கொரோனோ வைரஸின் உக்கிர தாண்டவத்திற்கு மத்தியில், இலங்கையில் ஒரு மரணதண்டனை கைதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கு முன்பிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில், போதைவஸ்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பேன், எவர் தடுத்தாலும் நிறைவேற்றுவேன் எனச்சொல்லிக்கொண்டே இருந்தவர். மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
தற்போது இலங்கை சிறைகளில் நூற்றுக்கணக்கான மரணதண்டனைக்கைதிகளும் ஆயுள்கைதிகளும் இருக்கின்றனர். அவர்களில் பலர் கொலை, கூட்டு பாலியல் வன்முறை முதலான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களினால் மரணதண்டனை தீர்ப்புக்குள்ளாகியவர்கள். அவர்களில் இலங்கை பாதுகாப்புத்துறையைச்சேர்ந்த படையினரும் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 2015 இற்கு முன்னர் பதவியிலிருந்த அரசில் பாதுகாப்புச்செயலாளராக இருந்தவர். அதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தென்மராட்சி மிருசுவிலில் ஐந்து வயது குழந்தை உட்பட எட்டுத்தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு, ஒரு வீட்டின் மலகூட குழியில் புதைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் நினைவூட்டவேண்டிய செய்திக்குறிப்பு பின்வருமாறு:
வடஇலங்கையில் நீடித்திருந்த போர்க்காலத்தின்போது தென்மராட்சியில் தமது வீடுகளை விட்டு வெளியேறிய சிலர் தமது வீடுகளை மீளச்சென்று பார்ப்பதற்காகச் சென்றனர். அவர்களின் வீடுகள் மிருசுவிலில் அமைந்திருந்தன. அவ்வாறு சென்றவர்களை, அங்கிருந்த இராணுவத்தினர் கைதுசெய்தனர். இச்சம்பவம் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நடந்திருப்பதாக அறியப்படுகிறது. அத்துடன் மறுநாள் கைதானவர்கள் எட்டுப்பேரும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இவர்கள் உடுப்பிட்டிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்றவர்கள். தாம் விட்டுவந்த உடைமைகளையும் வீடுகளையும் பார்க்கச்சென்றபோது, அங்கே அவர்கள் கண்ட காட்சியினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தப்பகுதியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அரைகுறையாக புதையுண்டிருந்ததை கண்டுவிட்டனர். இதுபற்றி, தமது குடும்ப உறவுகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர். மறுநாள் குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக சென்றவர்களை அங்கிருந்த இராணுவம் பிடித்துக்கொண்டது. அவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் காயங்களுடன் தப்பி வந்துள்ளார். ஏனையோர் எட்டுப் பேரும் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர். பலத்த காயங்களுடன் தப்பிவந்த பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் தமது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் வெளியே தெரிய வந்தது. அவர் வழங்கிய தகவலினால், படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. முதலில் காணப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை நீதிமன்றத்தினாலும் பொலிஸாரினாலும் இறுதிவரையில் கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது. யார் அந்த இளம் பெண்…? இன்னமும் மர்மம் தொடருகிறது!
2000 ஆம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்ட எண்மர் பற்றிய விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் சில இராணுவத்தினரை கைது செய்து, சட்டவிரோதக் கைது, சித்திரவதை, படுகொலை, மற்றும் குழிகளில் புதைத்தமை உட்பட 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இக்காலப்பகுதியில் சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க இலங்கை ஜனாதிபதியாக பதவியிலிருந்தார். இந்த வழக்கு முதலில் சாவகச்சேரி நீதிமன்றத்திலும், பின்னர் அநுராதபுரம் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டது. அதன்பின்னர், இவ்வழக்கை விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை 2002 நவம்பர் மாதத்தில் சட்டமா அதிபர் நியமித்தார். ஜூரிகள் எவரும் இல்லாமல் இவ்வழக்கை விசாரிப்பதற்கு அரசு தீர்மானித்தது.
