1945 ஆகஸ்ட் 6 ம் திகதி காலை 8.15 மணிக்கு ஹீரோசிமா மீது அமெரிக்கர்களால் அணுக்குண்டு போடப்படுகிறது. 1946 ஆம் ஆண்டு ஜோன் ஹேசி (John Hersey) இதைப்பற்றி எழுதுவதற்கு நியூயோக்கர் சஞ்சிகையால் யப்பானுக்கு அனுப்பப்படுகிறார். அமெரிக்கா அணுக்குண்டை ஹீரோசிமாவில் போட்ட அன்று காலையில் 8.15 மணியிலிருந்து ஒரு இலட்சம் பேருக்கு மேல் இறக்க , உயிர் தப்பிய ஆறு யப்பானியர்களின் வாழ்வு ஜோன் ஹேசியால் விவரிக்கப்படுகிறது. அந்த விவரிப்பு நியூயோக்கர் சஞ்சிகையில் வேறெந்த விடயங்களுமில்லாது முழுவதுமாக பிரசுரிக்கப்படுகிறது. அந்த ஆறு யப்பானியர்களும் தாங்களாகவே பேசுகிறார்கள். அந்த விவரிப்பை எழுதும் ஜோன் ஹேசி, அதில் தனது கருத்துக்களாக எதனையும் புகுத்தாமல், அந்த அறுவரையும் பேசவைக்கிறார் . குண்டுவீச்சென்ற மையப்புள்ளியில் உருவாகும் மனிதர்கள் ஆறுபேரது வாழ்வு சுழலும் வட்டங்களாகும். பத்திரிகையாளராக புனைவற்று எழுதப்படும் முறைமையில் புனைவு நாவலுக்கான வரைவிலக்கணம் அழிந்து புனைவற்ற நாவல் (Non fiction novel) என விமர்சகர்களால் பெயரிடப்படுகிறது.
இந்த குண்டுவீச்சில் ஆரம்பத்தில் வீடுகள் உடைந்து நெருப்பு பற்றுகிறது. அதன்பின்பு கதிரியக்கம் , தொடர்ந்து பெய்யும் மழை அதனால் வெள்ளம் என்பன வரும்போது - இதில் வரும் பாத்திரங்களது செய்கையும் சிந்தனையும் கதாசிரியரது இடையூறு அற்று ஹீரோசிமா என்ற புத்தகத்தில் வருகிறது. குண்டுபோட்ட அமெரிக்காவின் அரசியல் தலைமை , இதுவரையும் அந்த குண்டுவீச்சு பல அமெரிக்க உயிர்களைப் பாதுகாக்கவே அவசியப்பட்டது என்றே தர்க்கித்து வந்தது. அந்தக் கற்பனைவாதம் இந்தப் புத்தகத்தால் உடைகிறது.
தமிழில் இப்படியான புத்தகங்கள் உருவாகியதா…? என்பது தெரியாது. சமீபத்தில் நான் படித்த ‘ஏதிலி’ தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழும் மக்களின் பதினான்கு கதைகளைக் கொண்டது. இதற்கு முன்னுரை எழுதிய சோளகர் தொட்டி நாவலைப் படைத்திருக்கும் பாலமுருகன் , இது ஒரு நாவலென சொல்லிவிட்டு இலகுவாகக் கடந்து செல்கிறார். இந்த புத்தகத்தில் சில புனைவுகள் இருக்கலாம். கடைசிப் பகுதியில் சில இடங்களில் கதாசிரியர் தனது தலையை நீட்டிய போதிலும் இதில் உள்ளவை எல்லாம் உண்மையானவை.
