மனிதன் சிகரம் தொட அடிப்படைக் காரணமாக அமைவது கல்வியும் ஒழுக்கமும் ஆகும். குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி நம்மை உயர்த்தும் ஆயுதம் கல்வி மட்டுமே. இதனை உணர்ந்த ஜாம்பவான்கள் கல்வியின் சிறப்பினை,
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்”
“இளமையில் கல்”
“எண்ணும் எழுத்தும்_கண்ணெனத் தரும்”
“கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி”
“கற்றது கைமண் அளவு
கல்லாதது உலக அளவு”
“கல்வி கரையில கற்பவர் நாள்;
சில மெல்ல நினைக்கின் பிணிபல”
என்று கூறினர். மேற்கூறிய கூற்றுகள் கல்வியின் அவசியத்தை உணர்த்துகின்றன.
ஏராளமான செல்வத்தை பிள்ளைக்குத் தருவதிலும் சீரானது கல்வி மட்டுமே தான் எவ்வளவு கோடிஸ்வரர் ஆனாலும் தான் கற்ற கல்வியை சொத்தாகக் கொடுக்கவும் முடியாது பெறவும் முடியாது .ஆதலால் தான் கல்வி சிறப்பு வாய்ந்த
அணிகலனாகக் கருதப் படுகின்றது. என்பதனை,
“அரும்பரிசு ஆயிரம் கொடுத்தாலும்
பிள்ளைக்கு பெரும்பரிசு கல்வி”
என்ற வரிகள் உணர்த்துகின்றன.
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையோன்-
மன்னர்க்குத்தன் தேசம் அல்லாமல் சிறப்பில்லை
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு”
என்ற வரிகள் மன்னன் தன் நாட்டிற்கு மட்டுமே சிறப்பு வாய்ந்தவன். ஆனால் கற்றவருக்கு தேசமெல்லாம் சிறப்பு என்ற முத்தான வரிகளை மூச்சுக் காற்றாய் மாணவர்கள் சுவாசிக்க வேண்டும்.
கல்வி ஏழைகளுக்கு செல்வமாகவும், பணக்காரர்களுக்கு அணிகலனாகவும், வீட்டிற்கு விளக்காகவும், நாட்டிற்கு நன்மையை உண்டாக்கும் சொத்தாகவும் இருக்கிறது. அத்தகைய அணையா விளக்கை உள்ளத்தில் ஏற்றி அறியாமை என்ற அக இருளை
விரட்ட வேண்டும்.
பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனுக்கு துணையாக வருவது தான் கற்ற கல்வியே என்பதனை,
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்ற குறட்பாவின் மூலம் அய்யன் அழகாக எடுத்துரைத்துள்ளார்.
யாரெல்லாம் இன்று புத்தகங்களை நோக்கி தலை குனிகிறார்களோ அவர்களை நாளை இந்த உலகமே வியர்ந்து போற்றும். இன்று தலைக்குனிந்து படிப்பதெல்லாம் நாளை தலை நிமிர்ந்து வாழ்வதற்கே இன்று இமை விழித்து கற்பதெல்லாம் நாளை
சுமை ஒழிந்து வாழ்வதற்கே இன்று விரல் வழியில் எழுதுவதெல்லாம் நாளை குறள் வழியில் வாழ்வதற்கு என்பதனை மாணவர்கள் மனதில் விதையாக முளைவிட்டு வெற்றி என்ற கனியைப் பறிக்க மனதில் விதையாக விதைக்க வேண்டும்.
பிழைப்பதற்காக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் வாழ்வதற்கு அவரவர் தாய்மொழியில் படிக்க வேண்டும். ஏனென்றால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு.
“வெள்ளத்தால் போகாது வெந்தனலால் வேகாது
வேந்தனால் சொல்லத்தான் ஆகாது”
என்ற வரிகள் கல்வியின் அவசியத்தை போதிக்கின்றது.
“எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
கற்றவரே மேல் வருக”
என்ற இலக்கிய வரிகள் கற்றோரின் சிறப்புகளைப் பறைசாற்றுகின்றன. கற்றதோடு மட்டும் நிற்காமல் அந்நூல்கள் காட்டிய வழியில் செல்வது தான் கற்றோரின் கடமை.
