வழக்காறுகளைப் பற்றிய வழக்காறுகள் என்ற சொல்லாட்சி கூர்ந்து நோக்கத்தக்கது. வழக்காற்றினைக் குறிக்கும் சொற்கள், சொல்லிலிருந்து உருவான வழக்காறுகள் என்ற இருநிலைகளில் நோக்கும்போது பெரும்பான்மையான சொற்கள் வழக்காற்றிலிருந்து கிளைத்தவையாகும். வழக்காறுகளின் ஆன்மா என்பது நிகழ்த்துதல் மற்றும் இயங்குதலில் உறைகின்றது. சொல்வழக்குகளும் அதன் நிலைபேறில்தான் உயிர்த்திருக்கின்றன. சொல்லோடு தொடர்புடைய பண்பாடும், வழக்காறுகளும் அச்சொல்லின் நிலைபேற்றிற்கு அடிப்படையானவை. செயல்தன்மைக்கொண்ட வழக்காறுகளைக் குறிக்கும் சொற்கள் தகவமைப்பு, சமூகம், மரபு, மொழி, பண்பாடு போன்றவற்றின் தொன்மையினைக் கணிக்கும், ஊகிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றன. ஒரு வழக்காற்றிலிருந்து கிளைத்த பல வழக்காறுகள் ஒரு சமூகத்தின் வழக்காற்றுச் செழுமைக்கும், மொழியாக்கத்திற்கும் அடிப்படையானவையாகவும் திகழ்கின்றன.
நீலகிரியின் குடிகளான படகர்கள் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்டதற்கு இயற்கையை மூலமாகக்கொண்டு உருவான, இயற்கையைப் பேணக்கூடிய அவர்களின் வழக்காறுகள் அடிப்படையான காரணங்களாகும். பூர்விகக் குடிகள் என்ற அங்கீகார நிலையில் இயற்கைப் புரிதலும், இயற்கை வாழ்வும் இன்றியமையான கூறுகளாகும். படகர்களிடையே வழக்கிலிருக்கும் “சேக்கெ முட்டோது” எனும் வழக்காறு இயற்கை, தகவமைப்பு, பண்பாடு, இயங்கியல், சடங்கியல், நம்பிக்கை, உணர்வுகள் என்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இந்த வழக்காற்றின் தோற்றம் மற்றும் தொன்மையினை நாடிச்செல்வது இந்த வழக்காற்றோடு இணைந்த பல்வேறு வழக்காறுகளைக் காண்டறிவதற்கும், அதன்வழி இம்மக்களின் மரபு மற்றும் பண்பாடுச் சார்ந்த கூறுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அமையும்.
சேக்கெ –
“சேக்கெ முட்டோது” என்ற இந்த வழக்கின் பெயரினை ஆய்வது அதன் தொன்மையினை அறிந்துகொள்வதற்கான அடிப்படைக்கூறாகும். இந்தப் பெயரியல் ஆய்வினைக்கொண்டே இச்சடங்கின் காரணகாரிய கூறுகளை நாம் அறுதியிடலாம். மேலும் இவ்வழக்கு சொல்லிலிருந்து கிளைத்ததா?, வழக்கிலிருந்து கிளைத்தா? என்ற தெளிவிற்கும் வரலாம்.
“சேக்கெ” என்ற சொல்லின் வேர்ச்சொல் “சே” என்பதாகும். இந்தச் ‘சே’ என்பது படகர்களிடையே ஒரெழுத்து ஒருமொழியாகவும் விளங்குகின்றது. இது முழுமை, செல், செம்மை என்ற பொருட்களைக் குறிக்கின்றது. “சோயோட ஆக்கு” என்ற தொடர் ஒன்றை முழுமையாக இடு என்று படகமொழியில் பொருள்படுகின்றது. அதேபோல “சே மாடு” என்ற படகச்சொல் ஒன்றை செம்மைப்படுத்து என்ற பொருள் தருகின்றது. இந்தச் “சே” என்பதற்கு எதிர்வாக “ஹோ” என்ற சொல் விளங்குகின்றது. இது பகுத்தல் என்பதைக் குறிக்கின்றது. “ஹோ ஆக்கு” என்றால் பகுதியாக்கு என்று பொருள். முழுமைக்கும் பகுதிக்குமான ஓரெழுத்து ஒருமொழி இன்றும் வழக்கொழியாமல் வழங்கப்பெற்று வருவது இம்மொழியின் தொன்மைக்குத் தக்க சான்றாகும். படகர்களின் பலபொருள் குறித்த ஓரெழுத்து ஒருமொழியான “சே” என்ற சொல்லின் தொன்மையை நோக்கிப் பயணிப்பது நம் எடுபொருளின் தொன்மையைக் கண்டறிவதற்கான அடிப்படையாகும்.
“சே” என்ற சொல்லின் வழக்குநிலையைத் தொன்மையான சங்க இலக்கியத்தில் நோக்கும்போது ‘அம்பு’ (நற்றிணை 13 – 4), ‘உயர்வு’ (பரிபாடல் 8 – 104), ‘எருது’ (கலி 105 -18), கூடு (நற்றிணை 276 – 6) ‘சிவப்பு’ (நற்றிணை 13 – 4, 31 – 2, 359 – 1, கலித்தொகை 105 – 18), ‘தொலைவு’ (சிறுபாணாற்றுப்படை, 3) என்ற பல பொருட்களில் கையாளப்பட்டுள்ளது. இந்தப் பொருள்நிலையோடு படகர்களின் சொல்வழக்கினை நோக்குகையில் நிலம் மற்றும் சூழல் தொடர்பான சில கூறுகளோடு பொருந்துவதைக் காணலாம். மொழியின் தோற்றக்கூறில் நிலம் மற்றும் சூழலின் தாக்கங்கள் இன்றியமையானதாகும். இத்தாக்கங்கள் நோக்கிய புலனறிவாக்கமே மொழியாக்கத்தின் அடிப்படையாகும்.
