- குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம் நடத்திய `அவுஸ்திரேலியா – பலகதைகள்’ சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்றது (2019) -
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண். மருத்துவம் பயில்வதில் மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.
அடோனி அவளைக் கடந்து போகும் தருணங்களில் தன் வசம் இழந்து விடுவாள். புத்தகத்தைச் சற்றுக் கீழ் இறக்கி, மாரளவில் பிடித்துக்கொண்டு, கடைக்கண்ணால் ஒருதடவை அவனைப் பார்ப்பாள். ‘ஏதாவது கதையேன்’ என்பது போன்று அந்தப் பார்வை இருக்கும். அடோனி ஒரு அபொறியினல், திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன். மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து படிப்பதற்காக மெல்பேர்ண் வந்திருந்தான்.
இப்படித்தான், அன்று அடோனி அவளைக் கடந்து செல்கையில், திடீரென கரோலின் தன் இருப்பை விட்டு எழுந்து நின்று புன்னகைத்தாள். எத்தனை நாள் தான் கடைக்கண்ணால் வெட்டுவது? அடோனி பயந்தே போய்விட்டான். பளிங்குக்கண்கள், மெல்லிய கீற்றுப் போன்ற புருவங்கள், கூரிய நாசி, காற்றிலாடும் பறவையின் மெல்லிய பொன்நிற இறகுகளாகக் கூந்தல், பரிதிவட்டம் போன்றதொரு ஓலைத்தொப்பி. ஏதோ ஒரு பெயர் தெரியாத சென்றின் நறுமணம் ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. இவை எல்லாமுமாகச் சேர்ந்து அவனைப் பொறி போல அப்பிக் கொண்டது. அதுவே அவர்களின் மூச்சு முட்டும் தூரத்திற்குள்ளான முதல் அறிமுகம்.
“ஹலோ” பட்டெனப் பேசும் ஆசாமி கரோலின். அப்பாவி என எழுதி ஒட்டியிருக்கும் தன் அகன்ற விழிகளால் அடோனி அவளை முழுசிப் பார்த்தான். போய்விட்டான்.
பூர்வீகக்குடிகளும், அவர்களுக்குப் பிறந்த கலப்பினத்தவரும் படிப்பதற்கு வருவதே குறைவு. அடோனி மருத்துவம் படிக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அவுஸ்திரேலியாவில் பூர்வீகக்குடிகளின் உடல் ஆரோக்கியம் ஏனையவர்களைக் காட்டிலும் குறைவாக இருந்ததும், அவர்கள் இள வயதிலேயே மரணமடைந்து வருவதையும் பள்ளியில் படிக்கும்போது அடோனி அறிந்திருந்தான். அதுவே அவனை மருத்துவம் படிக்கத் தூண்டியிருக்கலாம்.
`கரோலின் என்னை விரும்புகின்றாளா?’ அடோனியின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. முதற் குமுழி ஒன்று அவன் அடிமனதில் இருந்து மேலெழுந்து நடனமிட்டது.
தற்செயலாக ஆரம்பித்த இந்தச் செயல், நாளடைவில் அவர்களின் அன்றாட காரியங்களுள் ஒன்றாகிவிட்டது. `சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது’ என்ற பட்டறிவு அடோனிக்கு வரும்போதெல்லாம், `அடிக்கிற கை தான் அணைக்கும்’ என்று சொல்ல வருபவன் வருண். அவனே அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தைச் செறிவாக்கி எண்ணெய் ஊற்றி வளர்ப்பவன்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இரண்டு குழுக்களாக இருந்தார்கள். கிழக்காசியாவைச் சேர்ந்தவர்கள் ஒருபுறம்; அது தவிர்ந்த ஐரோப்பா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்னொருபுறம். இரண்டிலும் சேராத பிரகிருதிகளும் உண்டு, கரோலின், அடோனி போல. இரண்டு குழுக்களென்று சொல்வதால் – அவர்களிடையே சண்டை சச்சரவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் சார்ந்து தானாக உருவாகிய குழுக்கள் இவை.
