பேத்திக்கு ஆறுவயதாகிறது. பாடசாலைக்குப்போகிறாள். அங்கு ஆங்கில மொழிக்கல்வி. இதுதவிர வாராந்தம் மேலும் மூன்று இடங்களில் படிக்கவும் பயிற்சிக்கும் செல்கிறாள்.
அவை: தமிழ்ப்பள்ளி, நீச்சல் பயிற்சி, பரதநாட்டிய பயிற்சி. அனைத்துக்கும் உற்சாகமாக சென்று வருகிறாள். குடியுரிமை அவுஸ்திரேலியாவில். அதனால் ஆங்கில மொழிக்கல்வி. தாய்மொழி தமிழ்., தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக பெற்றோரின் கட்டாயத்தில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் இயங்கும் தமிழ்ப்பள்ளிக்கு செல்கிறாள்.
இங்கு பிள்ளைகளுக்கு நீச்சலும் தெரிந்திருக்கவேண்டும். அவள் செல்லும் பிரதான பாடசாலையில் விளையாட்டு, தேகப்பயிற்சியுடன் நீந்தவும் கற்றுக்கொடுக்கிறார்கள். இது தவிர வீட்டிலிருந்தும் பிரதி சனிக்கிழமை தோறும் வேறு ஒரு இடத்தில் அவள் தகப்பன், அதுதான் எனது மருமகன் நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச்செல்கிறார்
எனது மகளின் அதாவது எனது பேத்தியின் தாயின் இந்திய சிநேகிதி ஒருத்தியின் மகளும் நடன பயிற்சிக்கு செல்வதைப்பார்த்து எனது பேத்தியும் அங்கு செல்ல விரும்பினாள்.
நடனத்தில் இருக்கும் ஆர்வத்தைக்காட்டிலும் தாயின் சிநேகிதியின் மகளுடன் வார விடுமுறையில் நடனம் ஆடுவதற்கு பேத்திக்கு ஆர்வம் அதிகம்.
இவ்வளவுக்கும் மத்தியில் பிரதி வெள்ளிதோறும் மகள் வீட்டுக்குச்செல்லும்போது எனது மனைவியும் உடன்வருவதால், பேத்தியுடன் கொஞ்சி சிரித்து மகிழ்ந்து அவளுடன் பொழுதை போக்குவோம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் சரியாக எட்டு மணிக்கு பேத்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். எனது மகள், தனது கைத்தொலைபேசியில் Appa என்ற பெயருடன் எனது கைத்தொலைபேசி இலக்கங்களை பதிவுசெய்து வைத்திருக்கிறாள்.
அதனால், பேத்தியால் எளிதில் என்னுடன் தொடர்புகொள்ள முடிகிறது. அவளிடம் ஒரு ஐபேடும் இருக்கிறது. அதனுடன் அவள் பொழுதைக்கழிப்பது தொடர்பாகத்தான், அவளுக்கும் தாய், தகப்பனுக்கும் இடையில் சச்சரவுகளும் வரும்.
நான் அங்கு நிற்கும்போது இச்சச்சரவு வந்தால், எனது செல்லத்தை நாடி பேத்தி உச்சத்திற்குச்செல்வாள். ஒருநாள் ஐபேட் விவகாரத்தினால், முப்பத்திரண்டு வயதான தாய்க்கும் ( மகளுக்கும் ) ஆறுவயதான மகளுக்கும் ( பேத்திக்கும் ) பெரிய வாக்குவாதம் வந்துவிட்டது.
எனது மகள், பேத்தியின் வசமிருந்த ஐபேடை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். பேத்தி அழுது புரண்டாள்.
ஓடிச்சென்று அவளைத்தூக்கி கண்ணீரைத் துடைத்து, தேற்றினேன். அவளை ஆறுதல்படுத்துவதற்காக எனது மகளை ஏசினேன். அதனால் உற்சாகமடைந்த பேத்தி, தாத்தா உங்கட Daughter ஐ Bin இலே போடுங்க என்றாளே பார்க்கலாம், எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். சில நிமிடங்களில் தாய், அவளுக்கு பிடித்தமான சீஸ் துண்டங்களைக்கொடுத்ததும் சமாதானமாகிவிட்டாள்.
நானும் மனைவியும் அங்கு நிற்கும்வேளைகளில் எமக்குள் ஏதும் சச்சரவு வந்தால், இடையில் புகுந்து சமாதான நீதிவான் வேலையும் பார்க்கும் செல்லப்பேத்தி அவள். அவளது மழலைக்குரலை நினைத்து நினைத்து ரசிப்போம்.
