- எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலுக்குச் சிறப்பானதோர் அணிந்துரையினை எழுத்தாளர் செ.யோகநாதன் எழுதியிருந்தார். அவரை நான் ஒருபோதுமே சந்தித்ததில்லை. அவரது படைப்புகள் மூலமே அவரை அறிந்திருக்கின்றேன். இருந்தும் அவர் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியதை எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூர்வேன். இதற்காக நூலைத் தமிழகத்தில் வெளியிட்ட ஸ்நேகா பதிப்பகத்தாருக்கு என் நன்றி.
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றி இதுவரையில் நானறிந்தவரையில் கணையாழி (தமிழகம், தொல்லியல் அறிஞர் எஸ். ராமச்சந்திரன் எழுதியது), டெய்லி நியூஸ் (கே.எஸ்.சிவகுமாரன் எழுதியது), Friday (கே.எஸ்.சிவகுமாரன் எழுதியது) மறுமொழி (கனடா- 'அசை'சிவதாசன் எழுதியது), இ-குருவி (கனடா) , லக்பிமா (காத்யானா அமரசிங்க நூல் பற்றி எழுதிய விரிவான கட்டுரை) ஆகியவற்றிலேயே விமர்சனங்கள் பிரசுரமாகியுள்ளன. ஆனால் இந்நூலைப் பலர் தம் ஆய்வுகள் பலவற்றுக்குப் பாவித்துள்ளார்கள். நூல் பற்றிய விமர்சனங்களை வெளியிட்ட ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றி. நூலுக்கு எழுத்தாளர் செ.யோகநாதன் எழுதிய சிறப்பான அணிந்துரையினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்துதமிழர் இலங்கையில் பண் பாட்டு வளர்ச்சி பெற்ற மக்களாய் வாழ்ந்து வந்திருக்கிறாரென்பதற்கு உறுதியான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. கி.மு. மூன்றாம்நூற்றாண்டு காலத்துதமிழ் பிராமிக்கல்வெட்டுகள் அகழ்வாராய்வில் ஈழத்தமிழ்ப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கந்தரோடை, ஆணைக் கோட்டை ஆகிய இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்வுகள் பெருங் கற்கால (MEGALTHC)நாகரிக மக்களாய்தமிழர்வாழ்ந்து, வளர்ச்சியும் பண்பாட்டு மேன்மையும் பெற்ற விதத்தினை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்ட அதே விதமான நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி என்பன, மேற்கூறிய காலப்பகுதியில் இலங்கையின் பாரம்பரித் தமிழ்ப்பிரதேசத்தில் இருந்து, தென்னிந்திய நாகரிகத்திற்கு சமனாக வளர்ச்சியும், பண்பாட்டுப்பாய்ச்சல்களும், கல்வெட்டுகளும் போதிய உறுதியைக் கொடுக்கின்றன. கடல்வழி வாணிபம், ஈழத்தமிழரோடு ரோமர்கள் கொண்டிருந்தனர், அராபிய, சீனருடனான வணிக உறவு களையும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முதிர்ந்த பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்த ஈழமக்கள்நடத்தியதற்கான பதிவுகளும் உள்ளன.
கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்-சைவமரபுள்ள அரசு யாழ்ப்பாணத்தில் உருவாயிற்று. வணிகமும், விவசாயமும்இந்த அரசின் பொருளாதார ஊற்றுக்கண்கள். செம்மை வாய்ந்த பண்பாட்டு வளர்ச்சி இந்த அரசின்காலத்தில் முக்கிய பண்பாக வெளிப்பட்டது.இந்த அரசின் ராசதானியாகநல்லூர் சிறப்புப் பெற்றது. கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்தது.
