வவுனியாவில், பத்து வருசங்களிற்கு மேலே , பணி புரிந்ததில் பார்வதி ஆசிரியைக்கு அலுப்பு ஏற்பட்டிருருந்தது .'ஒரு மாறுதல் தேவை’ என நினைத்தார். கல்விக்கந்தோரில் இவரின் அப்பாவிற்கு தெரிந்தவரான மகாலிங்கம் , இராசையா போன்ற அதிகாரிகள் இருந்தார்கள். மகாவித்தியாலயதிற்கு அண்மித்தே கல்விக் கந்தோரும் இருந்தது, அதிபரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நேரிலே சென்று விண்ணப்பத்தை கையளித்தார். யாழ்ப்பாணம் தான் விருப்பப் பிரதேசமாக இருந்தது. இங்கே வருவதற்கு முதல் அங்கே தான்...சிறு வயதில் பணியைத் தொடங்கி இருந்தவர். கல்யாணம் முடித்த பிறகு கொஞ்சம் தள்ளி இருந்தால்... என்ன, என்று வவுனியாவைத் தெரிய ...அம்மாவிற்கு என்னம் காரணங்கள் ? அவருடைய மகன் திலீபனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்று, தெரியிற வயசுமில்லை ,பன்னிரெண்டு, பதின்மூன்று என்ற..பிஞ்சுப்பருவம் ! ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விருட்ச விருப்பம் ? அதிபரிடம் ஏற்கனவே கதைத்திருந்தார். எப்பவுமே உடம்பை ஒரு வித ஆட்டத்துடன் கதைக்கிற சத்குருநாதன், அரசியல் மேடைகளில் பிரச்சார பீரங்கியாக ...போக வேண்டியவர், அதிபராகி அரசியலில் சம்பாதிக்க முடியாத ‘நல்லவர்’ என்ற பெயரை ஆசிரியர் ,மாணவர் மத்தியில் சம்பாதித்து விட்டிருக்கிறார். நிச்சியமாக அவர் கதைப்புத்தகம் வாசிக்கிற ஒரு இலக்கியவாதியாகவும் இருக்கவே வேண்டும் ! ஒருவேளை , மனுசர் ஆங்கிலத்தில் படிக்கிறாரோ ?. கனகாலமாக அதிபராக வீற்றிருக்கிறார் . புரிந்து கொள்ளக் கூடியவர், வயதில் பெரியவர் ."தங்கச்சி, உதவி ஏதாவது செய்ய வேண்டுமா? " எனக் கேட்டார். " இல்லை சேர், தெரிந்தவர்கள் இருவர் அங்கே இருக்கிறார்கள் " என்று பள்ளிக்கூட நேரத்தில் அனுமதிப் பெற்றுச் சென்றார் .
கந்தோரில் " நகரத்தை விலத்திய கிராமம் என்றால் பரவாய்யில்லையா ? " மகாலிங்கம் கேட்டார் . " எனக்கு கிராமம் பற்றித் தெரியாது . அது மிகவும் நல்லது சேர் " என்றார் ஓர் ஆவலுடன் . இந்து மகளிர் கல்லூரியில் படிக்கிற காலத்தில் கிராமங்களிலிருந்து படிக்க வாறவர்கள் வகுப்பில் ஓரிருவர் இருந்தார்கள் . சினேகிதிகளான அவர்களின் கிராமங்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என வெகு நாளாக கிடந்த ஆசை . நிறை வேற வேயில்லை . இப்ப , சந்தர்ப்பம் கிடைக்கிறது என உள்ளுக்குள் சந்தோசமாகவிருந்தது . அலைகடலும் ஓய்யலாம் , இந்த ஆசைகள் எந்த காலத்திலும் மறக்கப் படுவதில்லையே !
" மிஸ்டர் இராசையா , இவருக்கு... அராலிக்கு மாற்றலுக்கு தயார் படுத்தும் " என்று கூறி விட்டு , உங்கட இடத்திலிருந்து ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிற கடலோரக் கிராமம் தான் . உங்களிற்கு நிச்சியமாகப் பிடிக்கும் " என்றார் . அம்மா , சகோதரங்க ள் எப்படி இருக்கிறார்கள் ? ” என குடும்ம உறவுகளைப் பற்றி விசாரிக்க பியோன் அவருக்கும் சேர்த்து ‘ டீ ‘ கொண்டு வந்தான் . இராசையா மகாலிங்கத்துக்கு ஏதோ விதத்தில் உறவினர் கூட . இவர்களின் குடும்ப நண்பர்கள் வட்டத்தில் அவரும் இருப்பவர்கள் தான் மாற்றல் கடிதத்தைக் கொடுக்கிற போது நட்பாகச் சிரித்தார் . வன்னிக் காடாகவிருந்தாலும் . இப்படி தெரிந்தவர் கண்காணிப்பிலே இருந்தவர்கள். இல்லா விட்டால் சிறு வயதிலே குழந்தைப் பிள்ளைகளுடன் குருமண்காட்டிலே கால் வைத்திருப்பாரா ? பிறகு , கடைசித் தங்கச்சி பிறந்ததும் வவுனியா ஆஸ்பத்திரியிலே தான் . அப்பொழுது மயில்வாகனம் , இராமலிங்கம் … சக ஆசிரியைகள் எல்லோரும் கூட பக்கத்திலே இருந்தார்கள் . இராமலிங்கம், பாடசாலைக்கு இரண்டு மைல் தூரம் நடந்து போற வழியில் இடை நடுவில் இருப்பவர். மயில் , இவருடைய மன்னார் வீதியில் இன்னும் தொலைவிற்குப் போக வேண்டும் . அவர் பேருந்திலே வருகிறவர் . பேருந்தும் புகையிரத நிலைய வீதியால் போவதில்லை. எப்போதும் சுற்று வட்டத்திலே போகிறது . குறுக்கு வீதியான இந்த வீதியில் சென்றோம் என்றால் மைல் கொஞ்சம் குறைவாகிறது . குருமண்காடு வரையில் இருப்பவர்கள் எல்லோரும் டவுணுக்கோ பாடசாலைக்கோ பொடி நடையில் தான் போகிறார்கள் .
மன்னார் வீதியில் குருமண்காட்டுக்கு பிறகு வாறவர்களிற்கு பேருந்தை விட்டால் வேற வழி இல்லை . மயில் வீட்டாரிடம் ‘எ.40 ‘ கார் ஒன்றும் இருக்கிறது . தேவைக்கு மட்டுமே பாவிப்பார்கள் . டவுணிலே அலுவல் இருந்தால் மட்டும் கார் காலையிலே பயணமாகி அவரையும் பள்ளிக்கூடத்தில் இறக்கி விடும் . அவர் பிள்ளைகள் அங்கே வந்து படித்ததாகத் தெரியவில்லை . அவர்கள் இடத்திற்கு கிட்டவிருந்த அல்லது மன்னாரில் படித்திருக்கலாம் . வவுனியாவில், கமம் செய்பவர்களே அதிகம் . இவரிடமும் அதிக காணிகள் இருக்கின்றன .
பார்வதி வீட்டாருக்கு கமம் செய்த அனுபவம் துப்பரவாக இல்லை . அங்கே மக்களிற்கு சேவை செய்து கொண்டிருந்த புவனேந்திரனின் அம்மாவும் ஓர் இளைப்பாரிய ஆசிரியை தான் . முதியவரான அவரிடம் புத்திமதிகள் கேட்க வார வழியில் இருக்கிற அவரிடமும் பார்வதி ரீச்சர் அடிக்கடிச் செல்பவர் . " காட்டை வெட்டி காணியாக்குங்கள் " என இவரிடம் அவர் கேட்டு பார்த்திருக்கிறார் . " வெட்டுற ஆட்களை எல்லாம் நான் பிடித்து வாறேன் ரீச்சர் " என்பார் . " விவசாயம் செய்யத் தெரிந்திரு க்க வேண்டும் !, வேண்டாம் , தம்பி “ என மறுத்து விடுவார். இப்ப , தலையில் நரைகள் கணிசமாகி விட்டிருக்கின்றன . ' இங்கே போதும் என்றாகிப் போய் திரும்பிப் போவோம் ' என முடிவெடுத்த போது , அவர் ஆசைப்படி கிராமமே வருகிறது . இங்கே வந்த பிறகு பழகி விட்டவர்களையும் கஸ்டப்பட்டு தான் பிரிய வேண்டியிருக்கிறது . கடைக் கொப்பிகளின் கணக்குக்களை தீர்ப்பது, , ‘ அடவு ’ வைத்தைவைகளை மீட்பது என வும் வேறு அலுவல்கள் இருந்தன .