“அடோனி! நான் நாளைக்கு விரிவுரைகளுக்கு வரமாட்டேன்” என்றாள் கரோலின். அடோனி! என்ற அவளின் அழைப்பு மற்றவர்கள் கூப்பிடுவது போல் அல்லாமல் சற்றே வித்தியாசமாக இருந்தது அன்று. குருவி ஒன்றின் உதடுகளுக்கிடையே எழுந்து அமுங்கும் கீச்சிட்ட குரல் போல் இருந்தது. சொல்லிவிட்டு அடோனியை உற்றுப் பார்த்தாள். மொட்டையான அந்த வார்த்தைகளில் எதோ பூடகமாக ஒளிந்திருப்பதை உணர்ந்தான் அடோனி. கரோலின் முன்னர் விரிவுரைகளுக்கு வராத சந்தர்ப்பங்களில் இப்படி அவனுக்குச் சொல்லியிருந்ததில்லை.
“ஏன்?” என்று கேட்க நினைத்தான் அடோனி. ஆனால் கேட்கவில்லை. குனிந்து அவளின் முகத்தைப் பார்த்தபடி நின்றான்.
“வீடு மாறுகின்றோம்” கவலையுடன் சொல்லிவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள் கரோலின். ஒருவர் ஒரு இடத்தில் பலகாலம் வாழ்ந்துவிட்டு, அந்த இடத்தைவிட்டுப் பிரிந்து போவது கவலை தரும் செய்திதான். அதுவும் மெல்பேர்ணில் `ரூறாக்’ என்ற செல்வந்தர்கள் வசிக்கும் அந்த அற்புதமான இடத்தைவிட்டுப் பிரிவதென்றால்…?
“புதிய வீட்டிற்குப் போகவேண்டும் என்ற ஆசையும் இருக்கின்றது. அதே நேரத்திலை இப்ப இருக்கிற வீட்டையும் அயலில் உள்ளவர்களையும் விட்டுப் பிரிகின்றோம் என்ற கவலையும் இருக்குது” அவள் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் கரோலினின் தாத்தா---அப்பாவின் அப்பா---இறந்துவிட்டார். செத்தவீட்டிற்கு சகமாணவர்களுடன் அடோனியும் போயிருந்தான். தாத்தா தனது எண்பத்தியெட்டாவது வயதில் காலமாகியிருந்தார். செத்தவீட்டிற்கு பல்கலைக்கழகத்தின் முதல்வர், விரிவுரையாளர்கள், இராணுவ அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பல பெரிய புள்ளிகள் வந்திருந்தார்கள். தாத்தாவுக்காகத்தான் எல்லாரும் அந்தப் பழைய வீட்டில் வாழ்ந்து வருவதாக முன்பொருநாள் கரோலின் சொல்லியிருந்தாள். பழைய வீடென்றாலும் பெரிய மாளிகை அது. வீட்டின் முன்புறத்தில் ஒரு ‘செக்கியூரிட்டிப் பொயின்’றும், பின்புறம் பூந்தோட்டம், நீர்த்தடாகம் என்பனவும் இருந்தன. வீட்டைச் சுற்றி உயர்ந்த மதில் ஒன்று முடிவிடம் தெரியாமல் ஓடியது. அவர் அந்த வீட்டை பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தாராம். முதல் பார்வையில் அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் ஒரு அரண்மனையின் தன்மையை உணர்ந்து கொள்வார்கள்.
அதற்கு முன்னரும் அடோனி, கரோலினின் வீட்டிற்குப் போயிருக்கின்றான். அவளின் பிறந்ததினத்திற்குப் போனபோதுதான் ஒருநாள், கரோலின் தனது பெற்றோருக்கு முதன்முதலில் அவனை அறிமுகம் செய்திருந்தாள். கரோலினிற்கு `கிறிஸ்ரல்’ என்ற ஒரு தங்கையும் இருக்கின்றாள். பெயருக்கேற்ற விதத்தில் அவள் ஒரு பளிங்கு. தந்தையார் ஏதோ பிஸ்னஸ் செய்வதாகச் சொல்லியிருந்தாள். அப்போதெல்லாம் தாத்தா அடோனியை இடைமறித்துக் குறுக்குக் கேள்விகள் கேட்பார். முகத்தை ஒரு விறுமாண்டி போல வைத்துக்கொண்டு அவர் கேட்கும் கேள்விகள் அடோனிக்குப் பிடிப்பதில்லை. தாத்தாவிற்கு அவன் மீது ஒரு வெறுப்பு இருந்ததாகவே அவன் உணர்ந்தான்.
