"வரலாற்றைக் காட்டிலும் நினைவு என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்த நிகழ்வாகும் "– தீபேஷ் சக்ரபர்த்தி (வரலாற்றாசிரியர்)
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமுரசு இதழில் ‘அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’ என்ற தொடரினை எழுதும்போது தோழர் அற்புதன் அதனை பின்வருமாறு ஆரம்பிக்கிறார். “’அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’ என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது என் நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் கால அவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத்தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும்.அவற்றை ஓட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலின் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்படும்.” – இன்று தோழர் அற்புதன் படுகொலை செய்யப்பட்டு சுமார் 2௦ வருடங்களுக்கு மேலாகின்றன. ஆயினும் அவர் கூறியபடி ஈழ விடுதலைப் போராட்ட வரலாறானது இன்னமும் எழுதப் படாமலேயே இருக்கின்றது. இப்போராட்ட வரலாறு குறித்து இதுவரை ஏராளமான நூல்கள், தொடர்கள் வெளி வந்து கொண்டிருக்கின்ற போதிலும் அவைகள் அனைத்துமே வெறும் சாட்சியங்களாகவும் அனுபவங்களாகவும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சி.புஷ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ கணேசன் ஐயரின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை’ தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ என்று விரல் விட்டு என்ன முடியாதளவிற்கு சாட்சியங்களினால் நிறைந்திருக்கும் ஈழ விடுதலைப் போராட்ட நூல்கள் ஒரு குறிப்பிட்ட மனிதரின் அனுபவங்களை அல்லது ஒரு ஒரு குறிபிட்ட காலப்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி நிற்கின்றன.
இப்போது மீண்டும் ஈழ விடுதலைப் போரின் சாட்சியமாக புதியதொரு நூலாக ரவி எழுதிய ‘குமிழி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது. ‘விடியல்’ பதிப்பகத்தினரால் மிகக் குறைந்த எழுத்துப் பிழைகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ள 225 பக்கங்களை உள்ளடக்கிய இந்நாவலில் ரவி, ஈழ விடுதலைப் போரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு Semi Autobiography வடிவில் எழுதியுள்ளார்.
ரவி, ஈழ புகலிட இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஆளுமை. 80 களின் இறுதியிலும் 9௦ களிலும் ‘மனிதம்’ என்ற இதழினை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தொடர்ச்சியாக நடாத்தியதன் மூலமும் பல்வேறு விதமான இலக்கிய, சமூக செயற்பாடுகளின் மூலமும் புகலிடத்தில் நன்கு அறியப்பட்டவர். அவர் தனது இளமைக் காலங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்டு ஆயுதப்பயிற்சியும் பெற்றுக் கொண்டவர். அவர் 1984 இல் இருந்து 1985 வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
‘இண்டைக்கும் அதே கனவா, அப்பா?’- நள்ளிரவில் கெட்ட கனவொன்றினை கண்டு திடுக்கிட்டு விழித்தெழும் தனது தகப்பனை பார்த்து, ஒரு மகள் கேட்கும் கேள்வியுடன் நாவல் ஆரம்பமாகின்றது. மேற்குலக நாடொன்றில் (சுவிற்சிலாந்தில்) தஞ்சம் புகுந்துள்ள அவன், 27 வருடங்களுக்கு முன்னர் வேலை பார்த்த ஒரு மலை உச்சியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றிற்கு மீள் வருகை புரிவதுடன் ஆரம்பமாகும் அடுத்த அத்தியாயம் அந்த ஐரோப்பிய மனிதர்களுடனான அவனது உறவுகள், பிரிவுகள் அவர்கள் மரணங்கள் ஏற்படுத்துகின்ற துயரங்களை பேசி நிற்கின்றது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவனது நினைவுகளாக தாயகம் நோக்கி பயணிக்கும் நாவலானது அவனது வறிய குடும்ப சூழ்நிலைகளையும் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளையும் விபரித்து