அவுஸ்திரேலியப் புகலிட எழுத்தாளராகிய முருகபூபதி அவர்கள், ஈழத்து இலக்கியம் மற்றும் ஊடகத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கூடாக தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்திய இவர், இருபதுக்கு மேற்பட்ட நூல்களை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். முருகபூபதியின் அயராத முயற்சியினால் இலங்கையில் பாரதி என்ற ஆய்வு நூல், முகுந்தன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இலங்கையில் பாரதி , மகாகவி பாரதி பற்றிய பல்வேறு விடயங்களை நீண்ட காலமாக தேடித்தொகுத்து ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்டுள்ள ஆய்வு நூலாகும்.
இந்நூலில் பாரதியை அறிமுகம் செய்யும் அங்கம் 01 இல், பாரதியின் நண்பர்கள் பற்றிக் கூறப்படுகிறது. பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாரதியின் நண்பர்களை விபரிக்கும் இப்பகுதியில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல்கள், வர்த்தகர்கள், தீவிரவாதிகள், விடுதலைப்போராளிகள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஹரிஜனங்கள், பாமரர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள். அங்கம் 02 இல் மதம் பிடித்த யானையிடம் இருந்து பாரதியைக் காப்பாற்றிய குவளைக்கண்ணன் என்கின்ற கிருஷ்ணமாச்சாரியார் பற்றியும், பாரதியின் மறைவு பற்றியும், பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமி பற்றியும் கூறப்படுகின்றது. இப்பகுதியில் பாரதியின் ஞானகுரு இலங்கையர் என்ற பெருமையையும் பாரதி நேரில் சந்தித்த ஒரேயொரு இலங்கையர் யாழ்ப்பாணத்துச் சாமி என்பதையும் நூலாசிரியர் அழுத்திக் கூறுகின்றார். பாரதியின் ஞானகுரு பற்றி ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல இடங்களில் பதிவுகள் இடம்பெற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாரதியின் ஞானகுரு பற்றி செங்கைஆழியான் எழுதிய திரிபுகள் பற்றியும் இப்பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது. வேறொரு சாமியாரை பாரதியின் ஞானகுருவாக நிரூபிக்க ஏன் செங்கைஆழியான் முயன்றார் என்ற கவலைக்குரிய விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.
1930 இற்குப் பின்னரே பாரதியின் பெருமையும் புகழும் இலங்கையில் பரவத்தொடங்கியது. பாரதியின் புகழ் இலங்கையில் பரவுவதற்கு காரணமாக இருந்த சுவாமி விபுலானந்தர், வ.ரா, ப.ஜீவானந்தம் ஆகியோர் பற்றியும் , ஈழத்தில் 1 – 8 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்திட்டத்தில் பாரதியின் பாடல்களை சேர்த்திருக்கும் விபுலானந்த அடிகள் 1932 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் Bharathi Study Circle என்னும் அமைப்பை நிறுவினார். அத்தோடு பாரதி பற்றி ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி பாரதியின் புகழைப் பரப்பினார் முதலான தகவல்களும் இந்நூலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்த ஜீவானந்தம் (ஜனசக்தி பத்திரிகை ஆசிரியர்) பாரதியின் கருத்துக்களை பாரதியின் சிந்தனைகளை பரப்பியதுடன், மறுமலர்ச்சி சிந்தனைகளை பாரதியின் பாடல்களினூடாகவே பரப்பினார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. இலங்கையில் சிறிது காலம் வாழ்ந்த வ.ராமசாமி அய்யங்கார் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைகள் மறுவாழ்வு முதலான பாரதியின் கருத்துக்களை இலங்கையில் வீரகேசரி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றும் போது அப்பத்திரிகையூடாகப் பரப்பினார் என்ற செய்தியும் அங்கம் 03 இல் இடம்பெற்றுள்ளன. அங்கம் 04 இல் பாரதியாரின் கருத்துக்களை, சிந்தனைகளை பரப்பிய ஈழத்துப் பத்திரிகைகளையும் பத்திரிகையாசிரியர்களையும் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.