“சே” என்பதை அடியாகக்கொண்டு ஆக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான படகச் சொற்கள் நிலத்தின் சூழலின் அடிப்படையிலானதாக விளங்குகின்றது. “இயற்கை, நிலம், பொழுது, செயல். இயக்கம் போன்றவையே மனித மனதில் கருத்தமைவாக்கத்திற்கும் மொழி உருவாக்கத்திற்கும் அடிப்படையாகிறது” என்கிறார் மொழியியலறிஞர் ஊட்ஸ். படகர்கள் வாழ்கின்ற நீலகிரியின் சூழலோடு நோக்கும்போது “சே” எனும் சங்கசொல் உணர்த்தும் உயர்வு, சிவப்பு என்ற பொருள்களோடு படகர்களின் ‘சே’ என்ற சொல்லின் நுண்பொருளை பொருத்தலாம். “சே” என்ற அடிநிலையினின்று கிளைத்த “சேக்கெ” என்ற சொல்லும் மேற்காண் நுண்பொருள்களோடு பொருந்தி நிற்கின்றது. மேலும் ‘சே’ இன் அடியினின்று கிளைத்த, சூழலோடு தொடர்புடைய “சேக்கெ, சேப்பெ, செப்பே, செகெ” ஆகிய சொற்களும் இந்நிலையுடைத்ததாகும். இச்சொற்களின் பொருள்நிலையும் சங்க இலக்கிய நிலையோடு பொருந்தி நிற்பது குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் “சேக்கை” (குறுந்தொகை, 187 – 1, நெடுநால்வாடை, 135, புறநானூறு, 50) என்ற சொல் படகர்களின் ‘சேக்கெ’ என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையது. உடல்தழும்பு, வலை, முலை, சிவப்பு, கூடு, படுக்கை, தங்குமிடம், செம்பசலைக்கீரை என்ற பல்வேறு அகராதிப் பொருட்களைக்கொண்ட ‘சேக்கை’ என்ற சொல் சிவப்பு, கூடு, படுக்கை, தங்குமிடம் என்ற பொருட்களில் சங்க இலக்கியத்தில் அதிகமாக ஆளப்பட்டுள்ளது. அதிலும் குறிஞ்சி நிலம்சார்ந்த பாடல்களிலேயே ‘சே’ என்பதின் அடியில் பிறந்த சொற்கள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன. அதிலும் சிவப்பு, தங்குமிடம் என்ற பொருள்களிலேயே மிகையாக ஆளப்பட்டுள்ளன.
சே – சேய் - சேப்பு என்ற சிவப்பு நிறத்தினைக் குறிக்கின்ற சங்கச் சொற்களின் இன்றைய வடிவமே சிவப்பு என்பதாகும். இந்தச் சிவப்பு என்ற நிறத்தின் உருவாக்கம் நெருப்பினை அடியொற்றி உருவாகியிருக்கக்கூடும் இல்லை நெருப்பின் உருவாக்கக் காலத்திற்கு முன்பே குருதியிலிருந்தோ, அடிவானத்து அகச்சிவப்புக் கதிரின் நிறத்திலிருந்தோ உருவாகியிருக்கலாம். ஆனால் இச்சொல் செம்மையாக்கம் பெற்றது நெருப்பின் ஆக்கத்திற்குப் பிறகெனலாம். இந்தக்கூறு படர்களுக்குச் சரியாகப் பொருந்துகின்றது. படகர்களிடையே சிவப்பின் தன்மைக்கேற்ப பெயர்கள் விளங்குவதைக் காணலாம். இந்தச் சொற்கள் எல்லாம் ககர வரிசையில் கிளைத்தவையாக உள்ளன. “கன” – “கனதர”. “கத்திரா” (மின்னுதல்), “கெப்பு” (சிவப்பு) – “கெம்மெ” (அடர்சிவப்பு) – “கெச்செ” (அடர்சிவப்பு) – “கெசோன” (அடர்சிவப்பு) – “கெஞ்சலு” (இளஞ்சிவப்பு) எனும் சிவப்பினைக் குறிக்கின்ற படகர்களின் சொற்கள் சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலிலிருந்தும், தீயின் தன்மையிலிருந்தும் உருவானவையாகும்.
“கிச்சு” (நெருப்பு), “கெண்ட” (கங்கு), “காங்கெ” (மிகை வெப்பம்) போன்ற படகர்களின் நெருப்பினைக் குறிக்கின்ற சொற்களும் ககரத்திலிருந்து கிளைத்திருப்பதை நோக்கலாம். சிவந்த மேகத்தினைப் படகர்கள் ‘கெம்மஞ்சு’ என்றும் சிவந்த மண்ணை “கெம்மண்ணு” என்றும் அழைக்கின்றனர். அதேபோல சிவந்த நிறமுடைய மரத்தினையும் “கெம்மெ, கெப்பு” என்ற சிவப்பினைக் குறிக்கின்ற சொல்லோடு குறிக்கின்றனர். சான்றாக “பிக்கெ” என்ற மரத்தில் சிவந்த நிறமுடைய இனத்தினை “கெம்பிக்கெ” என்று அழைக்கின்றனர். படர்களின் சிவப்பினைக் குறிக்கின்ற “கெப்பு” என்ற சொல் வானம், மண் போன்ற இயற்கைக் கூறுகளிலிருந்தும்கூட எழுந்திருக்கலாம்.
வெப்பம்மிகுந்த சூழலை படகர்கள் ‘செகெ’ என்றழைக்கின்றனர். சமவெளிப்பகுதியை அங்கு நிலவும் வெப்பநிலையின் காரணமாக “செகெ நெல”, “செகெ பூமி” என்று வழங்குகின்றனர். இந்தச் ‘செகெ’ என்பது ‘சேக்கே’ என்பதுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இது சங்கச் சொல் ‘சேக்கை’ என்பதனுடன் நுண்பொருள் நிலையில் பொருத்தமுடையது. “சேக்கெ முட்டோது” என்பதை படகர்கள் ‘செகெ முட்டோது’ என்றும் வழங்குவதுண்டு. ஆக சேக்கெ – செகெ என்பதில் ஒரு ஒப்புமையுள்ளதை அறியலாம். இவையும் நெருப்புடனும் அதன் தன்மையுடனும் தொடர்புடையவையாகும்.
