பரதநாட்டியத்தின் தனிநட்சத்திரமாகத் திகழ்ந்த பாலசரஸ்வதி குறித்து அவரின் மகளைத் திருமணம் செய்த அமெரிக்கரான டக்லஸ் எம் நைட் என்ற சிறந்த ஒரு கலைஞர் பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். Balasaraswati :HerArt and Life. இந்த நூலை மிகுந்த செழுமையுடன் டி.ஐ.அரவிந்தன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 392 பக்கங்களை அடக்கியுள்ள இந்நூலை க்ரியா பதிப்பகம் மிக நேர்த்தியாக 2017 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டுள்ளது. பாலசரஸ்வதியின் மகள் லட்சுமி நைட் நினைவாக வெளியிட்டிருப்பது என்னை மிகவும் கவனத்தில் நிறுத்தியது. பல்வேறு கலை ஜாம்பவான்களின் மிக அரிய புகைப்படங்களுடன் இணைத்திருப்பது மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
இசையும் நடனமும் கலந்த பரதநாட்டியம் என்றழைக்கப்படும் கலை தென்னிந்தியாவில் உருப்பெற்று இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. தேவதாசி சமூகத்தைச் சோர்ந்த சேர்ந்த பாலசரஸ்வதி 18 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த பாப்பம்மாள் என்னும் இசை நடனக் கலைஞரின் 7ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர். அன்றைய கால கட்டத்தில் இந்த இசை நடனக் கலைஞர்கள் தவறான கண்ணோட்டத்துடனும், உதாசீனத்துடனும் மக்களால் பார்க்கப்பட்டனர். இந்நிலையில் 1950 களில் குடும்ப மரபிலிருந்து சிறிதும் விலகாமல் முழுமைத் தன்மையுடன் நடனக் கலையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர்தான் தஞ்சாவூர் பாலசரஸ்வதி.
புகழ்பெற்ற வீணை தனம்மாளின் பேத்தியான பாலசரஸ்தி அவர்கள் உலக அளவில் நினைவில் வைத்துப் போற்றக்கூடியவராகவும், சிறந்த முறையில் வாழ்ந்த மாபெரும் பரதநடனக் கலைஞராக இந்நூல் எனக்கு உணர்த்தியது.
18 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அருண்மனையிலிருந்த பாப்பம்மாளின் கொள்ளுப்பேத்திதான் இந்த வீணை தனம்மாள். 1867 ஆம் ஆண்டில் பிறந்த வீணை தனம்மாளின் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்ததாம். அவர் குடும்பத்தின் தலைவராகவும் இருந்தார். பாலசரஸ்வதியின் கதையும் தாய்வழி மரபுக் கோட்பாடுகளின் சமூக அமைப்பைப் பின்புலமாகக் கொண்டது. பாலசரஸ்வதி குடும்பம் கலையைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட அதாவது இசை நடனக் கலைகளை ‘தொழில்முறை’யாகக் கொண்ட கலைஞர்களாகத் திகழ்ந்தார்கள்.
தென்னிந்திய வரலாற்றில் பாலசரஸ்வதி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த முழுமையான நவீன கலைஞராகத் திகழ்ந்திருக்கிறார்;. உலகம் முழுவதிலும் பாலசரஸ்வதிக்கு உணர்வுபூர்வமாக ஈடுபாடுகொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். எண்ணற்றவர்களின் வாழ்வில் பாலசரஸ்வதி ஏற்படுத்திய தாக்கம், அவரை ஒரு மகத்தானவராக மிகுந்த நெருங்கிய உறவை ஏற்படுத்தியிருக்கிறது.
