- ஞானம் சஞ்சிகையின் செப்டெம்பர் 2020 இதழில் வெளியான நேர்காணல். இணைய வாயிலாக நடைபெற்ற நேர்காணலிது. கண்டவர் ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன். -
1) தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, இளமைப்பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்
அம்மாவின் பிறப்பிடம் வீமன்காமம், அப்பா குரும்பசிட்டி. குரும்பசிட்டி கலை இலக்கியத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு கிராமம். எனக்கு எழு அண்ணன்மார்கள், இரண்டு அக்காமார்கள். நான் கடைசி. என்னுடைய சித்தப்பாவும், அத்தானுமாகச் சேர்ந்து `சக்தி அச்சகம்’ என்றொரு அச்சுக்கூடம் வைத்திருந்தார்கள். அங்கிருந்துதான் `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகை வெளிவந்தது. அதன் ஆசிரியராக மு.க.சுப்பிரமணியம்(சித்தப்பா) இருந்தார். சக்தி அச்சகத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களும், என்னுடைய சகோதரர்கள் பாடசாலையில் பெற்ற பரிசுப்புத்தகங்களுமாக ஏராளமான புத்தகங்கள் ஒரு அலுமாரியில் அடங்கிக் கிடந்தன. சக்கரவர்த்தி இராஜபோபாலாச்சாரியார் எழுதிய `வியாசர் விருந்து’, பாரதியார் கவிதைகள், டாக்டர் மு.வரதராசனின் `அகல்விளக்கு’, அகிலனின் `பாவை விளக்கு’, செங்கைஆழியான் க.குணராசாவின் `முற்றத்து ஒற்றைப்பனை’ / `கங்கைக்கரையோரம்’ / `சித்திரா பெளர்ணமி’ / `வாடைக்காற்று’ போன்ற புத்தகங்கள், தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சில கட்டுரைப் புத்தகங்கள், அம்புலிமாமா இன்னும் இவைபோலப் பல இருந்தன. இந்தப் புத்தகங்களை பாடசாலை விடுமுறை நாட்களில் வாசிப்பதற்கு மாத்திரமே வீட்டில் அனுமதித்தார்கள். இல்லாவிடில் படிப்புக் கெட்டுப்போய்விடும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகையாக இருந்தபோதிலும் என்னுடைய எந்தவொரு படைப்பும் அதில் வந்ததில்லை. அது ஏன் என்பது பற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்க்கின்றேன்.
மிகவும் இளைமைக்காலங்களில் பாடசாலை விடுமுறை நாட்களின்போது குரும்பசிட்டி போய்விடுவேன். அங்கே எனது அக்கா குடும்பத்தினர் இருந்தார்கள். அங்கிருக்கும் காலங்களில் குரும்பசிட்டி அம்மன் கோவிலிற்கு அடிக்கடி போவேன். கதாப்பிரசங்கள் கேட்பேன். என்னுடைய அப்பா தன் வாழ்நாள் முழுவதும், வீமன்காமத்திலிருந்து குரும்பசிட்டி போய் அம்மன்கோவிலைத் தரிசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார். அத்தான் சன்மார்க்கசபைக உறுப்பினராக இருந்தபடியால், கூட்டங்களிற்குப் போகும்போது என்னையும் கூட்டிச் செல்வார். அதன்பின்பு சற்றுப் பெரியவனான பின்னர், விடுமுறைக்காலங்களில் கிளிநொச்சி சென்றுவிடுவேன். அங்கே அக்கா முறையானவர் உருத்திரபுரத்தில் இருந்தார். அக்காவும் அத்தானும் கிள்நொச்சி இந்துமகாவித்தியாலயத்தில் படிப்பித்தார்கள். குருகுலத்தையும் இவர்கள் வீட்டையும் ஒரு வேலியே பிரித்திருந்தது. அக்காவின் பிள்ளைகளுடன் குருகுலத்திற்குச் செல்வதும் வாய்க்கால்களில் விளையாடுவதும் பொழுதுபோக்கு. அங்கிருந்த நாட்களில் இவர்களின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்கு வந்து இருந்தவர், ஒரு அப்பியாசக்கொப்பியில் பத்துப்பன்னிரண்டு சிறுகதைகளை எழுதி வைத்திருந்தார். அவற்றை வாசித்துக் கருத்துச் சொல்லும்படி அக்காவின் பிள்ளைகளுக்குக் கொடுத்திருந்தார். அதிலிருந்த கதைகளை பலதடவை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னைக் கவர்ந்த அந்தக் கதைகளின் சொந்தக்காரரின் பெயர் ஞாபகத்தில் இருந்தும் மறைந்துவிட்டது.
ஆரம்பகாலங்களில் பள்ளிகளில் கட்டுரை எழுதுவதற்குத்தான் சொல்லித் தந்தார்கள். அதனால் பல கட்டுரைப்போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்புக் கிட்டியது. கூடுதலானவை சமயக்கட்டுரைப் போட்டிகள். சோயா அவரை பயிரிடும் காலம் கொடிகட்டிப் பறந்தவேளையில் யாழ் லயன்ஸ் கழகம் நடத்திய, யாழ்மாவட்ட சோயா அவரைக் கட்டுரைப்போட்டியில் இரண்டாவது பரிசுபெற்றது மறக்கமுடியாதது.
1976 இல் அரசு புதிய கல்வித்திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்தது. ஒரு சில வருடங்களே நீடித்த இக்கல்வித்திட்டத்தில் பல நல்ல திட்டங்களும் அடங்கியிருந்தன. அதில் 'கலாச்சாரமும் பண்பாடும்' என்ற பாடம் மிகவும் முக்கியமானது. இந்தப் பாடத்தை அதிபர் கதிர்.பாலசுந்தரம் அவர்களும், த.சண்முகசுந்தரம் (தசம்) ஆசிரியரும் படிப்பித்தார்கள். 'சிறுகதை எழுதுதல்' அதில் முக்கியமானதொரு அம்சமாக இருந்தது. இரண்டுபேருமே தலைசிறந்த எழுத்தாளர்கள். இதில் த.சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். கதிர்.பாலசுந்தரம் கனடாவில் தற்போதும் எழுதிக் கொண்டிருக்கின்றார். இந்தப் பாடத்தின் ஒரு அம்சமாக மாணவர்கள் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு, எழுத்தாளர்கள் கலைஞர்களைச் சந்திக்கும்படி கேட்கப்பட்டோம். எமது குழுவினர் குரும்பசிட்டி சென்று இரசிகமணி கனக.செந்திநாதனை நேர்காணல் செய்தோம். அந்த நேர்காணலை கட்டுரை வடிவமாக மாற்றி இரசிகமணி கனக.செந்திநாதனின் மறைவின் பின்னர் ஈழநாடு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். அது ஈழநாடு வாரமலரில் `வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணி’ என்னும் தலைப்பில் பிரசுரமானது.
