உங்களது பூர்வீகம் (பிறப்பிடம்),கல்லூரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?
நான் ஈச்சந்தீவு என்ற தமிழ் குக்கிராமத்தில் 1970.06.02 இல் சேகு அப்துல்லா காலஞ்சென்ற நஜ்முன் நிஷா என்போருக்கு மகனாகப் பிறந்தேன். இக்குக்கிராமம் திருமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கிராமத்தில் அமைந்திருக்கின்ற ஈச்சந்தீவு விபுலானந்த வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்றேன். பின்னர் ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த. சாதாரண தரம் வரை கற்றேன்.
இது முற்று முழுதாக தமிழ் மக்கள் வாழுகின்ற ஒரு பிரதேசம். 1985 ஆம் ஆண்டு பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக பாடசாலைக்குள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அகதிகளானதால் கா.பொ.த. சாதாரண தரக் கல்வியைப் பூரணப்படுத்த முடியாமையினால் 1986 ஆம் ஆண்டு சின்னக் கிண்ணியா அல் அக்ஸா மகா வித்தியாலத்தில் இணைந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து உயர் தரப் படிப்புக்காக பேருவளையில் அமைந்திருக்கின்ற ஜாமியா நளீமியா என்ற கலா பீடத்துக்குள் 1987 இல் நுழைந்தேன். அங்கு ஏழு வருடங்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களையும் அரபு மொழியையும் சிறப்பாகக் கற்று 1994 இல் பட்டம் பெற்று வெளியேறினேன்.
உங்கள் குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனக்கு ஆறு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள். மனைவி பட்டதாரி ஆசிரியை. எனக்கு ஐந்து பிள்ளைகள். அதில் மூன்று பெண் குழந்தைகள மற்றும் இரண்டு ஆண் மக்கள். தற்போது நான் கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் நிதி மற்றும் நிர்வாக பகுதியின் சிரேஷ்ட உத்தியோகத்தராகக் கடமை புரிகின்றேன்.
உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?
1994 இல் ஜாமியா நளீமியாவிலிருந்நு ஏழு வருடக் கற்கை நெறிகயைப் பூர்த்தி செய்துவிட்டு மாவனல்லை என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற ஹெம்மாதகம என்ற இடத்தில் உள்ள அல்ஹஸனாத் என்ற அரபுக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் ஆசிரியராகக் கடமை புரிந்தேன். பின்னர் இரண்டு வருடங்கள் மாகொல அனாதை இல்லத்தில் (1996 - 1998) வரை ஆசிரியராகக் கடமை புரிந்தேன். அதன் பின்னர் ஒரு வருடம் (1998 - 1999) கிண்ணியாவில் அமைந்திருக்கின்ற அந்நஹஜுல் கவீம் அரபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினேன்.
தொடர்ந்து 1999 இல் சவுதி அரேபிய தம்மாம் என்ற இடத்தில் சுமார் மூன்று மாதங்கள் ஒர் அலுவலகத்தில் செயலாளராகக் கடமையாற்றினேன். அதன் பின்னர் மீண்டும் 2001 ஆம் ஆண்டில் சவுதி அரேபிய தம்மாம் நாட்டின் இன்னொரு அலுவலகத்தில் செயலாளராக மூன்று மாதங்கள் பணி புரிந்தேன். 2002 ஜுன் மாதம் சவுதி அரேபியாவுக்காக இலங்கை தூதரகத்தில் உதவிக் கணக்காளராக இணைந்து தற்போது வரை அங்கு கடமையாற்றி வருகின்றேன்.
உங்களை சமூக சேவைகள் செய்ய வேண்டும் என்று தூண்டிய விசேட காரணங்கள் யாவை?
