1. அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும் !
தனிமைச் சிறையினிலே தவித்திருந்த மக்களெலாம்
சிறகை விரித்தபடி தெரிவெங்கும் திரழுகிறார்
உலகையே வாட்டிநிற்கும் உயிர்கொல்லி கொரனோவோ
விலகியே போனதாய் சொல்லுவார் யாருமுண்டோ !
விமானங்கள் பறக்கவிட விரைந்துள்ளார் இப்போது
கொரனோவும் மகிழ்வுடனே கூடவே குதித்துவரும்
சுகாதார மையமோ தளர்வெடுப்பைத் தடுக்கிறது
அரசியல் மையமோ அதைக்காணா நிற்கிறது !
வியாபார மையங்கள் வெளிச்சமாய் தெரிகிறது
விழுந்தடித்து மக்களெலாம் தேடுகிறார் பலவங்கு
முகக்கவசம் செயலிழந்து முடங்கியே கிடக்கிறது
முன்தள்ளி பின்தள்ளி மக்களெல்லாம் திரிகின்றார் !
தேனீர் கடைகள் திறந்துமே இருக்கிறது
இடைவெளியைப் பாராமல் ஏந்துகிறார் கோப்பைகளை
விற்கின்றார் முகத்தினிலும் முகக்கவசம் காணவில்லை
விரும்பிக் குடிப்பாரும் அதைப்பொருளாய் கொள்ளவில்லை !
மருந்துவிற்கும் கடைகளிலும் பாதுகாப்பாய் அவரில்லை
வாங்கச் செல்லும் எவரிடத்தும் முகக்கவசம் காணவில்லை
பேருந்தில் செல்வாரும் பெரும்பாலும் அணிவதில்லை
யாவருமே கொரனோவை மறந்துவிட்டே திரிகின்றார் !
கையுறைகள் அணியாமல் எரிபொருளை நிரப்புகிறார்
காசுவாங்கும் கடைகளிலும் கையுறையைக் காணவில்லை
காணாமல் கொரனோவும் ஆகியதே எனுமெண்ணம்
எல்லோரின் மனதினிலும் எழுச்சிபெற்று இருக்கிறது !
கொண்டாட்டம் என்கின்றார் கூடலாம் என்கின்றார்
வண்டாகத் திரிவதற்கு வாய்ப்பென்றும் மகிழுகிறார்
திண்டாடித் திருந்ததுவும் திகைத்துமே இருந்ததும்
இன்னுமே இதயத்தில் இருப்பதையும் மறந்துவிட்டார் !
ஒழிந்தது கொரனோவென்றால் உலகமே மகிழ்வடையும்
அழிந்தது கொரனோவென்றால் ஆனந்தம் பெருகிநிற்கும்
கொரனோவோ ஒருபக்கம் பார்த்தபடி இருக்கையிலே
அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும் !
2. நஞ்சு என்று நீநினைத்து நாடா மதுவை இருந்திடுவாய் !
மதுவை நாடிப் போகாதே
மரணம் உன்னை காத்திருக்கு
அதுவே உந்தன் வாழ்வினிலே
ஆனந்தம் இல்லா அழித்துவிடும்
கதவை தட்டும் கொரனோவோ
காலம் கடந்தால் ஓடிவிடும்
மதுவோ உன்னைக் காலனிடம்
விரைவாய் கூட்டிச் சென்றிடுமே !
குடித்துத் தெரிவில் நீகிடந்தால்
ஓடித் திரியும் தெருநாய்கள்
பிணமாய் உன்னை நினைத்தபடி
பிய்த்து உதற கூடிவரும்
தெரிவில் போகும் சனமெல்லாம்
திட்டித் தீர்த்தே சென்றிடுவார்
எதற்கும் உதவா நிலையினிலே
இருப்பாய் என்பதை எண்ணிவிடு !
கோடி இருப்பார் குடித்தழிப்பார்
குடிசை இருப்பார் குடியழிப்பார்
மாடி மனைகளில் இருப்பார்க்கு
வசதி வாய்ப்பு நிறைந்திருக்கும்
குடிசை ஒன்றே கதியாக
வாழும் உனக்கு எதுவிருக்கு
உயிர்தான் உனக்கு உறுதுணையே
அதையும் குடியால் அழித்திடாதே !
நஞ்சு என்று நீநினைத்து
நாடா மதுவை இருந்திடுவாய்
அஞ்சியஞ்சி உன் குடும்பம்
அழுதே வாழ்க்கையைப் பார்க்கின்றார்
பிஞ்சுக் குழந்தை முகம்பாரு
பெற்றதாயின் பேச்சைக் கேள்
கையைப் பிடித்த மனையாளும்
கதறிநிற்கும் குடியை விடு !