1979 ஆம் ஆண்டு, என்னுடைய முதலாவது படைப்பு `கதிரொளி’ என்ற கையெழுத்துப் பிரதியிலும், `ஈழநாடு’ மாணவர் எண்ணம் என்ற பகுதியில் வந்தது. எது முதலில் வந்தது என நினைவில் இல்லை. அப்போது 11வது தரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். கதிரொளியில் வந்த படைப்பு சிறுகதை, ஈழநாடு மாணவர் பகுதியில் வந்தது உருவகக்கதை. ஒருமுறை யூனியன் கல்லூரி 'செய்திப் பலகை'யில் சதாவதானி கதிரைவேற்பிள்ளை நினைவாக சிறுகதைப்போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டியின் விதிமுறைகளில் யார் யார் பங்குபற்றலாம் என்று தெளிவில்லாமல் இருந்தது. கேட்பதற்கு பயம். ஒரு சிறுகதையை எழுதி அனுப்பி வைத்தேன். நாலைந்து மாதங்கள் கழித்து அதிபரின் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அதிபர் சில குறுக்குக் கேள்விகள் கேட்டார். கதையில் வரும் இரண்டொரு பாத்திரங்கள் பற்றி விசாரித்து அதை நான்தான் எழுதினேனா என்பதை உறுதி செய்து கொண்டார். பின்னர் அந்தப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கான கடிதத்தை என்னிடம் தந்தார். அந்தச் சிறுகதைப்போட்டியில் காவலூர் எஸ்.ஜெகந்நாதன் முதற்பரிசு பெற்றார். இந்தக்காலப் பகுதிகளில் காங்கேசந்துறைக் கல்வி வட்டாரம் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.
இந்திய சமாதானப்படையினர் நாட்டில் நிலைகொண்ட காலத்தில், எமது கிராமம் சில மாதங்களாக முடக்கத்திற்குள்ளானது. எனது வீட்டிற்கு நாலைந்து வீடுகள் தள்ளி, ஒருவரின் வீட்டில் நிறைய இந்தியச் சஞ்சிகைகள் இருந்ததை அறிந்துகொண்டேன். வீட்டின் பின்புறமாக இருந்த தோட்டக்காணிகளுக்குள் பொட்டுப் பிரித்து, அவர் வீடு சென்று புத்தகங்களை இரவல் வாங்கினேன். ஒருதடவை இரண்டு மூன்று புத்தகங்கள் எனத் தருவார். அவற்றை வாசித்துவிட்டு திருப்பிக் கொடுத்தால் மேலும் புத்தகங்கள் தருவார். இப்படியாக `ராணிமுத்து’க்களைக் கரைத்துக் குடித்தேன். அகிலன், ஜெகசிற்பியன், ரமணிசந்திரன், ஜெயகாந்தன், சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா போன்றோரின் புத்தகங்களையும் என் வாசிப்புக்காக அவர் தந்தார். எஸ்.பொ வின் `சடங்கு’ நாவலைக்கூட நான் அப்போதுதான் படித்துக்கொண்டேன்.
இவைதான் எனது இலக்கிய உணர்வுகளின் ஆரம்பப் படிநிலைகள் ஆகும். என் பதின்ம வயதுகளில் பெற்றோரின் கட்டுப்பாட்டையும் உடைத்துக்கொண்டு இலக்கியத்திற்குள் புகுந்துவிட்டேன்.
2) இலங்கையில் இருந்த காலத்தில் தங்களது கல்வி, பார்த்த தொழில்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்
வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர் கல்வியையும் பயின்றேன். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டத்தை / Bsc(Engineering) பெற்றுக்கொண்டேன். பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தபின்னர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் செயல்முறைப் பயிற்றாசிரியராக (Demonstrator) இருந்தேன். பொறியியலாளராக முறையே லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம், கொழும்பு டொக்கியாட் நிறுவனம் (கப்பல் கட்டுமானம்), `தேசிய உபகரண இயந்திரக் கூட்டுத்தாபனம்’ என்பவற்றில் பணிபுரிந்தேன். லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோதும், அதன் பின்னர் சில வருடங்களும் - இலங்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் கணினிப்பிரிவில்---முறையே கொக்குவில், நாவல என்ற இடங்களில்--- செயல்முறைப் பயிற்றாசிரியராகவும் பணிபுரிந்தேன்.
3) தங்களது முதற்படைப்பு எப்போது எதில் வெளியானது? இலங்கையில் இருந்த காலத்தில் எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதினீர்கள்?
1983 ஆம் ஆண்டு, 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற சிறுகதை செ.சுதா என்ற பெயரிலும்; `வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணி’ என்ற கட்டுரை `கதிரொளியான்’ என்ற புனைபெயரிலும் ஒரே நேரத்தில் ஈழநாடு வாரமலரில் வந்தன. இலங்கையில் இருந்த காலங்களில் ஈழநாடு, சிந்தாமணி பத்திரிகைகளிலும்; `உள்ளம்’ என்ற சஞ்சிகையிலும் எனது படைப்புகள் வந்தன. தவிர பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் 1987 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதையை முதற்பரிசுக்குரியதாக, பேராசிரியர் துரை.மனோகரன் அவர்கள் தெரிவு செய்திருந்தார். 1989 இல் நோர்வே தமிழ்ச்சங்கம் அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப்போட்டியில், பல பிரபல எழுத்தாளர்களுடன் என்னுடைய கதையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
4) ஏன் புலம்பெயர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டது?
புலம்பெயர்ந்து செல்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. 1987 இல், பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக்கொண்ட பின்னர் காங்கேசந்துறை லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் வேலை கிடைத்தது. ஊரில் இருந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் அங்கேயே வேலை செய்யலாம் என கனவு கண்டுகொண்டிருந்தேன். வேலையை நிரந்தரமாக்குவதில் இழுபறி ஏற்பட்டுக் கொண்டிருந்ததால், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்யலாம் என முடிவெடுத்தேன். அப்போது கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி அமைந்திருந்த வளாகத்தின் ஒரு மூலையில், இலங்கைத் திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவு இயங்கி வந்தது. அங்கே கணினிப்பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தேன். நாட்டுச் சூழ்நிலைகளால், யூன் 1990 காங்கேசந்துறையில் இயங்கிக்கொண்டிருந்த இரண்டு சீமெந்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இரண்டு வேலைகளில் ஒன்று பறிபோனது. வேலை நிரந்தம் இல்லை என்பதால் சம்பளப்பணமும் நிறுத்தப்பட்டது. அதற்கடுத்தடுத்த மாதங்களில் விடுதலைப்புலிகளின் தலையீட்டினால் கொக்குவிலில் இருந்த எமது கணினிப்பிரிவு மூடப்பட்டது. கொழும்பு வந்து நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றுமாறு கேட்கப்பட்டோம். சில வருடங்களே அந்த வேலை நீடித்தது. அதன் பின்னர் ஒரு வருடமாக வேலையில்லாமல் கொழும்பில் அலைந்து திரிந்தேன். அப்பொழுது கொட்டாஞ்சேனை நூல் நிலையம் தஞ்சமானது.
அப்போது ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சிக்காலம் (1989 – 1993). நாட்டின் அபிவிருத்தியில் மிகவும் அக்கறை கொண்ட அவர், வேலையற்ற பொறியிலாளர்களுக்கு ஒரு பரீட்சை வைத்து, அதனடிப்படையில் வேலை வழங்கிக் கொண்டிருந்தார். முதலில் எனக்கு Embilipitiya பகுதியில் இருந்த Sevanagala சீனிக் கூட்டுத்தாபனத்தில் வேலை கிடைத்தது. அங்கு சென்று உயிர் பிழைத்து வந்தேன். மூன்று நாட்களே தாக்குப் பிடிக்க முடியவில்லை. பின்னர் கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. டொக்கியாட்டில் வேலை செய்யும்போது அங்கே அடிக்கடி வான்படைத் தளபதிகள், கடற்படைத் தளபதிகள் வருவார்கள். அவர்கள் வரும்போது `ஓடி ஒளிக்கும்படி’ மேலதிகாரி சொல்லுவார். வடபகுதிக்குப் போய் எனது பெற்றோர் உறவினர்களைச் சந்திக்க அனுமதி தரப்படவில்லை. `கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பங்களை போராளிக்குழுக்களுக்கு சொல்லிவிடுவோம்’ என்று பயந்தார்கள். இந்தக் காலங்களில் என்னுடன் படித்த சகநண்பர்கள் புலம்பெயர்ந்து தேசமெங்கும் சிதறிவிட்டார்கள். அப்பொழுது நியூசிலாந்து நாட்டில் குடியேறுவதற்காக திறமை அடிப்படையில் (Skilled Migration) விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். நானும் புலம்பெயர்ந்து போவதற்கு முடிவெடுத்து விண்ணப்பிக்கத் தொடங்கினேன்.