பாரதி ஒரு கவிஞர் மட்டுமல்ல, சில பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். பத்திரிகையில் இடம்பெறும் Cartoon கலைக்கு வித்திட்ட முன்னோடி பாரதி என்ற தகவலோடு, வீரகேசரி இன்றுவரை பாரதியின் படைப்புகளுக்கு களமாக விளங்குகின்றமை பற்றியும், பாரதியின் மறைந்த தினத்தை தேசிய தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற சி.வி.வேலுப்பிள்ளையின் கருத்தும் அங்கம் 06 இல் முன்வைக்கப்பட்டுள்ளன.
வீரகேசரி நிருபர் அ.சொலமன்ராஜிற்கு தமிழக தமிழரசன் வழங்கிய நேர்காணலில் (1982.10.31) பாரதி சம்பந்தமான அவதூறுகள் சொல்லப்பட்டிருந்தன. தமிழக தமிழரசனின் பாரதி குறித்த முரண்பாடான, அவதூறான கருத்தியல்கள் பற்றியும் அவை உண்மைக்குப் புறம்பானவை என எதிர்வினையாற்றியவர்கள் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் அங்கம் 07 இல் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான சிவநாயகம் சிந்தாமணியில் “நான் கண்ட பாரதி” என்ற நீண்ட தொடரை வாராந்தம் எழுதியமை பற்றியும், அவர் இதற்கு முன்னர் பணிபுரிந்த தினகரன், சுதந்திரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் பாரதிக்கு போதிய களம் வழங்கியமை பற்றியும், இலங்கையில் தோன்றிய பத்திரிகைகள் தமிழ் உணர்வை பறைசாற்றவும் அதனை மக்களிடம் வளர்க்கவும் பாரதியின் கருத்தியல்களை உள்வாங்கியிருந்தமையையும் அங்கம் 09 இல் கூறும் நூலாசிரியர், எஸ்.டி.சிவநாயகம் எழுதிய “நான் கண்ட பாரதி” என்ற தொடர் இதுவரையும் நூல் வடிவம் பெறவில்லை எனவும் அதனை வெளியிட யாராவது ஆவனசெய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவ்வங்கத்தின் இறுதியில் முன்வைத்துள்ளார்.
அங்கம் 10 இல் கொழும்பு பாரதி, மட்டக்களப்பு பாரதி இதழ்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. பாரதியின் சிந்தனைகளுக்கும் அவை தொடர்பான வாதப் பிரதிவாதங்களுக்கும் தொடர்ச்சியாகக் களம் அமைத்துக் கொடுத்த மல்லிகை இதழ் - அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றியும் அங்கம் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதியை உள்ளுர்ச் சனங்கள் ‘கோட்டி (கிறுக்கன்) என்று அழைத்தமை தொடர்பான தகவல்களையும், பாரதியியலில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த கைலாசபதி, பாரதி ஆய்வுகளில் தீவிரமாக இருந்தமை பற்றிய தகவல்களையும் அங்கம் 12 உள்ளடக்கியுள்ளது.
கைலாசபதிக்கும், செ.கணேசலிங்கனும் பாரதி தொடர்பான பார்வையில் வேறுபாடுகள் இருந்தமை குறித்தும், பாரதியை ஆய்வு செய்தவர்கள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தமை பற்றியும், கணேசலிங்கன், தெய்வசுந்தரம், இராசமணி ஆகியோர் பாரதி பற்றி முன்வைக்கும் குற்ற உரைகளையும், மல்லிகை (டொமினிக் ஜீவா), குமரன்(செ.கணேசலிங்கம்), தாயகம் (க.தணிகாசலம்) ஆகிய மூன்று இதழ்களிடத்தும் இதழாசிரியர்களிடத்திலும் பாரதி தொடர்பான பார்வையில் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தென்பட்டமை பற்றியும் அங்கம் 13 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் சேனையூர்க் கிராமத்தில் பாரதியின் சிந்தனைகள் வேரூன்றி இருந்தமையை ஆதாரங்களுடன் கூறவரும் ஆசிரியர், இங்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாரதி விழா(1965) நடைபெற்றமை பற்றியும் அவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய ஆசிரியர் என்.வஸ்தியான் நீக்கொலாஸ், அவ்வுரையை விரித்து தனி நூலாக எழுதினார் என்ற தகவலயும் தருகின்றார். அவ்வுரை மூதூர் கம்பன் கலைப்பண்ணை வெளியீடாக ‘நான் கண்ட பாரதி’ என்ற பெயிரில் வெளிவந்துள்ளது.