நிற்கின்றது. அவனது மொரட்டுவ பல்கலைக்கழக வாழ்வும், 83 இனக்கலவரமும், அக்கலவரத்தில் பலியான, அவன் பறி கொடுத்த நண்பர்களும், அனைத்தையும் இழந்து அவன் அகதியாக கொழும்பில் இருந்து கப்பலில் ஊர் திரும்புவதும் அவனது பறி போன கல்வியும் அவனது அரசியல் வாழ்விற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்து விடுகின்றன. அதுவே அவனை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைத்து, அவனை தமிழகத்திற்கு ஆயுத பயிற்சி பெற அனுப்பியும் வைத்து விடுகின்றது. அதன் பின் இந்நாவலானது தமிழகத்தினை மட்டுமே களமாகக் கொண்டு நகர்கின்றது. ஒரு திகில் நிறைந்த கடல் பயணத்துடன், இலட்சிய வேட்கையுடனும் அரசியல் பற்றுறுதியுடனும் தமிழகத்தில் கால் பதிக்கும் அவனது நம்பிக்கைகள் யாவும் அவனது ஆரம்பகால பயிற்சிமுகாம் வாழ்விலேயே சிதைவடைந்து விடுகின்றன. அங்கு அமைப்பிற்குள் நடைபெறும் கொடூரமான கொலைகளும் குரூரமான சித்திரவதைகளும் உட்கட்சி மோதல்களும் அவனிற்கு அமைப்பின் மீதான நம்பிக்கையை மட்டுமன்றி இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையினையும் இழக்கச் செய்கின்றன. பெரும் முயற்சியின் பின் தாயகம் (தனது வீடு) நோக்கித் திரும்புகின்றான். தனது அமைப்பிற்கெதிராக சில வேலைத்திட்டங்களை முன்னேடுக்கின்றான். தாயகத்திலும் அவனது அமைப்பினரின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இறுதியில் தனது அமைப்பிலிருந்து விலகி, தனது ஏந்திய கனவுகளைத் தொலைத்து, மனதில் அரும்பிய காதலினைத் துறந்து, நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு புதிய வாழ்வினை வாழ, மேற்குலக நாடொன்றினை நோக்கி விமானமொன்றில் பறப்பதுடன் இந்நாவல் முற்றுப் பெறுகின்றது.
ஆரம்பத்தில் மேற்கு நாடொன்றிலும், ஈழத்திலும் தன்மை ஒருமையில் ‘நான்’ என நகரும் கதாபாத்திரம் தமிழகத்தினை அடைந்ததும் ரகு என்ற பெயர் பெற்று பின் ஒரு இடைவெளியில் ஜோன் என்ற பெயரினைப் பெறுகின்றது. ஒரேயொரு அத்தியாயத்தில் வேப்பமரமொன்று தன கதையைக் கூறிக் கதையின் பகைப்புலத்தை பலப்படுத்தி நிற்கின்றது.
நேர்த்தியான, ஒரு மென்மையான படைப்பு மொழியில், ஒரு நவீனமான எழுத்து நடையில், பல்வேறு விதமான படிமங்களையும் உருவகங்களையும் புதிதாகப் புகுத்தி, ரவி இந்நாவலை மிகவும் அனாயாசமாக எழுதிச் சென்றிருக்கிறார். தன் மனதில் உள்ள, தான் பார்த்த களங்களை, நிலங்களை மற்றவர்களிடம் கடத்துவதில் ஒரு படைப்பாளியாக அவர் பெரு வெற்றியொன்றினைப் பெற்றுச் செல்கிறார். ஒரு ஐரோப்பிய தேசமொன்றின் வெண் பனி கொட்டும் பனிப் பிரதேசத்தினையும், தமிழகத்தின் எரிக்கின்ற வெயிலினையும் தகிக்கின்ற வெக்கையினையும் மிகவும் இலாவகமாக எம்மிடையே கடத்தி விடுகின்றார். பலத்த வெப்பத்தினையும் சூட்டையும் வெளிப்படுத்தும் சவுக்கந்தோப்புக் காடுகளும் அதற்குள் குடில்களாக அமைந்த பயிற்சி முகாம்களும் அதனை அண்மித்த வயல்வெளிகளும் எம்மை அரவணைத்துச் செல்லும் அதேவேளை , அந்தக் காட்டின் மத்தியில் தனியாக, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வதற்கும் கொடூரமான கொலைகள் புரிவதற்குமாக அமைக்கப்பட்ட தனிக் குடிலொன்று நாவலின் இறுதிவரை எம்மைப் பயமுறுத்தியே நிற்கின்றது.
வாசிக்கும் போது எமக்குக் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ ஞாபகத்திற்கு வருகின்றது. அது சுமார் 3௦ வருடங்களுக்கு முன்பு ஈழ விடுதலைப் போரின், இதே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடூரமான பக்கங்களை அங்கு நடைபெற்ற படுகொலைகளை எமக்கு வெளிப்படுத்திய நாவல். இப்போது ரவி அந்தக் கொடூரம் நிறைந்த வரலாற்றுப் பக்கங்களை அதில் இடம் பெற்ற படுகொலைகளை மீண்டும் எழுதிச் செல்கிறார். அதன் மூலம் அதனை மீண்டும் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றார்.