அடவு பிடித்தவரிற்கும் அம்மா மேல் வாஞ்ஸை இருந்தது . கொஞ்ச வட்டியே அறவிட்டவர் . அம்மாவும், அம்மம்மா வீட்டிலே இருந்தும் கொஞ்சம் பணத்தை தபால் சேவை மூலமாகப் பெற்றும் எல்லாவற்றையும் தீர்த்து விட்டும் யாழ்ப்பாணத்திற்கு தங்கச்சிமாருடன் முதலேயே ரயில் ஏறி விட்டார் . அராலிப் பாடசாலை , அப்ப " கணேசன் மகாவித்தியாலயம் “ என்ற போர்ட்டுடனே இருந்தது . பேருந்தில் , போய் வரவும் தொடங்கி விட்டிருந்தார் . தங்கச்சிமார் ஆச்சி வீட்டிலே இருந்தார்கள் . திலிபனும் அப்பாவும் வவுனியாவில் இருந்தார்கள் . பள்ளிக்கூடம் போறதெல்லாம் நின்று விட்டாயிற்று . வீட்டை ஒதுக்கி சாமான்களை கட்டி வைக்கிற வேலைகள் . பக்கத்து வீட்டு நண்பன் பபாவும் பள்ளிகூடம் போகாமல் அவர்களி டம் வந்து கூடமாட உதவி செய்து கொண்டிருந்தான் . இருவரும் கெட்டபோல்கள் வைத்திருந்தார்கள் . பொழுது போகவில்லையோ... வீட்டு வளவு வேலியில் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிற ஓணான்கள் , வேலிமரங்களில் கீச்சிடும் மஞ்சள் குருவிகள் எல்லாத்தையும் கெட்டபோலால் அடித்து விரட்டிக் கொண்டிருப்பார்கள் . பபாட ‘ இலக்கு ‘ தான் தவறாது . திலிபன் வடிவேல் கேஸு . ஓணான்களிற்கே அதிகம் அடிகள் விழுந்தவை . .முள்முருக்கை இலையிலே ‘ பீப்பி ‘ செய்தும் ஊதுவார்கள் . பொன் வண்டு பிடித்து காலியான நெருப்புப் பெட்டியில் வைக்கவும் மறக்கவில்லை . அராலியில் வீடும் பார்த்தாயிற்று என தந்தி வந்தது .
பபாட அப்பாவும் லொரி ஓடுறவர் தான் . ஆனால் , இவர்கள் பிடித்தது வேற லொரி என்றே திலிபனுக்கு ஞாபகம் !, மங்கலான நினைவே இருக்கிறது . ஒரு மாதிரி வீட்டுச் சாமான்கள் எல்லாம் ஏறி விட , அன்று பபா வீட்டார் தான் ரொட்டியும் , சம்பலும் , கறியுமாக சாப்பாட்டை பபாவிடம் அனுப்பி இருந்தார்கள் . அவர்களுடனே பபாவும் சாப்பிட்டான் . பின்னேரம் போல வாடகை வீட்டின் திறப்பை வீட்டுக்காரரிடம் கொடுத்து விடும்படி பபாவிடம் கொடுத்து விட்டு சோகத்துடன் பயணம் ஆரம்பமானது. அம்மா , ஆசிரியப்பயிற்சி எடுத்த போது ' மனோவியலை ‘ ஒரு பாடமாக படிப்பித்தவர்கள் என்பார் . அவர் பெரியளவில் புத்தகங்கள் வாசிக்கிற வாசகி இல்லை என்றே படுகிறது . அந்த அறிவு அம்மாவை வாசகர் அறிவை பெற்றவராக்கி விட்டிருக்கிறது . என்னப் பிரச்சனை என்றாலும் ஒரு தீர்வைக் கண்டு பிடித்து சொல்லி விடுவார் . அதனாலே , எங்கே போனாலும் பெரியவர் , அம்மாவோடு வாஞ்ஸையோடு பிழங்க , சிறியவர் ... புத்திமதிகளைக் கேட்க ஓடி வருவார்கள் . அதனால் அவர்கள் வீட்டேயும் மாலை நேரங்க ளில் வருவார்கள். இவரும் அவர்கள் வீட்ட போய்யிருந்து ஆறுதலாகக் கதைத்து விட்டும் வருவார் . குடும்ப உறவினர் போல பிழங்குவார்கள் . பெரும்பாலும் தங்கச்சிமார்களே அம்மாவோடு செல்பவர்கள் . தைச்ச சட்டைகளை வாங்கி வர , கொடுத்து விட என திலிபனும் போய் வாறவன் தான் .
அப்பா , பெரிய வாசகர் ! , புத்தகங்கள் வாசிப்பவர் . அந்த காலத்தில் லத்தின் பாடத்திலும் உச்சப் புள்ளிகளைப் பெற்றவர் என்பார் . வீட்டிலே , சிறிய புக்ராக்கில் , ஆகச் சிறியதில்லை , மத்திய தரம் , அதில் எல்லாமே ஆங்கிலப் புத்தகங்கள் தான் இருந்தன . அத்தனையுமே வாசித்திருக்கிறவர் . ஏன் எழுதாமல்…. விட்டார் ? என திலிபனுக்கு இப்பவும் கூட சிந்தனை வந்து கொண்டே இருக்கிறது . ஐரோப்பியர் ஆட்சியில் கல்வியில் ... எழுதுவதற்காகவும் ஒரு பாடத்தை வைத்திருக்க வேண்டும் . காலனி நாடுகளில் குறிப்பாக வைக்கப்பட்டிருக்கவில்லை . தாய்மொழிக் கல்வியிலே கற்பதற்கான அனுமதி கூட ஆங்கிலேயர் காலத்திலே ஏற்பட்டிருக்க வேண்டும் . தற்போது சிங்கள மொழி போல அப்போது அந்தந்த மொழிக்கே முக்கியத்துவம் நிலவியிருக்கிறது . 8 ம் வகுப்போட படிப்பை நிறுத்திய அவனுடைய மாமாக்கள் சிலர் கொழும்புக்காரர்கள் போல ஆங்கிலம் பேசி அசத்துகிறார்கள். எங்கே அனுமதிக்க வேண்டுமோ அங்கே சுயமொழிக்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது . அதோடு எழுகுற திறமையையும் மட்டமாக்கி இருக்கிறார்கள் . தற்போதைய சிங்கள அரசாங்கங்களும் அதே நடத்தைகளையே தொடர்கின்றன . ” சுமார் 500 ஆண்டுகள் அடிமைகளாக வேற்றானாட்சியில் கிடந்தவர்கள் , சுதந்திரம் கிடைத்த பின்பும் .... இன்னொருவரை விட தாம் முக்கியத்துவம் கூடியவர்கள் என்கிறார்களே . புதிய எஜமானர்களாக பழைய எஜமானர்களின் வளர்ப்பு நாய்கள் போல தான் ஆட்சியைத் தொடர விரும்புகினம் “ திலிபனுக்கு சிந்தனை ஓடுகிறது . மத , மொழி வெறிகள் தான் இந்த அடிமை,காலனிகள் எல்லாத்திற்கும் அடிப்படைகள் போல இருக்கின்றன . சிங்களத்திற்கு மாலை போட்டு ,தமிழை ஒதுக்கி வைத்ததிலிருந்து தெரிகிறதே !