போர்த்துக்கேயர்வருகையுடன்இந்த அரசின்வீழ்ச்சியும் ஏற்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் அடிமைப்பட்ட ஈழத்தின் மேன்மை இன்றுவரைதனது விடுதலைக்காகப் போராடிவருகிறதென்பது வரலாறு. ஈழத்தமிழரின் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. இலங்கையின் அரசு அகழ்வாராய்வுகளெல்லாம் சிங்கள பெளத்த, பெருமைகளை விளக்கவும் உறுதிப்படுத்தவும், தமிழரின் மேன்மையை கண்டு கொள்ளாமல் - மூடிமறைக்களும் பிரயத்தனப்பட்டனவென்பது எல்லாரும் அறிந்த விஷயம். வரலாற்று மாணவனாகப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நான் பயின்று கொண்டிருந்த காலத்தில் இதை ஆதார பூர்வமாகவே கண்டு அறிந்து மனம் வெம்பியிருக்கின்றேன். அகழ்வாராய்ச்சித்துறையும், குறிப்பாக டாக்டர் பரண விதான போன்றோரும் ஈழத்தமிழ் வரலாற்றில் நிறையவே புழுதியையும், சேற்றுப்படலங்களையும் நறைத்து மூடியிருக்கிறார்கள். அதிகார பூர்வமான வரலாற்று சஞ்சிகைகள், நூல்கள் என்பன இன்றளவும் இம்முயற்சியில் சளையாமல் இயங்கிவருகின்றன. துரதிருஷ்டவசமாக ஆரம்பகாலத்தில் வரலாற்றுத்துறையில்இருந்த தமிழ்ப்படிப்பாளிகள் ஈழத்துவரலாற்று உண்மைகளை வெளிக்கொணர் வதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த இருளிடையே பேராசிரியர் கணபதிப்பிள்ளை - அவர் தமிழ்த்துறையைச் சார்ந்தவராகஇருந்தபோதி லும் - ஆர்வத்தோடு ஒரு வெளிச்சமாய்ப் பிரவேசித்தார். பின்னர் பேராசிரியர் இந்திரபாலா ஆணித்தரமான ஆய்வுப்போக்கோடு இந்தப்பாதையை விரிவு செய்தார். இப்போது பேராசிரியர்கள் பத்மநாதன், சிற்றம்பலம் ஆகியோர்ஈழத்துவரலாற்றை மேலும் மேலும் ஆராய்வதில் அக்கறையான உழைப்போடு இயங்கி வருகின்றனர். இவர்களால் புதிய ஆய்வாளர்கள் உருவாக்கப்படுவது. ஈழவரலாறு மேலும் மேலும் வெளிச்சம் பெற உதவுதாக அமையும். நவீன அறிவியல், எல்லாத்துறைகளையும் போல வரலாற்று ஆய்விலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி ஆய்வுகளைநம்பகமும், வேகமும் பெறச்செய்கிறது. குறிப்பாக அகழ்வாராய்வில், அறிவியல் நிறையவே வெளிச்சம் படரவைத்திருக்கிறது. யூகமானமுடிவுகளுக்கு இதனால் இடமேயற்றுப்போய் விட்டது. வெளிப்படுத்தலென்றால் உண்மைதான்
யாழ்ப்பாணத்திலே தனியான பல்கலைக்கழகம் அமைந்தது பல திருப்பங்களை உண்டாக்கின. அவற்றிலே முதன்மையானது கட்டுப் பாடற்ற வரலாற்று ஆய்வுமுறை.
காலமும் இயற்கையும் மண்ணால் மூடியிருக்கின்றதமிழ்ப்பிரதேசம் இன்னும் தனது தொன்மைமிகு வரலாற்றை வெளிப்படுத்தாமலே வைத்திருக்கின்றது. ஆயினும் இடர்கள் நிறைந்த சூழலிலும், இந்த வரலாற்றை வெளிப்படுத்துவதில் இளந்தலைமுறை ஆய்வாளர்கள் மிக அர்ப்பணிப்போடு ஈடுபட்டிருப்பதை நான் அறிவேன். அவர்களில் ஒருவராக நான் நண்பர் வ.ந.கிரிதரனை அடையாளங் காண்கிறேன். இதையிட்டு மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
ஆர்வத்தோடும் அர்ப்பணிப் போடும் வரலாற்று ஆய்விற்கு வந்துள்ள இந்த அறிவுஜீவிகள், இந்தக் காலத்தில் எமக்கு அவசியம் தேவைப்படுகிறவர்கள், இவர்களின் வருகை பெருகட்டும்.
