களப்பிரர் படையெடுப்பால் தமிழகத்தில் தமிழ மூவேந்தர் ஆட்சி குலைந்து சங்க காலம் முடிவுற்ற பின்பு எல்லாத் துறைகளிலும் கோலோச்சிய தமிழ் என்ற நிலை மாறி தமிழ் அரசின் ஆட்சி மொழி, மத வழிபாட்டு மொழி என்று இல்லாமல் போகும் அவலநிலை தோன்றியது. களப்பிரரும், பல்லவரும் தமிழருக்கு அயலான பிராகிருதத்தை அரசவை மொழி ஆக்கினர். தமது அரசாணைகளையும், நிலக் கொடை ஆவணங்களையும் பிராகிருதத்திலேயே வெளியிட்டு மக்கள் மொழியாம் தமிழைப் புறக்கணித்தனர். பல்லவர் பின்பு சமற்கிருதத்தை ஆதரித்தனர். ஆயினும் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசர்களும் வேளிரும் எளியோரும் தமிழைப் போற்றிப் பாதுகாத்தனர். இதற்கு சான்றாக அமைந்தவை தாம் போரிலும், பூசலிலும் பங்கெடுத்து வீரச்சாவு எய்திய மறவர்களின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டுகள்.
மதப்பித்து கொண்டு பல்லவ வேந்தர் சமற்கிருதப் பெயர்களை ஏற்றிருந்த வேளையில் அவருக்குக் கட்டுப்பட்டு அடங்கிய சிற்றரசர்கள், வேள்கள், படைத்தலைவர், படைவீரர் உள்ளிட்டு தமிழ எளியோர் பெரும்பலரும் தமிழ் மீது மாறாப் பற்று கொண்டு தமிழ்ப் பெயர்களை ஏந்தி இருந்தனர். ஈண்டு நடுகற்களில் உள்ள தமிழ்ப் பெயர்களைக் குறிப்பாகச் சுட்டவும், அவற்றுள் சில பெயர்கள் அயலக நாகரிக மன்னர் பெயர்களுடன் ஒத்திருப்பதைக் கோடிட்டுக் காட்டுவதுமான எனது பார்வையை வாசகருக்கு இந் நடுகல் கல்வெட்டுச் செய்திகளுடன் தருவதே இந்த நடுகல் கல்வெட்டு விளக்கத்தின் தலையாய நோக்கம்.
இனி, நடுகற்கள் குறித்து சிறு அறிமுக உரைக்குப் பின்பு நடுகல் விளக்கம் தொடங்கும். போரிட்டு மாண்ட மறவர்களுக்கு ஈமக் கடன் ஈந்து அவர் வீரத்தைப் பாராட்டி அவர் நினைவில் கல் ந்ட்டு வழிபடுவது பண்டைய தமிழ் மரபாக இருந்துள்ளது. இவ்வாறு நடப்பட்ட கற்களை நடுகல், வீரகல் என்று தமிழில் அழைப்பர். தெலுங்கில் வீர சிலாலு எனவும் ஆங்கிலத்தில் 'Hero Stones' எனவும் கூறுவர். நடுகற்கள் இந்தியா முழுமையிலும் காணக் கிடைக்கின்றன. தமிழில் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை உள்ளிட்ட இலக்கியங்களில் இவற்றுக்கான குறிப்புகள் உள்ளன. வெட்சிப் பூ சூடி கள்வர் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இது நடுகற்களில் தொறுக் (தொழு) கொள்ளல் எனப்படுகின்றது. அதே நேரம் கரந்தைப் பூ சூடி பகைநாட்டுக் கள்வர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை தாயக மறவர் மீட்டு வருவர். இவ்வாறானதொருப் பூசலில் இருபக்கமும் மறவர்கள் மாள்வர்.
போரில் வீழ்ந்துபட்ட மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்கள் அவர்கள் வீழ்ந்த ஊர்களிலேயே நடுப்படுவது உண்டு. ஒரே போரில் இறந்த வீரர்களுக்கு ஒரே இடத்தில் தனித்தனி நடுகற்கள் நடப்படுவதும் உண்டு. இதற்கு ஊரின் ஒரு புறத்தைத் தேர்ந்து ஈமக்காடு போல் எண்ணி அங்கு மாண்ட வீரர்களுக்கு சடங்குகள் ஆற்றி நடுகல் எடுத்து உள்ளனர் என்று கொள்வதற்கும் சான்றுகள் உள்ளன. சில நடுகற்கள் ஏரிக் கரைகளிலும், ஆற்றுக் கரைகளிலும் காணப்படுகின்றன. இன்னும் சில நடுகற்கள் ஊருக்கு வெளியே நடுக் காடுகளில் காணப்படுகின்றன. இது ஆகோள் எனும் தொறுக் கவரப்பட்ட இடம் ஆகலாம். தமிழகத்தில் நடுகற்கள் உள்ள இடங்கள் மக்களால் வேடியப்பன் கோவில் என்று அழைக்கப்படுகின்றன. சில நடுகற்கள் நாய், எருது, கிளி, யானை போன்ற விலங்குகளின் நினைவாகவும் எடுக்கப்பட்டு உள்ளன. கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி நடுகற்களை இருபத்து எட்டு வகையினதாகப் பிரிக்கின்றார்.
சங்க காலத்தில் நடுகற்கள் ஓவியங்களாகவே இருந்துள்ளன. அதற்கு அடுத்து கோட்டு உருவ (Line drawing figures) நடுகற்கள் ஏற்பட்டன. பல்லவர் காலத்தில் தான் புடைப்புச் சிற்பங்கள் கொண்ட வட்டெழுத்து வாசகம் பொறித்த நடுகற்கள் ஏற்பட்டன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி.
நடுகல்லில் வீரனின் புடைப்புச் சிற்பம் அல்லது உருவம், அவன் சமர்புரியும் நிலை, அவன் கையில் ஏந்திய படைக் கலன் வகை அதன்மேலோ, கீழோ அல்லது பக்கவாட்டிலோ அவன் காலத்தில் வழங்கிய எழுத்துகளில் மன்னனின் ஆட்சி ஆண்டு, அவனுக்குக் கட்டுப்பட்டு அடங்கிய சிற்றரசர் பெயர், அவருடைய படைத்தலைவர் பெயர், அவருடைய மறவர் பெயர், வீர சாவடைந்த மறவன் பெயர், அவனைப் பற்றிய சேதிகள், தொறுப் பூசல் என பல செய்திகள் குறிக்கப்பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் தென்பெண்ணை, சேயாறு, பாலாறு பாயும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை (செங்கம்), விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 80% நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சேலம், கோவை, மதுரை, திருநெல்வெலி ஆகிய இடங்களிலும் நடுகற்கள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் சோழர் ஆண்ட தஞ்சை, நாகை பகுதிகளில் அதிகமாக நடுகற்கள் கிட்டவில்லை.
இந்நடுகற்கள் பல்லவர், வாணர் (பாணர்), கங்கர், நுளம்பர், சோழர், போசளர், பாண்டியர், விசயநகர மன்னர் ஆகிய அரசர் காலங்களைச் சார்ந்தவை. இவை 4 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து உள்ளன. தமிழி எனும் தமிழ்ப் பிராமியிலும் நடுகற்கள் 2006 ஆம் ஆண்டில் தேனி மாவட்டம் புலிமான்கோம்பையில் மூன்றும், தாதப்பட்டில் ஒன்றுமாக நான்கு நடுகல் வகை சார்ந்த கல்வெட்டுகள் கிட்டி உள்ளன.
வாணர் அல்லது பாணர் பிரிக்கப்படாத வட ஆர்க்காடு, விழுப்புரம் ஒட்டிய தென் ஆர்க்காடு, தருமபுரியின் தகடூர் நாடு, கோலார் ஆகிய பகுதியை ஆண்டுள்ளனர். சங்க காலம் தொட்டே ஆட்சியில் உள்ள இந்த மன்னரின் கீழ் சில குறுநில மன்னர்கள் இருந்துள்ளனர். பல்லவர்க்கு அடங்கிய இவர்கள் கங்கருடனும், நுளம்பருடனும் போரிட்டு உள்ளனர்.
சங்க கால குறுநில மன்னரான கங்கர் கொங்கணர் என்றும் குறிக்கப்படுவர். இவர்கள் காவிரியின் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் சில பகுதிகளையும் ஆண்டுள்ளனர். பல்லவர்க்கு அடங்கிய இவர்கள் சில போது பல்லவருடனும், வாணருடன் அதிக அளவும் போர் புரிந்து உள்ளனர்.
பல்லவர் கால நடுகற்கள் பெரும்பாலும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை பிராமியில் இருந்து வட்டெழுத்து வளர்ந்து வந்ததன் கால அளவை அறிய உதவுகின்றன. சில தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன. எளியோர் ஆக்கிய இந்நடுகற்களில் தமிழ் பீடுநடை போடுகின்றது. பிற மொழிச் சொல் கலப்பில்லாமல், சமற்கிருத பெயர்களைத் தமிழ்ப்படுத்தி எழுதி இருப்பது அக்கால மக்களின் தமிழ்ப்பற்றை பறைசாற்றுவதாய் உள்ளது. ஆள் பெயர்கள் 'ஆர்', 'அர்' என்று மதிப்புரவாகவும், உகரச் சாரியை உடனும் குறிக்கப்பட்டு உள்ளன. சில நடுகற்களில் 'மகன்' மக்கள் என்றும், 'மருமகன்' மருமக்கள் என்றும் பன்மையில் சுட்டப்பட்டுள்ளன. இச்செய்கை மக்கள் பொதுவாக வீரர்களை மதித்துப் போற்றியதற்கு அடையாளம் எனலாம். நடுகற்கள் கூறும் வரலாறு எளியோரின் பண்டைய குமுக வரலாறு மட்டும் அன்று, இன்னும் சொல்லப் போனால் அது தமிழின் வரலாறும் கூட என்று கூறுவது மீகை ஆகாது. இத்தகு எளியோர் வரலாற்றை, தமிழ் வரலாற்றை தமிழகத் தொல்லியல் துறை அறிஞர்கள் அரிதின் முயன்று கண்டுபிடித்து, படியெடுத்துப் படித்து விளக்கி நூலாக வெளியிட்டு உள்ளனர். அவர்தம் முயற்சிகள் பாராட்டுக்கு உரியன, உலகத் தமிழரின் நன்றியறிதலுக்கும் உரியன.
இங்கு மேற்கோளாக எடுத்துக் கொள்ளப்பட்ட நடுகல் வாசகங்கள் தமிழகத் தொல்லியல் துறை 1972 ஆம் ஆண்டு வெளியிட்ட 'செங்கம் நடுகற்கள்' எனும் நூலில் இருந்தும், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீட்டில் கல்வெட்டு அறிஞர் திரு ச. கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'நடுகற்கள்' எனும் நூலில் இருந்தும் பெறப்பட்டவை என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வெட்டு விளக்கம்
தருமபுரி ஊத்தங்கரை வட்டம் புலியானூர் என்ற ஊரில் வேடியப்பன் கோவில் வளாகத்தில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது . இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசை செயவிரு / மர்கே இருபது / (ஆவது) மீவெண் நாடு / சிரு பாழ் ஆள் / வார் பாலாசிரிரு மக் / கள் மாறன் க(பெ)லூரு தொறு கொண் / ட ஞான்று பட்டா / ன் கல்
மீ - மேல், மேற்கு; ஆள்வார் - ஆள்பவர்; மக்கள் - அரசருக்கு அடுத்த அதிகாரப் பொறுப்பு நிலை கொண்ட வீரர் அல்லது மகன்; தொறு - ஆநிரையை குறிக்கும் தொழு என்ற சொல்லின் திரிபு; ஞான்று - காலத்தில் (at the time of),பொழுது ; பட்டான் - செத்து வீழ்ந்தான், வீர சாவடைந்தான்
மகேந்திரவர்மனின் தந்தை சிம்ம விஷ்ணுவிற்கு முன் (545 AD இவனது இறுதி ஆட்சி ஆண்டு) ஆண்ட சிம்ம வர்மனின் இருபதாவது ஆட்சி ஆண்டில் மேல் வேணாட்டு சிறுபாழ் எனும் பகுதியில் ஆட்சி செய்த வேள் பாலாசிரியன் என்பானுக்கு 'மகன்' பொறுப்பு படைத்தலைவன் அல்லது மகன் மாறன் என்பவன் கப்பலூர் ஆநிரைகளைக் கவர்ந்த போது அங்கத்து மறவர்களின் எதிர்த் தாக்குதலில் வீர சாவு அடைந்துள்ளான். அவன் நடுகல் இது என்பதே செய்தி.
