பதிவுகள் இணைய இதழ், திண்ணை இணைய இதழ் போன்றவை ஒரு காலகட்டத்தில் (முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் தோன்றியிராத காலத்தில், வலைப்பூக்கள் உருவாகாத காலத்தில்) உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பற்றும் முக்கிய களங்களாகவிருந்தன. அக்காலகட்டத்தில் இலக்கிய ஆளுமைகள் பலரின் தொடர்புகள் ஏற்பட்டன. மொன்ரியால் மைக்கல் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் ஜீவன் கந்தையா, சதுக்கபூதம் என்னும் புனைபெயர்களில் வந்து விவாதங்களில் பங்கு பற்றியிருக்கின்றார். பதிவுகள் இதழில் பல படைப்புகளை எழுதியுள்ளார். 'ஏழாவது சொர்க்கம்' என்றொரு நாவல் எழுதியுள்ளார்.
தற்போது மொன்ரியாலில் வயோதிபர்களுக்கான முதியோர் இல்லமொன்றில் தலைமைச் சமையற்காரராக (Chef)வேலை பார்க்கின்றார். கொரோனாவின் தாக்கத்தால் உலகே அலறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் இவரைப்போன்ற முன்னிலைப்பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது. முதலில் அதற்காக இவர்களுக்கு எம் நன்றியைத்தெரிவிப்போம். அவர் தற்போது தனது கொரோனா அனுபவங்களைச் சிறு சிறு முகநூற் குறிப்புகளாகப் பதிவு செய்து வருகின்றார். அவை வெறு ம் குறிப்புகள் மட்டுமல்ல. இலக்கியத்தரமான குறிப்புகளும் கூட. அக்குறிப்புகள் கொரொனா மானுடர் மேல் ஏற்படுத்தும் உளவியல்ரீதியிலான தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதால் மேலும் முக்கியத்துவம் மிக்கவையாகவுள்ளன. அவற்றில் அண்மையில் அவர் எழுதிய குறிப்புகளை இங்கு தொகுத்துத் தருகின்றேன். அவை ஒரு குறிப்பிட்ட கால மானுட அனுபவங்களாக இன்னுமொரு காலத்தில் விளங்கும் என்பதாலும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
உயில்(1): பெரு மழை.
இந்த இடர்க்கால வாழ்க்கையை நான் எழுத விரும்புகிறேன் . நான் வேலை செய்யும் geriatric centerஇல் உண்மையான இடர் வெளிவரமுடியாது. ஆங்கு, 99வீதமாமான வயோதிபகர்கள் யூதர்கள். நிர்வாகம் ஏதோவொரு காரணத்திற்காக எல்லா உண்மைகளையும் மறைக்கிறார்கள். இன்று நான் பகிர்ந்தளித்த 564 சாப்பாடுகளுக்குள், முப்பத்தியாறு சாப்பாடுகள் தனிமைப்படுத்தியவை. அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதாக நம்புகிறேன்.
பதினாறுபேர் இறப்புக்கு அருகே தத்தளிப்பதாக அறிந்தேன். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சாப்பாடு, பிளாஸ்டிக் தட்டுக்களிலானது.
அந்தத்தட்டுக்கள் காலியாகத் திரும்பி வந்தபோதுதான், தொற்றுநோயின் அபாயகரத்தை அறிந்தேன்.
என்னுடைய சக வேலையாள், பாய்ந்து எனை இடைமறித்தான். “மைக்! அவற்றைத் தொடாதே” என்றான்.
“நானும் நீயும் இறந்துபோவது சரியான தெரிவல்லவே, இவை கொரானாவினைக் காவி வருகின்றன”
இன்று, மாமழை பொழிகின்றது. மழையில் பறக்கும் கிருமிகள் பல மீட்டர்கள் பரவும் எனக்கூறினார்கள்.