3. அலைகிறான் மதுவைக் குடிப்பதற்கு !
எங்கோ தோன்றிய வைரஸ்சு
இல்லா ஒழிந்து ஓடிவிடும்
இங்கே எழுந்த மதுவரக்கன்
இறப்பைக் கொடுத்தே இருந்திடுவான்
வைரசை வதைக்க மருந்துவரும்
மதுவை அழிக்க மருந்துண்டா
வைரசை மிஞ்சிய கொடியதாய்
மதுவே நிமிர்ந்து நிற்கிறது !
மதுவின் மயக்கம் மனிதரையே
மாண்பை இழக்கச் செய்துவிடும்
மானம் அழிக்கும் மதுவதனை
மனத்தால் நினைத்தல் கேடாகும்
விலங்குகள் மதுவை குடிப்பதில்லை
விலத்தியே நீரைக் குடிக்கிறது
விந்தைகள் செய்யும் மனிதர்தாம்
விரும்பியே மதுவைக் குடிக்கின்றார் !
பறவைகள் மதுவைத் தொடுவதில்லை
பழவகை தானியம் தெரிகிறது
பறந்திட விமானம் செய்தவனோ
இறந்திட மதுவை ஏந்துகிறான்
ஐந்தறிவுள்ள உயிர் அனைத்தும்
அறிந்திடா மதுவை இருக்கையிலே
ஆறறிவுடைய மனிதன் மட்டும்
அலைகிறான் மதுவைக் குடிப்பதற்கு !
4. எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது !
முதலாளி அழுகின்றார் முதல்முடங்கிப் போச்சென்று
தொழிலாளி அழுகின்றார் தொலைந்தது தம்வாழ்வென்றும்
அழுகின்றார் தொடர்ந்தே அழுதபடி இருங்களென்று
சீனாவின் சொத்து சிரித்தபடி திரிகிறது !
பள்ளிக்கல்வி குலைந்ததென்று படிக்கின்றார் அழுகின்றார்
துள்ளியாடும் கலைஞரெல்லாம் துயருடனே உழலுகிறார்
அள்ளியள்ளி மனிதவுயர் அபகரிக்கும் கொரனோவோ
அதிகார தோரணையில் அரசாட்சி செய்கிறது !
விவசாயம் போச்சென்று விவசாயி வெதும்புகிறான்
வியாபாரம் தொலைந்ததென்று வியாபாரி கலங்குகிறான்
நலமழிப்ப தொன்றேதான் தன்விருப்பு எனக்கொண்டு
நாடுகளைக் கொரனோவும் நலிவடையச் செய்கிறது !
வல்லரசு எனச்சொன்னார் வகையறியா திகைக்கின்றார்
வெல்லுவோம் என்றுரைக்க முடியாமல் தவிக்கின்றார்
கொல்லுதலைக் குறிக்கோளாய் கொண்டிருக்கும் கொரனோவோ
எல்லையில்லா மகிழ்ச்சியுடன் எங்குமே திரிகிறது !
5. மேதினமாய் மலருமிந்த பெருநாளில் பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர் !
உழைக்கின்றார் வாழ்வினிலே உயர்ந்தநாள்
உழைப்பினுக்கு மதிப்பளிக்கும் உன்னதநாள்
அந்நாளில் தொழிலாளர் அனைவருமே
அரைவயிறாய் கால்வயிறாய் அழுகின்றார் !
மேதினமாய் மலருமிந்த பெருநாளில்
பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர்
எங்கிருந்தோ வந்தவிந்த கொரனோவால்
ஏக்கமுற்று வாடுகிறார் தொழிலாளர் !
ஊர்முழுக்கப் பரவிவரும் கொரனோவால்
ஊனமுற்றுக் கிடக்கிறது தொழிலெல்லாம்
ஊதியத்தை எதிர்பார்க்கும் கூட்டமெலாம்
உயிர்போகும் ஆபத்தை நெருங்குகிறார் !
முதலாளிக் கெதிராகப் போராடி
முன்னின்று எடுத்தார்கள் சுதந்திரத்தை
கொரனோவுக் கெதிராகப் போராடி
கொடுந்துன்பம் எய்துகிறார் தொழிலாளர் !
ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள்
அனுசரணை முதலாளி பக்கமேயாம்
அலுப்பின்றி உழைக்கின்ற தொழிலாளர்
அவர்கண்ணில் பட்டுவிடல் அரிதேயாம் !
மேடையேறி தொழிலாளர் நலனுரைப்பார்
மேடைவிட்டு கீழ்வந்தால் அதைமறப்பார்
தொழிலாளர் என்னாளும் துயரென்னும்
வலையதனில் அகப்பட்டே வதைபடுவார் !