கல்வெட்டில் எழுத்துப் பிழைகள் மலிந்து உள்ளன. வர்மருக்கே என்பது விருமருக்கே என பொறிக்கப்பட்டு உள்ளது. வேணாடு வெண்நாடு என்று உள்ளது. சிறு என்பது சிரு என எழுதப்பட்டு உள்ளது. மாறன் பாண்டிய நாட்டுப் பெயராக உள்ளது. வால் அசிரியன் என்பது இங்கு பாலாசிரியன் என வழங்குகிறது. வால் > பால் என்பது ஒளிரும் வெண்மையை குறிக்கும். அசிரியன், ஆசிரியன், அசுரன் என்பன அசீரிய நாட்டினன் என்பதை குறிக்கும். இவன் முன்னோர் அந்நாட்டவருடன் தொடர்பு கொண்டவர் ஆகலாம். அதனால் இவன் பெயர் ஆசிரியன் என வழங்கியது போலும். அசூர் பாணி பால் 668 -626 BC என்ற அசீரிய மன்னன் பெயரை நோக்குக. பால் என்ற பெயர் மேலை நாகரிகங்களில் பல மன்னர் பெயர்களில் இடம் பெறுகிறது. மகேந்திர வர்மனின் 14 ஆம் ஆண்டு மாக்கனூர் நடுகல்லும், பதினெட்டாம் ஆண்டு தண்டம்பட்டு நடுகல்லும் ஈண்டு கருத்தில் கொள்ளத் தக்கன. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Amen Asero 659 - 643 BCE > ஆமின் அசிர(ன்) > ஆமன் அசுரன். பாலாசிரியன் பெயரைச் சுட்டும் கல்வெட்டுகள் சிம்மவிஷ்ணுவின் பத்தென்பதாம் ஆட்சி ஆண்டு புலியனூர் கல்வெட்டு ஒன்றிலும், மகேந்திரனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் புலியனூரில் அமைந்த கல்வெட்டு ஒன்றிலும் ஆக மூன்று கல்வெட்டுகள் இவன் 60 ஆண்டுகள் வாழ்ந்ததைக் குறிக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்ட செங்கம் வட்டம் பெருங்குளத்தூர் எனும் ஊரின் வேடியப்பன் கோவிலில் வட்டெழுத்தில் நடுகல் கல்வெட்டு அமைந்து உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசை சிங்க பருமற்கு அ -- / துவது கங்கதிரை மகன் / விண்ணன் ஊர் எறிபட்ட / கெலவர் பொன்னக்க கடுரூ / பெருங் குளத்தூரு ப / ட்டார் கல்
எறிபட்ட - அழிபட்ட அல்லது வெல்லப்பட்ட எனக் கொள்ளலாம்; கெலவர் - அச்சத்தால், மனக்கலவரத்தால்; கல் - நடுகல்.
சிம்மவர்மனின் ஐ(ந்தா)வது ஆட்சி ஆண்டில் கங்க அதியரசனின் 'மகன்' என்ற அதிகாரப் பொறுப்பு பெற்ற விண்ணன் என்பவன் பெருங்குளத்தூரைத் அழித்த போது வென்ற போது மனக்கலவரத்தால் அவ்வூர்த் தலைவன் பொன்னக்க கடுரூ சாவு எய்தியதன் நினைவில் எடுத்த நடுகல்.
ஆண்டுக் குறிப்பில் சில எழுத்துகள் அழிந்து உள்ளன. ஐந்து என்பது உய்த்துணர்வு தான். கங்க அதியரசன் என்பவன் பல்லவருக்கு அடங்கிய கங்க மன்னன் ஆவான். பொன் நக்க கடு ஊர்(அன்) என்பதே புணர்ந்து எழுதப்பட்டு உள்ளது. ஊரன் என்று ஆள் பெயர் உண்டு. இக் கல்வெட்டில் அன் ஈறு சுட்டப்படவில்லை. ஒரு கொரிய மன்னன் பெயர் Godumak 108-60 BCE > கடு மாக்(அன்). கெலவர் என்பதற்கு மிகத் துலக்கமான பொருள் காண முடியவில்லை. கெலவு என்பதற்கு அச்சம் என்ற பொருள் உள்ளது.
தருமபுரி மாவட்ட ஊத்தங்கரை வட்டம் கோரையாறு எனும் ஊரில் வட்டெழுத்தில் பொறிப்பு உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய சிங்கவி / ண்ண பருமற்கு பதினான்காவது / பெரும் பாண்ணரைசர் மக்கள் சாத் / த பராவனார் சேவகன் / வன்ன ஊர் பா / வன் பூசலுட்ப / ட்ட கல்
மக்கள் - அதிகார பொறுப்பு உள்ள படைத் தலைவன், சிற்றரசன் அல்லது மகன்; சேவகன் - மறவன், வீரன்; பூசல் - சிறு போர்
சிம்மவர்மனின் மகன் சிம்மவிஷ்ணுவின் பதினான்காவது ஆட்சி ஆண்டில் (560 CE) அவனுக்கு அடங்கிய வாண மன்னன் பெரும் பாண அரசன் என்பவனுக்கு 'மகன்' எனும் அதிகாரப் பொறுப்பில் இருந்த சிற்றரசன் சாத்த பராவன் என்பவனின் படைப்பிரிவு தலைவன் வன்னவூர் சார்ந்த பாவன் என்பவன் பூசலில் வீர சாவு அடைந்ததால் அவன் நினைவில் எடுப்பித்த நடுகல்.
சிம்மவிஷ்ணு என்ற சமற்கிருதப் பெயர் சிங்க விண்ணன் என தமிழ்ப் படுத்தப்பட்டு உள்ளது. வர்மன் என்பது வருமன் என மக்கள் வழக்கில் சுட்டப்பட்டு உள்ளது இக்கல்வெட்டின் ஒரு சிறப்பு ஆகும். பரவன் என்ற சொல் பராவன் என எழுதப்பட்டு உள்ளது. பரவன் என்பது மீனவனைக் குறிக்கும். ஒரு எதியோபிய மன்னன் பெயர் Senefrou 4014 - 4034 BCE > சேனி பராவு > சேனன் பரவன். இன்னொரு எதியோபிய மன்னன் பெயர் Barawas 60 - 50 BCE > பரவன்.
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் புளியனூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (2/1972) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய சிங்கவிண்ண பருமற் / குப் பத்தொன்பதாவது மேல் வேண்ணா / ட்டுச் சிறுப்பாழாளும் பாலாயிரியரு மக்கள் / சிறுப்படுவாணாரு கருங்காலிப்பாடித் / தொறுக் கொளப் பூசல் சென்று புய / நாட்டுப் பில(யாசதங்)கள் / எறிந்து பட்டான்
சிம்மவிஷ்ணுவின் பத்தொன்பதாம் ஆட்சி ஆண்டில் (565 CE) அவன் ஆட்சிக்கு உட்பட்ட மேல் வேணாட்டுப் பகுதியின் சிறுப்பாழ் எனும் ஊரை ஆளுகின்ற வேள் பாலாசிரியன் என்பானிடத்தில் 'மகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற படைத்தலைவன் அல்லது மகன் சிறுப்படுவாண் என்பவன் கருங்காலிப்பாடியின் ஆநிரைகளைக் கவர்ந்து வரப் பூசல் மேற்கொள்ளச் சென்ற போது புயநாட்டைச் சேர்ந்த பிலயா சதங்கன் அவனை எதிர்த்துத் வென்றிடவே அப்பூசலில் வீர சாவு எய்தினான்.
பாலாசிரியன் என்னும் பெயர் பாலாயிரியன் என சகரத்திற்கு பகரமாக யகரம் எழுதப்பட்டு உள்ளது. சிம்மவர்மனின் புலியானூர் 20 ஆம் ஆண்டுக் கல்வெட்டு பாலாசியர் எனபாரும் இவரே. மகேந்திரனின் 20 ஆம் ஆண்டுக்கால பாலாசிரிகனும் இவரே. சத்தன் + அங்கன் என்ற இரு வேறு பெயர்கள் புணர்ந்து சதங்கன் என்று வழங்குகின்றது. சிறுப்படுவாண் என்பதில் உள்ள சிறு என்பது சங்க காலத்தே இள என வழங்கியது. படு என்றால் பெரிய எனப் பொருள். வாண் என்பது இவன் வாண அரசகுடியினன் என்பதற்கு சான்றாகும். பெரும் பாண் அரைசர் என்ற பெயரின் பொருளை ஈண்டு கருதுக. துருக்கியின் ஒரு மித்தானி அரசன் பெயர் Suttarna I 1490 - 1470 BCE > சத்தரண(ன்) > சத்தன் அரணன். Gija வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Sudo 634-615 BC > சத்த(ன்)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் நரசிங்க நல்லூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (30 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 6 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவியைய சிங்கவிண்ணபருமற்கு முப்பத்து / மூன்றாவது கங்கதி அரைசரு மக்கர் மேன் விண்ணன்னா / ர் சேவகந் தொப்புரவருப்பாடி ஆ(ள்கி)ன்ற பசிரப் / பண்ணன் குறட்டாதன் - - - வரமு கொண்ட ஞான் / றெறிந் / து பட்டா / ன் கந்த / பருபேன் / னாதியார் / மகன் கல்
மக்கர் - மகன்; ஏனாதி - படைத் தலைவருக்கு அரசன் வழங்கும் ஒரு பட்டம்; அதிஅரைசன் - வேந்தன் அல்லது அரசனுக்கும் சிறிய நிலை வேள், எறிந்து - வெல்லப்பட்டு, பட்டான் - வீர சாவடைந்தான்
பல்லவன் சிம்மவிஷ்ணுவின் முப்பத்து மூன்றாவது (579 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய கங்க மன்னன் கங்கஅதி அரசனுக்கு 'மகன்' நிலை அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசனான மேன் விண்ணன் என்பானுடைய படைப்பிரிவு தலைவனும் தொப்புரவருப்பாடி எனும் நிலத்தை ஆளுகின்ற வேளுமான வசிரப் பண்ணன் குறட்டாதன் என்பான் தாக்கி வென்ற போது கந்தபருமன் ஏனாதி என்ற படைத் தலைவனின் மகன் அல்லது படைவீரன் வீரசாவடைந்ததன் நினைவில் நட்டுவித்த நடுகல்.
யகர சகர திரிபில் வயிர என்பது வசிர என திரிந்து உள்ளது. குறு அட்ட ஆதன் > குறட்டாதன் என புணர்ந்தது. மேன் என்பது மிகப் பண்டைய தமிழ்ப் பெயர். அன் ஈறு உடன்சேர மேனன் என்று ஆகும். ஒரு எதியோபிய மன்னன் பெயர் Menelik I 982-957 BCE > மேன் எல்லிக(ன்). சில எகிபதிய மன்னர்கள் மேன் என்ற பெயர் கொண்டு இருந்தனர். Menkaure 2490 - 2472 BCE > மேன் காரி; Menkauhor 2422 - 2414 BCE > மேன் காக்கர்; Menkamin I 2150 - 2135 BCE > மேன் காமன்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கொட்டையூரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (62/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. சிம்ம விஷ்ணுவின் 6 ஆம் நூற்றாண்டு காலத்ததாக முடிபு கொள்ளப்பட்டுள்ளது.
சோமாசி கோ திருமானில்கு / இருபத்தொன்றாவது மீகொன் / றை நாட்டு பெருபுளிஊர் தொல்(தே) / வரு சுட்ட ஞான்று மறு அதிரைச / ரு சேவகன் கதவசாத்தன் பட்டான்
சுட்ட - ஊர் எரித்த; ஞான்று - பொழுது; சேவகன் - அதிகார நிலைப் படைத் தலைவன்; மறு - தடு, காவற்படுதல்
சிம்ம விஷ்ணு காலத்து நடுகல்லின் உருவ அமைப்புடன் ஒத்து இருப்பதால் இந் நடுகல் 6 ஆம் நூற்றாண்டினதாக முடிபு கொள்ளப்பட்டு உள்ளது. தனிஆட்சி நடத்திய சோமாசிகோ திருமான் என்பானுக்கு இருபத்தொன்றாவது ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய மேல் கொன்றை நாட்டு பெரும்புளியூர் சிற்றரசன் தொல் தேவன் படை எடுத்துத் வந்து ஊரை எரித்த போது காவல் பொறுப்பில் இருந்த அதிரைசன் என்னும் அதிகாரப் பொறுப்புள்ள குறுநில மன்னனின் படைத் தலைவன் கதவசாத்தன் என்பான் போரில் ஈடுபட்டு வீர சாவடைந்தான்.
தொல்தேவன் கொளுத்திய ஊரின் பழம் பெயர் என்ன என்று குறிக்கப்படவில்லை. அது இன்றைய கொட்டையூராக இருக்கலாம். சோமாசி கோ யார் கட்டுப்பாட்டிலும் அடங்காத தனி அரசன். சோமாசி என்பது சோ, மாசி ஆகிய இரு பெயர்களின் ஒட்டுப் பெயர். சோ என்பதும் கதவன் என்பதும் சிந்து முத்திரைகளில் காணப்படும் பழந்தமிழ்ப் பெயர்கள். ஒரு கொரிய மன்னன் பெயர் Soseong (798–800) > சோ சேயன்; துருக்கியின் ஒரு இலிடிய வேந்தன் பெயர் Croissos 575-546 BCE > குறு ஓய் சோ > குறு ஓயன் சோ. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Sofard 2345 - 2315 > சோ பரத(ன்). இன்னொரு எதியோபிய மன்னன் பெயர் Sousel Atozanis 2055- 2035 > சோ சேல்(அன்) அட்டசாணி. தென்மெக்சிகோவில் ஒரு மாயப்பன் அரசர் பெயர் .Cho Cocom 1352-1365 AD > சோ கக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தொரைப்பாடியில் அமைந்த நடுகல் கல்வெட்டு (33/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயேந்திர / பருமற்கு (றண்ணு) ஆவது க / ங்கரைசரோடு பவ்வது கங் / கரைசரு மக்கள் பொன் / னந்தியாரு பெருமுகை / எறிந்த ஞான்று கங்க / ரைசரு சேவகரு எறிந்து / பட்டாரு ராராற்று ஆண்ட / குன்றக் கண்ணியார் / கல்
பவ்வது - பரவிப் படர்ந்து, நிலம் கவர்ந்து நாடு விரித்து; எறிந்து - அழித்த, வென்று, கல் - நடுகல்
முதலாம் மகேந்திர வர்ம பல்லவனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் (592 CE) கங்க அரசனோடு சேர்ந்து கங்க அரசனின் 'மகன்' பொறுப்பு அதிகாரத் தலைவன் பொன்னந்தி (பொன்+ நந்தி அல்லது அந்தி) என்பான் பராவி நாடு கவர்ந்து தன் நாட்டு எல்லையை விரித்த போது, இதாவது, பெருமுகை மீது போர் தொடுத்த அழித்த போது அந்த கங்க அரசனுக்கு கட்டுப்பட்ட குறுநில மன்னன் ஆராற்றூரை ஆண்ட குன்றக்கண்ணி என்பான் வென்று வீர சாவு எய்தியதன் நினைவாக நடப்பட்ட கல் என்பது கல்வெட்டின் செய்தி.
