முன்னுரை
ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள் வெறும் போகப் பொருளாகவும் சுமைதாங்கிகளாகவும் குடும்பச் சுமையைச் சுமக்கும் பார வண்டிகளாகவும் இருந்து வருகின்றனர். ஆணுக்குத் தரும் சுதந்திரம், கல்வி, காதல் உணர்வுகள், வீரம் போன்ற உணர்வுகள் பெண்களுக்குத் தருவதில்லை. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கும் பெண்ணுக்குரிய அணிகலனாகவும் ‘கற்பு’ என்பது பெண்ணிற்கிடப்பட்ட தடுப்புச் சுவராகவும் பூட்டப்பட்டன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று தங்களின் சுயத்தை அறிந்து கொண்டனர். இதனால் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், வலிகள், சமூகக் கொடுமைகள், பாலியல் சிக்கல்கள், உடல் உணர்வுகள் ஆகியவற்றை ஆண்கள் போன்றே பெண்களும் எடுத்துக் கூறலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். ஆண்கள் குறியீட்டாக்கிய சொற்களை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு தங்களுக்கென புதுமொழியைப் படைக்க ஆரம்பித்து விட்டனர். ஆண்கள் உருவாக்கிய தொன்மங்களை உடைத்து கருத்துக்களைக் கேள்விக்குரியதாக்கினர். தங்களுக்கென தேடல்களைத் தேடினர். தமக்கென கருத்துச் சுதந்திரம், புதிய பொன்மொழி, பெண்புனைவுகளை உருவாக்குகின்றனர். பெண் கவிஞர்களில் ஒருவரான கனிமொழி தம் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் பெண் மொழியையும் கருத்துச் சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
கனிமொழியின் கவிதைகள்
கனிமொழி நான்கு ( கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், & கருக்கும் மருதாணி) கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இத்தொகுதிகளில் பெண்ணியச் சிந்தனைகள், சமூகச் சிந்தனைகள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன. மிக எளிமையான சொற்களைக் கையாண்டு கருத்துக்களைச் செறிவாகவும் கோர்வையாகவும் படைத்துள்ளார். இவரது கவிதைகளில் தீவிரவாத பெண்ணிய கருத்துக்கள் இடம்பெறவில்லை. சோசலிச – மிதவாத பெண்ணய கருத்துக்களே அதிகம் இடம்பெறுகின்றன.
பெண் மொழி
இதுவரையில் பெண் மீது கட்டப்பட்டுள்ள சொற் புனைவுகள் பெண் உடலியக்கம் அல்லது பால் இயக்கப் பணிகளில், சடங்குகளில் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலைப்பாடு எல்லாவற்றையும் ஒன்றிணைக்கக்கூடிய கலாச்சாரத்தை, பண்பாட்டை, குடும்ப-சமூக மத சாதி பேத நிறுவனங்களிலிருந்தும் அடக்குமுறைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் ஓர் இயக்கத்தைப் புதிதாகக் கட்டமைக்கும் கூறே பெண்மொழி எனலாம். இதுவரையில் ஆண்களால் பெண்ணின் உடல் வருணனை சித்திரிக்கப்பட்டதிலிருந்து மாறுபட்டு பெண்ணின் உடலோடு உடலாக இயங்கும் தளமும், வெளியும் புதிய பெண்ணியக் கதையாடலை அறிமுகம் செய்கிறது. பெண்ணிற்கான தன்னிலை பகுத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகிறது. பெண் உடல், ஆண் உடல் என்ற பாகுபாட்டினைக் கட்டுடைக்கின்றது.
பெண்ணின் உள்மன உணர்வுகளை, ஆழ்மன உணர்வுகளை நனவிலி மனத்தை வெளிப்படுத்த மொழி என்றும் தடையாக இருப்பதில்லை. ஆனால் பெண்கள் தாம் அமைதியாகவும் உணர்வுகளைக் கட்டு;ப்படுத்திக் கொள்பவர்களாகவும் பழக்கப்பட்டிருக்கிறார்கள். வைதீகத்தை எதிர்த்து எழுந்த திராவிட மரபின் பாரம்பரியத்தில் வளர்ந்த கனிமொழி பகுத்தறிவையும் மீறி தனக்கான தன்னிலையை நிலைநிறுத்தும் செய்தியைக் கவிதையாகத் தருகிறார். பெண் உடல் பாலிய குறியீடாக இருப்பதை வினாவுக்குட்படுத்துகிறார் கனிமொழி.
