அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன.
அவர் 1950-1960;ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமையின் விகார முகத்தை, வக்கிரமான நடவடிக்கைகளை எதிர்த்த பல முற்போக்கு படைப்பாளிகளில் முக்கியமானவராகும். அவரின் காணொலி ஒன்றில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் தாக்கத்தால் அவர் பாடசாலைப் படிப்பையே பன்னிரண்டு வயதில் அதாவது 1939ம் ஆண்டு துறந்து வெளியேறியதைப் பற்றிச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, அன்று யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு 1947ம் ஆண்டு முதல் அத்திவாரமிட்ட அண்ணல் மு. கார்த்திகேசு மாஸ்டரின் சமத்துவத்திற்கான முக்கிய வேலைகள் யாழ்ப்பாணத்தில் பரந்தபோது அதனால் ஈர்ப்பு வந்து இடதுசாரிப் பணிகளில் முக்கிய பங்கெடுத்த சரித்திரத்தைச் சொல்லியிருக்கிறார்.
கார்த்தகேசு மாஸ்டரின் கருத்துக்களில ஈர்ப்பு கொண்டவர்களில் நானும் அடங்குவேன். திரு கார்த்திகேசு மாஸ்டரைப் பற்றி,அவரின் மாணவராகவிருந்த, பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது,அக் கருத்துக்கள்,சமத்துவம்,மனித நேயம் என்பவற்றிற்கு மிக முக்கியமானவையாக எனது சிந்தனையில் பதிந்தன.அந்த சிந்தனைக்கு மதிப்புக் கொடுத்து, லண்டனில் புலம் பெயர் முதல் தமிழ் நாவலாக 'லண்டன் முரசு' பத்திரிகையில் பதிவாகிய எனது,முதலாவது நாவல்,'உலகமெல்லாம் வியாபாரிகள்' கதாநாயகனுக்குக் 'கார்த்திகேயன்' என்ற பெயரை வைத்தேன். இலங்கையில் வெளியிடப் பட்ட முதலாவது புலம் பெயர் தமிழ் நாவலான 'ஒருகோடை விடுமுறை' நாவலின் கதாநாயகிக்குக் 'கார்த்திகா' என்ற பெயரைக் கொடுத்தேன். கார்த்திகேயனைத் தெரிந்தவர்களுக்கு,டொமினிக் ஜீவா போன்றவர்கள் எப்படியான முற்போக்குப் பரம்பரையைக் 'குருகுலமாகக்' கொண்டிருந்தார்கள் என்று புரியும்.
திரு டொமினிக் ஜீவா அவர்களின்; தந்தை அவிராம் பிள்ளை,தாயின் பெயர் மரியம்மா.தாய்தகப்பன் இவருக்கு இட்ட பெயர் டொமினிக். இந்திய இடதுசாரி ஆளுமையான திரு. ப. ஜீவானந்தத்தைச் சந்தித்து,அவரில் கொண்ட பெருமதிப்பால் தனது பெயருடன் 'ஜீவா' என்ற பெயரையும் இணைத்துக் கொண்டார் என்று சொல்லப் படுகிறது.
1950ம் ஆண்டுகளில் இந்திய வியாபார இலக்கியத்தின வளர்ச்சியை, என்னவென்று ஆளுமையும் அறிவும், சமத்துவக் கொள்கைகளும் கொண்ட யாழ்ப்பாண இலக்கியங்கள் அடித்து நொறுக்கி மக்களை விளிப்படையச் செய்தது என்ற தகவல்கள் 1960ம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் திரு பாலசுப்பிரமணியம், திரு டொமினிக் ஜீவா, செ. யோகநாதன், நீர்வை பொன்னையன், போன்றோரை நேரில் காணும் வரைக்கும் எனக்குத் தெரியாது. அந்தக் காலகட்டத்தில் கணேசலிங்கம், டானியல், பெனடிக்ட் பாலன் போன்றேரின் எழுத்தைப் பாலசுப்பிரமணியம் அறிமுகம் செய்த காலத்தில்,பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் மல்லிகை வாங்கி அதைப் படித்த காலத்தில், கையில் தனது புத்தகங்களுடன் திரியும் ஜீவாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் டொமினிக் ஜீவாவின் சமூகம் சார்ந்த,சமத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய, சாதிக் கொடுமைகளுக்கு எதிரான எழுத்துக்களுக்கு அறிமுகமானேன்.