இந்நூலினை தான் ஒரு ஆவணமாக எழுத முற்பட்டதாகவும், ஆனால் பல விடயங்கள் தனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லாதபடியினால் இதனை ஒரு புனைவாக நாவல் வடிவில் எழுதியுள்ளதாகவும் தனது பின்னுரையில் ரவி குறிப்பிடுகிறார். உண்மைதான். இது ஒரு வரலாற்றுரீதியான ஆய்வு நூல் இல்லை என்பது எமக்கு கொஞ்சம் ஏமாற்றத்தினையே அளிக்கின்றது. ஆயினும் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளையும் அதன் பரப்புக்களையும் விசாலிக்கும் வகையில் மீண்டுமொரு நாவல் எமக்குக் கிடைத்துள்ளது குறித்து நாம் பெருமை கொள்ளலாம்.
ஈழ விடுதலை வரலாற்றின் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் தடம்பதித்த நாம் அறிந்த நிஜமனிதர்களான உமா மகேஸ்வரன், சந்ததியார், வாசுதேவா, காந்தன், ராஜன், வாமதேவன் என பலரும் கதை மாந்தர்களாக இங்கு வலம் வருகின்றார்கள். அத்துடன் நாம் அறியாத பல மனிதர்களும் உலா வருகின்றனர். மேலும் ரவியும் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். ”இங்கு ஒருவரின் பாத்திரமானது பன்மைகளின் சிக்கல் நிறைந்த தொகுப்பு என நான் காண்கிறேன். அதாவது ஒத்திசைவானதும் முரண்கள் கொண்டதுமான வெவ்வேறான பாத்திரங்களின் ஒரு சேர்க்கை”. இதன்படியே இங்கு பல கற்பனைப் பாத்திரங்கள் உலா வருவதினையும் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே இங்கு எமக்குள் சில குழப்பங்கள் ஏற்படுவதினையும் எம்மால் தவிர்க்க முடியவில்லை. இங்கு வரலாற்றையும் புனைவினையும் பிரிக்கின்ற கோடுகள் எவை? யதார்த்தங்களும் கற்பனைகளும் இங்கு எவ்விதங்களில் வேறுபடுகின்றன? வரலாற்றிற்கும் புனைவிற்கும் இடையே எமது மனம் ஒரு தத்தளிப்பினை எதிர்கொள்கின்றது.
இவற்றினையெல்லாம் வாசிக்கும்போது எம்மிடையே ஒரு கேள்வி தொக்கி நிற்கின்றது. எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்ட எம் மக்களது போராட்டத்தின் இருண்ட பக்கங்கள் மட்டும்தான் மீண்டும் மீண்டும் எம்மால் எழுதப் பட வேண்டுமா? ஒருதடவை சிந்தனையாளரும் எழுத்தாளருமான தாரிக் அலி கூறினார். “நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பினை எதிர்கொள்ளும்போது, உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது.” உண்மை. இவ்வகையில் எமது போராட்டமும் அழகானதாக நேர்த்தியானதாக இருக்க முடியாதுதான். ஆனால் அது இத்தனை கொடூரம் நிறைந்தாகவும் குரூரமானதாகவும் ஏன் மாறியது? விடை தெரியாத இந்தக் கேள்விகளுக்கு இந்நூலிலும் விடை இல்லை.
இது போன்ற நூல்களின் வருகைக்குப் பின்பாக உருவாகின்ற சிக்கல்களும் எமது கவன வட்டத்திற்கு வருகின்றன. முக்கியமாக இதே போன்று ஒரு அமைப்பின் மீது மீண்டும் மீண்டும் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் ஆனது மற்றைய அமைப்பினர் தங்களை ஏதோ புனிதமானவர்களாகக் காட்டும் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்து விடுகின்றது. இதில் முக்கியமாக விடுதலைப்புலிகள் அமைப்பினரைக் குறிப்பிடலாம். ‘புதியதோர் உலகம்’ வெளிவந்த காலப்பகுதியில் அவர்கள் அதனைப் பெரிதாக விதந்தோதியதும் அந்நூலின் விநியோகங்களை அவர்கள் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டதினையும் நாம் அறிவோம். ஆயினும் புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவினதும் அவரது அணியினைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான போராளிகளினதும் படுகொலைகளும், முஸ்லிம் சமூகத்தின் மீதான முரண்பாடுகளின் பின்பு அவ் அமைப்பில் இருந்த பல முஸ்லிம் இளைஞர்களினது படுகொலைகளும் இன்னமும் பேசப்படாமலே இருக்கின்றன. அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்குள் நிகழ்ந்த இந்த உடைவுகளுக்கும் பிளவுகளுக்கும் அவ் அமைப்பிற்குள் இருந்த உட்கட்சி ஜனநாயகமும், உட்கட்சி போராட்டங்களுமே காரணம் என்று கூறி, ஒரு அமைப்பிற்கு இவைகள் அனைத்துமே ஆபத்தானவை என்று வாதிடுவோருக்கும் இது போன்ற நூல்கள் ஆதார பலமாக மாறிவிடுகின்ற ஆபத்துக்களும் உருவாகி விடுகின்றன.
