நேற்றிரவு ‘துணை’ என்ற குறும்படம் பார்த்தேன். வி.சபேசன் இயக்கியிருக்கிறார். ஜெர்மனியைப் பகைப்புலமாகக் கொண்ட ஒரு 17 நிமிடங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுள்ள படம். மாஸ்டர், சூரரைப் போற்று போன்ற கோடம்பாக்கக் கழிவுகளே இங்கு புகலிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இது போன்ற குறும்படங்கள் மனதை கொஞ்சம் ஆசுவாசம் அடையச் செய்கின்றன. ஒரு சிறிதளவு நம்பிக்கையினையும் ஏற்படுத்தி நிற்கின்றன.
திரைக்கதை எமது இரண்டாம் தலைமுறை இளைஞர்களைக் களமாகக் கொண்டு இயங்குகின்றது. வாலிப வயதில் உள்ள ஒரு பெண் தன் விதவைத் தாய்க்குத் திருமணம் செய்து வைக்க முற்படுவதும் அதனால் அவளது காதலில் ஏற்படும் சிக்கல்களும் கதையின் மையக்கருவாகத் திகழ்கின்றது. எமது புலம்பெயர் பெயர் படைப்புக்கள் அநேகமானவை தாயகம் குறித்த ஏக்கங்கள் பெருமூச்சுக்கள் குறித்த விடயங்களில் மட்டுமே கவனப்படுத்தப்பட்டுள்ள சூழலில் இங்கு புகலிட சூழலில் உருவாகியுள்ள புதிய சிக்கல்களை இது பேச முற்டுகின்றது.
எமது புகலிட வாழ்வு மிகுந்த சிக்கல்களும் சிரமங்களும் நிறைந்தவை. எமது பண்பாடும் சமூகமும் திணிக்கும் மரபார்ந்த விடயங்களை கைவிட முடியாமலும் அதேவேளை நாம் வாழும் இந்த மேற்கத்தேய சூழல் தரும் நவீன வாழ்வினைப் புறக்கணிக்க முடியாமலும் ஒரு ஊடாட்டமான வாழ்வினை நாம் வாழ்ந்து வருகின்றோம். அதே போன்றே எமது இளைய தலைமுறையினரின் வாழ்க்கையும் அமைந்து விடுகின்றது. தமது பெற்றோர்கள் தம்மீது திணிக்கின்ற கீழைத்தேய மரபிற்கும், தாம் வாழும் இந்த சமூகம் தம்மீது திணிக்கின்ற மேலைத்தேய வாழ்விற்கும் இடையிலான எல்லைகளைப் பகுத்துணர்வது அவர்களுக்கு இலகுவான விடயமன்று. அதினிமித்தம் அவர்களிடையே எழுகின்ற சிக்கல்களும் பிரச்சினைகளும் ஆயிரமாயிரம். அத்தகைய சிக்கல்களில் ஒன்றையே இக்குறும்படமும் பேசி நிற்கின்றது.
தனது விதவைத் தாய்க்கு மறுமணம் செய்ய முனையும் நாயகி மகிழினியும், இதற்கு ஊர்ச்சனம் என்ன சொல்லும் என்று சொல்லி அவளை விட்டுப் பிரியும், இன்னமும் எமது சமூக பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடாத நாயகன் சேயோனும் ஒரே தலைமுறையைச் சேர்த்தவர்களாக இருந்தபோதிலும் எதிர்மறையான சிந்தனையைக் கொண்டவர்கள். ‘பெண் ஏன் அடிமையானால்?’ என்ற பெரியாரின் நூலுடன் அடிக்கடி காட்சி தரும் சேயோனின் தாயார் ஒரு பெரியாரிய சிந்தனை கொண்டவளாக மகிழினியின் நோக்கத்தை, இந்த விதவை மறுமணத்தை ஆதரிப்பவளாக இருக்கின்றார். இது இந்த விதவைத் திருமணம் போன்ற முற்போக்கான விடயங்கள் உங்களது மேற்கத்தேய தேசங்களில் மட்டுமல்ல, அது எமது தேசங்களிலும் இருந்தவைதான் என்று எமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது போல் இருக்கின்றது. மேலோட்டமாகப் பார்க்கும்போது பெரியாரின் நூலினை தாயார் படிப்பது வேண்டுமென்றே உட்புகுத்தப் பட்ட விடயமாகவும், இக் குறும்படம் கூட எதோ ஒரு பிரச்சாரப் படம் போலவும் இருந்தாலும் எமது சமூகத்திற்கும் எமது அடுத்த தலைமுறையினருக்கும் இது கூற வேண்டிய பல விடயங்களைக் கூறி நிற்கின்றது. அந்த வகையில் இயக்குனர் வி.சபேசனிற்கு எனது வாழ்த்துக்கள்.
அநேகமானவர்கள் அறிமுக நடிகர்களாக இருந்த போதிலும் ஓரளவு சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் மகிழினி, சேயோனாக நடித்தவர்களின் நடிப்பு இன்னமும் சிறப்பு. வளங்கள் மிகக் குறைந்த எமது புகலிடச் சூழலிலும் ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்ப விடயங்களிலும் இயக்குனர் தமது கவனத்தைச் செலுத்தி இருக்கிறார். ஆயினும் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, இயக்கம் என்று பல துறைகளையும் சபேசன் தானே மேற்கொண்டது கொஞ்சம் நெருடலாக இருந்தது. எமது சூழலில் இத்தகைய துறைசார் கலைஞர்களைக் கண்டடைவதும் சிரமமான காரியமே.
சரி, ஒரு நல்ல குறும்படம் ஒன்று வந்துள்ளது. பார்க்கின்றோம். அது குறித்து பேசுகின்றோம். ஆயினும் எமது புகலிடத் தமிழ் சினிமா சரியான பாதையில் பயனிக்கின்றதா என்ற கேள்வி எழும்போது கிடைக்கின்ற பதில் கொஞ்சம் வேதனை தருவதாகத்தான் உள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பேயே அருந்ததியின் ‘முகம்’ ஜீவனின் ‘எச்சில் போர்வை’ போன்ற நல்ல படங்களின் வரவினைக் கண்டடைந்திருந்தது எமது புகலிடத் தமிழ் சினிமா. அன்றும் மனித, தோழி நுட்ப வளங்களின் பற்றாக்குறை இருந்தது. இன்றும் அது தொடர்கின்றது. அன்று 20 வருடங்களுக்கு முன்பு எத்தகைய விமர்சனங்களை கேள்விகளை இப்படங்கள் மீது வைத்தோமோ அதே விமர்சனத்தையே நாம் இன்றும் இது போன்ற படங்களுக்கும் வைக்கவேண்டிய உறைநிலையிலேயே இருக்கின்றோம். இவ்வகையில் நாம் பயணிக்கும் பாதை சரியானதுதானா என்ற விடை தெரியாத கேள்வி என்னுள்ளே. இதற்கான பதிலை ஒரு தனிமனிதனான சபேசன் போன்ற இயக்குனர்களிடம் இருந்து மட்டுமே கோர முடியாது. ஒட்டு மொத்த சமூகமுமே அளிக்க வேண்டிய பதில் இது,
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Next• •>• |
---|