அகழ்வாராய்ச்சித்துறையில் ஒரு புயலாக நான் கலாநிதி பொ.ரகுபதியை அடையாளங்கண்டிருக்கிறேன், தமிழ்ப்பகுதியில் வலுவான அகழ்வாராய்வு செய்வதில் முன்னின்ற ரகுபதியின் EARLY SETTLEMENTS என்ற நூல் இனிவரும் ஆய்வாளர்களுக்கு ஒரு பயன் நிறைந்த கையேடு. ரகுபதியைப் போலவே ஆர்வமும் ஆய்வுணர்வும் கொண்ட கிரிதரன், கட்டிடக்கலைப்பட்டப்ப்டிப்பை மேற்கொண்டவர். அப்போதிருந்தே தனக்கு கம்பீரமளிக்கும் வரலாற்றைக் கொண்ட நல்லூர் ராஜதானி பற்றி மனதினிலே ஒப்பற்ற கனவுகளை வளர்த்துக்
கொண்டவர், மனதுள் நிறைந்திருந்த அந்த ஆய்வுணர்வு, ரத்தினச் சுருக்கமான ஆய்வுக் கையேடாக இப்போது வெளியாகியிருக்கின்றது. சோகமும், இடர்ப்பாடுகளும் நிறைந்த வாழ்விடையேயும், தன் தாயக நினைவோடு இந்நூலை எழுதியுள்ள கிரிதரனை எல்லாரும் பாராட்ட வேண்டும். சான்றாதாரங்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்களுக்கு நடுவே, பொறுமையும் தேடுதலும்கனியஇந்தப்பிரதியை கிரிதரன் செம்மையாக எழுதியுள்ளார். பின்னொரு காலத்தில், சுதந்திரக் காற்று வீசும் சூழலில் வாழப்போகின்ற இளந்தலைமுறை ஆய்வாளர் களுக்கு இந்த நூல், ஒரு ஆக்கபூர்வமான வழிகாட்டியாக அமையும. அதைவிட இன்னொரு ஆய்வுக்கும் இது உதவியாக அமையும்.
ஈழவரலாற்றில் நல்லூரின் பங்களிப்பு உன்னதமானது. சோழர் காலத்திலேயே சிறப்புப்பெற்றிருந்தநகரம். பின்னர்யாழ்ப்பாண அரசின் தலைநகராக கம்பீரத்தோடு பொலிந்த திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இருப்பிடம். ஆயினும் இந்த அரசின் பரப்பிடங்கள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. என்றாலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படை யிலும், தனது கட்டிடக்கலை அனுபவ ஆய்வறிவிலும் பரிச்சயம் முதிரப்பெற்ற கிரிதரன் நல்லூர் ராசதானியின் அமைப்பைப் பற்றி தர்க்கரீதியாக விளக்கியுள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளருக்குரிய நேர்மையும், நிதானமான போக்கும் கிரிதரனிடம் முழுமை பெற்றுள்ளன. அடிப்படையற்றுக் கூறப்பட்ட பல வரலாற்று ஆதாரங்களையும் அவர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுகின்றார். அதை விரிவாகவே ஆராய்ந்து எது உண்மையெனநிறுவுகின்றார். ஒரு வரலாற்றாளனுக்கு வேண்டியஇந்த அறிவு முதிர்ச்சிஇந்த இளைஞரிடம் அமைந்துள்ள முறையே இவரது கற்றறிவின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது. கிரிதரனின் ஆய்வுக் கண்ணோட்டத்தை மேலும் அவரது செம்மையும் எளிமையும் வாய்ந்த மொழிநடை மெருகுபெற வைக்கின்றது.
O O O
இதுவரை கிரிதரனை நான்பார்த்ததில்லை, எழுத்தின்மூலம்ஆர்வம் கொண்டஇளைஞராய், அறிவுத்தேடலுள்ள கலைஞனாகவே அறிந்து வைத்திருக்கின்றேன். அவரது இந்த ஆய்வுநூல் அவரைப் பற்றிய இன்னொரு தளத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது. அதுவும் அறிவுச் செருக்கோடும் திறனோடும். இந்த நூலை முன்னுரை எழுதும் பொருட்டு இருமுறை படித்தேன். இதைப் பற்றி சிந்திக்க நினைத்த போது நெஞ்சு என்னையறியாமலே கனக்கத் தொடங்கிற்று. என்விடுநல்லூரில் உள்ளது. அங்கே போயிற்று என் நினைவு, சுத்தமான காற்றிடையே அதிகாலையில் மெல்லவே கீதமென நெஞ்சைத்தொடும் நல்லூர்க்கோயில் மணிஓசை காதோடு கேட்கிறது. வீரமாகாளி அம்மன் கோயில் சட்டநாதர், வெய்யிலுகந்த பிள்ளையார், கைலாசநாதர் கோயில் வழியாக நடந்து வருகிறேன். யமுனாரிமனதினுள்ஆச்சரியம் விளைக்கின்றது. அந்தக்காற்று, பூவரசம் பூக்கள், இனிமையான பேச்சுமொழி, தலையை ஆட்டிப் பார்க்கிற மண்ணின் அடையாளமான பனைமரங்கள், வெளிரென்ற மேகங்கள், செம்புத்தண்ணீர். இவற்றோடுமண்முடியுள்ளமேடுகள், உடைந்த பழையகாலகட்டிட எச்சங்கள்நினைவில் வருகின்றன.
