எனக்கு பிடித்த இலங்கைத்தமிழ்ப்பாடகர்களில் இவருமொருவர். இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று இவர் பாடிய "வான நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளை கண்டேன் நான் ." இப்பாடலை எழுதியவர் அல்வாய் சுந்தரம். பாடலுக்கு இசையமைத்திருப்பவகே. சவாஹிர். எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து நேற்று (16.02.2020) மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். என்னைப்போன்ற பலரைத் தன் குரலால் இன்பமூட்டியவர் ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் அஞ்சலி. அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரத்திலும் நானும் 'பதிவுகள்' சார்பில் பங்குகொள்கின்றேன். அத்துடன் ஜூலை 15, 2012 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் வெளியான "பொப்இசை பாடகர் எஸ். இராமச்சந்திரன்" என்னும் இவரைப்பற்றிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இவர் பாடிய 'வான நிலவில் அவளைக் கண்டேன்' பாடலுக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=gkzbvnUJBuE
(தினகரன் - இலங்கை) பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன் பரசுராமன்
1970 இலங்கையில் இயல் இசை நாடகம் முற்போக்கான எழுச்சியைக்கண்ட காலம். ஈழத்து சஞ்சிகை, ஈழத்து சினிமா, மெல்லிசைப்பாடல், இலங்கை பொப்பாடல் என வரிசைக்கட்டிக்கொண்டு கொடிக்கட்டிப்பறந்தது. இக்கால கட்டத்தில்தான் தொழில் ரீதியாக இலங்கை வானொலியில் இணைந்து தன் இசைத் திறமையால் இலங்கை பொப்இசை உலகில் பிரவேசித்து ரசிகர்களை கிரங்க வைத்தவர்தான் எஸ். இராமச்சந்திரன்.
கடந்த நான்கு தசாப்தங்களைத் தாண்டியும் இலங்கை, தமிழகம் மற்றும் உலகளாவிய புலம்பெயர் நாடுகளிலும் வாழும், தமிழ் உள்ளங்களில் துள்ளிசையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது இவரது பொப் இசை பாடல்கள். மனது மறக்காத சமூக நலம் நாடிய பாடல்களைத் தந்த அவரை திரும்பிப் பார்க்கின்றேன் பக்கத்திற்காகச் சந்தித்தேன்.
தங்களின் பிறந்தகத்தைப் பற்றி...
1949ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி நவாலியில் பிறந்தேன். வளர்ந்தது அரியாலையில், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியா சாலையில் வித்யாரம்பம் அதனைத் தொடர்ந்து கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றேன்.
கலையார்வத்தின் அடித்தளம் எங்கே ஆரம்பமானது?
5ஆம் தரத்தில் படிக்கும் போதே கலைத்துறையில் ஈடுபாடு வந்துவிட்டது. பாடசாலை நாட்களில் நான் பங்குபற்றாத கலை நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். எனக்கு பாடுவதும், நடிப்பதும் இயல்பாகவே அமைந்திருந்தது. அதை எனக்கு நானே மெருகூட்டி வளர்த்துக் கொண்டேன். 8ஆம் தரத்தில் படிக்கும் போது கண்ணன் கோஷ்டி இசைக் குழுவினால் ஈர்க்கப்பட்டேன். அதில் இணைந்து கோயில் திருவிழாக் காலங்களில் பாடியிருக்கின்றேன். இதே போன்று திருமண இல்லங்களுக்கும் அழைத்துச் சென்று பாடவைத்தார்கள்.
கலையும் கல்வியுமாக வளர்ந்த நீங்கள் முதல் காலடி வைத்த தொழில்பற்றி...
பள்ளி வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியேறியதும், அரச வர்த்தமானியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் திற்கான ஒலிப்பதிவு செய்வோருக்குரிய பணிக்கு விண்ணப்பங்கள் கோரியிருந்ததை பார்த்து அதற்காக விண்ணப்பித்தேன் நேர்முகத்தேர்வு நடாத்தினார்கள். அதில் தேறியதும் 1970ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொழிலில் அமர்த்தப்பட்டேன்.
உங்களுடைய தொழில்சார் பணி எப்படி அமைந்திருந்தது?
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இசைப் பகுதி நிகழ்ச்சி தயாரிப்பு உதவியாளராக நியமனம் கிடைத்தது. இப்போது இருப்பது போல் நவீன கருவி வசதிகள் இல்லாத காலம் அது. முனோ ஒலிப்பதிவு மட்டுமே அப்போது இருந்தது. சகல வாத்தியங்களையும் கட்டுப்படுத்தி பாடகரின் குரலையும் சேர்த்து நேயர்கள் ரம்மியமாக ரசிக்கும் வண்ணம் ஒலிப்பதிவு செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது. இலங்கைக்கு விஜயம் செய்த தமிழகப் பிரபல பாடகர்கள் ரி. எம். செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன். ஜே.ஜே. ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, எம்.எல். வசந்தகுமாரி போன்றோர் வானொலி கலையகத்திற்கு விஜயம் செய்துபோது அவர்களின் கச்சேரிகளையும் பாடல்களையும் பதிவு செய்துள்ளேன். பதிவுகளை மீட்டுப் பார்த்து, என்தொழில்சார் பதிவுகளை நேரடியாகவே பாராட்டியுள்ளார்கள். இப் பிரபலங்களைப் போல் வானொலிக் கலைஞர்களின் பதிவுகளை திறமையாக செய்திருப்பதாக பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளேன்.
