பெருநகரங்கள் நமது காதலிகள் போன்றவை. காதலியின் அகத்தையும் புறத்தையும் முழுமையாகத் தெரிந்து கொண்டோம் என நினைத்து திருமணத்திற்குத் தயாராகும் பொழுது அவர்கள் புதிதாக மாறிவிடுவார்கள்.
உங்களது பார்வையில் லியோனிடோ டாவின்சியின் ஓவியமாகத் தெரிந்தவர்கள் பின்பு , பிக்காசோவின் அரூப ஓவியமாக தெரிவார்கள். புதிய புதிய அர்த்தம் கொள்ளவைப்பார்கள். நீங்கள் பழைய காதலியைத் தேடும்போது அவர்கள் அங்கிருக்கமாட்டார்கள்.
ஆச்சரியம் , ஆதங்கம், ஏமாற்றம் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. அது இயல்பானது. பெரிய நகரங்களும் அப்படியே. மாற்றங்கள் , மாறாது தொடரும்
இற்ராலோ கல்வினோவின் ( Italo Giovanni) இன் விசிபிள் சிட்டிஸ்( Invisible Cities) என்ற நாவலில், இத்தாலியப் பயணியான மார்கோபோலோ(Marco Polo), வயதாகிய சீனப்பேரரசர் குப்பிளாய் கானுடன்(Kublai Khan) நகர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். குப்பிளாய் கான் கேட்டுக்கொண்டிருந்து விட்டு, இறுதியில் வெனிஸ் நகரப்பற்றிச் சொல்லும்படி வற்புறுத்திக் கேட்பார் . அப்பொழுது மார்கோ போலோ, இதுவரையும் நான் வெனிசை பற்றியே பேசினேன் என்பார்.
நகரங்கள் உருமாற்றமாவது மட்டுமல்ல. வினோதமானவையும்தான். நேரத்துக்கு ஒரு உடை மாற்றுவதுடன் இப்படித்தான் நிறமிருக்கும் எனச் சொல்லமுடியாத பச்சோந்திகள். ஒரு விதத்தில் ஓடும் நதியையும், வீசும் காற்றையும் அவைகளுக்கு ஒப்பிடலாம். என்ன கொஞ்சம் மெதுவான மாற்றங்கள் நகரத்தில் நடைபெறும்.
பிரான்சிய எழுத்தாளராகிய பால்சாக் (Balzac) , பாரீஸையும், சார்ள்ஸ் டிக்கன்ஸ் இலண்டன் நகரையும் அவர்களது நாவல்களில் ஓவியமாக வரைந்துள்ளார் . சார்ள்ஸ் டிக்கன்ஸின் (Charles Dickens) 19 ஆம் நூற்றாண்டு இலண்டன் பற்றிய சித்திரிப்புகளை வாசிக்கும்போது , எனக்குச் சில இந்திய நகரங்களை நினைவுக்குக் கொண்டு வரும். கைத்தொழில் புரட்சியின்போது தொடங்கிய தொழிற்சாலைகளில் வேலையைப் பெறுவதற்காக , நகரத்திற்கு மக்கள் வந்து குவியும்போது இடவசதிகளற்று வறுமையில் பல குடும்பங்கள் கூட்டமாக வசிக்கும் வர்ணனைகளை அதில் தத்துரூபமாக காணமுடியும்.
நிலக்கரி அடுப்புகள் எரிந்து வீட்டின் சிம்மினிகளுடாக வரும் புகையுடன் கொட்டிய பனியால் , வீதியில் நடக்கும் மனிதர்கள் அழுக்கு நிறமாவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நகரங்களின் அமைப்புகளைப் பல நாவல்கள் சித்திரிக்கின்றன .
1990 களில் நான் பார்த்த ஆஸ்திரேலியா மெல்பன் மாநகரம் எனது அசோகனின் வைத்தியசாலை நாவலில் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்றுள்ளது.