அதே நேரத்தில் `தேசிய உபகரண இயந்திரக் கூட்டுத்தாபன’த்தில் வேலை கிடைக்கவே, டொக்கியாட் வேலையை இராஜினாமாச் செய்துவிட்டு வவனியா போய்ச் சேர்ந்தேன். வவனியாவில் வேலை செய்யும்போது மூன்று பக்கங்களில் இருந்து தலையிடி வந்தது. `புளொட்’ அமைப்பும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம்), வவனியாவில் நிலைகொண்டிருந்த வான் படையினரும் இயந்திரங்களையும் உபகரணங்களையும் இலவசமாக ஊழியர்களுடன் வேலைக்குத் தரும்படி கேட்டார்கள். இடையிடையே விடுதலைப்புலிகளின் கடிதங்கள் `தங்களை வந்து கிளிநொச்சியில் சந்திக்கும்படி’ செய்தியைத் தாங்கி வரும்.
1983 ஆம் ஆண்டு ஜூலைக்கலவரங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக, பேராதனைபல்கலைக்கழகத்தில் பிரச்சனைகளை உருவாக்கி, எம்மை இரவோடு இரவாக அடித்துக் கலைத்தார்கள். 1987 ஆம் ஆண்டு லங்கா சீமெந்துக்கூட்டுத்தாபனத்தில் பொறியியலாளராக வேலை செய்துகொண்டிருக்கும் காலத்தில், ஒருநாள் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) வீரர்களில் சிலர், என்னைப் பிடித்து மூடிய வாகனத்தில் ஏற்றி எங்கோ கூட்டிச் சென்றார்கள். இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பப்படவிருந்த வேளையில், தொழிற்சாலை நிர்வாகமும் இந்திய அமைதிப்படையினரும் தலையிட்டு என்னை விடுவித்தார்கள். அன்று என்னுடன் பிடிபட்டிருந்த அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டார்கள். 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, வேலையையும் இழந்து சண்டிலிப்பாயில் இருந்தவேளை ஒருநாள் `மண் சுமந்த மேனியர்’ நாடகம் பார்ப்பதற்காக அளவெட்டி சென்றிருந்தேன். எங்கே நாடகம் பார்த்தேன்? விடுதலைப்புலிகள் பிடித்துக்கொண்டு போய், பலாலி விமான நிலையத்திற்கு அண்மித்த கிராமப்பகுதியில் `பங்கர்’ வெட்டி மண் சுமந்த மேனியர் ஆக்கினர். விடுதலைப்புலிகளில் யாரோ ஒருவன் என்னை அடையாளம் கண்டு, தன்னை அடையாளம் காட்டாமல் என்னை விடுவித்துக் கொண்டான். 1994 ஆம் ஆண்டு, வவனியாவில் வேலை செய்துகொண்டிருந்த காலப்பகுதியில் எனது திருமணம் கொழும்பில் நடந்தது. திருமணம் நடப்பதற்கு முதல்நாள் வெள்ளவத்தையில் இராணுவம் பிடித்துவிட்டது. வேலை செய்து கொண்டிருப்பதற்கான அடையாள அட்டை, வெடிங் கார்ட் இவை ஒன்றும் பலனளிக்காமல் வீதியில் ஒருநாள் முழுவதும் இருத்தி வைக்கப்பட்டிருந்தேன்.
இப்படியான மனதைப் பிழிந்த சம்பவங்கள் என்னைப் புலம்பெயரும் எண்ணத்திற்கு வித்திட்டன.
1995 ஆம் ஆண்டு, நான் நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு ஒருமாதத்திற்கு முன்னால் அம்மா இறந்து போனார். அந்தச் செய்தி என்னை வந்தடைய இரண்டு வாரங்கள் சென்றன. 130 கி.மீ தூர இடைவெளியில் நாவற்குழி என்ற இடத்திற்குப் போக இரண்டரை மணி நேரம் போதுமானது. ஆனால் போக முடியாது. 1995 ஆம் ஆண்டு இதுதான் நிலவரம். என்னால் செத்தவீட்டிற்கும் போக முடியவில்லை. உறவுகளையும் சந்திக்க முடியவில்லை. எல்லாவற்றையும் மனதின் ஆறா வடுக்களாக்கிக்கொண்டு, விமானம் ஏறி, 14 மணித்தியாலங்கள் பயணம் செய்து நியூசிலாந்து நாட்டிற்குப் போய்விட்டேன்.
அதன்பின்னர் அப்பா, அக்கா, அண்ணா என இறப்புகள் தொடர்ந்து வந்தன. இவை ஒன்றுக்குமே நாட்டு நிலைமைகளினால் போக முடியவில்லை.
5) நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?
சிறுகதை, கட்டுரை, விமர்சனம், குறுநாவல், நேர்காணல், பத்தி எழுத்து என்பவற்றில் ஆர்வம் கொண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில் சில கவிதைகள் எழுதிப் பார்த்ததுண்டு. ஆர்வம் ஏற்படாமையினால் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
ஏறக்குறைய 75 சிறுகதைகள், 60 குறும் கதைகள் எழுதியிருக்கின்றேன். 50 சொற்களுக்குள் ஒரு விடயத்தை சொல்ல முடியுமா என முயற்சித்து `வெற்றிமணி’ பத்திரிகையில் தொடராக `கதை கதையாம் காரணமாம்’ என்ற தலைப்பில் ஏறக்குறைய 45 கடுகுக்கதைகள் வந்திருக்கின்றன. ஞானம் சஞ்சிகையில் அட்டைப்பட அதிதி, புத்தக விமர்சனங்கள், பத்திகள், புனைவுக்கட்டுரைகள் என பல்வேறு இடங்களில் 40 ற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்திருக்கின்றன
தவிர சில நேர்காணல்கள், 4 குறுநாவல்கள் வந்திருக்கின்றன. `கனடா உதயன்’ பத்திரிகையிலும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்திலும் இந்த குறுநாவல்கள் தொடராக வெளியாகியிருக்கின்றன. இவற்றுள் ‘மெல்பேர்ண் வெதர்’ என்ற குறுநாவல் காக்கைச்சிறகினிலே சஞ்சிகை கி.பி.அரவிந்தன் நினைவாக நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசை வென்றது.
6) உங்களது எழுத்தின் படிநிலை வளர்ச்சி பற்றிக் கூறுங்கள்.
இலங்கையில் இருக்கும் காலங்களில் எனது எழுத்து முயற்சிகளுக்கு சரியான வழிகாட்டுதல்கள் அமையவில்லை. பள்ளியில் படிக்கும்போது எழுதிய படைப்புகள் எல்லாம் வீட்டிற்குத் தெரியாமல் ஒளித்தே எழுதப்பட்டன. அவை பற்றி வீட்டில் ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. பள்ளியிலும் கூட அந்த முயற்சிகளுக்கு பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. `கலாசாரமும் பண்பாடும்’ - தமிழ், விஞ்ஞானம், கணிதம் போன்று ஒரு பாடமாக இருந்ததேயொழிய கூடுதல் அக்கறை காட்டப்படவில்லை. அதற்கான காரணங்கள் சரியானதெனவே நான் நினைக்கின்றேன். எம்மைப் பொறுத்தவரையில் `எழுத்து சோறு போடாது’ என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம்.