பருமன் என்பது வேந்தன் நிலை அதற்கு அடுத்த நிலை அதியரைசன்அல்லது மன்னன் நிலை. மன்னனுக்கு கீழே 'மக்கள்' என்ற பொறுப்பு அதிகாரி. அதற்கும் கீழ் உள்ள பதவி சேவகன் என்ற படைத்தலைவன் நிலை. குன்றன், கண்ணன் என்ற இரு வேறு பெயர்களின் தொகுப்பு குன்றக்கண்ணி. இகர ஈறு பெற்று கண்ணி என இப் பெயரில் வழங்குகிறது. கங்கனுக்கு கட்டுப்பட்டிருந்த குன்றக் கண்ணி என்ன காரணத்தினாலோ கங்கனுக்கு மாறுபட்டு நடந்ததால் கங்கன் பகைக்கொண்டு அவன் மீது போர் தொடுத்து அவனைக் கொன்று உள்ளான்.
சேலம் மாவட்டம் கேது நாயக்கன்பட்டிப் புதூர் சங்கிலிச்சி ஏரியில் இந்நடுகல் உள்ளது. இதன் காலம் 6 - 7 ஆம் நூற்றாண்டு என இதனை ஆய்வு செய்த கல்வெட்டு அறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கின்றார்.
இரண்டாவது நா / யனூர் நாடாளப் பொன்னந் / தியார் சேவகரு தாயனூராள் / வார் கொங்கிள வரைசரு ம / க்கள் பொற்சாத்தனார் நா /யனூர் மேல்வந்த ஞான்று / எறிந்து தொறு மீட்டுப் / பட்டான் வழுதியர் ம / (க)ன் பத்திரன் கல்
மகேந்திர வர்மன் காலப் பொன்னந்தியாரின் பெயர் கொண்ட இவர் வேற்றொருவர். கொங்கிளவரைசரான கங்க இளநிலை மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் அவருடைய 'மகன்' பொறுப்பு அதிகாரியாக இருந்த தாயனூர் பகுதி ஆளும் குறுநில மன்னன் பொற்சாத்தன் என்பவன் நாயனூரைப் பொன்னந்தி என்பவன் ஆண்டு கொண்டிருந்த வேளையில் நாயனூர் மேல் படையெடுத்து வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது பொன்னந்தியின் படைத் தலைவன் வழுதி என்பானின் மகன் அல்லது படைப்பிரிவு வீரன் பத்திரன் அதை எதிர்த்துத் தாக்கி வென்று அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். பத்திரன் நினைவில் எழுந்த நடுகல் இது என்பதே செய்தி.
பொன் என்ற முன் அடை செல்வ நிலையைக் குறிக்கும் பட்டம் ஆகலாம். பல குறுநில மன்னர் இப்பட்டம் கொண்டு இருந்தனர் என்பது அறிஞர் கருத்து. இது சமீன்தார் நிலையை ஒத்தது. வழுதி என்ற பெயர் இவர் பாண்டிய நாட்டினர் என்று உணர்த்துகிறது. பத்திரம் என்பது ஒரு வகைப் படைக் கருவி அதில் வல்லவர் பத்திரன் எனக் கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டத்து பலிஞ்சிரஹள்ளி (வல் ஈஞ்சன் பள்ளி) எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயீந்திர பருமற்கு யா / ண்டைந்தாவது காடந்தைகள் சேவகன் / புதுப்பள்ளிகளோடு பொருத ஞான்று ப / ட்டா னெருமெ / திகாரி
யாண்டு - ஆண்டு; சேவகன் - படைத்தலைவன், மெய்க்காப்பாளன்; பொருத - போர் செய்த; ஞான்று - அக்கால்; பட்டான் - செத்து வீழ்ந்தான்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (595 CE) அவனுக்கு அடங்கிய சிற்றரசன் காடந்தை என்பானின் படைத் தலைவன் எருமெதிகாரி என்பான் புதுப்பள்ளி என்பானுடன் போர் செய்து வீர சாவடைந்தான்.
காடன், அந்தை ஆகிய இரு பெயர்களின் ஒட்டுப் பெயர் காடந்தை என்பது. எருமை அதிகாரி என்பதே எருமெதிகாரி என பொறிக்கப்பட்டு உள்ளது. இவன் எருமைத் தொறுவுக்கு காவலனாய் இருந்தவன் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம். இது இவன் இயற்பெயரன்று. அதிகாரி என்ற சொல் தமிழுக்கு உரியது அது சமற்கிருதம் அன்று. புதுப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவன் புதுப்பள்ளிகள் எனக் கொள்ளலாம். பள்ளன் என்பது இகர ஈறு பெற்று பள்ளி என்றும் வழங்க இடமுண்டு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கருங்கலிப்பாடிபட்டி எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (113 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவியைய மசீந்திர / ம் பருமற்கு பதின்னான் / காவது மீ / வேண்ணா / ட்டு கருங் / காலிபாடி / ஆள் கொற்ற / வாசிற் கருசா / த்தனாரு மக / ன் கட்டங்க / ன்னாரு பொற் / காடான்னாரு சே / வகரு நரிபள் / ளி வீரவாண்ண / ரையரு மக்கள் / பொன் பானன் / னாரோடெறிந்து / பட்டாரு கல்.
எறிந்து - அழித்து, வென்று, கொள்ளையிட்டு
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் பதினான்காம் (604 CE) ஆட்சி ஆண்டில் மேல் வேணாட்டின் ஒரு பகுதியான கருங்காலிப்பாடியை ஆண்டு கொண்டுள்ள மன்னன் கொற்றவாசி கருசாத்தன் என்பானுடைய 'மகன்' அதிகாரப் பொறுப்பு பெற்ற கட்டங்கன் என்பவன் சிற்றரசன் பொற்காடான் என்பானுடைய நரிப்பள்ளியைச் சேர்ந்த படைத்தலைவன் வீரவாண் அரையன் என்பவருடைய மகன் அல்லது வீரன் பொன்பானன் என்பவனுடன் போரிட்டு வென்று வீர சாவடைந்ததன் நினைவாக கட்டங்கனுக்கு நட்டுவித்த நடுகல்.
கொற்றவாயில் என்பதே கொற்றவாசி என வழங்கி உள்ளது. வீரவாண அரையனும் பொன்பாணனும் வாண அரச வழியினர் ஆகலாம் என்பது அவர்தம் பெய்ரகளில் உள்ள வாண், பாணன் ஆகிய பெயர்கள் காட்டி நிற்கின்றன.
தருமபுரி மாவட்ட தருமபுரி வட்டத்து மாக்கனூரில் வட்டெழுத்தில் பொறித்த நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயீந்திர பருமற்கு ப / தின் நால்காவாது பெரும்பாண அதிஅ / ரைசருச் சிங்க பரும அதிஅரைசரு / (எரி)ந்தஞான்று சிங்கபரும அதிஅரைசரு சே / வகன் அச்சுர பாநில் பட்டார்
எரிந்த ஞான்று - வென்ற போது; அதிஅரைசரு - வேந்தனால் ஒரு சிற்றரசனுக்கு வழங்கப்படும் பதவி அல்லது பொறுப்பு
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் பதினான்காம் ஆட்சி ஆண்டில் (604 CE) அவனுக்கு அடங்கிய வாண அரசன் பெரும்பாண அதியரசன் சிம்மவர்மன் என்ற பெயர் கொண்ட அதியரசன் நிலையில் இருந்த ஒரு குறுநில மன்னனை வென்ற போரில் போது சிம்ம வர்மனுடைய படைத்தலைவன் அச்சுரபாணில் வீர சாவு எய்தினான்.
அசீரிய நாட்டவர் தமிழ் மரபினர் என்பது அறிஞர் கருத்து. அசீரியாவில் அசூர் பாணிபால் 668 - 626 BCE என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான். அவன் பெயரை ஒப்பதாக இந்த வீரன் பெயர் உள்ளது. வ > ப திரிபு. பாணி என்பது வாணி > வாணன் என்பதன் மருஉ. அல் ஈறு பண்டு தமிழில் வழங்கியது. இங்கு அகரம் ஒழிந்து 'ல்' மட்டும் குறிக்கப்பட்டு உள்ளது. இரணியல் முட்டம் எனும் ஊர்ப் பெயரில் அல் ஈறு உள்ளதை நோக்குக.
விழுப்புரம் மாவட்ட சங்கராபுரம் வட்டத்து காணங்காடு என்ற ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள இந்நடுகல் உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைம இந்தி / ரபருமற்கி பதி / னைந்தாவது / மீ கொன் / றை நாட்ட / ரைசரை / ய் யோட்டி / ன பூசல் / லில்பட்டான் / மேலூர் ஆதன்
மீ - மேல், மேற்கு; ஓட்டின - தோற்கடித்து விரட்டு; பூசல் - சிறு போர்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் பதினைந்தாவது ஆட்சி ஆண்டில் (605 CE) அவனுக்கு அடங்கி மேல் கொன்றை நாட்டை ஆண்ட சிற்றரசனை பூசலில் தோற்கடித்து விரட்டிய போரில் மேலூர் ஆதன் என்பவன் வீர சாவு எய்தினான். மேலூர் ஆதன் எந்நாட்டினன் அவனுடைய அரசன் பெயர் என்ன என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.
மகேந்திரன் என்பது ம + இந்திரன் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. பருமற்கு என்பது பருமற்கி என தவறாக எழுதப்பட்டு உள்ளது. மேல் கொன்றை நாட்டரசன் பெயர் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டம்பட்டு எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (77 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது.
கோவிசைய மயீந்திரபரு / மற்கு பதின்எட்டாவது மீ / வேணாட்டு ஆந்தைபாடி ஈசை / பெரும்பாணரைசரு மருமக்கள் / பொற்சேந்தியாஞ் சேவகரு தொறு / க் கொண்ட ஞான்று மீட்டு பட்டா / ன் (வே)ணாட்(டு) நந்தி / (யார்) கல் க - -
மீ - மேல், மேலை; மருமக்கள் - மன்னனுக்கு அடுத்த அதிகாரப் பொறுப்பு வேள் அல்லது குறுநில மன்னன்; தொறு - ஆநிரை; சேவகர் - படைத்தலைவர்; பட்டான் - சாவடைந்து வீழ்ந்தான்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனுடைய பதினெட்டாவது (608 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய மேல் வேணாட்டு ஆந்தைப்பாடியை ஆளும் மன்னன் ஈசைபெரும்பாணரைசர் என்பானுக்கு 'மருமகன்' பொறுப்பு அதிகாரி ஆன குறுநில மன்னன் பொற்சேந்தியான் என்பானின் படையினர் வேணாட்டு ஆநிரைகளைக் கவர்ந்த பொழுது வேணாட்டைச் சேர்ந்த நந்தி என்பான் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்ததன் நினைவில் நடுவித்த நடுகல் என்பது செய்தி.
ஈசன் என்பது இங்கு ஐகார ஈறு பெற்று ஈசை என வாண அல்லது பாண மன்னன் பெயரில் வழங்குகிறது. ஓர் அசீரிய வேந்தன் பெயர் Esar Haddon > ஈசர் அட்டன்; ஓர் எலாமிய வேந்தன் பெயர் Palar-Ishshan 1890 BC > பள்ளர் ஈசன். ஒரு தய்ரி நகர போனீசிய மன்னன் பெயர் Baal Eser 946 - 930 B C > பால் ஈசர் > வால் ஈசன். எனவே ஈசன் என்பது சமற்கிருத சொல் அன்று அது ஒரு தூய தமிழ்ப் பெயரே. ஈச என்ற பெயர் கொண்ட மேலை நாகரிக மன்னர் முன்னோரும் தமிழர் தாமே என்பதுடன் வாண (பாண) அரசர் முன்னோரும் அசீரியா, எலாம், போனீசிய நாகரிகத்தாரோடு குருதித் தொடர்பு உடையவர் என்று கொள்ள இடமளிக்கின்றன இந் நடுகற்களில் வழங்கும் பெயர்கள்; அல்லது புற: 201 ஆம் பாடலில் "நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என கபிலரால் குறிப்பிடப்படும், துவரை மன்னன் கண்ணனால் தமிழகத்துக்கு அனுப்ப்பபட்டதாக கருதப்படும் 12 வேளிர் குலத்தவருள் வாணர் ஒருவராகலாம். சேந்தன் என்பது இகர ஈறு பெற்று சேந்தி ஆனது. அதே போல் நந்தன் இகர ஈறு பெற்று நந்தி ஆனது.