நான் வசித்த யாழ்ப்பாணம் , கண்டிபோன்ற இடங்களை நகரங்களென நினைத்துக் கொள்ள முடிவதில்லை. நகரங்களுக்குரிய எந்தச் சிறப்புகளும் அவைகளுக்கில்லை. பெரிய கிராமங்கள் என்றே அவற்றைச் சொல்ல முடியும்.
சென்னையில் மூன்று வருடங்கள் இருந்தபோது, அங்கு நகரத்திற்கான கூறுகளை முதல் முதலாக என்னால் பார்க்க முடிந்தது . வட சென்னையின் பல சந்துகள், வீதிகள், பகுதிகளை நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் மற்றைய வாகனங்களிலும் கடந்திருக்கிறேன்.
அவுஸ்திரேலியாவிலிருந்து சில வருடங்களுக்குப் பின்பு மீண்டும் சென்னை சென்ற போது, நாங்கள் அங்கே முன்பிருந்த வீட்டையோ, மகன் படித்த பாடசாலையையோ என்னால் இலகுவில் கண்டு பிடிக்க முடியவில்லை.
சமீபத்தில் மெல்பன் மாநகரத்திற்குச் சென்றபோது நான் முப்பது வருடங்களுக்கு முன்பார்த்த பகுதிகளைத் தேடினேன். கிடைக்கவில்லை.
மெல்பனில், எனது வீடு இருபத்தைந்து கிலோமீட்டர்கள் வெளியே உள்ள புற நகரமொன்றான போதிலும், எனது அதிர்ஸ்டவசமாக முதலாவது வேலை கிடைத்த இடம் நகரின் மத்திதான். அக்காலத்தில் மதியத்தில் கிடைக்கும் இடைவெளியை நானும் எனது நண்பர்களும் மெல்பன் நகரை ஆற்றில் விடப்பட்ட மீன்களைப்போல் பயன் படுத்திக்கொண்டோம்.
எனது நண்பர்களில் பலர் போர்த்துக்கல், இங்கிலாந்து, இத்தாலி, குரேசியா எனப் பல் தேசத்தவர்களாக இருந்ததால் மதிய உணவுகளுக்கு வித்தியாசமான கடைகளைத் தேடுவோம். மெல்பன் அந்த விடயத்தில் ஒரு பல் கலாசார உணவுச் சுரங்கம். ஒவ்வொரு சந்தியிலும் வித்தியாசமான நாட்டவர்களது உணவுக்கடைகள் இருக்கும். என்றைக்குமே மதியத்தில் மதுபானம் அருந்தாத நான், இந்த கடைகளுக்குச் சென்று அருந்திவிட்டு மீண்டும் வேலைக்கு வருவேன் .
நண்பர்களில் ஒருவர் எனது மேலதிகாரி என்பதால் தயக்கமின்றி குறைந்தது கிழமையில் மூன்று நாட்கள் மதிய நேரத்துத் தீர்த்தத்தை அருந்திவிட்டு உணவுண்போம். எங்களோடு ஒரு தச்சுவேலை செய்யும் இத்தாலியர் சேர்ந்து கொண்டார். அவருடன் சேர்ந்தால் இத்தாலிய உணவகங்கள் உள்ள கால்ரன் தெருவில் உணவின் முன்பும் மது அருந்திய நாம் அதன்பின்பும் சம்புக்கா என்ற மதுபானம் அருந்திய பின்பே எழுவோம்.
அக்காலத்தில் மெல்பனின் கிழக்குப்பகுதிகள் செல்வந்தர்களால் நிரம்பியிருந்த போதிலும், மேற்கிலும் வடக்கிலும் தொழிலாள வர்க்கத்தினர் இருந்தார்கள். மெல்பனில் பல காலணி, ஆடை, கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தகாலம், இப்பொழுது இறந்தகாலமாகிவிட்டது.
