வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
4
தயாநிதி உள்ளே எதற்கோ பிள்ளைகளோடு கத்திக்கொண்டிருப்பது நாகாத்தைக்கு கேட்டது. கலாவதியைத்தான் கொஞ்சநேரமாகக் காணவில்லை. கிணற்றடியில் கப்பிச் சத்தம் ஒலிக்க, கிணற்றடியில் நிற்கலாமென எண்ணிக்கொண்டாள். திண்ணையில் வந்தமரும் போதே நாகி வெற்றிலைப் பெட்டியையும் கொண்டுதான் வந்திருந்தாள். பெட்டியுள் கிடந்த வாடிய வெற்றிலையை எடுத்து துடைத்து பதனமாக வைத்துக்கொண்டு பாக்குவெட்டியும் பாக்கும் எடுத்தாள். வலது கையில் சாய்த்துப் பிடித்திருந்த பாக்குவெட்டி, கோலிய இடது கையில் பாக்குப் பிளவுகளைச் சீவி விழுத்திக் கொண்டிருக்கையில், மனம் அமுக்கத்திலிருந்து விடுபட்டு விரியத் துடித்துக்கொண்டிருந்தது. அவசரமாக வெற்றிலையை எடுத்து, சுண்ணாம்புக் காரல்களைக் டப்பாவிலிருந்து கொட்டி, பாக்கும் சேர்த்துச் சுருட்டி வாயில் அதக்கினாள். வெடித்து அழுவதற்குள் அதை அவள் செய்தே ஆகவேண்டியிருந்தது. யோசிப்புக்கான சில குடும்ப விஷயங்கள் சிலகாலமாக அவளது மனத்திலே படைபோட்டு இருந்திருந்தவேளையில், சம்பூரில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையிலான யுத்தம் தொடங்கி அதைப் பின்போடும்படி செய்துவிட்டது. அது கிழக்கிலேதானே, வன்னிக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாமென நினைத்த சிலரைப்போல அவளாலும் நினைத்திருக்க முடியவில்லை. அது அவளது குடும்பத்தோடும் சம்பந்தப்பட்டது. அப்போது தமிழீழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்துப் பேரோடும் சம்பந்தப்பட்டது. விரும்பியும் விரும்பாமலும். அதனால்தான் மறுபடி எல்லாவற்றையும் மனப் படையுள் போட்டுவிட்டு வேறு திசைகளில் கவனத்தைத் திருப்பினாள். இரண்டு நாட்கள் கூலிவேலைக்கும் போய்வந்தாள். குடும்பத்துள் நிகழும் விஷயங்கள் மெல்ல அறியவந்தபோது அவளை நடுங்கவே வைத்துவிட்டன. அதன் பின்னால் கலாவுடன் நடந்த சம்வாதம் மேலும் அவளை உடைத்துவிட்டிருந்தது. பிடிவாதமாய் இனிமேலும் தன் இறுகிய மௌனத்தைத் தொடர்வது சாதுர்யமாய் அவளுக்குத் தென்படவில்லை. அவள் யோசித்தாகவேண்டும். அவதானமாக. இல்லாவிட்டால் குதிர்ந்திருக்கும் பிரச்னைகளை அவளால் தன் வழியில் இழுத்து அடக்கமுடியாது போய்விடும். ஏறுமாறாக நடக்கக்கூடிய கலாபோன்றவர்களின் விஷயங்களில் அது இன்னுமின்னும் முக்கியமானது.
கடைவாய் புண்ணாகிவிட்டிருந்ததில் இனி வெற்றிலை சப்புவதில்லையென்ற முடிவோடு, வெற்றிலைப் பெட்டியைக் கொண்டுபோய் அறை மூலையுள் போட்டுவிட்டு இரண்டு நாட்களாக அதன் நினைப்பையே மறந்துதிரிந்தாள். பிறகு வாய் சுணையெடுத்து எதையாவது செய்யென உழைந்துகொண்டிருக்க, இரண்டு வெறும் பாக்குப் பிளவுகளை வாயில்போட்டு நன்னிக்கொண்டு திரிந்தாள். ஆனால் இனி அப்படியிருக்க சாத்தியமில்லை. சமீபகாலமான கலாவின் நடவடிக்கைகள் குறித்து அவளுக்கு அவ்வப்போது ஐமிச்சங்கள் எழுந்துகொண்டுதானிருந்தன. தாயாகியதாலேயே அந்த விஷயங்களை மகளிடம் கேட்கமுடியாமலும், அதனாலேயே அதை அவளிடம் நிர்ப்பந்தமாய்க் கேட்கவேண்டியவளுமாய் இழுபறிப்பட்ட பிறகு, நான்கு நாட்களுக்கு முதல் படலையைத் திறந்துவிட்டு கலா ஏமிலாந்தியபடி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருக்கையில் தானே அவள் கிட்டப்போய், ‘நானும் அப்பப்ப கண்டிருக்கிறன். ஆர், கலா, அந்தப் பெடியன்? உன்னோட நல்ல பழக்கம்போலயிருக்கு?’ என தன்மையாய்க் கேட்டாள். ‘கிளிநொச்சி ஆஸ்பத்திரியில கண்டு பழக்கமம்மா’ என்று சொல்லிவிட்டு முகத்தை அப்பால் வெட்டித் திருப்பி ‘அவ்வளவுதான். இனியொண்டும் கேட்டு நச்சரிக்காதயுங்கோ’ என்பதை கலாவதி உணர்த்திவிட்டாள். அவள் மெய் சொல்லவில்லையென்று நாகிக்குத் தெரிந்தது. பெடியனின் பேச்சு மட்டக்கிளப்பு வழக்கிலிருக்கையில், கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் சந்தித்ததாய்ச் சொன்னது அவளின் மனத்தில் ஐயுறவைக் கிளப்பியது. அதற்குச் சாத்தியமிருந்தும் ஐயுறவு ஏற்படுவதை நாகியால் தடுக்கமுடியவில்லை. நாகி திரும்பிவிட்டாள். அது ஒன்றேயாயிருந்தால் அந்தளவில் அவள் விட்டிருக்கக்கூடும். முதல் நாள் காலையில் ஆட்டுக்கொட்டில் பக்கமாய் அடக்கியடக்கி ஓங்காளித்துக் கேட்டது. குடலை வெறுமையாக்குகிற அத்தகைய ஓங்காளிப்பை, ஒவ்வாமையும் சமிபாடின்மையும் போன்ற காரணங்களில் வருகிற ஓங்களிப்பிலிருந்து அனுபவம் கண்டுபிடித்துவிடும். கள்ளனைப் பிடிக்கப்போல் பாய்ந்தோடாமல், மெல்ல எழுந்து நாகி போகிறவரையில், கலாவதி கிணற்றடிக்குப் போய்விட்டாள். நாகி கிணற்றடிக்குப் போனாள்.