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி எனும் ஊரில் அமைந்த இக் கல்வெட்டு (21/1972) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய ம(யீ)ந்திர பருமற்கி பத்தொண் / பதாவது மீவெண் / ணாட்டுக் / கிப்பை (ஊ)ரா / ளும் வாணிகரு ஊரு கொள(ப்) / பட்டாரு / கிணங் / கன் / கல் / அவருது கா / ராண்மை
கொளப் - கைப்பற்ற, கவர; கல் - நடுகல்; காராண்மை - பயிர் தொழிலில் ஈடுபடுவார்க்கான பங்கு.
மகேந்திர வர்மப் பல்லவனின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (619 CE) அவன் ஆட்சிக்கு உட்பட்ட மேல் வேணாட்டுப் பகுதியான கிப்பை ஊரை ஆளும் குறுநில மன்னன் வாணிகன் என்பான் ஊரைக் கைப்பற்ற வந்த போது கிணங்கன் என்பவன் அத்தாக்குதலுக்கு ஆளாகி வீர சாவு எய்தினான். அக்கிணங்கனுடைய தொழில் காரண்மை. இதாவது, பயிர் தொழிலில் ஈடுபடுபவருக்கு விளைச்சலில் பங்கு பெறும் உரிமை காராண்மை அல்லது கீழ்வாரம் ஆகும்.
வாணிகன் கைப்பற்றிய ஊர் பெயர் குறிக்கப்படவில்லை. அது நடுகல் உள்ள இன்றைய நடுப்பட்டி ஆகலாம். வாணிகத்தில் ஈடுபட்ட சிலர் வாணிகத்தை விட்டுவிட்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருந்தனர் எனத் தெரிகின்றது. பண்டு நெடுவழியில் கள்வர்களின் தாக்குதலில் இருந்து தப்ப வணிகர் தம் பாதுகாப்பிற்கென சிறு படை ஒன்றை பேணி வந்து உள்ளனர். அவ்வாறான வணிகப் படையினர் அமைத்த பாளையத்தின் படைத் தலைவன் பின்னாளில் அப்பகுதியை மேம்படுத்தி அப்பகுதிக்கு வேள் ஆகி இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. சீனாவின் Jin ஆள்குடியில் வாணியன் என்ற பட்டப் பெயரை 1115 -1234 வரை ஆண்ட பல மன்னர்கள் கொண்டு உள்ளனர்.காட்டாக, Wányán Āgǔdǎ > வாணியன் ஆகூட(ன்).
தருமபுரி மாவட்ட தருமபுரி வட்டம் புலியனூர் எனும் ஊரில் இக் கல்வெட்டு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மசீந்திர பரு / மற் கிருபதாவது மீவெண் / ணாட்டு க / ட்டைஊ / ற் றொறு / கொண்ட ஞா / ன்று சிறுபாழா / ளும் பாலா / சிரி க / ரு மகன் / வீரவரு / கல்
மீ - மேல், மேற்கு; தொறு - ஆநிரை; மகன் - மைந்தன் அல்லது படைத் தலைவன்.
மகேந்திர வர்மப் பல்லவனின் இருபதாவது ஆட்சி ஆண்டில் (610 CE) அவனுக்கு அடங்கிய மேல் வேணாட்டு கட்டை ஊரின் ஆநிரைகளை கவர்ந்த போது நிகழ்ந்த பூசலில் சிறுபாழ் எனும் பகுதியை ஆண்ட வேள் பாலாசிரிகன் என்பானுடைய படைத்தலைவன் அல்லது மகன் வீரவன் என்பவன் வீர சாவு அடைந்தான். இந்த வீரவனுக்கு எடுப்பித்த நடுகல் இது என்பது இதன் பொருள்.
வால் ஆசிரிகன் என்பதே பாலாசிரிகன் என திரிந்து வழங்குகின்றது. 'கன்' ஈறு பண்டு தமிழில் வழங்கியது. அசீரியன், ஆசிரியன், அசுரன் என்பன அசீரியா நாட்டவரையே குறிக்கும் என்பது வரலாற்று அறிஞர் கருத்து. இங்கு ஆசிரிகன் என வழங்குகிறது. வால் > பால் என்பதற்கு ஒளிர்தல், ஒளிரும் வெண்மை எனப் பொருள். ஓர் அசீரிய மன்னன் பெயர் அசூர் பாணி பால் 668 - 626 BCE > அசூர் வாணி வால். தருமபுரி பகுதியில் ஆண்ட இந்த வேள் பாலாசிரியனின் முன்னோர் அசீரிய நாட்டவராய் இருந்திருத்தல் கூடும். மகேந்திர வர்மனின் பதினான்காவது ஆட்சி ஆண்டு நடுகல் ஒன்று இக்கூற்றுக்கு சான்றாக உள்ளது. சிம்ம வர்மனின் இருபதாம் ஆட்சி ஆண்டுப் புலியனூர் நடுகல் கல்வெட்டில் இவன் பெயர் இடம் பெற்று உள்ளது. மன்னன் > மன்னவன் என்றும், வய்ரன் > வய்ரவன் என்றும் அவன் ஈறு பெற்று வழங்குவது போல வீரன் வீரவன் என அவன் ஈறு பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மோத்தகல் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (88 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசைய ம / ந்திரபரும(ற்கு மு) / ப்பத்திரண்டாவது - - - - - யை தொ / றுக்கொண்ட ஞான்று பொன்மோதன்னா / ர் சேவகன் அக்கந்தைகோடன் / தொறு விடுவித்துப் பட்டா / ன் கல்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்திரண்டாம் ஆட்சி ஆண்டில் (622 CE) பகைவர் ஆநிரைகளை கவர்ந்த போது பொன்மோதன் என்பானின் படைவீரன் அக்கந்தைக்கோடன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்ததன் நினைவில் நட்ட நடுகல் என்பது செய்தி.
மோதன் என்ற பழம் பெயரில் அமைந்த ஓர் ஊர் மோதூர். அக்கன் என்பது பண்டு அண்ணன், அப்பன், ஐயன், அத்தன் போல் வழங்கிய ஒரு சிறப்பு அடை. இங்கு பெயர் முன் வந்து உள்ளது. கந்தன் ஐகார ஈறு பெற்று கந்தை என வழங்குகிறது. அக்கந்தைகோடன் மூன்று பெயர்ச் சொற்களின் ஒட்டுப் பெயர். ஒரு எதியோப்பிய அரசியின் பெயர் Nicauta Kandae (Queen) 740-730 BCE > நய்காத்த கந்தை
இகர ஈறு பெற்று கந்தன் கந்தி எனவும் வழங்கும். இப்பெயர் சூசாவை ஆண்ட ஒரு எலாமிய மன்னன் பெயரில் வழங்குகின்றது kutir nakhante 693 BCE > கதிர் நக்கந்தி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மோத்தகல் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (89 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது. இது மேல் உள்ள நடுகல் செய்தி மாந்தருடன் தொடர்புடையது.
கோவிசைய மயேந்திர / பருமற்கு முப்பத்திரண்டா / வது பொன்மோதனார் சே / வகன் வின்றண் (வ)டுகன் / புலி குத்திப் பட்டான் / கல்.
குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று
முதலாம் மகேந்திர வர்மனின் முப்பத்தி இரண்டாவது ஆட்சி ஆண்டில் (622 CE) பொன்மோதன் என்பானுடைய படைஆள் வின்டன் வடுகன் என்பான் புலியை எதிர் கொண்டுப் போராடி அதைக் குத்திக் கொன்று தானும் வீர சாவடைந்ததன் நினைவாய் நட்ட நடுகல்.
பண்டு றகரம் டகர ஒலிப்புப் பெற்று இருந்தது எனவே விண்டன் வடுகன் என செப்பமாகப் படிக்க வேண்டும். இவன் பொன்மோதனின் மற்றொரு படைஆள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கொட்டையூரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (63/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. மேல் உள்ள கல்வெட்டு மாந்தருடன் தொடர்பு உடையது.
கோவிசைய ம / சீந்திரபருமற்கு / முப்பத்து மூன்றாவது / வாணகோ அரைசரு மரும / க்கள் பொன்னரம்பனார் / மேல் வாணகோ அரைசரு மரு / மக்கள் கந்தவிண்ணனா / ர் வேல்மறுத்திச் சென்ற ஞா / ன்று கந்தவிண்ணனா / ர் தஞ்சிற்றப்பனார் பொ / ன்னி(தன்)னார் இளமகன் / பொங்கியார் மகன் கத் / தி எய்து பட்டான் கல்.
மறுத்தி - கொண்டு போய்; இளமகன் - இளையமகன்; எய்து - குத்துப்பட்டு, தைத்து; கல் - நடுகல்
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்து மூன்றாவது (623 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண கோ அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பில் உள்ள சிற்றரசன் பொன்னரம்பன் என்பான் மீது வாண கோ அரசனிடம் அதே 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பில் உள்ள சிற்றரசன் கந்தவிண்ணன் என்பவன் அவனை எதிர்த்து வேல் கொண்டு போய் போர் செய்த போது அப் போரில் அக் கந்தவிண்ணனின் சிற்றப்பன் பொன்னிதன் என்பானுடைய இளையமகன் பொங்கி என்பவன் வழிவந்த பேரன் கத்திக் குத்துப் பட்டு வீர சாவடைந்ததன் நினைவில் அவனுக்கு நிறுவப்பட்ட நடுகல் என்பதே செய்தி.
நடுகல் வீரனாகிவிட்ட பேரன் பெயர் குறிக்கப்படவில்லை. நரம்பன் என்பது நறன், அம்பன் ஆகிய இரு பெயர்களின் ஒட்டுப் பெயர். பொங்கன், பொங்கல் என்றவாறும் பெயர்கள் வழங்கி இருத்தல் வேண்டும். காட்டாக, ஓர் ஊர்ப் பெயர் பொங்கலூர். பொன் + இத்தன் புணர்ந்து பொன்னிதன் என வழங்குகிறது. ஒரு தய்ரி நகர போனீசிய மன்னன் பெயர் Itho baal 878 - 847BC > இத்த பால் > இத்தன் வால். ஒரு கொரிய மன்னன் பெயர் Wina BC 1610-1552 > விண்ணன்.
மேல் உள்ள கல்வெட்டு மாந்தர்களுடன் தொடர்புடைய மற்றொரு கல்வெட்டு இது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கொட்டையூரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (64/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயேந்திரபருமற்கு / முப்பத்து மூன்றாவது வாணகோ அரைசரு / மருமக்களுட் பொணைமன்னார் மகன் / னார் பொன்னரம்பனார் இண்ணபந்த மகன்னார் கந்த (வி)ண்ணனார் வெலட்டு(ண்) / மேல்ச் சென்றெறிந்த ஞான்று / நல்ல / னாய் தி / ரிந்து ப / ட்டான் / கந்தவிண்ண / னார் (சேவக) / ன் புத / ண்டி மக்(க) / ள் - - - - / - - - - - / தனெத ம / - னாதன் / - - - -
வெலட்டு > வெல் + அட்டு - வெற்றி மேல் வெற்றி சேர்த்து; நல்லனாய் - நற்பெயர் ஈட்டியவனாய்; திரிந்து - சண்டைக்குப் போதல், போர்மேல் செல்; ஞான்று - அக்கால்.
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்து மூன்றாம் (623 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய மன்னன் வாண கோ அரசனிடம் 'மருமகன்' எனும் அரசு அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொணை மன்னன் என்பவன் மகனான பொன்னரம்பன் என்பவன் மேல் வாண கோ அரசனிடம் அதே போல் 'மருமகன்' எனும் அரசு அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் இண்ணபந்தன் என்பவனின் மகன் கந்தவிண்ணன் என்பவன் போர் தொடுத்து அட்க்கடுக்கான வெற்றிகளைக் குவித்து போர்புரிந்து வரும் வேளையில் அந்தக் கந்தவிண்ணனின் படைத் தலைவனான புதண்டியின் மகன் - -தனெதம- -னாதன் என்பவன் போர்க்களத்தில் நற்பெயர் ஈட்டியபடி போர்மேல் செல்கையில் ஒரு கட்டத்தில் பகைவர் தாக்குதலில் வீர சாவு எய்தினான் என்ற மட்டில் கல்வெட்டு தெளிவாக உள்ளது. அடுத்து உள்ள நான்கு சிறு வரிச் செய்திகள் நடுகல்லில் சிதைந்து உள்ளன.
புதண்டி என்பான் மகன் பெயர் சிதைந்து உள்ளது. சிந்து முத்திரைகளில் பு என்பது தனித்து குறிப்பிடப்படுகின்றது. தண்டன் இகர ஈறு பெற்று இங்கு தண்டி ஆகப் பதிவாகி உள்ளது.
மேல் உள்ள கல்வெட்டு மாந்தர்களுடன் தொடர்புடைய மற்றொரு கல்வெட்டு இது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கண்ணக்கந்தல் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (48 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது. தொடக்கம் சிதைந்தும் பிறவரிகளில் சில எழுத்துகள் சிதைந்தும் காணப்படுகின்றன.