சமூக சேவை செய்வதென்பது ஒரு சுகமான சுமையாகும். படைத்த இறைவன் என்னைப் போன்று பலரைப் படைத்திருக்கிறான். சிலருக்கு எல்லையற்ற ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். சிலர் தமக்குக் கிடைத்த ஆற்றல்களை வளர்த்திருக்கிறார்கள். பலர் தங்கள் குடும்பத்திற்காக என்று சுயநலப் போக்கில் மட்டும் வாழ்கின்றனர். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. எத்தனையோ பேர் துன்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
பொதுவாக எல்லாம் எல்லோரும் செய்கின்ற வேலைதான். உண்பது, உறங்குவது, திருமணம் முடிப்பது, பிள்ளை குட்டிகளைப் பெற்றெடுப்பது. ஓரு நாயும் ஒரு மனிதனும் இதனைத்தான் செய்கின்றன. துன்பப்படுகவர்களின் கஷ்டங்களை முடியுமான அளவு ஓரளவேணும் தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் சமூக சேவை செய்யத் தூண்டிய முக்கியமான அம்சம். எமக்கு இறைவனின் உதவி, அருள் வேண்டுமாயின் மனிதனுக்கு உதவி செய்வது கட்டாயக் கடமையாகிறது. இதனை நபியவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
'ஓர் அடியான் இன்னோர் அடியானுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் உதவி செய்யும் அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டே இருப்பான்' இந்தப் பொன்மொழி சமூக சேவைப் பணியைச் செய்வதற்கு தூண்டிக் கொண்டே இருக்கிறது.
எப்போது, எந்த வயதிலிருந்து இவ்வகையான சமூகப் சேவைகளைச் செய்ய ஆரம்பித்தீர்கள்? எத்தனை வருடங்களாகச் செய்து வருகின்றீர்கள்?
பதினாறு வயதிலிருந்து பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. படிக்கின்ற காலம் அது. நண்பர்களுக்கு பாடங்கள் விளங்காத போது அவர்களுக்கு விளங்கப்படுத்துவது எனது பணியாக அமைந்தது. கற்றுக்கொடுத்தல் கூட ஒரு சமூக சேவைதான். பணத்தை மாத்திரம் தான் கொடுக்க வேண்டும் என்பதல்ல. ஒரு மனிதனுக்கு ஆறுதல் கூறுவது அவனது துன்பங்களைத் துடைக்க முனைவது எல்லாமே சமூக சேவைப் பணிதான்.
கணிதப் பாடம் அறவே விளங்காத சக வகுப்பு நண்பர்களுக்கு மற்றும் உயர் தரத்தில் கற்றோருக்கு கற்றுக் கொடுப்பதில் இன்பம் கண்டேன். பின்னர் ஜாமியா நளீமியா கலா பீடத்துக்குள் நுழைந்தபோது அரபு மொழியைக் கற்கின்ற வகுப்பில் பலர் அதனை விளங்கக் கஷ்டப்படுகின்றனர். இவ்விடத்தில் நண்பர்களுக்கு கற்றுக் கொடுத்தல் மற்றும் எனது கீழ் வகுப்பு மாணவ சகோதரர்களுக்கு கற்றுக் கொடுத்தல் என்பதை எனது பழக்கமாக்கிக் கொண்டேன். ஒட்டுமொத்தத்தில் கற்றுக்கொடுப்பது என்பது எனது தீராத வேட்கையாக சிறுவயது முதல் இருந்து வந்தது.
"மனிதாபிமானத்தின் தோழர்கள் - Companions of Humanity" என்ற அமைப்புப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாமே? அந்த அமைப்பில் யார், யாரெல்லாம் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்?
சமூக சேவை என்பது தான் சார்ந்த இனத்துக்கு மட்டும் செய்ய வேண்டுமென்று அனேகமானோர் நினைக்கின்றனர். மனிதாபிமான உதவிகள் மனிதர்களுக்குச் செய்ய வேண்டும் என்பது எனது மாற்ற முடியாத உறுதியான கருத்து. இக்கருத்தை அல்குர்ஆனும் நபியவர்களின் வாழ்க்கையும் தந்தது. எனவேதான் மனிதாபிமானத்தின் தோழர்கள் என்ற கருத்தைக் கொண்ட அமைப்பை உருவாக்கினேன்.