வாந்தியின் அடையாளம் எதனையும் தேடி மண்ணில் அவளது கண் அலைந்து வெறுமனே மீண்டது. ‘என்ன, கலா, செய்யுது? வயித்தைப் பிரட்டுதோ?’ என்று கேட்க, ‘காலம்பறத்திலயிருந்து ஒரே ஒங்காளிப்பாயிருக்கு’ என்றாள். தண்ணீர் அள்ள வந்தவள் துலாக் கொடியைக்கூட பிடிக்காமல் உட்கிணற்றின் இருளையே எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒடுங்கி ஆழ்ந்துகிடந்த கிணற்றின் இருளுக்குள் ஒரு தஞ்சத்தை அவள் சூசகம் செய்கிறாளா? நாகிக்கு மேலே பேச எந்த ஊடும் கிடைக்கவில்லை. கண்களில் கண்ணீர் கொளகொளத்துப் பொங்க அப்போதும் திரும்பினாள். அதேநாளிரவு நடுநிசிக்கு மேலே அடிவளவுக்குள் சந்தடி கேட்டதுபோலிருந்தது. மெல்ல எழுந்து பார்க்க கலா படுக்கையில் இருக்கவில்லை. ஒவ்வொன்றாய் அடைத்தடைத்து வந்திருந்த அத்தனை ஐமிச்சங்களுக்குமான பதில் ஒற்றையாய் வந்து அவள் முன்னால் நின்றிருந்தது. குற்றச்சாட்டு, விசாரணை எதுவுமில்லை. யோசிப்புமட்டும். ‘இனி என்ன செய்ய?’ காலையில் வெற்றிலைப் பெட்டியைத் தேடி எடுத்துவந்தது அதற்குத்தான். எப்போதும் அவள் நினைத்திருந்ததில்லை, அப்படியெரு நிலைமை உருவாகக்கூடுமென்று. தயாநிதியையே அப்படியொரு கவனத்தில் அவள் என்றும் வைத்திருந்தாள். எப்படியோ அவளுக்கு சம்பிரதாயமற்ற ஒரு கலியாணமாவது நடக்க முடிந்தது. ஆனால் கலாவுக்கு…? அவளது காலைநேர வாந்திகள் நாகி சந்தேகப்படும்படி கர்ப்ப சமிக்ஞையெனில், நாகி எதிர்பாராத கோணத்தில், எதிர்பாராத நபரிடமிருந்து எழுந்த தாக்குதலாய் அது அவளைப் பாதிக்கும். மிகவும் சமயோசிதமாக அந்த நிலைமையைக் கையாளவேண்டுமென அவள் தீர்மானித்தாள். ஊரிலே நாலு பேருக்கு விஷயம் கசிந்து அவமானம் நேர்ந்துவிடாத அவதானத்தையும் தான் கொள்ளவேண்டுமென முடிவுகட்டினாள். பணமில்லை, நிலமில்லை, படிப்பில்லை என்றாலும் அந்தக் குடும்பத்துக்கு எங்கோ, எவரிடத்திலோ ஒரு மரியாதை இருந்துகொண்டிருக்கிறது. கோயில் சூழல்களில் அவள் குடும்பம் இன்னும் மதிக்கப்படுவதற்கான பூர்வீகத்தை அவள் கொண்டிருக்கிறாள். அதை அவளால் உதாசீனப்படுத்திவிட முடியாது. சதாசிவம் காலமான பின் நடக்கிற அந்த இக்கட்டையும் அவள் மிக்க தெளிவோடிருந்து வெற்றிகொள்வது அவசியமானது. அதை அவள் அத்தனை கஷ்டங்களில் கட்டிக்காத்து வந்தவள். அவள் மேலும் ஒரு சுருள் வெற்றிலையை வாயுள் திணித்தாள். சிவப்புக் கோடுகள் துப்பலில் வேலியோரமாய் விழுந்துகொண்டிருந்தன. அவளுக்கு குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப காலங்கள் அசையும் சித்திரமாய் மனத்தில் விரிந்தன. வாழ்வியக்கத்தின் சகல நரம்புகளையும் 1983 ஜுலை இனக்கலவரம் அசைத்திருந்ததை, கப்புதூ கிராமத்திலிருந்து தொடங்கினால் காணமுடியும். தன் இருப்பின் அடையாளத்தை மேலோட்டமாயேனும் வைத்திருக்காத ஊராகவிருந்தது அது. அது சகல கிராமங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்தது. ஒரு ஊராகவன்றி, சுற்றிவரவுள்ள ஏதோ ஒரு கிராமத்தின் துண்டுபோலவே அது என்றும் அமைந்திருந்தது.
அதில் முக்கியமானது அது எதன் துண்டென அறிய முடியாதிருந்ததுதான். அந்தணத்திடல் அருகிலே இருந்தும் கப்புதூவுடன் ஒட்டற்று விலகியேயிருந்தது. காரணம் வெளியே தெரியவேயில்லை. இருந்தும் அங்கிருந்து வேலை தேடி ஆண்களும் பெண்களும் வேறூர்களுக்குச் சென்றுகொண்டிருக்க, அயலூர்களே வந்து வேலை செய்ய கேட்டுக்கொண்டிருந்த அவ்வூரின் ஒரே மனிதராக சரவணை இருந்தார். அவர் கல்கொத்தராக வேலை செய்தார். கருங்கல் பொழிவதும், கிணற்றுக்கு வெடிவைத்து பொக்கணைகளை உடைத்து, நன்னீரூற்றுக் கண்டு, கிணற்றை ஆழப்படுத்துவதும் அவரது முதன்மையான வேலைகளாக இருந்தன. நன்னீரின் சுவை சீமெந்துக் கல்லடுக்கினால் திரிந்துபோகாது, இரண்டு மூன்று சுற்றுக்காவது பொழிகல் வைத்து கிணறு கட்டிய காலம் ஒன்று குடாநாட்டில் இருந்தது. கல் வீடுகளுக்குப் பின்னால் ஒத்தாப்புகளிட வளைந்த பொழிகல்லுகள் அமைக்கப்பட்ட காலமும் அது. கிணறு புதிதாக வெட்டுவதற்கு பஞ்சாங்கத்திலே நாளுண்டு. அது பெரும்பாலும் மாரியில் பெய்த மழைநீர் பூமியினடியை அடைகிற நேரமான பங்குனி-சித்திரை மாதத்திலிருந்து தொடங்குகிறது. அதுதான் சரவணையின் வேலைக்காலமாகவும் இருந்தது.
