- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• . - பதிவுகள் -
சிறுவர் இலக்கியப் படைப்புகளின் வெற்றி அது சிறுவர்களால் ஏற்கப்படுவதிலேயே தங்கியுள்ளது. அப்போதுதான் அந்தப் படைப்பு வெற்றி பெற்றதாகக் கருதப்படும். குழந்தைப் பாடல்கள் - கவிதைகள் அவர் நாவினிலே நித்தம் நடமிட வேண்டும். அவர்களால் முணுமுணுக்கப்பட வேண்டும். குழந்தைகள் சுயமாகவே பாடி - ஆடி - அபிநயத்து மகிழவேண்டும். அத்தகைய படைப்புகளே நின்று நிலைக்கும்.
டாக்டர் மு. வரதராசனார் சொன்னது போல குழந்தை இலக்கியம் படைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மொழி ஆளுகையில் எளிமை வேண்டும். சொல்லும் கருத்தில் இலகு - தெளிவு - அழகுணர்வு மிக மிக வேண்டும். குழந்தைகள் பிரபஞ்சத்தை ரசிக்கும் ரசனையுள்ளவர்கள். சூரியன் - சந்திரன் - நட்சத்திரம் - ஆறு - மலை - கடல் - செல்லப்பிராணிகள் என அவர்களின் ரசனை மிக நீண்டது. அவற்றோடு பேசி - ஆடிப்பாடி விளையாடி மகிழ விரும்புவார்கள். எனவே அவர்களின் நிலைக்குப் படைப்பாளிகள் இறங்கிவர வேண்டும். குழந்தைகளோடு குழந்தைகளாகப் படைப்பாளிகளும் மாறவேண்டும்.
"குழந்தை இலக்கியப் பயிற்சி பெறவேண்டிய பள்ளிக்கூடம் குழந்தைகளே.." என்கிறார் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா.
குழந்தைகள் தங்களைச் சூழவுள்ள இயற்கை ஒலிகளைக் கூர்ந்து கவனித்து ரசிப்பார்கள். அந்தத் தாளலயத்திற்கேற்ப தாங்களும் திரும்ப ஒலியெழுப்பி மகிழும் ரசனை படைத்தவர்கள். உதாரணமாக குயில் கூவும்போது குழந்தைகள் திரும்பக் கூவும் அழகைப் பெரியோர்கள் பார்த்து ரசித்திருப்பார்கள்.
புலம்பெயர் நாடுகளில் வளரும் குழந்தைகளுக்கு இந்த இயற்கையோடு ஒட்டிய வாழ்வு ரசனை - மகிழ்;ச்சி - ஆரவாரங்களுக்கான சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவே என்பது கவலைக்குரிய விடயந்தான்..! இந்த இடத்தில் பெற்றோர் தான் கூடிய கவனமெடுத்து அக்கறையுடன் வெளியே சுற்றுலாக்களுக்கு அழைத்துச் சென்று சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது பெற்றோரின் அத்தியாவசியக் கடமையாகும். ஏனெனில் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து பாடி - ஆடி - அபிநயத்து மகிழும் குழந்தைகள் தான் ஆரோக்கியமான மனவளர்ச்சியுடன் வளர்வார்கள். இத்தகைய குழந்தைகளே சமுதாய வளர்ச்சிக்கு வேண்டியவர்கள். இந்தக் குழந்தைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திலுள்ள அனைவருக்கும் வேண்டும். பெற்றோர் - ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் முக்கியமாகக் குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
குழந்தைகள் உள்ளம் வெள்ளைத் தாள்களைப் போன்றது - களங்கமற்றது. அதில் என்ன சாயத்தைக் - கருத்தை ஏற்றுகிறோமோ அது நன்றாகப் படிந்துவிடுகிறது. அதை மாற்றுவது என்பது மிகக் கடினமாகும். எனவே குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் மொழிவளம் - சொல்லும் கருத்துக்களில் மிகக் கவனம் செலுத்துவது அவசியமாகும். குழந்தைகளின் வெள்ளை மனங்கள் புதிது புதிதாக உலகில் காணும் - தாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் - கருத்துக்களையும் பதிவு செய்கின்றன. அவர்களின் உடல்போல மனமும் வளர்ச்சியடையும் பருவமிது. சமுதாயத்திற்கு வேண்டிய நற்பிரசைகள் உருவாகும் காலம் இப்பருவமே.
எனவே குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் மொத்தத்தில் ஓர் உளவியல் வல்லுனராகக் - குழந்தைகள் மனநல நிபுணராகவிருந்து செயற்பட்டால் சமுதாய உயர்ச்சிக்கு வேண்டிய ஆக்கங்களைப் படைத்து - அதில் வெற்றிபெற்று உலகையே உய்விக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
"ஏழைகளின் செல்வம் குழந்தைச் செல்வங்களே..." என்பது மேலைத்தேசப் பொன்மொழியாகும். இந்த அழகான பொன்மொழிக்குரிய உலகெங்கிலுமுள்ள மழலைச் செல்வங்கள் வளர்ச்சி பெறவும் - வாழ்வு பெறவும் குழந்தை இலக்கியம் உதவிநின்று வளம்பெறட்டும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|