அராலிக்கு வந்த போது எங்குமே பனைமர வளவுகள் , அயலில் புழக்கமற்ற வடலி வளவுகள்...என இயற்கையின் செங்கோல் ஆட்சியே கண்ணில் பட்டன . வவுனியாவில் பனைமரத்தைக் காண முடியாது . துப்பரவாய் இல்லை என்றே சொல்லலாம் . இங்கிருந்து சென்ற யாழ்ப்பாணத்தார் , பனப்பாத்திப் போட்டு வைத்த பனைகள் சிலது மட்டுமே எங்கெங்கையோ வளர்ந்திருந்தன . அங்கே ‘கள்ளுக்கொட்டில்’ கிடையாது தான் . இங்கே கள்ளுக்கொட்டில் இல்லாத கிராமமே இல்லை . ஆண் வன்னியர்க்கு ‘தவறணை’ என்றால் மட்டுமே புரிந்த வாசஸ்தலம் . இங்கே , பனைகள் இயல்பாகவே வளர்கின்றன . பனைமரக் காடுகளை வெட்டி தான் குடியிருப்புகள் உருவானவை என்பதே சரியாய் இருக்கும் போல இருக்கின்றது . அந்த மாதிரி குடியிருப்புகள் மத்தியிலும் பனை மரங்கள் நெடு , நெடுவென வளர்ந்திருக்கின்றன . செட்டியார் சமூகக் கூடலில் , பகுதியில் , சைவக்குடிகள் அதிகம் . மச்சம் சாப்பிடுறது குறைவு போலவே படுகிறது.
அது 2 , 3 பெரிய குடும்பங்களும் , சகோதரர்கள் , அவர்களின் பிள்ளைகளான 2 ம் சந்ததி , மிகக் குறைந்தளவில் 3 வது சந்ததியினர் என இருந்த பகுதி . சில வசதியான சமூகத்தச் சேர்ந்த ஒன்று , இரண்டு குடும்பங்களும் கூட இருந்தன . அதனாலே , பாம்புகளையும் அடித்துக் கொல்லுறதை கை விட்டு விட்டிருக்கிறார்கள் போல படுகிறது . செட்டியார்களின் ஒவ்வொரு வீடுகளும் நாற்சாரங்களுடன் கூடிய குட்டி அரண்மனைகளாகவே காட்சியளிக்கின்றன . இளைப்பாரியவர்களின் கிராமம் என்ற பெயரும் அராலிக்கு இருக்கிறது . வீட்டுக் கூரை முழுதையுமே ஓட்டால் வேய்யாமல் , சில பகுதிகளை பனை ஓலைகளாலும் மேய்ந்திருப்பர் . நாற்சார பகுதியில் ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் அவ்வாறிருக்கும் . இங்கே ‘ சாரை ‘ இனம் சிங்களவர்கள் போல அதிகம் விளைந்திருக்கிறது . சாரையிலே , விசம் இல்லை ! . அதனாலே , யாருமே பக்கத்தால் நெளிந்து போனால் பார்த்துக் கொண்டு போக விட்டு விடுகிறார்கள் . பெரிய தடித்த கயிறு போவது போல போகும் . சாரையே ‘ பெண்னினம் ‘ தான் ! . பெண்கள் தொகை பாம்பிலே பல்கிப் பெருகி இருக்கிறது . செட்டியார் மடத்தில் பாம்பிலே முளித்தால் தான் முழுவியம் . நினைச்ச காரியம் நிறைவேறும் . எதாவது சாரையை (பாம்பை) தடியால் அடிச்சு , கிடிச்சுப் போட்டால் … அதன் ஆண் துணையான கொம்பேறிமூக்கன் ( விசம் மிக்கது ) தேடிக் கொண்டு கொத்த வந்து விடும் . அடிச்சவனைத் தேடிக் கொத்தி விட்டுத் தான் திரும்பிப் போகும் என்ற நம்பிக்கை அங்கே நிலவுகிறது . கொம்பேறி , முன் வைத்த காலை பின் வைக்காத இராஜ இனம் ! . உரிமைகளை பறி கொடுத்த சிங்களவர்களோடேயே எதிர்த்துப் போராடவர்கள் பாம்போடு எதிர்த்துப் போராடுவார்களா ? திலிபன் வீட்டாரும் பாம்பு சினேகிதர்களுடனும் குடி இருக்கப் போனார்கள் . லொரியில் , சென்றதில் இறக்கிய போது அம்மாவின் விருப்பப் பொருளான நீளமான பெரிய நிலைக் கண்ணாடி உடைந்து விட்டிருந்தது .
‘ ரெஸ்சிங் மேசையுடன் கூடிய கண்ணாடி ‘ அங்கே இருந்தது . அங்கே வயதான அம்மா ஒருவரே தனியே குடியிருந்தார் . அவர்க்கும் நல்ல பேர் . சுந்தரம்மா . இளம் காலத்தில் சந்தோசமாக வாழ்ந்தவர் . ஒரு ஒரே மகன் கொழும்பிற்ச் சென்ற போது கடற்கரையில் குளித்த போது , சுழியில் அகப்பட்டு இறந்து போனவர் . உடலை எடுத்தார்களோ தெரியவில்லை . மகளின் கணவரும் கூட காப்பாற்ற முயன்று இறந்திருக்க வேண்டும் . தற்போது வெளிநாடொன்றில் இருக்கின்றார் . சிலவேளை வந்து போறவர் . கணவர் , யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகவிருந்தவர் , இயற்கை எய்தி கன வருசங்களாகி விட்டிருந்தன .
வீட்டிலுள்ள பொருட்களையும் இவர்களைப் பாவிக்கும்படி அனுமதி அளித்திருந்தார் . அவருக்குத் துணையாக இவர்கள் . இவருக்குத் துணையாக அவர்கள் . அந்த பெரிய வளவை கவனிக்க வெள்ளையப்பு , பொன்னரப்பு என இரு கிழவர்கள் வருவார்கள் . வேலிகள் அடைத்தல் . பனம்பாத்தி மேடை போடுதல் . விழுந்த பாலை , ஓலைகளை அடுப்பெரிக்க சேர்க்கிறது .... என அவருக்கு பலவித வேலைகளைச் செய்தவர்கள் . இவர்கள் போன பிறகும் வந்து கொண்டே இருந்தார்கள் . அராலிக் கதைகளை எல்லாம் சொகிற நல்ல அப்புமார் . ஏலாமல் போன போது தான் வராமல் நின்றது . அந்த அம்மாவிற்கு சமைக்க உதவிக்கு பொன்னரின் மகளும் வாறவர் . இவர்கள் சமைக்கிற கறிகளையும் அவருக்குக் கொடுப்பார்கள். முதியவர் என்பதால் ருசியற்ற உணவை உண்டு வந்ததால் இவர்கள் இடைக்கிடை கொடுக்கிற கறிகளை ருசித்துச் சாப்பிடுவார் . சொல்லவும் செய்வார் . மகளும் மகள் மூலமாக வேறு சிலரும் திலிபனின் அம்மாவிற்கும் மா இடிக்க , மிளகாய் வறுத்து தூள் இடிக்க , புளியம் கோது உடைக்க எல்லாம் உதவியாக வருவார்கள் . அவர்களிற்கு வேலை வாய்ப்புகள் . சந்தோசமாகவே இருந்தார்கள் . கணேசன் மகாவித்தியாலயத்திற்கு .... முதல் நாள் போன போது திலிபனுக்கும் 6 ம் வகுப்பு நன்றாய் பிடித்துப் போய் விட்டிருந்தது.
