- முகநூல் எனக்கு வழங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். இவர் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவரும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்தான் மதிப்புக்குரிய ஜவாத் மரைக்கார். இவரது முகநூற் பதிவுகள் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கியவை. அண்மைக்காலமாக இவர் பதிவு செய்துவரும் கவிதைச் சமர் பதிவுகள் அவ்வகையானவை. ஐம்பதுகளில் பேராசிரியர் கைலாசபதி ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கவிதைச் சமர் இது. அச்சமர் பற்றிய பதிவுகள் அவை. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவுகள் இவை. - பதிவுகள் -
பாரதி கவிதைச் சமர் - 1
1950 களின் இறுதிப் பகுதி . தினகரனின் பிரதம ஆசிரியராக கலாநிதி க .கைலாசபதி கடமையாற்றிக் கொண்டிருந்த காலம். பாரதியார் நினைவு நாளையொட்டி , ஞாயிறு தினகரனில் ஒரு கவிதை வெளிவந்தது. கவிதையின் தலைப்பு " சூட்டி வைத்த நாமங்கள் சொல்லுந் தரமாமோ? ". கவிதையை எழுதியிருந்தவர் , 'தான்தோன்றிக் கவிராயர்'.
பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் அங்கதக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதும் தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரிலேயே அவர் தனது கவிதைகளை எழுதுவது வழக்கம் என்பதும் இலங்கை இலக்கிய உலகில் பிரசித்தம்.
மேற்குறிப்பிட்ட கவிதையைப் பிரசுரித்ததோடு கைலாசபதி நின்றுவிடவில்லை . முருகையன், மஹாகவி போன்ற பிரபல கவிஞர் பலருடன் தொடர்பு கொண்டு ஒரு கவிதா மோதலையே ஏற்படுத்தினார். இம்மோதலில் பிரசவமான கவிதைகள் "பாரதி கவிதைச் சமர்" என்ற பெயரில் தொடர்ச்சியாக வெளிவந்தன. இச்சமரில் முதலாவது மறுப்பு , " நீர் கண்ட தோற்றம் நிசமல்ல , தான்தோன்றீ ! " என்ற தலைப்பில் கவிஞர் இ .முருகையனால் எழுதப்பட்டது. அதற்கு தான்தோன்றிக் கவிராயர், "ஏலே முருகையா ! ஏன் உமக்கு இந்தலுவல் ? " என்று பதில் கவிதை எழுத நீலாவணன் , மஹாகவி , மு.பொ ., ராஜபாரதி போன்ற பல கவிஞர்கள் உள்ளே நுழைந்து தமக்குள்ளேயே மோதிக்கொள்ள .....கடைசியில் முருகையனும் தான்தோன்றிக் கவிராயரும் ஓரணியில் நின்று ஏனையவர்களைச் சாட...... கவிதைப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
இக்கவிதைச் சமரைச் சுவைத்திராதவர்களுக்காகவும் சுவைத்து மறந்தவர்களுக்காகவும் எனது அடுத்த பதிவிலிருந்து தொடர்ச்சியாக அவற்றைத் தர எண்ணுகின்றேன்.
பாரதி கவிதைச் சமர் - 2
எனது முன்னைய பதிவில் , ' பாரதி கவிதைச் சமர் ' பற்றி ஓர் அறிமுகக் குறிப்பைத் தந்திருந்தேன். 1950 களின் இறுதிப் பகுதியில் தினகரன் பத்திரிகையில் ஞாயிறு தோறும் இக்கவிதைகள் வெளிவந்தன - பத்திரிகையின் பிரதம ஆசிரியரான க.கைலாசபதியின் முற்குறிப்புகளுடன்.
யாப்பிலக்கணம் தழுவி எழுதப்பட்ட அங்கதக் கவிதைகள் இவை. சோழர் , நாயக்கர் காலத்தைப்போல நாயே ! பேயே ! குரங்கே ! என்றவாறான அங்கதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பவை . இதனால்தான் , இவற்றை " நடைமுறை அங்கதம் " என்றார் கைலாசபதி.