அக்கால கட்டத்தில்,மிகவும் கட்டுப்பாடான கிராமியச் சூழ்நிலையில் கிழக்கிலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு வெளியுலகம் பற்றியோ,பல தரப்பட்ட அரசில் கருத்துக்கள் பற்றியோ அறிவு அதிகமில்லை.1960ம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் ஆண்டு நான் மருத்துவத் தாதியாகப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் எனக்குப் பிடித்த இடங்களில் சில இடங்களில் பூபாலசிங்கம் புத்தக நிலையம் மிக முக்கிய இடம் வகித்தது. அங்கு இலங்கை இந்திய இலக்கியப் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். மல்லிகை 1966ம் ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கியது. அதை ஆவலாகத் தேடிப் படிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தியானேன்.
'மல்லிகைப் பத்திரிகைக்கு அப்போது, 'எழில் நந்தி' என்ற புனைப் பெயரில் ஒரு கதையோ அல்லது கட்டுரையோ அனுப்பியதாக ஞாபகம். தலையங்கத்தின் பெயர் தெரியாது. அக்கால கட்டத்தில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் பெருந்தீயாகச் சுவாலையாககிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சாதிக் கொடுமையின் கோரம் ஆத்திரத்ததையுண்டாக்கியது.அக்கால எனது எழுத்தும் யாழ்ப்பாண சமுதாயத்தில் நான் கண்ட கொடுமையான சாதிக் கொடுமைகள் பற்றியதாக இருந்தது.
1966ம் ஆண்டு,தொழிலாளர் மாதமான வைகாசியில்,பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்த 'வசந்தம்' பத்திரிகைக்கு எனது கதை ஒன்ற கேட்டு, வசந்தம் பத்திரிகை செ.யோகநாதன் கடிதம் எழுதியிருந்தார்.அதற்கு,'சித்திரத்தில் பெண் எழுதி' என்ற கதையை,' எழில் நந்தி' என்ற புனை பெயரில் எழுதினேன். ஒடுக்கப் பட்ட சாதிப் பெண்ணை உயர்ந்த சாதி ஆண்மகன் வஞ்சகமாகக் கைவிட்டதால் அவள் தன்னைத்தானே எரித்துக் கொண்டதைப் பற்றிய கதை.
அக்கால கட்டத்தில்,யாழ்ப்பாணம் பெரியகடை கஸ்தூரியார் வீதியில் உள்ள தனது கடைக்கு முன்னால் திரு ஜீவா அவர்களை அவ்வப்போது சந்தித்த ஒன்றிரண்டு வார்த்தைகள் அவரின் 'மல்லிகை; இதழ்கள் பற்றிப் பேசியபோது, 'வசந்தத்தில்' வந்த எனது சிறுகதையை அவர் பாராட்டியபோது மிகவும் மகிழ்ந்தேன்.அக்கால கட்டத்தில் சாதிக் கொடுமைகை;கு எதிராக எழுதிய முதலாவது பெண் நான் என்றுதான் நினைக்கிறேன்.
ஒரு ஒடுக்கப் பட்ட பெண்ணின் குரலை எனது படைப்பில் அவர் கண்டு நெகிழ்ந்ததை .அவரின் குரல் சொல்லியது.'ஏன் எழில் நந்தி' என்ற புனை பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீ;ர்கள்?' என்று ஜீவா கேட்டார்.ஏனென்றால் வைத்திய கலாநிதி திரு சிவஞானசுந்தரம் அவர்கள்,இலக்கியத் துறையில் பல படைப்புக்களைப் பிரசுரித்தவர். அவர் தனது புனை பெயரை' நந்தி' என்ற வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.
தாதிமார் பாடசாலையில் எங்களுக்கு ' அனட்டமி அன்ட் பிஸியோலஜி பாடம் எடுக்கும் 'நந்தி'சிவஞானசுந்தரம் அவர்கள்; பாடம் எடுக்கும்போது,' உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான விதத்திற்தான் மனிதனின அத்தனை உள்,வெளி உடம்பு அவயவங்கள் படைக்கப் பட்டிருக்கின்றன. ஒரே மாதிரிதான் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. நாடிகள் அடிக்கிக்கின்றன. மூச்சு வந்து கொண்டிருக்கின்றன. இருதயம் இடது பக்கமும். நுரையீரல்கள் இருபக்கமும் என்று அத்தனை உறுப்புக்களும் ஒரே மாதிரி மனிதனை இயங்கப் பண்ணுகின்றன' என்ற வைத்திய உண்மையைப் படிப்பித்த அதே வாயால்,' இயற்கை படைத்த நியதியைத் தெரியாத மனிதன் தனது சுய நலத்திற்காகத் தன்னைத் தானே உயர்த்தி இலாபம் தேட,அடுத்தவனை அடக்கப்; பல வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறான்' என்றார்.