“வடநாட்டின் குளிருக்கு
கால் சராயும் பூட்சோடும் பூசாரி
..........................................
மூனுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
........................................
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனிசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக் கறி; படையல்
..........................................
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை” (1998:72)
எல்லா நாடுகளிலும் இறைவழிப் பாட்டு மரபு அந்தந்தத் தட்பவெப்ப நிலைக்கேற்ப மாற்றம் பெறுவதை இக்கவிதை எடுத்துக் காட்டுகிறது.
ஆனால் மாதவிடாயுள்ள பெண்களை மட்டும் சிவன் கோவிலில் அனுமதிப்பதில்லை என்பது ஆணியப் புனைவு என்று சாடுகிறார். திராவிடக் கொள்கை சார்ந்த கனிமொழி அதையும் மீறி பெண்ணியத்தைப் பெண்மொழியைக் கட்டமைக்கிறார். இந்துமதம் பெண்ணைக் கேவலமாக நடத்தி வருகிறது என்ற புரிதலின் கனம் கனிமொழியிடம் தென்படுகிறது. அதனால் தான் தத்துவமாக்கப்பட்டுள்ள இந்து மரபை எதிர்க்க முடிகிறது.
மரபை மீறல்
குழந்தையாய் இருக்கும் போது பெற்றோர்கள், திருமணம் ஆன பின்பு கணவன், முதுமையில் குழந்தைகள் போன்றோர் பெண்களுக்குப் பாதுகாவலனாய் இருப்பவர்கள் என்று சொல்லிச் சொல்லியே வளர்த்து வந்துள்ளனர். கணவன் கட்டும் தாலி புனிதமானது என்ற கற்பிதம் கட்டவிழ்க்கப்படுகிறது. திருமணம் ஒரு சிலுவையாக குறிக்கப்படுகிறது. ஆண்களால் கற்பிக்கப்பட்ட கற்பிதங்கள் பெண் மொழியில் சிதைக்கப்படுகின்றன.
“சட்டாம் பிள்ளையாய்
அம்மா
சிறைக் காவலராய்
அப்பா
அறிவுச் சலவைக்கு
படிப்பு
....................................
சிலுவையின் ஆணி தகர்த்து இறங்கி வந்தால்
கையில் தாலிக் கயிற்றோடு
கணவன்
உள் கருவறைக்குள் மற்றுமொரு
அடிமை” (1998:23)
சட்டாம்பிள்ளை - அம்மா
சிறைக்காவலர் - அப்பா
அறிவுச் சலவை - படிப்பு
அடக்கி வைக்க - சுற்றம்
சிலுவை - திருமணம்
தாலி - கணவன்
கருவறை - மற்றுமொரு அடிமை
ஆண்டாண்டு காலமாக பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறி வந்ததை உடைத்தெறிகிறார் கனிமொழி. தேர்ந்த சொல்லாட்சியின் மூலம் கருத்தினை குறியீட்டு மூலம் வெளிப்படுத்துகிறார். சிலுவை ... அறிவுச் சலவை ... மற்றுமொரு அடிமை என்ற சொற்கள் மூலம் புதிய கருத்தாக்கங்களை உருவாக்குகிறார்.
“அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
.........................................
............................. சில
நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன்
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று”
பெற்றோர்களின் விருப்பப்படி தான் பெண்கள் நடக்க வேண்டும். தனக்கெனச் சுயமாக சிந்திக்கத் தெரிந்தும் சரியான காலம் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டியுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்களின் வாழ்க்கையில் அனைத்தும் அவளது எதிர்பார்ப்பில் அவளது விருப்பத்தில் நடைபெறுவதில்லை. பெற்றோர்கள் (அ) பெரியோர்கள் தான் முடிவெடுப்பர் என்பதை விளக்குகிறார்.
“எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
........................................................
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர
எல்லாம் ஆணிடமிருந்து இரவல் பெற்றவை. (1998:15)
பெண்களுக்கென சுயசிந்தனை, கருத்துச் சுதந்திரம் விருப்பங்கள் எதுவுமின்றி ஆணின் விருப்பு வெறுப்பிற்கேற்ப நடக்க வேண்டும் (அ) பின்பற்ற வேண்டும். நான் நானாக இல்லை என்று கூறுகிறார்.
காத்திருத்தல்
பெண்களின் எண்ணங்கள், உணர்வுகள், தாபங்கள், ஏக்கங்கள் அனைத்தும் ஒரு வரன்முறைக்குட்படுத்தப்படுகின்றன. ஆண்களின் உணர்வுகள் சொற்களில் வெளிப்படும் போது பாராட்டப்படுவதுண்டு. அதையே பெண் எழுதினால் அவமதிப்பிற்குள்ளாக்கப் படுகின்றது. பிறரது எண்ணங்களில் கீழ்த்தரமானவளாகவும் மோசமானவளாகவும் கருதப்படுகிறாள். இதனை,
என்
காத்திருப்புக்கான
நியாயங்களைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என் கருத்துக்கள்
தணிக்கை செய்யப்பட்டே
சமூகத்தில் அனுமதிக்கப்படுகின்றன
என் உடையும் முகமும்
உங்கள் ஒப்புதலுக்காகக்
காத்திருக்கின்றன?
-------------------------------------------
என் பெயரென்ன
யாராவது
முடிவு செய்து சொல்லுங்கள்
சில யுகங்களாய்க்
காத்திருக்கிறேன்”
பெண்ணின் ஆழ்மன உணர்வுகள் அப்படியே வெளிப்படுத்த முடிவதில்லை. அவள் அணியும் உடையும் முகமும் ஆணின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. சுதந்திரமாக தனக்குத் தேவையான உடைகள் கூட அணிய முடிவதில்லை. நான் யார்? விலங்கா? ஜடமா? அடிமையா? இல்லை சக மனுஷியா? என்ற கேள்விக் கணைகளைத் தொடுப்பது போல் இறுதி வரிகளில் சாட்டைகளாய் தொடுத்திருக்கிறார் கனிமொழி.
பெண்ணடிமை
ஆண்டாண்டு காலமாய் பெண்கள் ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த நிகழ்ச்சியினை வரலாற்று அடிப்படையில் உணர்த்துகிறார் கனிமொழி. என்ற கவிதையில் வரலாற்று அடிப்படையில் பெண்கள் அடிமையானதை மிக அழகாக விவரித்துள்ளார் கவிஞர். சிறந்த சொல்லாட்சிகள் மூலம் கருத்தை வெகு எளிமையாகப் புலப்படுத்தியுள்ளார். இயற்கையோடு முரண்படாத மனிதன் - பந்தயங்களில் பணயப் பொருள் - கோயில் விக்கிரகங்கள் - காவியம் படைத்தல் - பெண் மாயை என்ற சொற்களின் மூலம் பெண்களுக்கான கருத்தாக்கங்களைக் கேள்விக்குரியதாக்குகிறார் கவிஞர். இறுதியில் “இன்னும் விரல் பற்றும் குழந்தைகளாய் நாங்கள்” என்ற வரியில் அனைத்துப் பெண்களிடம் இன்னும் விழிப்புணர்;ச்சி உருவாகவில்லை என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். மேலும்,
“இயற்கையோடு முரண்படாத மனிதன்
முதல் காமம் தனித்துச்
சொன்னான் கடவுளின்
முதல் பாவம் பெண்
.................................................
.................................................
என் மீது வடுக்கள்
பந்தயங்களில் பணயமாக்கப்பட்டேன்
கோவில்களில்
விக்கிரங்களாக்கப்பட்டேன்.
.................................................
காவியம் படைத்தார்கள்
உடைமையாய் உரியவளாய்
உயிரற்ற ஜடப்பொருளாய்
ஆகிப் போனேன்
வாழ்க்கையோ உலைக் களம்
.................................................