Friends என்ற சொல்லுக்கும் Companions என்ற சொல்லுக்கும் நுணுக்கமான வேறுபாடு உண்டு. Companions என்றால் எப்போதும் ஒன்றாக வாழுகின்ற தோழர்கள் என்ற கருத்திலே இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.
நபியவர்களின் சஹாபாத் தோழர்கள் என்ற கருத்தில் எப்போதும் மனிதாபிமானத்தைக் கொண்டிருப்பவர்கள் என்ற அர்த்தத்தில்தான் எமது அமைப்புக்கு இப்பெயரைச் சூட்டினேன். இது இனம், மொழி கடந்த அமைப்பு. இதனுடைய போசகராக மல்வானையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட பஸுல் ஜிப்ரி அவர்களும், கௌரவ உறுப்பினராக திருமலை மாவட்ட ஆயர் நொயெல் இமானுவேல் அவர்களும் இருக்கின்றார்கள்.
இவ்வமைப்பின் ஆலோசகர்களாக - மொரவாவ பிரதேசத்தின் தவிசாளர் மற்றும் அங்கு காணப்படும் விகாரையின் பொறுப்பாளர் பொல்ஹேன்கொட உபரத்ன நாஹிமி அவர்களும், சமூக சேவையாளர் இனம் மதம் கடந்து சிந்திக்கின்ற மிகப் பிரபலம் வாய்ந்த வைத்திய கலாநிதி ஹேமச்சந்திரன் அவர்களும், எனக்கு கணிதப் பாடம் கற்றுத் தந்த மிகவும் ஆற்றல் நிறைந்த ஓய்வு பெற்ற அதிபர் அப்துல் அஹத் அவர்களும் கடமை புரிகின்றனர்.
இவ் அமைப்பின் உப தலைவராக நீண்ட காலம் சமூக சேவை அமைப்பில் ஈடுபடுகின்ற எம்.எம். பௌஸானாவும், செயலாளராக சட்டத்தரணியும் விஞ்ஞான முதுமானியுமான மஜீத் நிஜாமுதீன் மற்றும் உப செயலாளராக கலிலுல்லா தஸ்லீம் மற்றும் பொருளாளர்கராக ஸுலைம், ஊடகவியலாளர் ஆஷிக் வதூத் அவர்களும் பணிபுரிகின்றனர்.
பட்டயக் கணக்காளர் ஜே.எம். நாளிர் மூதூர் கட்டைபறிச்சான் ஆசிரியை இந்திரா காந்தி, ஆங்கில ஆசிரியர் திலங்க ரத்னபால மற்றும் சவுதி அரேபியா தூதரக உத்தியோகத்தர்களான ஏ.எம். பாஹிர், ஆர். இஜாஸ் அஹ்மட் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
சமூக சேவைகள் செய்வதில் நீங்கள் எவ்வகையான மனநிறைவை அடைந்து கொள்கின்றீர்கள்?
எமது சிந்தனையை மற்றும் எமது உதவிகளை மற்றவர்கள் பெற்றிருக்கிறார்கள், அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று பார்க்கின்றபோது அடைகின்ற ஆனந்தம் இதுதான். அது ஒரு பேரின்பம் என்பதை உணர முடிகின்றது.
எனது வயிறு நிரம்புவது போன்று எல்லா மனிதர்களது வயிறு நிரம்ப வேண்டும். நான் தூங்குவது போன்று எல்லோரும் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று நினைக்கின்ற சமூக சேவைப் பணி ஓர் அலாதியான இன்பம். இதில் ஏற்படுகின்ற எத்தனையோ தடைகளையும் சவால்களையும் தாண்டுகின்ற போது அடைகின்ற உவகையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
நன்மைகள் செய்வதற்குப் பதிலாகக் கிடைப்பது கழுத்து முடியும்வரை மாலை அல்ல, ஏச்சுப் பேச்சுக்களும்தான். கழுத்தை முறிக்கும் அளவு விமர்சனங்கள் கழுத்தில் மாலைகளாக விழுந்தாலும் அதில் கிடைக்கின்ற இன்பம் வர்ணிக்க முடியாதவை. எனவேதான் சமூக சேவை ஒரு சுகமான சுமை என்ற உணர்வோடு நாம் உலா வருகின்றோம்.