கருத்துலக பகவான்களின் கனமான சிந்தனைகள் ஏராளமாக புத்தகங்களில் கொட்டிக் கிடக்கின்றன. படிப்பதன்மூலமும் படித்தபடி நடப்பதன் மூலமே சிறப்பு பெறலாம். கல்லாதவரைப் பற்றி அறிஞர்கள்
“அறிவே கல்வியாம் அறிவிலார் குடும்பம்
நெறி காணாமல் நின்றபடி வீழும்”
“படிப்பிலார் நிறைந்த குடித்தனம்
நரம்பினில் துடிம்பிலார் நிறைந்த சுடுகாடு”
“எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
இல்லா வீடு இருண்ட வீடு”
“கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண் உடையார் கல்லாதவர்”
என்ற நீதி நூல்கள் கல்லாதவரின் இழிவுநிலையை எடுத்துக்காட்டுகின்றன.
“படிக்காமல் இருத்தலை விட பிறக்காமல்
இருத்தலே மேல்”
“பெற்ற பிள்ளை கைவிட்டாலும்
கற்ற கல்வி கைவிடாது”
“முதுமையை முன்னிட்டு
செய்து வைக்கும் முன் ஏற்பாடு கல்வி”
பார் போற்ற புவியினில் பெயர் விளங்க கசடறக் கற்க வேண்டும்.
ஒழுக்கமெனும் ஐந்தெழுத்தின் மகத்துவம்
உயிரினும் மேலானது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற நற்பண்பு நம்மிடம் இருந்தால் அனைத்து நற்பண்புகளும் தானாகவே அமையும். ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியமென்பதை
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
என்று அய்யன் அழகாக கூறியுள்ளார்.
“விளைச்சலைத் தராத நிலமும்
ஒழுக்கத்தை தராத கல்வியும் வீண்”
என்னும் வரிகள் ஒழுக்கத்தின் மேன்மையை எடுத்துரைக்கும்.
ஒழுக்கம் கல்வியினால் அறிவைப் பெற்று அறிவின் துணைக் கொண்டு பாரத பண்பாட்டை உயர்த்தும் உன்னத வாழ்க்கைப் பாடத்தை மாணவர்களுக்கு வாழ கற்று கொடுக்கும்.
கைப்பேசி மாணவர்கள் இடையில் கையளவு இடைவெளி கூட இல்லாமல் செய்து விட்டது. எல்லோருடைய உலகமும் கைப்பேசியோடு கைகோர்ந்துள்ளது. அவரவருக்குத் தனி உலகம் நண்பர்கள் முக நூலிலும் புலனம் ஆயிரக்;கணக்கான நண்பர்கள். ஆனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் யார் என்று கூட தெரிவதில்லை. உள்ளங்கை நெல்லிக்கனி போல இருந்த உலகத்தில், உலகத்தையே தன் உள்ளங்கையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நெட் என்னும் வளைக்குள் புதைத்து விட்டனர் இன்றைய தலைமுறையினர். இயல்பான ஆற்றலை, சரியான வழியில் சிந்திக்க கற்றுத் தருவது பேராசிரியர்களின் கடமை. எல்லா அறிவும் இருக்கிறது, அந்த விழிப்புணர்வை தூண்டும் கல்வியே இன்றையத் தேவையாக உள்ளது. சொந்த அறிவைப் பயன்படுத்தாமல் மந்த அறிவுடையலர்களாக இருக்காமல் ஐம்புலன்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
“புத்தகங்கள் இல்லாத வீடு உயிர் இல்லாத உடல்” என்கிறார் சிசிரோ. நமக்குள் உறைந்து இறுகி இருக்கும் அறியாமையைப் பிளக்கும் கோடாரி தான் புத்தகங்கள். அத்தகைய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்து வாழ்வில் பயன்பெற வேண்டும்.
பார்வை நூல்கள்:
1.உலகநீதி- உலகநாதர்
2.கொன்றைவேந்தன் ஓளவையார்
3.; ஆத்திகூடி- ஓளவையார்
4.திருக்குறள்- பரிமேலழகர் உரை
5.நாலடியார்- சைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம்
6.பாரதிதாசன் கவிதைகள்- மணிவாசகர் பதிப்பகம் சென்னை.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|