தமிழும் ஆங்கிலமும் சரளமாக பேசும் பேத்தி, திடீரென்று ஒருநாள் மாலையில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டாள்.
அந்தநேரம் எனது மகள், தனது வேலை முடிந்து பேத்தியை பாடசாலையால் அழைத்துவந்திருக்கும் வேளை என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.
“ தாத்தா ஒங்களோட அம்மாபேசவேணும். புறவு நான் பேசுவேன்.” என்றாள். பிறகு என்பதைத்தான் அவள் தனது மழலையில் புறவு என்கிறாள். பாருங்க என்பதை பாங்க என்பாள்.
“ அப்பா, உங்கட செல்லப்பேத்திக்கு ஸ்கூலில் ஒரு வீட்டு வேலை கொடுத்திருக்கிறாங்க. அவள் சில கேள்விகள் கேட்பாள். அதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும். உங்கள் பதிலை அவள் தனது கொப்பியில் எழுதுவாள். ஓகே, சரியா….? தாத்தாவுடன் பேசுங்க.”
மகளின் கைத்தொலைபேசி பேத்தியிடம் கைமாறியது.
“ தாத்தா, Some Questions...? “
“ ஓகே செல்லம்… கேளுங்க…”
“ தாத்தா நீங்க உங்கட ஸ்கூலுக்கு எப்படி போனீங்க..? “
“ நடந்து போனேன். “
“ ஓகே. பொறுங்க எழுதிட்டு கேட்கிறன். ஓகே எழுதிட்டன். தாத்தா, உங்கட Favourite விளையாட்டு என்ன..? “
“ கிரிக்கட். “
“ ஓகே. உங்கட வீட்டில் ரிவி இருந்திச்சா…? “
“ இல்லையம்மா. நான் படிக்கும் காலத்தில் எங்கட நாட்டுக்கு ரிவி வரவில்லை. “
“ ஓகே. தாத்தா.. ரீவி இரிந்திச்சா… இல்லையாதான் கேள்வி தாத்தா… ஓகே. “
சரிதான் அவளது கேள்விக்கு மாத்திரம்தான் பதில்சொல்லவேண்டும் என என்னை சுதாரித்துக்கொண்டேன்.
“ ஓகே தாத்தா. தாங்ஸ்.”
“ அவ்வளவுதானா Questions…? “
“ யெஸ் தாத்தா. தேங்ஸ். கமிங் வெள்ளிக்கிழமை ஈவினிங் வாரீங்கதானே…? “
“ ஓ யெஸ் வருவேன். “
“ வரோனும். பிளீஸ். அம்மாவும் அப்பாவும் விசிட்டிங் போறாங்க. நீங்களும் பாட்டியும்தான் என்னோட இருக்கோனும். எனக்கு கதை சொல்லோனும். ஓகே. “ எனச்சொன்னவள், கைத்தொலைபேசியை துண்டிக்கும் முன்னர் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தைகளினால் உருகிப்போனேன்.
“ I miss You Thaatha. “
பேத்திக்கு உறுதிமொழி வழங்கியவாறு அந்த வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கம்போன்று நூற்றி எழுபத்தியைந்து கிலோ மீற்றர் தூரம் ரயிலில் பயணித்து மகள் வசிக்கும் ஊருக்குப்போனோம்.
மகள் ரயில் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல காரில் வந்திருந்தாள். காரின் பின் ஆசனத்தில் குழந்தைகளுக்கான ஆசனத்தில் பேத்தி இருந்தாள்.
என்னையும் மனைவியையும் கண்டதும் அவளது முகத்தில் குதூகலம் மலர்ந்தது. ரயில் பயணம் எப்படி? என்று மனைவியைப்பார்த்து வழக்கமான கேள்விகளுடன் உரையாடலைத் தொடங்கினாள்.
மனைவி அவள் அருகில் அமர்ந்து தனது ஆசனத்தின் பெல்டை பிணைத்தாள். முன் ஆசனத்தில் மகளின் அருகிலிருந்த நான் சீட் பெல்டை அணிய மறந்துவிட்டேன். மகளின் காரில் சீட்பெல்ட் அணியாததற்கான எச்சரிக்கை சமிக்ஞை ஒலி எழுந்தது.
“ தாத்தா சீட் பெல்டை போடுங்க. இல்லாட்டி, புறவு அம்மாதான் ஃபைன் கட்டோனும் தாத்தா. “
“ வெரி சொறி அம்மா. போடுறன். “ சீட்பெல்டை அணிந்ததும் மகள் காரை எடுத்தாள்.