அண்ணளவாக ஆறு மாதம் வேலை, ஆறு மாதம் வீட்டிலிருத்தல் என்பதாக அதைச் சொல்லலாம். அதை இன்னொரு மொழியில் ஆறு மாத கடின உழைப்புப் பணத்தை வைத்து, மீதி ஆறு மாத காலத்தில் குடும்பத்தைப் பராமரித்தல் என்றாகும். சரவணை அதை திறம்படவே செய்தார். அதுபோல் அவரது மகன் சதாசிவமும் ஆறு மாதம் பள்ளி, ஆறு மாதம் ஊர்சுற்று என திரிந்துவிட முடியாது. பள்ளி அவனது ஆறு மாத படிப்பை ஒத்துக்கொள்ளவேயில்லை. சதாசிவம் பள்ளியை நிறுத்திவிட்டு தந்தையுடன் தொழிலுக்குச் செல்ல ஆரம்பித்தான். தானே தடைபோடவிருந்த படிப்பை அக்கம்பக்கத்துச் சனங்களுக்காக செய்யமுடியாதிருந்தவருக்கு, மகனே அந்த முடிவுக்கு வந்ததை, ‘தறுதலை, படிக்கப் போடாவெண்டா கேக்குதே’ என பிறர் முன்னால் திட்டிவிட்டு உவப்பாய் ஏற்றுக்கொண்டார். 1960க்கு சற்று முன்பின்னாக மல்லாகம் நீதிமன்றிலே இலங்கைத் தமிழ்ப் பகுதி முழுவதும் பிரபலமாகியிருந்த மசுவாசு, கொலை வழக்கொன்றின் விசாரணை நடந்தது. அந்த வழக்கிலே எதிரியான சரவணைக்கு கைமோசக் கொலையென்று தீர்மானமாகியும் ஆயுள் தண்டனை கிடைத்தபோது, சதாசிவமும் தாயும் கப்புதூ கிராமத்தில் அநாதரவாக விடப்பட்டனர். எனினும் பெரிய பாதிப்பெதனையும் அது அவர்களுக்குச் செய்துவிடவில்லை. நன்கு வளர்ந்த சதாசிவத்துக்கு கிணற்று வெடித் தொழில் செய்ய தெரிந்திருந்தது. சரவணைக்கு குற்றவியல் தண்டனை வழக்கப்படி பதின்னான்கு ஆண்டுகளே மறியலிருக்க வேண்டியிருந்தும், தண்டனை முடிவதற்கு இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவருக்கு கடும் சுகவீனமேற்பட்டு யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கால்விலங்கு இடப்பட்டபடியே கிடந்து செத்துப்போனார். அந்தளவில் சதாசிவத்துக்கு வயது இருபத்தைந்துக்கு மேலே ஆகியிருந்தது. தாய்க்கிருந்த கவலைகூடவின்றி சதாசிவம் மொக்குப்பத்தி கள்ளும், கிடைத்தால் சாரயமுமென்று வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருந்தார். நிலையமெடுத்து வெட்டிக்கொடுக்கிற கிணற்றிலிருந்து, நன்னீரைக் கண்டுபிடித்துவிடக்கூடிய ஆற்றலிருந்தும், எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து வெடிபொருளைப் பெறுவதற்கிருந்த அரசாங்கக் கட்டுப்பாட்டால் அந்தத் தொழிலே சிறிதுசிறிதாக நசித்துவரத் தொடங்கியது. அந்த நிலையில் குழாய்க் கிணறுகள் நகரப்புறங்களைத் தாண்டிய பகுதிகளிலும் அமைக்கப்படலாயின. வேலையுண்டென்று சொல்கிற நிலை இருக்கும்போதே அவனுக்கு கல்யாணத்தைச் செய்துவைத்துவிட நினைத்த சதாசிவத்தின் தாய், அவருக்குப் பெண்தேடும் முதலாம் படலத்தை ஆரம்பித்தாள். அது அண்டை அயலாக இருந்தது. அதில் அவர்களுக்கு மிகவும் வெக்கறைப்படும் பதிலே கிடைத்தது. சரவணையின் மசுவாசு வழக்கு விபரம் தெரியாத தூர இடம் சென்று முயற்சி பண்ணினபோது தெரிந்தது, அது தமிழர் வாழும் நிலமெங்குமே பரவியிருந்ததென்று. சில வீடுகளில் தங்கள் மகளை, வீடுகள் ஐதாய் தனிமை மண்டிக் கிடந்த ஒரு ஊருக்கு மணம்முடித்து அனுப்ப விருப்பமிருக்கவில்லை. தாய் அன்னப்பிள்ளை உறுதிகொண்டுவிட்டாள், வன்னி சென்றேனும் மகனுக்கு பெண்ணெடுத்தே தீருவதென்று. இல்லையேல் ‘ஒட்டோடு அறுத்தெறிவன் குடும்பியை’யென்று, பெண்பார்க்கப் போய் மூக்கறுபட்டுத் திரும்பிய ஒருநாள் மாலை நாலு பேர் கேட்க வீதியில் நின்று கத்திச் சபதமிட்டாள். வன்னியில் கிடைக்கலாமென்றாலும், சம்பந்தம் பேசித்தர சரியான தரகன் கிடைக்க நீண்டகாலம் அவள் காத்திருக்க வேண்டியதாயிற்று. வயது எகிறிப்போன சதாசிவத்தை குடியிலிருந்து மீட்டெடுத்து முள்ளியவளையிலே பெண் பார்த்து முடித்தபோது அவனுக்கு வயது நாற்பதை அண்மித்திருந்தது. குடும்பத்தில் மசுவாசு களங்கமிருந்த நிலையிலும், நாற்பது வயதாகும் நிலையிலும்கூட, சீதனத்தோடு மகனுக்கு அங்கே பெண்பேசி முடித்தாள் அன்னப்பிள்ளை. அதையொரு சூட்சுமத்தில் செய்தாள்.