சமூக சேவைகளை முன்னெடுக்க விரும்பும் புதியவர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?
வயிறு வளர்ப்பதற்கு உரிய இலகுவான வழி NGO. அவ்வாறே இது ஏழைகளின் கண்ணீர் துடைத்து ஆனந்தக் கண்ணீரில் மிதக்கும் ஓர் அழகிய பணி. தூய்மையான எண்ணம் இருந்தால் மட்டும் செய்யுங்கள். இல்லையென்றால் நரகம் போவதற்கு இலகுவான வழி சமூக சேவை அமைப்பு. இப்பணி மூலம் சுவனமா அல்லது நரகமா என்பதை உருவாக்குகின்ற நோக்கத்திலிருந்து தொடங்குகின்றது. சுவனமே என் இலக்கு என்று ஓரு சமூக சேவை அமைப்பை உருவாக்கி தொழிற்படுங்கள் என்று மாத்திரமே கூறமுடியும். தூய்மையாகவும் நேர்மையாகவும் செய்வதென்பது ஒரு பெரும் போராட்டம். எனவே பொதுவாக சமூகத்தில் இருக்கின்ற எல்லோரையும் கருத்திற்கொண்டு பணி செய்யுங்கள்.
எவ்வகையான சமூகப் பணிகளைச் செய்து வருகின்றீர்கள்? யார் யாருக்கெல்லாம் உங்கள் அமைப்பினூடாக உதவிகள் வழங்கப்படுகின்றன?
எல்லா வகையான பணிகளையும் செய்வதற்கு முயற்சி செய்கின்றோம். ஏழை மாணவர்களுக்கு கல்விக்காக உதவுதல் என்பதைப் பிரதானமாகக் கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் என்ற அடிப்படையில் எமது நிதிப் பங்களிப்புக்களைச் செய்து வருகின்றோம்.
எது மிகப்பெரும் தேவையோ அவற்றைச் செய்வதற்கு முடியுமான அளவு முக்கியத்துவம் வழங்குகின்றோம். கிணறு கட்டிக் கொடுத்தல் என்பதை பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டோம். மலசலகூட வசதிகள் மிகக் கட்டாயமானது. எனவே இத்தகைய பணிகளை செய்வதற்கு முன்னுரிமை வழங்குகின்றோம். பள்ளிவாயல்கள் கட்டுதல் என்பதைவிட புணர் நிர்மாணம் செய்வது சாலச் சிறந்தது என்ற கருத்தில் பல வேலைத் திட்டங்களை செய்கின்றோம். வறியவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்துவது என்பது மற்றுமொரு சேவை. தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு என்பதும் நிலையான பெரிய தர்மம் என்று கருதி இவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றோம்.
கல்வி ஒரு மனிதன் பெறுகின்ற மாபெரும் சொத்து என்பதை நினைவில் கொண்டு சமூக சேவையின் ஊடாக சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது இவ்வமைப்பின் பிரதான பணிகளுள் ஒன்று. திடீர் அனர்த்தம் அவ்வப்போது ஏற்படும் போது களத்தில் நின்று பணிபுரியும் அமைப்பாக எமது அமைப்பு திகழும்.
பல்வேறு வகையான பொறுப்புக்களுக்கு மத்தியில் சமூகப் பணிகள் செய்வது சிரமம் என்று நினைக்கவில்லையா?
ஒரு போதும் அப்படிக் கருதவில்லை. சிரமத்தையும் சுமைகளையும் தாங்கிய உள்ளங்கள் சிரமங்கள் இல்லாமல் வாழவே முடியாது. சிரமம்தான் வாழ்வின் அடிப்படை. கஷ்டத்தோடு தான் இலகு இருக்கிறது. துன்பத்தோடுதான் இன்பம் இருக்கிறது. தூசு படாத வாழ்க்கையும் குளிரூட்டப்பட்ட வாகனங்களும் பஞ்சனை மெத்தைகள் என்று வாழாத எமக்கு, சிரமங்கள் கஷ்டங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை. சிரமங்கள் தாண்டி மனித மனங்களில் வாழத் துடிக்கின்றோம். இதுதான் இன்பமான வாழ்க்கை என்று கருதுகின்றோம்.