அங்கே , பல சமூகத்ததைச் சேர்ந்த பெடியள்களும் படித்தார்கள் . ஆசிரியர்கள் மேன்மை மிக்கவர்களாக திகழ்ந்தார்கள் . அவர்களால் பாடசாலையில் எல்லோருமே ஒரே சமூகமாக பார்க்கப்பட்டார்கள் . இருந்தாலும் வெளியில் உள்ள அலைகள் உள்ளேயும் பெடியள்கள் மூலம் ,குறிப்பாக சண்டை பிடிக்கிற போது அடிக்கவேச் செய்தன . திலிபன், வவுனியாவில் இந்த சமூக நிலவரங்கள் பற்றி துப்பரவாகத் தெரியாமலே வளர்ந்தவன் . அவனுக்கு புரியவும் இல்லை . எல்லோரும் ஒரே மாதிரியான நண்பர்களாகவேத் தெரிந்தார்கள் . சில ஆசிரியர்கள் ‘ படிக்கிறவன் ‘ என்று தெரிந்தால் , எங்கே என்றாலும் வீட்டிற்குச் சென்று போய் பெற்றொரிடம் நேரிலே பாராட்டி கதைத்து விட்டு செல்பவர்களாக இருந்தார்கள் . வெளியிலிருந்து வாறவர்களே பெரும்பாலும் செய்தார்கள் . எட்டாம் வகுப்போட நின்று விடுறவர் வீட்டை தேடிப் போய் " மேலே படிக்க வைய்யுங்கள் "என கெஞ்சிக் கேட்ட ஆசிரியர்களையும் திலிபன் அறிந்திருக்கிறான் . பள்ளிக்கூடம் விட்டாலும் திலிபன் அவர்களோடு பழகிறதும் இருந்தது . அயலிலுள்ள பெடியள் மூலமும் எந்தச் செய்தியும் வெளிய தெரிய வரவே செய்தன .
கருணாகரன் , வாங்கில் பக்கத்தில் இருப்பவன் . அவனும் அவர்களில் ஒருத்தனாகி விட்டான் தானே . அவன் " கடலுக்குப் போறதைப் பற்றி திலிபனிடம் அடிக்கடி சுவாரசியமாக கதைப்பான் . அவனுக்கும் சரியாச் சொல்ல வரவில்லை . இருந்தாலும் விளங்கவே விபரித்தான் . "பெளர்ணமி இரவுகளில் , சில வளவுகள் இருக்கின்றன , அதிலே கூடி பாட்டுக் கச்சேரி, வில்லுப் பாட்டு எல்லாம் மயிலியப்புலப் பகுதியில் நடைப்பெற்று வருகின்றன " என்றான் .சினிமாப் பாட்டுகளிற்கு சிலர் , தகரத் தட்டு ,போத்தல்,ஸ்டூல்...இவற்றில் தான் தாள இசை லயங்களை அடிப்பார்கள் . ஜேசுதாஸ் , எஸ்.பி ..எல்லோரும் நம்மிடையே இருக்கிறார்களடா . வில்லுப் பாட்டுக்கு மணிச்சத்தத்தோடு கிண் கிணிக்கும் வில்லயும் ஒருவர் கொண்டு வருவார் . எங்களிடையே திறமையுடையவர்கள் இருக்கிறார்கள் . நாங்களும் சேர்ந்து கோரஸ் போடுவோம் … என்றான் . பின் இரவு போல கடலுக்குப் போக கிளம்புவார்கள் . அன்றைய நாள் சந்திரன்ர ‘ ஈர்ப்புச் சக்தி ‘ அதிகம் என மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குப் போவதில்லை . அராலிக் கடல் ஊமைக்கடல் ! . களங்கண்ணி அடைப்புக்கள் , கரவலை வேலிகள் என போட்டிருப்பார்கள் . முதலில் பாண் , மிளகாய் , வெங்காயம் எல்லாம் வாடியிலே வைத்து விட்டே கடலிலே கால் வைப்போம். கரையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு வள்ளங்களை அவிழ்த்துக் கொண்டு களங்கண்ணி அடைப்புக்கள் , கரவலை நோக்கிச் செலுத்துவோம்"
அவர்களுடை அப்பாமாரும் தொழிலுக்குப் போறது இருப்பதால்...யாருடைய வள்ளம் அவிழ்த்தாலும் எவரும் கோபப்பபடுவதில்லை . பத்திரமாக ஓடுறது , .வலைகளை சேதப்படாமல் பிடிக்கிறது எல்லாம் தெரியும் . என்ன பெரிதாகவா எடுத்து விடப் போறார்கள் ? எனவே , அந்த கொண்டாட்டத்தை அனுமதித்திருந்தார்கள் . தவிர , காலகாலமாக சிறுவர்கள் மீன் பிடிக்க ஒரு பயிற்சி போலவும் அது அமைகிறது . எல்லாருமே தொழிலிற்கு வரப் போவதில்லை . ஆனால் , அறிந்திருக்க வேண் டியது . அவசியமல்லவா ! . தாமாகவே பழகிறார்கள் ; அறிகிறார்கள் . சிறுவனான கருணாவை அண்ணர்மார் பல தடவைகள் கூட்டிச் சென்றிருக்கிறார்கள் . அவனுக்கு நீந்தவும் நன்றாகத் தெரியும். மீன் குஞ்சுவிற்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும் .
" நிலவு வெளிச்சம் உங்களுக்கும் கூடாதில்லையா ? மற்றவர்களை பாதிக்கிறது போல உங்களை பாதிக்காதா ? " எனக் கேட்டான் . " போடா , பேயா ! , நாங்க ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலம் மட்டுமே தண்ணீரிலே இருக்கப் போறோம் , மிச்சம் குறைவான நேரம் . முழு இரவும் தான் இருக்கக் கூடாது என்பார்கள் . அது கூடாது ! ”
“ கிட்டவாக தடியை நிலத்தில் குத்தி ஊன்றி வள்ளத்தைக் கட்டி விட்டு ஒரு குளியல் போட்ட பிறகே , அவற்றுள் குதித்து மீன் , நண்டு , றால் .... என பிடித்து கரைக்கு கொண்டு வருவோம் . வரும் போதும் மீண்டும் ஒரு குளியல் போட்டு ஈரத்தோடு வருவோம் “.
“ வாடியினுள்ளே அடுப்பு மூட்டின இடம் இரண்டு , மூன்று இருக்கும் . கழுவின பாத்திரம் கூட கிடைக்கும் . கூரையில் செருகி வைத்திருப்பார்கள் . நல்ல கடல்தண் ணியை கொஞ்சம் ஒரு பாத்திரத்தில் பிடித்து வந்து மிளகாய் , வெங்காயம்களை அதில் போட்டு அடுப்பிலே வைத்து திடீர் உப்புச் சொதி காய்ச்சுவினம் . அந்த நேரம் பசியும் அதிகமாக இருக்கும் . தவிர, சாமத்திற்குப் பிறகு முளிக்கிற போது பசியை உணர்வது கூடுதல் . பிடித்தவற்றை சிறிது வெட்டி கழுவி ப்போட்டு நெருப்பிலே போட்டு சுடுபடும் . அப்படிச்.சுட்டதை சாப்பிட்டிருக்கிறாயா ? , நீ மரவள்ளியை சுட்டு சாப்பிட்டிருக்கிறாய் தானே . உன்னால் கற்பனை பண்ண முடியும் ! . என்ன ரூசியட ! ." என்று சப்புக் கொட்ட , திலிபனுக்கும் நாவூறும் . “ பாணையும் பிய்த்து சொதியிலே தோய்த்து , தோய்த்து சாப்பிட்டுப் பார் . தெரியும் உனக்கு அதன் ரூசி ! என்றான் . பிறகு திரும்பி , வளவிலே , மணலிலே துணி எல்லாம் முதலே எடுத்து வைத்திருப்பார்கள் , விரித்துப் போட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டு நித்திரையாகி விடுவோம் . ஒன்று , இரண்டு மணி நேரம் , சிலவேளை அப்படியே பகலிலும் கூட மரக்கட்டை நித்திரையாகிக் கிடப்பார்கள் . அடுத்த நாள் பள்ளிக்கு பலர் மட்டம் ! " சிரித்தான் . இவனுக்கும் கூட கடலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் தொற்றி விட்டது .