ஆங்காங்கே பெண் மாயை
ஒழிக்க வாளுருவிய கூட்டங்கள்
.................................................
நம்பிக்கைக் கனாக்கள்
இன்னும் விரல் பற்றும்
குழந்தைகளாய் நாங்கள்” (1998:19)
என்ற கவிதையில் வரலாற்று அடிப்படையில் பெண்கள் அடிமையானதை மிக அழகாக விவரித்துள்ளார் கவிஞர். சிறந்த சொல்லாட்சிகள் மூலம் கருத்தை வெகு எளிமையாக புலப்படுத்துகிறார். இயற்கையோடு முரண்படாத மனிதன் - பந்தயங்களில் பயணப் பொருள் - கோயில் விக்கிரகங்கள் - காவியம் படைத்தல் - பெண் மாயை என்று சொற்களின் மூலம் பெண்களுக்கான கருத்தாக்கங்களைக் கேள்விக்குரியதாக்குகிறார் கவிஞர். இறுதியில் இன்னும் விரல் மற்றும் குழந்தையாய் நாங்கள் என்ற வரியில் அனைத்துப் பெண்களிடம் இன்னும் விழிப்புணர்ச்சி உருவாகவில்லை என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். மேலும்
“வம்சம் வளர்க்க
பெருக்க பொங்க
விளக்கேற்ற
கழுவ துவைக்க
.................................
துணையாய் வருவான்
மருமகப் பொண்ணு
ஆனால் உன்
எட்டடிக்கு எட்டடி
ராஜ்யத்தில்
இரண்டு ராணிகளுக்கு
இடமுண்டோ” (1998:21)
என்ற கவிதையின் வாயிலாகப் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் பெண்களின் உலகமான சமையலறையில் மட்டும் இரு பெண்கள் இணைந்து செயலாற்றுவதில்லை என்று குறிப்பிடுகிறார். மருமகள் வந்த பின் மாமியார் சமையலறை பக்கமே வருவதில்லை. வீட்டிற்குப் புதிதாய் வந்த பெண்ணிற்கு உதவி செய்வோமே என்ற எண்ணம் மாமியாருக்கு வருவதில்லை. இல்லையெனில் இருவரில் யாரேனும் ஒருவரே அப்பணியினை ஏற்றுக் கொண்டு அதிகாரம் செலுத்துவர். பெண்களுக்குள்ளே ஒற்றுமை நிலவுவதில்லை என்று எடுத்துக் காட்டுகிறார் கவிஞர்.
பெண் தன்னை உணர்தல் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வி பயின்று பல்வேறு துறைகளில் செயல்பட்டு (அ) ஈடுபட்டு வெற்றியடைந்து வருகின்றனர். இதனால் தனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே உருவாகத் தொடங்கியுள்ளது. பெண்கள் எவ்வாறு ஆண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தருகின்றனரோ அது போலவே அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது. இதனால் சில கற்பிதங்கள் மரபுகள், தொன்மங்களைக் கட்டுடைக்க வேண்டியதாகி விட்டன. அதனை,
“எது வாழ்க்கை யார் மனிதன்
என்ற அந்தத் தேடல் சனியன்
என் தலைக்குள் நுழையாதவரை
நாம் வாழ்ந்ததே வாழ்க்கை
......................................................
இன்று அகப்பொந்தில்
அக்கினிக் குஞ்சு
சூரியக் கதிராகும் வெறி
நெருப்புச் சுடராய் ஒளிர
தீப்பந்தத்திலா நீ தங்க முடியும்
...........................................................