சமூக சேவையில் ஒன்றிப்போன உங்களின் சேவைகளைப் பாராட்டி விருதுகள் கிடைத்துள்ளனவா? அதுபற்றிக் குறிப்பிடுங்கள்?
விருதுகள் கிடைக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைத்து சமூக சேவைகளைச் செய்யவில்லை. சமூக சேவைக்கான விருதுகளை படைத்த இறைவன் மட்டும்தான் தர முடியும். ஆனால் சமூக சேவைகள் செய்தமைக்காக பல பொன்னாடைகள் கிடைத்திருக்கின்றன. பொன்னாடையை ஒருபோதும் விரும்பாத நான், பல தடவை பொன்னாடை போர்ரத்தப்பட்டிருக்கிறேன். அண்மையில் சமாதானத்துக்கான அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றும் நான் செய்த சமூக சேவைகளைப் பாராட்டி கலாநிதி பட்டமொன்றையும் Man of Nation பட்டம் ஒன்றையும் தந்தார்கள். ஆனால் நான் இவ்வகையான பட்டங்களுக்கு ஆசைப்பட்டதேயில்லை. காசு கொடுக்காமல் கிடைத்த பட்டம். அதனால் அதை அங்கீகரிக்க வேண்டிய கட்டம்.
எழுத்துத் துறையில் எவ்வகையான ஆக்கங்களை எழுதி வருகின்றீர்கள்?
எனது வாழ்க்கை போராட்டம் மிக்கது. உட்கார்ந்து எழுத நேரமிருக்கவில்லை. மனதும் இடம் கொடுக்கவில்லை. ஆனால் எழுதும் பலரை உருவாக்கியிருக்கிறேன். கவிதைகள் எப்படி எழுதுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு கவிதையையும் நான் எழுதவில்லை. என் மாணவர்கள் எழுதிய கவிதைகளை வாசிப்பதில் இன்பம் கண்டிருக்கிறேன்.
கொரோனா மட்டும்தான் என்னை எழுத வைத்தது. பேச வைத்தது. பேஸ்புக்கை நான் சில காலம் மணந்து கொண்டேன். என்னை எழுத வைத்தது கொரோனா. எழுதியது பேஸ்புக்கில் மட்டும்தான். பல நூறு புத்தகங்களை படிக்கும் காலங்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் நீண்ட காலம் வாசிப்புக்கும் தலாக் சொல்லி இருக்கிறேன். (விடுதலை கொடுத்திருக்கிறேன்). இப்பொழுது கொஞ்சம் எழுதத் தொடங்கியிருக்கிறேன். எழுத வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தச் சமுதாயம் உயர வேண்டும் என்பதற்காக.
இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டுகின்றீர்களா? எதிர்காலத்தில் உங்களது புத்தக வெளியீடுகள் இடம்பெறுமா?
இலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது. இலக்கியவாதிகளை உருவாக்க மனம் இருக்கிறது. உரை நடை இலக்கியத்தில் ஈடுபாடு காட்டுகின்றேன். என்னால் சமூக நோக்கில் எழுதப்பட்ட பல கட்டுரைகள் எனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். முகப் புத்தகத்தில் தினமும் எழுதுகின்ற நோக்கமே அனைத்தையும் நூலுருப்படுத்த வேண்டும் என்பதனாலேயாகும்.
என்னைப் பற்றிய சுயசரிதைப் புத்தகம் எழுதி வெளியிடும் நோக்கமும் உள்ளது. இலக்கியம் என்ற பெயரில் காதல் கவிதைகளை எழுத விருப்பம் இல்லை. சமுதாய சீர் திருத்தம் தொடர்பாக எழுத வேண்டும் என்பதுதான் எனது தீராத ஆசை. எனது பிள்ளைகளும் எதிர்காலத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றேன்.
தன்னால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் தான் ஒரு எழுத்தாளனை அடையாளப்படுத்துமா? இதுபற்றிய உங்களது கருத்து என்ன?