இயற்கை, சூழல்சார்ந்த புரிதலால் ஆக்கப்பட்ட படகச் சொல்லிற்குக் ‘காங்கெ’ என்ற சொல்வழக்குச் சிறந்த சான்றாகும். ஆதவனிடமிருந்தோ, நெருப்பிலிருந்தோ தோன்றும் மிகை வெப்பத்தினைப் படகர்கள் ‘காங்கெ’ என்கின்றனர். ‘காங்கெ பிசலு ஊதர’ (வெப்பம் மிகுந்த, வெய்யோனின் கதிர்மிகுந்த வெயில் (பிசிலு – வெயில்) அடிக்கின்றது) என்ற சொல்வழக்கு இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும். அதாவது முதலில் சிறப்புப் பெயரினையும் அதனைத் தொடர்ந்து பொதுப்பெயரினையும் கொண்டுவரும் இருபெயரொட்டு பண்புத் தொகையின் இலக்கணம் படகமொழிக்கும் பொருந்தி வருகின்றது.
வெயிலை பொதுநிலையில் படகர்கள் ‘பிசிலு’ என்றழைக்கின்றனர். ‘காங்கெ’ என்பது கடும்வெயிலைக் குறிக்கின்ற சிறப்புச் சொல்லாகும். ஆனால் நெருப்பின் நிலையில் வரும்போது “காங்கெ ஊதர” (எரியும் நெருப்பிலிருந்து பெரும் அனல் வீசுகின்றது) என்று இந்தக் ‘காங்கெயைக்’ குறிக்கின்றனர். ‘காங்கெ கிச்சு’ (அனல்வீசும் நெருப்பு) என்று அவர்கள் சொல்வதில்லை. இது இயற்கைப் பொருளுக்கும், தம் முயற்சியால் ஆக்கும் பொருளுக்கும் அவர்கள் அளிக்கின்ற மொழி நிலைசார்ந்த மதிப்பினை விளக்குகின்றது.
“காங்கெ பில்லு” – “காங்கீர பில்லு”, “காங்கர பில்லு” என்று வானவில்லைக் குறிக்க வழங்கப்படுகின்ற படகச்சொல் அவர்களின் சூழல் அறிவிற்கு சிறந்த சான்றாகும். மழைத்துளிகளின் உள்ளாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்வதால் ஒளிப்பிரிகையடைந்து வானவில் உருவாகின்றது. அதுவும் 42 டிகிரி கோணத்தில், 42 டிகிரிக்கு குறைவான செல்சியஸ் வெப்பநிலையில்தான் வானவில் தோன்றுமென்பது அறிவியலாளர்களின் முடிபு.
மழை ஓய்ந்ததும் தோன்றும் தீடீர் வெப்பத்தால் தோன்றும் வில் என்ற நிலையில் “காங்கெ + பில்லு (வில்)” என்றும், காங்கெ + ஈர + பில்லு என்றும் (காங்கெ (மிகை வெப்பம்), “ஈர” மேகத்தில் கருக்கொண்ட மழைத்துளி அல்லது மழைத்துளிக் கருக்கொண்ட கார்மேகம்) என்றும் பொருள்தருகின்றது. ஆகவே வெயிலும் மழையும் கலந்துநிற்க தோன்றும் வில் எனும் பொருளுரைக்கின்றது. படகர்களிடம் “காங்கி” எனும் பெண்பால் பெயருண்டு. அதாவது தகிப்பவள், வானவில்லைப் போன்றவள் என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்படுகின்றது. மழைக்கருக்கொண்ட குளிர்ந்த மேகத்தினை, வானில் முளைத்துவரும் மழைத்துளியை, மழைத்துளி பொருளோடு கொண்ட வினையை “ஈர” என்ற சொல்லில் வழங்கும் படகர்கள் இச்சொல்லைப் பெயரின் முன்னொட்டாக சேர்த்தும் வழங்குகின்றனர். படகர்களின் குலதெய்வத்திற்கு “ஈர மாசி” என்று பெயர். அதாவது மழைசூல்கொண்டு இவ்வுலகை குளிர்விப்பவள், உயிர்பிப்பவள் என்ற பொருளில் இப்பெயர் இவர்களின் குலதெய்வத்திற்கு வழங்கி வருகின்றனர். ஆனால் “காங்கெ”, “ஈர” என்பவை ஆண்பாற் பெயர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது படகர்களின் தாய்வழிச் சமூக மரபின் தாக்கமாக இருக்கலாம்.
புழுக்கத்தினை ‘உப்பே’ என்றழைக்கின்ற படகர்களிடம் “உப்பெ கிடு”, “உப்பெ அக்கிலு” (மரங்கொத்தியின் வகை) என்ற சொல்வழக்குகள் நிலவிவருகின்றன. இவை இயற்கையையும், புலனுணர்வினையும் முன்னிறுத்தி நிலத்தின் கருப்பொருட்களுக்குப் பெயராக்கியிருப்பதைக் காணமுடிகின்றது. புழுக்கத்திற்கான, மழைப்பொழிவிற்கான காலத்தினைக் கணிக்கும் குறியீடுகளாகவும் இச்சொற்கள் விளங்குகின்றன. மேற்கண்ட “உப்பெ அக்கிலு” என்ற மரங்கொத்திப் பறவை வருவதை மழைப்பொழிவிற்கான காலமாக இவர்கள் கருதுகின்றனர். இந்தப் பறவைக்கு “முங்காரு அக்கிலு” (முங் - முன், காரு – கார்காலம்) என்ற பெயரினையும் காலத்தினடிப்படையில் இட்டு அழைக்கின்றனர். மழைப்பொழிவிற்கான கார்பருவத்து, அதிலும் முன்கார் பருவத்தில் வருகின்ற பறவை என்று இதனை அழைக்கின்றனர். இவைகளும் இவர்களின் இயற்கையறிவிற்கும், புலனறிவுக்கும் தகுந்த சான்றுபகர்கின்றன.