2000 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் கார்கள் தயாரிப்பது குறைந்து, இப்பொழுது எதுவுமில்லை. காலணி, துணிகள் , மின்சார பாவனைப் பொருட்களைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம் . தொழிலாளர்கள் பலர் 2000 இல் வந்த விற்பனை வரியால் சிறு முதலாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்குப் பகுதியான மெல்பன் துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் அக்காலத்தில் மதுபான விடுதிகளும் விபசார விடுதிகளும் இரவு பார்கள் என ஏராளமாக இருந்தன. மதியத்தில் நடந்து போகும்போது இரண்டு விபசார விடுதிகளைக் காணமுடியும் .
எப்படித் தெரியும் ?
வாசலில் மஞ்சள் விளக்கு எரியும்.
“ ஏன்டா மதியத்தில் விளக்கு எரிகிறது ? “ எனக்கேட்டபோது எனது நண்பர்கள் என்னை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் பார்த்தபோது எனது அறியாமையை உணர்ந்து, சிரித்து விட்டு, பின்பே பதில் சொன்னார்கள்.
இதைவிடப் பல மதுபான விடுதிகள் அக்கால துறைமுகத் தொழிலாளர் தாகசாந்தி செய்யும் தண்ணீர்ப் பந்தல்கள். பிற்காலத்தில் பல இன மக்களது உணவுக்கடைகள் வந்ததால் அவற்றின் வியாபாரம் படுத்தது. அப்படி இந்த மதுபான விடுதிகளில் வியாபாரம் குறைந்த நேரத்தில், பியர் வினியோகத்தில் மேலாடையற்ற பெண்களை இறக்குவார்கள். அப்பொழுது ஆரம்ப நாட்களில் தேர்த்திருவிழாவாகக் கூட்டமிருந்தாலும் சிறிது காலத்தில் அலுத்துவிடும். அந்த மதுபான விடுதி இழுத்து மூடப்படும் .
நான் அங்கிருந்த ஆறு வருடங்களில் குறைந்தது நான்கு மதுபான விடுதிகளாவது பூட்டப்பட்டன. இதை விட மதியத்தில் பெண்களின் போல் நடன விடுதிகளும் இருந்தன . இவைகள் பெரும்பாலும் மாபியாக்களினால் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க நடத்தப்படுபவை. ஜி எஸ் ரி 2000 ஆம் ஆண்டு வந்தபோது கறுப்புப் பணம் குறைந்துவிட்டது.
பெரிய நகரம் பகலில் மட்டுமல்ல, இரவிலும் மக்களால் நிறைந்திருக்கவேண்டுமென்றால் இரவின் தேவைகளுக்கான சேவைகள் தேவை . இப்படியான விடயங்கள் நடப்பதால் டாக்சி சாரதி, நடனமாடும் பெண் , வாசலில் சில பவுன்சர் எனப் பலருக்குத் தொழில் கிடைக்கிறது . பகலில் ஒழுக்கமான மனிதர்கள் சூரியன் மறைய ஒழுக்கத்தை மறந்துவிடுவார்கள்.
எல்லோரும் ஒழுக்கமாக இருந்தால் நகரமும் ஒழுக்கமான மனிதர்கள் போல் அந்தியில் உறங்கி விடும். நான் ஜெனீவா சென்றபோது பகலில் உலகத்தின் மனித உரிமைகளின் தலைநகரமான விளங்கும் ஜெனிவா, எப்படி இரவில் மட்டுமல்ல காலை எட்டு மணிவரையும் விழித்திருந்ததைப் பார்த்தேன். கறுப்பு மஞ்சள் வெள்ளை பழுப்பு என வண்ணங்களாக பெண்கள் தெருக்களில் நிற்பார்கள்.
