திருமதி. பெரேரா' எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள 'ஆதிரை பதிப்பகம்' இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததிலும், அவரது சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ஒரு நூலாக வெளிவருவதையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
'திருமதி. பெரேரா' எனும் இந்தத் தொகுப்பில் இதுவரையில் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 'திருமதி. பெரேரா' எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவல் போல இந்தத் தொகுப்பை நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கை கோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர்நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர் தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம்.
மிகவும் சூட்சுமமாக, மனித ஜீவிதத்தில் யாரும் காணும் எனினும் எவருக்கும் தென்படாத அல்லது எவராலும் கண்டுகொள்ளப்படாத விடயங்களை, இஸுரு தனது சிறுகதைகளின் மூலமாக மனித உள்ளங்களின் மென்மையான இடங்களைத் தொட்டு, காண்பித்திருக்கிறார். கதையை, கதை சொல்லும் விதத்தை, கதைக்குத் தேவையான மொழிநடையை சரியான விதத்தில், சரியான இலக்கில் குவித்து எழுதும்போது சிறுகதை வழியே சாதாரண ஒரு விடயத்தைக் கூட, மிக ஆழமாக உணரச் செய்யலாம் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள இஸுருவின் சிறுகதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.
அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் வழியே, எவரும் கண்டிராத அவர்களின் இரகசியப் பக்கங்களை வெளிப்படையாகத் திறந்து விட்டிருக்கிறார் இஸுரு. கட்டுக்கோப்பானதும், மீறினால் சட்டத்தால் தண்டிக்கப்படக் கூடியதுமான இறுக்கமான கலாசாரப் பின்னணி கொண்ட இலங்கை சமூகத்தினுள்ளே விரவிக் கிடக்கும் மறைவான பக்கங்களை குறிப்பாக, பாலியல் தொடர்பான விடயங்கள், விகாரை மடங்களில் பால்ய வயது பிக்குகள் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பெண்களின் உள்ளக் குமுறல்கள், மதத்தின் போர்வைக்குள் இருக்கும் அரசியல் போன்ற, எவரும் வெளிப்படையாகப் பேசக் கூட அஞ்சும் விடயங்களை தைரியமாக தனது சிறுகதைகள் மூலமாக வெளியே கொண்டு வந்திருக்கிறார் இஸுரு எனும் இந்த இலக்கியப் போராளி. எனவே இவரது சிறுகதைகளை ஒருபோதும் ஒதுக்கவோ, தவிர்க்கவோ இயலாது. போலவே, இந்தச் சிறுகதைகள் ஒவ்வொன்றும் வாசகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கக் கூடியவை. திரும்பத் திரும்ப வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுபவை.
கிராமமாகட்டும், நகரமாகட்டும். நமதும், நமது அயல் மனிதர்களதும் உணர்வுச் சிக்கல்களை மனதுக்கு மிகவும் நெருக்கமாக முன்வைப்பவை இஸுருவின் சிறுகதைகள். சிறு பிள்ளையொன்றைக் கையைப் பிடித்து அருகிலமர்த்திக் கொண்டு கதை சொல்வதைப் போல, மென்மையாகத் தொடங்கி வாசகனை வெகு யதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் கதையோடு ஒன்றச் செய்யும் அவரது கதை சொல்லும் இலாவகம் மிகவும் அலாதியானது. தனிச்சிறப்பானது. இஸுருவின் 'சிங்கள மொழிநடை மிகவும் இறுக்கமானது, வாசிக்கச் சிரமமானது' என்றெல்லாம் சிங்கள வாசகர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் கூட, முன்பு இவரது கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவம் எனக்கு இருந்ததால், இந்தச் சிறுகதைகளின் மொழிநடையை தமிழில் வெகு இயல்பாக என்னால் கையாள முடிந்தது.
காலச்சுவடில் வெளிவந்த இஸுருவின் 'நீலப் பூச் சட்டை' சிறுகதை மூலமாக அவரை பல தமிழ் வாசகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் உள்ளது. இந்த 'திருமதி. பெரேரா' தொகுப்பிலுள்ள அவரது ஏனைய சிறுகதைகளும் அவரை தமிழ் வாசகர்களிடத்தில் இன்னுமின்னும் நெருக்கமாக்கும். தமிழகத்தில் இந்த நூலை டிஸ்கவரி புக் பேலஸிலும், அனைத்து இணைய நூல் விற்பனைத் தளங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|