- - - - / - - - மருமக் / - - - - னரம்பனா / - - - ண கோ அரைசரு / - - - - கள் கந்தவிண்ண / - - - (ற)லப் புஞ்சிச் சென்ற / (ஞா)ன்று பொன்னரம்பனார் சே / வகன் வளியப்பூரார் மக / ன் தா / ளச்சா / மி கல்
புஞ்சி - ஒன்றாதல், குவியலாதல்; மருமக்கள் - சிற்றரசனை ஒத்த ஒரு அதிகாரப் பொறுப்பு; மகன் - படை ஆள் அல்லது பெற்ற மகன்
ஆட்சி ஆண்டு சிதைந்து உள்ளதால் இப்போர் நிகழ்வு மகேந்திரன் வர்மன் அல்லது நரசிம்ம வரமனின் காலத்தினதாகலாம். அவருக்கு அடங்கிய வாண அரசனிடம் 'மருமகன்' என்னும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொன்னரம்பன் மீது வாண அரசனிடம் அதே 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்று இருந்த மற்றொரு சிற்றரசன் கந்தவிண்ணன் என்பவன் தாக்கிப் போரிட்டு வெற்றி மேல் வெற்றியாக குவித்துக்கொண்டே (புஞ்சி) சென்ற போது பொன்னரம்பனின் படைத்தலைவன் வளியப்பூரன் என்பவன் மகன் அல்லது படைஆள் தாளச்சாமி என்பான் போரில் வீர சாவடைந்ததன் நினைவாக நடுவித்த நடுகல்.
மேல் உள்ள கொட்டையூர் கல்வெட்டில் பொன்னரம்பன் மற்றும் கந்தவிண்ணனுடைய தந்தையர் பெயர் குறிக்கப்பட்டு உள்ளது. எனவே இக்கல்வெட்டு இவர் தந்தையர் காலம் முதல் இருந்து வந்த பகையின் தொடர்ச்சியை எடுத்துக் கூறுகின்றது. அதோடு இந்தப் போர் முன் உள்ள கல்வெட்டுப் போர் நிகழ்விற்கு சில ஆண்டுகள் கழித்து நிகழ்த்திருக்கிறது எனலாம். மகேந்திர வர்மனின் 38 ஆம் ஆட்சி ஆண்டில் இருவருக்கும் போர் நிகழ்ந்து உள்ளது நோக்கத்தக்கது. வளியன் + பூரன். இதில் பூரன் என்பது இகர ஈறு பெற்று பூரி என்ற பெயராக சங்க இலக்கியத்துள் பதிவாகி உள்ளது. பூரன் சிங் இன்றும் பஞ்சாபில் வழங்கும் பெயர். இது வலியப் பூரன் என்பதாக இருந்தால் வலிய என்பதற்கு சேரச் தமிழில் பெரிய, மூத்த எனும் பொருள் கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் எடுத்தனூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (59 /1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தது.
கோவிசைய / மயிந்திர பருமற்கு / முப்பத்து நான்காவது வாணகோ / அரைசரு மருமக்கள் பொற்றொக்கை / ஆர் இளமகன் கருந்தேவகத்தி தன் / னெருமைப் / புறத்தே வா / டி ப்பட்டா / ன் கல் / கோபால / ன்னென்னு / ந் நாய் ஒ / ரு கள்ள / னைக் கடித் / துக் காத்திரு / ந்தவாறு
மருமக்கள் - மருமகன் என்பது ஒரு அதிகாரப் பொறுப்பு, இளமகன் - புதிதாக போர்ப் பயிற்சி பெறும் வீரன், வீரமகன், வாடி - போரில் தோல்வியுற்று; பட்டான் - செத்து வீழ்ந்தான்.
முதலாம் மகேந்திரன் வர்மப் பல்லவனின் முப்பத்து நான்காவது (624 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கி ஆண்ட வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பானின் இளைய மகன் அல்லது இளம்வீரன் கருந்தேவகத்தி என்பவன் தன் எருமை நிரைகளைப் பகைவரிடம் இருந்து மீட்கும் கால் பகைவரின் தாக்குதலில் தோல்வியுற்று தன் எருமைக்குப் புறத்தே உயிர் நீத்து வீர சாவடைந்து வீழ்ந்திருந்தான். அந்த எருமை நிரைகளைக் கவர வந்திருந்த கள்ளருள் இருவரைக் கருந்தேவகத்தியின் கோபாலன் எனும் பெயருடைய நாய் கடித்துத் துரத்தி எருமை நிரையைக் காத்து நின்றது என்பதனை நடுகல் குறிப்பு தருகின்றது.
கத்தன் என்ற பெயர் இகர ஈறு பெற்று கத்தி என இப்பெயரில் வழங்குகிறது. பொன் + தொக்கை = பொற்றொக்கை. பொன் என்பது செல்வ நிலை குறிக்கும் ஒரு சொல். இன்றைய சமீன்தார் நிலையை ஒத்தது எனலாம். தங்கன் வழிவந்த ஒரு கொரிய வேந்தன் பெயர் Dohae 1891-1834 B C E > தொக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சே. கூடலூரில் அமைந்த ஒரு நடுகல் கல்வெட்டு (50/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசை / ய மஇந்திர பரு / மற்கு முப்பத்தெட்டா / வது வாணகோஅரைசரு மரு / மக்கள் கந்தவிண்ண / னார் கூடல் தொறுக் கொண்ட / ஞான்று தொறு இடுவித்துப் பட்டா / ன் பொன்னரம்பனார் கொல்லகச் / சேவகன் காகண்டி அண்ணாவன் கல் / கூடல் இள மக்கள் நடு / வித்த கல்.
தொறு - ஆநிரை; இடுவித்து - விடுவித்து, மீட்டு; கொல்லகம் - கருவூலம், சேவகன் - காவற்காரன்; பட்டான் - செத்து வீழ்ந்தான், வீர சாவடைந்தான். இள மக்கள் - இளநிலைப் அல்லது தொடக்க நிலைப் போர் வீரர்கள்.
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பதெட்டாவது (628 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கி ஆண்ட வாண அரசனிடன் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் கந்தவிண்ணன் என்பவன் கூடல் எனும் கூடலூர் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற போது பொன்னரம்பன் என்பவனின் கருவூலக் காவற்தலைவன் காகண்டி அண்ணாவன் என்பான் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டுப் போரில் வீர சாவடைந்தான் என்பதை நினைவூட்டும் நடுகல். அந் நடுகல்லை கூடல் ஊரைச் சேர்ந்த இள மறவர்கள் நடுவித்தனர் என்ற செய்தியும் உள்ளது. இது மகேந்திர வர்மனின் 33 ஆம் ஆண்டு கொட்டையூர் நடுகல்லில் குறிக்கப்பிடும் சிற்றரசரொடு தொடர்புடைய செய்தி.
கூடலூரைச் சேர்ந்த காகண்டி கூடலூர்ப் போரில் மாண்டதால் அவ்வூர் இளமறவர் நடுகல் நட்டனர். காகண்டி > சிந்து முத்திரைகளில் கா என்பது தனிச் சொல்லாக வழங்குகின்றது. கண்டன் இகர ஈறு பெற்று கண்டி என இங்கு வழங்குகிறது. சுமேரியாவை ஆண்ட தொடக்க கால Kassite அரசன் பெயர் Gandas 1730 BC > கண்ட(ன்).
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மல்லிகாபுரம் (சாத்தனூர்) எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (35/1968) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. அதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. மகேந்திர வர்மனின் 34 ஆம் ஆண்டு எடுத்தனூர் நடுகல் செய்தியுடன் தொடர்புடையது
கோவிசைய மசீந்திரபரு / மற்கு முப்பத்தொன்பதாவது / வாணகோ அரைசரு மருமக்கள் பொ / ற்றொக்கையார் சருக்கிருந்த ஊர் போ / ந்தை மேற் சக்கரவரு படை வந்த ஞா / ன்று ணாக்கையார் இளமகன் வத்தாவ / ன் மகன் னந் / (தி எறி)ந்து பட்டா / ன் கல்
சருக்கிருந்த - தன் இருப்பிடத்தை விட்டு நீங்கி வேறோர் இடத்தில் தங்கி இருந்த முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்தொன்பதாவது (629 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பான் தங்கி இருந்த ஊரான போந்தை மேல் சக்கரவன் படை வந்து தாக்கிய போது நாக்கை என்பான் இளையமகன் வத்தாவன் என்பானுடைய மகன் நந்தி என்பவன், இதாவது, நாக்கையின் பேரன் வெல்லப்பட்டு வீர சாவடைந்தான். அவன் நினைவாக எழுந்ததே இந் நடுகல்.
நாக்கன் என்ற பெயர் ஐகார ஈறு பெற்று நாக்கை என வழங்குகிறது. பொன் + தொக்கை = பொற்றொக்கை. இப்பெயரில் ஓர் ஊர் இருந்தது பற்றி அரசர் பெயரோ ஆட்சி ஆண்டோ குறிக்கப்படாத செங்கம் நகரின் ஏரிக்கரையில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று நமக்கு தெரிவிக்கின்றது.
ஸ்வஸ்தி ஸ்ரீ தொக்கைபாடி / இரையமன் மகன் கத்தைய / ன் தொக்கைபாடி தொறுமீட்டு / ப்பட்டான்.
தொக்கைப்பாடியில் பகைவர் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற போது தொக்கைப்பாடியைச் சேர்ந்த இறையமன் என்பானின் மகன் கத்தைய்யன் அவ் ஆநிரைகளை பகைவரிடம் இருந்து மீட்டான். அப்பூசலில் அவன் வீர சாவடைந்ததால் அவனுக்கு இந் நடுகல் எடுக்கப்பட்டது.
இறையன் என்ற பெயர் 'மன்' ஈறு பெற்று இறையமன் ஆகி உள்ளது. கத்தன் என்ற பெயருடன் மதிப்புரவு அடையாக அய்யன் என்ற சொல் சேர்க்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டராம்பட்டு எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (68/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசைய நரை / சிங்கபருமற்கு யா / ண்டேழாவது மேற்கோவ / லூர் மேல் வாணகோ முத்தரைசர் நாடு பாவிய தஞ்சிற் / றப்படிகள் பொன்மாந்தனார் மேற் / வந்த ஞான்று பொன்மாந்தானார்க்காய்ப் பட்டா / ன் கடுவந்தையார் மகன் விற்சிதை கல் வாண / கோக்கட / மர்
பாவிய - பரவிப் படர்ந்து, பரப்பி, எல்லை விரித்து, பவ்வது என்பதும் இதே பொருளதே
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் ஏழாம் ஆட்சி ஆண்டில் (637 CE) அவனுக்கு அடங்கிய வாணகோ முத்தரசன் தன் நாட்டு எல்லையைக் கடந்து முத்தரசனின் நாட்டுள் பரவிப் படர்ந்து அவன் நாட்டுப் பகுதிகளைக் கவர்ந்து தன் நாட்டு எல்லையை விரிவுபடுத்திய தன் சிற்றப்பன் பொன்மாந்தன் என்பவன் மேல் போர் செய்ய மேல் கோவலூர் நாட்டின் மேல் படை செலுத்திய போது பொன்மாந்தன் சார்பில் கடுவந்தை என்ற வேளின் மகன் அல்லது வீரன் விற்சிதை என்பவன் போரிட்டு வீர சாவடைந்தான். அவன் வீரத்தை நினைவு கொள்ளும் வகையில் எழுந்ததே இந் நடுகல். இக்கல்லை நிறுவியவன் வாணகோக் கடமன் என்று தெரிகின்றது.
கடு +அந்தை = கடுவந்தை, வில் + சிதை = விற்சிதை. இந் நடுகல்லில் வாணகோ அரசன் பெயர் முத்தரசன் என குறிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு வாண அரசன் வாணகோக் கடமன் என்பது முத்தரசனின் சிற்றப்பன் ஆகலாம். முத்தரசனின் பாட்டன் தன் நாட்டை முத்தரசனின் தந்தைக்கும் வாணகோக் கடமனுக்கும் பிரித்துக் கொடுத்ததில் தொடர்ந்து வந்த எல்லைச் சர்ச்சையால் இப்போர் நிகழ்ந்து இருக்கலாம். மாந்தன் எனும் பெயர் ஐகார ஈறு கொண்டு மாந்தை என ஒரு பண்டைய சேர நகருக்குப் பெயராக வழங்கியது. ஒரு எதியோபிய மன்னர் பெயர் Manturay 2180 - 2145 BCE > மாந்தரை. இன்னொரு எதியோபிய மன்னன் பெயர் Mandes 1533 -1514 BCE > மாந்தி. அடிகள் என்ற சொல் சமண மதத் தொடர்பு கொண்டதாக இருக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டராம்பட்டு எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (69/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது. மேலே காட்டப்பட்டு உள்ள நடுகல் அரசர்களுடன் தொடர்புடையது.
கோவிசைய நரை / சிங்கபருமற்கு யா / ண்டேழாவது வாணகோ முத் / தரைசரு நாடு பாவிய மேற் கோ / வலூர் மேல் வந்து தஞ்சிற்றப் / படிகளை எறிந்த ஞான் / று பட்டான் சேவர்பரி அட்டுங் கொள் / ளி துருமா / வனார் மக / ன் மாற்கடலன்.