“ நானும் ஒருநாள் உங்கள் கூட வரலாமா ? ” என்று கேட்டான் .
" உன்னையெல்லாம் கூட்டிக் கொண்டு போக மாட்டார்கள் . ரீச்சரும் விடமாட்டார் “ என்றான் . கருணா " அதை விட முதலில் உனக்கு நீச்சல் தெரியுமா ? தெரியாட்டியும் கொண்டு கூட்டிப் போக மாட்டினம் " என்றான் . வவுனியாவிலே குளத்திலே நீச்சலை கற்றுக் கொள்ள ஏலுமான வரையில் முயற்சித்தவன் தான் . நீருக்குள்ள தலையை வைத்தபடி சிறிது தூரம் நீந்துறது தான் கை வந்திருந்தது . தலையை மேலே எடுக்கவே முடிந்ததில்லை .
“ இங்கே , எங்க நீச்சலைக் கற்றுக் கொள்ளலாம் ” என்று கேட்டான் . “ எனக்குத் தெரியாது , நீயாத் தான் பழகுணும் ” என்றான் கருணா .
கடலுக்குப் போக சந்தர்ப்பம் கிடைத்தால் நீச்சல் கற்று கட்டாயம் போகக் கூடியதாக இருக்க வேண்டும் . திக்குத் தெரியாத காட்டில் விட்டது போல இருந்தது .
‘ பிஸ்கட் ’ பிரேக் டைம்மி லே ஓங்கி வளர்ந்திருந்த வேப்பமர நிழலில் திலிபனும் , அன்டனும் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள் . " அன்டன் , நீ நீந்துவாயா ? " என்று கேட்டான் . " ஓம் " என்றான் . எப்படிக் கற்றுக் கொண்டாய் ? " கேட்டான் . " அண்ணர் பழக்கினார் " என்றான் . " டேய் , எனக்கும் பழக்குவாரா ? " கேட்டான் . " நீ , நீச்சல் பழக விரும்புறாயா ? " கேட்டான் . " ஓமடா " என்றான் . “ அப்ப , நீ சனிக்கிழமைப் போல செட்டியார் மடச் சந்தியிலே வந்து நில்லு . நான் அண்ணரோடு வந்து கூட்டிப் போறேன் " என்றான் . திலிபனுக்கு சந்தோசம் பிடி பட வில்லை .
சந்தியிலிருக்கிற ‘ யோகி ‘ கடைக்கு சாமான்கள் வாங்க வாரவன் . ஆடிப்பாடி போய் வருபவன் . அவனால் வர முடியும் . “ ஏழு , எட்டு மணி போல வாரன் “ என்றான் . சொன்ன மாதிரியே அண்ணனிட சைக்கிளிலே அன்டன் வந்திருந்தான் . இவனை பாரில் ஏற்ற , அன்டன் பின் கரியரில் தொற்ற சைக்கிள் சந்தியிலிருந்து மேலே தெற்கராலியை நோக்கிப் போற சிந்தாமணிக் கோவில் மண் வீதியில் விரைந்தது . பள்ளிக்குப் போற பாதையை விட வேற பாதையில் அவன் அதுவரையில் போய் இருக்கவில்லை . நேராய் போற வீதியால் முதல் தடவையாக பயணிக்கிறான் . அன்டனின் அண்ணரான குணமண்ணைக்கு அவர்களை விட 6 , 7 வயசு கூட இருக்கலாம் . சோடாக் கடையைக் கடந்து , சந்தைக் கட்டிடத்தைக் கடக்க வயல்வெளி தொடங்கிறது . வலது பக்கம் சிறிய குளம் வருகிறது .
வண்ணான் குளத்தில் ஒரு கரையில் நிரையாக சீமேந்தில் தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன . பலர் அதில் நீர் இறைத்து துணிகளை கல்லில் அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்கள் . சரவணமுத்து , விசில் அடிப்பது போல மூச்சு விட்டு , விட்டு கல்லில் துணி ஒன்றை விளாசிக் கொண்டிருந்தான். குணம் " செல்லைய்யா பார்த்து , பார்த்து ... துணி கிழிந்து விடப் போகிறது " என்றான் . அவர்களின் இறுகிய தன்மை சிறிது தளர்ந்து விட்டிருந்தது . செல்லைய்யா , கந்தைய்யா , ராசு ... என பலரும் அவனைப் போல விசில் போல் மூச்சு இரைய விளாசல் நடந்து கொண்டிருந்தது . அயலில் ஒரு பாழான , அளவான கேணி தண்ணீரால் நிரம்பி இருந்தது .
குணம் " ராசு , இதிலே நீந்தலாமா ? " என்று கேட்டான் . பாழானது போல இருந்ததை கவனித்து விட்டு பார்வையை சுழல விட்டான் . அவன் கரையை கூர்மையாகக் கவனித்தான் . " செல்லைய்யா , கேணி நல்லதா ? “ கேட்டான் . " சிலவேளை எங்கட பொடியள் நீந்துவார்கள் . நல்லது என்று தான் நினைக்கிறேன் " செல்லைய்யா .
அவனுக்கு மலை போல உடுப்புகள் இருந்தன . சைக்கிள்ளை பாட்டுக்கு கிடத்தி விட்டு , உடுப்பைக் கழற்றி பக்கத்தில் வைத்து விட்டு ஜட்டியுடன் குணம் பாய்ந்தான் . அன்டன் " திலிபன், நீயும் உடுப்பைக் களை " என்றான் . அவனும் களைந்து விட்டு மெதுவாக இறங்க உதவி செய்தான் . கட்டுக்கல்லைப் பற்றியபடி கால்களை அடித்துப் பார்த்தான் . அன்டன் இங்க , அங்க என நீந்தினான் . குணம் ஒரு கலக்கு கலக்கி விட்டு திலிபன் பக்கம் வந்தான் . " நீ எவ்வளவு தூரம் நீந்துவாய் ? " குணம் கேட்டான் . " தலையை நீரில் கவிழ்த்து கொண்டு கொஞ்சதூரம் நீந்துவேன் . வவுனியா பண்டாரிச்சுப் புளியம் குளத்திலே எத்தனையோ வாட்டி நீந்த முயற்சித்தேன் . எங்க அண்ணை , வாழைக்குத்தியைக் கட்டிக் கொண்டு ஒரு மாதிரி நீந்த பிடிச்சு விட்டான் " என்றான் . " சரி , கட்டை விட்டு , விட்டு அடுத்தப் பக்கம் வரை அப்படியே நீந்தி வா . பக்கத்திலே நான் வாரன் " குணம் கூறி திலிபனின் கைகளை பிடித்து நீந்த நீர்ப் பக்கமாக தள்ளி விட்டான் . 2 , 3 மிடக்கு தண்ணியைக் குடித்தான் . " நீந்து , நீந்து " என முகம் தண்ணியை விட்டு எழும்ப , குணம் ,சொல்லி ச் சொல்லி தண்ணீரில் தள்ளி விடுவது தெரிந்தது . அந்த தண்ணீரைக் கிழித்துக் கொண்டு நீந்தி போவது போல தெரிய ,பல தடவைகள் குணம் சொல்லுறதும் காதில் விழ , ஒருவாறு கால்களும்,கைகளும் அடிக்க முகத்தை தண்ணீரில் கவிழ்த்துக் கொண்டு நீந்த முடிந்தது . ஆனால் , அடுத்தக் கட்டை அடையும் வரை முகத்தை நீருள் கவிழ்த்தும் , சிறிது மேலே எடுத்துமாக ஒருவாறு நீந்திப் போனான் . அப்படி பல தடவை ஆற அமர பழகினான் . அன்டனும் , குணமும் அவனுக்கு கிட்டவாக தன்பாட்டிலே கலக்கிக் கொண்டிருந்தார்கள் . ஒரு மாதிரி களைத்து நின்ற போது இருவரும் சோப்பு போட மேலே ஏறினார்கள் . திலிபன் மட்டும் கேணிக்கட்டைப் பிடித்துக் கொண்டு நின்றான் . " நீ தனிய அந்த கட்டுக்கு போவன் , என்னம் பிரச்சனை என்றால் நான் பாய்கிறேன் " என்றான் குணம் . பார்த்தான் . சரி என்று பாய்ந்து நீந்த தொடங்கினான் . " அன்டன், அவனை தண்ணிரில் ஒரு தாழ் , தாழ்த்து " என்று அவனைப் பார்த்துக் கூறினான் . அன்டன் பாய்ந்து தலையைப் பிடித்து ஒரு அமுக்கு , அமுக்கினான் . மளமளவென தண்ணீர்க் குடிக்க , அப்படியே கொண்டு ஆழத்திற்குப் போய் விட்டான் . அவன் திக்குத் திணற , பயம் பிடித்துக் கொண்டது . அன்டன் பிடியை விட , போன மாதிரியே கால் , கைகள் தன்ர பாட்டிலே அடிக்க மேலே வந்தான் . மேலே தலை தட்டுப்பட , " டேய் அப்படியே நீந்து , நீந்து " என்று குணம் கத்தினான் . என்ன ஆச்சரியம் தலையை மேலே வைத்தவாறு முதல் தடவையாக கட்டை நோக்கி நீந்தி வந்தான் .
