போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம்.
இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சிந்தித்துப் படைப்பவர்கள். மற்றையோர் கண்டங்கள் கடந்திருந்து , கால் நூற்றாண்டுகள் மேல் பாரிஸ் , லண்டன் , ரொரண்ரோ என வாழ்ந்தபோதிலும் ஊர் நினைவுகளை மீட்டுகிறார்கள்
அது அவர்களது தவறல்ல . ஊர் நினைவுகள் ஒரு எலும்பில் புகுந்த சன்னம் போன்றது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அடிமை கொள்ளும் போதை போன்றது. விலகுவது சுலபமல்ல. நண்பர் ஷோபாசக்தி நேர்மையாக அதை சமீபத்திய செவ்வியில் ஒப்புக்கொண்டார். பலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்ற லேபலுக்குள் இருந்து பால்ய கால நினைவுகளையும் இலங்கையில் நீடித்த போர் பற்றியும் எழுதுகிறார்கள் . நான்கூட அசோகனின் வைத்தியசாலை , உனையே மயல்கொண்டேன் முதலான அவுஸ்திரேலியாவின் வாழ்வு சார்ந்த நாவல்களை எழுதிவிட்டு மீண்டும் கானல் தேசம் என்ற போரக்கால நாவலை எழுதினேன்.
போதையெனச் சொன்னேன் அல்லவா?
இந்த நிலையில் நாம் இங்கிலாந்தில் வதியும் இராஜேஸ்வரி பலசுப்பிரமணியத்தை மட்டுமே புலம்பெயர்ந்த இலக்கியத்தைப் படைப்பவராகச் சொல்லமுடியும் . போரின் மணம் வீசாத காலத்தில் இங்கிலாந்து சென்றவர். அங்கு இங்கிலாந்தவர்களோடு வேலைசெய்து , அவர்கள் மத்தியில் வாழ்ந்ததால் அவரது மனதில் அங்குள்ளவை கருப்பொருளாக வருகிறது . முக்கியமாக அவரது சிறுகதைகளின் ஊடாக அவரை தமிழில் எழுதும் இங்கிலாந்தவர் என்றே அடையாளம் காணமுடியும். அவர் மனதில் அக்கரைப்பற்றிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைவிட மற்றவை விலகிவிட்டது. அவரது கதை மாந்தர்களாக ஆங்கிலேயர் மற்றும் தென்னாசியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்களை சித்திரிக்கிறார். இதற்கு அவரது மானிடவியல் கல்வியும் வைத்தியசாலையிலும் வெளியிலும் மருத்துவத்தாதியாக கடமை புரிந்த அனுபவம் கைபிடித்துச் செல்கிறது .
பெரும்பாலான இலக்கியங்கள் ஏதோ ஒரு அனுபவத்தின் மூலமாகவே பெறப்படுகிறது . கடவுள்கூட தான் பார்த்த, நடந்த மண்ணிலிருந்தே ஆதாமை உருவாக்கியதாக பழைய வேதாகமம் சொல்கிறது. எல்லாம் வல்ல கடவுளுக்கும் கூட கற்பனையிலிருந்து ஆதாமை உருவாக்க முடியவில்லை. சாதாரண படைப்பாளி என்ன செய்வது ?
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ஒரு கோடைவிடுமுறை, உலகமெங்கும் வியாபாரிகள், தேம்ஸ் நதிக்கரையில், பனி பெய்யும் இரவுகள், வசந்தம் வந்து போய்விட்டது, தில்லையாற்றங்கரையில் , அவனும் சில வருடங்களும் , நாளைய மனிதர்கள் முதலான எட்டு நாவல்களையும் தமிழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர் பிரியா புலம்பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல் என்ற தலைப்பில் இலக்கியத் திறனாய்வுக்கு எடுத்துக்கொண்டு அதன்மூலம் தனது டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார் . இந்த ஆய்வு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உண்மையில் இந்தவிடயம் புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை இந்தியாவிலும் முக்கிய செய்தி .
