என் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை அறிய வந்தேன். லண்டனிலிருந்து ராஜேஸ் பாலா என் தந்தையைச் சந்திப்பதற்காக அடிக்கடி பாரிஸிற்கு வந்திருக்கிறார். எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கிய அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பின்போது அகஸ்தியருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்ச்சியில் ராஜேஸ் பாலாவும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். அதே போன்று லண்டனில் அகஸ்தியர் நூல் வெளியீட்டின்போது ராஜேஸ் பாலா அந்த வெளியீட்டுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் முன்னின்று செயற்பட்டிருக்கிறார். அகஸ்தியரையும் ராஜேஸ் பாலாவையும் இணைத்த ஒரு புள்ளி இலக்கியத்தில் அவருள் கொண்டிருந்த முற்போக்கு அணுகுமுறையாகும்.
இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து அகஸ்தியர் எழுதிய எழத்துக்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்றிருந்தன. பாரிஸில் ‘தாயகம்’ என்ற சஞ்சிகையில் எழுதிய ‘சுவடுகள்’ என்ற தொடர் நாவல் இடையில் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே நிலைமையை ராஜேஸ்வரியும் எதிர்கொண்டிருந்தார். அவரது முற்போக்கு சார்ந்த எழுத்துக்களுக்கு திட்டமிடப்பட்ட இருட்டடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. என் தந்தை அகஸ்தியர் ராஜேஸ் பாலாவின் மீதும் அவரது எழுத்துக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு பெண் எழுத்தாளராக முற்போக்கு பாதையில் பயணித்ததிற்கு அகஸ்தியர் உயர்ந்த கௌரவம் கொடுத்திருந்தார். பெண்களின் எழுத்தாக்க முயற்சியில் அவர் எப்போதுமே கொண்டிருந்த பேரார்வத்திற்கு இது இன்னுமொரு சாட்சியமாகும்.
புகலிடத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ராஜேஸ்வரி எழுதி வந்த ஆக்கங்களை அகஸ்தியர் எப்போதுமே அக்கறையோடு வாசித்து வந்தார். எழுத்தாளர்களின் நல்லுறவை எப்போதுமே பேணி வந்த அகஸ்தியருக்கு ராஜேஸ் பாலாவின் தொடர்பு மிகுந்த உற்சாகம் அளித்ததென்றே கூறவேண்டும். இலங்கையில் முற்போக்கு இலக்கியத் தொடர்பினை மீண்டும் தொடர்புபடுத்தும் கண்ணியாக திகழ்ந்தார் என்றே கூறவேண்டும். தேசிய அரசியலே பெருங்குரல் எடுத்திருந்தவேளையில் இடதுசாரி;ப்பார்வையில் வர்க்க கண்ணோட்டத்தில் இருவரும் எழுத்தில் செயற்பட்ட விதம் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும்.
கிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தொடர்ந்தும் தீவிரமாக எழுதிவரும் முக்கியமான எழுத்தாளராக அவதானித்து வருகின்றேன். எட்டு நாவல்களையும்ää ஆறு சிறுகதைத் தொகுதிகளையும். மருத்துவத் துறை சார்ந்த இரண்டு மருத்துவ நூல்களையும், முருகன் வழிபாடு பற்றிய மானிடவியல் ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர். லண்டன் SOAS ஆய்வு நிறுவனத்தில் மருத்துவ மானிடவியலில் எம்.ஏ. பட்டமும், திரைப்படம், வீடியோ பயிற்சியில் பி.ஏ. சிறப்புப் பட்டம் பெற்ற இவர் ‘விபவி’ இலக்கிய விருது. சிறந்த சிறுகதைக்கான ‘சுபமங்களா’ இதழின் பரிசு, அக்கரைப்பற்று எழுத்தாளர்களால் வழங்கப்பட்ட கலைவாணி விருது, லில்லி தேவசிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது போன்ற இலக்கிய விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.