" இப்ப நீந்துறாய் . திரும்ப மற்ற கட்டுக்கு போ " என்று கட்டைப் பிடித்த கையை எடுத்து தண்ணீரில் தள்ளி விட்டான் . இம்முறை குணம் பாய்ந்து அவனை இழுத்துக் கொண்டு அடி ஆழத்திற்குப் போனான் . இம்முறையும் 4 , 5 முறைகள் மிடக்கு தண்ணீரைக் குடித்தான் . மேலே வர கண்கள் சிவப்பேறி , புரைக்கேரியது. இருமல் வந்தது . ஆனால் தலையை நீருக்கு மேலே வைத்திருக்க கையை , காலை அடித்த படியே அந்தரத்தில் மிதக்க முடிந்திருந்தது . ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெதுவாக கரைக்கு நீந்தி வந்தான் . குணம் " நீ ஓரளவு முன்னமே நீந்துவாய் , அது உனக்குத் தெரியவில்லை . இனி பயப்படாமல் இறங்கி நீந்து ஒன்றும் ஆகாது " என்று முதுகிலே தட்டினான் . " இண்டைக்கு இது போதும் . அன்டன் கொண்டு வந்த துவாய்யால் திலிபன் உடம்பை துடைக்க தொடங்கினான் . இருவரும் சிறிது நேரம் நீந்தி விட்டு ஏறினார்கள் . ஈர ஜட்டியோடு நிற்கிறதைப் பார்த்து அன்டன் " டேய் , அந்த மரத்திற்குப் பின்னால் போய் கழற்றி பிழிந்து போட்டு போடு . காய்ந்து போய் விடும் " என்றான் . இவர்கள் துவாய்யைக் கட்டியபடியே பிழிந்து போட்டுக் கொண்டார்கள் .
ஏறி துடைத்துக் கொண்டிருக்கிற போது கேணிக்கட்டில் உடைந்த கல்பகுதியிலிருந்து ஒரு சிறிய பாம்பு வந்து நெளிந்தது.இவர்கள் அந்த பகுதியிற்கு போய் இருக்கவில்லை.அன்டன் கண்டு விட்டு "பாம்பு,பாம்பு"என்றான்."இனி இந்த மாதிரி கேணியிலே இறங்க வேண்டாம் . பாழானது என்றால் இப்படி பாம்பு இருக்கும் என்று தான் இறங்க முதல் தயங்கினனான் . வேற நீந்துற கேணியிலே நீந்துறது தான் நல்லது .பாம்பு கடித்தால் அது வேற பிரச்சனை " என்றான் குணம் யோசனையுடன் . கலங்கிற நீருக்கு பாம்பு வெளிய வராது தான் .
அராலியில் , வவுனியாப் போல குளங்கள் நீந்துக் கூடியதாக இருப்பதில்லை. அரசாங்கமும் நிலம் இல்லை , இது …. இல்லை ..என்று இவர்களுக்குச் சொல்லுறதாலே , இவர்களும் பராமரிக்கக் கூடியவற்றைக் கூட சரிவர பராமரிக்காமல் விட்டு விடுகிறார்கள் . வயல் வெளி களில் இறங்கிறவர்கள் ஆயிரத்தெட்டுக் சிறு குளங்கள் , பாழடைந்த குட்டிக் கோவில்கள் எல்லாம் கண்ட கிண்ட இடங்களில் காணலாம். அவை வவுனியாப் போல இயற்கையாகத் தப்பிப்பிழைக்கக் கூடியதாக இருக்கவில்லை . அதிலே இருந்து வயல்களிற்கு நீரை பாய்ச்சுகிறார்களா என்பது சந்தேகம் தான் . மழையால் வெள்ள நீர் போய்த் தேங்க பயன் படுத்தப் படுகின்றது . அதை விட நீர் இருப்பதால் வயலிலுள்ள நிலத்தடி நீரும் நல்ல நிலையில் இருக்கும் . அது கண்ணுக்குத் தெரியாத குளத்தின் பணி . குளங்களை நிலங்களாக்கி விடாமலும் , மண் மூடுறதை சிரமதான முறையிலாவது வெட்டித் தூர்ந்து அழியாமலும் பாதுகாக்க படவே வேண்டியவை .
இலங்கைத் தீவை முழுதும் ஒரே நாடு எனத் தற்போது தூக்கிப் பிடிப்பதால் நம் முன்னோர்களின் தன்னிறைவாக்கிய நாகரீக வளர்ச்சி சரிந்து கொண்டு போகின்றது . 500 ஆண்டுகளிற்கு மேலேயாக காலனிப் படுத்திய காயங்கள் அளப் பெரியது . சிங்களவருக்கே அவர்கள் பகுதி மலைகளில் இருந்த மூலிகைகள் பற்றிய அறிவையே இழந்து போய் இருக்கிறது . அதே போல தமிழ் இராட்சியப் பகுதியிலும் நிறைய விசயங்கள் இழக்கப்பட்டுக் கொண்டு போகின்றன . நீர்ப்பாசன அணைகளும்..., குடியேற்றங்களும் , படுகொலைகளுமான ஆயுதமுனையில் ஆளும் கலாச்சாரம் இலங்கையை கறுப்புத் தீவாக்கிக் கொண்டிருக்கிறது . அடிமை அழுத்தலிருந்து விடு பட்டு சுய புத்தியுடன் இயங்க இவர்களுக்கு 600,700 ஆண்டுகளாகலாம் போலப் படுகின்றது .
பிறகு , இவன் நீந்த தெற்கராலிக்கு கூட போய்ப் பார்த்திருக்கிறான்.தெற்கராலிக்காரர் சின்னச் சின்ன புரட்சி செய்பவராகவே இருந்திருக்கிறார்கள்.அங்கே உள்ள அம்மன் கோவில் ஒன்றின் கேணி சிறிய குளம் போல பெரியளவிலே இருக்கின்றது.அந்தக் கோவிலை மாதாங்கோவில் எனவும் புதுமாதிரி அழைக்கிறார்கள். மிகப்பழைய கோவிலை காலனிக்காரர் வந்து விசாரித்த போது யாரோ ஒருவர் புத்திசாலித்தனமாக “ மாதாங்கோவில் “ என தெரிவித்ததால் இடிபடாமல் தப்பியதாம் என்ற கதைகள் உண்டு . முக்கியமாக ஒன்று ,அந்த கோவில்க் கேணி யை நீச்சலடிக்க திறந்து விட்டிருப்பது தான் . கோவில்த் திருவிழாக்களை செய்வதி லும் பேர் போனவர்கள் தெற்கராலிக்காரர்கள் .