இந்த ஆய்வு தனியாக இராஜேஸ்வரி பலசுப்பிரமணியத்தின் நாவல்களை மட்டுமல்லாது மேலும் பல விடயங்கள் ஊடே பயணிக்கிறது. ஈழத்து தமிழ் நாவல்கள், அவைகள் தீண்டிய கருப்பொருட்கள் மற்றும் எழுதியவர்களுடாக பார்க்கப்படுகிறது. செங்கைஆழியான், கணேசலிங்கன் மற்றும் டானியல் ஆகியோரது நாவல்களை உரை கல்லாகப்பார்த்து, எழுத்தாளர்கள் நிலக்கிளி பாலமனோகரன் , கோகிலா மகேந்திரன் ஆகியோரது படைப்புகளோடு ஒப்பிடுகிறது.
வாழ்வியல் சிக்கல் என வரும்பொழுது, பெண்கள் பிரதான பாத்திரங்களாக இடம் பெறுகிறார்கள் . புலம்பெயரும் தென்னாசியப்பெண்கள் எப்படி இங்கிலாந்தில் வாழவிரும்புகிறார்கள். ஆனால், அவர்களது விருப்பங்கள் எப்படி ஆண்களால் மறுக்கப்படுகிறது என்பது ஆய்வு செய்யப்படுகிறது . திருமணம், இளம் பெண்களை இன்ப மயமான அடுத்த கட்ட வாழ்வு முறைக்குக் கொண்டு செல்லாது, ஆண்களால் கைவிலங்கு மாட்டி சிறைபிடிக்கும் ஒரு சடங்காகிவிடுகிறது என்பது இந்த நாவல்கள் வழியே வெளிப்படுவதாகவும் டாக்டர் பிரியா பதிவிடுகிறார்.
இலங்கை அரசியல் பிரச்சினை, மொழிப் போராட்டம், அதன் பின்பான ஆயுதப் போராட்ட விடயங்கள், அதன் விளைவான உயிரிழப்புகள் , பாலியல் வன்முறைகள் , உடைமைகளை அழித்தல் மற்றும் மலையக மக்களது நிலைகள் இந்த நாவல்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புலப்பெயர்வால் இளைய தலைமுறையில் ஏற்படும் சிந்தனை , செயல் மாற்றங்கள் பேசுபொருளாகவும் உள்ளது .
கடந்த கால் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் , ஆங்கில சமூகம், அத்துடன் உலக சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்த நாவல்களாக இவை இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இராஜேஸ்வரியின் நாவல்கள் பற்றிய ஆய்வு 200 பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தகமாக தமிழில் டாக்டர் பிரியாவால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகளும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் இலங்கை இந்திப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியம் என்ற கல்வித்துறை முக்கியமான பல்கலைக்கழகங்களில் இடப்பெற்று, அங்கு இவைகள் பாடத்திட்டத்தில் இடம் பெறவேண்டுமெனவும் தெரிவிக்கின்றேன் .
இளவயதில் திருமணம் . பெற்றோர்களால் பேசப்படும் திருமணம், சொந்தத்தில் மணமுடித்தல், பெண்களுக்கு குறைந்த கல்வி எனப் பல விடயங்களால் பெண்களைப் பாரவண்டிகளை இழுப்பவர்களாக்கியுள்ளது தமிழ்ச்சமூகம். சாதிப்பிரிவினை மற்றும் கறள் பிடித்த மதங்களின் துணையால் தென் ஆசிய சமூகமே பெண்கள் விடயத்தில் மிகவும் கீழ்நிலையில் உள்ளது என்பதை எல்லாப் புள்ளி விபரங்களும் சொல்கின்றன.
மேற்குறிப்பிட்ட விலங்குகள் எளிதில் உடைக்க முடியாதவை என்பது உண்மை. ஆனாலும், இரும்பு விலங்குகளைக் குறைந்த பட்சமாகத் தளர்த்தி, அந்தக் கைகளில் இரத்த ஓட்டத்தையாவது அதிகரிக்கச்செய்ய இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எழுத்துக்கள் உதவுமென்பது எனது கணிப்பு . அவரது நாவல்களை ஆய்வு செய்த டாக்டர் பிரியாவிற்கும், அதை அங்கீகரித்த பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும் ஒரு தென்னாசியனாக மட்டுமல்ல, ஒரு மகனாக – கணவனாக -ஒரு பெண்ணின் தந்தையாக நன்றிகளைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|