ராஜாராம் மோகன்ரோய், மகாகவி பாரதி, பேராசிரியர் கைலாசபதி, மு.தளையசிங்கம் ஆகியோரின் மறைவிற்குப் பின் இறுதி நிகழ்வில் நடந்த விடயங்கள் பற்றியும் அங்கம் 17 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதியின் மொழிச் சிந்தனையை மொழியியல் நோக்கில் ஆராய்ந்த பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் ஆய்வு பற்றி அங்கம் 18 இல் கூறப்பட்டுள்ளது. பாரதியாரால் சிங்களத்தீவு என வர்ணிக்கப்பட்ட இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலும் பாரதியின் சிந்தனைகள் பரவியிருந்தமை பற்றி அங்கம் 19 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதியின் பாடல்களுக்கு ‘பாரதீய சங்கீதம்’ என்ற பொதுத்தலைப்பு இட்டு பாரதியின் புகழைப் பரப்பிய இசை மேதை எம்.பி.ஸ்ரீநிவாசனின் இலங்கை வருகை பற்றியும் எம்.பி.ஸ்ரீநிவாசனின் நீண்ட நாள் கனவாகிய பாரதீய சங்கீத ஆடல் வடிவ அரங்கேற்றம், நடன நர்த்தகி கார்த்திகா கணேசரால் இலங்கையில் அரங்கேற்றப்பட்டமை குறித்தும் அங்கம் 20 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கம் 21 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும், கொழும்பு சட்டக் கல்லூரியிலும் நடத்தப்பட்ட பாரதி நூற்றாண்டு விழா பற்றியும் அவ்விழாக்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் - பாரதி நூற்றாண்டு விழாவிற்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர்கள் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. பாரதி நூற்றாண்டு விழா பற்றிப் பல பத்திகளை எழுதிய கைலாசபதியின் பாரதி இயல் ஆய்வு நூல்கள், இரு மகாகவிகள், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், பாரதி ஆய்வுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்ற சமயத்தில் தமிழகத்திலிருந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரால் அழைக்கப்பட்ட பாரதி இயல் ஆய்வாளர்களான தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் எஸ்.இராமகிருஸ்ணன், ராஜம்கிருஸ்ணன் ஆகியோர் பாரதி நூற்றாண்டு விழாவில் கலந்து உரையாற்றியமை தொடர்பான செய்திகள், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் பாரதியின் தாக்கம் தொடர்பான ஆய்வரங்குகள், பாரதி நூல்களின் கண்காட்சி மற்றும் சுபைர் இளங்கீரன் எழுதிய ‘மகாகவி பாரதி’ நாடக அரங்கேற்றம் பற்றியும் அங்கம் 22 இல் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அங்கம் 23 இல் பாரதி நூற்றாண்டுக்கு முன்னரும் பின்னரும் பாரதியின் சிந்தனைகளுக்கு எழுத்திலும் பேச்சிலும் உயிரூட்டியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒளிப்படக் கண்காட்சி பற்றியும் அக்கண்காட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளுடன் அவர்களது படங்கள் இடம்பெற்றுள்ளமையும், அக்கண்காட்சி கொழும்பு, யாழ்ப்பாணம், கல்முனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்றமை பற்றியும், பாரதி நூற்றாண்டை முன்னிட்டு தினகரன், வீரகேசரிப் பத்திரிகைகளின் ஆதரவுடன் குறுநாவல், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டமை பற்றியும் கூறப்பட்டுள்ளது.
