க்ரியா இராமகிருஷ்ணன் இன்று நவம்பர் 17 ஆம் திகதி, அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றின் தாக்கத்திலிருந்து மீளாமலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவார்கள்..? என்ற வினா மனதில் நிழலாட இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன். மகாகவி பாரதியின் அந்திமாகாலத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில், எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்துடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை ஆரம்பிக்கின்றேன்.
ஒரு பெரிய குடும்பம் அங்கு தரிசனத்துக்கு சென்றது. அதில் பத்துப்பதினைந்து பேர் ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் இருந்தார்கள். அதில் அத்தை உறவான ஒரு பெண் சற்று நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும் சோர்வாக இருப்பவர். நோஞ்சான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய குழந்தை வாட்டசாட்டமான அத்துடன், கொழு கொழு என்று கொழுத்த குழந்தை. தூக்கினால் சற்று பாரமான குழந்தை. இருவரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கோயிலை சுற்றிவந்து தரிசிப்பது அந்தப் பெரியகுடும்பத்திற்கு சிரமமாக இருந்திருக்கிறது. நோய்வாய்ப்பட்ட அத்தை " தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு போய்வாருங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன்" என்றார். உடனே மற்றவர்களும் அதற்கு சம்மதித்து குழந்தைய ஒரு படுக்கை விரிப்பில் கிடத்திவிட்டு அத்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அத்தைக்கு உறக்கம் கண்களை சுழற்றியிருக்கிறது. அந்தக்கோயில் தூணில் சாய்ந்துவிட்டார். தரையில் குழந்தையும் ஆழ்ந்த உறக்கம்.
என்ன நடந்திருக்கும்...? அந்தக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் யாரோ ஏழைப்பெண் குழந்தையை தரையில் கிடத்திவிட்டு பிச்சைக்கு காத்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு தத்தம் கைகளில் இருந்த சில்லறைக்காசை போட்டுவிட்டு போய்விட்டார்கள். கோயிலைச் சுற்றிப்பார்க்கச்சென்ற உறவினர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நடந்திருப்பதை ஊகித்துக்கொண்டு தரையில் கிடந்த சில்லறைகளை எடுத்து கோயில் உண்டியலில் போட்டுவிட்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு, அந்த அத்தையையும் அழைத்துச்சென்றார்களாம்.
அந்தக்குழந்தை தமிழ் உலகில் ஆளுமைமிக்க செயற்பாட்டாளராக வளர்ந்து தனது 75 வயது பராயத்தில் இன்று நவம்பர் 17 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். அவர்தான்‘க்ரியா’ இராமகிருஷ்ணன். அவருடைய க்ரியா பதிப்பகம் 1992 இல் பெறுமதி மிக்க தற்கால தமிழ் அகராதி நூலை தொகுத்த வெளியிட்டபோது, தமிழக தி.மு.க அரசு அதனைக்கண்டு கொள்ளவில்லை. அதன் பிரதிகளை வாங்குவதற்கான முயற்சியில் தமிழக அரசின் நூலக ஆணையமும் முன்வரவில்லை. ஆனால், சிங்கப்பூர் அரசு, அதனை தனது நாட்டின் நூலகங்களுக்கு பரிந்துரை செய்து பெற்றுக்கொடுத்தது.
க்ரியா இராமகிருஷ்ணனின் தாய் மொழி சுந்தரத்தெலுங்கு. ஆனால், அவர் தமிழுக்காகவே வாழ்ந்தவர். அவர் தனது குழந்தைப்பருவத்துக் கதையைத்தான் 1992 இல் முதல் பதிப்பாக வெளியிட்ட தற்காலத்தமிழ் அகராதியின் தோற்றம் பற்றிக்கூறும்போது சொல்லியிருந்தார். இந்த அகராதியின் முன்னுரையில் அந்த சுவாரசியமான கதையையும் குறிப்பிட்டு பலருடைய ஆதரவுடன் ஒரு கோயிலுக்கு அன்று சிறு உதவி கிடைத்தது போன்று இந்த அகராதியை தயாரிக்க பலரும் உதவினார்கள் எனச்சொல்லியிருந்தார். இந்தியாவில் சில மாநிலங்களிலிருந்தும் இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், முதலான நாடுகளிலிருந்தும் பல அறிஞர்களின் ஆலோசனைகளைப்பெற்றும் இந்த அகராதியை அவர் தொகுத்திருந்தார். முதல் பதிப்பின் முன்னுரையை, அவர் நன்றியுரையாகவே இவ்வாறு எழுதியிருந்தார்.