கரோலினும் அடோனியின் வீட்டிற்கு நண்பர்களுடன் வந்திருக்கின்றாள். கரோலினை முதன்முதலாக அடோனி தன் பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்தபோது, அவர்கள் மனதினுள் ஏதோ ஒருவித பயம் அப்பிக் கொண்டது. கரோலின் வெள்ளைக்காரி ஆயிற்றே! நாட்டிற்குள் நுழைந்தது முதல் – தம் இனத்தவரை அடித்துத் துரத்தியதும், ஆக்களைக் கெடுத்து, பெண்களின் கற்பைச் சூறையாடி, பிள்ளைகளை அள்ளிக் கொண்டு போனதும் அடோனியின் பாட்டிக்கு நினைவிற்கு வந்தன. அவை கொதிக்கும் எண்ணெயில் கொப்பளங்களாக வெடித்து வெடித்துச் சிதறின.
பள்ளி வாழ்க்கையின் போது இப்படிப்பட்ட ஆண் – பெண் தொடர்புகள் இல்லாதிருந்ததும், பல்கலைக்கழகம் போனதன் பின்னர்தான் இத்தகைய தொடர்புகள் ஆரம்பித்திருப்பதையும் இரண்டுபக்கத்துக் குடும்பத்தாரும் அவதானித்திருந்தார்கள்.
கரோலின் வீடு மாறும் விடயத்தை மற்றவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் தனக்கு மாத்திரம் தான் சொல்கின்றாளா?. ஒருவேளை தன்னிடம் ஏதாகிலும் உதவியை எதிர்பார்க்கின்றாளா? அடோனியின் மனம் குழம்பியது.
“நான் ஏதாவது உதவி செய்யவேண்டுமா?”
“இல்லை. தேவையில்லை. எல்லாப் பொருட்களும் பெட்டிகளில் போட்டு வைத்துவிட்டோம். அப்படியே தூக்க வேண்டியதுதான். அப்பப்பாவின் உடமைகள்தான் ஏராளமாக உள்ளன. அவற்றைத்தான்….”
“நான் சனிக்கிழமை வருகின்றேன்” என்றான் அடோனி. அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
சனிக்கிழமை கரோலினின் வீட்டிற்குச் சென்றபோது, அவர்களுடன் படிக்கும் லிசாவும் எலிசபெத்தும் வருணும் அங்கே நிற்பதைக் கண்டான் அடோனி. அவர்கள் ஏற்கனவே உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
“வா… வா… உன்னைத்தான் கரோலின் தேடிக் கொண்டிருக்கின்றாள்” என்றான் வருண் புன்னகைத்தபடியே.
அந்த வீட்டில் ஒரு நிலக்கீழ் அறை இருந்தது. அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக அன்றுதான் நிலக்கீழ் அறையை அடோனி கண்டுகொண்டான்.
“அப்பா இருக்கும்வரை ஒருவருக்குமே அந்த அறைக்குள் போவதற்கு அனுமதி கிடையாது” என்றார் சிரித்தபடி கரோலினின் அப்பா.
வியாபார நிமித்தம் அங்கு இங்கு என அலையும் கரோலினின் தந்தை அன்று நின்றிருந்தார். வீடு மாறுவதற்காக ஒருகிழமை லீவில் நிற்பதாகச் சொன்னார்.
எல்லாரும் நிலவறைக்குள் இறங்கினார்கள். எங்குமே சிலந்தி வலைகளும் ஒட்டடைகளுமாக இருந்தன. பெட்டி பெட்டியாக தூசி படிந்த தாத்தாவின் ஆவணங்கள், உடைமைகள் நிறைய பரவி இருந்தன. ஆளுக்காள் முகத்தைப் பொத்தியபடி `அச்சூம்’ போட்டார்கள். எலிசபெத் `மிஸ்டர் பீன்’ போல் கையை முகத்தினின்றும் எடுத்து, உதட்டிற்குக் கீழ் வைத்து மெதுவாக `அச்சும்’ என்றாள். எல்லோரும் சிரித்தார்கள்.
“உங்கள் தாத்தா என்ன வேலை செய்தார்?” திடீரெனக் கேட்டாள் லிசா. அவளின் அந்தக் கேள்வியினால் கரோலினின் முகம் திடீரென கருகருவென மாறுவதை அடோனி கண்டுகொண்டான்.