அங்கம் 24 இல் பாதியின் மனைவி செல்லம்மாள் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை பற்றிய குறிப்புகளும், இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்து பேசியவர்களது கருத்துக்களும், பாரதியை ஆய்வு செய்தவர்களதும் உரையாற்றியவர்களதும் எதிர்வினைகளில் பாரதி வாழ்ந்து கொண்டிருப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
அங்கம் 25 இல் இலங்கையில் பாரதியின் தாக்கம் மேடைகளிலும் வானொலிகளிலும் ஒலித்தமை தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பாரதியின் புதுவை வாழ்வைச் சித்திரித்து, இளங்கீரன் எழுதி, மேடையேற்றம் (1982.12.03) கண்ட ‘மகாகவி பாரதி’ நாடகம் பற்றியும், தமிழ் நாட்டில் சிலோன் விஜயேந்திரனால் எழுதப்பட்டு, நூல் உருவில் வெளிவந்த ‘பாரதி வரலாற்று நாடகம்’ (1982.ஜுலை) பற்றியும், இலங்கையில் வானொலிகளில் பாரதி நிகழ்ச்சிகளும் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டமை பற்றியும் பிரதி ஞாயிறு தோறும் ‘சிறுவர் மலர்’ நிகழ்ச்சியில் பாரதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை முதலான தகவல்கள் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கம் 26 இல் இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழா காலகட்டத்தில் பேராசிரியர் கைலாசபதி மறைந்தமை, சிங்களத்தில் வெளியான பாரதி சம்மந்தமான இரண்டு நூல்கள், எஸ்.திருச்செல்வம் எழுதிய மகாகவி பாரதி என்ற நூல் முதலான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்தடுத்த அங்கங்களில் இலங்கையில் வெளியான பாரதி இயல் சார்ந்த நூல்கள் பற்றிய மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளன.
பாரதியாரின் கவிதைகளும் உரைநடை ஆக்கங்களும், பாரதியார்: ஆஸ்திகன் - முற்போக்காளன் - பொதுவுடைமையாளன், பாரதியாரும் அரசியலும், சாதி ஏற்றத்தாழ்வுகளும் விளைவுகளும், தொழிலாளரும் தொழிலும், கல்வியும் அறிவியலும், சமயமும் வாழ்வும், பாரதியாரும் கலை இலக்கியமும், தமிழ்ச்சாதி முதலான ஒன்பது அங்கங்களில் பாரதியாரை ஆய்வு செய்த பேராசிரியர் க.அருணாசலம் எழுதிய ‘பாரதியார் சிந்தனைகள்’ (1984) என்ற நூல் பற்றிய கருத்துக்கள் அங்கம் 27இல் இடம்பெற்றுள்ளதோடு, இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்து பல ஆதாரங்களை அந்நூலில் காணமுடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாரதியை தாகூருடன் ஒப்பிட்டு ஆராய்ந்ததில் இலங்கையர்களே முன்னோடிகளாகத் திகழ்கின்றனர். அவ்வகையில் பாரதியையும் ரவீந்திரநாத் தாகூரையும் ஒப்பு நோக்கி பேராசிரியர் க.கைலாசபதி எழுதியிருக்கும் ‘இரு மகாகவிகள்’ என்ற நூல் முக்கியமானது. இந்நூல் பற்றிய கருத்துக்கள் அங்கம் 28 இல் இடம்பெற்றுள்ளன. அங்கம் 29 இல் பண்டிதை பத்மாசனி அம்மையார் எழுதிய ‘பாரதி கவிநயம்’(1929) என்ற கட்டுரை பற்றியும், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு எழுதிய ‘பாரதியாரின் பெண் விடுதலை: இலக்கியம் - கருத்து – காலம்’(1996) என்ற நூல் பற்றியும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பெரிதும் பயன்படுகின்ற ‘பாரதி கண்ட சமுதாயம்’ நூல் பற்றியும் பல்கலைக்கழக மட்டத்தில் மாத்திரமன்றி, பாரதி இயல் ஆய்வுகளுக்கும் பயன்படுகின்ற ந. இரவீந்திரனின் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’ என்ற நூல் பற்றியும் அங்கம் 30 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதியின் கருத்துக்களால் கவரப்பட்ட இளங்கீரன் பாரதியின் கருத்துக்களை பரப்பியமை, இளங்கீரன் எழுதிய ‘பாரதி கண்ட சமூதாயம்’ என்ற நூல், பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட காலத்தில் இளங்கீரன் எழுதிய ‘மகாகவி பாரதி நாடகம்’ பற்றியும் தனது 27 வயதிலேயே பாரதி புகழை இளங்கீரன் பரப்பியுள்ளமையும் இப்பகுதியில் சுவாரஸ்யமான தகவல்களாக வருகிறது.