அவரின் அந்த வார்த்தைகள்,மருத்துவ உலகத்திற்கப்பாலான கொடுமையான சமூக அமைப்பு நிலைகள் பற்றி என்னைச் சிந்திக்கப் பண்ணின. பரந்த உலகம் தெரியாத ஒரு இளம் பெண்ணுக்கு மனித உடலமைப்பின் மூலம் கொடுமையான வர்க்க,சாதி. மத. இன அரசியலை மிகவும் இலகுவாக வெளிப்படுத்தினார்.
'நந்தி என்று எழுதிக்கொண்டிருக்கும் டாக்டர் திரு. சிவஞானசுந்தரத்தில் அளப்பரிய மதிப்பு வந்தது.அதனால் அவரின் பெயரைச் சார்ந்த மாதிரி 'எழில் நந்தி' என்ற பெயரை வைத்திருக்கிறேன்' என்று டொமினிக் ஜீவா அவர்களுக்குச் சொன்னேன்;. அக்கல கட்டத்தில்,டொமினிக் என்ற பெயருடன் சேர்ந்திருந்த 'ஜீவா' எனபதன் சரித்திரத் தொடர்பு எனக்குத் தெரியாது.
1966ம் ஆண்டு கால கட்டத்தில் எங்கள் தாதிமார் பாடசாலைப் புத்தகத்தை வெளியிடுவதில் நான் ஆசிரியையாயவிருந்தேன். அந்த நூல் வெளியிடத் தேவையான நிதிக்கான விளப்பரத்தைத் தேடி, யாழ்ப்பாணத்தின் பிரபல கடைகளான 'டையரம்ஸ், ரொலரம்ஸ், 'லலிதா நகை மாளிகை' போன்ற ஸ்தாபனங்களுக்குச் செல்லும் கால கட்டத்தில் திரு ஜீவா அவர்களைச் சந்தித்து எங்கள் பத்திரிகை பற்றிச் சொன்னேன்.
எந்த விதமான அனுபவங்களுமின்றி, ஒரு பத்திரிகை ஆசிரியையாக அலையும் எனக்கும் எனது சக மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்.
'வசந்தத்தில்' எனது கதை வந்த பின் திரு பாலசுப்பிரமணியம் என்னுடன் தொடர்பு கொண்டு இடதுசாரிப் புத்தகங்களை அனுப்பத் தொடங்கியபின் 'மல்லிகை' இதழ்களில் வரும் இந்த முற்போக்கு இடதுசாரி;க் கருத்துக்களை ஆழமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி;னேன்.
'மல்லிகை'யின் கருத்துக்கள் என்னுள் ஏற்கனவே இருந்து பல கேள்விகளுக்குப் பதில்களைத் தந்தன. ஒரு சமுதாயத்தில் ஒடுக்கப் பட்ட மக்கள் கொடுமையாக நடத்தப்படும்வரை,அந்தச் சமுதாயம் ஒருநாளும் முன்னேறாது என்பதை 'மல்லிகை' மூலம் தெரிந்து கொண்டேன். 1960மு; ஆண்டின் பின் பகுதியில் சாதிச் சண்டைகள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நடந்தன.
1967ம் ஆண்டு,தொழிலாளர் மாதமான வைகாசி- ஆனி இதழில் 'மல்லிகையில்' எனது 'ரத்தினம் அப்பா' என்ற சிறு கதை வெளிவந்தபின்,சாதிகளுக்கெதிரான எனது கருத்துக்கள் முற்போக்குவாதிகளால் பாராட்டப் பட்ட,அத்துடன் முற்போக்கு இலக்கியத் துறையிலுள்ள பலருக்குத் தெரிந்த பெண் எழுத்தாளராகக் கருதப் பட்டேன். இலங்கையில் மேட்டுக்குடியினரால் நடத்தப் பட்ட பல பத்திரிகைளில் ' 'ரத்தினம் அப்பா' போன்ற அப்படியான ஒரு கதையை அக்கால கட்டத்தில், எந்த வர்த்தக பத்திரிகையும் வெளியிட்டிருக்காது என்ற நம்புகிறேன். எனக்கு வந்த பாராட்டுக் கடிதங்களைப் பற்றி ஜீவா அவர்களுக்குச் சொல்லி,எனது கதைலையத் தயக்கமின்றிப் பிரசுரித்தற்கு நன்றி சொன்னேன்.