இதையெல்லாம் கடந்து, 1983 ஆம் ஆண்டு எனது முதலாவது சிறுகதையும் கட்டுரையும் ஈழநாடு வாரமலரில் ஒரே நேரத்தில் வெளிவந்தன. பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று, யூலைக்கலவரங்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நடந்த `மினி’க் கலவரங்களால் அல்லல்பட்டு தலைதெறிக்க ஓடி வீட்டிற்கு வந்திருந்த காலத்தில் இவற்றை எழுதினேன். வீமன்காமம் சனசமூக நிலையத்தில் இந்தப் படைப்புகள் வெளிவந்த அந்தப் பத்திரிகையைக் கண்டு, அவர்களிடம் கெஞ்சி மன்றாடி அந்தப் பிரதியைப் பெற்றுக் கொண்டேன். வீட்டிற்குக் கொண்டுவந்ததும் அதை அம்மாவிற்குக் காட்டினேன். அம்மா அதை நம்பவில்லை. ஆரோ உன்னுடைய பெயரைக் கொண்ட ஒருவர் எழுதியிருக்கின்றார் என்று சொன்னார். முதல் எழுத்தைப் பாருங்கள் `செ.சுதா’ என்று கிடக்கின்றது அல்லவா என்றேன். உற்றுப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். அப்பா அதைவிட மோசம். அவருக்கு நான் அதைக் காட்டவேயில்லை. காட்டியிருந்தால் பறித்துக் கிழித்து எறிந்திருப்பார்.
லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு வேலை செய்யும் இலக்கிய ஆர்வலர்கள் `கலை இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பை ஆரம்பித்திருந்தார்கள். அவர்களுடன் கலந்துரையாடுவதும் புதியனவற்றை அறிந்துகொள்வதும் மனதுக்கு இதமாக இருந்தது. அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டியிலும் பங்குபற்றி பரிசினைப் பெற்றுக்கொண்டேன். அந்தக்கதை அவர்கள் வெளியிட்ட `சங்கமம்’ மலரில் வெளிவந்தது.
1995 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நியூசிலாந்து நாட்டிற்குச் சென்றேன். ஓக்லாந்தில் இயங்கிவந்த `நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்’தின் ஆண்டுவிழா மலர்களில் எழுதத் தொடங்கினேன். அவர்களின் வானொலியிலும் எனது படைப்புகள் வந்தன. அவர்களின் வானொலிக்கென அமைக்கப்பட்ட குழுவில் இணைந்து தொழிற்பட்டேன். புதிய உற்சாகம் மலர்ந்தது. அங்கிருந்தவர்கள் உற்சாகமூட்டினார்கள். தமிழ் ஆங்கிலம் என இரண்டுமொழிகளிலும் எழுதும் வல்லமை பெற்ற எழுத்தாளர் ஆ.தேவராஜன் எப்போழுதும் உற்சாகம் தருவார். கண்ணன் (தர்மகுமார்), றேமண்ட் செல்வராஜா (றைசல், தற்போது அவுஸ்திரேலியா SBS தமிழ் வானொலியின் தமிழ் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்) போன்றவர்கள் எனது படைப்புகளை வானொலி வடிவமாக்கி இசையும் கதையும் போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து உற்சாகம் தந்தார்கள். அத்துடன் நியூசிலாந்து திருமுருகன் கோவில் திருப்பணிச்சபையினர் வெளியிடும் `சைவ நீதி’ இதழின் முதலாவது மலருக்கு (தை, 2000) ஆசிரியராக இருந்தேன். அங்கிருக்கும்போது, அவுஸ்திரேலியா `ஈழம் தமிழ்ச்சங்கம்’ நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் கலந்துகொண்டேன். முதல் ஐந்து சிறுகதைகளைத் தெரிவு செய்து 100 டொலர்கள் வீதம் அவர்கள் பரிசு வழங்கினார்கள். எனக்கு 125 நியூசிலாந்து டொலர்களாகக் கிடைத்தன. பணம் செலவழிந்தாலும் அவர்கள் அனுப்பிவைத்த உற்சாகக்கடிதம் பத்திரமாக இருக்கின்றது. அந்த உற்சாகக் கடிதத்தை எழுதிய, அப்போதைய ஈழம் தமிழ்ச்சங்க தலைவர் / எழுத்தாளர் சு.ஸ்ரீகந்தராசாவை, பின்னர் அவுஸ்திரேலியாவில் சந்திப்பேன் என நான் அப்போது நினைக்கவில்லை.
அப்புறம் நியூசிலாந்திலிருந்து, 2000 மார்கழியில் அவுஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்தேன். அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் இன்னொரு திருப்பம். அங்கு பெருமளவிலான எழுத்தாளர்களும், சங்கங்களும் இருந்தன. அவர்களும் பிரிந்து நின்றே தொழிற்பட்டார்கள் என்ற விடயம் எனக்குப் போகப் போகத்தான் தெரிந்தது. அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த நாட்களில், மெல்பேர்ணில் முதலாவது எழுத்தாளர்விழா நடந்தது. என்னால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. அந்தக்காலங்களில் `உதயம்’ என்ற இருமொழிப் பத்திரிகையும், `ஈழமுரசு’ என்ற பத்திரிகையும் வெளிவந்துகொண்டிருந்தன. உதயம் பத்திரிகைக்கு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தேன். திடீரென ஒருநாள் உதயம் பத்திரிகை ஆசிரியர் நொயல் நடேசன் அவர்கள் தொடர்பு கொண்டு, என்னுடைய எழுத்துக்கள் பற்றி அறிந்துகொண்டார். அப்புறம் லெ.முருகபூபதி அவர்கள் தொடர்பு கொண்டார். லெ,முருகபூபதி உதயம் பத்திரிகையின் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். உதயம் பத்திரிகையில் சில கதைகள் வெளியாகின. ஈழமுரசுப் பத்திரிகையில் ஒன்றும் பிரசுரமாகவில்லை. பின்னர் இரண்டு பத்திரிகைகளிலும் இருந்துகொண்ட அரசியலைப் புரிந்துகொண்டு மெளனமாகிவிட்டேன். முருகபூபதி அவர்களின் தொடர்பின் பின்னால், இலக்கியம் மீதான பற்றுதல் மேலும் அதிகரித்தது. நிறையப் புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் என வாசிப்பிற்காகக் கிடைத்தன. நிறைய எழுத்தாளர்களின் தொடர்பும் ஏற்பட்டது.
