ஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தபோது மயூரதநாதன், கலா ஈஸ்வரன் இருவரும் தமது இளமானிப்பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருந்தார்கள். சிவா திருவம்பலம், 'தமிழர் மத்தியில்' நந்தகுமார் ஆகியோர் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். எமக்கு மென்மையான 'ராகிங்' தந்தவர்களிவர்கள்.
தனது கட்டடக்கலைப் படிப்பை முடித்து வளைகுடா நாடுகளில் பணியாற்றிக் கனடா வந்து இங்குள்ள புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனங்களில் பணியாற்றி, இங்கும் , ஒண்டாரியோவில், கட்டடக்கலைஞருக்குரிய அங்கீகாரத்தைப்பெற்று தற்போது புகழ்பெற்ற கனடியக்கட்டடக்கலை நிறுவனங்களிலொன்றான Hariri Pontarini Architects இல் பணியாற்றி வரும் சிவகுமாரன் திருவம்பலத்தைப்பற்றிப் பெருமைப்படத்தக்க விடயங்கள் பல. அவற்றிலொன்று Hariri Pontarini Architects நிறுவனத்தின் கட்டடக்கலைத்திட்டங்களிலொன்றான வெஸ்டேர்ன் பல்கலைக்கழகத்தின் வர்த்தகத்துறைக்கான கல்வி நிலையமான ரிச்சர்ட் ஐவி கட்டடத் (Richard Ivey Building) திட்டத்தில் (33,000 சதுர மீற்றர்கள் பரப்பளவைக்கொண்ட இத்திட்டம் 2013இல் முழுமை பெற்றது.) பங்குபற்றிய முக்கியமான கட்டடக்கலைஞர்களில் இவருமொருவர்.
இத்திட்டமானது சர்வதேசக்கட்டடக்கலை நிறுவனங்கள் சமர்ப்பித்த கட்டட வடிவமைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட திட்டமென்பதும் பெருமைக்குரிய விடயம்.
இது பற்றி 'ஆர்க்டெய்லி.காம்' (archidaily.com) பிரசுரித்துள்ள கட்டுரையொன்றில் 'ஒரு சிறப்பான வர்த்தகத்துக்குரிய கல்வி நிலையமானது கவர்வதாக, ஆக்க எழுச்சி மிக்க உணர்வுகளை எழுப்புவதாக, மற்றும் அதனைப்பாவிக்கும் அனைவருக்கும் மத்தியில் சமூக உணர்வினை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே சர்வதேசரீதியில் பெறப்பட்ட வடிவமைப்புகளிலிருந்து ரிச்சர்ட் ஐவி கட்டட வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டது. பிரதான நோக்கமானது சர்வதேசரீதியில் இது போன்ற ஏனைய நிறுவனங்கள் விடுக்கும் சவால்களுக்கு ஈடுகட்டுவதைச் செயற்படுத்தத்தக்க சூழலை உருவாக்குவதும், பல்கலைக்கழகத்தின் கோதிக் கட்டடக்கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதும், லண்டன் நகருக்கு முத்திரைபதிக்கத்தக்கக் கட்டடமொன்றினை உருவாக்குவதுமே ஆகும்' என்று 'த ஆர்கிடெக்ட்' சஞ்சிகையினை ஆதாரமாக்கிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தத்திட்டத்தினைப்பற்றிய விரிவான கட்டுரையொன்றினை 'கனடியன் ஆர்கிடெக்ட்' சஞ்சிகையின் இணையப்பதிப்பில் , கீழுள்ள இணைய இணைப்பில் வாசிக்கலாம்:
https://www.canadianarchitect.com/features/ivey-league-ideals/
மேற்படி ரிச்சர்ட் ஐவி கட்டடம் பற்றிய மேலதிக இணையத்தள இணைப்புகள் கீழே:
1. http://www.archdaily.com/772124/richard-ivey-building-hariri-pontarini-architects
2. http://www.smithandandersen.com/projects/detail/8843
3. http://www.buildingandconstruction-canada.com/sections/community/642-ellisdon-richard-ivey-building-ivey-business-school-western-university
4. http://www.hariripontarini.com/project/richard-ivey-building-ivey-business-school-2/
இந்தக்கட்டடத்துக்குப் பல விருதுகள் கிடைத்துள்ளமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதொன்று.
1. 2016: Ontario Association of Architects (OAA) Design Excellence Award
2. 2016: Ontario Association of Architects (OAA) Lieutenant Governor’s Award for Design Excellence in Architecture
3. 2016: AIA/CAE AIA/CAE Educational Facility Design Award of Excellence
4. 2015 IES Illumination - International Award of Merit and Toronto Section Award
5. 2013: Canadian Institute of Steel Construction Ontario Steel Design Award, Award of Merit—Architecture
6. 2013: Regional Commercial Council of LSTAR Don Smith Commercial Building Awards, Institutional – Education
கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலத்தை அவரது கட்டடக்கலைத்துறைச்சாதனைகளுக்காக வாழ்த்துகிறோம். அத்துடன் அவருக்கும் அவரைப்போன்ற கட்டடக்கலைத்துறையில் நீண்ட கால அனுபவமும், அறிவுமுள்ள கட்டடக்கலைஞர்களுக்கும் ஒரு வேண்டுகோளினை வைக்கின்றோம். கட்டடக்கலைத்துறை வடிவமைப்புக் கோட்பாடுகள் பற்றி, கட்டடக்கலை நிர்மாணச்செயற்பாடுகள் (நவீனத்தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய) பற்றி தமிழில் நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுத வேண்டும். எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்ப்பதும், தாங்களே தம் நோக்கங்களுக்கேற்ப வடிவமைப்பு என்ற பெயரில் வீடுகளை வடிவமைப்பதுமாக வாழும் தமிழர்களுக்கு நவீனக்கட்டடக்கலைத்துறை பற்றி, கட்டட வடிவமைப்புக்கோட்பாடுகள் பற்றி அறிவூட்டுவதற்கு, புரிய வைப்பதற்கு இவ்விதமான கட்டடக்கலைத்துறை பற்றிய எழுத்துகள் உதவுமென்பது எம் எண்ணம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|