மெல்பன் பூங்காக்களின் நகராக வனப்புடன் தெரிவது பகல் நேரத்தில் மட்டுமல்ல, இரவு நேரத்திலும்தான். அழகான நகர். மற்றைய ஐரோப்பிய அமெரிக்கா பெருநகர்களைப்போல் அல்லாது இங்கே குற்றச் செயல்கள் குறைவு. நான் திரிந்த காலத்தில் கசினோ மட்டும் இருக்கவில்லை. பிற்காலத்தில் கசினோ பலரையும் உள்ளே இழுத்தது மட்டுமல்ல, பல கடைகள் தியேட்டர்கள் உணவகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்ததால், பல தரப்பட்ட மற்றைய வியாபாரங்களை ராட்சத மிருகமாக விழுங்கிவிட்டது. கறுப்புப் பணத்தை கசினோவில் கொண்டுபோய் நேரடியாக வெள்ளைப்பணமாக மாற்ற முடியுமென்றால் ஏன் பார்களையும் மதுசாலைகளையும் திறக்கவேண்டும் ?
கடந்த இருபத்தைந்து வருடங்களாகப் மெல்பன் புறநகரில் வேலையாக இருந்தாலும், இடையிடையே செல்லும்போது நான் பார்த்த இடங்கள் மாறுவதையும் அழிவதையும் புதிதாக உருவாகுவதையும் காணமுடிந்தது .
நான் முன்பு பார்த்த மேற்கு மெல்பன் , டொக்கியாட் எனப்புதிய நகரமாக உருமாறிவிட்டது. பெரிய கட்டிடங்களும் கடலருகே உணவகங்களும் மாடிக் குடியிருப்புகளும் உருவாகியிருந்தன.
தற்போது எனது மகள் நகரத்தில் வாழ்வதால் , ஒருநாள் மனைவியுடன் அங்கே சென்றேன். மனைவி மகளுடன் பேசிக்கொண்டிருந்த போது, எனது மனம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அங்கிருந்த பகுதிகளைத் தேடியது. என்னைப் பொறுத்தவரை முதலாவதாக கிடைத்த வேலை நண்பர்கள் மற்றும் புதிய உலகைத் தேடிய வயது என்பதால் அக்காலம் பொற்காலமாக இருந்தது. அக்கால மனதின் பதிவுகள் அழியாதவை. ஆனால் காட்சிகள் மாறிவிட்டன.
அக்காலத்தில் இத்தாலியர்களும் லெபனான்காரர்களும் ஒரு சில வியட்நாமியர்களும் இருந்த விக்டோரியா சந்தை தற்பொழுது சீனர்கள் வசம் போய்விட்டது. சில ஆஃப்கானிஸ்தானியர்கள் தெரிந்தார்கள். பெரும்பகுதி கொரோனாவால் வெறுமையாகத் தெரிந்தது. விற்பவர்களும் வாங்குபவர்கள் அதிகமில்லை. ஒரு சில காபி கடைகளிலும் உணவுக்கடைகளிலும் இளையவர்கள் இடைவெளி விட்டு நின்றார்கள்
நாங்களும் ஒரு கடையில் காபி குடித்துவிட்டு அந்த மார்க்கட்டின் பின்புறத்திற்குச் சென்றோம். கட்டிடங்கள் மத்தியில் ஒரு இடம் காலியாக இருந்ததை பற்றி அங்கே கேட்டபோது, “ சிறிது தூரத்தில் பழைய மயானமுள்ளது “ என எனது மருமகன் சொன்னார். ஆதிவாசிகளிடம் புகையிலையும் மற்றும் சிறிய தொகையையும் கொடுத்து மெல்பனை எழுதி வாங்கிய பாட்மனின் சவக்குழியும் அங்குள்ளதால், அந்த இடத்தில் இன்னமும் அடுக்கு மாடிக்கட்டிடங்கள் வரவில்லை. உயரமான கிரேன்கள் தங்கள் வேலைக்குப் பொறுமையாகக் காத்து நின்றன.