புலம்பெயர்ந்த காலத்தில் இருந்தே இணையம் எனக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்தது. அதன் மூலம் இலக்கியம் பற்றிய புதிய தேடுதல்கள் செய்யக்கூடியதாக இருந்தது. அயல்நாட்டு இலக்கியங்கள் பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது. புனைவு இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அறியக்கூடியதாக இருந்தது. தொடர்ந்த வாசிப்பு, எழுத்துப் பயிற்சி என்பவற்றால், எனது ஆரம்பகாலப் படைப்புகளில் இருந்த மொழி நடையை சற்றே மாற்றிக் கொண்டேன். சாதாரண வாசகர்களால் புரிந்துகொள்ள முடியாத, சிக்கலான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துக் கொண்டு, சிறுசிறு வார்த்தைகளாக எழுதுவதற்குப் பழகிக் கொண்டேன். என்னுடைய எழுத்தில் தவிர்க்கமுடியாதவர் என்று சொல்வதென்றால் கதிர்.பாலசுந்தரம் அவர்களைக் குறிப்பிடுவேன். எனக்குப் பிடித்த சிறுகதைத்தொகுதிகளில், அவரது `அந்நிய விருந்தாளி` சிறுகதைத்தொகுதியும் அடங்கும். ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், மனித உரிமைவாதி எனப் பன்முகங்களைக் கொண்ட அவர், எனது எழுத்துக்களைப் படித்து, பல ஆலோசனைகள் தந்திருக்கின்றார். அதன் தொடர்ச்சியாக - யூனியன் கல்லூரி 200 ஆண்டுகள் பூர்த்தி செய்தபோது, இவரினால் வெளியிடப்பட்ட `தங்கத்தாமரை’ நூலில் `பொன் சொரிந்த பொற்காலம்’ என்ற கட்டுரையை எழுத வாய்ப்புத் தந்திருந்தமை என்னால் மறக்கமுடியாதது.
எழுத்து என்பது தொடர் பயிற்சியினால் வரவேண்டுமென்பதற்காக, `சுருதி’ என்றொரு வலைப்பூவை (blog) - http://shuruthy.blogspot.com 2014 ஆம் ஆண்டு ஆரம்பித்து அதில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன். ஒரு இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து, பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். நல்லதொரு படைப்பை எழுதிவிட வேண்டும் என்ற ஆர்வம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றது.
7) தங்களது படைப்புகள் எந்தெந்த நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன? அவற்றில் எந்தப் பத்திரிகையில் அதிகமாக எழுதியிருக்கிறீர்கள்?
ஈழநாடு, தினக்குரல், தினகரன், வீரகேசரி, புதுவிதி (வாசிகை), முரசொலி, சிந்தாமணி என்ற இலங்கைப் பத்திரிகைகளிலும் – வெற்றிமணி என்ற ஜேர்மன் பத்திரிகையிலும் - உதயம் என்ற அவுஸ்திரேலியப் பத்திரிகையிலும் – `கனடா உதயன்’ என்ற பத்திரிகையிலும் படைப்புகள் வந்திருக்கின்றன. கூடுதலான படைப்புகள் தினக்குரல் பத்திரிகையிலும் வெற்றிமணியிலும் வந்திருக்கின்றன. தினக்குரல் பத்திரிகை வாரமலர் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் அவர்களும், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களும் எனது படைப்புகளைப் பிரசுரித்து ஊக்கம் தருபவர்களில் முதன்மையானவர்கள்.
சஞ்சிகைகள் என்று சொல்லும்போது - ஞானம், மல்லிகை, ஜீவநதி, உள்ளம் என்ற இலங்கை சஞ்சிகைகளிலும்; கணையாழி, செம்மலர், யுகமாயினி, மேன்மை, தளம், காக்கைச் சிறகினிலே என்ற இந்தியச் சஞ்சிகைகளிலும்; சிவத்தமிழ் (ஜேர்மனி); தென்றல் (அமெரிக்கா); ஆக்காட்டி (பிரான்ஸ்), காற்றுவெளி (இலண்டன்) போன்ற சஞ்சிகைகளிலும் படைப்புகள் வந்திருக்கின்றன. கூடுதலான படைப்புகள் ஞானம் சஞ்சிகையில் தான் வந்திருக்கின்றன. அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் ஞானம் ஆசிரியரான தி.ஞானசேகரன் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். அதற்கடுத்தபடியாக கூடுதல் படைப்புகள் வந்ததென்றால் யுகமாயினி, கணையாழியைக் கூறலாம்.
அத்துடன் திசைகள், பதிவுகள், வல்லமை, வல்லினம், திண்ணை, அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, திசைகள், ஈழநேசன், அப்பால் தமிழ், தேனி, எதுவரை?, கீற்று, மலைகள், நடு, பிரதிலிபி, தமிழ் ஆதர்ஸ்.கொம், சிறுகதைகள்.கொம் போன்ற பல இணையத்தளங்களில் என்னுடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணைய இதழ்களில் பதிவுகள் வ.ந.கிரிதரன், அக்கினிக்குஞ்சு யாழ்.எஸ்.பாஸ்கர் என்பவர்கள் எனது படைப்புகளை வெளியிடுவதுடன் தனிப்பட்ட ரீதியில் ஊக்கமும் தருகின்றார்கள்.
சிறுகதைப்போட்டிகளில் தெரிவான எனது சிறுகதைகள் பல தொகுப்புக்களாக வந்திருக்கின்றன. அப்படி வந்த தொகுதிகளில் எச்சங்கள் (தமுஎகச), கருமுகில் தாண்டும் நிலவு (ஞானம்), சிறைப்பட்டிருத்தல் (ஞானம்), பூபாள ராகங்கள், வல்லமைச் சிறுகதைகள் என்பவை குறிப்பிடத்தக்கன. மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் இருபத்தாறு சிறுகதைகள், ஈழவரின் இருபத்தேழு சிறுகதைகள், உயிர்ப்பு சிறுகதைத்தொகுப்பு(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்), வானவில் கவிதைத்தொகுப்பு (அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்) என்பவற்றிலும் எனது படைப்புகள் வந்திருக்கின்றன.
8) புலம் பெயர் எழுத்தாளர்களில் அதிகளவு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர் நீங்கள் என்பது எனது கருத்து. அவைபற்றிய விபரங்களைத் தருவீர்களா?
இதுவரை 27 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றேன். ஞானம் சஞ்சிகை ஆரம்பத்தில் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப்போட்டியை நடத்தியது. பின்னர் ’செம்பியன்செல்வன்’ ஆ,இராஜகோபால் நினைவுச் சிறுகதைப்போட்டியை நடத்தி வருகின்றது. இவை இரண்டிலுமாகச் சேர்த்து 9 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றேன். அதற்கடுத்தபடியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கம் எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக நடத்திய சிறுகதைப்போட்டிகளில் 3வது, மற்றும் தமிழ்நாட்டுக்கு வெளியே 1வது என இருதடவைகளும்; போடிமாலன் நினைவாக நடத்திய சிறுகதைப்போட்டியில் 1வது பரிசையும் பெற்றுக் கொண்டேன். பரிசு பெற்ற கதைகள் செம்மலர் இதழில் பிரசுரமாகின.
மற்றும் அவுஸ்திரேலியா குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம்/ தாய்த்தமிழ்ப்பள்ளி, அவுஸ்திரேலியா/நியூசிலாந்து எழுத்தாளர்களுக்கிடையே நடத்தும் சிறுகதைப்போட்டியில் இரு தடவைகள் முதல் பரிசு கிடைத்திருக்கின்றன.
வல்லமை இணையத்தளம் 2012 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஒரு வருடகாலம் சிறுகதைப்போட்டியொன்றை நடத்தி வந்தது. மாதாமாதம் அதில் வருகின்ற சிறுகதைகளை வெங்கட் சாமிநாதன் அவர்கள் மதிப்பீடு செய்து, கதைகள் பற்றிய தனது கருத்துக்களையும் இணையத்தளத்தில் எழுதுவார். அதில் 2 தடவைகள் எனது சிறுகதைகள் முதற்பரிசினைப் பெற்றுக்கொண்டன. அத்துடன் வெங்கட் சாமிநாதனும் எனக்கு அறிமுகமானார்.