“உஷ்! பிறகு சொல்கின்றேன்” சுட்டுவிரலினால் தன் உதட்டை அழுத்தினாள். படிக்கட்டுகளின் அடியில் நின்றபடி மேலே எட்டிப் பார்த்தாள்.
“அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு உளவு நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் எனது தாத்தாவும் ஒருவர். The Australian Security Intelligence Organisation” மெல்லிய குரலில் தயங்கியபடி சொன்னாள். அதன் பின்னர் கரோலின் ஏதோ சொல்ல முற்பட்டதையும், சொல்ல வந்ததை முழுமையாக முடிக்காமல் விட்டுவிட்டதையும் அடோனி கவனித்தான்.
அவளைச் சூழ்ந்து நின்ற அனைவரும், படிக்கட்டின் வழியே ஓடும் கம்பியை ஒருமுறை பிடித்து தமது சுய உணர்வைப் பரிசோதித்துக் கொண்டனர். அவுஸ்திரேலியாவின் ஒரு பெருங்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடனா தாங்கள் படித்துக் கொண்டிருக்கின்றோம், பழகிக் கொண்டிருக்கின்றோம் என வியப்பில் ஆழ்ந்தனர் அவர்கள். ஆனாலும் கரோலினில் இவை ஒன்றுமே தெரியவில்லையே?
கரோலினும் லிசாவும் எலிசபெத்தும் நிலவறைக்குள் நிற்க, வருணும் அடோனியும் படிகட்டுகளின் வழியே மேல் ஏறி நடுவில் நின்றார்கள். பெட்டிகள் கீழிருந்து மேலே சென்றன. பெட்டிகளைக் கொடுக்கும்போது வேண்டுமென்றே அடோனியின் கைவிரல்களைச் சீண்டினாள் கரோலின். குறுகுறுத்தபடி அவன் கரோலினைப் பார்த்தான். கரோலினின் கண்களில் ஒருவித மயக்கம் மிதந்ததைக் கண்டுகொண்டான். அந்த மயக்கத்தில் அடோனி சிலிர்த்துப் போனான்.
“கரோலின்! இங்கே ஒருக்கால் வா. அம்மா கூப்பிடுகின்றார்” மேல் இருந்தபடியே தந்தை கூப்பிட்டார். அவர்களிடையேயான அந்த ஊடலை அவர் கண்டிருக்கக் கூடுமா? குசினிக்குள் அம்மா தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். குசினிக்குள் சென்ற கரோலின் நீண்ட நேரமாக வரவில்லை. கரோலினின் இடத்தை நிரப்ப கிறிஸ்ரல் அங்கே வந்தாள்.
“அடோனி! நீங்கள் கீழே போங்கள். நான் மேலே நிற்கின்றேன்” என்றாள் கிறிஸ்ரல்.
அடோனி வருணைப் பார்த்தபடி, படிகளின் வழியே கீழ் இறங்கி நிலவறைக்குள் சென்றான். நிலவறைக்குள் ஒரு மின்சார பல்ப் மாத்திரம் எரிந்து குருட்டு வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தூசிப்படலம் மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. கடைசிப் பொதிகள்---ஏறக்குறையப் பத்திற்கும் மேல்---சற்றே வித்தியாசமாக இருந்ததை அடோனி அவதானித்தான். அவற்றின் மேல் எழுதப்பட்டிருந்த பெயரும் வேறாக இருந்தது. அடோனி ஒரு பேப்பரை எடுத்து பெட்டிகளின் மேல் எழுதியிருந்த பெயர்களைக் குறித்துக் கொண்டான்.
கரோலின் ஒரு தட்டில் கோப்பியும் பிஸ்கெற்றும் கொண்டு வந்தாள். எல்லோரையும் மேலே ஏறி வரும்படி கூப்பிட்டாள்.
அதன் பின்பு அங்கே பெரிதாக வேலை இருக்கவில்லை. அடோனிக்கும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. தலை வலிக்கின்றது எனச் சொல்லியபடி உடனடியாகக் கிழம்பி விட்டான்.