மேற்காண் சொல் வழக்குகளையெல்லாம் நோக்கும்போது “சேக்கெ” என்பது சிவப்பு, நெருப்பு என்பதனோடு பெரும் தொடர்புடையதாக விளங்குகின்றது. சங்க சொல்லான ‘சேக்கை’ என்பதற்கு பொருளாக முன்னர் கண்ட பொருட்களுள் படுக்கை, தங்குமிடம், கூடு, சிவப்பு ஆகிய பொருட்களுடன் படகர்களின் ‘சேக்கெ’ என்ற சொல்லினையும் அதன் வழக்கினையும் பொருத்திக் காணலாம். அதற்கு படகர்களின் “சேக்கெ முட்டோது” எனும் வழக்கினைப் பற்றி அறிந்துக் கொள்வது அடிப்படையாகும்.
சேக்கெ முட்டோது –
“சேக்கெ முட்டோது”, “செகெ முட்டோது” என்றழைக்கப்படும் வழக்கானது படகர்கள் குழந்தைக்கு மேற்கொள்கின்ற தகவமைப்பு, மருத்துவம், சடங்கியல் சார்ந்த நிகழ்வாகும். குழந்தைப்பிறந்த 35 நாட்களுக்குப்பிறகு, அதாவது 37, 38, 39 ஆகிய மூன்று நாட்களில் இவ்வழக்கு மேற்கொள்ளப்படுகின்றது.
குழந்தையின் உடல் நரம்புகளையும், உறுப்புகளையும் வலுப்படுத்துவது, அதன் வலியினைப் போக்குவது, சேய் மற்றும் தாயிற்கான பேறுகாலப் பாதுகாப்பு மற்றும் வரையறை வழக்கின் முதல் கட்டத்தினைக் கடப்பது போhன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக நிகழ்த்தப்படும் இவ்வழக்கின் இயங்கியல், இயக்கியல் முழுக்க இயற்கை மற்றும் சூழலுடன் தொடர்புடையன.
இந்நிகழ்விற்கு நெருப்பு, நீர், வெண்ணெய் ஆகிய மூன்றும் இன்றியமையான உறுபொருள்களாகும். அதிலும் இவ்வழக்கிற்குரிய நெருப்பினை உருவாக்குவதற்கென சிறப்புவிதிகள் உண்டு. நெருப்பினை உருவாக்கும் படகர்களின் எல்லா சடங்குகளிலும் அச்சடங்கிற்குரிய காரண காரியத்தோடும், மரபினடிப்படையிலும் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்நிலையில் “அதுவெ” (அல்லது) “அந்துவெ”, “நேரி”, “தவட்டெ,” “மொரந்த”, “மாசிகெ” எனும் ஐந்து மரங்களின் விறகினை இச்சடங்கிற்கு எடுத்துவர வேண்டும். பெரும்பாலும் பட்டுபோய் கீழே விழுந்திருக்கும் இம்மரங்களின் விறகுகளையோ, பட்டுப்போன இம்மரத்தின் கட்டைகளையோதான் இவர்கள் இவ்வழக்கிற்கென கொண்டுவருவர். தங்களின் தேவைக்காக பசுமையாக உள்ள மரங்களை இவர்கள் வெட்டுவதில்லை. அவ்வாறு வெட்டுவதை இவர்கள் பெரும்பாவமாக கருதுகின்றனர். இதை “அச்செய சிகத்தது பாப்ப” (அச்செய – பசுமையானதை, சிகத்தது – சிதைத்தது, பாப – பாவம்) எனும் இவர்களின் சடங்கார்ந்த சொல்வழக்காற்றின் புறப்பொருளொன்று விளக்குகின்றது.
இச்சடங்கின் மூன்று நாட்களுக்கும் தேவையான விறகுகளை முன்கூட்டியே கொண்டுவந்து அவர்களின் இல்லங்களில் சேகரித்து வைத்திருப்பர். அதை வெயிலிலும், விறகடுப்பின் அருகிலும் வைத்து வெம்மையூட்டி அக்குச்சிகளை மேலும் பக்குவப் படுத்துவார்கள். விறகுகளை இவர்கள் “சேக்கெ” என்றழைக்கின்றனர். நேரான குச்சிகளைச் ‘செப்பெ’ என்று அழைக்கின்றனர். ஒன்றின் பிடிமானத்தினை வலுவாக்க துணையாக இணைக்கும் குச்சியினைச் “சேப்பெ” என்றழைக்கின்றனர். நிலத்தில் விளைந்திருக்கும் அவரைக்கொடி படர்வதற்காக நேரான குச்சியை நடுகின்ற இவர்களின் வேளாண் வழக்கினை “செப்பெ செக்கோது” (நேரான குச்சியை நடுவது) என்கின்றனர். பிடியுடன் பொருத்தப்பட்ட கருவியை நன்றாக இணைக்க உள்ளிடுக்கில் சிறிய குச்சியைவைத்து தட்டிப் பொருத்துவதை “சேப்பெ ஊவது” (சேப்பெ அடிப்பது) என்றும், கட்டுமானத்தின்போது ஆடும் கற்களை வலுவாக்க இதன் கீழே சிறு கற்களை முட்டுக் கொடுத்து வைப்பதையும், செய்கின்ற வேலைக்கு துணையாக இருப்பதையும் “சேப்பெ கொடோது” (சேப்பெ கொடுத்தல்) என்றும் அழைக்கின்றனர். இந்தச் “செப்பெ – சேக்கெ – சேப்பெ” என்ற சொற்கள் குச்சியையும், துணையினையும் குறித்துவந்து, ஒரு பெரும் செயலிற்குத் துணைநிற்கும் உயர்வு, செம்மை எனும் நுண்பொருள்களைத் தருகின்றன.