இன்னும் யோசித்தால் நாம் வாழ்ந்த பெருமையான காலம் கண்க ளிலே வருகின்றது. கிரிதரன் அந்தப் பழைய ராசதானிக்கு நம்மை அழைத்துச் சென்று பெருமூச்சு விடவும் வைக்கின்றார். பெருமூச்சு கஷ்டத்துக்குப்பதிலாக மேலும் மன உறுதியைத் தருகிறது. தூயவான் பரப்பின் கீழே, நானும் கிரிதரனும் நல்லூர் ராசதானியின் வீதிகளில் வெகுவிரைவிலேயே பெருமையோடு தலைநிமிர்ந்து நிற்போமென அந்த மனஉறுதிசொல்கிறது.
O O O
கட்டிடக்கலையில் தமிழர் பங்களிப்பு உலக அளவிலே இன்றும் வியந்து பேசப்படுவது, அதற்கான சிற்பசாஸ்திர, கட்டிடக்கலைமரபுகள் நமது ஒப்பற்ற செல்வங்கள். இன்னும் சொன்னால் இவை தமிழரின் கட்டிடக்கலை தொழில்நுட்ப அறிவை இன்றும் வியக்க வைத்துக் கொண்டிருப்பவை.
கிரிதரனின் கட்டிடக்கலை ஞானம் பாராட்டத்தக்கது. தனது படிப்பு எல்லைக்கு வெளியேயும் இந்த ஞானத்தை அவர் தேடித்தேடி சேகரித் திருக்கிறார். இதைஇந்தநூல் சத்தமிட்டுச்சொல்கிறது. குறிப்பாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய கிரிதரனின் ஆழ்ந்த விளக்கம். கட்டிடக்கலை,நகர அமைப்பு பற்றிய அடிப்படை அறிவை வெகு எளிமையாக கிரிதரன்விவரித்திருக்கின்றார், சின்னவிஷயங்களைக்கூட விட்டு விடாமல் நுணுக்கமானதகவல்களும் விளக்கமும் கொடுக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு சிறந்த உதாரணப் பிரதியாக என்னால் இந்தப்பிரதியை அனுமானிக்க முடிகிறது.
இந்நூலுக்குரிய வரைபடங்கள் புகைப்படங்கள் அடுத்த பதிப்பில் இடம்பெற வாசகர்கள் கிரிதரனுக்கு உதவுவார்கள் என நம்புகிறேன். தகவல் தொடர்பற்ற நிலையிலே கிரிதரனின் முழு மூச்சான முயற்சி இவ்விதம் நூல், பயனுள்ள தொகுப்பாக உருவாகக் காரணமாயிற்று. இதற்காக பூமிப்பந்தெங்கும் பரவியும் தாய்மண்ணிலும் வாழும் ஈழத்தமிழர்கள் கிரிதரனை மனமாரப் பாராட்டுவார்கள். இதற்காகவே கிரிதரன் பெருமையும் பெருமிதமும் கொள்ளலாம். வாசிக்கின்ற எந்த ஈழவர் மனதிலும் பெருமிதம், உறுதி, தன்னம்பிக்கை, பிரதிக்கினை என்பனவற்றைநிச்சயம் இந்நூல் உருவாக்கும். கிளர்ந்தெழ வைக்கும். இதைவிட ஒரு நூல் ஆசிரியனுக்கு வேறென்ன பெருமை வேண்டும்?
சிறந்த நூல்களை வெளியிட்டு வரும் ஸ்நேகா பதிப்பகத்தை இந்த நூலை அழகுற வெளியிடுவதற்காக நான் பாராட்டுகிறேன். இதற்காக அவர்கள் பெருமை கொள்ளலாம்.
•<• •Prev• | •Next• •>• |
---|