இவ்வழக்கு பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, மூவரடங்கிய நீதிபதிகள் குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 2011, ஏப்ரல் 28 இல் சென்று பார்வையிட்டது. கொலைகள் நடைபெற்ற இடம், கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருந்த இடம், அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை இந்த நீதிபதிகள் மூன்று பேரும் பார்வையிட்டு அதற்கான விபரக் குறிப்புக்களைப் பதிவு செய்தனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, எச்.என்.பி.பி.வராவௌ, சுனில் ராஜபக்ச ஆகிய மூன்று நீதிபதிகளும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சரத் ஜயமான மற்றும் அதிகாரிகளுமே மிருசுவில் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை நடத்திய அப்போதைய சாவகச்சேரி மாவட்ட நீதிவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், சந்தேக நபர்கள் மீதான அடையாள அணிவகுப்பை நடத்திய அப்போதைய பதில் நீதவான் சுப்பிரமணியம் கந்தசாமி, இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் தரப்பில் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டார ஆகியோர் நீதிபதிகள் குழுவினருக்கு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை அடையாளம் காட்டினர். நீதிபதிகள் குழுவினருடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து இராணுவத்தினரும் மிருசுவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். எட்டு தமிழர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த, இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க என்பவருக்கு கொழும்பு நீதிமன்றம் 2015 சூன் 25 ஆம் திகதியன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய நான்கு இராணுவத்தினரை போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அந்த மரண தண்டனைத் தீர்ப்பினை மீண்டும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.
2000 ஆம் ஆண்டு நடந்த படுகொலைச்சம்பவத்தின் தொடர்கதை, சாவகச்சேரி – அநுராதபுரம் – கொழும்பு என பயணித்து, இறுதியில் மரண தண்டனை தீர்ப்புடன் முடிவடைந்திருந்தது. இந்தத்தீர்ப்பினை உறுதிசெய்வதற்கே 17 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது, குறிப்பிட்ட மரணதண்டனைக்கைதி சுனில் ரத்னாயக்கவிற்கு தற்போதைய ஜனாதிபதி தனது விசேட அதிகாரங்களை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமையால், மிருசுவில் படுகொலைச்சம்பவம் இருபது ஆண்டுகாலமாக நீண்ட தொடர்கதையாகி, ஊடகங்களிலும் மனித உரிமை ஆர்வலர்களிடத்திலும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச மன்னிப்பு சபை, மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடத்திலும் பேசுபொருளாகியிருக்கிறது.
உலகடங்கிலும் மக்கள் கொரோனோ அச்சுறுத்தல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இலங்கையில் ஒரு மரணதண்டனைக்கைதியின் விடுதலை ஓசையின்றி இடம்பெற்றதாக கருத முடியவில்லை. கொரோனோ அச்சசுறுத்தலை அம்பலப்படுத்திய ஊடகங்களே இந்த வித்தியாசமான பொது மன்னிப்பையும் வெளிஉலகத்திற்கு தெரிவித்துள்ளன. “நீதியில்லா ஊரில் நாதியற்றவள் பிள்ளை பெற்றாலாம்“ என்று எமது முன்னோர்கள் சொல்வதுண்டு. நாதியற்றவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதுதான் அதன் பொருள். அதுதான் இலங்கையின் நீதித்துறைக்கும் நடந்துள்ளது. இவ்வேளையில்தான் இலங்கையில் முன்னர் நிகழ்ந்த பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இச்சம்பவங்களை இலங்கை அரசியலை கருத்தூன்றி கவனிப்பவர்களும் திரும்பிப்பார்க்கலாம். படுகொலை, பாலியல் கொலை, போதைவஸ்த்து கடத்தல், தொடர்பான பயங்கர குற்றங்கள் புரிந்த கைதிகளும், அரசியல் கைதிகளும் நீண்டகாலமாக சிறையில் இருக்கின்றனர். இவர்களில் இனவிடுதலைப்போர் தொடர்பிலான அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி முன்னைய மைத்திரி - ரணில் நல்லாட்சி ( ?) காலத்திலும் தொடர்ச்சியாக பேசப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினால் நன்மையா...? தீமையா...? என்று அன்றைய ஜனாதிபதி மைத்திரியும் அன்றைய பிரதமர் ரணிலும் சிறைச்சாலைகள் சீரமைப்பின் அன்றைய அமைச்சர் சுவாமிநாதனும் சிறிதுகாலம் பட்டிமன்றம் நடத்தினார்கள்! அந்த பட்டிமன்றச் செய்திகளையும் நாம் ஊடகங்களில் பார்த்தோம்.
"நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில், நல்லவரின் தயக்கமும் தாமதமுமே தீமையாய் முடிகிறது " என்று தமது ஹெம்லெட் நாடகத்தில் ஒரு செய்தியாகச் சொன்னவர் உலக நாடகமேதை வில்லியம் சேக்ஷ்பியர். அவ்வாறுதான் அன்றைய நல்லாட்சியிலும் அரசியல் கைதிகள் விவகாரமும் ஒரு நாடகத்திற்கு ஒப்பானதாக மாறியிருந்தது.