இக்கவிதைகளில் பெரும்பாலானவை பேச்சோசையில் எழுதப்பட்டுள்ளமை இன்னுமொரு சிறப்பு. தமிழில் இதுவொரு புது முயற்சியாகக்கூட அன்று இருந்திருக்கலாம்
இனி , சமர்க் களத்தினுள் நுழைவோம்.
பாரதி தரிசனம்
சூட்டிவைத்த நாமங்கள் சொல்லுந் தரமாமோ ? - தான்தோன்றிக் கவிராயர் -
நான் நவில்வது :
ஆரது , என் உள்ளத்தின் அடையா நெடுங் கதவில் ?
பாரதியா ? வா அப்பா ! பார்த்துப் பலநாள் ! ஏன்
நிற்கின்றாய் ? உட்கார் ,
என் நெஞ்சமெனும் பஞ்சணையில்!
உற்ற கருமம் எது ? ஓராண்டாய் எங்கேதான்
சுற்றித் திரிந்தாயோ ? சொல் ! என்ன கோலம் இது ,
வற்றிப் போய் , ஏதும் வருத்தமா ? சென்ற முறை ,
உந்தன் நினைவு தின உற்சவத்தில் கண்டேன்! பின்
இந்தத் தினம் வரை நீ ஏனோ வரவில்லை ?
இத்தனை நாள் பிந்தி எனைத் தேடி வந்திருக்கும்
' சித்தனே ' ! என்ன சேதி ? தெரி விப்பாய் !
பாரதி பகல்வது :
தான் தோன்றிப் பாவலனே ! தமிழில் கவி எழுத
ஏன் தோன்றினாய் அப்பா ? என் கதிதான் உந்தனுக்கும் !
பார் , பார் , என் பாட்டை இவர்
படுத்துகிற பாட்டை ! இதை
ஆர் கூடச் சொல்லி அழுவேன் - உனைத் தவிர ?
முப்பத்து ஆண்டுகளாய் முழக்குகிறார் என் பெருமை !
அப்பப்பா ! போதும் - இனி ஆற்றேன் ! என் ஞாபகமாய்
போன வருசமும் பொதுக் கூட்டம் போட்டார்கள் !
யானை முதுகினில் , நான் யாத்த கவிதைகளை
ஏற்றி , வலம் வந்து ஏதேதோ வாய் புலம்பி ,
' போற்றியோ போற்றி ' எனப் புகழுரைகள் தந்தார்கள் !
உலக மகா கவி என் றுரைத்தார் ஒரு அறிஞர் !
பல பாசை கற்ற ஒரு பண்டிதரோ , '' பாரதிபோல்
ஈரே ழுலகினிலும் , இகத்தில், பரத்தினிலும்
யாரேனும் உண்டோ , பா யாத்தவர்கள் ? " என்றே , தன்
கையைச் சுழற்றிக் கடாவினார் ! மற்றொருவர் ,
' தையத் தை தை ' என்று தாளம் போட் டென்கவியைப்
பாடி , விழி சொருகிப் பரவசத்தில் ஆழ்ந்தார் ! அம்
மாடீ ! இவர்களெலாம் மந்திரித்து என் தலையில்
சூட்டி வைத்த நாமங்கள் சொல்லும் தரமாமோ ?
நீட்டிற் பெருகும் ! நிஜத்தில் இவர்களெலாம் ,
பாரதியின் பாட்டில் ஒரு பாதி வரியறியார் !
மாரடிப்பார் - தாமேதோ மா ரசிகர் என்பது போல் !
கால் தடவி , மேல் தடவி ,காதைத் தடவி , பின்
வால் தடவி , யானை வடிவத்தைப் பார்த்தோமென்
றெண்ணி மகிழ்ந்து இறுமாந்த , அந்தக்
கண்ணிலார் செய்த கபோதி வழிபாடு ,
உலகோ டெனைத் தேடி ஓடோடி வந்தாலும்
விலகி மறைவேன் ; நான் வேண்டுவது , நெற்றிக்கண்
பார்வை விமர்சனமே ! பாராட்டும் கண்டனமும்
நேர்மை ஒளியுள்ள நெஞ்சி லிருந்து வரின்
ஏற்பேன் ; அதனையோ எங்கேனும் காணாமல்
நூற்போல் மெலிந்து நுடங்கினேன் ; இம்முறையும்
கொண்டாட்டம் போட்டென்னைக்
கொல்வார்கள் ! வேண்டாம் , இத்
திண்டாட்டம் என்றுனக்குத் தெரிவிக்க வந்தேன் ; நான்
போக முதல் உனக்கோர் புத்திமதி - என் கவிதைத்
தாகத்தைத் தீர்க்கின்ற தான்தோன்றிப் பாவலனே !