அடுத்துவந்த திங்களும் செவ்வாயும் அடோனி யூனிக்குப் போகவில்லை. மனம் பாறாங்கல்லாய்க் கனத்தது. அறைக்குள் தனிமையில் தவித்தான். கரோலின் பற்றி அவனால் தெளிவாக எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. பாட்டியார் சொன்னதைத் தவிர, வேறந்த எண்ணங்களும் தலை தூக்கவில்லை. கரோலினைப் பிடிக்காமல் போனதற்கு, அவள் `வெள்ளைக்காரி’ என்பதைத்தவிர வேறெந்தக் காரணமும் இருக்கவில்லை. வெள்ளைக்காரரை ஏன் பிடிக்கவில்லை என ஆராயப்போனால் நாம் பின்னோக்கி இருநூறு வருடங்களுக்கும் மேல் போய் அங்கிருந்து வரவேண்டியிருக்கும்.
வெள்ளைக்காரர்கள் பற்றிய கதைகளை - தனது மூதாதையருக்கு நடந்த துயரங்களை – தமது இனத்தின் அடையாளத்தை அழித்ததை - அடோனி சிறுவயதாக இருக்கும்போதே பாட்டியார் பல தடவைகள் அடோனிக்குச் சொல்லியிருக்கின்றாள். அவனது மனக்குழப்பம் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த வேளையில், காணாமல் போனவர்கள் பற்றியும், கவர்ந்து செல்லப்பட்டவர்கள் பற்றியும் பாட்டி கதை கதையாக அவனுக்கு சொல்லியிருக்கின்றாள். அதுகுறித்து கனவு கண்டு விழித்து நடுங்கி இருக்கின்றான். அது காலந்தொட்டு அடோனிக்கு வெள்ளை இனத்தவர் மீது ஒரு வெறுப்பு வளர்ந்து கொண்டே வந்திருக்கின்றது. ஆனால் அவனது அம்மா வெள்ளைக்காரர்கள் பற்றி எதுவும் அவனிடம் சொல்லாதது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒருவேளை அவள் பாதி வெள்ளையாகிவிட்டது காரணமாக இருக்கலாம்.
இதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கரோலின் ஒரு `தங்கக் கட்டி’ போலவே அடோனிக்குத் தென்பட்டாள். அந்தத் தங்கக் கட்டியைத் தூக்கி எடை பார்க்க ஆசையாகவும் இருந்தது அவனுக்கு. மாறி மாறிக் கொப்பளிக்கும் எண்ணங்களுடன் போராடினான் அடோனி.
அறையைப் பூட்டிவிட்டு - கரோலினின் வீட்டில் இருந்து எழுதிக்கொண்டு வந்த இரண்டு பெயர்களையும் கொம்பியூட்டரில் தேடினான். கூகிள் அவனுக்குத் திகைப்பான செய்திகளைச் சொன்னது. ஒன்று கரோலினின் தாத்தா. மற்றவர் தாத்தாவின் அப்பா, முப்பாட்டன். தாத்தாவைப் பற்றி ஏற்கனவே கரோலின் சொல்லிவிட்டாள். முப்பாட்டன் செய்த கொடுமை அதைவிடப் பன்மடங்கானது. தனது முன்னோர்கள் செய்தவற்றில் உடன்பாடு இல்லாததால்தான் கரோலின் எல்லாவற்றையும் மறைத்தாளா? அந்த இறந்துபோய் விட்ட இருவரும் கொடுத்த திகைப்பினால் அடோனிக்கு நிஜமாகவே காய்ச்சல் வந்துவிட்டது. காய்ச்சல் முற்ற அடோனி தனது மனதோடு பிதற்றினான். முரண்பட்ட எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டான்.
“கரோலினைத் திருமணம் செய்வது சாத்தியப்படுமா?”
“அப்போதெல்லாம் அவர்கள் எங்கள் பெண்களின் கற்பைச் சூறையாடினார்களே!”
அதன் பிறகு மனச்சாட்சி தொடர்ந்து அடோனியைப் பேசவிடாது தடுத்தது. தானே எல்லாவற்றையும் பேசிக் கொண்டது.
“கற்பைச் சூறையாடுவதற்கும் காதல் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.”
“உன்னுடைய அப்பா கூட அவள் இனத்தவர்தானே!”
“பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?”
“இத்தனை வருடங்கள் காத்திருந்து, அந்தப் பரம்பரையில் இப்படியொரு பெண் முகிழ்த்திருக்கின்றாளே எனச் சந்தோஷப்படு.”
