டிசம்பர் 2012 உயிர்மை இதழில் வெளியாகியுள்ள 'ராஜ்சிவா'வின் 'சிருஷ்டியின் இரக்சியமும், ஸ்ட்ரிங்க் தியரியும்' என்னும் கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. பொதுவாக வானியற்பியல் (Astro-Physics) பற்றிய ஆழமான கட்டுரைகள், அபுனைவுகள் போன்றன என்னை மிகவும் கவர்பவை. அவை நாம் வாழும் இவ்வுலகைப் பற்றி, இப்பிரபஞ்சத்தைப் பற்றி, பல்பரிமாணங்களுக்கான சாத்தியங்கள் பற்றியெல்லாம் ஆழமாக, தத்துவார்த்த நோக்கில் எம்மைச் சிந்திக்க வைப்பவை. இக்காரணங்களுகாகவே அவை என்னை அதிகமாகக் கவர்பவையாகவிருந்து விடுகின்றன.
'இப்பிரபஞ்சத்தில் மிகத்தொலைவிலுள்ள பொருட்களையெல்லாம் இழுத்து வைத்திருக்கிறது சக்திமிக்க புவியீர்ப்பு விசை. அவ்வளவுக்கு வலிமையான விசை இது. அதே சமயம் ஒரு குழந்தை சிறியதொரு பந்தைக்கூட மிகவும் இலகுவாக இவ்வளவு வலிமையான புவியீர்ப்பு விசைக்கெதிராகத் தூக்கிவிடுகிறது. இவ்விதமான சமயங்களில் புவியீர்ப்பு விசையானது நம்பவே முடியாத அளவுக்கு வலிமை குன்றியதாகவிருக்கிறது. இதற்கான பதிலை விஞ்ஞானிகள் தேடியபொழுதுதான் ஆன்மிகமும், அறிவியலும் ஒரு புள்ளியில் இணைவதை அவதானித்தனர். இதைப் பற்றி விபரிக்கும் கட்டுரையிது' எனக் கட்டுரையாசிரியர் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்விதமாக ஆரம்பிக்கும் கட்டுரை 'அதிர்விழைக்கோட்பாட்'டின் (String Theory) அடிப்படையில் புவியீர்ப்பினை விசையாகக் கொண்டு , மேற்படி புவியீர்ப்பு விசையானது மின்காந்த விசையானது எவ்விதம் போட்டான்களினால் ஆனதோ அவ்விதமே அதுபோல் இவ்விசையும் கிராவிட்டான்களினால் ஆனது. 'அதிர்விழைக்கோட்பாட்'டின்படி இப்பிரபஞ்சம் உருவாக்கப்பட்டிருக்கும் அடிப்படைத்துகள்கள் அனைத்துமே பிரிக்கப்பட்டுக்கொண்டே போனால் இறுதியில் அதிர்ந்துகொண்டிருக்கும் இழைகளினால் அதிர்ந்துகொண்டிருப்பதை அறியலாம் என்றும், கிராவிட்டான்ககளின் இயக்கம் அதிர்விழைகளில் ஏற்படும் அதிர்வுகளின் தொழிற்பாட்டினைப் போன்றது என்றும், இவ்விதமான அதிர்விழைத்தன்மையினால் கிராவிட்டான்கள் இடம்மாறுவதே புவியீர்ப்பின் வலிமையற்ற தன்மைக்குக் காரணமென்றும் விபரிப்பார்.
மேற்படி கட்டுரையானது முழுவதும் 'சக்திச்சொட்டுப் பெளதிக'த்தின் (Quantum Physics) அடிப்படையில் புவியீர்ப்பினை ஒரு விசையாகக்கொண்டு விபரிக்கின்றது. அந்த வகையில் புவியீர்ப்பு பற்றிய முழுமையானதொரு கட்டுரையென இதனைக் கூறுவதற்கில்லை. குறிப்பாக புவியீர்ப்பு பற்றிய இன்னுமொரு புகழ்பெற்ற விளக்கமும் நவீன பெளதிகத்திலிருப்பதைக் கட்டுரையாசிரியர் மறந்து விட்டார் அல்லது தவிர்த்து விட்டாரென்றே கூறவேண்டும். அது ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் மிகவும் புகழ்பெற்ற 'பொதுச் சார்பியற் தத்துவம்' (The General Theory of Relativity) ஆகும். மேற்படி பொதுச் சார்பியற் தத்துவத்தின்படி புவியீர்ப்பு என்பது ஒரு விசையே அல்ல. மாறாக ஒரு பொருளின் திணிவானது தன்னைச் சுற்றியுள்ள 'வெளிநேர'த்தினை (Spacetime) வளைத்துவிடுவதால் ஏற்பட்ட வளைவே கோள்கள் சுடர்களைச் சுற்றிவருவதன் காரணமே தவிர புவியீர்ப்பு என்னும் விசையாலல்ல என்பதை ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் தத்துவம் எடுத்துக்காட்டும். ஐன்ஸ்டைனின் மேற்படி தத்துவத்தின்படி புவியீர்ப்பானது வெளிநேரத்தின் அமைப்பில் ஒரு பொருளின் திணிவு ஏற்படுத்தும் வளைவின் விளைவு. உண்மையில் சூரியன் தன்னைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்துவிடுகின்றது. அந்த வளைவில் இயங்கிக்கொண்டிருக்கும் பூமியானது உண்மையில் நேர்கோட்டில்தான் பயணிக்கின்றது. ஆனால் வளைவில் இரு புள்ளிகளுக்கிடையிலான குறுகிய தூரம் வட்டமானதால் அவ்விதமானதொரு ஒழுக்கில் பூமியும் சூரியனைச் சுற்றியும் பயணிக்கிறது. ஐன்ஸ்டனின் மேற்படி கோட்பாட்டின் படி புதனின் சூரியனைச் சுற்றியுள்ள ஒழுக்கிலுள்ள வழு எதிர்வு கூறப்பட்டு பரிசோதனைவாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டைனின் புவியீர்ப்பு பற்றிய தத்துவத்தின்படி புவியீர்ப்பு ஒரு விசையேயல்ல. எனவே அதன் வலிமை, வலிமையற்ற தன்மை பற்றிய கேள்விக்கு இடமேயில்லை. அதற்குக் காரணம் பொருளின் திணிவு. ஆக, மேற்படி புவியீர்ப்பு பற்றிய கட்டுரையில், கட்டுரையாளர் புவியீர்ப்பு பற்றிய நவீன பெளதிகத்தின் முக்கியமானதொரு தத்துவத்தினைத் தவறவிட்டிருப்பது அதன் ஆழத்தைச் சற்றே குறைத்துவிடுகின்றது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|