ஆம். எழுத்தாளன் யார் என்பதை அவனது எழுத்துக்கள் சொல்லும். கவிஞன் காலத்தின் கண்ணாடி. ஒரு மனிதன் எவ்வாறான சமூக சூழலில் சிக்குண்டு வாழ்ந்திருக்கிறான் என்பதை அவனது எழுத்துக்களை வைத்து அறிந்து கொள்ள முடியும். எழுத்தாளன் மரணிப்பதில்லை. மரணித்தாலும் வாழ்பவன். ஒரு எழுத்தாளர் மரணித்தாலும் வாழ்வுக்கு முகவரி கொடுப்பவன்.
உங்களது சமூகப் பணிகளால் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்களா?சமூகம் இலகுவில் மாறாது. சமூகத்தை முற்றாக மாற்றவும் முடியாது. மாற்றங்களை இலகுவில் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது. என்றாலும் மாற்ற முயற்சிப்பது நமது கடமை. நமது கடமையை நாம் செய்வோம். படைத்த இறைவன் நினைத்தால் மாற்றுவான். அல்லது மாற்றாமல் விட்டுவிடுவான். அதற்காக நாம் எமது சமூகப் பணியை விடக்கூடாது.
சமூகப் பணி தவிர்ந்த ஏனைய துறையில் உங்களது நாட்டம் எப்படி?
உண்மையில் சிலர் சகல துறை ஆட்டக்காரர்கள். ஆனால் நானோ எவ்வித விசேடமான ஆற்றல்களும் இல்லாதவன். இருக்கும் ஆற்றல்களோ கொஞ்சம் பேசுவதும், கொஞ்சம் எழுதுவதும், சமூக சேவைகளில் ஈடுபடுவதும் போன்றவை மட்டுமே.
பல்வேறு வகையான தலைப்புக்களில் நீங்கள் ஆற்றிய உரைகளை இணைய ஊடகங்களில் காண முடிகிறதே, நீங்கள் ஆற்றிய அந்த உரைகள் பற்றியும் சொல்லலாமே?
ஆம். நான் அண்மைக்காலம் முதல் எழுதுவதைவிட இணைய ஊடகங்களில் பேசி வந்தேன். அவை அனேகமாக எனது பேஸ்புக் பக்கத்தில் காணப்படுகின்றன. நான் பேசிய ஒரு சில உரைகள் சக்தி டிவி மற்றும் UTV பக்கங்களிலும் இருக்கின்றன.
KIN TV, Kinniya TV, Siraj TV என்று பல இணைய ஊடகங்களில் எனது பல்வேறு தலைப்புக்களிலான உரைகள் காணப்படுகின்றன. காலத்துக்குத் தேவையான உரைகளாக அவை அமைந்திருக்கக் காண்பீர்கள்.
இந்த நேர்காணலூடாக விசேடமாகக் கூற விரும்பும் செய்தி என்ன?
ஒவ்வொரு மனிதனும் அர்த்தமில்லாமல் வாழ்ந்து மடியக் கூடாது. முகவரியோடு வாழ்ந்து, முகவரியோடு மரணிக்க வேண்டும். மரணம் நம்மைப் பற்றி பேச வேண்டும். நமது மரணம் வரலாறு படைக்க வேண்டும். மரணத்துக்குப் பின்னால் வாழும் படியான பணிகளைச் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பிரயோசனம் கொடுக்கும்படி வாழ்ந்து இவ்வுலகுக்கு பிரியா விடை கொடுக்க வேண்டும். இந்த நேர்காணல் கூட எனது புகழுக்கு அல்லாமல், யாருக்காவது பயனளிக்க வேண்டும்.
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?
எனது வாழ்வில் நிகழ்ந்த எல்லாம் மறக்க முடியாத சம்பவங்களே. எல்லா சம்பவங்களும் சமதரத்தில் இருப்பதனால் எதனைக் கூறுவது? ஆயினும் தொழில் அனுபவம் ஒன்றை கூற விரும்புகின்றேன்.
