல வர ஆரம்பித்தது.

அப்போது நிக்கிலாக்கி  ஒரு படி மேல் சென்று கொண்டிருந்தான்.

யார் இந்த இருளரக்கன்? அவன் எங்கிருந்து வந்தான்?. எவ்வளவு காலமாய் இந்த ஊரை சூறையாடிக்கொண்டிருக்கிறான் என்று அவன் முன் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு அப்போது தங்கநகரம் பற்றி தனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் நினைவுக்கு வர அவரைத் தேடிப் புறப்பட்டான். அவரிடம் சென்றால் ஏதாவது வழி கூறுவார் என்ற நம்பிக்கையில்.

அந்த ஆசிரியர் அவனுக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர்  சரித்திரப் பாடம் எடுத்தவர். மூவாயிரம், நாலாயிரம், ஐந்தாயிரம் என்று நீண்ட அந்நாட்டு சரித்திரத்தில் பல மர்மங்கள் இருப்பதாய் அவருக்கு திடமான நம்பிக்கை இருந்தது. சரித்திரம் என்றால் மர்மம் இருக்கசெய்யும் தானே? அதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கலாம்.

ஆனால் அந்த நாட்டில் அப்படி கேள்வி கேட்பவரின் தலை துண்டிக்கப்படும் என்று பயந்தார்கள். அவர் தலையில் மயிரில்லாமல் வழுக்கையாக இருந்தது. அது தனக்கு பாதுகாப்பு என்று கருதினாரோ என்னவோ அவர் தன்னுடைய தலையைப் பற்றிக் கவலைப் படாமல் மர்மங்களைப் பற்றி அடிக்கடி வாய்திறந்தார்.

பலருக்கு அவர் அவ்வாறு வாய்த்திறப்பது பிடிக்காமல் போனது. அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகளை மனதில் பதித்துக்கொண்ட சில மாணவர்களில் நிக்கிலாக்கியும் ஒருவன்.

அவன் அவரது வாயிலிருந்த வந்த மர்மங்களை நம்மத் தயராய் இருந்தாலும் அவனுக்குள் ஒரு கேள்வி விஷ்வரூபம் கொண்டு அதைப் பற்றி அதிகம் சிந்திக்க விடாமல் செய்தது.

அத்துடன் அப்போது அவன் காதலித்துக்கொண்டிருந்தான்.

அதனால் அதைப் பற்றி அப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் பிறகு அவனுக்கு இருளரக்கன் தெரிய ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு  கல்யாணமாகி இரு குழந்தைகள் பிறந்திருந்தனர்.

தன்னுடைய தேளில் இருந்த இரண்டாவது குழந்தையை இறக்கி வைத்தான். தன் வாயிலிருந்த வேப்பங்குச்சியைப் பார்த்து பொறாமைக் கொண்ட மூத்த மகள் முரண்டு பிடித்தாள். அவள் வாயிலிருந்த குச்சியும் தன்னிடமிருந்த குச்சியளவு தேயும் வரை அவன் காத்திருக்க வேண்டியிருந்தது.

காலை வழக்கமாகக் குடிக்கும் பழைய கஞ்சியை மகளுடன் போட்டிப் போட்டுக்கொண்டு காலி செய்தான்.

சரித்திரம் பற்றி பாடம் எடுத்த ஆசிரியரைப் பார்க்கப் புறப்பட்டான்.

மாணவனாகச் சென்று பழக்கப்பட்ட கல்லூரியில் நுழையும் போது அந்நியவானாய் இப்போது காலடி வைப்பது அவனுக்கு புதிய அனுபவமாய் இருந்தது. 

மாறியிருந்த கட்டிடங்களின் பளபளப்பு அவனுக்குள் தேர்வுக் கட்டணம்   கட்ட ஒரு முறை அலைந்த பழைய நினைவுகளைப் பசுமையாகக்கொண்டு வந்தன.

அந்த நினைவுகளைச் நெஞ்சில் சுமந்தவனாய் தான் தேடிவந்த சரித்திரப் பேராசிரியரைப் பார்க்க ஆவலாய்ப் போனான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு.
அவன் மிகவும் வருந்தினான்.  அந்த வருத்தத்தின் சுமையைத் தாங்காமல்  தலைகவிந்து நடந்து வந்து கொண்டிருந்தான். பின்னால் இருந்து தன் தோளை யாரோ கையால் அழுத்துவதாய் உணர்ந்து திரும்பினான். அந்தக் கரங்களுக்குச் சொந்தமான உருவம் அவனை கருணையுடன் நோக்கியது.