சேவர்பரி - படைவீரர்க் குதிரை; அட்டும் - முழுவதும், செறிவு, திரள்; கொள்ளி - காவல் பொறுப்பு கொண்ட; பாவிய - பராவிப் படர்ந்த, நாட்டுப் பகுதியைக் கவர்ந்த முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் ஏழாம் (637 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாணகோ முத்தரைசன் தன் நாட்டு எல்லைக்குள் வந்து தன் நாட்டுப் பகுதிகளில் தமது ஆட்சியை விரித்து நாடு கவர்ந்த மேல் கோவலூரில் வாழும் தன் சிற்றப்பன் (பொன்மாந்தன்) மீது படை கொண்டு வென்ற போது குதிரைப் படைவீரர்தம் குதிரைத் திரள் முழுமைக்கும் காவல் பொறுப்பு கொண்ட துருமாவன் என்பான் மகன் மாற்கடலன் அப்போரில் வீழ்ந்துபட்டு வீர சாவடைந்தான்.
நரசிம்ம வர்ம என்ற சமற்கிருதச் பெயர் நரை சிங்கபருமன் என தமிழ்ப் படுத்தப்பட்டு உள்ளது. விரைவுக் கருத்தின் அடிப்படையில் உருவானது துரு துரு என்னும் சொல். விரைவுஓட்டம் கருதி குதிரையைக் குறிக்க துருமா என்ற சொல் பண்டு தமிழில் வழங்கியது. ஆதலால் துருமாவன் என்பதை இயற் பெயராகக் கொள்ளாமல் குதிரைக்காரன் எனக் கொள்வதே தகும். மாற்கடலன் என்பதை மால் கடலன் என பிரித்து அறியலாம் அல்லது 'அன்' ஈறு அற்ற மாறன் கடலன் என்பதாகக் கொள்ளலாம். மாங்குலம் கல்வெட்டில் கடலன் என்ற பெயர் குறிக்கப்படுவதால் இவன் பாண்டிய வழியினன் அல்லது நாட்டினன் எனக் கொள்ள இடமுண்டு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் போந்தை எனும் ஊரில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிப்பு உள்ள நடுகல் உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
- - - - ரைசிங்க / விண்ண பருமற்கு யா / ண்டு பத்தாவது மே / ன் மீ கொன்றை நாடா / ளுஞ்ச - - - - படை ஆரு / சேவகர் சென்னடைபு / க்கு டனாளும் மு / தியப் போவனார் / தொறுக் கொளிற் / பட்டார் கல்
மேன் - மேல்; மீ - மேல், மேற்கு; சென்னடைபுக்கு - நேர்த்தியான வெறித் தாக்குதலுக்கு; கொள்ளில் - கவரும் போரில்; கல் - நடுகல்
நரசிம்ம வர்மனின் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (640 CE) (பாங்கு)டன் ஆளும் முதியப் போவன் என்னும் சிற்றரசன், மேல் கொன்றை நாட்டை ஆளுகின்ற சக்கரவன் மீது போர் தொடுத்து சக்கரவன் நாட்டு ஆநிரையைக் கவரும் போரில் சக்கரவன் படை வீரர்களுடைய நேர்த்தியான வெறித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போரில் வீர சாவடைந்தார். அதன் நினைவில் முதியப் போவனுக்காக எடுப்பித்த நடுகல்.
மேல் எனும் பொருளுடைய மேன், மீ எனும் சொற்கள் அடுத்துடத்து எழுதப்பட்டு இருப்பது பிழையான வழக்கு. மேன் என்ற சொல்லை முதியப் போவன் மேல் கொன்றை நாட்டின் மேல் படை நடத்தினார் என்பதாகக் கொள்ளலாம். முது அகவையை எய்தி சிறப்புடன் ஆட்சி புரிதலாலே (பாங்)குடன் என்ற சொல்லால் போவன் சிறப்பிக்கப்படுகின்றார் எனக் கொண்டேன். பாங்கு என்ற சொல் கல்வெட்டில் இல்லை. மகேந்திர வர்மனின் 39 ஆம் ஆண்டு மல்லிகாபுரம் (சாத்தனூர்) நடுகல்லில் சக்கரவன் என்ற பெயர் உள்ளது. அவர் இன்னும் பத்து ஆண்டுகள் நீடித்து நரசிம்ம வர்மன் காலத்திலும் வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. கல்வெட்டில் ச - - - படை ஆகிய எழுத்துகளுக்கு இடையே சிதைந்த எழுத்துகளை சக்கரவன் படை எனக் கொள்ளவதே மிகப் பொருத்தமானது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சாத்தனூர் எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (36/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசைய நரைசிங் / க பருமற்கு பதினொன் / றாவது மேற்கோவலூர் நாட்டு அள / இற்பாடி கடிபகையார் தொறு கொண்ட (ஞா) / ன்று சென்று தொறு இடுவித்து பட்டாரு உணங்க / யார் மகனார் கோத்தையார் சேவகன் ஆரோகவண்க / ர் மக்கள் / கணிமாத / னார் கல்
மக்கள் - அதிகாரப் பொறுப்பு கொண்ட படைத் தலைவன் அல்லது மகன்; இடுவித்து - விடுவித்து
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் பதினொன்றாவது ஆட்சி ஆண்டில் (641 CE) மேல்கோவலூர் நாட்டுப் பகுதியான அளவிற்பாடிக்கு சிற்றரசனான கடிபகை என்பான் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற போது அவ் ஆநிரையை உணங்கன் என்ற வேளின் மகன் கோத்தை என்பானின் படைப்பிரிவுத் தலைவன் ஆரோகவங்கன் என்பவனுடைய மகன் அல்லது படைவீரன் கணிமாதன் என்பான் மீட்டு விடுவித்து அப்பூசலில் வீர சாவு எய்தியதன் நினைவில் நடப்பட்ட நடுகல்.
ஆர்+ஓக+வங்கன் = ஆரோகவங்கன். ஆர் என்பது ஒரு மரத்தின் பெயர். அதன் கீழ் ஓகம் (யோகம்) இயற்றும் வங்கன் என்பது பெயருக்கான பொருள். ஒரு தவ வாழ்க்கைச் சான்றோருடைய பெயரை இப்படைத் தலைவனுக்கு அவன் பெற்றோர் இட்டுள்ளனர். கணி என்பது தொழில் பெயராகலாம். மாதம்பாக்கம், மாதவரம் போன்ற ஊர்கள் மாதன் என்பான் பெயரில் அமைந்தவை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் போந்தை எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (90/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசய நரசி / ங்கபருமற்கு யாண்டு பன்னிரண் / டாவது மீகொன்றை நாட்டு பாசாற்று பகைம / தர் சேவகன் தொறு இடுவித்து பட்டான் ப / ணய நாத்தன்
பாசாறு - ஓர் ஊர்ப் பெயர்; இடுவித்து - விடுவித்து
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் பன்னிரெண்டாவது (642 CE) ஆட்சி ஆண்டில் மீகொன்றை நாட்டுப் பகுதியான பாசாறு எனும் ஊரின் வேள் பகைமதன் என்பானுடைய படைவீரன் பணய நாத்தன் என்பவன் பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு விடுவித்தான். அப்போரில் அவன் வீர சாவு எய்தினான்.
பனைய நாற்றன் என்பதே செப்பமான வழக்கு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் போந்தை எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (91/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது. மேல் உள்ள நடுகல் அரசருடன் தொடர்பு உடையது.
கோவிசய நரசிங்க / பருமற்கு யாண்டு பன்னிரண்டாவது மீ / கொன்றை நாட்டு பாசாறாள் பகைமதர் சேவகர் / தொறு இடுவித்து பட்டார் வண்ணக்க சாத்தனார் முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் பன்னிரண்டாவது ஆட்சி ஆண்டில் (642 CE) அவனுக்கு அடங்கிய மேல் கொன்றை நாட்டு பகுதியில் ஒன்றான பாசாறு பகுதியின் வேள் பகைமதன் என்பானின் இன்னொரு படைவீரன் வண்ணக்க சாத்தன் என்பவன் பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு விடுவித்த போரில் வீர சாவு எய்தினான் என்பது நடுகல் செய்தி.
ஒரே போரில் இறந்த இரு மறவர்க்கு தனித் தனியே நிறுவிய நடுகற்களுக்கு இது ஒரு சான்று. அக்கன் என்ற பெயர் அப்பன், அத்தன், அண்ணன், ஐயன், அத்தன் என்பது போன்ற பொருளைக் கொண்டது. அதனால் மதிப்புரவு ஒட்டுப் பெயராக பண்டு வழங்கி வண்ணக்கனில் வழங்குகிறது. பிற நாகரிகங்களிலும் அக்கன் வழங்குகிறது.
சேலம் வட்டம் பள்ளத்தாண்டனூரில் ஊருக்கு வெளியே தனிக்கல்லில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 7 ஆம் நூறறாண்டு.
கோவிசைய ஈச்சுர பருமற் / கு பன்னீராட்டைக் கெதிரா மா / ண்டு கொங்க பருமரையர் / நொன் கம்பூர் எரிந் / த ஞான்று பட்டான் வா / ண பெருமிள வரையர / ப்ப வாரத்தான் ம - / மக - ன்- கல்
ஆட்டை - ஆண்டு: எதிராம் ஆண்டு - அடுத்து தொடரும் ஆண்டு; பருமன் - வேந்தன் நிலையில் வைக்கத்தக்க மன்னன்: எரிந்த ஞான்று - கொள்ளையிட்ட போது அல்லது அழித்த போது ஈச்சுர வர்மனின் பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டில் கொங்கரான கங்க வேந்தன் நொன் கம்பூரைத் தாக்கி அழித்த போது வாண பெரும் இளவரையர் அப்ப வாரத்தான் என்பானின் மருமகன் பொறுப்பு அதிகாரியோ அல்லது அவன் மகனோ இறந்தான். அவன் நினைவில் நிறுவிய கல்.
கோவிசைய என்பது இவன் பல்லவன் வழியினன் என்பதைக் குறிக்கின்றது. இவன் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம வர்மனுக்குப் பின்பு ஆண்டவனாதல் வேண்டும். கங்கரே கொங்கர் எனப்பட்டனர். வாணன் அப்ப வாரத்தான் என்பதை அடுத்து வரும் சொல் சிதைவு பட்டு உள்ளது. அது மருமகன் என்பதாகவோ அல்லது மகன் என்பதாகவே இருக்கலாம். இதாவது வாணனிடம் மருமகன் பட்டம் பெற்றவன் அல்லது அவனுடைய மகன் இறந்தான் என் ஊகிக்கலாம்.
ஒரு எத்தியோய மன்னன் பெயர் Aksumay Warada Tsahay 782 - 765 BCE > அக்சுமய் வாரத்த (வார் + அத்த(ன்) சாக்கை; மற்றொரு எதியோபிய மன்னன் பெயர் Psmenit Waradanegash 21 457 > பசுமன் இத்(தன்) வாரத்த நெக(ன்). பிற மேலை நாகரிகங்களிலும் வாரத்த என்ற பெயர் பதிவாகி உள்ளது விந்தையாக இன்றும் அது வழங்குகிறது. Dr. Mohamed ElBaradei > எல் பாரத்தெய் > எல் வாரத்தை was Director General of the International Atomic Energy Agency (IAEA) from December 1997 until November 2009. ஆந்திரத்தின் ஓர் ஊர் வாரங்கல். - - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வேப்பூர் செக்கடி பெரிய வேடியப்பன் கோவிலில் வட்டெழுத்து பொறிப்புள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 8 ஆம் நாற்றாண்டு.
கோவிசைய நரசிங்க பருமற்கு யாண்டு பத்தாவது மீகொன்றை நாட்டுப் பாலைக்கோட்டுத் தொறுக்கொண்ட ஞான்று தொறு இடுவித்து தாசமாரியார் பட்டார்.
கொண்ட - கவர்ந்த; இடுவித்து - மீட்டு, விடுவித்து இரண்டாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் பத்தாம் ஆட்சி ஆண்டில் (710 CE) மேல் கொன்றை நாட்டு பாலைக் கோடு பகுதியின் ஆநிரைகளைக் பகைவர் கவரும் போது. இங்கு பகைவர் யார் என்ற குறிப்பு இல்லை. பாலைக் கோட்டின் ஆநிரைகளை மீட்டு விடுவித்து அப்பூசலில் தாசமாரி என்பவன் வீர சாவடைந்தான் என உள்ளது. இவனுடைய பதவியோ அல்லது யாருக்கு சேவகன் என்ற குறிப்பபோ ஏதும் கல்வெட்டில் இல்லை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தாழையூத்து வேடியப்பன் கோவிலில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய நரசிங்க பரு / மற்கு யாண்டு பத்தாவது மீ / வேண்ணாட்டுக் கோவலூ ஊரரைச / ர் பெரும்பாணதியரைசர் சேவக / ன் சிற்றுப்பாடி பனையனார் மறித் / தொறுக் கொண்ட ஞான்று / பட் / டார்.