தந்தையின் மரணத்தை கொழும்பில் நடந்த இனக்கலவரத்தில் நிகழ்ந்ததென்றாள். குடும்பத் தொழிலை கல்கொத்து என்பதற்குப் பதிலாக, கல்தச்சு என்றாள். ஏதோ கோயில் சிலை செய்யும் சிற்பியாய் எண்ணி அந்த வலையில் ஒரு பெண் சிக்கியது.நல்ல கரிய வளந்துபோல ஒரு பெண். உயரமும் அதிகமாக இல்லை. அவளுக்கு தாராளமாக சீதனம் கொடுக்க தாயும் மாட்டுத் தரகனான தகப்பனும் முன்வந்து, காதுக்கு தங்கத் தோடும், மூக்குக்கு தங்க மினுக்குத்தியும், கழுத்துக்கு கறுப்புக் கயிற்றில் கோர்த்த வெள்ளி அட்டிகையும் போட்டதுடன், தங்கள் வீட்டு நிலத்தையும் தமது சீவியத்துக்கு பின்னடியில் மகளுக்கென்று உறுதி முடித்துக் கொடுத்தார்கள். அதோடு நல்ல கறவையான ஒரு ஆடும். கல்யாணம் உள்ஊர் அம்மன் சந்நிதியிலே நடந்தது. எண்பதாம் ஆண்டு ஒரு வைகாசி மாத்தில் ‘கரிய வளந்து’ நாகாத்தையைக் கூட்டிக்கொண்டு சதாசிவம் கப்புதூவுக்கு வந்து சேர்ந்தார். கப்புதூவிலிருந்து பிள்ளைவரம் கேட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், சன்னதி முருகன் கோவிலென்று போய் நேர்த்தி வைத்தும் மூன்று நான்கு வருஷங்களாக நாகாத்தை கர்ப்பமாகாது இருந்தாள். வற்றாப்பளை அம்மனுக்கு வைத்த வேண்டுதலும் செயம்கொள்ளவில்லை. அந்தக் காலப் பகுதியிலேதான் கிராஞ்சியிலிருந்து மரை வற்றல், மானிறைச்சி கொண்டுவந்து விற்கிற உரும்பிராய் சற்குணத்தை கோப்பிறேஷனில் சதாசிவத்துக்கு அறிமுகமானது. ஒருநாள் சற்குணமே மரை வற்றலும் மானிறைச்சியும் ஒரு போத்தல் சீல் சாராயமும்கொண்டு சதாசிவம் வீட்டுக்கு வந்தான். ‘வேண்டிற மரை வத்தலுக்கும் மானிறைச்சிக்கும் காசு தந்தால்போதும், சாராயத்தை நாங்கள் ரண்டுபேரும் காசில்லாமல் குடிப்ப’மென்றான். சதாசிவம் மசிந்துவிட்டார். இப்படியே இரண்டு மூன்று தரம் வந்துபோய்விட்ட சற்குணம், தான் வீட்டில் நிற்கமாட்டேனென்று சதாசிவம் சொல்லிய ஒருநாள், மரை வற்றலும், மானிறைச்சியும் கொண்டு வீட்டுக்கு வந்தான். என்ன பேசினானோ, என்ன செய்தானோ சடசடவென்ற சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் வந்ததைவிட அதிக வேகத்தில் சைக்கிளை எடுத்து உழக்கத் துவங்கிவிட்டான் சற்குணம். எதிர்பாராத விதமாக அப்போதுதான் போன காரியம் விரைவில் முடிந்து கோப்பிறேஷனுக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சதாசிவம் சற்குணத்தைக் கண்டு கூவியழைத்தும் கேட்காமல் அப்படியே பறந்துவிட்டான். ‘வீட்டில எதோ நடந்திருக்கு’ என்று அவசரமாக வந்து நாகியிடம் விஷயம் கேட்டார் சதாசிவம். ‘உந்தமாதிரி பொம்பிள பொறுக்கியள வீட்டுப் பக்கம் ஏன் கொண்டுவந்தா’யென்று நாகி அவரை வைதெடுத்துவிட்டாள். எல்லா ஆர்ப்பாட்டமும் முடிய அமைதியாயிருந்த சதாசிவம் கேட்டார் அவளை. ‘நானில்லாத நேரமாய்ப் பாத்து இண்டைக்குத்தான் உவன் இஞ்ச வாறானோ?’ நாகி சிதறிப்போனாள். என்ன அர்த்தம் இதற்கு? ஆனாலும் ‘இண்டைக்குத்தான்’ என்று வெடித்துவந்த அழுகையோடு கூறினாள். சதாசிவம் எதுவும் கவனிக்காதவராய் எழுந்து அப்பால் போய்விட்டார்.அந்தளவில் ஜுலை 23, 1983 வந்ததோடு கிணற்று வெடிவைப்பு வேலை முற்றாக நின்றுபோனது சதாசிவத்துக்கு. அந்தளவு வறுமை வந்த காலத்திலேதான் தன் முதல் கர்ப்பத்தை தாங்கினாள் நாகி. முதலில் ஒரு பெண் பிறக்க, அம்மனின் தயவினை மெச்சி அவளுக்கு தயாநிதியென்றும், பின்னால் பிறந்த ஆணுக்கு கந்தனின் அருளையெண்ணி ஞானசேகரமென்றும் பெயர் வைத்தார்கள். மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தபோது அதற்கு கறுப்பாத்தையென்று பெயர் வைக்கலாமென அவர் சொன்னார். கண்ணை உருட்டிக் காட்டிவிட்டு கலாவதியென்று பெயர் வைக்கலாமென்றாள் நாகி. அன்னப்பிள்ளை நீண்டகாலம் உயிரோடிருந்தும் பிற்காலத்தில் மகனுக்கு சுமையற்ற விதத்தில் சன்னதி கோவில் மடத்திலே கிடந்துதான் செத்தாள்.