என்னாளும் இன்னலுறும் தொழிலாளர்
மேநாளில் சுதந்திரமாய் பேசிடுவார்
அந்நாளும் பேசாத நாளாக்க
பொல்லாத கொரனோவும் வந்ததிங்கே !
மேடைபோட்டு மேதினத்தில் தொழிலாளர்
மேலான பலகருத்தை முழங்கிடுவார்
வாய்விட்டுக் கருத்துரைக்க வாய்க்கும்நாளும்
வாய்க்காமல் செய்ததிந்த கொரனோவும் !
6. யாருக்கும் வேண்டாத கொரனோவை விரைவில்
வேரறுக்க விஞ்ஞானம் வெளிச்சம் கொண்டுவரட்டும் !
அறியாத சிறுவர்களை அனுசரணை யாக்கி
அரங்கேற முயல்கிறது அகோரமுடை கொரனோ
குணங்குறிகள் காணாமல் கொரனோவும் அவர்கள்
ஊடாகப் பரப்பிவிட உவப்புடனே இருக்கு
வெளிசென்ற சிறிசெல்லாம் வீட்டுக்கு வருவார்
உள்நுழைந்த கொரனோவோவும் துள்ளிவர நினைக்கும்
அறியாமல் காவிகளாய் ஆகிவிடும் அவர்கள்
தெரியாமல் கொரனோவை கொடுத்திடுவார் பலர்க்கும் !
சீனாவின் தயாரிப்பாய் ஆனதனால் கொரனோ
சிறுசுகளைத் துணையாக்க திட்டம் இட்டதாலே
யாருமே புரியாமல் தந்திரமாய் உள்ளே
பரவிவிடத் துடிக்கின்ற உருவெடுத்து இருக்கு
சிறுசுகளைத் தாக்காது எனப்புகன்றார் நிபுணர்
எப்படியோ கொரனோவும் இதைத் தெரிந்துகொண்டு
நரியாகச் செயற்பட்டு நாட்டுக்குள் புகுந்து
பெருவாரியாய் உயிரைப் பறித்துவிட இருக்கு !
நீருக்குள் புகுந்துவிடத் துடிக்கிறதாம் கொரனோ
காற்றுடனே கைகோர்க்க காத்திருக்காம் கொரனோ
காய்கறிகள் பழவகைகள் தானியங்கள் மேலே
கண்வைக்க காத்திருக்காம் கொரனோவும் விரைவில்
பாருக்குள் இருக்கின்ற அத்தனையும் பிடித்து
ஊருக்குக் கெடுதிதனை உண்டாக்கத் துடிக்கும்
யாருக்கும் வேண்டாத கொரனோவை விரைவில்
வேரறுக்க விஞ்ஞானம் வெளிச்சம் கொண்டுவரட்டும் !
7. உலகில் மக்கள் மனமெல்லாம் ஊனம் ஆகிக் கிடக்கிறது !
வரையறை யின்றிக் காவுகொள்ள
வைரசு வடிவில் வந்திருக்கு
புவிலே உள்ளார் புலம்புகிறார்
புறப்பட்ட இடத்தைத் தேடுகிறார்
சீனா வென்று செப்புகிறார்
தானா வரவிலை என்கின்றார்
மருத்துவ உலகம் கலங்கிறது
மருந்துகள் காண ஓடுகிறார் !
அரசியல் ஆக்கிட முனைகின்றார்
ஆபத்தோ தினமும் பெருகிறது
பெறுமதியான மக்கள் உயிர்
பெருமையை இழந்து போகிறது
பொறுமையாய் இருங்கள் என்கின்றார்
பொறுமையைக் காத்திடப் பொறுமையிலை
இறுதியில் நடப்பது என்னவென
எவருமே புரியா திணறுகிறார் !
வறுமையால் வாடுறார் ஒருபக்கம்
வணிகத்தை இழக்கிறார் ஒருபக்கம்
விவசாயம் செய்வார் விளைபொருள்கள்
வீணாய் போவதால் வெதும்புகிறார்
உழைத்துப் பிழைக்கும் பலமக்கள்
உணவு கிடைத்தால் போதுமென்று
உருக்கு முற்று நிற்கின்றார்
உணரா கொரனோ பிடிக்கிறது !
ஆராய்ச்சி கூடம் ஓய்வின்றி
ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கிறது
கொரனோ தடுப்பு மருந்துமட்டும்
வரவோ இன்னும் மறுக்கிறது
வெளியில் கொரனோ வலைவிரித்து
சவாலை கொடுத்து நிற்கிறது
உலகில் மக்கள் மனமெல்லாம்
ஊனம் ஆகிக் கிடக்கிறது !
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|