“ வெரி குட் தாத்தா.”
அன்று மாலை மயங்கிவரும் வேளையில் தாயும் தகப்பனும் வெளியே புறப்பட்டுச்சென்றதும், தொலைக்காட்சியில் நான் மாலை நேரச்செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவி அவளுக்கு சிற்றுண்டி செய்து கொடுத்தாள்.
அதனை ஒரு சிறிய தட்டத்தில் எடுத்துக்கொண்டு வந்த பேத்தி என்னருகில் அமர்ந்தாள். அவளது மற்றும் ஒரு கரத்தில் அவளது பாடசாலை பயிற்சிக்கொப்பி. தனது கைவண்ணத்தில் ஒரு தாத்தாவையும் பேத்தியையும் அதன் ஒருபக்கத்தில் வரைந்திருந்தாள்.
அதன் அருகில் என்னுடன் நடத்திய உரையாடலை கேள்வி – பதிலாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள். ஆசிரியை Very good என்று எழுதி சான்றிதழ் கொடுத்தது பேத்திக்கு பெருமிதம்.
அவளது தலையை தடவி, உச்சிமோந்தேன். தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
“ தாத்தா, உங்கட ஶ்ரீலங்காவில் ரீவி இல்லையா…? “
“ நான் படிக்கிறபோது இல்லையம்மா.”
“ ஒங்கட்ட காரும் இல்லையா…? “
“ இல்லையம்மா. “
“ ஶ்ரீலங்காவில் காரும் இல்லையா..? “
“ இருந்திச்சி. எங்களிட்டத்தான் இல்லை. “
“ ஸ்கூலுக்கு நடந்தாபோனீங்க….? உங்கட கால் நோவுச்சுதா…தாத்தா..? “
சடாரென ஆசனத்திலிருந்து இறங்கி, எனது கால்களைத் தடவி “ பாவம் தாத்தா” என்றாள்.
எனது கண்கள் கலங்கிவிட்டன.
சுதாரித்துக்கொண்டு அவளைத்தூக்கி மடியில் அமர்த்தி கொஞ்சினேன்.
“ நானும் நடந்துதான் போனேன். பாட்டியும் உங்கட அம்மாவும் அப்பாவும் ஶ்ரீலங்காவில் நடந்துதான் ஸ்கூல் போனாங்க. நடக்கிறது நல்ல Exercise தானே செல்லம். “
“ தாத்தா, அங்கே நீங்க ஸ்வுமிங் கிளாஸ் போகல்லையா..? “
“ இல்லையம்மா. “
“ ஏன்…? “
“ அங்கே, இங்க இருக்கிறது போல நான் படிக்கும்போது இருக்கவில்லை அதுதான். “
“ உங்களுக்கு எது புடிக்கும் ஶ்ரீலங்காவா..? அவுஸ்திரேலியாவா…? “
“ எனக்கு இரண்டும் பிடிக்கும். எங்கட Mother Land. பிடிக்கும்தானே…? “
“ தாத்தா, எனக்கு Mother Land அவுஸ்திரேலியா. ஒங்களுக்கு ஶ்ரீலங்கா. என்னோட டான்ஸிங் கிளாஸ் வரும் தேஷ்னாட அப்பா அம்மாவுக்கு பாக்கிஸ்தான் . ஸ்வுமிங் கிளாஸ் வரும் மெடியின் அப்பா அம்மாவுக்கு இத்தலி. என்னோட கிளாஸ்ல படிக்கும் அகமட்டின் அப்பா அம்மாவுக்கு லெபனான். தமிழ் ஸ்கூலுக்கு வரும் சரண்யாட அப்பா அம்மாவுக்கு இந்தியா. வெறி நைஸ் என்ன தாத்தா…?! “
எல்லா நாட்டினிரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழும் பல்தேசிய கலாசார நாட்டில் புகலிடம் பெற்றிருக்கும் எனக்கு, இரண்டு மொழிகள் பேசும் இனங்கள் வாழும் தாய்நாட்டில் ஏன் புரிந்துணர்வு இல்லாமல்போனது என்ற ஏக்கம் வந்தது.
சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்ததும், வெறும் தட்டத்தை எனக்கு காண்பித்த பேத்தி, ” தாத்தா Finished.” என்றாள்.
எங்கள் தாயகத்தில் முடிவுக்கு வருவதற்கு இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|