சதாசிவத்துக்கு இப்போது எந்தெந்த வகையிலோ தாராளமாக செலவுக்குப் பணம் கிடைத்து வந்தது. தென்னங் கள் என்றிருந்த நிலை, பெரும்பாலும் சாராயமென்று ஆனது அதனால். சதாசிவத்துக்கு இரவிணக்கம் செய்யாதுவிடுவதைத் தவிர அவரது குடிப் பழக்கத்துக்கு வேறு எந்தக் கட்டுப்பாட்டையும் போட நாகியால் முடியாதுபோனது. சதாசிவம் இந்த இடத்தில் உத்தியாக அவளை வென்றார். முதலிலே கருப்பணி கொண்டுவந்து பிள்ளைகளுக்கும் கொடுத்து அவளையும் அருந்த வைத்தார். பின்னால் இரகசியமாய் பனங்கள்ளு கொண்டுவந்து ஒருவாறு அவளை வற்புறுத்தி குடிக்கவைத்தார். பனங்கள்ளின் காலம் முடிய உடன் தென்னங்கள்ளு கொண்டுவந்து கொடுத்தார். பின்னால் புளித்த தென்னங்கள்ளென்ன, சாராயமென்ன எதுவும் இயலுமாகிப்போனது நாகிக்கு. இரண்டு வருஷ அந்த ஆட்டத்தின் பின்தான் நாகாத்தை தன்னிலை உணர்ந்தது. பதைத்துப் போனாள். உடனேயே அந்தச் சனியன்களை விட்டொழித்தாள். ஏனென்று கேட்டார் சதாசிவம். ‘வேண்டாம், தலையிடிக்குது எப்பேக்கயும்’ என நாகி சாட்டுச் சொன்னாள். அங்கே இருக்கிற வரையில் தன்பலம் குறைவென்ற சங்கதி அந்தளவில் நாகாத்தைக்குப் புரியலாயிற்று. ஆனால் எங்கே போவது? அப்போது மாரிகாலம் பிறந்திருந்தது. ஒருநாள் வேலைக்கென்று வெளியே சென்ற சதாசிவம் அடுத்த நாள் மதியத்துக்கு சிறிது மேலே வீடு திரும்பியபோது, தயாநிதியும் ஞானசேகரனும் கடைசியும் முற்றத்து வெள்ளத்தில் நின்று கூத்தடித்துக்கொண்டிருந்தார்கள். சதாசிவத்துக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. முற்றத்துப் பூவரசில் தொங்கிப் பிடுங்கிய பிஞ்சுக் கம்பால் மூன்று பேரையும் வெளுத்து வாங்கிவிட்டார். ஆயினும் அலறிய மூத்ததுகள் இரண்டும் இழுத்துப் பறித்துக்கொண்டு ஓடிவிட, கைப்பிடியிலிருந்த கலாவுக்குத்தான் ‘சுத்துக்கும் பித்துக்கும் சுழலச் சுழல, முத்தத்து நாச்சியார் முதுகு முறிய’ பூசை விழுந்தது. கைப்பிடியில் பாவைப்பிள்ளைபோல் மிதந்துகொண்டிருந்த கலாவதியின் குண்டி புளித்துப்போனது. பாவாடை ஒரு காப்பாக இருந்தும், சிலவேளைகளில் பூவரசம் கம்பு அவளது குண்டியை நன்றாகப் பதம் பார்த்தது. குசினிக் கொட்டிலில் ஈரவிறகுகளோடு மல்லாடிக்கொண்டிருந்த நாகி ஓடிவந்து அவரைக் கெஞ்சிக்கூத்தாடி விடுவித்துக்கொண்டு போனாள். வெறியில் வந்து அந்தமாதிரி பிள்ளைகளை அடித்ததில் நாகாத்தை கொதிப்பேறியிருந்தாலும், அவளால் அதற்காக அழத்தான் முடிந்தது. பிள்ளைகளுக்குப் பின்னால் வழக்கமாக அவளோடுதான் அவர் தனகத் தொடங்குவார். அது வெறியின் அளவுக்கு உக்கிரம் கூடியும் குறைந்தும் இருக்கும். எப்போதும் நாகியுடனான சண்டை ‘ஆண் சிணி மனக்குது, பெண் சிணி மணக்குது, வந்தவனாரடி போனவனாரடி’ என்ற கணக்கில்தான் தொடங்கும். அவளில் பெரும்பாலும் அவர் கைவைத்து விடுவதில்லை. ஆனால் குடுமிப் பிடியில் அவளை இழுத்து வைத்துக்கொண்டு கேட்காத கேள்வியெல்லாம் கேட்கும் அந்த மனிசன். காது கூசிப்போகும். பதில் பொருத்தமாய் இல்லையேல் பிரச்னைதான். தலைமயிர்ப் பிடியில் அவளை இழுப்பார். உலுப்பியுலுப்பி வீடெல்லாம் கொண்டு திரிவார். கீழே இழுத்து விழுத்தி, பிறகு அந்தப் பிடியிலேயே மேலே தூக்கி நிறுத்துவார். தன் பலம் காட்டப்போல்தான் அத்தனையும் செய்வார். அவளது இளமையைச் சமாளிக்க தனக்கு வயதுக்கு மீறிய பலம் இருப்பதாய்க் காட்ட முயல்வதாய் அந்த மூர்க்கம் தோன்றும். அவர் தலைமயிர்ப் பிடியை நீண்டநேரத்தின் பின் விடுகிறபோது, அவளது கொத்து மயிர் கையோடு போகும். ‘என்ர தலை பாதி மொட்டையானது இந்தாளாலதான’ என்று சிலபோது அயல் பெண் யாரோடும் பேசுகையில் நாகாத்தை குமுறிச் சொல்வாள்.