என்னுடைய செம்பரத்தை மரத்தை மழையில் குளிப்பதற்காக வெளியில் எடுத்து வைத்தேன்.
என்னுடைய இறப்புக்காப்புறுதியின் நகலை என் பிள்ளைகளுக்கு காட்டுவதற்காக எடுத்து வெளியே வைத்தபோது, கிழக்கிலிருந்து பெருமழை கொட்டுகிறது....
உயில்(2)
ஊரடங்கு வேளையில் செய்வதற்கு எனக்கு வேறு வேலையிருக்கவில்லை. பிள்ளைகளின் உடுதுணியைத் தோய்த்தேன். பழைய நண்பர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். எல்லோருமே குறை சொன்னார்கள். பிறிதொரு வாழ்க்கை பற்றி யாருக்குமே நம்பிக்கை இல்லை.
ஏதாவது புத்தகம் படிக்கலாம் என யோசித்தபோது, இலக்கியம் சற்றுச் சறுக்கிக்கொண்டது. நம்பிக்கை தரும்படிக்கு இப்போது யாதொரு படைப்புங்கிடையாது.
சாதாரண சம்பவங்களை ஒரு சிறுகதையாக எழுதுகிறார்கள்... சம்பவங்கள் சிறுகதையாகினால், தினத்தந்தி படுத்துவிடும்.
என்னுடைய நண்பன் ஒருவன், பயிற்சியின்போது துப்பாக்கிச்சூடு பட்டவன். அவனோடு பேசியபோது,வாழ்க்கையின் போதாமையைப் புரிந்துகொண்டேன். அவனது இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருக்கிறார்கள்... அவனிடம், இறைச்சி இல்லை. மரக்கறி இல்லை. எப்படி அவர்களுக்கு உணவு கொடுப்பது என்பது அவனுக்குத்தெரியவில்லை......?
பாற்கஞ்சி வைப்பது பற்றி அவனுக்குச் சொல்லிக்கொடுத்தபின், எங்களது குடும்பத்திற்கான பாற்கஞ்சியை நாலு கோப்பைகளில் பரப்பினேன்....
உயில் (3)
நான் வேலை செய்வது ,மொன்றியலில் உள்ள வலு பழமையான வயோதிபர் மடம். யூதர்களுக்கானது. 1908 இல் அவர்கள் தமது வயோதிபர்களை ஓரங்கட்ட ஏற்படுத்திய ஒரு அமைப்பு.
இன்று, நவீனமயமாகிய ஒரு ஸ்தாபனம்.
வழமைபோல நான் வேலையை ஆரம்பித்தபோது, என்னுடைய மேற்பார்வையாளர் என்னிடம் வந்து, ஆறாவது மாடியில் கொரானா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நீ அங்கு போகும்போது, தயவுசெய்து, ஒவ்வொரு தடவையும் கையுறைகளை மாற்று என்றார். நான், உணவுவண்டியை ஆறாவது மாடிக்கு இழுத்துச்சென்றேன்.
அங்கு, உணவு வண்டியைப் பெறுவதற்காக யாருமே வரவில்லை. வண்டிகளை அதற்கான இடத்தில் தள்ளிவிட்டு நான் திரும்பிவிட்டேன்.
வேலை முடித்து வெளிவரும்போது, எனக்காக தேவி காரில் காத்திருந்தாள். வழமைபோல அவளுக்கருகாக அமரவில்லை. தேவதைகளுக்கு ஒரு மீட்டர் இடைவெளி போதும். பின்பக்கமாக பயணிகள் இருக்கையில் அமர்ந்தேன்.
வீடு திரும்பியபோதுதான் கவனித்தேன். என்னுடைய தோள்பையை எங்கோ தவறவிட்டுவிட்டேன். கண்ணாடி, அடையாள அட்டை, கையுறைகள், முகக்கவசங்கள், காய்ச்சல் குளிசைகள், anti bacterial cream, இரண்டொரு கவிதைகள், ஒரு சிறுகதைக்கான புளுகுகள், எல்லாமே தொலைந்துபோய்விட்டது....