1918ஆம் ஆண்டில் பிறந்த பாலசரஸ்வதி குழந்தையிலேயே தனது வீட்டு வாசலில் நடனமாடத் தொடங்கியிருக்கிறார். பின்நாளில் அவரது உச்சமான கலையின் வடிவம், நாட்டியத்தில் அக்கறையற்ற பொதுமக்களைத் தட்டி எழுப்பும் சக்தி படைத்தவராக, விவரம் அறியாதவர்களையும் அதைவிட மோசமான கருத்துக்கள் கொண்டவர்களையும் பரதநாட்டியத்தை ஏற்கச் செய்திருக்கின்றது. அவரது நடனம் குறித்து கல்கி.ஆர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல்வேறு தளங்களில் எழுதிய ஆக்க விமர்சனங்களை இந்நூலில் நான் வாசித்தபோது பாலசரஸ்வதி நாட்டியத்தில் கையாண்ட நுண்ணிய ஆளுமை எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
பாலசரஸ்வதி கே. கந்தப்பிள்ளையைக் குருவாகக் கொண்டு நடனத்தைப் பயின்று, அவரது அரங்கேற்றம் 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இருந்த அம்மன் என்ற சிறிய கோயிலில் இடம்பெற்றது. 1922ஆம் ஆண்டில் அவர் கந்தப்பிள்ளையிடம் பெற்ற நடனப்பயிற்சியின்போது தவறு செய்யும்போதெல்லாம் மெல்லிய பிரம்பால் அடி விழுமாம். நெருப்பால் சுட்ட அனுபவமும் பாலாவுக்குக் கிடைத்திருக்கிறது. அத்தகைய மனத்தாங்கல்களின் எதிரொலியோ என்னவோ அவர் பின்னாளில் அமெரிக்கக் குழந்தைகள் உட்பட அவரிடம் நடனம் பயிலவரும் மாணவர்களுடன் மிகவும் கருணையோடு பேசுவாராம். ‘என் செல்வங்களே, இப்படிச் செய்யுங்கள். உங்கள் அழகான காலை எடுத்து இப்படி வையுங்கள். உங்கள் கைகளை பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று மிகவும் அன்போடு சொல்லுவாராம். ‘தரம்’ என்று அவர் பயன்படுத்துவதே இல்லையாம். நல்லது அல்லது மோசம் என்றோ, இது தப்பு இது சரி என்றோ சொல்லமாட்டாராம். பாலா கற்றுக் கொடுக்கும்போது நிறையவே தகவல்களைச் சொல்லுவாராம். சொல்லும் விடயங்களைக் காட்சிப் படுத்தி மாணவர்களை உணரவைக்க அவர் முயன்றார் என்பது மிகவும் செழுமை வாய்ந்த கற்பித்தல் முறையை அவர் கையாண்டிருக்கிறார்; என்பதைப் பார்க்க முடிகிறது.
20ஆம் நூற்றாண்டின் உலகம் முழுவதாலும் அங்கீகரிக்கப் பட்ட அற்புத நடனக் கலைஞராக இந்தியாவிலும் மேற்குலகிலும் போற்றப்பட்டவர் பாலசரஸ்வதி.
பத்மபூஷன் விருது, மத்திய அரசின் விருது என்று பல்வேறு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
அதனைவிட அவரது வசீகரமான நடனத்தை வர்ணிக்கும்போது உலக நடன வரிசையில் பெரிதும் போற்றும் நடனமேதை உதயசங்கர் அவர்கள் பாலசரஸ்வதியின் நடன கம்பீரத்தை வியந்து சொக்கிப்போனதாக அறியும்போது நானும் வாசிக்கும்போது அசந்துதான் போனேன்.
ரஷ்யாவில் பிறப்பாலே நடனக் கலைஞரான பாவ்லோவா, நடனத்தைச் சொத்தாகக் கொண்ட உதய சங்கர் போன்ற நடனக் கலைஞர்களை தன்வசப்படுத்தியவர் பாலசரஸ்வதி.