“சேக்கெ முட்டோ” வழக்கிற்குரிய இந்த ஐந்து மரங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவைகளாகும். படகர்களின் புனிதமரங்களுள் ஒன்றான ‘அதுவெ’ வயிறுசார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும். மற்றொரு புனிதமரமான “நேரி” எனும் நாவல் மரத்தில் சிறுநீர் எரிச்சல், இரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கு போன்ற பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. குறிப்பாக இதன் பட்டை நரம்பினை வலுவாக்கும் இயல்புடையது. “தவட்டெ மரம்” குழந்தைப் பாதுகாப்பிற்கான மருந்தாகும். “மொரந்த” எலும்பு முரிவு மற்றும் இரத்தக்கட்டுகளைப் போக்கும் இயல்புடையது. “மாசிகெ” மரம் இருமல், காய்ச்சல் போன்றவற்றைப் போக்கும் இயல்புடையது. இத்தகு மருத்துவ குணங்கள் நிரம்பிய விறகுகளையிட்டு, நெருப்புமூட்டி, அதை முழவதும் எரியச்செய்து தணலாக மாற்றுகின்றனர். அது சிவப்பு நிறத்தில் தகிக்கும் கங்காக மாறிய பின்னே இச்சடங்கினைத் தொடங்குகின்றனர். இச்சடங்கிற்குரிய மரங்களின் வரையறை மற்றும் அதன் மருத்துவ குணவறிவும்கூட படகர்களின் சூழலறிவிற்கும், மருத்துவ அறிவிற்கும் தக்க சான்றாகும்.
“பெண்ணெகுக்கெ” என்ற (பெண்ணெ – வெண்ணெய்) வெண்ணெயைச் சேகரித்து வைக்கின்ற புழங்குப்பொருளான மூங்கில்கூடை நிறைய வெண்ணெய் மற்றும் “மடக்கெ” எனும் மட்கலத்தில் தொடுமளவிலான வெப்பமுடைய வெந்நீர் ஆகியவற்றையும் இவ்வழக்கிற்குத் தயாராக எடுத்து வைக்கின்றனர்.
மாலை ஆதவன் மறைவிற்குப்பிறகு பெரும்பாலும் வீட்டிலுள்ள மூத்த பெண்களால் இந்தச் சடங்கு நிகழ்த்தப்படும். இல்லையெனில் இச்செயலில் அனுபவம் வாய்ந்த உற்றார் உறவினர்களும்கூட இந்தச் சடங்கினை மேற்கொள்ளலாம். குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டி, நிர்வாணமாக மடியில் படுக்கவைத்து, தன் வலது உள்கரத்தால் முதலில் வைக்கப்பட்டிருக்கும் வெந்நீரையும் தொடர்ந்து வெண்ணெயினையும் தொட்டு, அக்கரத்தை “சேக்கெகளையிட்டு” உருவாக்கப்பட்ட நெருப்பில் காட்டி கையில் தொட்டெடுத்த வெண்ணெயைக் காய்ச்சி, குழந்தையின் தலைமுதல் கால்வரையுள்ள எல்லா அங்கங்களையும் தொடுவார்கள். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் மேற்கண்ட முறையிலேயே குழந்தையின் அங்கங்கள் முழுவதையும் தம் குலத்தெய்வத்தை அழைத்தும், தம் முன்னோர்களின் பெருமையைக் கூறியும், அக்குழந்தைக்கு அவர்களின் ஆசிவேண்டியும் தம் உள்ளங்கைகளால் பொத்தி பொத்தி எடுப்பார்கள். குழந்தைக்கு வியர்க்கும்வரை தம் உள்ளங்கரங்களால் இம்முறையில் ஒற்றடம் அளிப்பார்கள்.
முதலில் தம் முன்னோர்களை நினைத்து, அவர்களை அழைத்து, நெற்றில் தொடங்கி முன் மற்றும் பின் தலை என்று மேலிருந்து கீழாக தொடுவார்கள். பாலுறுப்பிற்கு வரும்போது சில சொட்டுகள் தண்ணீரினைத் தொட்டு, பிறகு வெண்ணெயைக் காய்த்து தொடுவார்கள். தோள்கள், மூட்டுகள், மார்பு, வயிறு, துடைகள், பின்னங்கால்கள், முதுகு, புட்டம் என்று வலிமைப்பட வேண்டிய உறுப்புகள் அனைத்தையும் பக்குவமாய்த் தொடுகின்றனர்.
அங்கங்கள் முழுவதையும் தொட்டு முடித்ததும் குழந்தையைப் பருத்தித் துணியில் சுற்றி, குழந்தைக்கு நன்கு வியர்க்கும்வரை மார்போடு அணைத்து வைத்திருந்து, பிறகு மெல்லியப் பருத்தி துணியால் குழந்தையின் உடலை இலோசாக துடைத்தெடுப்பர். நிறைவாக குழந்தையைத் தாயிடம் கொடுத்து தாய்ப்பால் கொடுக்கச்செய்து, தாய்க்கும் சேய்க்கும் வியர்க்கும்படி வெக்கையான சூழலில் இருத்தி அவர்களை உறங்கவைப்பார்கள்.
குழந்தையின் அங்கங்கள் வலிமையடையவும், குழந்தை நன்கு வளரவும், அதன் பிடிப்புகள் நீங்கவும், எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலுப்பெறவும்;, நீலகிரியின் தகவமைப்பிற்கான மரபுசார்ந்த செயல்பாடாகவும் இந்த முறை மேற்கொள்ளப்படுகின்றது. நீலகிரி போன்ற குளிர்ப்பிரதேசங்களில் குழந்தைகளை அதிகமாக தாக்கும் காது, கைகால், மூட்டு மற்றும் மார்பு போன்ற வலிகள் நேராமல் இருப்பதற்காகவும் இதனை செயல்படுத்துகின்றனர். மேலும் குழந்தைக்கு வலுவும் அதே நிலையில் புத்துணர்வும் இதனால் ஏற்படும்.
இந்த வழக்கிற்கென்று மேலும் சில விதிமுறைகளையும் கையாளுகின்றனர். அவையானவை,
குழந்தைப் பிறந்த 40 நாட்களுக்குள் இதை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மூன்று நாட்கள், மாலை நேரத்தில் இதை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களும் ஒரே நபர் இந்தச் சடங்கினை மேற்கொள்ளலாம். ஆனால் தவிர்க்கவியலாத சூழலில் மறுநாள் தொடரவியவில்லையெனில் வேறு நபரையும் ஈடுபடுத்தலாம். ஆனால் இவ்வழக்கினை மேற்கொள்ளும் மூன்றுநாட்கள் இச்சடங்கிற்கென்று தனி உடையினையும், அடுத்தடுத்த நாட்களுக்கு மாற்றுடைகளையும் அணிய வேண்டும். அதேபோல தாயும் சேயும் அடுத்தடுத்த நாள் வேறு உடைகளை அணியவேண்டும்.