ஒருநாள் மதியம் சாப்பிடுகிற நேரத்தில் நல்ல மழை. இரைத்துக் கொட்டியது. வடிகால்களற்ற நிலங்களில் வெள்ளம் தேங்கிநின்றது. குளிர் உறைந்து வந்தது. ஆனாலும் மாலையில் மழை ஓய்வுகொண்டது. நாகி தடுக்கத் தடுக்கவும் சதாசிவம் மறுபடி வெளிக் கிளம்பினார். அவர் திரும்ப இரவு நெடுநேரமாகியது. அப்போது மழை மறுபடி தூறத் துவங்கியிருந்தது. செத்தையோடு சைக்கிளைத் தள்ளிவிட்டு உள்ளே வந்ததும், ‘நாகீ!’ என்றிரைந்து அவளது முந்தானையை இழுத்து தலையைத் துடைத்தார். நாகிக்கு அவர் சமிக்ஞை தெரிய, பிள்ளையென்றும் பார்க்காமல் குறியெழுதி வைத்திருக்கிற சதாசிவத்துக்கு தன் எதிர்ப்பினையும், வெறுப்பினையும் வலிதாய்க் காட்டுகின்ற திட்டமேறியது. வழக்கம்போல் நெருங்கி, உரஞ்சிநின்றான ஆலாபனைகளை விட்டு புறியமற்ற பாவனை காட்டி நின்றாள். மாலையில் குடித்தது கள்ளாக இருக்கிறவரையில் அவளுக்கு தன் எதிர்ப்பைக் காட்ட கொஞ்சம் இடமிருக்கிறது. சதாசிவம் சாப்பிடாமலே திண்ணையில் சரிந்தார். குழந்தைகளை படுக்க வைத்துவிட்டு திண்ணைக்கு வந்து நாகி எதிர்த்த பக்கத்திலே படுத்துக்கொண்டாள். வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. பிரபஞ்சமே ‘சோ’வென்ற சத்தத்தில். காற்று வேகம் பெற்றுக்கொண்டிருந்ததில் பனைகளின், தென்னைகளின், நெடுமரங்களின் தலைகளெல்லாம் சதிராடிய கூச்சல். மலையாள மின்னலும், ஈழ மின்னலும் சேர்ந்தடித்தன. வழக்கமாய் அவள் தினவடையும் சூழல் அது. ஆனால் பகலின் நினைவுகள் வந்து அவளை சுரணையறச் செய்துகொண்டிருந்தன. பகலின் அவரது வெறித்தனத்தில் இளையவள் துடித்த துடிப்பு இன்னும் அவளுக்குக் காட்சியாகிக் கொண்டிருந்தது. ‘ஐயோ……ஐயோ… இனிமே நனைய மாட்டன்… இனிமே வெள்ளம் தப்பமாட்டன்’ என கலாவதி குழறிய வார்த்தைகள் இன்னும் அவள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன. அந்த சின்னதின் மேல் ஏன் அவருக்கு அத்தனை வஞ்சமோ? மூத்தது இரண்டும் அவரது நிறத்திலும், இளையது அவள் நிறத்திலும் இருப்பதாலா? கறுப்பாத்தையென அவளுக்குப் பெயர்வைக்க எண்ணியவரல்லவா அவர்? அவளுக்கு அதைவிட நினைக்க வேறு காரணம் கிடைக்கவில்லை. பிடிவாதம் மேலும் இறுகினாள் நாகி. அப்படியே தூங்கிப்போனாள். லாம்பு தணிவாக வீட்டுக்குள் எரிந்துகொண்டிருந்தது. என்ன நேரமென அனுமானிக்க முடியாத ஒருபொழுதில் நாகிக்கு சட்டென விழிப்பு வந்து தலையை நிமிர்த்தினாள். சதாசிவம் திண்ணையில் இல்லை. ‘இந்த நேரத்தில எங்க போச்சுது இந்த மனிசன்?’ ஆச்சரியத்தோடு எழும்பி, ஒண்டுக்கு ரண்டுக்குப் போயிருக்குமோவென அறிய சற்றுநேரம் தாமதித்தாள். பிறகு லாம்பு இன்னும் உள்ளே இருப்பதில் அவர் வெளியே போயிருப்பது சாத்தியமில்லையென எண்ணி அறைக்குள் சென்றவள் திகைத்துப்போனாள். சதாசிவம் கலாவதிக்குப் பக்கத்தில் சக்கப்பணிய வாசலுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தார். அப்படி என்ன செய்கிறாரென கிட்ட நகர்ந்தாள். கண்ட காட்சி அப்படியே அவளைப் பதற வைத்துவிட்டது. குப்புறக்கிடந்த கலாவதியின் பாவாடையை மிதத்திவிட்டு அவளது குண்டிப் பிட்டியை குனிந்து பார்த்துப் பார்த்து தடவியபடி இருந்தார் சதாசிவம். ‘என்ன வேலை செய்யிறியள்? எழும்புங்கோ’ எனக் கத்த திறந்த அவளது வாய் அப்படியே அடங்கிப்போனது, அவர் குலுங்கியது கண்டு. விம்மிவிம்மி அழுதார் சதாசிவம். அவளது பின்னை நாகமுத்து மாலையிலேயே கண்டிருந்தாள். பூவரசங்கம்பு எழுதிய குறியில் சில இடங்களில் தோல் வெடித்திருந்தது. ‘மனிசனுக்கு இரக்கம் இருக்கு, பிள்ளையில பாசம் இருக்கு’ என நெஞ்சு நெகிழ்ந்தாள். மெல்ல அவரை அணுகினாள். அரவத்தில் திடுக்கிட்டு பாவாடையை இழுத்துவிட்டு மெல்ல எழுந்தார். முகம் நீர் வார்ந்திருந்தது. ‘நான் பாவி… நான் பாவி… இப்பிடிப்போட்டு என்ர பிள்ளையை அடிச்சிருக்கிறனே’ என தலைதலையாய் அடித்தார். நாகமுத்து தடுத்து அவரைக் கைப்பிடியில் கூட்டிப்போய் திண்ணைப் பாயிலே அமரவைத்தாள். ‘சாப்பாடு போட்டுவரட்டோ?’ என, ‘வேண்டாம்’ என்றார். ‘பின்னேரம் நானும் பாத்தன், அப்பிடியே சிவத்துப்போய் ரத்தம் கண்டியிருக்கு. நல்லெண்ணை பூசிவிட்டிருக்கிறன். காலமை சரியாப்போகும். கண்ணைத் துடையுங்கோ’ என்று ஆதரவு காட்டினாள். மண் திண்ணை சாரலில் ஈரம்பட்டிருந்தது. பாய் தலையணைகள் ஈரலிப்புடன் இருந்தன. அவள் தானும் அவரருகே தன்னுடம்பைச் சரித்தாள். உள்ளே தணிக்காத லாம்பு சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. மனிதர் அவள் உணர்ச்சி கண்டார். அவள் கொடுத்த சாயாமுலைகளை வெகுநேரம் அனுபவித்துக்கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் அவரது குறட்டைச் சத்தமெழுந்தது. நாகி ஊசிகளை சட்டைக்குக் குத்திக்கொண்டு விழித்தபடி கிடந்தாள்.