தொலைய முடியாதது என்னுடைய கனவும் மனசும். அதுபோதும்
உயில் (4)
பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா தெரியாது. கனவுகளில் எல்லோருக்குமே பேய்வரும். துரத்தும், அணைக்கும், சிரிக்கும், சிலவேளைகளில் பயமுறுத்தவுங்கூடும்.
பேய்கள் கவிதை எழுதுவதை நான் அறியவில்லை.
நேற்று, நான் வேலை முடித்து தேவியின் காருக்குள் ஏறும்போது, என் தோள்ப்பையைக் கழற்றி அருகில் வைத்ததைக் கண்டிருக்கிறாள். தோளில் இருந்து கழற்றி வைத்ததை நானும் அறிவேன்.
பிறகு, பை காணாமல் போனதை நேற்று நான் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
இன்று, வேலைத்தலத்தில் அடையாள அட்டை இல்லாது என்னால் உள்நுழைய முடியவில்லை.
பாதுகாப்பு அதிகாரி, என் முகாமையாளரைத் தொலைபேசியில் அழைத்து உறுதிசெய்தபிறகு என்னை உள்ளே விட்டார்.
நிலக்கீழ் அறையில் உள்ள என் lockerஐத் திறந்தபோது, என்னுடைய தோள்ப்பை உள்ளே தொங்கிக்கொண்டிருக்கிறது..
உயில்(5)
தமிழ்,சிங்களப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
எழுதுவதற்கு நிறைய விடயமுண்டு என்றாலும், குடும்பத்தோடு நீங்கள் மகிழ்வாக இருக்கவேண்டும் என்பதையே விரும்புகிறேன். ஒரு முத்தங்கூட உங்களால் கொடுக்க முடியாது என்பதுவும் எனக்குத்தெரியும். பிள்ளைகள் வேறு வீட்டில் கோபத்தோடு அலைகிறார்கள்.... அவர்களின் முன்னால் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது... கொரானாவுக்காக அல்ல என்றாலும், இரண்டு மீட்டர் இடைவெளி விட்டே உங்கள் துணையோடு உரையாடுங்கள்.
கொரானா வைரசு இரண்டு மீட்டர் மட்டுமே காற்றில் பயணிக்கும் என விஞ்ஞானிகள் கூறினர்.... ஆக.. நீங்கள் சமைலறைக்கும், வரவேற்பறைக்கும் இடையேயுள்ள பகுதியில் காற்றில் முத்தங்கள் அனுப்பலாம்.
இரண்டு பேருமே தலா ஒரு முத்தத்தைக் காற்றில் எடுத்து உதட்டில் ஒட்டிக்கொண்டபின், சாந்தி அடையலாம்.
என்னுடைய பெண் நண்பிகளுக்கு எல்லாமே தெரியும். ஆண் கிழடுகளுக்கு மட்டுமே புதிதாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது..
Poor guys....!
உயில் (6)
வெடிக்கக் காத்திருக்கும் கொப்புளங்கள் போல, மனுஷமனம் வேதனையின் உச்சத்தில் இருக்கிறது. நேற்று, தேவியின் காருக்கு பெற்றோல் நிரப்பச்சென்றபோது, social distanceஐப் பேணிய நான் படு தூசணத்தால் ஏசப்பட்டேன். முன்னால் நின்றவர் வெளியேறும் முன்னரே காசாளர் எனை அழைத்தபோது நான் மறுத்தேன். நான் வரவே முடியாது என்றபோது, அவர் பிரெஞ்சில் என் அம்மாவின் வாழ்வை ஒரு விபச்சாரியாகச் சொன்னார். ஏறத்தாள 25 வயதான காசாளர் என நினைக்கிறேன். கொரோனா இங்கு இல்லை முட்டாளே எனப்பேசிய இளைஞனுக்கு எந்தவிதமான காப்பு நடவடிக்கையும் இல்லை.