தினமும் காலையில் குழந்தையைக் குளிப்பாட்டுவதோடு இதை மேற்கொள்வதற்கு முன்பும் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். ஒருசிலர் இவ்வழக்கு முடியும்வரை காலையில் குழந்தையைக் குளிப்பாட்டுவதில்லை. இந்தக்கூறினை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று இந்த நிகழ்விற்குப்பிறகு காலையில் நெடுநேரம் குழந்தை உறங்கும் என்பதும், மற்றொன்று இது மூன்று நாள் நிகழும் கட்டுப்பாடுகளைக் கொண்ட தொடர்நிகழ்வாக அமைவதால், இந்த நிகழ்வினை முடித்ததும் இச்செயலின் நிறைவாகவும், மகப்பேற்றிற்கான முதல்படிநிலையைக் கடப்பதன் குறியீடாகவும் தாய் மற்றும் சேய்க்கு காலையில் நீராட்டுகின்றனர். இதை “தொட்டநீரு” (தொட்ட – பெரிய, சிறப்புவாய்ந்த, மரபார்ந்த, நீர் - தண்ணீர்) என்கின்றனர். ஆனால் இவ்வழக்கினை மேற்கொண்ட பிறகு சேயைக் குளிப்பாட்டக்கூடாது. அதேபோல இச்சடங்கு முடியும்வரையிலும் தாய் நீராடக்கூடாது என்ற விலக்கினையும் கட்டமைத்துள்ளனர். வெண்ணெய் போன்ற கொழுப்புடைப் பொருட்களைத் தீண்டிவிட்டு புறத்தே சென்றால் தீயக்காற்று தீண்டிவிடும் என்பது படகர்களின் நம்பிக்கையாகும். எனவே தாய், சேய், இவ்வழக்கினை நிகழ்த்துபவர் இம்மூவரும் இவ்வழக்கு நிறைவுறும் மூன்றுநாட்கள்வரை வீட்டினைவிட்டு வெளியேறக்கூடாது. சமையலறையின் மூலையிலேயே நீராடுவதற்கான “பிள்ளெ” என்ற அமைப்பினைப் படகர்கள் அமைத்திருப்பார்கள். இவ்வசதியில்லாதவர்கள் கொல்லைக்குச் சென்று நீரடிவரும் சூழல் உள்ளதாலும் தாய்க்கு நீராடுவதிலிருந்து விலக்கினை அளிக்கின்றனர். மரபுநிலையில் இருந்த இந்தச்சூழல் இவ்வழக்கின் வழக்காறாக மாறியுள்ளதைக் காணலாம். வெப்பம் நிறைந்த இடத்தில் நீண்டநேரம் இருந்துவிட்டு தீடிரென்று வெளியில் செல்லும்போது உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை இவர்கள் தீயக்காற்று அடித்தாகக் கருதுகின்றனர். வாந்தி, தலைசுற்றுதல், காய்ச்சல் என்ற அறிகுறிகளைக் கொண்ட இந்தப் பாதிப்பினை இவர்கள் “காய் ஊவது” (தீயகாற்று அடிப்பது) என்கின்றனர். எனவே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சிறுநீர், மலம் கழிப்பதற்குக்கூட தாயை வெளியில் அனுப்புவதில்லை. இல்த்தினுள்ளேயே அதற்கான மாற்றினை ஏற்படுத்தித் தருகின்றனர்.
இவ்வழக்கிற்குப் பயன்படுத்துகின்ற துணிகளையெல்லாம் சேர்த்துவைத்து இவ்வழக்கினை முடித்த அடுத்தநாள்தான் துவைக்க வேண்டும். அதுவரை அத்துணிகளைத் திண்டாகக் கட்டி வைத்துவிட வேண்டும். இதுவும் மேற்கண்ட தீயக்காற்றின் பாதிப்பினைப் தவிர்ப்பதற்கான காப்பாகவும், சுகாதாரத்திற்கான கூறாகவும், இவ்வழக்கார்ந்த ஒருமுகநிலையைக் கட்டமைக்கும் கூறாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.
எந்தநிலையிலும் இவ்வழக்கினை இடைநிறுத்தக்கூடாது. இதுநாள்வரையிலும் இவ்வழக்கில் எவருக்கும் இடையூறு வந்ததில்லை என்பது களப்பகுதியில் தகவலர்களின் அனுபவப் பகிர்வாகும். தம் முன்னோர்களையும், குலதெய்வத்தையும் அழைத்து மேற்கொள்ளப்படும் இந்த வழக்கிற்கு எந்தத் தடங்கலும் நிகழாது என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
குழந்தைப் பிறந்து இவ்வழக்கு முடியும்வரை பாலுட்டும் தாய்மார்கள் குழந்தையையோ, தாயையோ காணவோ, சந்திக்கவோ கூடாது. கலவியில் ஈடுபட்டோரும் நீராடாமல் பார்க்கக் கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் குழந்தைக்குப் “பாத்தி ஊலு” என்ற ஒருவிதாமான பாதிப்பு ஏற்படும். தொடர் அழுகை, பால் உண்ணாமை, வாந்தி போன்றவை இப்பாதிப்பின் அறிகுறிகளாகும். மகப்பேற்றுப் பருவத்தினைப் படகர்கள் ‘பாத்தி’ என்று அழைக்கின்றனர். இவ்வழக்கோடு இந்தப் “பாத்தி” என்பதின் முதல்நிலை கடக்கப்படுகின்றது. பால்கொடுக்கும் தாய்மார்களுக்கு இக்குழந்தை நிலையிலிருந்து கட்டமைக்கப்பட்ட விலக்கு முடிக்கப்படும். தாயும் சேயும் வெளியில் செல்லவும், பிற தாய் சேய்களைக் காணவுமான நிலை தொடங்கும். அதுவரை தாயும் சேயும் வீட்டினை விட்டு வெளியில் செல்வதில்லை.