மனித உரிமையை மீறும், மிகவும் கொடுமையான யாழ்ப்பாணத்து சாதிக் கொடுமைக் கெதிரான எனது எழுத்துக்கள் தொடர எனக்கு ஆர்வம் தந்த திரு ஜீவா அவர்கயை நான் மறக்க மாட்டேன். எனது கருத்துக்களை உணர்ந்து. நான் ஒரு 'சின்னப் பெண்' என்றும் பார்க்காமல், கஸ்தூரியார் வீதியில் என்னுடன் பேசும்போது, 'இலக்கியத்தில் மக்களுக்காகச் சொல்ல வேண்டியவைகளையம் பதியவேண்டும்' என்பார். அவர்,தனது இலக்கியத்தின் மூலம்,மிகவும் உயர் நிலையில் வைக்கப்பட வேண்டிய பல விடயங்களை ஒட்டு மொத்த மக்களுக்கும் சொல்லியிருக்கிறார் என்பதற்குஇ 1960ல் சாகித்திய அக்கமி பரிசு பெற்ற ' தண்ணீரும் கண்ணீரும்' பதிவைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
அக்காலக் கட்டத்தில் சங்கானையில் நடந்த சாதிக் கலவரம் வட இலங்கையைமட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் உலுக்கியது. அந்த நிகழ்வுகள் மல்லிகையில் விளக்கமாக வெளி வந்து கொண்டிருந்தன. அப்போது,மருத்துவத் தாதியான நான்,உயர்சாதியினரால் அடிக்கப் பட்டு, ஒடிக்கப் பட்டு வைத்தியசாலைக்கு வந்த ஒடுக்கப் பட்ட மக்களுக்குப் பராமரிப்புச் செயதுகொண்டிருந்தேன்.
சங்கானைக் கலவரத்தின் பின், மாவிட்டபுரம் கோயிலுக்குள் ஒடுக்கப் பட்ட மக்களைச் செல்லவிடாது ' மேட்டுக்குடியினர்' போலிசாரின் உதவியுடன் அராஜகம் செய்தனர். அந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவனான ஜீவா, கோயில் மண்டபத்தில், ஒடுக்கப்பட்ட சைவசமயத் தோழர்களுக்காகப் போராடியதைப் பற்றிச் சொல்கிறார் அப்போது, கொழும்பு பல்கலைக் கழகங்களிலிருந்து பாலசுப்பிரமணியம் போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகப் போராட யாழ்ப்பாணம் வந்தார்கள். அந்த நேரம்,இலங்கையில் இடதுசாரிகள் இரண்டாகத் துண்டுபடவில்லை.
சாதி ஒடுக்குமுறை பற்றி மட்டுமல்ல, சமுகம் சார்ந்த பல விடயங்களை எழுதியதால்,அக்கால கட்டத்தில் 'மல்லிகை' ஒரு இடதுசாரிப் பத்திரிகையாகவில்லாது,''மக்கள்' பத்திரிகையாகப் பெயர் எடுத்தது.
அதன் பின், இலங்கையில்,இடதுசாரிகள் இரண்டுபட்டார்கள்.1970ம் ஆண்டு கடைசியில்,நாங்கள்; லண்டனுக்கு வந்தபின் ஜீவாவுடன் ஒரு தொடர்பும் இருக்கவில்லை. 2009;ம் ஆண்டு,நானும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் டாக்டர் நடேசனும் கொழும்புக்குச் சென்றபோது அவரைச் சந்தித்தோம்;. புலிகளின் புலனாய்வுத் துறைத்தலைவர் பொட்டு அம்மானால் தான் கொழும்புக்கு நகரவேண்டியதைச் சொன்னார். சங்கானைக் கலவரத்தை எனது, 'ஒருகோடைi விடுமுறை' நாவலில் குறிப்பிட்டதைச் சொன்னேன். சந்தோசப் பட்டார்.
முற்போக்கு இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த, திரு. ஜீவா அவர்கள், 2011ம் ஆண்டு,கொழும்பில் நடத்த அகில உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை ஒழுங்கு செய்வதிலும் முன்நின்று உழைத்தவர்களில் ஒருத்தர் என்று ஞானம் பத்திரிகை ஆசிரியர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்வைப் பகிஸகரிக்கச் சொல்லித் தமிழ்த் தேசியம் வழக்கம்போல் கூக்குரலிட்டாலும் அந்த வைபவம் பிரமாண்டமான வெற்றியைத் தந்தது.
நானும் நடேசனும்; அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது எங்களைக் கண்டுதிரு ஜீவா அவர்கள் மிக மிகச் சந்தோசப் பட்டார்
அவரின் அயராத உழைப்பு என்னைச் சந்தோசப்படுத்தியது. இலங்கை முற்போக்கு இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருத்தரான ஜீவாவின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததியினருக்கும் மிகவும் பிரயோசனமாகவிருக்கும் என்ற நம்புகிறேன்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Next• •>• |
---|