மறி- ஆடு; சேவகன் - படைத்தலைவன் அல்லது வீரன்
இரண்டாம் நரசிம்ம வர்மனின் பத்தாம் ஆட்சி ஆண்டில் (710CE) மேல் வேணாட்டு கோவலூரின் அரசரான பெரும்பாண அதியரசனின் படைத்தலைவன் சிற்றுப் பாடியைச் சேர்ந்த பனையன் என்பான் ஆட்டு நிரைகளைக் கவர்ந்த போது மீட்புப் படையினரின் எதிர்த் தாக்குதலில் வீர சாவடைந்தான். பனையன் எந்த நாட்டு ஆட்டுநிரைகளைக் கவர்ந்தார் என்ற குறிப்பு இல்லை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சின்னய்யன்பேட்டை சாவுமேட்டு வேடியப்பன் கோவிலில் ஒரு நடுகல் கல்வெட்டு (57/ 1971) உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய கம்பபர்மற்கு / யாண்டு ஆறாவது கொங்க / த் தெழுமாத்தூர் இருந்து / வாழுஞ் சாகாடச் சிற்றன் / மீகொன்றை நாட்டு / ப் புளியூர் எரு / மை கொண்ர ஞா / ன்று பூசல்லோடி / மேல் வேணாட்டு மணி / க்கலவடவூரில் முட்டி எ / ருமைத் தொறு மீட்டு மட்டா / ன் சாகாடச் சிற்றன்
இருந்து - தங்கி: பூசல்ஓடி - மோதல் ஏற்பட்டு; முட்டி - எதிர்த்துப் போரிட்டு; மட்டான் - பட்டான்
கம்ப வர்மப் பல்லவனுடைய 6 ஆம் ஆட்சி ஆண்டில் (875 CE) கொங்க நாட்டின் எழுமாத்தூரில் தங்கி வாழும் சாகாடச் சிற்றன் என்பவன் மேல் கொன்றை நாட்டில் அமைந்த புளியூர் என்னும் ஊரின் கண் உள்ள எருமை நிரைகளைப் பகைவர் கவர்ந்து சென்ற போது ஏற்பட்ட பூசலின் காரணமாக அவர்களைப் பின் தொடர்ந்து வழி இடையே மேல் வேணாட்டின் மணிக்கடவூரில் அவர்களை மறித்து எதிர்த்துப் போர் செய்து எருமை நிரைகளை மீட்டான். அப்போது சாகாடச் சிற்றன் அப்போரில் வீர சாவடைந்தான் என உள்ளது.
சாகாடச்சிற்றன் எந்த அரசனுக்குக் கீழ் எந்த பொறுப்பில் இருந்தான் என்ற குறிப்பு ஏதும் கல்வெட்டில் இல்லை. பட்டான் என்பது தவறாக மட்டான் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Akate (Za Sagado) IV 1276 -1256 BCE > அக்கத்தி (சா சாகாடன்)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தா. வேளுர் சாவுமேட்டு வேடியப்பன் கோவிலில் ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமற்கி யாண் / டெட்டாவது வயிர மேக வாணகோவரையரா / ளத் தகடூர் நாட்டுப் பாகாற்றூர்க் கதவ / மாதேவன் மகன் காளமன் மீய்கொன் / றைநாட்டு மேல் வேளூர் இருந்து வாழாநின்ற காலத் / து முருங்கைச் சேர்ந்ததன்ற மையனார் / மகளைக் கள்ளர் / பிடிகரந்துரந / று கொண்டய/ ந் அவளை விடு / வித்துக் தா / ன்பட்டான் கா / ளமன்.
மேல் - மேற்கு; பிடி - பிடித்து; கரந்துர - மறைத்துவைத்து அச்சுறுத்த; நறு கொண்டையன் - அகல் பூ (coromandel ailango) சூடிய கொண்டையன் அல்லது மணம்வீசும் மலர்ச்சூடிய கொண்டையன் கம்ப வர்மப் பல்லவனுடைய எட்டாம் ஆட்சி ஆண்டில் (877 CE) அவனுக்கு அடங்கிய வாண மன்னனான வயிரமேக வாணகோவரையன் தகடூர் நாட்டை ஆண்டு வரும் காலத்தில் இவனுடைய ஆட்சிப் பகுதியான மேல் கொன்றை நாட்டு உட்பிரிவான மேல் வேளூரில் தகடூர் நாட்டு பாகற்றூரைச் சேர்ந்த கதவமாதேவன் என்பவன் மகன் காளமன் வாழ்ந்து இருந்தான். இவன் தமையன் முருங்கு எனும் ஊரைச் சேர்ந்தவன். இவனுடைய மகளைக் கள்ளர் பிடித்து மறைத்து அச்சுறுத்த நறுமணம் கமழும் கொண்டயன் காளமன் போரிட்டு அவளை விடுவித்தான். அப்போரில் காளமன் வீர சாவு எய்தினான்.
காளமன் எந்த அரசன் கீழ் பொறுப்பு ஏற்று இருந்தான் என்ற செய்தி குறிப்பிடப் படவில்லை ஆதலால் கள்ளர் பணம் பறிக்க ஆள்கடத்தலில் ஈடுபட்டனர் எனக் கொள்ளலாம். இது அரசியல் சாராத சாவு என்றாலும் வீரத்தின் பாற்படுவதே. காளன் என்ற பெயர் 'மன்' ஈறு பெற்று உள்ளது. வாண அரசன் வயிரமேகன் பெயரில் உள்ள வயிர என்பதும் மேக என்பதும் தூய தமிழ்சொற்கள் ஆகும். வயிர என்பது ஒளிரும் கீற்று எனப் பொருள்படும். கார் மேகன், காளமேகன், நீல மேகன் ஆகிய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. தென் அமெரிக்கப் பெருவின் ஒரு இன்கா மன்னன் பெயர் Viracocha 1410-1438AD > வயிர காக்க(ன்); தென் கிழக்கு மெக்சிகோவின் ஒரு மாயப்பன் அரசன் பெயர் Mehen Cocom 1238-1242 > மேகன் கக்கம். தய்ரி நகர் ஆண்ட ஒரு போனீசிய மன்னன் பெயர் Baal Termeg 1220 BC > பால் திர மேக் > வால் திர(ய) மேக(ன்). கதவன் என்ற தனிப் பெயர் மாதேவன் என்ற பெயருடன் இணைந்து வந்தது.
வேலூர் மாவட்டம் மேல் சாணாங்குப்பம் என்ற ஊரில் 9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் ஒன்று அறியப்பட்டு உள்ளது
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப விக்கிரம பரும / ர்க்கு யாண்டு முப்பதாவது படுவூர்கோ / ட்டத்து மேலடையறு நாடு புக்கடைகளாட பாலி / ன - - - ம நாயகன் சாகூழன் வேளாளன் விண்ட பா / டிக்கள்ளர் இவ்வூர் தொறுக் கொள்ளப்பட்டான் / இவனுக்கு (ஊருங்) கோவு நான்று அரசஞ்செ / று நெத்தல்பட்டி அட்டித்து
.புக்கு + அடை > புக்கடை - தங்கும் இடம், புகலிடம், சத்திரம்: ஆட - விழ, வெற்றி பெற; நான்று - ஞான்று; நெத்தல்பட்டி - நீத்தார் பட்டி; அட்டித்து - நீர் வார்த்து.
கம்ப வர்மனின் முப்பதாவது ஆட்சி ஆண்டில் (899CE) பகைவர் தாக்குதலில் படுவூர்க் கோட்டத்திற்கு உள்ளடங்கிய மேல் அடையறு நாட்டு வழிப்போக்கர் தங்கும் விடுதிகள் அல்லது சத்திரங்கள் பகைவர் கைக்குள் விழ அவ் வெற்றிக்குப் பின் விண்டப்பாடிக் கள்ளர் தன் ஊரான பாலினாட்டு ஆநிரைகளைக் கவர்ந்த போது பாலினாட்டு ஊர்த்தலைவன் சாகூழன் வேளாளன் அதைத் தடுக்க நடந்த போரில் வீர சாவடைந்தான் அப்போது இவனுக்காக ஊராரும் அரசனும் சேர்ந்து 'அரசஞ்செறு' எனும் பெயரில் வீர சாவடைந்த வீரனுக்குக் கொடையாக நல்கும் நீத்தார்பட்டி நிலத்தை நீர் வார்த்து அட்டிக் கொடுத்தனர்.
புக்கடைகள் எனப் பன்மையில் வருவதால் அது ஓர் ஊர்ப் பெயர் அன்று. அதோடு அடுத்து வரும் ஆட என்ற வினைச் சொல் விழ, வெற்றி கொள்ளப்பட என்ற பொருளில் வருவதால் புக்கடைகள் என்பது புகலிடத்தையே குறிக்கும் எனக் கொள்ளாமல். சா என்பதும் கூழன் என்பதும் தனித்தனிப் பெயர்கள். தென்கிழக்கு மெக்சிகோவின் ஒரு மாயப்பன் அரசன் பெயர் Cuzam Cocom AD 1396-1401 > கூழம் கக்கம் > கூழன் கக்கன். துருக்கியின் ஒரு Hittite மன்னன் பெயர் Huzziya I 1530-1525 BCE > கூழய்யன் என்பது. நன்னூல் மூலத்திற்கு 19 ஆம் நூற்றாண்டில் உரை எழுதியவர் கூழங்கை தம்பிரான். தொல் ஈரானின் அன்சனையும், சூசாவையும் ஆண்ட ஒரு எலாமிய அரசன் Unpatar-Humban 1340 BC > உன்பட்டர் கம்பன் (son of Pahir-Ishshan > பகிர் ஈசன் மகன்)
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டம்பாடி எனும் ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் வட்டெழுத்தில் பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு (16/1972) உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.
சிவமார பருமர்க்கு யாண்டு யிருபத் / திரண்டாவது மாவலி வாணரயர் க / ங்க நாடாள இந்தரன் தகடூ / ர் மேல் வந்த ஞான்று மறவனா / ர் சேவகன் கண்ணனூருடைய கமிய / த் தழமன் பட்டான்
கங்கரான கொங்கணி அரசன் முதலாம் சிவமாறன் என்பான் தனி ஆட்சி செய்து வரும் இருபத்திரண்டாவது ஆட்சி (701 AD) ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண அரசன் மாவலி வாணரயன் கங்க நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் இராட்டிரகூட மன்னன் இந்திரன் என்பவன் தகடூர் மீது படைநடத்தி வந்த போது தகடூரின் வேள் மறவன் என்பானுடைய படைத் தலைவன் கண்ணனூர் கமியத் தழமன் என்பான் வீர சாவு எய்தினான்.
இந்திரன் எந்த நாட்டினன்? எங்கிருந்து வந்தான்? ஆகிய செய்திகள் இக் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை. பிற கல்வெட்டுக் குறிப்புகளை வைத்து அறிஞர் இவன் இராட்டிரகூட மன்னன் என்கின்றனர். சிவமாறன் கட்டாணை பருமானின் தந்தை ஆவான். கமிய என்பது கம்மிய என்ற தொழில் பெயர் ஆகலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் சின்னட்டி என்ற ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் வட்டெழுத்தில் பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கட்டிணை பந்மற்கு யாண்டைந்தாவது / வேட்டுவதி அரையர் சேவர் குமாரபம்மர் / மக்கள் மாகற்நாகஅவர் தம்பி இருவரும் / வேளூர் தொறு மீட்டுப்பட்டார்
கங்கரான பிரிதி கொங்கண அரசர் கட்டிணை அல்லது கட்டாணை பருமர் (வர்மர்) பேரரசராக தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார். அவருடைய ஐந்தாவது ஆட்சி (730 AD) ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட வேட்டுவனான அதிஅரசன் எனும் பொறுப்பு கொண்ட வேளுக்கு படையாள் குமாரபம்மன் என்பவன் பெற்ற பிள்ளைகள் மாகற்நாகன் மற்றும் அவன் தம்பி இருவருமாக பகைவர் கவர்ந்து சென்ற வேளூர் கால்நடைகளை மீட்டு அப்பூசலில் வீர சாவு எய்தினர்.
தொறு எருமை, ஆடு, மாடு ஆகியவற்றை குறிக்கும். கட்டாணை பருமன் என்பவன் கங்க மன்னன் இரண்டாம் சிவமாற வர்மனின் தந்தையான ஸ்ரீ புருஷனே என்பர் அறிஞர். குமாரபம்மன் எந்த நாடன், ஊரன் என்ற செய்தி இல்லை. அவன் வேட்டுவ மரபினன் என்பது புலனாகிறது. மாகல் > மாகற் என வழங்குகிறது. சமற்கிருதத்தில் மாக(ன்) என்பவர் சிசுபாலவதம் என்ற இலக்கியம் செய்தார். பம்மன் ஐகார ஈறு பெற்று பம்மை எனவும், அல் ஈறு பெற்று பம்மல் எனவும் வழங்கும். ஒரு தைரி நகர் ஆண்ட போனீசிய மன்னன் பெயர் Pygmalion (Pummay) 831-785 BC > பிக்மலையன் அல்லது பிக்கமல்லையன் (பம்மை).
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கைலாவரம் எனும் ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் வட்டெழுத்தில் பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு (5/1973) உள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.
ஸ்ரீ கட்டிணை பருமற்கு யாண்டு முப்பத்தே / ழாவது கந்தவாணதிஅரையர் புறமலை நாடாள அருட்டிறையர் தொறுக் கொண்ட ஞா / ன்று அமர நீலியார் சேவகர் / பையச்சாத்தனார் தொ / று மீட்டு / பட்டார் கல்
கங்கரான பிரிதி கொங்கண அரசர் கட்டிணை அல்லது கட்டாணை பருமர் (வர்மர்) பேரரசராக தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார். அவருடைய முப்பத்தேழாவது ஆட்சி (757 AD) ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட வாண அரசன் கந்தவாண் அதிஅரையன் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் அருள் திறையன் என்பான் (இக்காலக் கைலாபுரப் பகுதியில்) ஆநிரைகளைக் கவர்ந்த பொழுது கைலாபுரப் பகுதியின் வேள் அமரநீலி என்பானுடைய படைவீரன் பையச்சாத்தன் என்பான் அவ் ஆநிரைகளை மீட்டான். அப்பூசலில் அவன் வீர சாவு எய்தியதன் நினைவில் நிறுவப்பட்ட நடுகல் என்பது செய்தி.