1961 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற எடின்பரோ சர்வதேச திருவிழாவின் இயக்குநராக பாலா நியமிக்கப்பட்டார். அவ்விழாவின் பொறுப்பாக ஏற்பாடு செய்தவர் லார்டு ஹர்வூட் என்பராவார். அவ்விழாவில் பாலசரஸ்வதிக்கு 8 நிகழ்வுகள் ஏற்பாடாகி இருந்தன. அலி அக்பர்ஹான், ரவிசங்கர், எம் எஸ் சுப்புலட்சுமி போன்ற பல பிரபலயமான கலைஞர்கள் அவ்விழாவிற்கு வந்திருந்தினர் என்று பெருமை கொண்டார் லார்டு ஹர்வூட்.
சிருங்காரம்
இத்தகைய மாபெரும் நடனக் கலைஞரான பாலசரஸ்வதி சிருங்கார ரசத்தை எல்லையற்ற சக்தியுடன் ஒருவர் வரித்துக் கொள்ளும் உறவிலிருந்து எழும் பரவச நிலை என்கிறார். மனிதனைக் குறித்தும் கடவுளைக் குறித்தும் இருக்கும் ஆண் - பெண் உறவை குறியீட்டுத் தளத்திலும் தத்துவார்த்தமாக வெளிப்படுகிறது என்ற கருத்தைக் கொண்டவர்.
இது குறித்த கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள் பாலசரஸ்வதிக்கும் ருக்மணிதேவி அருண்டேலுக்கும் இடையே இருந்ததாகவும், 1945 ஆம் ஆண்டளவில் தேசிய அளவில் அவை வெளிப்பட்டதாகவும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ருக்மணி தேவியின் அழுத்தம் சிருங்காரம் சாராத பாடல்களின் மீதே இருந்தது.
பாலசரஸ்வதி உணர்ச்சிகளின் போர்வையாக சித்தரிப்பதிலும்ää வெளியை மாறி மாறிச் சுருக்கவும் விரிவடையச் செய்யும் கலையின் மாயத்தை வியாபித்துக் காட்டக்கூடியவராகத் திகழ்ந்திருக்கிறார்.
கவிதை, ஓவியம், இசை, நடனம் மற்றும் இதர கலைகளின் மையமாகத் திகழ்வது ரசம். இந்த ரச உணர்வு காதல், வீரம், கருணை, அருவருப்பு, வியப்பு, பயம், வெறுப்பு, சாந்தம், கோபம் என்ற நவரச நிலைகளை உள்ளுணர்வின் தளத்தை உணரவேண்டும் என்கிறார் பாலசரஸ்வதி. இவை பாலசரஸ்வதியின் நாட்டியத்தில் அற்புதமா வெளிப்பட்டிருப்பதை இந்நூல் அழகாகச் சுட்டுகிறது. இதனால்தான் அவருடைய பரதநாட்டியத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிப்போய்ப் பெரும் வெற்றியை அடைந்திருக்கிறார் பாலா.
ரவீந்திரநாத் தாகூர், அப்துல் ஹர்ம்கான், உதய சங்கர், ரவிசங்கர், கலாதேவி சட்டோபாத்யாயா, சத்யஜித்ரே, எம்.எஸ். சுப்புலட்சுமி இப்படி ஒரு நீண்ட கலை ஜாம்பவான்களின் பட்டியலைப் பார்க்க முடிகிறது. இத்தகைய தலை சிறந்த மேதைகளோடு மிக நெருங்கிய உறவைப் பேணி வந்திருக்கிறார் பாலசரஸ்வதி.
நூலின் பிற்பகுதியில் இருக்கும் கலைச்சொற்களைப் படித்துப் பார்த்தாலே நாட்டிய உலகின் பல்வேறு கூறுகளை நாம் அனுபவித்து பாலசரஸ்வதியின் வாழ்க்கையின் கோலங்களை நாட்டியத்தோடு எடை போட்டுப் பார்க்க முடியும். மிக அருமையான இந்த நூலை நான் புரட்டிப் படிக்கும்போது அது என்னைப் புரட்டிப்போட்டது என்று கூறி - நன்றியுடன் விடை பெறுகின்றேன்.
18.4.2020.
•<• •Prev• | •Next• •>• |
---|