மட்டக்களப்பில் கோளாவில் என்ற எனது அழகிய கிராமத்திலிருந்து முதன் முதலாக படிப்பதற்கு வெளியில் சென்ற பெண் நான்தான் எனக்கூறும் ராஜேஸ் பாலா யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதிப்பாடசாலையில் பயின்றுகொண்டிருந்த வேளை எழுத்தாளர் நந்தி விரிவுரையாளராக அமைந்தமை தனக்கு இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்ததாகக் கூறுகின்றார். யாழ்ப்பாணத்;தில். அவரது கணவர் பாலசுப்ரமணியம் அவர்களின் தொடர்பால் முற்போக்கு இலக்கியங்கள் அவருக்கு அறிமுகமாகின. சாதியக் கொடுமையால் எரிகாயங்களுக்கு இலக்காகிப் பரிதாபமாய் இறந்துபோன ஒரு கொடுமையை மையமாக வைத்து ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சிறுகதையை செ.யோகநாதன் நடாத்திய ‘வசந்தம்’ என்ற பத்திரிகையில் பிரசுரமாகிருந்தது. டொமினிக் ஜீவா நடாத்திய மல்லிகையிலும் ‘எழில்நந்தி’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்திருக்கின்றார்.
‘கோடை விடுமுறை’ என்ற அவரது முதல் நாவல் ‘அலை’ வெளியீட்டினரால் பிரசுரம் பெற்று தனக்கு எழுத்துலகில் ஒரு அந்தஸ்த்தைத் தேடித் தந்தது என்று கூறும் ராஜேஸ்வரி லண்டன் முரசு என்ற என்ற சஞ்சிகையில் தனது சிறுகதைகளையும், தொடர் நாவல்களையும் பிரசுரித்து சதானந்தன் தனது இலக்கிய வளர்ச்சியை ஊக்கப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களையும் தன்னை ஊக்கப்படுத்திய முக்கிய ஆளுமைகளில் ஒருவர் என்று ராஜேஸ்வரி கூறுகின்றார்.
அரசியற் சிந்தனைகளிலும் ஈடுபாடுகொண்ட ராஜேஸ்வரி அவர்கள் லண்டனுக்கு வந்த காலப்பகுதியில் லண்டனில் ஜனநாயகம் பற்றி நிலவிய கண்ணோட்டங்கள் மற்றும் அப்போது நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக தொடர்ந்து நடந்துகொண்டிருந்த போராட்டங்கள், பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டம், அமெரிக்காவின் அணு ஆயுதக் குவிப்புக்கான போராட்டம் என்பன அவரது அரசியல் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த அரசியல் சிந்தனை இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளை ஆழமாகப் பார்ப்பதற்கு உதவியிருக்கின்றன. இலங்கையின் இன ஒடுக்குதலிலிருந்து தப்பிää இங்கிலாந்தில் வாழ நேர்ந்த தமிழ் இளைஞர்களின் கருத்து நிலைப்பாட்டிலிருந்து ஒரு அரசியல் நாவலாக ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவலை எழுதினார். 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து லண்டனிற்கு வந்து குவிந்த தமிழ் அகதிகளின் மூலம் அவர் அறிய நேர்ந்த பிரச்சினைகளை முன்வைத்து அவர் எழுதிய அரைகுறை அடிமைகள்ää சுற்றி வளைப்பு போன்ற அவரது படைப்புக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. லண்டனில் வாழும் தமிழ் அகதிகளின் யதார்த்தமான பிரச்சினைகளை மையப்படுத்தி ‘வளர்மதியும் வோஷிங்மெஷினும், ‘ரோசா லக்சம் பேர்க்வீதி;’ போன்ற கதைகள் பெரிதும் சிலாகிக்கப்பட்டன. இலங்கையில் தமிழ் இயக்கங்களிடையே நடைபெற்ற சகோதரப் படுகொலைகளையும், இயக்கங்களின் வன்முறைகளையும் பின்னணியாகக் கொண்டு ‘ஒரு சரித்திரம் சரிகிறது’, ‘நேற்றைய சிநேகிதி’, ‘இரவில் வந்தவர்’, ‘ஆனா ஆவன்னா’, ‘அட்டைப்பட முகங்கள்’ போன்ற சிறுகதைகளை எழுதியிருந்தார்.
‘இந்தியா டுடே’ என்ற சஞ்சிகையில் தொடர்ச்சியாக ‘விருந்தினர் பக்கம்’ என்ற பிரிவில் எழுதி வந்திருக்கிறார். கோவை ஞானி ராஜேஸ்வரியின் இலக்கிய முயற்சிகளுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். தமிழகத்தில் அவரது நூல்களை வெளிக்கொணர்வதில் செ.கணேசலிங்கன் அவர்கள் பல உதவிகள் செய்துள்ளார்.
