19 ஆம் நூற்றாண்டில் வந்த சிறந்த நாவல்களான மேடம் பாவாரி – அனா கரினினா இரண்டிலும் திருமண பந்தத்திற்கு அப்பால் உடலுறலில் ஈடுபட்ட பெண்கள் நாவலாசிரியர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் . ஒரு இடத்தில் ஆசனிக் கொடுக்கப்படுகிறது . மற்றயதில் ரயிலின் முன் தள்ளப்படுகிறாள் . தி.ஜானகிராமன் தனது மோக முள் நாவலில் வரும் நாயகன் பாபுவுடன் ஆரம்பத்தில் உடலுறவு கொண்ட பெண்ணை நதியில் தள்ளி கொலை செய்துவிட்டு மிகுதித் கதையைத் தொடர்கிறார் . இவர்கள் மூவரும் ஆண்கள். கை நடுங்காது செய்ய முடியும். ஆனால் சல்மாவுமா? சல்மாவின் இரண்டாம் ஜாமங்களில் கதையில் காபிரோடு உடலுறவு கொண்ட பிர்தவ்ஸ் என்ற பெண் பெற்ற தாயாலேயே வலுக்கட்டாயமாக எலிபாஷாணம் குடிக்க வைக்கப்பட்டபோது எனக்கு நெஞ்சம் அதிர்ந்தது . மற்றைய பெண் பாத்துமா வீட்டை விட்டு வாழ்வதற்காக ஓடினாள் . இறுதியில் வாகனத்தால் தாக்குப்பட்டு இறப்பதாக வருகிறது . அங்கு சுலைமான் ஒழுக்கம் கெட்டவளுக்கு அல்லாவால் கொடுக்கப்பட்ட தண்டனை என புளகாங்கிதமாகக் கூறுகிறான்.
சல்மாவை தொலைபேசியில் அழைத்து “பெண் எழுத்தாளராக இருந்துகொண்டு இப்படிச் செய்துவிட்டீர்களே? “ என ஆதங்கத்தோடு கேட்டேன். “அதுதானே ரியலிட்டி” என சல்மாவிடமிருந்து பதில் வந்தது. உண்மைதான் . நாவலுக்கு நம்பும்படியாகவும் அத்துடன் திருப்தியாகவும் இருக்கவேண்டுமென்பார்கள் (Believability and satisfaction).
சல்மாவின் இரண்டாம் ஜாமங்களில் கதையில் வழமையான கதைப் பின்னலில்லை (Plot)). எந்த ஒரு கிளைமாக்ஸ் உம் இல்லை. ஒரு திருமணத்திற்கான ஏற்பாடு ஆரம்பித்து 300 பக்கங்களுக்கு மேலாகச் செல்கிறது நாவல். பின்பு ஒரு நாளிலே பெரிய காரணம் எதுவுமில்லாமல் தம்பதியரிடம் மன உடைவு வருகிறது அதைவிடக் கணவனற்ற இரண்டு பெண்கள் காபிருகளுடன் தொடர்பு வைத்திருந்து உயிரிழக்கிறார்கள் . இந்தச் சம்பவங்களைக் கொண்ட ஆறு இஸ்லாமியக் குடும்பங்களின் கதை . முடிவுகூட சிறந்த முடிவல்ல . ஆனால் கதை தொடர்ச்சியாக வந்து இதன் பின்பு சொல்ல எதுவுமில்லை என்ற வடிவத்தில் முடிகிறது . இதை In logical exhaustion” என்பார்கள்.
நாவலை வாசிக்கும்போது அதிலிருந்து எதையாவது நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்படியான ஒரு உணர்வை இந்த நாவல் கொடுக்கிறது. இந்த உணர்வை profluence என்பார்கள். இதனால் இரண்டாம் ஜாமங்களில் கதையை ஒரு சிறந்த நாவலாக நான் கருதுகிறேன்.
“profluence- By definition – and of aesthetic necessity – a story contains profluence, a requirement best satisfied by a sequence of causally related events, a sequence that can end in only one of two ways: in resolution … or in logical exhaustion”
பெண்கள் மட்டும் தனித்து வாழும் இந்த உலகத்தில் ஆண்கள் தேவைகளுக்கு மட்டும் பயன்படுகிறார்கள் என்று ரவிக்குமார் எழுதும் இந்த நாவலுக்கான முன்னுரையில் சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பான விடயம்.
பழக்கும் வாகனத்தில் பழகுபவர் ஓடுவது போல் தெரிந்தாலும் அவரைப் பயிற்சியாளரே கட்டுப்படுத்துகிறார். நாவலில் அதிக ஆண்கள் இல்லாதபோதிலும் ஆண்களே ஒவ்வொரு இடத்திலும் கதையை திருப்புக்கிறார்கள் . பெண்கள் எல் (L) போட்ட சாரதிகளாக வருகிறார்கள். மகள் வஹிதாவை யாருக்கு கல்யாணம் முடித்து வைக்கவேண்டுமென்பதை ஆணாகிய தந்தையே முடிவு செய்கிறார் . இதில் தாயின் கருத்து துச்சமெனப் புறந்தள்ளப்படுகிறது. யாரை சமூகத்திலிருந்து விலக்குவது என்பதை ஆணுலகமே தீர்மானிக்கிறது . பெண்களுக்கு உள்ள ஆசைகள், நிராசைகள் என்பவை பெண்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது .
பெண்கள் தனியாகக் கூடுமிடத்தில் இப்படியா பேசுவார்கள் என நினைக்கக்கூடியதாக தனிப்பெண்ணுலகத்தில் பெண்களது பேச்சுக்கள் இருக்கிறது . பெண்கள் தங்களிடையே பாலுணர்வைப் பற்றிய விடயங்களை எந்த தயக்கமுமின்றி பேசுகிறார்கள். அப்படியான பேச்சுக்களை நாவலில் இதுவரை வெளிப்படையாக வைத்தவர்கள் தமிழுலகில் குறைவு . தாய் மகளை ஏசும் இடத்தில் “வீணாய்போன முண்டை, ஒரு பள்ளப் பய சுண்ணிதானா இவளுக்கு கெடச்சுது. துலுக்கப்பய கிடைக்கல்லயா?"
அதே போல் எனக்கு ஆச்சரியமளித்த விடயம், இஸ்லாமியர்களுடன் வேலை செய்யும் தலித்துக்கள் எப்படி நடத்தப்படுகிறாரகள் என்பதை உள்ளே புகுந்து பார்க்கும்போது இந்துக்களுக்கும் அவர்களுக்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை .
“அந்த குடியானவ சனங்க கண்ணுதான பட்டுப்போச்சு, அவளுக நம்ம பொண்டுக உடுத்தியிருக்கிற சேல நகையைப்பார்த்து விட்ட மூச்சுதான் நம்மள உலர்த்தி உட்காரவச்சிருக்கு. கபீருக்கு கொடுத்தா தர்மத்தில சேராது."
முக்கிய பாத்திரமாக கரிம், தலித் சமூகத்தில் உள்ள மாரியாயியை ஊரறிய வைப்பாட்டியாக வைத்திருக்கிறான் . அவளுக்கு அவனது மனைவி சொஹ்ரா துணியெடுத்து கொடுக்கிறாள். ஊரில் எல்லா ஆண்களும் அப்படித்தான் என சமாதானப்படுகிறாள் . சொஹ்ராவினது தங்கை கணவனற்றவள் . முன்வீட்டில் உள்ள சிவா என்பவனுடன் உறவு கொண்டதால் எலிப்பாஷாணம் கொடுத்து சொந்தத் தாயால் கொலை செய்யப்படுகிறாள் .
ஆண் – பெண் உறவின் சமமற்ற தன்மையை இதை விட அழகாகக் கொண்டு வரமுடியாது.
சையது என்ற பாத்திரம் தனது மகனின் மனைவியாக வந்தவளைத் தொட்டுப் பேசுவதும் , தனது பழைய காம விளையாட்டுகளை அதுவும் இலங்கையில் சிங்களப் பெண்களோடு செய்ததை விவரிப்பது மருமகளான வஹிதாவுக்கு அருவருப்பைக் கொடுத்து. அந்த வீட்டை விட்டு தாய் வீட்டுக்குப் போக வைக்கிறது.
உதாரணமாக “ அப்ப நான் எப்படி இருப்பன் தெரியுமா? சும்மா உன் புருசன் மாதிரியா சோம்பேறிப் பயலா இருப்பேன். கல்யாணமான புதிசில ஒரு மாசத்துக்கு சபியாவை விட்டு துளிகூட நகரமாட்டேன்ல. பகலும் ராவும் .! அவளுக்கு பத்து வயசுதான். வயசுக்கு கூட வரலை, அவளுக்கு இருந்தாலும் எனக்கு மனசு கோணாம நடந்துக்குவானா பாரு !. அப்புறம் ஊரில் நிறைய பொம்பிளைப்பிள்ளைக பின்னால திரிவாக ! நான் மைனர் கணக்கா இருப்பேனா,அவளுகளை ஒரு கை பாத்திருவேன்"
இந்த நாவலில் எவரும் முக்கிய பாத்திரமில்லை. கிளைமாக்ஸில்லை . ஏன் முடிவு கூட திருப்தியாகவில்லை. ஆனால் நாவல் ஒரு விதத்தில் தற்காலத்தின் ஒரு மானிடவியலின் ஒரு துளி . இஸ்லாமியச் சமூகத்தின் உள்வெளியை, காலுறையை புரட்டி போட்டதுபோல் அதனது உள்ளடக்கங்களை எதுவித மறைப்புமின்றி தெளிவாக காட்டுகிறது .
ஐரிஸ் மக்கள் தங்களது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவேண்டுமென எழுத்தாளர் ஜேம்ஸ் ஜொய்ஸ் கூறினார் . இந்தக் கூற்று எல்லா மத இனக் குழுக்களுக்கும் பொருத்தமான கருத்தாகும். அதற்கு இந்த நாவல் ஒரு கண்ணடியாக பல காலமிருக்கும்.
இது ஒரு காலச்சுவடு வெளியீடு
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|