"வெளியே இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல. சிறையினுள்ளே இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல" என்று சிறிதுகாலம் சிறைவாசம் அனுபவித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவும், அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் துரத்தி துரத்தி வேட்டையாட முனைந்தபோதிலும், மனம் தளராமல் துணிந்து நின்று இந்தியா திகார் சிறைக்கைதிகளை இரட்சித்த தேவதையாக திகழ்ந்த கிரண்பேடியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள்!
இன்று இலங்கைச் சிறைகளில் ஏற்கனவே வாடிய நிலையில் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடைபட்டுள்ள அரசியல் கைதிகளின் வாழ்வும், நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டத்தில் இரண்டறக் கலந்துவிட்டது. இந்த அரசியல் கைதிகளில் எத்தனைபேர் நேரடியாக பயங்கரவாதச்செயல்களில் ஈடுபட்டவர்கள், எத்தனைபேர் சந்தேகத்தின்பேரில் கைதாகி சித்திரவதைகளின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டவர்கள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தெரியாத்தனமாக உணவும் உறையுளும் வழங்கியவர்கள், எத்தனைபேரிடம் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருந்தன என்பது பற்றியும் அவரவர் மனச்சாட்சிக்குத்தான் தெரியும். சட்டம் ஒரு இருட்டறை. அங்கு நீதிதான் ஒரு வெளிச்சவிளக்கு என்பார்கள். இந்தப்பின்னணியுடன் முன்னர் சிறையிலிருந்த சில முக்கிய அரசியல்வாதிகள் பற்றியும் கொலைக் குற்றச்சம்பவங்களுக்கு துணைசென்று சாதுரியமாக தப்பியவர்களையும் - வன்முறைகளில் ஈடுபட்டு பின்னாளில் அமைச்சர்களாகி போதி பூசைகளில் கலந்துகொண்ட புனிதர்களையும் எண்ணிப் பார்க்கத்தோன்றியது. இன்று இரண்டாக மூன்றாக பிளவுபட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியை ஸ்தாபித்த தலைவர்கள் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, பொடி அத்துல, லொக்கு அத்துல, மகிந்த விஜேசேகர, டி.ஐ.ஜீ. தர்மசேகர உட்பட பலர் அரசியல் கைதிகளாக வெலிக்கடை, மகஸின், கண்டி போகம்பர, யாழ்ப்பாணம், அநுரதபுரம் சிறைகளில் அடைபட்டிருந்தவர்கள்தான். விடுதலையானதும் மீண்டும் அரசியலில் ஈடுபட்டு தம்மை ஜனநாயக நீரோட்டத்தில் ஈடுபடுத்தினர்.
ரோகண விஜேவீரா, முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டு, சமசமாஜக்கட்சியின் வேட்பாளர் கொல்வின். ஆர். டி. சில்வாவை விட கூடுதல் வாக்குகள் பெற்றார். அதன்பின்னர் நடந்த மாவட்டசபைத் தேர்தலில் காலிமாவட்டத்தில் போட்டியிட்டு, காலியில் தெரிவானவர் மக்கள் விடுதலை முன்னணியின் (முன்னாள்) பொதுச்செயலாளர் லயனல் போப்பகே. இவர் காலியில் நடந்த இடைத்தேர்லிலும் போட்டியிட்டவர். ஆனைமடுவ இடைத்தேர்தலில் உபதிஸ்ஸ கமநாயக்க போட்டியிட்டார். பின்னாளில் மகிந்த விஜேசேகர சந்திரிகாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்தச்சம்பவங்களுக்கு முன்னோடியாக பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் கலாநிதிகள் என்.எம்.பெரேரா, கொல்வின். ஆர். டி. சில்வா முதலானோரும் அரசியல்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான். பின்னாளில் எம்.பி.க்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்கள். தோழர் சண்முகதாசன், ஸ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் 1971 ஏப்ரில் கிளர்ச்சி சந்தேக நபராக சிறையில் தடுத்தவைக்கப்பட்டவர்தான். 1959 செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஒரு சதிமுயற்சியால் சுடப்பட்டு, மறுநாள் 26 ஆம் திகதி உயிரிழந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கொலைச் சந்தேகநபர்களில் ஒருவரான (முன்னாள்) சமூகநலத்துறை அமைச்சர் திருமதி விமலா விஜயவர்தனா, பின்னர் சட்டத்தின் ஓட்டைகளினால் சாதுரியமாகத்தப்பி வெளிநாடு சென்று அஞ்சாதவாசம் தொடர்ந்தார்.