வாழ்க்கை ஒரு அந்தர விளிம்பில் இருக்கிறது.
நாளைய வாழ்வு பற்றி எனக்கும்,உனக்கும் தெரியாது தோழர்!
சாதாரண வீதியில் தேவி காரைச்செலுத்தும்போது, பலதடவை ஹோர்ண் அடிக்க முற்பட்டாள்.
வேண்டாம் எனச் சொல்லிக்கொண்டிருந்த எனக்கு, அவளது மனநிலை புரிந்துவிட்டது.
அபாய அறிவிவிப்பு இல்லாத வாழ்வு இனி எமக்கில்லை....
இறுதி நம்பிக்கை
“மோசேஸ்.. மோசேஸ்” எனக்கூக்குரலெழுப்புவதைக் கேட்டேன். அந்தகாரமான கூக்குரல்! ஆண்குரல்!!
யாராவது மோசேஸ் எனப்பெயருள்ளவர் உள்ளிருக்கலாம் என நினைத்துக்கொண்டு, நோயாளிகளுக்கான சாப்பாட்டை, கொரானா நோயாளிகளுக்கான வார்ட்டுக்கு முன்பாக அடுக்கினேன்.
“அர்மாண்டோ! அர்மாண்டோ!! நம்பிக்கையைத் தளரவிடாதே! இதோ உனக்கான சாப்பாடு வந்துவிட்டது, ஆழ மூச்சிழு” என யாரோவொருவர் உறுதி அளித்ததையும் கேட்டேன்.
பதினெட்டு சாப்பாடுகளை அடுக்கி வைத்தபின், பயத்தில் வியர்வை வழிய நான் வெளியேறியபோது, நாளைக்கான சாப்பாட்டுத்தொகை குறையும் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்தது.
மனுஷனுடைய வாழ்வுக்கு பிரியாவிடை சொல்வதற்கு கடவுள் வருவதில்லை .நாம் மட்டுமே அருகிலிருப்போம்.
அம்மை
நேற்று, நான் கிடுகுவேலிப்பொட்டுக்குள்ளால் ஒளிந்திருந்து முகநூலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கள் அம்மாவுக்கு என் நண்பர்கள் நன்றாகவே நன்றி செலுத்தியிருந்தார்கள். என்னவள் மேலே சென்று விட்டாள். அவளைக்கவனிப்பதற்காக நான் இரண்டு தடவை பருத்தித்துறை சென்றிருந்தேன். நடமாட்டம் அற்ற போதும் நாம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சாவதற்கு தயாராக இருக்கவில்லை. நானோ வழி அனுப்புவதற்காக சென்றிருந்தேன்.
எனக்கு ஒருதடவை அம்மாள் வருத்தம் வந்தபோது, உடன் கள்ளுக்குள் சிறுவெங்காயம் வெட்டிப்போட்டு கள்ளுக்குடிக்கத்தந்ததை நான் அவளுக்கு முறையிட்டேன்.
அறக்கீரை, முளைக்கீரை அவித்துச் சோறூட்டியிருக்கிறேன். அதை மறந்துவிட்டு, போதையை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருக்கிறாயே மகனே என்றார்!
அன்பு என்பதே ஒரு போதைதான். முடிவே இல்லாத அன்புதான் எல்லோருடைய அம்மாவும். St.Remyயின் மூடியைத் திறந்தபின், இன்று குடிக்கத்தோன்றவில்லை.
கடந்த இரண்டு வாரங்களாக, கொரானா நோயாளிகளிடையே வேலை செய்திருந்தேன். உள்ளே செல்லவில்லை. கரையோரமாக படகு தள்ளுவது என நினையுங்களேன். இன்று எனக்கான சம்பளத்தில் 15. 00டொலர்களை Covid 19 அபாயகரப்பணிக்காக அளித்து, அதில் 5:75 டொலர்களை வருமானவரிக்காக கழித்திருந்தார்கள்.