என் நினைவுகளையும்
எடுத்துக் கொண்டு” (1998:22)
என்ற கவிதையில் பெண்களுக்கான சுதந்திர உணர்வை அக்கினிக் குஞ்சு என்ற சொல்லால் குறியீடாக்குகிறார். சூரியன் இரு விதத்தில் செயலாற்றுகிறான். ஒன்று உயிர்களைக் காப்பது. மற்றொன்று தீயதை அழிப்பது. ஆகவே பெண்ணும் தன்னோடு இணைந்து செயலாற்றும் உயிர்களுக்கும் பக்கபலமாக இருப்பது, தன்னை எதிர்ப்பவர்களை மறுதலிப்பது (அ) விலகிச் செல்வது என்ற காத்தில் சூரியக் கதிராகும் வெறி என்ற தொடரில் கருத்தாக்கம் செய்கிறார். நெருப்புச் சுடராய் ஒளிர என்ற தொடர் பிறருக்கு வழிகாட்டும் கருவியாக பெண் இருக்க முடியும் என்ற கருத்தை மிளிரச் செய்கிறார். இத்தகைய மேன்மையுள்ளத்துடன் இருக்கக்கூடிய பெண்ணிடத்தில் (அ) சுதந்திர தாகமுடைய பெண்ணிடத்தில் மாறுபட்ட எண்ணமுடைய ஆண்கள் எவ்வாறு வாழ முடியும் என்ற வினாவினை எழுப்பத் தூண்டுகிறார். ஆகவே இருவரது எண்ணங்களில் மாறுபாடு தோன்றியிருப்பதால் நான் தனியே செல்கிறேன் என்ற கருத்தினை செல்கிறேன் வெளிப்படுத்துவதாய் “என் நினைவுகளையும் எடுத்துக் கொண்டு” என்ற வரியின் மூலம் புலப்படுத்துகிறார் கவிஞர். இதில் ஆதிக்க மனப்பான்மையுடன் செயலாற்றும் ஆண்களிடத்தில் மேலும் மேலும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டியதில்லை. அவளது சுயத்தைத் தேடி தனியே வாழ்வதுதான் சிறப்பு கருத்தாக்கத்தை முன் வைக்கிறார் என்று கூறலாம்.
பெண் தன்னை உணர்தல்
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வி பயின்று பல்வேறு துறைகளில் செயல்பட்டுஃஈடுபட்டு வெற்றியடைந்து வருகின்றனர். இதனால் தனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே உருவாகத் தொடங்கியுள்ளது. பெண்கள் எவ்வாறு ஆண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தருகின்றனரோ அதுபோலவே அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது. இதனால் சில கற்பிதங்கள், மரபுகள், தொன்மங்களைக் கட்டுடைக்க வேண்டியதாகி விட்டன. அதனை,
எது வாழ்க்கை யார் மனிதன்
என்ற அந்தத் தேடல் சனியன்
என் தலைக்கள் நுழையாத வரை
நாம் வாழ்ந்ததே வாழ்க்கை
.................................................
.................................................
இன்று அகநப பொந்தில்
அக்னிக் குஞ்சு
சூரியக் கதிராகும் வெறி
நெருப்புச் சுடராய் ஒளிர
தீப்பந்த்திலா நீ தங்க முடியும்
...................................................
என் நினைவுகளையும்
எடுத்துக் கொண்டு (1998: 22)
என்ற கவிதையில் பெண்களுக்கான சுதந்திர உணர்வை அக்னி குஞ்சு என்ற சொல்லால் குறியீடாக்குகிறார். சூரியன் இரு விதத்தில் செயலாற்றுகிறான். ஒன்று உணரிகளை காப்பது. மற்றொன்று தீயதை அழிப்பது. ஆகவே பெண்ணும் தன்னோடு இணைந்து செயலாற்றும் உயிர்களுக்கு பக்க பலமாக இருப்பது. தன்னை எதிர்ப்பவர்களை மறுதலிப்பது, விலகிச் செல்வது என்ற கருத்தில் சூரியக் கதிராகம் வெறி என்ற தொடரில் கருத்தாக்கம் செய்கிறார். நெருப்புச் சுடராய் ஒளிர என்ற தொடர் பிறருக்கு வழிகாட்டும் கருவியாக, பெண் இருக்க முடியும் என்ற கருத்தை மிளிரச் செய்கிறார்.இத்தகைய மேன்மையுள்ளத்துடன் இருக்கக் கூடிய பெண்ணிடத்தில், சுதந்திர தாகமுடைய பெண்ணிடத்தில் மாறுபட்ட எண்ணமுடைய ஆண்கள் எவ்வாறு வாழ முடியும் என்ற வினாவினை எழுப்பத் தூண்டுகிறார். ஆகவே இருவரது எண்ணங்களிலும் மாறுபாடு தோன்றியிருப்பதால் நான் தனியே செல்கிறேன் என்ற கருத்தினை வெளிப்படுத்துவதாய் ‘என் நினைவுகளையும் எடுத்துக் கொண்டு” என்ற வரியின் மூலம் புலப்படுத்துகிறார் கவிஞர். இதில் ஆதிக்க மனப்பான்மையுடன் செயலாற்றும் ஆண்களிடத்தில் மேலும் மேலும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டியதில்லை. அவளது சுயத்தைத் தேடி தனியே வாழ்வதுதான் சிறப்பு என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் என்று கூறலாம்.