84-87 காலங்கள் இலங்கை அகதிகள் இந்தியா வந்தகாலம் ஆகும். அக்காலத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட ஒஃபர் என்ற நிறுவனம் சந்திரகாசன் தலைமையில் கல்வி விடயங்களில் பல முயற்சிகளை எடுத்து தமிழக அரசின் கல்வி நடைமுறைகளோடு இணைத்தது. அதற்கு முதல்வர் எம். ஜி . ராமச்சந்திரனது உதவியுமிருந்தது. அக்காலத்தில் கல்வி அமைச்சராகவிருந்த அரங்கநாயகத்தை சந்திப்பதற்காக, மருத்துவக் கல்வியையும் இடையில் நிறுத்திவிட்டு, தமிழகத்திற்கு அகதியாக வந்திருந்தவர்கள் சார்பாக குறிப்பிட்ட ஒஃபர் சார்பில் நானும் சென்றேன். முகாமில் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கை நடந்ததற்கு ஒஃபரின் உழைப்பு அளப்பரியது. பிற்காலத்தில் வந்த இலங்கை அகதிகள் தொடர்ந்தும் படிப்பதற்கும், மற்றைய வசதிகளைப் பெறவும் இந்தத் தொண்டு நிறுவனம், மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளை நான் அறிவேன்.
மருத்துவ நிறுவனமாகத் தமிழர் மருத்துவ நிலயத்தை அங்கு மூன்று வருடங்கள் நடத்தி விட்டு, இந்திய அமைதிப் படைகள் இலங்கை சென்ற காலத்தில் , இனி எல்லாம் முடிந்தது. இனி அமைதி வரும் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனத்தை விட்டுவிலகி, ஆஸ்திரேலியா வந்தேன். ஆனால், தொடர்ந்து போரை நடத்துவதற்கு விடுதலைப்புலிகள் விரும்பினார்கள். எல்லாம் தலைகீழானது.
1983 இலிருந்து ஒஃபர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகத் தொடர்ந்து இயங்கிவருவது பெரிய விடயம். ஆனால், குழந்தைகள் வளர்ந்த பின் பெற்றோர்கள் தேவையில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் ஒரு பிரச்சினையாகத் தெரிவார்கள் என்ற ஒரு கதை நடைமுறையில் உள்ளது. அப்படியான ஒரு கதையொன்றால்கூட, இந்த ஏதிலி என்ற புத்தகத்தின் முக்கியத்துவம் குறையவில்லை. இலங்கை அகதிகளை தொடர்ச்சியாக இந்தியாவில் வைத்திருப்பது அவர்களிடம் தன்னம்பிக்கையைச் சீரழித்து எதிர்காலத்தை அழிப்பதற்கு ஒப்பான செயல். மத்திய , மாநில அரசுகள் குறைந்தபட்சமாக அவர்களில் விருப்பமானவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்காவது இந்தியக் குடியுரிமையைக் கொடுக்கவேண்டும். ஏனையோரை ஏதாவது ஒரு உடன்படிக்கை மூலம் இலங்கைக்கு அனுப்பவேண்டும். இலங்கையிலுள்ள பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிக்கும் தமிழ்நாட்டு ஊடகங்கள் , அரசியல்வாதிகள் இந்த அகதி மக்கள் வாழ்வு விடயத்தில் தொடர்ச்சியான அலட்சியம் காட்டுகிறார்கள். அதேபோல் நமது இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி புதுடில்லி போவார்கள். ஆனால் இவர்களைப் பற்றிப் பேசுவதில்லை . இலங்கை அரசு போரை முடித்திருந்த காலத்தில் நான் இதைப்பற்றி இலங்கை அரசோடு கடிதத் தொடர்பு கொண்டபோது “தற்பொழுது நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்திய பின்பு பார்ப்போம் “ என்ற பதில் கிடைத்தது.
இப்படி எவரும் அக்கறைப்படாத மக்களின் கதைகளே இந்தப் புத்தகத்தில் உள்ளவை. இவர்களது கதைகள் எல்லாம் அகதி முகாம் என்ற மத்திய புள்ளியில் இயங்குகின்றன. அதனாலே இது புனைவற்ற நாவல் போல வருகிறது.
ஒவ்வொரு கதையும் வித்தியாசமானவை. முகாமில் இடம்பெறும் காதல் , திருமணம் , பிரிவு , போரிலிருந்து தப்பியோடுதல் முதலான தனி மனிதர்களது போராட்டத்திலிருந்து , முகாமில் வெளிப்படையாக நடக்கும் அதிகாரப்போட்டி , மதநம்பிக்கைகள் , அரசியல் உண்ணாவிரதமெனப் பலவிடயங்கள் வருகின்றன.