“ இந்த அகராதி நிறைவுபெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் திரும்பிப்பார்க்கும்போது, அந்தக்குழந்தையின் இடத்தில் இந்த அகராதியைப் பார்க்கின்றேன். இந்த அகராதியை யாரோ ஒருவரின் நேர்த்திக்கடனாக நினைத்துக் கேட்கப்படாமலேயே, மனமுவந்து, மகிழ்ச்சி நிறைந்த பங்களிப்பைச் செய்தவர்கள் அநேகர். இவர்களில் ஒருவர் இல்லாதிருந்தாலும் இந்த அகராதி முழுமை அடைந்திருக்காது. இவர்கள் ஒவ்வொருவரையும் நான் கைகூப்பி வணங்குகிறேன். “
க்ரியா பதிப்பகத்தை இராமகிருஷ்ணன் ஆரம்பித்த காலத்தில் கணினி தொழில்நுட்ப வசதிகள் வளங்கள் இல்லாதிருந்தமையால், நூல்களின் மூலப்பிரதிகளை கையெழுத்திலேயே படித்தபோது, எழுத்தாளர்களின் எழுத்துப்பிழைகளை திருத்தி, செம்மைப்படுத்தும் சிரமங்களையும் சந்தித்தவர். குறிப்பாக மொழிபெயர்ப்புகளுக்கான கையெழுத்துப்பிரதிகளை செம்மைப்படுத்தும்போது அவருக்கு உதவியாக இருந்தவர் அவரது நண்பர் கே. நாராயணன் என்பவர். மொழிபெயர்ப்புகளில் தற்காலத்தமிழை கையாளுவதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளை உடனுக்குடன் சிறிய சிறிய அட்டைகளில் குறித்துவைத்திருக்கிறார்.
1980 ஆம் ஆண்டுமுதல் இராமகிருஷ்ணன் அயர்ச்சியின்றி உழைத்ததன் பெறுபேறாகத்தான் நாம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அதன்தேவையை அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது பேராச்சரியம்தான்.
இந்த அகராதியின் முதல் பதிப்பு ஏன் முக்கியத்துவம் பெற்றது..? தற்காலத் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட முதல் அகராதி. தற்காலத் தமிழில் சொல்லிலும் பொருளிலும் நிகழ்ந்துவரும் மாற்றங்களை எடுத்துக்காட்டும் முதல் அகராதி. தற்காலத் தமிழில் உள்ள சொற்களை எடுத்துக்காட்டு வாக்கியங்களோடு விளக்கும் முதல் அகராதி. இந்திய மொழிகளில் கணிப்பொறியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் அகராதியும் இதுதான். 15875 தலைச்சொற்கள். 23883 எடுத்துக்காட்டு வாக்கியங்கள் – தொடர்கள். பண்பாட்டுத் தொடர்புடைய சொற்களுக்கான 209 படங்கள்.
திருத்திய இரண்டாம் பதிப்பினயும் வெளியிட்டிருக்கும் இராமகிருஷ்ணன், கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் நடந்த புத்தகச்சந்தையின்போது, மேலும் புதிய புதிய சொற்பிரயோகங்களையும் உள்ளடக்கி மிகப்பெரிய ஆகராதியையும் வெளியிடவிருக்கும் எண்ணக்கருவை வெளிப்படுத்தியிருந்தவர். அந்த முயற்சியின் இறுதித்தருணத்தில் எதிர்பாராதாவகையில் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியிருந்த அவர் தனது விடா முயற்சியை சாதித்துவிட்டே விடைபெற்றுள்ளார். மரணப்படுக்கையில்தான் இருக்கிறேன் என்பது தெரிந்தோ தெரியாமலோ, மேலும் மேலும் செம்மைப்படுத்தப்பட்ட தற்காலத் தமிழ் அகராதியின் மற்றும் ஒரு பதிப்பினை எமக்கு வரவாக்கிவிட்டே விடைபெற்றிருக்கிறார் என்பதை அறியும்போது மனம் உறைந்துவிடுகிறது. அவரது க்ரியா, பல பெறுமதியான மொழிபெயர்ப்பு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. கடந்த மாதமும் எமது மெல்பன் வாசகர் வட்டம் நடத்திய மாதந்த சந்திப்பில் க்ரியா வெளியிட்ட காமெல் தாவுத் எழுதிய பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக - வெ. ஶ்ரீராம் தமிழுக்கு வரவாக்கிய மெர்சோ: மறுவிசாரணை நாவலைத்தான் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டது. இந்த நாவலை காமெல் தாவுத் எழுதநேர்ந்தமைக்கு அல்பெர் காம்யுவின் நோபல் பரிசுபெற்ற அந்நியன் நாவல்தான் முக்கிய காரணம். இந்த நாவலுக்கு எதிர்வினையாக வெளியானதுதான் மெர்சோ: மறுவிசாரணை. இதிலிருந்து க்ரியா இராமகிருஷ்ணனின் பரந்த சிந்தனையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம்.
அவர் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளதும் அபிமானத்துக்குரியவர். தற்காலத் தமிழ் அகராதியின் தயாரிப்பில் இலங்கை எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு, இலங்கை தமிழ்பேச்சுவழக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|