இவரது இலக்கியப்படைப்புகளில் மனிதநேயம், ஜனநாயகப் பண்புகள் ஆகியவற்றையே முன்னெடுத்துவரும் ராஜேஸ்வரி குறுகிய இனவாதத்தையும், பிராந்திய வாதத்தையும் மேவி இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேலும், மேலும் தமிழ் மக்கள் அழிவுப்பாதையில் செலுத்தி விடாமல் அவர்கள் வலிமையான கௌரவம் மிகுந்த சமூகத்தினராக வளர்த்து எடுக்கவேண்டும் என்ற நோக்கிலுமே எழுத்துக்கள் உருவாக் வேண்டும் என்பதில் உறதியாக இருந்திருக்கிறார். இலக்கியத்திலும் வாழ்விலும் நேர்மையாகச் செயற்படுவதை தத்துவமாக்கிக் கொண்டவர் ராஜேஸ்வரி;. புகலிடத்தில் தாங்கள் சொகுசுடன் வாழ்ந்துகொண்டு, நடைமுறைக்கு ஒத்துவராத ஈழத்தமிழர்களுக்கு மேலும் துயரங்களை ஏற்படுத்துகின்ற வெற்றுக் கோஷங்களை முன்வைப்பவர்கள் வியாபித்துக்கிடக்கும் இன்றைய சூழலில், சரியான கருத்துக்களையும் நடைமுறை வேலைத் திட்டங்களையும் செயற்படுத்துவது நம்முன் உள்ள பெரும் சவாலாகும். இதனை எழுத்தாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், அறிவு ஜீவிகளும் எதிர்கொண்டாகவேண்டும் என்பது அவரது தீர்க்கமான கருத்தாகும்.
பெண்ணிய எழுத்துக்கள் குறித்து ராஜேஸ்வரி அவர்களின் கருத்துக்கள் சற்று வித்தியாசமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ‘திருவள்ளுவரிலிருந்து வைரமுத்துவரை எல்லோரும் பெண்களைத் தங்கள் பாதிப்புரியவர்கள் என்றுதான் படைக்கிறார்கள். கம்பரும், கண்ணதாசனும் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பெண்களின் கொங்கைகளையும், கொவ்வை இதழ்களையுமே கண்டார்கள். குழந்தைப்பேற்றின் வேதனையையும், மாதவிடாயின் நோவும் மறைக்கப்பட்ட விஷயங்களாகவே இருந்தன. மேலைநாட்டு ஆண் எழுத்தாளர்களும் இதைத்தான் செய்கிறார்கள். தமிழின் சிறந்த நாவல்கள் எனப்படும் ‘அம்மா வந்தாள்’ ‘பள்ளி கொண்ட புரம்’ போன்ற கதைகளில் வரும் சோரம் போன பெண்களைத்தான் ஆண் எழுத்தாளர்கள் படைக்க முடிந்தது. இம்மாதிரியான படைப்புக்கள் ஒரு விதத்தில் ஆண்களின் இச்சையைத்தான் காட்டுகின்றது. பெண்மையின் ஒரு பகுதியை பற்றிய அதாவது உடம்பைப் பற்றிய கதைகளை மட்டுமே விவரித்துக் காட்டுகிறது. பெண்களின் உடம்பு, சமயம், சமுதாயம் என்ற அமைப்புகளைப் பிரதிபலிப்பதற்காக ஆண்களால் ஆசிக்கப்படுகின்றது. பெண்களின் உடம்பு உயிரியல் ரீதியாகவும் (Sex) சமூகவியல் ரீதியாகவும் (Gender) பகுக்கப்படுகின்றது’ என்று கூறுகின்றார். அத்தோடு மேலை நா:டுகளில் இன்று பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் பெண்களைப் பற்றியும் பெண்களுக்காகவும் எழுதுகிறார்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் விழிப்புணர்வு கொண்ட பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணிய எழுத்துலகில் மாற்றங்கள் வருவதற்குக் காரணமாக மிச்சேயில் பூக்கோவும், ஃபிராய்டும் எங்களிடம் பிறக்க எத்தனையோ வருடங்கள் பிடிக்கும். இன்று பெண் எழுத்தாளர்கள் தங்களுக்குப் போடப்படும் தடைகளைத் தாண்டி,எழுப்பப்படும் கிண்டல்களைச் சட்டை செய்யாது ஆரோக்கியமான ஒரு எழுத்துச் சூழலை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எழுத எத்தனையோ இருக்கின்றன. எங்களிடமிருந்து ஒரு சீமொன்டிபூவா, ஜேமன் கிறியா, எமிலி மார்ட்டின், டொனா ஒரலேய், அஞ்சலா டேவிஸ், ஒரு ரோணி மொறிஷன் பிறக்க வேண்டும். பெண்களுக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. அதை ஆண்கள் நிழலாக்கலாம். ஆனால், அதனை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பெண் எழுத்துக்களை எழுதியாகவேண்டும் என்கிறார் ராஜேஸ்வரி.