வெகுநேரமாகாமல் வெளியே விடியல் தலைகாட்டியது. அடங்காத் தாபத்தின் எரிச்சல் சற்று தணிவதுபோலிருந்தது. அவள் எழுந்தாள். உள்ளே எண்ணெய் தீர்ந்து லாம்பு திரி கருகி அவிந்திருந்தது. வாழ்க்கை பெரும்பாலும் அவ்வண்ணமே நாகிக்கு கழிந்துகொண்டிருந்தது. மறுநாள் பகலிலே குந்தோடு சாய்ந்து வெளி பார்த்திருக்கையில்தான் முதல்நாள் வெற்றிலைச் சரையில் தான் வைத்திருந்த பணம் சதாசிவத்துக்கு ஞாபகம் வந்தது. எடுத்துவரச் சொல்லி பிரித்துப் பார்க்க வைத்த பணம் அந்தப்படியே இருந்தது. திருப்தியோடு பணத்தையெடுத்து நாகாத்தையிடம் கொடுத்தார். அவள் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தாள். அவர் ஒரு மெல்லிய சிரிப்போடு, தன் வெடித்தொழில் சாமர்த்தியத்தை சில பெடியன்களுக்கு காட்டிக் குடுக்கிறதுக்கு வாற சன்மானமென விளக்கினார். நாகிக்கு அதன் பாரதூரத்தனம் எவ்வளவு தெரிந்திருக்க முடியும்? அவள் அந்தப் பணத்தையும் அவரையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அவர் கல்தச்சரில்லையென அறிந்தபோது விழுந்திருந்த வெறுமை, ‘அந்தாளும் எதோ தெரிஞ்சிருக்குதுதான்’ என்ற அவளது எண்ணத்தால் நிரவியது. இலங்கை ராணுவம் வடமாகாணத்தில் ஒரு பயத்தை நிறைக்க அவ்வப்போதான சில பயங்கரங்களால் முயன்றுகொண்டிருந்தது. பலாலி, பருத்தித்துறை, காங்கேசன்துறை முகாங்களிலிருந்து ட்றக்குகளில் வரும் ராணுவம் கைதுகள், துப்பாக்கிச் சூடுகளால் மக்களைக் கதிகலங்க அடித்தது. கப்புதூ மக்கள் பயத்துள் விழுந்து கிடந்தார்கள். இந்திய ராணுவம் வடக்கில் நிலைகொண்டிருந்த தொண்ணூறுக்கு முந்திய நான்காண்டுக் காலத்தில் கப்புதூ கிராமவாசிகள் பலர் தத்தம் உறவினர் கிராமங்களுக்கு குடிபெயரந்து போயிருந்தனர். அப்போது மீண்டும் இலங்கை ராணுவத்தின் அச்சம் தலையெடுத்திருந்தது. மீதியானோரில் பலரும் வேறுவழி கண்டனர். சதாசிவம் அறிந்தாரோ இல்லையோ, உணர்ந்தாரோ இல்லையோ, நாகி எல்லாம் அறிந்தும், விளையக்கூடிய பயங்கரங்களை உணர்ந்தும் தவிப்பின் எல்லையை அடைந்துகொண்டிருந்தாள். சதாசிவம் சொல்லிவிட்டு அன்று வெளியே போனவர் வீடு திரும்ப இரண்டு நாட்களாயிற்று. வன்னிக்குப் போயிருந்ததாய்ச் சொன்னார். குடிக்கு கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு மீதியை நாகியிடம் கொடுத்தார். வெளியே சங்கக்கடைக்குப் போன தயாவும் கலாவும் திரும்பிவந்தனர். தயா கேட்டாள் தாயாரை, ‘சள்ளை எங்கயம்மா?’ என.
‘எங்கயோ, வெளிய போயிருக்கு.’
‘மீனெதாவது கிடைச்சுதாம்மா.’
‘வாங்கின்னான். இல்லாட்டி அண்டலிக்கேலாதே.’
அன்று மதியத்துக்கு மேல் வீடு திரும்பிய சதாசிவத்துக்கு நல்ல வெறி. இயக்கத்தின் தடை காரணமாக மதுவகை அருந்தலாகவே கிடைத்த காலமாயிருந்தது அது. சதாசிவம் எங்கே குடித்துவந்தாரோ? பிள்ளைகள் கெடுமலப்பட்டு வீட்டிலிருந்தன. அப்போதுதான் எதற்கோ அழுதுகொண்டு ஞானா வீட்டுக்குள் ஓடிவந்தான்.
‘ஏன்ரா?’
‘காளி விறாண்டிப்போட்டுது.’
‘எங்க... இஞ்ச வா, பாப்பம். எங்க விறாண்டினவள்?’
ஞானா முதுகைக் காட்டி அதற்காக ஒருமுறை அழுதான்.
‘கலா, வாடி இஞ்ச.’
முற்றத்திலிருந்த பூவரசிலிருந்து கம்பொன்றை பிடுங்கிச் சென்று அவளது கையில் ஓணான் பிதுங்கப் பிடித்தார். கண்ட நாகிக்கு பொத்துக்கொண்டு வந்தது. ‘எப்ப பாத்தாலும் இந்தாள் ஓடிப்போய் பூவரசங்கொம்பைத்தான் முறிக்கிறது. கையால ரண்டு தட்டைத் தட்டியிட்டு விடுவமெண்டுமில்லை. அதென்ன புள்ளையோ, ஆடுமாடோ?’ என பொறுக்கமுடியாமல் பொரிந்தாள்.
‘நீ சும்மா கிட’ என அவளை அதட்டி அடக்கினார். பின் நாலு பூசை வைத்தார் அவள் கதறக் கதற. நாகி ஓடிப்போய்த் தடுக்க இருக்கவில்லை. அவராகவே விட்டுவிட்டார். பின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். நாகி அடுப்பின் முன்னால் இருந்த வேளைமுழுக்க அதுபற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள். ‘அவள் என்ன பிழை விட்டாலும் கம்பைத்தான் இடுங்கிது இந்த மனிசன். எதாவது பிழை விடட்டுமெண்டு காத்திருக்கிறமாதிரி உடன கையைப் பிடிச்சுக்கொண்டு குண்டியில குறியெழுதிறது. என்ன மனமோ இந்தாளுக்கு?’ அவள் மனம் சஞ்சலத்தின் படிகளில் ஏறத்தொடங்கியது. வீடு திரும்பிய சதாசிவத்துக்கு போதை நன்றாகவே இருந்தது. பின்னேரமளவில் சாப்பிட்டுப் படுத்தார். எழும்பியதும் மறைத்து வைத்திருந்த சீல் சாராயப் போத்தலை எடுத்து மூடியைத் திருகித் திறந்தார். நாகியிடம் கிளாசை எடுத்துவரச் சொல்லி வார்த்து குடிக்கவாரம்பித்தார். துணி காயப் போட்டும், ஆட்டுக் கொட்டிலைக் கூட்டியும், விழுந்த தென்னோலைகளை இழுத்துப் போட்டும் வெளிவேலைகளிலிருந்த நாகி திண்ணமாய் எண்ணினாள், அன்று சாமத்தில் அவர் அழப்போகிறாரென. அதனால் ஓர் எச்சரிக்கையோடு இரவில் கிடந்திருந்தவள், ஒரு சாமத்தில் திடுக்கிட்டு எழுந்து திண்ணையைப் பார்த்தபோது சாசிவத்தின் பாய் வெறுமையாய்க் கிடந்தது. மேலே யோசிக்காமல் உள்ளே எழுந்து ஓடினாள். அவள் எதிர்த்தபடி கலாவின் பாவாடையை மேலே ஒதுக்கிவிட்டு தடவியபடி அழுதுகொண்டிருந்தார் சதாசிவம். அவ்வளவு கோபம் வந்தும் அவரை ஏச முடியாததால் சமாதானப்படுத்துவதான பாவனையில் அவரை வெளியே இழுத்துவந்தாள். பழையபடி சதாசிவம் பாயில் படுத்திருக்க, குந்தோடு சாய்ந்து விழித்திருந்தாள் நாகி. இப்படியேதான் அவளுக்கு காலம் கடந்திருந்தது, இலங்கை ராணுவம் 1994 வைகாசி 18இல் ஒப்பறேசன் ரிவிரசவை ஆரம்பிக்கிறவரையில். முதல் பீரங்கி வெடித்த சத்தத்திலேயே நாகி சொல்லிவிட்டாள், ‘இனி இஞ்ச இருக்கேலாது, வெளிக்கிடுங்கோ, நாங்கள் முள்ளியவளைக்கு போவ’மென்று. அந்த ஆணித்தரத்தை எதிர்க்க சதாசிவத்துக்கு சக்தியற்றிருந்தது. அவர் சம்மதித்தார். அவள் திட்டமிட்டே அதுமாதிரியான ஒரு தருணத்துக்காய் காத்திருந்து அவரை அங்கிருந்து கிளப்பினாள். தன் பிள்ளைகளை திட்டமிட்டே அவள் அங்கு வளர்த்தாள். அவளது திட்டத்தை மீறி ஓடியவன்தான் ஞானா. அவனை வைத்தே மற்ற மூன்று பிள்ளைகளையும் அன்றுவரை அவள் காப்பாற்றி வந்திருக்கிறாள். இனியும் அவர்கள் யுத்தத்திற்குள் இழுப்புண்டுவிடாமல் காக்கவேண்டித்தான் இருக்கிறது. யுத்தத்தின் ஓசை எதிரே அதிர எழுந்துகொண்டிருக்கிறது. அது நடப்பதென்னவோ கிழக்கு மாகாணத்தில்தான். ஆனால் முள்ளியவளைக்கு வர எவ்வளவு காலமாகும்? அவரது வெடி பொருளிலுள்ள கைத்திறன் அப்போது எவருக்கும் வேண்டியிருக்கவில்லை. அவர் பிழைப்பு நாறிப்போயிருந்தது. நாகி கொண்ட வலிமை குடும்பத்தில் இறுக மனவிறக்கம்கொண்டவராய் சதாசிவம் யாழ்ப்பாணமென்றும், மன்னாரென்றும், கொழும்பென்றும் அலையத் தொடங்கினார். அவரை அவ்வப்போதாவது தடுக்க பாதைகளால்மட்டுமே முடிந்திருந்தது. அவர் கஷ்டப்பட்டிருக்கலாம். பசி பட்டினியை அடைந்திருக்கலாம். ஆனால் நாகி தன் பிள்ளைகளை பசி காண விட்டாலும் பட்டினி கிடவாமல்தான் காத்தாள். அதற்காக அவள் தன்னின் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் வியர்வையாக்க நேர்ந்தது. அவ்வாறு பத்து பன்னிரண்டு வருஷங்களாக வளர்த்தெடுத்த குடும்பம் அப்போது என்னமாதிரி அவலட்சணம் அடைந்திருக்கிறது! கலாவுக்கு அந்தப் பெடியனையே செய்துவிட வேண்டியதுதானென்பதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை அவளுக்கு. ‘கலா வரட்டும். பேசவேணும்.’ சிறிதுநேரத்தில் முகம் கழுவிவிட்டு கலாவதியும் திண்ணையில் வந்து சற்றுத்தள்ளி தாயெதிர்க்க அமர்ந்தாள். கலாவதிக்குத் தெரிந்திருந்தது அவள் தன்னோடு தன் எதிர்காலம்பற்றி பேசவிருக்கிறாளென்பது. இருவருக்குமிடையில் பூர்வாங்கப் பேச்சுக்கள் வேண்டியிருக்கவில்லை. நேரடியாகவே பேசினாள்:
“அந்தப் பெடியன் என்னமாதிரி, கலா, கலியாணத்துக்குச் சம்மதிக்குமோ? அதுகின்ர தாய் தேப்பன்ர விருப்பம் என்னமாதிரி?”
“அவருக்குச் சம்மதம்தான், அம்மா. தாயில்லை. தேப்பன் மட்டும்தான். அவரும் இந்தியாவில அகதி முகாமில இருக்கிறாராம். பிரியன் தனியத்தான் இஞ்ச.”
“அதென்ன பிரியன்… முழுப் பேரென்ன?”
“ஈழப்பிரியன்.”
“இயக்கத்துப் பேர்மாதிரிக் கிடக்கு…?”
“அவர் ஒரு இயக்கத்திலயும் இல்லை.”
“ம்…! இனி கலியாணமென்ன கலியாணம்… அதுவும் பிள்ளை வயித்தோட... நீ அந்தப் பெடியனை வந்திருந்து குடும்பத்தை நடத்தச்சொல்லு. எதுக்கும் ஒருக்கா நேரில வரச்சொல்லு, நான் கதைக்கிறன்.”
“சரியம்மா.”
அறைக்குள்ளே எவ்வளவு நேரமாக தயாநிதி நின்றிருந்தாளோ? எல்லாம் கேட்டிருப்பாள்போலவே தோன்றினாள். வெளியே வந்தவள் விஷயத்திலிருந்து ஒதுங்கவில்லை. நேரடியாகவே தன் அபிப்பிராயத்தைச் சொன்னாள்:
“நீங்கள் ஒருத்தரையும் கேக்காமல் தன்னிஷ்டப்மாய் இதுகளைச் செய்யேலுமோ, அம்மா? தனபாலுவைக் கேக்கவேணும், ஞானாவைக் கேக்கவேணும்…”
நாகி இடைமறித்தாள்: “இனிக் கேட்டு ஒண்டும் ஆகப்போறேல்லை, தயா. அவை விரும்பினாலென்ன விரும்பாட்டியென்ன, ரண்டு பேரையும் சேத்துவைக்கிறதத் தவிர வேற வழியும் இப்பயில்லை.”
“அப்பிடியெண்டாலும் இஞ்ச இருக்கிறதும் கஷ்ரம்தான, அம்மா.”
“ஓ… அந்த விஷயத்தில நீ கண்ணாயிருக்கிறியோ? சனங்களெல்லாம் இப்ப ஒண்டடிமண்டடியாய்தான கிடந்தெழும்புதுகள்? ஏன், இந்த வீட்டுக்கென்ன? சின்னதெண்டாலும், எங்கட சொந்தமெல்லே? தேவையெண்டா நாலு குடும்பம் இதுக்குள்ளயிருந்து காலந்தள்ளலாம்.”
நாகி எழுந்துவிட்டாள்.
அவளளவில் அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது.
அடுத்த வாரத்தில் ஒருநாள் பிரியன் ஒரு கறுப்பு சின்ன பாய்க்கோடும், ஒரு பழைய சைக்கிளோடும் நாகி வீட்டுக்கு குடும்பம் நடத்த வந்தான்.
[தொடரும்]
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|