சந்தோஷம் தரும் சவாரி செய்வோம் சலோ சலோ...
Cargo
சற்று நாடகத்தனமானதாக நீங்கள் நினைப்பீர்கள்... இன்று நானும் தேவியும் Jean Talon Hospitalஐக் கடக்கும்போது, மிகப்பெரிய வாகனமொன்றில் பிணங்களை ஏற்றுவதைக் கண்டோம். பாதையை இரண்டு புறமும் பொலிஸ்வண்டி தடைசெய்துவைத்திருந்தது.
பிணங்கள் என்றுகூட எமக்குத்தெரியாது. ஆனால், பிணங்கள்தான். இரகசியமாக உருளைக்கிழங்குப் பொதிகளை ஏற்ற வேண்டிய தேவை கிடையாது அல்லவா? ***
என்னுடைய நண்பரொருவர் மீன் சாப்பிடுவதை விட்டுவிட்டார். மீனும், உறைநிலையிலுள்ள பிரேதம் என்றார்.
நாடகத்தனமான உண்மைதான் என்றாலும் பிரேதங்களை நான் விரும்புகிறேன். அவை, உறவினர்கள் அறியாமலேயே, எரிந்துவிடக்கூடும்.
எனக்கு நன்கு பரிச்சயமான மூன்றுபேர் இன்று மேலே சென்றுவிட்டனர். கடந்தவாரம் எனைச் சந்தித்தபோது, என்னுடைய நரைத்தலையை பகடி பண்ணிய திருமதி பிளாக்ஸ் இறந்துபோய்விட்டார். நான், சாப்பாட்டு வண்டிலைத் தள்ளிக்கொண்டு போகும்போது, ஒருவர் ஓயாது நன்றி சொல்லுவார். அவரும் போய்விட்டார். இன்னொரு முதியவளோடு எப்போதுமே எனக்கு சண்டை. நான் ஒரு கள்ளன் என்பதாக அவரது மூளை பதிந்துவிட்டது. இன்று, சாப்பாட்டு வண்டிலைத் தள்ளிவிட்டு, அவரைத்தேடினேன். காணவில்லை. எதிராளிகளை எப்போதுமே மனம் இழப்பதில்லை அல்லவா?
உள்ளே நுழைந்து தேடினேன்.
காணவில்லை.
தாதியொருவரை இடைமறித்து வினாவினேன். நேற்றிரவு, நித்திரையில் அவர் வெளியேறிப்போய்விட்டார்
விடைபெறுவதற்கு,வாழ்க்கை இப்படியொரு அவசரவாசலைக் காணக்கூடாது.....
இன்று, எனக்கு மணம் உணரவில்லை. இரண்டு நிமிடங்கள் மூச்சை உள்ளிழுத்து அடக்கிய பின்னும் இருமல் வரவில்லை. சரி! பெரிதாக ஒரு வருத்தமும் இல்லை என்பதால் சந்தோசமாக இருந்தது என்றாலும், மூக்கு, எப்படி வேலைநிறுத்தம் செய்தது என அறிவதற்காகத் தேவியைக் கூப்பிட்டேன்.
“தேவி எனக்கு ஒன்றுமே மணக்கவில்லையேடி” என்றேன்.
“மைக்! இன்றைக்கு நான் சமைக்கவே இல்லை, இருக்கிறதை சாப்பிடு” என்றாள்.
கொரோனாவை நம்பவே கூடாது.
அதைப்போல, புத்தக தினத்தையுந்தான்
கனடாவில் கொரானாத் தொற்று மொன்றியலில்தான் வீரியமாக இருக்கிறது என அரசாங்க அறிக்கைகள் சொல்கின்றன...
தினமும், இலையுதிர்காலத்தில் இலையுதிர்வதுபோல மரணம் நிகழ்கிறது.