விக்டோரியா மார்க்கட் அருகே, இன்னமும் காலத்தை எதிர்த்து சவால் விட்டபடி சில தொடர் வீடுகள் உள்ளன. அதேபோல் கிங்ஸ் வீதிக்கு மேற்குப்பகுதியிலும் சில வீடுகள் இருந்தன. மற்றைய பகுதிகளில் புதிய கட்டிடங்கள் வந்துவிட்டன. புதிய கட்டிடங்கள், பொலிஸ் தலைமை நிலையம் இருந்த துறைமுகம் பகுதி சில முகமூடி மனிதர்களைத் தவிர்த்து கொரோனாவால் வெறுமையாகத் தெரிந்தது. எஞ்சியிருந்த ஒரு சில மதுபான விடுதிகள் பூட்டப்பட்டிருந்தன.
அவை மீண்டும் திறக்கப்படுமா..? என்பது சந்தேகமே.
பல்கலைக்கழகமும் வைத்தியசாலைகளும் பல கட்டிடங்களைக் குட்டி போட்டபடி சுற்று வட்டாரத்தை ஆக்கிரமித்து, தங்களைப் பெரிதாக்கிக் கொண்டிருந்தன . தற்போதைய நகரத்தினருக்கு அவையே தேவையாகிவிட்டது.
மெல்பன் கிரிக்கட் மைதானமும் ரயில் நிலையங்களும் மாறவில்லைத்தான் . ஆட்சென்ரர் கலை நிகழ்ச்சிகள் அரச உதவியோடு நடக்கும் இடம். அதன் அருகில் மெல்பனின் உயிர் நாடியாக விளங்கும் யாரா நதி சலனமற்று ஓடிக்கொண்டிருக்கிறது .
மீண்டும் வீடு திரும்பும்போது எனது அசோகனின் வைத்தியசாலை நாவலில்1990 களில் தரிசித்து நான் எழுதிய காடசியை நினைத்துப் பார்க்கிறேன் ;-
“அந்த ஜன்னலின் அருகில் வெளியே பார்த்தபோது இளம் வயது ஆண்- பெண் ஜோடிகள் கைகளை பிடித்தபடியும், முத்தமிட்டவாறும் சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக வகுப்பை முடித்து விட்டும், சிலர் வேலைத்தலங்களில் இருந்தும் நேரடியாக அங்கே வருகிறார்கள். கோடைகாலத்தில் ஆபிரிக்க மிருகங்கள் பற்றிய விவரணப்படத்தில் அவை தண்ணீருக்காக வரிசையாக இடம் பெயரும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்த ஜன்னலுக்கு அப்பால் எலிசபெத் பரேட் என்ற அந்தப் பெரிய வீதி செல்கிறது. இந்த வீதியின் இரு பக்கத்திலும் வாகனங்களும் நடுபகுதியில் மெல்பனுக்கே பிரத்தியேகமான ட்ராம் ரோடு செல்கிறது. வேலை முடியும் நேரமானதால் மின்சாரத்தில் இயங்கும் ட்ராம் ஒன்று நிறைமாத கற்பிணிப் பெண்போல் மெதுவான ஒலியோடு செல்வது தெரிந்தது. இந்த மதுபான விடுதிக்கு எதிராக எலிசெபத் வீதியின் அடுத்த பக்கத்தில் ரோயல் பெண்கள் வைத்தியசாலை அமைந்துள்ளது. வீதியின் இருமருங்கும் நிற்கும் மரங்கள் மாலையின் மங்கிய வெளிச்சத்தில் மெல்பனுக்கே உரிய பூங்கா நகரம் என்ற பெயரை உறுதி செய்தது. மாலை சூரியனது ஒளிக்கதிர்கள் அடர்ந்த பச்சை இலைகொண்ட மரங்களை திரைச்சீலையாக்கி அற்புதமான ஓவியத்தை வரைந்து கொண்டிருப்பது பொறுக்காத சில பறவைகள் அந்த வண்ணக்கலவையில் தாங்களும் குளித்தபடி அங்கும் இங்கும் பறந்து திரிவது அந்த மதுசாலையின் கண்ணாடி யன்னல்கள் வழியாக தெரிந்து.”
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Next• •>• |
---|