புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து ஒரு பதிப்பகம் எவ்வித ஆரவாரமுமின்றி உலகத்தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்குக் காரணமான இதன் உரிமையாளரான எழுத்தாளரின் தன்னடக்கம் மதிப்புக்குரியது. எழுத்தாளர் வேறுயாருமல்லர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் த.அகிலனே. 'மரணத்தின் வாசனை: போர் தின்றவர்களின் கதை' மூலம் எமக்கெல்லாம் அறிமுகமானவர். போர்ச்சூழலில் மக்கள் மரணத்துள் எவ்விதம் வாழ்ந்திருந்தார்கள் , எவ்விதம் அதனை எதிர்கொண்டார்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் கதைகளின் தொகுதி. முக்கியமான போர்க்கால இலக்கியப் பிரதிகளிலொன்று. கதை, கவிதை , கட்டுரை நூல் வெளியீடு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.
வாழ்த்துகின்றோம் 'வடலி' பெரும் பனையாக வளர்ந்திட, உயர்ந்திட, மேலும் பல வளங்களை வாசகர்களுக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிட வளர.
இதுவரை உருவாகிய குறுகிய காலத்திலிருந்து இப்பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் , நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியான தன்மை வடலிக்கு மிகப்பெரிய வளர்ச்சியினை எதிர்காலத்தில் அடைய உதவுமென்பது வெள்ளிடைமலை.
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் ஈழத்தமிழர்களின் போராட்ட அமைப்புத்துறை, கோட்பாட்டரசியல், மூலோபாய, தந்திரோபாயப்பிரச்சினைகள் பற்றிய விரிவான மூன்று தொகுதிகள், எழுத்தாளர் தேவகாந்தனின் கலிங்கு நாவல், எழுத்தாளர் ப.ஶ்ரீஸ்கந்தனின் 'அரியாலையூர் நாடக ஆளுமைகள்', உசுல பி.விஜயசூரியாவின் சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான அம்பரய எழுத்தாளர் கருணை ரவியின் 'கடவுளின் மரணம் (சிறுகதைகள்)', எழுத்தாளர் யோ.கர்ணனின் 'சேகுவேரா இருந்த வீடு' ஆகியவை வடலி வெளியிட்ட நூல்களில் சில. வடலி பற்றிய விபரங்களுக்கு: http://vadaly.com/
வடலி வெளியிட்ட நூல்களில் சிலவற்றை நூலகத்தில் வாசிக்கலாம்: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
வடலி பதிப்பகத்தின் நோக்கம் பற்றி அதனது வலைத்தளத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
" வடலி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கமற்ற ஒரு சிறு பதிப்பகம். தமிழகத்தில் அல்லது ஈழத்துக்கு வெளியிலிருந்து வெளியாகும் ஈழம் தொடர்பான படைப்புகளில் அதிகம் பிரதிநித்துவப்படுத்தப்படாத குரல்களை வெளியிடும் நோக்கத்துடன் ஈழத்துப் புத்தகங்கள் மற்றும் பதிப்புத்துறை போன்றவற்றின்பாலான அக்கறையுடன் 2009-இல் ஈழத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களால் வடலி வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது. 2010இன் நடுப்பகுதியில் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர் விலகினாலும் வடலி தன் நோக்கத்தில் ஒப்புவமையுள்ள புதிய நண்பர்களோடு இணைந்து தன் பணிகளைத் தொடர்கிறது. இதுவரையான வெளியீடுகளில், இறுதிப் போர் அனுபவங்கள் – போருக்குப் பிந்தைய நிலத்தில் அங்கு வாழ்கிறவர்களது குரல்கள் – மாற்று அரசியல் விவாதங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பிரதிகள் எம்மால் வெளியிடப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் காத்திரமான படைப்புகளையும், படைப்பாளிகளையும் அறிமுகம் செய்வதையே முக்கியமாகக் கருதிச் செயற்பட்டு வருகிறோம். தமிழகத்தின் பெருநகர சிறுநகர மற்றும் புத்தக நிலையங்களில் வடலியின் நூல்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு நூலகங்களுக்கான கோரலும் பெறப்பட்டுள்ளது; அத்துடன் எமது நூல்களை நீங்கள் இணையத்திலும் வாங்கலாம். வடலி மேலாளர்கள்-அறங்காவலர்களை உடைய ஒரு மரபான அமைப்பு அல்ல. எமது நோக்கம் மற்றும் குறிக்கோள்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிற ஆர்வலர்கள், வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் இணைந்த ஒரு கூட்டு செயற்பாடே வடலி வெளியீடுகள். அந்த வகையில், வடலி, எமது வெளியீடுகளில் ஆர்வமுடைய உங்கள் எல்லோருக்கும் உரியது. வடலியை மேலும் வளர்த்தெடுக்க நீங்களும் பங்களிக்கலாம்.