காக்கைச்சிறகினிலே சஞ்சிகை கி.பி.அரவிந்தன் நினைவாக நடத்திய சிறுகதைப்போட்டி, சாருநிவேதிதா விமர்சகர் வட்டம் நடத்திய சிறுகதைபோட்டி, தென்றல் சஞ்சிகை (அமெரிக்கா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), நோர்வே தமிழ்ச்சங்கம், லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம், பேராதனைப் பல்கைக்கழகம் என்பவை நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றிருக்கின்றேன்.
9) எழுத்து தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?
எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயது முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வாசித்து வருகின்றேன். வாசித்த புத்தகங்களில் சிறந்தவற்றை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வது, நண்பர்களிடையே புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது, கலந்துரையாடுவது மகிழ்ச்சி தரும் செயல்கள். போகும் இடங்களில் இலக்கியநண்பர்களைச் சந்தித்து உரையாடுவது மனதிற்கு இதமானது. கனடா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றபோது சில எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அதேபோல பிறநாடுகளில் இருந்து இங்கு வரும் இலக்கியவாதிகளைச் சந்திப்பதும் உண்டு. கனடா சென்றிருந்தபோது குரு.அரவிந்தன், வ.ந.கிரிதரன், எல்லாளன்(ராஜசிஙகம்), கடல்புத்திரன்(பாலமுரளி), தேவகாந்தன், அகில், ஸ்ரீரஞ்சனி என்பவர்களைச் சந்தித்தது இன்னமும் பசுமையாக இருக்கின்றது. அதேபோல் இந்தியாவிற்குச் சென்றபோது நா.முத்துநிலவன், அண்டனூர் சுரா, ஸ்ரீரசா (இரவிக்குமார்) என்பவர்களைச் சந்தித்திருந்தேன்.
இணையங்களில் இல்லாத மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிப்பிடித்து தமிழில் தட்டச்சு செய்தும், இணையம் / வலைப்பூ இல்லாத எழுத்தாளர்களின் சில நல்ல படைப்புகளைத் தேடிப் பெற்றும் எனது வலைப்பூவில் பதிவிடுகின்றேன். நல்ல படைப்புகளை இனம் கண்டுகொண்டு, அவற்றை வாசகர்கள் படிப்பதற்காக இணையங்களிலும் முகநூல்களிலும் அறிமுகம் செய்கின்றேன்.
10) வெளிவந்த தங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?
இதுவரை இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. ’எங்கே போகின்றோம்’ என்ற சிறுகதைத்தொகுதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடாக (குமரன் பதிப்பகம்) 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய இருபத்திரண்டு வருட காலத்தை (2006 – 1984) உள்ளடக்கிய பதினெட்டுக் கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இந்தக் கதைகளை எழுத்தாளர்கள் கதிர்.பாலசுந்தரம், காவலூர் இராசதுரை என்பவர்கள் செவ்வைப்படுத்தித் தந்தார்கள். தொகுப்பிற்கான அணிந்துரையை காவலூர் இராசதுரை அவர்களும், பதிப்புரையை லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள். அட்டைப்பட ஓவியத்தை, ஓவியக்கலைவேள் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதி ‘அக்கினிக்குஞ்சு’ வெளியீடாக (மித்ர பதிப்பகம்) 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. 2006 – 2013 காலப்பகுதிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளை உள்ளடக்கியது. தொகுப்பிற்கான அணிந்துரையை `புலம்பெயர் வாழ்க்கை’ என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்களும், பதிப்புரையை யாழ்.எஸ்.பாஸ்கரும் எழுதியிருக்கின்றார்கள். அட்டைப்பட ஓவியத்தை, ஓவியக்கலைவேள் மு.க.சு.சிவகுமாரன் அவர்களும், கதைகளுக்கான படங்களை தவம் அவர்களும் வரைந்திருக்கின்றார்கள்.
11) அவுஸ்திரேலியாவில் நிறுவன ரீதியாக எத்தகைய இலக்கியச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன? அத்தகைய செயற்பாடுகளில் தங்களின் பங்களிப்புப் பற்றிக் கூறுங்கள்
அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் சிட்னி (நியூ சவுத் வேல்ஸ்), மெல்பேர்ண் (விக்டோரியா), பிறிஸ்பேர்ண் (குவீன்ஸ்லாந்து), பேர்த் (மேற்கு அவுஸ்திரேலியா), அடிலையிட் (தெற்கு அவுஸ்திரேலியா) பகுதிகளில் கலை இலக்கியச் செயற்பாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. எல்லா இடங்களின் பெயரோடு ஒட்டி - சிட்னி தமிழ்ச்சங்கம், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், மெல்பேர்ண் தமிழ்ச்சங்கம், பிறிஸ்பேர்ண் தமிழ்ச்சங்கம், மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச்சங்கம், அடிலையிட் தமிழ்ச்சங்கம் என தமிழ்ச்சங்கள் இயங்கி வருகின்றன.
தவிர -
சிட்னியில் – தமிழ்மன்றம், தமிழ் வளர்ச்சி மன்றம், தமிழ்க்கலை பண்பாட்டுக்கழகம், தமிழ் இலக்கியக் கலைமன்றம், அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலிய தமிழ்க்கலைகள் மற்றும் பண்பாட்டு மையம், கம்பன் கழகம், அவுஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கம், சிட்னி தமிழ் அறிவகம் (நூல் நிலையம்)
மெல்பேர்ணில் – அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், கேசி தமிழ்மன்றம், வள்ளுவர் அறக்கட்டளை, பாரதிபள்ளி
பிறிஸ்பேர்ணில் – தாய்த்தமிழ்ப்பள்ளி, குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம், தமிழ்நதி இலக்கிய வட்டம் போன்றவை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.
இவை பொங்கல்விழா, சித்திரைத்திருவிழா, கம்பன்விழா, சிலப்பதிகாரவிழா, விபுலானந்தர் விழா, தொல்காப்பியர் விழா, எழுத்தாளர்விழா போன்ற விழாக்களையும்; திருக்குறள் மகாநாடு, உலகத் தமிழ் இலக்கிய மகாநாடு போன்ற மகாநாடுகளையும்; பறையிசை சிலம்பாட்டம் நாட்டுக்கூத்து போன்றவற்றைப் பயிற்றுவித்து கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். அத்துடன் திருக்குறள் மனனப் போட்டி, சிறுவர்களுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
அத்தோடு ஒவ்வொரு இடங்களிலும் - நூல்களைப் படித்து, தமது வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதும் விவாதிப்பதுமென, பல வாசகர் வட்டங்கள் இயங்கி வருகின்றன. எழுத்தாளர்களின் நூல்களைத் தனியாகவோ அல்லது தொகுப்பாகவே சில அமைப்புகள் வெளியிடுகின்றன. என்னுடைய இரண்டு சிறுகதைத்தொகுப்புகளும் கூட இப்படியாகத்தான் வெளியிடப்படுள்ளன என்பதை மேலே அறியத் தந்திருந்தேன்.
இவற்றுடன் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ATBC), இன்பத்தமிழ் வானொலி, தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவை, அரச ஆதரவுடன் இயங்கும் SBS தமிழ் வானொலி போன்ற வானொலிகளும்; மாநில அளவில் இயங்கும் பல பகுதி நேர வானொலிகளும் தமிழ் இலக்கிய முன்னெடுப்புக்களைச் செய்கின்றன. பல சமய நிறுவனங்கள், தமிழ்ப்பாடசாலைகள் கூட இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றுகின்றன.