அங்கம் 31 இல் ‘தமிழினி மெல்லச்சாகும்’ என்ற பாரதியின் கருத்துப் பற்றிய தெளிவுபடுத்தல்கள் இடம்பெறுவதோடு, பேராசிரியர் சி.கணபதிப்பிள்ளையவர்கள் இலங்கையில் விபுலானந்த அடிகளைப் போன்று பாரதியின் சிந்தனைகளைப் பரப்பியமை - மெல்பனில் பாரதி பள்ளி இயங்குவது, ‘பாப்பா பாரதி’ எனும் பாலகர்களுக்கான இறுவட்டு மூன்று பாகங்களில் வெளியிடப்பட்டுள்ளமை முதலான செய்திகளைக் கூறும் இப்பகுதியில், பாரதியின் சிந்தனைகளின் தொடர்ச்சியாகப் புலம்பெயர்ந்து வாழும் கவிஞர் அம்பி எழுதிய கவிதை வரிகளும் இடம்பெற்றுள்ளன.
அங்கம் 32 - இலங்கையில் கல்வி நிலையங்களில் பாரதியின் தாக்கத்தை விபரிப்பதாக உள்ளது. யாழ்ப்பாணம் - பாரதி பாஷா வித்தியாலயம் (வண்ணார்பண்ணை மேற்கு பெரிய கடை பாரதி பாஷா வித்தியாசாலை - 1908), நுவரெலியா – தலவாக்கலை பாரதி வித்தியாலயம் (1930), பதுளை பசறை வீதி – பாரதி கல்லூரி (1957) முதலிய இலங்கையில் உள்ள பாரதி கல்வி நிலையங்கள் பற்றியும் அவுஸ்திரேலியா – விக்டோரியா மாநிலத்தில் தோன்றிய பாரதி பள்ளி (1994) பற்றியும் குறிப்பிடப்படுவதோடு, பாரதியின் பாடல் வரிகளில் தோன்றிய நூல்கள், இதழ்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதி குறித்த ஆய்வுகளுக்கு சிறந்த களம் அமைத்துக் கொடுத்த ஞானம் சஞ்சிகை, அதில் இடம்பெற்ற பாரதி தொடர்பான கட்டுரைகள் பற்றியும் குறிப்பிடப்படுவதோடு, அதன் ஆசிரியர் ஞானசேகரனிடத்தில் பாரதி எந்தளவு தூரம் தாக்கத்தைச் செலுத்தியுள்ளார் என்பதையும் அங்கம் 33 பதிவுசெய்துள்ளது. அங்கம் 34 இல் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சாமி பற்றியும், யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமியே பாரதியாரின் குரு எனக் கூறும் செங்கையாழியானின் ‘பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து ஆறுமுக சுவாமி’ என்ற நூல் தொடர்பான எதிர்வினைக் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
இவை பாரதியின் ஞானகுரு பற்றி திரிபுபட்ட கருத்துக்கள் வெளிப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. அங்கம் 36 இல் பேராசிரியர் சி.மௌனகுருவின் ஆக்கங்களில் பாரதியின் சிந்தனைகள் பின்பற்றப்பட்டுள்ளமையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அவ்வகையில் மௌன குருவின் ‘பாரதியும் மரபும்’, ‘பாரதியும் கலைகளும்’, ‘பாரதியின் உரைநடை’, ‘மழை’ (நாட்டிய நாடகம்), ‘பிசாசுகள்’(நாடகம்) முதலானவை இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவை இலங்கையில் நாடகம், கூத்து முதலானவற்றில் பாரதியின் கவிதைகள் முக்கிய பங்காற்றியுள்ளதை வெளிப்படுத்துகின்றன.