அருள் திறையன் என் நாட்டினன்? அவன் யார் தூண்டுதலில் ஆநிரை கவர்ந்தான்? அல்லது அருள்திறையர் ஒரு சாதியா? அமரநீலியின் நாடு யாது? என்பன குறித்த குறிப்புகள் ஏதும் கல்வெட்டில் இல்லை. தமிழில் அறிவில் சிறியவன் எனும் பொருளில் சிறுவனை பையன் என அழைப்பது இக்கால் பொது வழக்காக உள்ளது. ஆனால் பையச்சாத்தனின் பெயரில் அச்சொல் அவ்வாறான் பொருளில் வழங்கவில்லை. தமிழிய மொழியாம் தெலுங்கில் பய் என்பது உயரக் கருத்தைக் கொண்டது. இந்தி உள்ளிட்ட வடஇந்திய மொழிகளில் பையா (Bhayya) என்றால் அண்ணன் என்று பொருள். எனவே தமிழிலும் அண்ணன் என்ற பொருளிலேயே பையன் என்ற சொல் வழங்கி வந்ததற்கு இந்த பையச்சாத்தன், செல்லம்பட்டி ;நடுகல்1. இல் மழற்பையன் , ஊத்தன்கரை ரெட்டியூர் நடுகல்லில் இருசப்பையன், சிந்து முத்திரையில் சானப்பையன் ஆகிய பெயர்கள் சான்றாக உள்ளன. கொரியாவின் Gija வழிவந்த ஒரு வேந்தன் பெயர் Heungpyeong 957-943 BC > கிய்யன் பய்யன், Jangpyeong 251-232 BC > சான் பையன், Beopheung (514 - 540) > விய்யபியன் > விய்யபையன், Jinpyeong (579 - 632) > சின்(ன)பையன். கொரியத்தில் 'ன்' னகர மெய் 'ங்' என சீனத் தாக்கதால் திரியும்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கடத்தூரில் முதல் வரி கிரந்தம் அடுத்த வரிகள் தமிழிலும் பொறிப்பு பெற்று உள்ள 13 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு (10/1973) ஒன்று உள்ளது.
ஸ்வஸ்தி ஸ்ரீ போசள வீர ராமனாத / தேவற்கு யாண்டு 33 ஆவது / ஆடி மாதம் பதினேழாந்தி / யதி மகத்தி நன்று கடத்தூர் / நாட்டு நாயகஞ் செய்வான் ஆ / ரோதன் இருகன் பெருமாள் / மகன் ஆண்பிளைப் பெருமா / ள் புலியைக் கொன்று வீர / ஸ்வர்கம் பெற்றான்.
போசளப் பேரரசன் வீர இராமநாதனின் 33 ஆம் ஆட்சி ஆண்டில் (1287 AD) ஆடி மாதம் பதினேழாம் நாள் மக நட்சத்திரம் கூடிய நாளில் வீர இராமநாதன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கடத்தூர் நாட்டு ஊர்த் தலைவன் ஆரோதன் இருகன் பெருமாள் என்பான் பெற்ற மகன் ஆண்பிளைப் பெருமாள் என்பவன் ஊருள் புகுந்து உயிருக்கு அச்சம் ஏற்படுத்திய புலியை எதிர்த்துப் போராடிக் கொன்றான் அவனும் புலியின் தாக்குதலில் காயமுற்று வீர சாவடைந்தான்.
13 ஆம் நூற்றாண்டில் கருநாடகத்தை ஆண்ட போசளர் திருவண்ணாமலை வரை தம் ஆட்சியை விரிவு படுத்தி இருந்தனர். அப்போது கடத்தூர் எனும் ஊருக்கு தலைவனாய் இருந்து ஆண்டவன் ஆரோதன். ஆர் + ஓதன் = ஆரோதன். பட்டான் என்ற சொற்பயன்பாடு நீங்கி வீர சுவர்க்கம் பெற்றான் எனக் குறிக்கப்படுவது குமுகத்தில் மத, புராணக் கருத்துகள் வேரூன்றி விட்டதையே காட்டுகின்றது. ஈரானின் ஒரு எலிமய மன்னன் பெயர் Elymais king Orodes I 25 - 50 AD > ஆரோத்S > ஆரோதன்.
தருமபுரி மாவட்டம் ஆரூர் வட்டம் இருளப்பட்டி அல்லது பாப்பம்பாடி என வழங்கும் ஊரில் 5 ஆம் நூற்றாண்டு நடுகல் அமைந்து உள்ளது. இதுவே பல்லவர் காலத்தின் மிகப் பழமையான நடுகல் என் அறிஞரால் அறியப்பட்டு உள்ளது.
கோவிசைய விண்ணபருமற்கு நான்காவ / து (தகடூரு) நாடாளும் கங்கரைசரு / மேல் வந்த தண்டத்தோடு எ / றிந்து பட்ட வாண பெருமரைசரு / - - - -
தண்டம் - படை: தண்டநாயகம் என்பது படைத்தலைவனைக் குறிப்பதை நோக்குக.
விஷ்ணு வர்மனுடைய நாலாம் ஆட்சி ஆண்டில் தகடூர் நாட்டை ஆளும் கங்க அரைசர் மேல் படைநடத்தி வந்த போது அப்படையுடன் போரிட்டு வெல்லப்பட்டு வீர சாவு எய்திய வாண பெரும் அரைசர் என்ற மட்டில் கல்வெட்டுப் பொறிப்பு உள்ளது அடுத்த ஐந்தாம் வரி பொரிந்து போய் உள்ளதால் இறந்தது யார் என்பதும் எவருக்கான நடுகல் இது என்பதும் தெரியவில்லை.
கங்க அரசன் மேல் படைநடத்தி வந்தவன் யார் என்பதும் தெரியவில்லை. வீரசாவு எய்தியவன் வாண அரசனின் சேவகனாகவே இருத்தல் வேண்டும். பல்லவன் விஷணு வர்மன் சிம்ம வர்மனுக்கும் மூதாதையாய் இருத்தல் வேண்டும்.பல்லவருள் சில மன்னர் விஷ்ணு கோபன், குமார விஷ்ணு என்ற பெயருடன் இருந்துள்ளனர் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.
தலைப்பின் கீழ் உள்ள புடைப்புச் சித்திரம் கொண்ட நடுகல் படம் இதே விண்ண பருமன் எனப்படும் விஷ்ணு வர்மனின் ஏழாம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டதாகும். இதன் கல்வெட்டுப் பகுதி இங்கு தனியே ஒட்டப்பட்டு உள்ளது. இதனை வரலாற்று ஆர்வலர் திரு பிரகாஷ் செங்கம் வட்டம் தண்ணாரம்பட்டிற்குச் சென்று படம் பிடித்து வந்துள்ளார்.
கோவிசைய வி / ண்நக பருமர்கு யா /ண்டேழாவது மேன்கு / பார் மேல் வாணகோ விண்ண / ன் தன் ஊரழிய விடேன் என்று
என்பது வரை உள்ள கல்வெட்டு எழுத்துகளை நூலில் உள்ள எழுத்துகளோடு ஒப்பிட்டு படித்து உள்ளேன்.இதில் தவறு இருக்கலாம். இதனை கல்வெட்டியலார் எவரேனும் திருத்தமாகவும் முழுமையாகவும் படித்துக் காட்டினால் கல்வெட்டு வாசகத்தின் பொருளை முழுமையையும்நன்றாக உணரலாம்.
இக்கல்வெட்டில் சில தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன அதோடு சில எழுத்துகள் பள்ளி பெற்று உள்ளன. எனவே இதன் காலம் 5 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வதில் தவறு இல்லை.
இறுதியாக கன்னட மொழியது என அறியப்படும் ஒரு நடுகல்லை ஒப்பிட்டு ஆய்வோம். இது கிருஷண்கிரி வட்டம் கன்னடபள்ளியில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை கலாக்சேத்திராவில் வைக்கப்படுள்ளது. இதன் காலம் 9 - 10 ஆம் நூற்றாண்டு என கொள்ளப்பட்டு உள்ளது.
சுவஸ்தி ஸ்ரீ - - - - யர கன்தேய செட்டிய மகன் / கன்னடம்பள்ளிய போறியம்காடோள் துறு கொள்ள / சத்த பலரோடே கண்ட கோட்டழி முட்டி.
போறியம் - காப்பு என்ற பொருள் கொண்ட போற்றி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாக இருக்கலாம்; துறு - தொறு; கொள்ள - கவர; சத்த - பட்டான், வீர சாவடைந்தான்; கண்ட - ஏற்பட்ட; கோட்டழி > (கோட்டம் - பகைமை , அழி - வருந்த, அழிய,) முட்டி - ஆய்தம் பிடித்து, போரிட்டு
சிற்றரசனாகவோ ஊர்த்தலைவனாகவோ இருந்த கந்தைய்ய செட்டி உடைய மகன் கன்னடம்பள்ளி உடைய காவற்கட்டுகொண்ட காட்டுள் தொறு என்னும் ஆநிரைகளைக் கவர முயன்ற போது எதிர்த்து நின்ற பலரோடு ஏற்பட்ட பூசலில் பகைவர் வருந்தி அழிய ஆய்தம் ஏந்திப் போரிட்டு வீர சாவு எய்தினான் என் உள்ளது.
சுவஸ்தி ஸ்ரீ என்பதைத் தவிர ஏனைய சொற்கள் யாவும் தமிழ் வழிப்பட்ட சொற்களே எனினும் சொற்றிரிபு மிக்குள்ளது. கந்தைய்ய என்பதில் ஐகாரம் ஏகாரமாகத் திரிந்துள்ளது. தமிழின் ஆறாம் வேற்றுமை உருபான உடைய என்னும் சொல்லில் யகரம் மட்டும் நிலைத்து மற்ற முன் இரண்டு எழுத்துகளும் தொலைந்து கன்னடத்தின் வேற்றுமை உருபு தோன்ற இடம் தந்தது எனலாம். உள் என்பது ஒள் > ஓள் என திரிந்து உள்ளது. பட்டான் என்பது சத்த என்று வழங்குகிறது. தொறு துறு எனத் திருந்து உள்ளது. அதே நேரம் தமிழுக்கே சிற்ப்பாக உரிய ழகரச் சொல் அழி இங்கு வழங்குவது என்பது தமிழ் கன்னட நாட்டு மக்கள் பேச்சில் 10 ஆம் நூற்றாண்டு வரைத் தன் பிடியை இறுக்கமாகக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றது. எனவே இதை முழுக் கன்னடமாக ஏற்க முடியவில்லை அதே நேரம் தமிழின் இலக்கண வேற்றுமை உருபு சிதைந்து உள்ளதால் இதை முழுத் தமிழாகவும் கொள்ள முடியவில்லை. ஆதலால் இதைக் கன்னடம் என்றும் தமிழ் என்றும் கூறாமல் அரைத்தமிழ் (Demi Tamil) என்று கொள்வதே பொருத்தமானது.
கருநாடகத்தில் அரசர்களும் மதத்துறையோரும் தமிழ் அல்லாத சமற்கிருத, பிரகிருத சொற்களைத் தம் கல்வெட்டிலும், செப்பேட்டிலும் அதிகமாகப் பயன்படுத்தியதால் கருநாடகத்தில் 10 ஆம் நூற்றாண்டில் வழங்கிய மொழிப் பற்றி துலக்கமாக அறியமுடியாத நிலை உள்ளது. எனினும் எளியோர் செய்த நடுகற்களில் அவ்வாறான மொழிக் கலப்பு இல்லாமல் அன்றாட வழக்குச் சொல் அதிகமாக வழங்குவதால் 11 ஆம் நூற்றாண்டு வரையான நடுகற்களின் மொழி அமைதியை நன்கு ஆராய்ந்து கன்னட மொழி உண்மையில் எபபோது தோன்றியது என்பதை வரையறுக்கலாம். ஏனெனில் கன்னடமும் தெலுங்கும் உருவாவதற்கு முன் அவை ஒரே மொழியாய் இருந்து பின் பிரிந்தன என்று சொல்லப்படுகின்றது. இது எப்போது நிகழ்ந்தது என்பதை நடுகற்களின் துணையோடு நிறுவலாம். கருநாடகத்தில் இதுகாறும் 2650 நடுகற்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றுள் கணிசமான கல்வெட்டு நடுகற்களும் அடங்கும். இவை இந்த மொழித் தோற்ற ஆய்விற்கு பெரிதும் உதவும்.
பன்மொழி அறிஞர் திரு. பிரபாத் ரஞ்சன் சர்க்கார் பழந்தமிழ் திரிந்த பின் அது வட அரைத் தமிழாகவும், தென் அரைத் தமிழாகவும் பிரிந்தது என்கிறார். வட அரைத் தமிழ் மேலும் திரிந்து பின்பு கன்னடம் தெலுங்கு எனப் பிரிந்தது என்று கூறி உள்ளார். அவர் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தான் மேற் சொன்ன கன்னட நடுகல் கல்வெட்டு மொழி அமைதி உள்ளது. எனவே கன்னட தெலுங்கு நடுகல் கல்வெட்டுகளின் மொழி அமைதியைக் கொண்டு கன்னடமும் தெலுங்கும் தனியே பிரிந்த காலத்தை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அவற்றின் தோற்ற காலத்தை துலக்கமாக அறிய இயலும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|