இது உடலினை வெப்பமூட்டும் செயல்பாடானதால் அதிகமான வெப்பத்தை ஏற்பதற்குரிய ஆதவன் மறைந்த மாலை நேரத்தில் மட்டும்தான் இதனை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நாட்களில் தாய் காரம்மிகுந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கவேண்டும். “பாத்திகெ பேய கட்டு” (பாத்திகெ - மகப்பேற்றுப் பருவத்தில் பேய – வாயை, கட்டு) என்ற படகப் முதுமொழி தாய் தன் சேய்க்குப் பாலுட்டும் பருவம் வரை, குறிப்பாக முதல் 6 மாதங்கள் அதிக உவர்ப்பு, கார்ப்பு போன்ற சுவையினைத் தவிர்க்க வேண்டும் என்ற நலனியல் குறிப்பினை அறிவுறுத்துகின்றது. இக்காலத்தில் காhர்ப்பு மிகுந்த உணவினை உண்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இந்த மரபார்ந்த விதிமுறைகளுடன் இவ்வழக்கம் படகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இயற்கை, நிலம், பொழுது, இயக்கம் எனும் கூறுகள் அனைத்தும் இந்தச் சடங்கில் இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கது. மேலும் வாழ்களம் சார்ந்த தகவமைப்பிற்கான, தற்காப்பிற்கான கூறாகவும் இது திகழ்கின்றது. 40 நாட்கள்வரை பச்சிளம் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதனின்று தற்காக்கவும், உடல் அங்கங்களை, நரம்புகளைத் தூண்டவும், வெண்ணெய் எனும் கொழுப்பினை உடலில், காய்ச்சித்தொட்டு, உடலை வெப்பமேற்றி, அங்கங்களை வலுப்படுத்தவும் சிறந்த கூறாக விளங்கும் படகர்களின் மரபார்ந்த இந்தச் சடங்கு இவர்களின் சிறந்த வழக்காறாகும். உலகமே பொதுமுடக்கத்தில் இருக்கும் இன்றைய நிலையில் தற்காப்பு சார்ந்து, நிலவியல் மற்றும் புறவியல் சூழலிற்காக மேற்கொள்ளப்படும் படகர்களின் மரபார்ந்த இவ்வழக்காறு நோக்கத்தக்கதாகும்.
மூலிகைத் தன்மையும், நன்கு தணலாகி நிலைக்கும்; மர விறகுகளைக் கொண்டு இவ்வழக்கினை நிகழ்த்துவதும், உரிய காலத்தைத் தேர்வுசெய்வதும், இவ்வழக்கிற்கென்று கட்டமைக்கப்பட்டுள்ள சூழல், உணவியல், அறிவியல் அடிப்படையிலான விலக்குகளும் படகர்களின் இயற்கை வாழ்விற்கும், சூழலறிவிற்குமான தக்க சான்றாகும். இவ்வழக்கினை மேற்கொள்ளும் காலத்திலே உடைசார்ந்தும், வெளியில் செல்வதார்ந்தும், குழந்தையைத் தொடுகின்ற முறையார்ந்தும் ஏற்படும் தொற்றினைத் தவிர்க்கக்கூடிய அறிவியல் கூறுகள் இம்முறையில் விரவியுள்ளன. வெந்நீரினைத் தொட்டு பிறகு வெண்ணெயினைத் தொடுவது, குழந்தையின் அங்கத்தைத் தொட்டதும் மீண்டும் வெந்நீரினைத் தொட்டு வெண்ணெயினைத் தொடுவதுமான இந்தச் செயல்பாடு சிறந்த மருந்தியல் கூறாகும். இத்தகு முறையினை எண்ணெய் உறைக்கும் முறையாக ஆசாரக்கோவை நூல் வலியுறுத்துகின்றது. குழந்தை பராமறிப்பினைச் செம்மையாக மேற்கொள்ளும் முதிர்ந்த, இயற்கையோடு இணைந்த பண்பாட்டு நிலையும் இதன்வழி வெளிப்படுகின்றது.
இந்தச் சடங்கின் நோக்கம் மற்றும் இயக்கநிலையோடு நோக்கும்போது ஐந்து மரங்களின் ‘சேக்கெகளை’ (குச்சிகளை) கொண்டு நெருப்பினை உருவாக்குதல்.
சிவப்பு வண்ணங்கொண்டு தகித்தெரியும் தணலில் கையில் தொட்ட வெண்ணெயைக் காய்ச்சித் தொடுதல்.
கனன்றெரியும் தணலில் வெளிப்படும் வெக்கையைப் பிடித்து குழந்தைக்குக் கடத்துவது.
குளிர்நிலமாகிய நீலகிரியில் தாயும் சேயும் உறங்குவதற்கான, சேயை குளிரிலிருந்து காப்பதற்கான வெப்பமான சூழலை அமைத்துதருதல்.
என்ற நான்கு கூறுகளோடும் பருபொருள் மற்றும் நுண்பொருள் நிலையோடு பொருந்தும் படகர்களின் ‘சேக்கெ முட்டோது, சேக்கெ இடப்பது, செகெ முட்டோது, செகெ இடப்பது’ என்ற நான்கு பெயர்களைக் கொண்டுள்ள படகர்களின் இவ்வழக்குச் சங்கச் சொல்லான ‘சே’ என்பதின் சொற்பொருளான சிவப்பு என்பதனோடும் (மேல் 2), அம்புப் போன்ற நேரான குச்சி (மேல். 1), உயர்வு (மேல் 1- 4) என்ற பொருண்மைகளோடும் நுண்பொருள் நிலையில் பொருந்தி வருவதைக் காணலாம்.