‘வரலாற்றைக் காட்டிலும் நினைவு என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்த நிகழ்வாகும்’ வரலாற்றாசிரியர் தீபேஷ் சக்ரபர்த்தியின் வாசகங்கள் எமது நினைவிற்குள் வருகின்றன. வரலாறு எனும் இடிபாடுகளின் கற்குவியல்களிளிருந்து வரலாற்றாசிரியன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உண்மைகளினது பல்வேறு பரிணாமங்களுக்கு மத்தியிலேயே தனது வரலாற்றினை எழுதிச் செல்லுகிறான். இங்கு ரவியும் தனது நினைவுகள் எனும் இடிபாடுகளின் கற்குவியல்களில் இருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் பல கற்களினை எடுத்து உண்மைகளும் புனைவுகளும் கலந்து ஒரு நாவலினைச் செதுக்கியிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார். ஆயினும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எம்மிடையே? தனது முன்னுரையில் ரவி ஊதிப் பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் அமைப்பின் உடைவினை தான் இங்கு எழுதியிருப்பதாகக் கூறுகிறார். ஆனால் வரலாற்றில் வாழ்ந்த எமக்கு அதனை ஒரு குமிழியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகரான வலிமையினைக் கொண்டிருந்த ஒரு அமைப்பு, மக்களின் தேசிய விடுதலைக்கு முன்பாக அவர்களிற்கிடையேயான வர்க்க விடுதலையினையும் சமூக விடுதலையினையும் கோரி நின்ற, இடது சாரி சிந்தனையாளர்களினாலும் செயற்பாட்டாளர்களினாலும் உருவாக்கப்பட்ட ஒரு பலமான அமைப்பு, ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் அடித்தட்டு மக்களிடையேயும் ஆழ ஊடுருவி அவர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஒரு அமைப்பு, விவசாய, கடற்றொழிலாளர் சங்கங்களையும் பல தொழிலார் அமைப்புக்களையும் உருவாகிய ஒரு அமைப்பு, ஒரு பொருண்மிய மேம்பாட்டினை முன்னெடுக்கும் வகையிலும் மக்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்த ஒரு அமைப்பு, எல்லைப்புறக் கிராமங்களான, மற்றவர்கள் பெயர்களைக் கூட அறிந்திராத பிரதேசங்களில் தமது காலடித் தடங்களைப் பதித்து மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்பி, போர்முனையில் அவர்களும் தயாராகும் வகையில் உள்ளூரிலேயே ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்ட ஒரு அமைப்பு, இன்று ஒரு குமிழியாக உருவகிக்கப் படுகின்றது. அன்று எண்பதுகளின் ஆரம்பத்தில் மக்கள் மனதில் ஒரு மாபெரும் விருட்சமாக விஸ்வரூபம் உருவெடுத்திருந்த ஒரு அமைப்பு இன்று ஒரு குமிழியாகச் சித்தரிக்கப்படுகின்றது. எமக்கு ஏற்றுக் கொள்ள கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது உண்மையாகி விட்டது. அது இன்று சிதறிச் சிதைந்து உடைந்து சின்னாபின்னமாகி விட்டது. இங்கு சிதறிச் சிதைந்து உடைந்து சுக்கு நூறாகியது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பு மட்டும்தானா? இல்லை. கூடவே எமது ஈழ விடுதலைப் போராட்டமும்தான். இந்த துயரம் நிறைந்த வரலாற்றினை எழுதுவதற்கு தொடர்ந்தும் தொடர்ந்தும் சாட்சிகள் முயன்று கொண்டேயிருப்பார்கள். முடிவற்ற இத்தொடர் பயணத்தில் குமிழிக்கும் ஒரு காத்திரமான பங்குண்டு.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|