நாவல் சிறுகதைகளுக்கு அப்பால் ‘தமிழ்க் கடவுள் முருகன் - வரலாறும் தத்துவமும்;’ என்ற ராஜேஸ்வரியின் நூல் தமிழ்ப்பண்பாட்டின் வேராக, தமிழர் வழிபாட்டின் தொன்மையின் வடிவமாக மிக முக்கிமான நூலாகப் பேசப்படுகின்றது. கிரேக்க கடவுளுக்கும் முருகனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்கிறார் ராஜேஸ்வரி. கிரேக்கர்களின் மலைக்கடவுள் டையோனியஸ் செய்த வீரதீரச் செயல்களுக்கும் - முருகனுக்கும் ஒற்றுமையுண்டு. வள்ளி குறிஞ்சி நிலம் சார்ந்தவள்: திணைப் புனம் காத்தவள். ரோமக் கலாச்சாரத்தில் டயானா என்ற தெய்வத்திற்கும் இதுபோல உறவு உண்டு. கிரேக்க கலாச்சாரத்திலும் காட்டுத் தேவைதைகள் சொல்லப்படுகின்றன. காடுகளுக்குக் காவலான தேவதைகள் இவர்கள்.
தமிழ் நாகரிகத்தின் கூறுகள் கிரேக்கத்திலிருந்து இங்கு வந்தனவா அல்லது இங்கிருந்து அங்கு சென்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன. அலெக்சாண்டருக்கும் கந்தனுக்கும் தொடர்பு படுத்தி கோபாலப்பிள்ளை போன்ற ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நம் முருகனுடைய ஸ்கந்தன் அக்கினிpயின் மகனாவார். அலெக்சாண்டர் தன்னைச் சூரியனின் மகனாக எகிப்தியர்களிடையே பிரகடனப் படுத்திக் கொண்டார். ஸ்கந்தா என்பது வடசொல். அலெக்சாண்டரின் வருகைக்குப் பிறகுதான் சங்க இலக்கியங்களில் முருகன் பேசப்படுவதாகக் காண்கிறோம் போன்ற பல கருத்துக்களை ராஜேஸ்வரி அந்நூலினூடாக முன்வைக்கின்றார்.
இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட ராஜேஸ்வரி ஆங்கிலத்திரைப்படங்கள் வழியாக திரைப்படத்துறைக்கள் ஆகர்ஷிக்கப்பட்டேன் என்கிறார். லண்டனில் 1985ஆம் ஆண்டில் நடைபெற்ற சுரங்கத்தொழிலாளர்கள் நடாத்திய நீண்ட போராட்டத்திற்கு எதிராக அப்போதைய பிரதமர் மார்கிரட் தாச்சர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளுக்க எதிரான போராட்டத்தில் தான் தீவிர ஈடுபாடு காட்டியதாகவும், அந்த அடக்குமுறைகளை அவர் வீடியோவில் பதிவு செய்ததாகவும். அதை அவதானித்த டேவிற் றேர்னர் என்ற திரைப்படக்க கலைஞர் அவரைத் திரைப்படத் துறையில் நுழையுமாறு ஊக்கப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றார். அவர் பயின்ற திரைப்படக் கல்லூரியில் அத்திரைப்படப் பயிற்சியைப் பெற்ற முதல் ஆசியப் பெண்ணாக ராஜேஸ்வரி திகழ்ந்திருக்கிறார். அத்திரைப்படக் கல்லூரியின் அதிபர் ப்ரசித் கையம் நிறைய உற்சாகம் கொடுத்ததை நன்றியுடன் நினைவுகூரும் ராஜேஸ்வரி தனது பயிற்சி நெறிக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தமிழகம் சென்றபோது பாலுமகேந்திரா உட்பட்ட பல்வேறு திரைப்படக் கலைஞர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஈழத்தில் தமிழ் அகதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘Escape From Genocide ’ என்ற விவரண ஆவணப்படத்தை 1986ஆம் ஆண்டிலும், ‘Private Place’ என்ற திருமண வாழ்வில் பாலியல் வன்முறை தொடர்பான 16MM என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். மூன்று குழந்தைகளுடன் தனித்த ஒரு தாயாக லண்டனில் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தும் போராட்டத்தில் எனது திரைப்பட ஆர்வத்தை பலியிட நேர்ந்தது என்கின்றார் ராஜேஸ்வரி.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|