தொன்மத்தை உடைத்தல்
ஆணும் பெண்ணும் சரிநிகர். பெண்தான் சக்தி. சக்தி இல்லையெனில் சிவமில்லை என்ற அலங்காரச் சொற்களின் வாயிலாக பெண்களை அடிமைக்குள்ளாக்கினர் ஆண்கள். ஆனால் அவை உண்மையல்ல: போலித்தனமானது என்பதை,
அர்த்தநாரீஸ்வரனின்
அழகிய பாதியாய்
அமர்ந்திருப்பவள்
அவனுள் அடங்கிப் போனது
போல்தான் நாமும்
ஏற்றி வைக்கப்பட்டதென்னவோ
உச்சாணிக் கொம்பில்
உள்ளதென்னவோ துணை மந்திரியாய்” (1998:20)
என்ற கவிதையின் வாயிலாகப் புலப்படுத்துகிறார். ஆண்-பெண் சமம் என்பதைக் குறிக்கும் குறியீடு அர்;த்தநாரீஸ்வரன். உண்மையில் நடந்தது என்ன? ஆணில் பெண்மை சமத்துவம் என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. ஆண்-பெண் சமத்துவம் என்பதைக் குறிக்க பெண்ணின் உடலில் சரி பாதி ஆண் என்று குறித்திருக்கலாமே. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில் பெண்ணை விட ஆண்தான் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்க இக்குறியீடு தேவையான ஒன்றாக இருக்கிறது. அதனை “ஏற்றி வைக்கப்பட்டது என்னவோ உச்சாணிக் கொம்பில், உள்ளதென்னவோ துணை மந்திரியாய்” என்ற தொடரில் வெட்ட வெளிச்சமாக்குகிறார் கவிஞர். உண்மையில் ஆணுக்குள் பெண்மை அடக்கம் என்பதைத்தான் இக்குறியீடு சுட்டிக் காட்டுகிறது என்ற கருத்தினை சிந்திக்கத் தூண்டுகிறார் கவிஞர்.
தொகுப்புரை
பகுத்தறிவு என்ற பாசறையில் பயின்று வந்த கனிமொழி தனக்கென தனி முத்திரையினைத் தமது கவிதையின் வாயிலாக பதித்துள்ளார். காலங்காலமாக பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டு வந்த கற்பிதங்களைக் கட்டுடைக்கின்றார். புதிய தேடலுக்கு வழிவகை செய்கிறார். பெண்கள் எந்த ஒரு ஆணையும் காலம் முழுதும் சார்ந்திராமல் தனித்து நிற்க வேண்டும்; சுயமாக சிந்திக்க வேண்டும். ஆண்களைப் போல பெண்களும் தன் மன உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தலாம் என்றும் வழிகாட்டுகிறார். ஒவ்வொரு பெண்ணும் தன் சுயத்தைக் கண்டு கொண்டு அதன் வழி வாழ வேண்டும் என்று வழிகாட்டுகிறார். இவரது பெரும்பாலான கவிதைகள் மிதவாதப் பெண்ணியக் கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன எனலாம். தேர்ந்த சொல்லாட்சியும் செறிவான கருத்தாக்கங்களும் கொண்டு இவரது கவிதைகள் புதிய எண்ணங்களுக்கு வித்திடுகின்றன என்று கூறுவதில் சிறிதும் ஐயமில்லை எனலாம்.
•<• •Prev• | •Next• •>• |
---|