“சேக்கை” என்ற சொல்லின் பொருண்மை அடிப்படையில் நோக்கும்போது படுக்கை, தங்குமிடம், கூடு, சிவப்பு என்பதனுடனும் பொருந்தி வருகின்றது. குளிர்நிறைந்த மலைப்பகுதியில் தங்குவதற்குரிய, புறத்தினும் வெப்பம் கூட்டப்பட்ட ஏற்ற இடம், அதிலும் தாய், சேய் பேணுதலுக்கான ஏற்ற இடமும், சூழலும் என்ற நிலையில் இது தங்குமிடம், கூடு என்ற நிலையில் ஒத்துப்போகின்றது.
“செகெ மாடு” என்ற சொல்லொன்று சூடேற்று என்ற பொருளில் படகர்களிடம் வழக்கிலுள்ளது. எல்லா பருவநிலைகளிலும் நீலகிரியின் குளிர்மிகுந்த இரவுநேரம் வெப்பத்தோடு உறையவேண்டிய சூழல் கொண்டதாகவே அமையும். அதிலும் குறிப்பாக உறைப்பனிக் காலங்களில் இந்த வெக்கை என்பது கூடுதலாக இருந்தால் மட்டுமே இரவில் நல்ல உறக்கத்தினை அடையவியலும்.
இரவுநேரத்தில் அதிகம் உண்பது ஆரோக்கியமன்று என்ற சூழல் நீலகிரி படகர்களிடம் வேறுபடுகின்றது. இரவில் வயிறுநிறைய உண்டால் மட்டுமே ஆழ்ந்த உறக்கத்தினை ஏய்தமுடியும் என்ற உணர்வு பண்டுதொட்டு நிலகிரியில் நிலவிவருமொன்றாகும். நல்ல உறக்கமே நாளைய கடும்பணிக்கும், ஆரோக்கியத்திற்கும் விதையாகும் என்ற புரிதல் படகர்களிடம் கூடுதலாக உண்டு. எனவே தற்காப்பிற்கும், நல்லுறக்கத்திற்கும் இரவில் உறங்குமிடம் வெப்பம் மிகுந்ததாக இருக்க வேண்டிய சூழலியல் அவசியத்தினையும் படர்கள் உணர்ந்தவர்கள். எனவே படகர்களின் வீடமைப்பும்கூட குளிரிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குரிய குறுகலான முன்வாசலைக் கொண்டதாக அமைந்திருக்கும். எனவே “செகெமாடு” என்பது நெருப்பினைக் கொண்டோ, கனமான போர்வையினைக் கொண்டோ, கட்டி அணைத்தோ வெப்பமேற்று என்ற பொருளில் அமைகின்றது.
“செகெ” எனும் வெப்பத்தினை உருவாக்க துணைநிற்பதால் மற்றும் உருவாக்குவதால் படகர்கள் விறகுகளைச் “சேக்கெ” என்று அழைத்திருக்கலாம். கடும்குளிர் நிலவும் பனிப்பிரதேசமான இமயமலைக்கு அருகில் இருக்கின்ற காடுகளில் வாழ்கின்ற பழங்குடிகளும் தங்குவதற்கு வசதியாக இருக்கும், அதாவது அடுப்பும் நெருப்பும் இருக்கின்ற இடத்தினைச் “சேக்கெ” என்ற இதே சொல்லில் கையாள்வது குறிப்பிடத்தக்கது. அங்கும் “சேக்கெ” என்பது வெக்கை என்ற சொல்லில் ஆளப்படுகின்றது.
ஒரு நிலத்தில் வாழும் மக்களின் சொல்லாக்கம் அந்நிலத்தின் சூழலோடு தொடர்புடையது என்பதையும், ஒரே சூழல் நிலவுகின்ற வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் சூழல் புலனுணர்வு பெருமளவில் ஒப்புமை உடையதாக உள்ளதையும் படகர்களின் “சேக்கெ முட்டோது” என்ற வழக்காறு விளங்குகின்றது. நெருப்பின் தன்மை சிவப்பு நிறத்திற்கு ஆகியதையும், சிவப்பின் தன்மைக்கேற்ப அதைசுட்ட, அந்நிலம் சார்ந்த சிவப்புடனான தொடர்புடைய இயற்கைக்கூறுகளின் அடிப்படையில் ஆக்கப்பட்ட சொல்வழக்குகள் படகமொழியின் சூழலோடு கூடிய ஆக்கத்தினை வெளிப்படுத்துகின்றது. மேலும் இது படர்களின் படகு எனும் தனி திராவிட மொழியின் தொன்மை மற்றும் வளமையைச் சாற்றுகின்றது. சங்க இலக்கியத்தின் குறிஞ்சி நிலம்சார்ந்த சிவப்பு மற்றும் நெருப்புசார்ந்த வழக்காறுகள் சொல் நிலையிலும், பண்பாட்டு நிலையிலும் நீலகிரி எனும் குறிஞ்சி நிலம்வாழ் படகர்களின் வழக்கோடு பொருந்தி நிற்பது நோக்கத்தக்கது. “சேக்கெ முட்டோது” என்ற படகர்களின் இயங்கியல்வழக்கு சொல் நிலையிலும், பண்பாட்டு நிலையிலும் அறுபடாத தொன்மையினையும், மரபினையும், இயற்கையினையும், சூழலினையும் உயிர்ப்புடன் தக்கவைத்துள்ள வழக்காறுகளின் வழக்காறாக திகழ்கின்றது.
துணைநின்றவை
சங்க இலக்கியம், கழக வெளியீடு.
பொறங்காடு சீமெ படகர்களின் மூலிகை மருத்துவம், ஆய்வியல் நிறைஞர்பட்ட ஆய்வேடு, முனைவர் கோ.சுனில்ஜோகி.
படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குப் பொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, முனைவர் கோ.சுனில்ஜோகி.
நேர்காணல் திரு. இராமாகவுடர், நொந்துவா, நீலகிரி.
நேர்காணல் திரு. கோபால், ஒரசோலை, நீலகிரி.
நேர்காணல் திருமதி. ருக்கி, மிதேனு, நீலகிரி.
நேர்காணல் திரு, அஜ்ஜன் குண்டாட.
நேர்காணல் திரு. பானி ரங்காகவுடர், கடக்கோடு, நீலகிரி.
மொழிபெயர்ப்பு சிறுகதைகள், திரு. கோவிலன்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|