அரசியல் காரணங்களினாலும் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரிலும் முன்னர் சிறையில் இருந்தவர்கள்தான் தற்போதைய தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா, பின்னாளில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு - கிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் ஆகியோர். 1983 இல் வெலிக்கடையில் சிறையிலிருந்தபோது ஆவணி அமளியில் உயிர்தப்பிய டக்ளஸ் தேவானந்தாவும் வரதராஜப்பெருமாளும் பின்னர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டு , அங்கு சிறையுடைப்பு நடந்ததும் இந்தியாவுக்கு தப்பி ஓடியவர்கள்தான். இவர்கள் மீண்டும் வந்து இலங்கை அரசியல் அரங்கில் தோன்றினார்கள். புலிகள் இயக்கத்திலிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான் ) பின்னாளில் கிழக்கு மாகாண முதல்வரானார். தற்போது அவர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு சிறையிலிருக்கிறார். புதிய ஜனாதிபதி 2019 இல் பதவிக்கு வந்ததும் அவர் விடுதலையாகிவிடுவார் என்ற ஊகங்களும் வெளிப்பட்டன. அவரும் அடுத்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மான், மகிந்தரின் அரசில் நியமன அங்கத்தவராகி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் துணைத்தலைவராகவும் விளங்கினார். அடுத்த பொதுத்தேர்தலிலும் அவரும் போட்டியிடுகிறார். லலித் அத்துலத் முதலி என்பவர் தமது முன்னாள் மனைவிக்கு அசிட்வீசிய குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்ட ஒரு ஐக்கிய தேசியக்கட்சி பிரமுகர். ஆனால், இவரும் சாதுரியமாக வெளியே வந்து 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் இரத்மலானை தொகுதியில் போட்டியிட்டு வென்று, ஜே.ஆரின் அமைச்சரவையில் முதலில் வர்த்தக அமைச்சராகவும் பின்னர் பிரதிபாதுகாப்பு அமைச்சராகவும் பதவிவகித்தவர். லலித் அத்துலத் முதலி தமது முன்னாள் மனைவிக்கு அசிட் வீசி தாக்கியதனால், அன்று தேர்தல் மேடைகளில் எதிரணியினர் அவரை அசிட் முதலி என்றும் கேலிசெய்தனர். ஆனால், அவர் அமைச்சரானதும் விஹாரைகளில் அரசமரங்களுக்கு போதிபூசைசெய்து பாவங்களை கழுவிக்கொண்டார். பின்னாளில் இவர் பிரேமதாஸவுடன் முரண்பட்டார். இருவரும் ஒரு வார காலத்தில் வேறு வேறு இடங்களில் கொல்லப்பட்டனர். பண்டாரநாயக்கா கொலைச் சந்தேக நபர்கள் இருவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், லலித் -- பிரேமதாஸ கொலைக்குற்றவாளிகள் பிடிபடவேயில்லை.
வடக்கில் 1987 இல் வடமராட்சியில் லிபரேஷன் ஒப்பரேஷனுக்கு உத்தரவிட்டு பல இன்னுயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்த லலித் அத்துலத் முதலியும் தென்னிலங்கையில் இன்றும் மர்மமாக இருக்கும் ஒரு அரசியல் ஒப்பரேஷனில் பரலோகம் சென்றார். 2009 இறுதியுத்தத்தின் பின்னர் அதனை வெற்றிவிழாவாக கொண்டாடிய மகிந்தரும் அவருடைய தம்பி கோத்தபாய ராஜபக்ஷவும் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவும் கேக்வெட்டியும் பாற்சோறு உண்டும் மகிழ்ந்தார்கள். பின்னர் தோன்றிய முறுகளினால் வெள்ளைக்கொடி விவகாரத்தில் சரத்பொன்சேக்கா சிறைவைக்கப்பட்டார். விடுதலையாகியதும் மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி நன்றிக்கடனாக சரத்பொன்சேக்காவுக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி உயர்வும் வழங்கியதுடன் அனைத்து வேதனக் கொடுப்பனவுளையும் (இலட்சக்கணக்கில்) வழங்கியது. மக்களின் தேவைக்களுக்கு முன்னர், முன்னாள் சிறைக்கைதி சரத்பொன்சேக்காவுக்குத்தான் நல்லாட்சி நல்லது செய்தது! சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க மீதான புலிகளின் தற்கொலைத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, அரசியல் கைதியாக தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருந்த ரகுபதி சர்மாவின் மனைவி திருமதி வசந்தி ரகுபதி சர்மாவும் சுமார் 15 வருட காலம் சிறைவைக்கப்பட்டு குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். எனினும் கணவர் ரகுபதி சர்மாவுக்கு நீதிமன்றம் சுமார் 30 வருட காலத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தண்டனை அனுபவித்துவருகிறார் . கோயிலில் பூசை செய்துகொண்டிருந்த இந்த சர்மா எவ்வாறு கைதானார்..? என்பது பற்றி சட்டத்தரணிகளின் கூடாரங்களாக விளங்கும் சுமந்திரனின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு – மற்றும் தமிழ்த்தேசியத்தை தீவிரமாக முன்னெடுப்பதாக கூறிக்கொள்ளும் கஜேந்திரகுமார், சி.வி. விக்னேஸ்வரன், ஶ்ரீகாந்தா முதலானோரின் கட்சிகள் என்பன ஆராய்ந்து பார்த்தனவா...? சிறிது காலம் சிறையிலிருந்த சரத்பொன்சேக்காவுக்கு ஃபீல்ட் மார்ஷல் தகுதியும் வழங்கி, வேதனப்பாக்கியும் தந்த முன்னைய நல்லாட்சி அரசு, சுமார் 15 வருடகாலம் அநாவசியமாக சிறைவைக்கப்பட்ட திருமதி வசந்தி ரகுபதிசர்மா குற்றமற்றவர் என்று விடுதலை செய்திருந்தால், அவர் சிறைவைக்கப்பட்டதற்கான நட்ட ஈடு வழங்கப்பட்டதா..? சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவியுயர்வு. இலட்சக்கணக்கான ரூபாய்கள் வேதனம். ஆனால், அரசியலே தெரியாமல் - தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் பராமரித்து, கணவரின் கோயில் திருப்பணியிலும் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் சந்தர்ப்பவசமாக சிறைக்கூண்டில் அடைபட்ட அந்தக் குடும்பத்தலைவிக்கு 15 வருடங்களின் பின்னர் கிடைத்த நீதி என்ன...?
அரசியல் கைதியாக இருக்கும் சுதாகரன் என்பவரது மனைவி கிளிநொச்சியில் இறந்த சமயத்தில் சிறைக்காவலர்களினால் அந்த இறுதிச்சடங்கிற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவரது ஒரு பெண்குழந்தை, தனது தந்தை திரும்பிச்செல்லவிருந்த சிறை வாகனத்தில் ஏதும் அறியாமல், ஏறிச்செல்ல முயன்ற நெஞ்சை உருக்கும் காட்சியை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்! கைதியுடன் வந்த ஒரு சிங்களப் பொலிஸ்காரர் அந்த இறுதி நிகழ்வில் கண்ணீர் வடித்துக்கொண்டு நின்றார்!! கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித்தேர்தலின்போது, கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டச்சென்ற அவரது அண்ணன் மகன் நாமல் ராஜபக்ஷ, மற்றும் அங்கஜன் முதலான அரசியல்வாதிகளும் கிளிநொச்சியில் வாழும் அந்த அரசியல் கைதியின் இல்லம் சென்று உறவினர்களுடன் பேசினார்கள்! கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவிக்கு வந்தால் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாவார்கள் என்ற ஊகமும் எம்மவரிடத்தில் அப்பொழுது எழுந்தது! ஆனால், பொதுமன்னிப்பில் விடுதலையாகியிருப்பது, ஒரு மரணதண்டனை குற்றவாளி!?
இன்றைய ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்பட்ட ( தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குட்பட்ட ) இந்த பொது மன்னிப்புக்காக இன்னமும் எத்தனைபேர் சிறையினுள்ளே காத்திருக்கிறார்கள்? என்பது ஜனாதிபதிக்கே வெளிச்சம்! இலங்கை மக்கள் இனிவரும் காலத்தில் இந்தக் கொரோனோவையும் மறக்கமாட்டார்கள். கொலை பாதகம் செய்தவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பையும் மறக்கமாட்டார்கள். 2000 ஆம் ஆண்டில் தமது உறவுகளை பறிகொடுத்த அந்த மிருசுவில் மக்களும் , இன்று நீதியில்லா ஊரில் நாதியவற்றவர்கள் நிலைக்குள்ளாகியிருக்கிறார்கள்!
தற்போது நாதியற்றவர்களும் வெளியில், நீதியை மறுத்தவர்களும் வெளியில்!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|