அச்சு ஊடகங்களில் தமிழோசை, உதயசூரியன், இளவேனில் என்ற இதழ்களும், எதிரொலி என்ற பத்திரிகையும் வருகின்றன. இணைய இதழ்களாக அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலியா தமிழ்முரசு என்பவை வருகின்றன.
புலம்பெயர்ந்தநாள் முதல் சங்கங்கள், அமைப்புகளின் நிர்வாகத்திற்குள் இருந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினேன். ஆனாலும் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை.
என்னுடைய பங்களிப்பாக தமிழ் எழுத்தாளர் விழாக்களின்போது கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கின்றேன். எழுத்தாளர் விழாக்களைத் தொடர்ந்து நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்துக்கொள்ள அதை ஒரு அமைப்பாக்கும் முயற்சியில் லெ.முருகபூபதி, நல்லைக்குமரன் க.குமாரசாமி போன்ற பலரும் விரும்பினோம். அதன்படி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தலைவராக லெ.முருகபூபதியும், செயலாளராக க.குமாரசாமியும், பொருளாளராக நானும் தெரிவுசெய்யப்பட்டோம். அதன்பின்னர் வந்த பத்து வருடங்களில் பொருளாளர், செயலாளர், பத்திராதிபர் போன்ற பதவிகளை மாறி மாறி வகித்திருக்கின்றேன். எழுத்தாளர் விழா வரும்போதெல்லாம் ஒருவாரகாலம் வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிடுவேன். புத்தகக் கண்காட்சிகளை ஒழுங்குபடுத்துவது முதற்கொண்டு அழைப்பிதழ்கள் அடிப்பது வரை பல வேலைகள் காத்திருந்தன. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தனது 10வது எழுத்தாளர்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியபோது, அனைத்துலக சிறுகதை கவிதைப்போட்டிகளை நடத்தியது. அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தது பெரும் அனுபவமாகும். இந்த எழுத்தாளர்விழாக்கள் மெல்பேர்ண், சிட்னி, கன்பரா, பிறிஸ்பேர்ண் என்று பல இடங்களிலும் மாறி மாறி நடந்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டிலிருந்து சில தவிர்க்கமுடியாத காரணங்களினால், நிர்வாகத்தினுள் இருந்து செயற்படமுடியவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் ஸ்தாபக உறுப்பினராக இருந்து வருகின்றேன்.
`அக்கினிக்குஞ்சு’ என்றொரு சஞ்சிகை எஸ்.பொ வைப் பிரதம ஆசிரியராகவும், யாழ்.எஸ்.பாஸ்கரை ஆசிரியராகவும் கொண்டு 1991 முதல் மெல்பேர்ணிலிருந்து வெளிவந்தது. மொத்தம் 11 இதழ்கள் வெளிவந்த நிலையில் நின்று போக, 2011 முதல் அதன் ஆசிரியரான யாழ்.எஸ்.பாஸ்கரினால் இணைய இதழாக வருகின்றது. தினமும் பதிவேற்றங்கள் காணும் இணையசஞ்சிகை இது. அக்கினிக்குஞ்சு நடத்திய எஸ்.பொ ஞாபகார்த்த சிறுகதைப்போட்டி, அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப்போட்டிகளில் நடுவராகவும் பணிபுரிந்திருக்கின்றேன். அதன் அமைப்பான தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில் இணைந்துகொண்டு அவருக்கு சில உதவிகளை தற்போது செய்து வருகின்றேன்.
12) புலம் பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறையினரின் இலக்கிய ஆர்வம், செயற்பாடுகள் எத்தகையதாக இருக்கிறது?
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம், செயற்பாடுகள் என்று கூறும்போது நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை என்றுதான் கூறவேண்டும். அவுஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடாக இருப்பதால், அரசு பல்வேறு வழிகளில் பிற மொழிகளும் வளர உதவி புரிகின்றது. அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டு, தமிழ் மொழியும் எமது கலைகளும் தொடர வேண்டும் என்பதில் பலரும் அக்கறை காட்டி வருகின்றோம்.
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, மாநிலங்கள் தோறும் வாசகர் வட்டங்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. சிட்னியில் `தமிழ் அறிவகம்’ என்னும் நூல் நிலையம் வாரத்தில் நான்கு நாட்கள் முழுநேரமாக தொழிற்படுகின்றது.
தமிழ்மொழியைக் கற்பிப்பதில் தமிழ்ப்பாடசாலைகளின் பங்களிப்பு போற்றக்கூடியதாக இருக்கின்றது. இவை தமிழ்மொழியுடன் கலை கலாசாரம் பண்பாடுகளையும் சொல்லித் தருகின்றன. 1977 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப்பள்ளியாக `பாலர் மலர் தமிழ்ப் பள்ளி’ சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து பலர் புலம்பெயர்ந்ததன் பின்னர், 1987 ஆம் ஆண்டு சிட்னியில் ஹோம்புஸ் என்ற இடத்தில் தமிழ்க்கல்வி நிலையம் ஒன்று ஆரம்பிக்கபட்டது. தற்போது 12 இற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் அங்கே உள்ளன. மெல்பேர்ணில் 1979 ஆம் ஆண்டு ஈழம் தமிழ்க்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பாடசாலை இன்று பல கிளைகளுடன் தமிழ் கற்பிப்பதில் உதவி புரிகின்றது. மற்றும் மாவை நித்தியானந்தனால் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட `பாரதி பள்ளி’ இன்று பல கிளைகளுடன் விரிவடைந்திருக்கின்றது. குயீன்ஸ்லாந்தில் `பிறிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி’, `பிறிஸ்பேர்ண் தமிழ்ப்பாடசாலை’ என்பனவும்; மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் அடிலையிட் என்னுமிடத்திலும், மேற்கு அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்திலும், வடக்கில் டார்வினிலும், தலைநகர் கன்பராவிலும் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. எனினும் இங்கே செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
அடுத்த தலைமுறையினரில் சிலர் திறம்பட பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள், கலைகளில் வல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு அடுத்த தலைமுறையினரும் உருவாகிவிட்டார்களல்லவா? அவர்களின் நிலை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. அவர்கள் அந்தந்த நாட்டு மொழிகளிலேதான் இலக்கியம் படைக்கப் போகின்றார்கள். இதற்கான அத்திவாரம் ஏற்கனவே பலநாடுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. அவர்கள் கவனிப்புக்குரியவர்களாகவும் வளர்ந்து வருகின்றார்கள்.
காலம் கற்றுத் தந்த பாடங்களாக - பிஜி, மொரிசியஸ், தென் ஆபிரிக்கா போன்று – கலைகளிலும் பண்பாடுகளிலும் சில தங்கி நிற்க, மொழி தேய்ந்துவிடும் போல் தான் உள்ளது.
13) இலக்கியப் பங்களிப்புக்காக தாங்கள் பெற்ற கௌரவங்கள் விருதுகள் பற்றிக் கூறுங்கள்?
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம், பத்தாவது எழுத்தாழர்விழாவைக் கொண்டாடியபோது, ஜேர்மனியில் இருந்து வெற்றிமணி ஆசிரியர் வந்து அதில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். அதற்கடுத்த மாதம் வந்த வெற்றிமணி இதழ் (ஆனி இதழ்) `அவுஸ்திரேலியா சிறப்பிதழாக’ வந்தது. அதில் என்னை கெளரவ ஆசிரியராக அறிமுகம் செய்து கெளரவப்படுத்தியிருந்தார்.
`அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களும் தமிழினமும்’ என்ற ஆய்வு சம்பந்தமான கட்டுரையை `வல்லமை’ இணையத்தில் எழுதியதற்காக, 2014 ஆம் ஆண்டு `வல்லமையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்தக் கட்டுரை கனடாவில் இருந்து வெளியாகிய `சங்கப்பொழில்’ என்ற மலரிலும் வெளியாகியிருக்கின்றது.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் அக்கினிக்குஞ்சு என்ற அமைப்பு, 2018 ஆம் ஆண்டு `தமிழ் சிறுகதை இலக்கியப் பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கெளரவித்திருக்கின்றது.
விருதுகளைப் பெற்றுக்கொள்ள, இந்தியா கனடா போன்ற வெளிநாடுகளுக்குப் போகவேண்டிய நிலை வந்தபோது, நான் அந்த விருதுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை.
14) உங்கள் படைப்புகள் பிறமொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளனவா? யாராவது ஆய்வு செய்துள்ளார்களா?
என்னுடைய ஐந்து சிறுகதைகள் ஆ.தேவராஜன், க.குமாரசாமி, சியாமளா நவரத்தினம், கதிர்.பாலசுந்தரம் என்பவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் கதிர்.பாலசுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்ததைத் தவிர ஏனையவற்றை அவர்கள் தாங்களாகவே தெரிவு செய்து மொழிபெயர்த்திருந்தார்கள்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற `தமிழ்ச்சிறுகதைகளின் பன்முகத்தன்மை’ என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் - முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் கணபதிராமன் ஆகிய இருவரும் இணைந்து எனது `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதியை முன்வைத்து கட்டுரை சமர்ப்பித்துள்ளார்கள். இந்தக்கட்டுரை பின்னர் `முத்துக்கமலம்’ இணைய இதழில் வந்திருக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் தொடராக நிகழும் `வாசிப்பு மனநிலை விவாத’த்தில் எனது இதே தொகுதியை முன்வைத்து உரையாடல் செய்திருக்கின்றார்கள். வாசகசாலை(இந்தியா) அமைப்பினர் நடத்தும் கதையாடல் நிகழ்விற்கு `அனுபவம் புதுமை’, `யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்’ என்ற சிறுகதைகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை ஞானம் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்று, ஞானம் சஞ்சிகையில் வெளியானவை. பின்னர் கணையாழி சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டவை. மேலும் எனது சிறுகதைத்தொகுப்புகளை நூலகவியலாளர் என்.செல்வராஜா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜெயராமசர்மா, லெ.முருகபூபதி ஆகியோர் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றார்கள்.
15) இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீகள்?
அரசியல் நம் வாழ்வில் இரண்டறக் கலந்தது. இலக்கியத்திலும் கலந்திருக்கின்றது. அதற்காக நாம் ஒருவரையொருவர் தவிர்த்துக்கொள்ளத் தேவையில்லை எனக் கருதுகின்றேன்.
இக்காலத்தில் பொய்யும் புரட்டும் புரளியும் இட்டுக்கட்டியும் பல படைப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அவற்றை இணையங்கள் துரித கதியில் கடத்திச் செல்கின்றன. சிலர் புனைவுகள் என்றவுடன் எதையும் எப்படியும் எழுதிவிடலாம் என நினைக்கின்றார்கள். தகவல் பிழைகள், தவறான செய்திகள், தொழில்நுட்ப பிழைகள் தலைகாட்டுகின்றன. புனைவிற்கும் ஒரு வரையறை உண்டு என்பதை மறந்துவிடுகின்றார்கள். புனைவுகளில் வரும் தரவுகள் சரியாக இருக்கவேண்டும். தமது அமைப்புக்குச் சார்பாகவும், மற்றவர்களை மறுத்து ஒதுக்கியும் எழுதுகின்றார்கள். எழுதியவர்களுக்கு வேண்டப்பட்ட சிலர் அவற்றை ஓகோவென்று புகழ்ந்தவண்ணமும் உள்ளனர். துர் அதிஸ்டவசமாக தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் அவை காலம் கடந்தும் நிற்கப் போகின்றன. ஒரு நீண்ட காலத்தின் பின்னர் வரும் சந்ததியினர், எது சரி எது பிழை எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கப் போகின்றார்கள். முந்தைய காலங்களில் எழுதப்பட்ட (சங்ககாலம் உட்பட) படைப்புகளில் `சிலவற்றை’ கறையான்கள் செல்லரித்தும், கவனிப்பாரற்றுத் தொலைந்தும் போய்விட்டதாக அறிகின்றோம். உண்மையில் அவை தொலைந்துதான் போயினவா? வேண்டுமென்றே தேவையற்றவை திட்டமிட்டு அழித்தும் தீயிலிட்டுக் கொழுத்தியும் இருக்கலாம் அல்லவா? `தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடப்போகின்றது.
புதிய எழுத்தாளர்கள் எழுதியவற்றை அவசர அவசரமாக பதிவேற்றம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அவற்றை இன்னொருவர் மூலம் செம்மைப்படுத்தியிருந்தால் வெளியிடுவதில் தப்பில்லை. அதற்கு முடியாதவர்கள், ஆறப்போட்டு திருப்பிப் திருப்பி வாசித்து முடிவெடுக்கவேண்டும். உங்கள் படைப்பொன்று பிரசுரமாவதிலிருந்து நிராகரிக்கப்படும்போது, அது உண்மையிலேயே எழுதப்பட்ட விதத்திலோ அல்லது ஏதோ சில காரணங்களால் சிறந்த படைப்பாக இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடு; அல்லது நிர்வாகத்தின் கொள்கைகள் காரணமாக இருக்கலாம். எனவே எழுதிய படைப்பை மறு ஆராய்ச்சிக்கு உட்படுத்துங்கள். திருத்தங்கள் செய்யவேண்டும் என்றால் திருத்துங்கள். அல்லாமலும் மீண்டும் அது சரியானதே என மனம் உறுதி கொண்டால் இன்னொரு இடத்திற்கு அனுப்பி வையுங்கள். சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு படைப்பை எழுதியவருக்கு அதை எங்கே அனுப்ப வேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும். இலக்கியப்படைப்புகள் சமூக அக்கறை கொண்டனவாக இருக்கவேண்டும். சிறுகதை, நாவல், கவிதை என்பவை இலக்கியத்தன்மை கொண்டதாக எல்லாருக்கும் புரியக்கூடிய விதத்தில் எழுதப்படவேண்டும். வாசிப்பவர்களைக் குழப்ப எத்தனிக்கக்கூடாது. பொழுதுபோக்குவதற்கு மட்டும் என்றில்லாமல் மனவளத்தை பெருக்குவதாகவும் இருக்க வேண்டும்.
இறுதியாக,
நான் ஏற்கனவே இலங்கையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்திருந்தாலும், என்னை வெளிச்சமிட்டுக் காட்டியது `ஞானம்’ சஞ்சிகைதான். மார்கழி 2006 ஆம் ஆண்டு, ஞானம் சஞ்சிகையில் `புதிய தலைமுறைப் படைப்பாளிகள்’ வரிசையில் என்னை எட்டாவதாக அறிமுகம் செய்தது. இந்த நேர்காணல் மூலம் ஞானம் சஞ்சிகையினருக்கும் அதன் வாசகர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி: ஞானம் செப்டெம்பர் 2020. அனுப்பி உதவியர் கே.எஸ்.சுதாகர் -
•<• •Prev• | •Next• •>• |
---|