சமூக இடைவெளியை நமது கியூபெக் மக்களிடம் எதிர்பார்க்க முடியாது இருக்கிறது. நேற்று, என்னுடைய சம்பளம் வந்திருக்குமா எனப் பார்ப்பதற்காக வங்கி மெஷினுக்கு சென்றேன். மூன்று மெஷின்களில், நடுவில் உள்ளதை social distanceக்காக தடை செய்திருக்கிறார்கள். வரிசையில் நின்ற பிரெஞ்சுக்காரர் tabernac எனக் கத்தியபடி தடையை அகற்றிவிட்டு அருகில் வந்தார். அவருக்கு என்ன அவசரமோ எனக்குத் தெரியாது. இடது பக்கமாக நின்ற நான் விட்டு விடுதலை ஆகினேன்.
பலசரக்குக் கடைகளில்கூட இவர்களால் பொறுமையாக வரிசையில் நிற்க முடியவில்லை. என்ன காரணம் என எனக்கு விளங்கவேயில்லை.
தடைகளை உடைப்பது நல்ல காரியந்தான். ஆனால் இது, ஆரோக்கியத்தடை என்பதைக்கூட இந்த மொக்குகள் புரிந்துகொள்ளவில்லை. tabernac.
கண்ணீரோடு ஒரு விண்ணப்பம்
ஏப்ரல் காலை. குளிரோடு நான் துயிலெழும்பியபோது, எனது காலடியில் அவன் காத்திருந்தான்.
அப்பா! எப்போது நீ வேலையை விடப்போகிறாய்?
விடமுடியாதே மகனே!
ரொரன்டோவில், மூன்று பிள்ளைகளை தனிக்கவிட்டு தாயும் தகப்பனும் இறந்துபோய்விட்டார்கள் தெரியுமா என்றான். தெரியும். என்ன செய்வது? வாழ்க்கை இப்படித்தானே மகன் என ஆறுதல் படுத்தினேன்.
“நீ இறந்து போனால் என் அம்மா தாமதிக்கமாட்டாள். இந்தச் stupid sisterரோடு நான் என்ன செய்வது?”
அவனது கண்ணீரை நான் பார்த்தேன். பொல பொலவென கன்னத்தில் வீழ்ந்தது.
அள்ளி அணைக்க முடியாத ஆகிருதி!
அனுமார்!!
தேவியைக் கூப்பிட்டு ஆறுதல் படுத்தச் சொன்னேன்.
இருபது வயதான ஆண்பிள்ளையை அழுவதற்கிசைவாக வளர்த்தது என் தப்புத்தான்....
வலை
பயப்பட வேண்டாம். இது நான்தான். ஆறாவது மாடியில் பதினொரு வயோதிபர்கள் கொரோனாத் தொற்று உள்ளவர்கள். இன்று அவர்களுக்கு உணவு கொண்டுபோனேன். என்ன செய்வது? வருத்தம் வந்தவர்களும் பசியாறவே வேண்டும். நான் மீட்பராக எனை நினைக்கவில்லை. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளோடுதான் உள் நுழைந்தேன்.
உயிர்அல்லது மசிர்.....
மிகக் கவனமாக இருங்கள். தொற்று ஏற்படுவதின் மூலத்தை யாராலுமே அறிய முடியவில்லை. வீட்டுக்குள் இருக்கும் நபர்களுக்குக்கூட கொரானா பரவியிருக்கிறது. இன்று என்னுடைய உறவுக்காரப் பெண்பிள்ளைக்கும், நண்பரொருவருக்கும் பரவிவிட்டது. இரண்டுபேருமே மூன்று வாரங்களாக வீட்டில் இருப்பவர்கள்.....
“வருமுன் கா
துலக்க முடியாத தொற்று இது. கவனம் மக்களே!
•<• •Prev• | •Next• •>• |
---|