உலகின் பல பாகங்களில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களது பதிப்பாக்கத் தேவையைப் பூர்த்தி செய்யவும், பெரும்பான்மைப் பதிப்பகங்களால் இலங்கையிலிருந்து பிரதிநித்துவப்படுத்தப்படாத குரல்கள் மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் முக்கிய படைப்பாளிகளின் படைப்புக்களைப் பதிப்பிக்கவும் முன்நிற்பதுடன், கூடவே ஒலிப்புத்தகங்கள் – ஆவணங்கள் – குறும்படங்கள் என எமது நோக்கு விரிகிறது. தமிழில் எழுத்தார்வமும் துடிப்பும் மிக்க படைப்பாளிகளுக்கு அவர்களது புத்தகங்களை வெளியிடுவதில் பொருளாதாரம் ஒரு பெரும் தடையாக இருப்பதை அகற்றுதல்; ஒரு சில ஈழத்துப் படைப்பாளிகளோடு தமிழகத்தில் தேங்கி விட்ட அறிமுகத்தினை பரவலாக்கவும் விரிவாக்கவும் சாத்தியமான சகல வழிகளிலும் ஏற்பாடு செய்தல்; வருடந்தோறும் — மொழிபெயர்ப்புகள் உட்பட – குறிப்பிடத் தகுந்த ஐந்து தமிழ் நூல்களை வெளியிட்டு விநியோகித்தல்; ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் சமூக மாற்றங்களை வேண்டி செயல்படும் தோழமை அமைப்புகளுடன் இணைந்து படைப்புகளை வெளியிடுதல்; பிற மொழிகளில் இருந்து, ஈழ அரசியலுடன் அல்லது ஈழத்துடன் தொடர்புடைய நூல்களது மொழிபெயர்ப்புகளைக் காலத்துக்கேற்ப வெளியிடுதல்; எமது சமூகத்தின் அரசியல் கலைஇலக்கிய அசைவியக்கத்துக்குப் பங்களிப்புகளை வழங்கியமைக்கான; சிறந்த சமூக செயற்பாடுகளுக்கான கௌரவத்தை, கவனத்தை, முக்கியமான வாழும் கலைஞர்கள் செயற்பாட்டாளர்களுக்கு வழங்குதல்.
நீங்கள் எவ்வாறு உதவலாம்? வடலியுடன் சமூகவலைத்தளங்களில் (Facebook, Twitter, Youtube) இணைந்துகொள்வதூடாக… உங்களது மின்னஞ்சலை எமது தளத்தில் subscribe செய்வதூடாக, எமது வெளியீடுகள் குறித்த தகவல்களை (catalogue) பெறுவதூடாக அறிந்துகொள்ளலாம். நூல்களை வாங்கி, வாசித்து, உங்களது நண்பர்களுக்கும் பரிந்துரைப்பதூடாக சிறு பதிப்பங்களது வளர்ச்சிக்கு வாசகர்களதும் எழுத்தாளர்களதும் ஆதரவு மிக முக்கியமானது. அந்த வகையில் எமக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவதூடாக மட்டுமல்ல, வடலியுடன் தங்களது நூலை வெளியிடுவதூடாக தன்னியக்கமாக, பிற நூல்கள் வெளிவருவதற்கான நிதிப் பங்களிப்பையும் வழங்குபவர் ஆகிறார்கள். உ-மாக வெளிநாட்டில் அல்லது பொருளாதார வசதியுடைய பின்புலங்களில் இருந்து வடலியுடன் தங்கள் பதிப்பாக்க தேவைகளுக்காய் இணைந்துகொள்கிறவர்கள் ஈழத்திலிருந்து பொருளாதார பின்தங்கல்கள் அல்லது இடையூறுகளை எதிர்கொள்ளும் எழுத்தாளர்களது படைப்புகளைக் கொண்டுவருவதில் பங்களிக்கிறார்கள். “Sponsor a Book” – நீங்கள் புத்தகங்களை விரும்புகிறவர் ஆயின் நீங்கள் முக்கியமென நினைக்கிற புத்தகத்தை வெளியிட – அதற்கான நிதிப் பங்களிப்பூடாக அது வெளிவருவதற்கான உங்கள் ஆதரவை வழங்கலாம்! தொடர்புகொள்ள மின்னஞ்சல்: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• | முகப்புத்தகம் | பேச:001-647-896-3036"
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Next• •>• |
---|