ஆரம்பத்தில் , ஒரு சிலரிடமே பெருமளவு காணிகள் இருந்தனவாம் . அவற்றை பலர் “குத்தகைக்கு எடுத்து மிளகாய்,வெங்காயம்,புகையிலை..எல்லாம் போட்டு பெரும் விளைச்சலை எடுத்து சிறுகச் சிறுக காணிகளை வாங்கியவர் நாம்” எனப் தெற்கராலிக்காரர் பெருமையுடன் சொல்வார்கள் . வயல்கள் வழியே முதலில் பெரிய அகண்ட கிணறு போன்ற கேணிகளைக் கட்டியவர்களும் இவர்களே !.
வீடுகளிலும் ஆடு, மாடுகளும் நிறைய வளர்த்தார்கள் . மாதாங்கோவில் கேணியில் கால்நடைகள் நீர் அருந்தவும் ஒரு பகுதியில் விசேசமாகக் கட்டப்பட்டிருக்கிறது . மழைக்காலங்களில் நீர் நிறைந்து வழியிற அக்கேணியில் வயற்புறப் பெடியள்கள் எல்லாம் வேலை முடிந்து வார போது ஒரு நீச்சல் குளியல் அடித்து விட்டே திரும்புவார்கள் . இந்தக் கோவில் கேணியை திறந்து விட முடியும் என்றால் மற்றையக் கோவில்களின் கேணிகளை நீச்சலுக்குத் திறந்து விட முடியாதா?
அவன் முதலில் மாதாங்கோவில் கேணியிற்குச் சென்ற போது , " புத்திரண்ணை , அப்படித் தான் மூன்று கரணம் அடி " என்று சிறிய பட்டாளம் ஒன்று கத்திக் கொண்டிருந்தது . உற்சாகத்திற்கு அவன் தான். அவன் ஓடி வந்து இரண்டு கரணங்கள் அடித்து நீரினுள் விழுந்தான் . பின்புறம் நின்றும் சுப்பராகக் கரணம் அடித்தான் .
இதே போல, வடக்கராலியிலும் மயிலியப்புலம் கோவில் வளவை கால்பந்தாட்டத் திடலாக்கி இருக்கிறார்கள் . அதிலே மாலை நேரங்களில் பந்தைக் காலில் வைத்து மாயம் செய்கிற ரங்கரண்ணையைக் காணலாம் . உற்சாக இளைஞர்கள் என்றால் திலிபனுக்கு உடனே ஞாபகத்திற்கு ரங்கனும் , புத்திரனுமே சேர வருகிறார்கள் . இருவருக்குமே சிரிச்ச முகம் . இரட்டையர் என்று நினைப்பான் .
பல நாள் பாலனின் சைக்கிளில் தொற்றிச் சென்றவன் , ஒருநாள் , " அண்ணை நாங்களும் (இதிலே) நீந்தலாமா ? " என்று கேட்டான் . எங்கேயும் ,நீந்துறதுக்கு முதல் அனுமதி கேட்க வேண்டும் என்பார்கள் . நெடுக வாரதை அவனும் கவனித்திருக்கிறான் . " இங்கே யாரும் நீந்தலாம் . எவருக்கும் தடை இல்லை " என்றான் . அதிலை , அவனும் பாலனோடு சேர்ந்து நீந்துறது ஏற்பட்டது . இருவரும் ஒரு கரையிலிருந்து மற்ற கரைக்கு நீந்திப் போவார்கள் . பல தடவைகள் நீந்தி இருக்கிறான் . பிறகு , வடக்கராலியில் இருக்கிற கிணறு போன்ற கேணியிலும் நீந்த முருகு ஆட்களுடன் போய் இருக்கிறான் . முருகு ஆழத்திற்குப் போய் கன நேரம் இருந்து விட்டு மேலே வருவான் . அவனைப் போல ஆழத்தில் போய் மூச்சடக்கப் பழகி , அப்படியே சுழி ஓடவும் பழகிக் கொண்டான் . சுழி ஓடுறதென்றால் , அடி ஆழத்திற்குச் சென்று நிலத்தை தொட்ட மாதிரியே ஒரு பக்கத்திலிருந்து அடுத்தகரைக்குப் போய் மேலே எழுந்து வாரதாகும் . மீன்கள் இருந்தால் நீந்துகிற மீன்களை எல்லாம் பார்க்கலாம் . தண்ணீருக்குள்ள வளர்கிற பாசித்தாவரங்களைப் பார்க்கலாம் . பத்மாசனம் போட்டு இருந்தால் கன நேரம் கூட நீருக்குள் இருக்கலாம் . எந்தப் பெரிய நீர் வழியிற கிணற்றிலும் ஆழத்திற்குப் போய் மேலே வர முடியும் . முருகுவும் பின்புறமாக கரணம் அடிக்க வல்லவன் . திலிபனுக்கு அது கடைசி வரை வரவே இல்லை.ஓடி வந்து ஒரு கரணம் அடித்து நீரில் விழுகிறது மட்டும் தான் இவனுடைய எல்லை.
கிணற்றினுள் வாளி விழுந்தால் , ஒரு “ தொபுகடீர் ” , நீருக்குள்ளே போய் விடுவான் . வாளியோடு வருவான் . வீட்டுக் கிணற்றில் மாரி காலத்தில் கையால் தொடுறளவிற்கு நீர் நிறைந்து இருக்கும்.இரண்டொரு தடவைகள் தேத்தண்ணீர் குடித்த கப் தவறி விழுந்து உடனேயே போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான் .
காலம் போனது தெரியவில்லை. இரண்டு வகுப்புகளைக் கடந்து விட்டிருந்தான் . கடலுக்குப் போறது மட்டும் திலிப னுக்கு நிறை வேறவில்லை . அவனையும் பெடியள்கள் வேறொரு சமூகத்தில் வைத்து பார்த்திருக்கிறார்கள் . அதனால் வெளியில் போற குழுவுடன் கலந்து சேர்த்துக் கொள்ள முடியாதிருந்தது .
படிக்க வேண்டிய பத்தாம் வகுப்பில் கால் வைத்திருந்தான் . பரீட்சை நாள் நெருங்க அவனுக்குக் கலக்கமாக இருந்தது . ‘ தேர்வு ‘ எழுதுற போது அம்மா காலையில் பால் காய்ச்சித் தந்தார். " எழுத தெளிவாய் இருப்பாய் " என்றார் . திலிபனுக்கு என்னவோ நம்பிக்கை இருக்கவில்லை . வருவது வரட்டும் என எழுதினான் . ஒவ்வொரு பாடங்களாக ஒப்பேற்றும் போதும் அவ்வவ் ஆசிரியர்கள் , " என்ன விடைகளை எழுதினீர்கள் ? " என்று சரி பார்த்துக் கொண்டார்கள் . பெடியள்களை விட அவர்கள் அதிகமாக பரபரத்தது தெரிந்தது .
எழுதியது மாதிரியே பரிட்சை பெறுபேறுகளிற்கும் காத்திருப்பது தொந்ததரவு பிடித்ததாகவே நீண்டு கொண்டு போனது . ரவி,குமார் போன்றவர்கள் சங்கானைச் சந்தைக்கருகில் இருந்த தேனீர் கடையி ற்குச் சென்று 5 , 6 கோல்ட்லீவ் சிகரட்டுகள் வாங்கி, ஒன்று முடிய ஒன்று என புகைத்து தள்ளினார்கள் . வகுப்பில் , ரவி பெருமையாக “ முதல் தடவையாக புகைத்தது என்பதால் இருமலாக வாட்டித் தொலைத்தது . புகை , புகையாய் விட்டேன் , ஒன்றைக் கூட எறியவில்லை "என்றான் . குமார் " அதையும் சொல்லேன் " என்றான் . " கடைக்காரன் , என்ன தம்பி காதலிலே தோல்வியா ?..என்றுக் கேட்டான். அது அவன்ர அனுபவம் போல இருக்கிறது " சிரிக்காமல் சொன்னான் .