முகத்தில்  வழிந்தோடிய சோகத்தை துடைத்துக்கொண்டு அவரை அண்ணே! எப்படி இருக்கீங்க. அண்ணி நல்ல இருக்காங்களா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் அவனது மனதின் இருந்த சுமையை வெகுவாய்க் குறைத்தது.
இருவரின் நலன் விசாரிப்புகளும் வழக்கமாய்  டீ குடிக்கும் டீக்கடை வரை நீண்டது.

கல்லூரியின் தற்போதைய செயல்பாடுகளைக் கடந்து சரித்திரப் பேராசிரியர் பற்றி பேச முற்பட்டபோது அவனுக்கு புது தெம்பு பிறந்ததுபோல் இருந்தது.

அவர் தன்னுடைய வேலையைத் தூக்கியெறிந்த செய்தியை விவரமாய் சென்னவர் தற்போது தன்னுடைய சிந்தனையைச் செயல்படுத்தும் முயற்சியில் இருப்பதாய் முடித்தார் கல்லூரியில் நீண்டகலமாய் இருக்கும் பியூன் சேந்தன்.
அவன் உள்ளுக்குள் நடனமாடினான். அவனது உடல் மட்டும் அசைவின்றி நின்றது. சேந்தனிடம் அவர் இருக்கும் முகவரியை வாங்கிக் கொண்டு ஆனந்தமாய்ப் புறப்பட்டான்.

தன்னுடைய செல்போனில் அவர் கொடுத்த முகவரிக்கு எப்படி போக வேண்டும் என்று கூகுலில் தேடினான்.

அவன் தேடிய இடம் பெரு வனாந்திரமாய் இருந்தது. அதைத் தவிர வேறு பதிவுகளை அது காட்ட வில்லை.

அங்குச் செல்ல போதிய சாலை வசதியும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டவன் தன்னுடைய மனைவிக்குத்தான் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்ற விவரத்தைக் கூறிவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

நகரில் இருந்து அந்த வனாந்திரம் இருக்கும் இடம் நோக்கிச் செல்லும்  முதல் பேருந்து இன்று வரவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்த சிலரது முகங்களைப் பரிதாபாயப் பார்த்துக்கொண்டு நின்றான். அதை தவிர அவனால் வேறு ஏதும் செய்ய முடியாது என்பது அவனுக்குத் தெளிவாத் தெரியும்.

நீண்ட நேர காத்திருப்பிற்குப் பிறகு ஒரு பேருந்து அவன் நிற்குமிடம் நோக்கி வந்தது.

ஆடி அசைந்து தார்சாலையில் உருட்டப்படும் தகரடப்பா போல சத்தமிட்டுக் கொண்டு வந்த பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாய் வருவதாய் விசனப்பட்டவரின் கடுமையான வார்த்தைகளைக் கேட்டவாறே ஏறி அமர்ந்தவன் நினைவுகளில் வனாந்திரத்தின் காட்சிகள் பிரவாகமெடுத்தன.

சுமார் மூன்று மணி நேர பயணத்திற்குப் பிறகு “தம்பி! அடுத்து வருவது தான் நீங்க இறங்க  வேண்டிய ஸ்டாப்பிங்” என்று அவனுக்கு நினைவூட்டினார் பக்கத்தில் இருந்த பெரியவர்.

அவன் மனம் பட்டாம் பூச்சியாய்ச் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.

பஸ்ஸில் இருந்து இறங்கியவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது போல் தட்டாம் பூச்சிகள் அவனைச் சூழ்ந்து கொண்டன.

பல்லித்துக்கொண்டிருந்த சூரியன் தன் பற்களை மேகத்தினுள் ஒளித்துக்கொண்டான்.

ரம்மியமான வனத்தை சுற்றிலும் நோக்கிவன் “எதிரே சென்ற ஒத்தையடிப் பாதையில்தான் நடக்க வேண்டும் போல” என நினைத்துக் கொண்டிருந்தான். அவனது நினைப்பை “எங்க தம்பி போகனும்”  என்று அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவர் வலிய வந்து கேட்டது மாற்றியது.