அடோனி தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
மாலையில் வருணும் கரோலினும் அவனைப் பார்த்துச் செல்ல வந்திருந்தார்கள்.
கரோலின் அடோனியின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து,
“ஓ… அனலாகக் கொதிக்கின்றதே!” என்றாள்.
அடோனி சீறி விழுந்தன். “உனது முப்பாட்டன் அவுஸ்திரேலியாவில் நிற வெறிக்கொள்கையை அமுல்படுத்தியவர் அல்லவா! அதுதான் என் தலை கொதிக்கின்றது” கோபமாகச் சொன்னான்.
வருண் திகைத்துப் போனான்.
கரோலினின் முகம் குப்பென வியர்த்தது. அவள் மேல் ஒரு பாறாங்கல்லு விழுந்து உருண்டது போன்றிருந்தது. அந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ள மனம் விரும்பாதவளாக, தடுமாற்றத்துடன் அறையைவிட்டு வெளியேறி வாசலில் நின்றாள்.
கரோலின் வெளியே போனபின்னர், நெடுநேரம் வரை தனது படுக்கையில் இருந்தபடி முகட்டில் பார்வையை ஓடவிட்டபடி இருந்தான் அடோனி. வருண் அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“வெளியே நிற்கின்றாள். கூட்டி வரவா?” அடோனியிடம் அனுமதி கேட்டான் வருண்.
“உம்” என்று பெருமூச்செறிந்தான் அடோனி.
உள்ளே வந்த கரோலினின் கண்கள் மின்னின. இருவரில்
யார் முதலில் பேசுவது என்று காத்திருந்தார்கள். தங்களுக்குள் செருமி ஒத்திகை பார்த்துக் கொண்டார்கள். எந்த நேரத்திலும் ஒத்திகை நிஜமாகலாம் என எதிர்பார்த்தான் வருண்.
“மூட்டை மூட்டையாகக் கொண்டுபோன உங்கள் தாத்தா பூட்டனின் முதுசங்கள் என்னவாயிற்று?” கரோலினைப் பார்த்துக் கேட்டான் அடோனி.
“அந்தத் தரித்திரங்களை எல்லாம் எரித்துவிட்டார் என் அப்பா. அப்பாவிற்கு அரசியல் பிடிப்பதில்லை” என்றாள் அவள்.
அந்தக் கேள்வி பதிலினால் இருவரின் கண்களும் பனித்தன.
சிறிது நேரம் தான். படுக்கையில் இருந்து தாவிக்குதித்து கரோலினைக் கட்டிப்பிடித்தான் அடோனி. ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடியே தூக்கிச் சுற்றினார்கள். நோய்க்கு அருமருந்தாக மாறி மாறி முத்தங்கள் பொழிந்தனர்.
வருண் அந்தக் காட்சியைத் தவிர்க்க வேண்டி, ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டான். `நிறவெறியை அமுல்படுத்தியவர்களின் வாரிசுகளும், நிறவெறிக்கு உள்ளானவர்களின் வாரிசுகளும் இன்று மனமொத்து இணைகின்றார்கள்.’ சிந்தனைவெளியில் சஞ்சரித்தான் வருண். அவனது வெளியை, வீட்டின் பின்புறம் ஒன்றுடன் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த பூனையும் எலியும் ஊடறுத்தன. கொழுத்த எலி ஒன்று பூனையின் மேலே ஏறிச் சவாரி விடுவதும், பூனை அதனைக் கீச்சுக் காட்டுவதுமான காட்சி தெரிகின்றது.
அப்போது வருணின் மொபைல்போனிற்கு ஒரு அழைப்பு வந்து, அடோனிக்கும் கரோலினிக்கும் இடையேயான இறுக்கத்தைத் தளர்த்தியது. சத்தம் வந்த திசை நோக்கி அடோனியும் கரோலினும் பார்வையைச் செலுத்தினார்கள். அங்கே வருணின் தொலைபேசியில் கிறிஸ்ரலின் முகம் பளிச்சிட்டது. அவர்கள் இருவருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.
இன்னொரு பூனை, இன்னொரு எலியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பு அது. வருண் தயக்கத்துடன், பச்சை பட்டனை அழுத்தி “ஹலோ” என்றான்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|