அதிபரின் அறையிலிருந்து முதலில் ஓடி வந்த கணேசன் மாஸ்ரர் , திலிபனின் தோளில் கையை வைத்து " நீ நல்ல மாதிரி பாஸ் பண்ணி இருக்கிறாயடா " என்று பாராட்டினார் . வகுப்பில் அவன் , பாலன் , முருகு , மதி , சுந்தரம் என ஐந்து பேர்கள் பாஸ் . அவனுக்கு நல்ல ரிசல்ட் . கருணா ,தவம்... என மற்றவர்கள் அடுத்த வகுப்பிற்கு போகக் கூடியதாக பாஸாகவில்லை . அடுத்த வகுப்பும் அந்த பாடசாலையில் இருக்கவில்லை.அனுமதிப் பெற்று, வேற வேற பாடசாலைகளிற்குப் போய்ச் சேர ஒரு வருசம் காத்திருக்க வேண்டும் .
' வீட்டிலே சும்மா விடப்படுகிறார்கள் ' என்பதால்,அதிபர் " இங்க வந்து , இந்த வகுப்பு மாணவர்களோடு நாளைக் கழித்து விட்டு போகலாம் , என்ன ? , சொல்கிறீர்கள் . " என ஆசிரியர்களிடம் கருத்தைக் கேட்டார் . ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்ள பாஸானவர்களும் பாடசாலைக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் . திலிபன் , கருணாவை " கடலுக்குப் போய் வருவோமா ? " எனக் கேட்டுப் பார்த்தான் . அவனுக்கு மனநிலை சரியில்லை . சோர்ந்து போய் உற்கார்ந்திருந்தான் . வேறும் சிலரைக் கேட்டான் . வரத் தயாராகவில்லை . தெற்கராலியிருந்து வார அஜாகுபாகுவான ராஜன் பின் வரிசையில் இருந்தான் . " திலிபன் இங்கே வா " என்று கூப்பிட்டான் . " நீ கடலுக்குப் போகணும் , அவ்வளவு தானே ? " கேட்டான் .
' ஓம் ' என்று தலையை ஆட்டினான் . அவனுக்கு அடுத்த வரிசையில் இருந்த சிங்கத்தைக் (அவனும் தெற்கராலியிலிருந்து வாறவன்) காட்டி " நீ இரண்டு இறாத்தல் பாணும்,கொஞ்ச பச்சை மிளகாய்யும் ,வெங்காயமும் வாங்கி விக்கி கடையிலே நில்லு , எட்டு மணி போல இவன் வந்து கரைக்கு கூட்டிக் கொண்டு வருவான் . நான் வள்ளத்தோட நிற்கிறேன் " என்றான் . அவனுக்கு படிப்பு ஏறுறது கொஞ்சம் குறைவு.ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாய் படிக்கிறார்கள் . பெரிசாய் பழகி இருக்கவில்லை . சிலவேளை கணக்கு போட கேட்டிருக்கிறான் , சொல்லிக் கொடுத்திருக்கிறான் . ' முயற்சி திருவைனையாகும் ' என்பதைக் கண்கூடாகக் காண்கிறான் . ஆச்சரியமாக இருந்தது . யார் தோள் கொடுப்பார்கள் ? என்பதை முதலிலே அறியவே முடியாது .வகுப்பிலே அவனும்,கனகனும் தான் உருப்படியான ஆட்கள். ‘பீபன்’ போன்ற ஆட்கள் . நாளை, பள்ளி நாளை மட்டம் அடித்துப் போக திட்டம் போடப்பட்டு விட்டது .
காலையிலே, சொன்ன மாதிரி இருவருமாக நடந்து கடலுக்குப் போனார்கள் . உடுப்பை கழற்றிக் கொடுத்து ஜட்டியுடன் ஏற , வாடியில் எல்லாத்தையும் சிங்கம் வைத்து விட்டு வந்து வள்ளத்தில் ஏற , ராஜன் தடியால் வழித்தான் . நீர் சிறிது குளிர்மையாக இருந்தது.அதிகளவு ஆழமற்ற ஊமைக்கடல் . தடியை ஊன்றி கட்டி விட்டு, ராஜன் களங்கண்ணிக்குள் பாய்ந்தான்."நீயும் வா"என திலிபனைக் கூப்பிட,சிங்கம் வள்ளத்தை சிறிது வலையோடு சிறிது ஒதுக்கினான்.வள்ளத்திலிருந்த அவனும் உள்ளே பாய்ந்தான். சிங்கம் வள்ளத்திலே இருந்து கொண்டான்.நீருள் முழ்க்குளித்து வலையில் மாட்டியிருந்த மீனைப் பிடிக்க முயன்றான்.வழுக்கிக் கொண்டே இருந்தது . பிடிக்க முடியவில்லை . ராஜன் பிடித்து கொடுக்க , சிங்கம், வள்ளத்தில் வாங்கிப் போட்டான் . நண்டு ஒன்று கூட பிடித்தான் . இரண்டு மூன்று மீன்கள் , நண்டு … போதுமாக இருந்தது . வள்ளத்தை ஒதுக்க ஊன்றி ஏறி , வெளிய வந்து கொஞ்ச நேரம் மூவரும் நீச்சடித்துக் குளித்தார்கள் . வாடியில் ஜட்டியை பிழிந்து போட்டுக் கொண்டு இருந்து உப்புச் சொதியுடன் சாப்பிட்டு முடிக்க , உடல் ஈரம் எல்லாம் காய்ந்திருந்தது . இவர்கள் வெளிக்கிடுற போது கருணாவுடன் இன்னொரு குழுவும் கடலுக்கு வந்திருந்தது . இவன் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் .
அவனுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது !. சந்தோசமாக இருந்தது . வகுப்பில் மாணவர்கள் அரைவாசிக்கு மேலே மாயமாக மறைந்து போக , சிலருடன் பெட்டைகள் மட்டும் இருந்ததைப் பார்த்த அதிபர், வந்து சத்தம் போட்டிருக்கிறார் .
திலிபனைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் . அடுத்த நாள் , திலிபனை " நீ வீட்ட போ , இனிமேல் பள்ளிகூடம் வராதை " என்றவர்,மற்றவர்களைப் பார்த்து " இனிமேல் உங்களை மன்னிக்க மாட்டேன் . இப்படிச் செயாதீர்கள் " என்று கண்டித்து விட்டு ரீச்சரிடம் விளக்கிறதுக்காகப் போனார் . அவர் திலிபனின் அம்மாவை சொந்த அக்கா போல நினைத்துப் பழகிறவர் . அவரைப் போல செல்வராசா மாஸ்ரரும் அக்காவாக நினைத்துப் பழகிறவர் . அவருடைய தங்கச்சி மலைநாட்டில் வசித்தார்.போய் வாற போதெல்லாம் அங்கிருந்து கொண்டு வருகிற திறமான தேயிலையை இவர்கள் வீட்டுக்கும் அனுப்பத் தவறுவதில்லை.அதன் ருசியிற்கு வழக்கமாக குடிக்கிற தேனீர் கிட்ட கூட நெருங்காது. இரண்டாம் மாசத்திலே , அவன் வீட்டிலே தனிய நிற்க வேண்டியதாயிற்று . சிறுவர்களை தனிமையில் விடக் கூடாது . அந்த தனிமை தான் அவனை அடுத்த வகுப்பை தேற முடியாமல் செய்ததாக இருக்க வேண்டும் ! .
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|