ஆனால் அப்படிக் கேட்டது ஒன்றும் அப்போது அவனுக்குப் புதிராகப் படவில்லை.

அதற்கான காரணம் அவனுக்குப் பிறகுதான் தெரிந்தது.

காலில் காலணிகூட இல்லாமல் இருந்த அவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்தைப் பற்றி கூறியபோது, வாங்க தம்பி! நான் அந்த ஊரைத் தண்டிதான் போகவேண்டும் என்று தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார் அந்த நபர்.
தனக்கு முன்னர் வழிகாட்டியாகச் சென்று கொண்டிருந்த அந்த நபரின் சப்பிப்போட்ட பனங்கொட்டை போன்ற  முடியை ரசித்துக் கொண்டே பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

சுடுதண்ணீரை காலில் ஊற்றிக் கொண்டவன் போல் ஏதோ ஒரு பரபரப்பு அந்த நபரிடம் இருப்பதை புரிந்து கொண்டவன் போல் நிக்காலக்கி “ஏதோ அவசரமா போராப்பள இருக்கு” என்றான்.

அது ஒன்னுமில்ல தம்பி! கேணியாண்ட மாட்ட கட்டிட்டு வந்தேன். பொழுது சாஞ்சிப் போச்சி அதான்…. என்றவர், ஆமா… மேட்டுப் பட்டியில யாரப் பாக்கப்  போறீங்க? என்றார். தன்னுடைய அவசர கதியான நடையிலும்.

“மாணிக்கம் சார பாக்க போறேன் என்றவன்” அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில், “அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்றான்.

“அந்தப் பேர்ல அந்த ஊர்ல யாரும் இருக்கிறமாதிரி எனக்குத் தெரியலியெப்பா?...” என்றவர், “ யாரா இருக்கும்?” என்று தன்னுடைய மனதிற்குள் கேட்டுக்கொண்டே நடந்தார்.

அந்தப் பதில் அவனைத் தூக்கி வாரிப் போட்டது.

அதிலிருந்து அவன்  மீள்வதற்குள் அவன் தேடிவந்த ஊர் அவனை வரவேற்கத் தயாராய் இருந்தது.

அதான் தம்பி! அதோ தெரியுதே! அந்த தென்ன மரத்ததைத் தாண்டினா மேட்டுப்பட்டி…. என்றவர், “நன்றி ஐயா” என்ற அவனுடைய வார்த்தைகளை எதிர்பாராமல் வேகமாய் நடக்க ஆரம்பிப்பித்தர்.

அவரை சற்று நேரம் உற்றுப் பார்த்தவன் மனதில் இருளரக்கனின் நினைவு மங்கலாய் வந்து போனது. அதைப் பற்றிக் கவலைகொள்ளாமல் இடப்பக்கமாய் மேகத்தைத் தழுவி நின்ற தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவனுக்குச் சற்று முன்னால் தும்பிகள் பறந்து சென்று கொண்டிருந்தன. சூரியனின் கதிர்களை கங்குல் விழுங்க ஆரம்பித்தது.

முல்லை மலரின் வாசம் காற்றில் மிதந்து வந்தது. தவளைகள் பாக்! பாக்! என்று ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே ஏற்றப்பட்டடிருந்த தீப்பந்தங்கள் ஆகாயத்து நட்சதிரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன.

தன்னுடைய கையை யாரோ பிடிப்பது போல் உணர்ந்தான் நிக்கிலாக்கி. வா தம்பி! போகலாம் என்ற முகமறியாத நபரின் குரலில் மயங்கியவன் பதில் ஏதும் பேசாமல் அவரது கையைப் பிடித்துக் கொண்டு சிறுபிள்ளை போல் நடக்க ஆரம்பித்தான்.

“சரித்திரப் பேராசிரியர் என்ன செய்துகொண்டிருப்பார்” என்ற யோசனையுடன் நடந்துகொண்டிருந்த நிக்கிலாக்கியின் நினைவில் இருளரக்கனைப் பற்றிய எந்த தடயமும் இப்போது இல்லை.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 07 December 2018 07:59