விசித்திரமான மனிதர்களைச் சந்திக்கின்ற விசித்திரமான உலகில் நாம் வாழ்கிறோம். நான் வேலை செய்த இடத்தில் சட்ட திட்டங்கள் சற்று வித்தியாசமானவை. விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு போடப்பட்ட சட்டம். ஆனால் சட்டத்தை மீறுவது தவிர்க்க முடியாது. மீறுவது அடிப்படையாகிப்போன சட்டங்கள். சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறையாக இருந்தாலும் 250 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் செல்ல முடியாது. கொழும்பில் வேலை என்றால் கொழும்பில் தான் இருக்க வேண்டும் என்பது எனக்கு போடப்பட்ட இருக்கமான சட்டம். ஒரு நாள் நான் சட்டத்தை மீறி கந்தளாய்க் குளத்தை அடைந்தேன்.
எனது மேலதிகாரியிடமிருந்து திடீரென தொலைபேசி அழைப்பு வந்தது. எங்கே இருக்கிறாய்? கொழும்பில் இருக்கின்றேன் என்றுதான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். கொழும்பில் என்றேன். ஆனால் கந்தளாய்க் குளத்தின் வழியில், வாகனத்தில் பயணம் செய்யும் போதும் ஏற்படுகின்ற காற்று வாகனத்தின் ஜன்னல் வழியே என் தொலைபேசியில் அலையாக வீசியபோது சொல்வது பொய் என்று புரிந்துகொண்டார் என் தலைவர். நான் மாட்டிக்கொண்டேன்.
தொடர்ந்தேர்ச்சியாக விட்டு விட்டு ஒரே கேள்வி, ஒரே பதில். ஆனால் நான் சொல்வது பொய் என்பதைப் புரிந்துகொண்ட அவர், கொழும்பில் நான் இருக்கும் முகவரியைக் கேட்டார். எனது அலுவலக சாரதியிடம் கடிதம் ஒன்றை அனுப்பி, அதனை மொழி பெயர்த்துத் தரும்படி வேண்டினார். நான் வேறு வழயில்லாமல் கந்தளாயில் என்றேன். காது இரண்டும் வெடிக்கும் அளவு வெடிகள், சரமாரியாக காதுக்குள் வேட்டுக்களாக முழங்கின. அதே இடத்தில் வாகனத்திலிலுந்து இறங்கி, வாங்கிய அப்பிள் பழங்களையும் ஒரேஞ்சுகளையும் சாரதியிடம் கொடுத்து, பிள்ளைகளுக்கு ஒப்படையுங்கள் என்று சொல்லிவிட்டு பாதை வழியாக வந்த பேருந்தில் உடனே கொழும்புக்குச் சென்று கசப்பான இரண்டு இரவுகளை கவலையோடு கழித்தேன். இது மறக்க முடியாத சம்பவங்களுள் ஒன்று.
எதிர்காலத்தில் எப்படியெல்லாம் உங்களது சமூகப் பணிகளை விஸ்தரிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
நாம் இப்பொழுது எமது மாவட்டத்தை மையமாக வைத்து பொதுவாக பணிகளைச் செய்து வருகின்றோம். தேசிய ரீதியிலும் ஓரளவு சில பணிகளைச் செய்து வருகின்றோம். எதிர்காலத்தில் முழு இலங்கை நாட்டுக்கும் குறிப்பாகவும் துன்பப்படுகின்ற
மானிட வர்க்கத்திற்கு உலகளாவிய ரீதியில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே அவா.
இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
மரணம் நிச்சயம். எப்படி வரும், எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. எப்போது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும்படியான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சத்தியத்தின் காவலர்கள் சொற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களோடு இணைந்து பணிபுரிய வேண்டும். அசத்தியவாதிகள் எங்களை வாழ விடமாட்டார்கள் என்பது உண்மைதான். என்றாலும் சத்தியத்தை சுகித்துக் கொண்டு மரணத்துக்காக வாழ வேண்டும் என்று அனைவரையும் பணிவாய் கேட்டுக்கொள்கின்றேன்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Next• •>• |
---|