ஒலிப்பதிவு கருவிகளைக் கையாண்டுக் கொண்டிருந்த நீங்கள் எப்படி இசைத்துறைக்குள் பிரவேசித்தீர்கள்?
நான் தொழிலுக்கு இணைந்த காலம், ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் துளிர்விடத்தொடங்கிய வசந்த காலமாக இருந்தது. என் வளத்தை அறிந்திருந்த பணிப்பாளர் எனக்கு பாடும் சந்தர்ப்பங்களை தந்தார். மெல்லிசைப்பாடல், பொப் இசைப்பாடலுக்கான போதியசந்தர்ப்பங்களை இலங்கை இசை காலஞர்களுக்கும் வழங்கி வந்தனர். இலங்கை வானலையில் ஒலிப்பரப்பாகிய பொப்இசை நிகழ்ச்சியில் சிங்கள, ஆங்கில பாடல்களே இடம்பெற்று வந்தது. இவ்விடயத்தை தமிழ் பொப் இசை பணிப்பாளாரக இருந்த என்.கே.என். நடராஜாவின் கவனத்திற்கு நானும் நண்பர் குமார் கனகரட்ணமும் கொண்டு வந்தோம்.
அப்போது தான் தமிழில் பொப் இசைப் பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற அவா தோன்றியது. கனவில் வந்த கனியே - நினைவில் நின்ற முகமே; ‘கள்ளுக்கடை பக்கம் போகாதே’ ‘சுராங்கனி சுராங்கனி’ போன்ற பாடல்கள் இலங்கை இரசிகர்கள் மனதில் அச்சாணியாக பதிந்து விட்டதை மறக்க முடியாது. டேவிட் ராஜேந்திரன், குமார் கனகரத்தினம், ஏ.ஈ. மனோகரன் என்று நீண்ட பட்டியலில் இணைந்த பொப் இசை பாடல் இயற்றியவர்களும் குரல் வழங்கியவர்களும் தந்த பங்களிப்பே இந்தப் பாடல்கள் இந்திய திரைப்படங்களில் இடம்பெறும் அளவிற்கு வித்திட்டது. அது இலங்கை பொப் இசைக்கு கிடைத்த வெற்றியே என்று கூறவேண்டும்.
‘வான நிலவில் அவளைக்
கண்டேன் நான் ....!”
‘ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே .... போன்ற சமூகசிந்தனைகள் நிறைந்த மனது மறக்காத பாடல்களை நான் பாடியுள்ளேன்.
‘நாடக அனுபவங்கள் ....
பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கண்டியரசன் நாடகத்தில் குமாரி ஹாமி என்னும் பெண்வேடத்தில் பாடி நடித்தேன். அந்த நாடகம் முதல் பரிசு பெற்றது. பூந்தாள் ஜோசப் என்னும் பாசையூர் அண்ணாவியார் பயிற்சி அளித் தார். நடுவராக இருந்த கலையரசு சொர்ணலிங்கம் என்னைப் பாராட்டினார். அந்த வார்த்தைகள் எனக்கு வசிட்டர் வாயால் வாழ்த்துக் கிடைத்ததுபோல் இரு ந்தது.
கேள்வி: உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?
பதில்: எனது மனைவி பத்மாசனி. அவர் ஒரு பரதநாட்டியக்கலைஞர். குத்துவிளக்கு கதாநாயகி லீலா நாராயணனிடம் பரதம் கற்று 1997இல் வீரசிங்கம் மண்டபத்தில் கலாநிதி கைலாசபதி, கார்த்திகேசு இந்திரபாலா முன்னிலையில் மதுரக்குரல் மன்னன் கே.எஸ். ராஜாவின் நிகழ்ச்சித் தொகுப்பில் அரங்கேற்றம் செய்தார். அதைத் தொடர்ந்து பல பரதநாட்டிய மாணவ மாணவிகளையும் உருவாக்கினார். அவர் எனது ஊரவர் தான். பின் உறவினர்களின் விருப்பின் படிநான் அவரை மணந்து கொண்டேன். எமக்கு இரண்டு பிள்ளைகள்.
மகன் கானரூபன் சிங்கப்பூரில் கணனி தொழில்நுட்ப வியலாளராக பணிபுரிகிறார். மகள் மூகாம்பிகை கணக்காளராக விருந்து மணவாழ்க்கையில் புகுந்துள்ளார்.
தங்களின் கலைச் சேவையைப்பற்றி...
கொழும்பு தமிழ் கலைஞர் சங்க மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளோம். சகோதர மொழி கலைஞர்களுடன் ஒரே மேடையில் இசை வழங்கியுள்ளேன். எங்கள் கலைச் சேவையைப் பாராட்டி முன்னாள் ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ எங்களை அவரது இல்லத்துக்கு அழைத்து விருந்துபசார மொன்றை வழங்கினார். இவ் விருந்துபசாரத்தில் ஏ.ஈ. மனோகரன், நேசம் தியாகராஜா, ருக்மணிதேவி மற்றும் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து பாராட்டு பெற்றனர்.