ஈழத்தில் மகாகவி உருத்திரமூர்த்தியிடமும் பாரதியாரின் தாக்கம் காணப்படுவதை அங்கம் 37 விபரிக்கிறது. மகாகவி பாரதியின் கவிதைகளிலும் மகாகவி உருத்திரமூர்த்தியின் படைப்புகளிலும் ஒத்த தன்மைகள் காணப்படுவதை ஒப்பீட்டு அடிப்படையில் எடுத்துக்காட்டுகளுடன் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. பாரதி தொடர்பான ஆய்வுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ள ஜீவநதி இதழ் பற்றிக் கூறும் அங்கம் 39 இல், ஜீவநதியில் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் பாரதியை விரிவாக ஆய்வு செய்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது ‘1950 வரையான காலகட்டத்துதமிழ்க் கவிதை’ என்ற ஆய்வில் பாரதியை ஆராயுமிடத்து , அதில் இடம்பெறும் நவீன கவிதை பற்றிய அறிமுகத்தின் ஒரு பகுதியும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்பகுதியில் பாரதியின் ஆங்கில இலக்கியப் புலமை, நவீன கவிதையும் பாரதியும் முதலான விடயங்களும் பேசப்பட்டுள்ளன. அங்கம் 40 இல் பாரதியை ஒரு மகாகவியாக வாதிட்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் க.சிவத்தம்பியும், அ.மார்க்ஸ் அவர்களும் இணைந்து நீண்ட நாள் ஆய்வு செய்து எழுதிய ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ என்ற நூல் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
முருகபூபதி அவர்களால் எழுதப்பட்ட ‘இலங்கையில் பாரதி’ நூல் ஆராய்ச்சி மதிநுட்பம் நிறைந்த ஒரு நூலாகும். ஏராளமான அரிய தகவல்களை உள்ளடக்கி காணப்படும் இந்நூல் இலங்கையில் மகாகவி பாரதியின் தாக்கம் குறித்து பல கோணங்களில் விரிவாக விபரித்துள்ளது. இலங்கையில் - கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்திய பாரதி, படைப்பிலக்கிய வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நூல்களிலும் செல்வாக்கு செலுத்தியிருப்பது பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
பாரதி தாக்கம் செலுத்தியுள்ள பத்திரிகைகள், நூல்கள், எழுத்தாளர்கள் பற்றியும் விரிவகக் கூறும் இந்நூலாசிரியர், அவை பற்றிய தகவல்களை அல்லது அவற்றின் வரலாறுகளையும் தெளிவாகக் கூறிச்சென்றுள்ளார்.
இந்நூல் இறுக்கமான மொழி நடையில் அல்லாது அனைவரும் தெளிவாக விளங்கிக்கொள்ளும் வகையில் பல விளக்கங்களுடன் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை முழுமையாக வாசிக்கும் வாசகர்கள் இலங்கையில் பாரதியின் தாக்கத்தை மட்டுமல்லாது அதனோடு தொடர்புடைய பல விடயங்களை வரலாற்று ரீதியாகவும் அறிந்து கொள்ள முடியும். நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய செய்திகளை இந்நூல் நாற்பது அங்கங்களில் நயமுடன் பதிவுசெய்கிறது.
இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்து ஆராய்ந்த இந்நூல் எழுத்தாளர் முருகபூபதியின் சிறந்த முயற்சியாகும்.
அனுப்பியவர்:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|