அகதிவாழ்வு என்பது மிகவும் கொடுமையானது . எதிர்கால வாழ்வின் கனவற்று அன்றைய வாழ்க்கையை மட்டும் வாழ்வது போர்காலத்தில வாழ்வதை விட மிகக் கடினமானது. போர்க்காலத்தில் உயிர் தப்புவது என்ற இலட்சியத்தோடு வாழமுடியும் என்ற ஒரு நம்பிக்கையிருந்தது. ஆனால், அகதிவாழ்வில் அதுவில்லை. மேற்குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பா ஆஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் அகதியாக வந்தவர்களுக்குச் சிலகாலத்திற்கு மற்றவர்கள்போல் வாழ்வதற்குரிய வசதிகளை செய்கிறார்கள். தமிழக முகாம்களில் பல விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு முகாம்கள் கிராமங்களாக மாறியபோதிலும், மாற்றமற்று இருப்பது அவர்களது எதிர்காலமே. தற்பொழுது சிலர் அங்கே மூன்று தலைமுறையாக வாழ்கிறார்கள்.
நான் இந்தியாவில் இருந்தபோது அங்குள்ள புயல் பாதுகாப்பு மண்டபங்களில் வைத்திருந்தவர்களைச் சந்திக்கச் செங்கல்பட்டிலிருந்து தூத்துக்குடிவரையுமுள்ள முகாம்களைப் பார்க்க கடற்கரை மண்ணில் கால் புதைய, விடிந்தும் விடியாத கருக்கலிலும் நடந்திருக்கிறேன். அப்பொழுது இது ஒரு தற்காலிகமான வாழ்வு. போராட்டம் முடிந்து விரைவில் மக்கள் தாயகம் போவார்கள் என்ற நம்பிக்கையிருந்தது. நான் ஆஸ்திரேலியா வந்த பின்பும், தமிழ்நாடு செல்லும் சமயங்களில் ஒஃபருக்கு போவேன். ஒரு முறை சந்திரகாசனிடம் பேசியபோது ஒஃபரின் ஓலைக் கூரையைக் காட்டி “இது தற்காலிகமானது. தாய் நாட்டுக்கு எப்பொழுதும் போக ஆயுத்தமாக இருக்கிறோம்” என்றார்
இந்த நாவலின் அமைப்பு இதுவரை தமிழுக்கு வந்தவற்றில் புதுமையானது. கதாபாத்திரங்களைப் பேசவைத்து அவர்களது அக உணர்வைச் சொல்கிறது. அத்துடன் மக்களது புற அவலங்களாக தமிழ்நாட்டு பொலிஸ் மற்றும் அதிகாரிகளால் எப்படி நடத்தப்படுகிறர்கள் என்பதையும், கல்விக்கான வசதிகள் இருந்த போதிலும் சூழல் நிலைமை எப்படி மக்களை கல்வியில் இருந்து விலக்கி வைக்கிறது என்பதையும் சித்திரிக்கிறது. இந்த நாவல் இந்தியாவில் முக்கியமாக அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊடகம் சார்ந்தவர்களும் படிக்கவேண்டியது. புலம்பெயர்ந்தவர்கள் எழுதுவதை புதிய திணையாக படித்தவர்கள் இந்த நாவலை எங்கு வைப்பார்கள்…? தமிழ் மண்ணில் இவர்கள் எந்தத் திணை ? நிலங்களைக் கொண்டு பிரித்த தமிழர் வாழ்வில் இந்த இலங்கை அகதிகளுக்கு நிலமில்லை.
ஆற்றுநீரில் மிதந்தபடி செல்லும் நீர் லில்லியைக் கண்டிருக்கிறேன். அதை வியட்னாம் போன்ற நாடுகளில் பயிருக்கு உரமாக போடுவார்கள் . அதுபோல் தமிழ்நாட்டில் வாழும் ஈழ அகதிகள் நிலமற்று தண்ணீரில் மிதக்கும் நீர்த் தாவரமாக வளர்கிறார்கள் என்பதை ஏதிலிகள் மூலமாக எமக்குத் தந்த விஜிதரனுக்கும், இந்தப் புத்தகத்தை பதிப்பித்த சென்னை சித்தன் பதிப்பகத்திற்கும், அழகான முன்னுரை எழுதிய எழுத்தாளர் பாலமுருகனுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|