சிவாஜி கணேசன் பைலட் பிரேம் நாத் திரைப்படத்திற்காக இலங்கை வந்தபோது, இலங்கைபொப் இசைப்பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பத்திரிகையொன்றில் பேட்டி அளித்திருந்தார். அதை கண்ணுற்ற நான் ‘இலங்கை என்பது எம் தாய்த்திருநாடு;’ ‘சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே’ போன்ற பிரபலமான பொப் இசைப்பாடல்கள் அடங்கிய கெசட் ஒன்றை எனது நண்பர் மூலமாக அவரைச் சந்தித்து கையளித்தேன். பெருமிதம் கொண்ட அவர் எங்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
கலை சேவை பயணத்தில் வானொலியில் தமிழ் பொப் இசைப்பாடல் ஒலிக்க நானும் ஒருவனாக இருந்தேன் என்பதில் பெருமிதம் அடைகின்றேன்.
நான்கு தசாப்தகால ஒலிபரப்பு சேவை அனுபவத்தில் அன்றும் இன்றும் காணும் வித்தியாசங்கள் என்ன?
இலங்கை ரூபவாஹினி, வானொலி கூட்டுத்தாபனம் இலங்கையின் முதற்தர ஒளி, ஒலிபரப்பு சேவை என்றாலும் கூட தனியார் வானொலி, தொலைக்காட்சியின் வருகையினால் ரசிகர்களை திசை திருப்பினர். எனினும் இலங்கை ரூபஹினி தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் தரம் இவர்களிடம் இல்லை. எங்களது சேவையில் இந்தியாவிலிருந்து வரும் பாடல்களின் தரம், வரிகள் என அனைத்தையும் பார்த்த பின்பே இலங்கை வானொலியில் ஒலிபரப்புச் செய்வோம். கூடாத வரிகள், ஆபாசமான பாடல்கள் ஒலிபரப்ப மாட்டோம்.
ஆனால் இப்போது தனியார் வானொலிகள் போட்டி நிலை காரணமாக முதலில் யார் பாடலை வானொலியில் ஒலிபரப்புவது என்ற முயற்சியிலேயே இருந்துவருகின்ற னர். தனியார் வானொலியில் தமிழ் இல்லை அவர்கள் அவர்களுக்கென புதுப் பாணியை கையாள்கின்றனர். சிறந்த ஒரு பாடல் ஒலிபரப்பப்படும் போது அதனைத் தொடர்ந்து 4 வர்த்தக விளம்பரங்களுக்கு மேல் போடக் கூடாது. ஒரு ஜிroனீuணீt இற்கு மேல் அது திரும்பி வரக் கூடாது. உதாரணம் ஷிoap சொன்னால் பின்னர் அந்த 4 விளம்பரத்திலும் ஷிoap வரக்கூடாது. காசு க்காவிளம்பரம் என்பதை இனங் காட்டப் படாமல் ஒலிபரப்பப்பட வேண்டும்.
தேவாரங்கள், தெய்வ கானங்கள் என்பன ஒலிப்பரப் பப்படும் போது விளம்பரங்கள் ஒலிபரப்பப்படுவது தவிர்த்துக் கொள்ளப்படவேண்டும். செய்தி வாசிப்பதற்கு முன்னர் பல முறை வாசித்துப் பார்க்க வேண்டும். முதலில் தாங்கள் வாசித்துப் பார்த்து விளங்கிக்கொள்ள வேண்டும். கேட்பவர்களுக்கு விளங்க வேண்டும். கேட்ப வர்களுக்கு விளங்க வேண்டுமா னால் முதலில் வாசிப்பவர்கள் விளங்க வேண்டும். அத்தோடு முதலில் ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது பாடகர், பாடலாசிரியர், இசைய மைப்பாளர் ஆகியோரது விளம்பரங்களைக் கூறி ஒலிபரப்ப வேண்டும்.
வானொலியில் அடிக்கடி நேரம் சொல்ல வேண்டும்., இலங்கை வானொலி பிரபல்யம் அடையக் காரணம் இந்நேர வாசிப்பே ஆகும். எனினும் இன்றைய ஊடகங்கள் அப்படி அல்ல அவர்கள் ஊடகம் என்ற நிலையிருந்து விலகியே பயணிக்கின்றனர்.
ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்தவர் என்ற வகையில் அறிவிப்பாளராக வரவிரும்புவோருக்கு நீங்கள் கூற விரும்புவது யாது?
அறிவிப்பாளர் ஒருவருக்கு இன்றைய நிலையில் முதல் அடிப்படை தகைமையாக கலைஞானம், தொழில்நுட்ப அறிவு இரண்டும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் நிகழ்ச்சிகளை தரமாக வழங்க முடியும்.
நன்றி: http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/07/15/?fn=f1207155
•<• •Prev• | •Next• •>• |
---|