பாட்டைப் படித்துப் பயனறிய மாட்டாத
நாட்டிற் பிறந்தோம் ; நமக்கேன் கவிதை விடு !
பாரதி கவிதைச் சமர் - 3
[ 7 - 9 - 58 ஞாயிறு ' தினகரனில் ' தான்தோன்றிக் கவிராயர் எழுதிய " சூட்டி வைத்த நாமங்கள் சொல்லுந் தரமாமோ " என்னும் கவிதைக்கு எதிர்க் கவிதை இங்கு எழுதுகிறார் முருகையன் - ஆசிரியர் ]
நீர் கண்ட தோற்றம் நிசமல்ல , தான்தோன்றீ ! - முருகையன் -
தான்தோன்றி ஐயா ! " தமிழில் கவி எழுத
ஏன் தோன்றினீர் ? " என் றிதைத் தானா பாரதியும்
கேட்டுவிட்டார் உம்மை ?
ஆகாகா ! உள்ளத் தடையா நெடுங்கதவில் ,
சாகா தொளிரும் தமிழின் கவிச்செல்வர்,
மூச்சற்றுத் தொய்ந்த மொழிக்குப் புதிய உயிர்
பாய்ச்சிக் கவிதைகளைப் பண்ணிவைத்த பாரதியார்
தட்டி அழைத்துத் தரிசனத்தைத் தந்தாரோ ?
கட்டிவையும் ஐயா ' கசப்புளுகை ' அப்பாலே .
ஆரை ஐயா கண்டீர் ? அவர்தாமோ பாரதியார் ?
என்ன விழிக்கின்றீர் ? எவனோ விளையாட்டாய்
வேடம் அணிந்து வினோதம் புரிந்து விட்டான்.
பாடற் கலையில் பயித்தியமும் பற்றுதலும் ,
எந்தக் கணமும் எதையோ நினைந்தபடி
சொந்த உலகிற் சுகம் காணும் உம்முடைய
போக்கினையும் பார்த்து வைத்த
பூதலிங்கம் பிள்ளை இந்த
'மேக்கப்'பைச் செய்து விளையாட்டுக் காட்டியதை
உண்மை என்றா நம்பி உரைத்தீர் உலகுக்கும் ?
கண்மிசையே மண்தூவக் கற்றீரோ ? எங்களது
மண்டை வெறிதென்றா மதித்தீர் ? அது கிடக்க ,
நீர் கண்ட ஆசாமி ( நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் )
பாரதியே அல்லர் ; பகல் வேடக் கூத்தாடி .
ஏன் என்று சீறி விழுந் தென்னைச் சினக்காதீர்.
தான்தோன்றி ஐயா , சரியான காரணங்கள்
ஒவ்வொன்றாய்க் கூறி ' உருசுப் ' படுத்திடவும்
பலவகையாய் உண்டு பதைக்காதீர் ! கேளும் இதை :
" பாட்டைப் படித்துப் பயன் அறிய மாட்டாத
நாட்டிற் பிறந்தோம் ; நமக்கேன் கவிதை விடு! "
என்று சொன்னார் பாரதியார் என்றீர் ; இதனாலே
நன்று சொன்னீர் ஐயா ; நமது பிடி அதுதான் .
உச்சியிலே வானம் உதிர்ந்து சரிந்தாலும் ,
நச்சினையே கொண்டுவந்து நாவின்மிசை வைத்தாலும்
' அச்சமில்லை ' என்றே அடித்துக் கவி பொழிந்து
துச்சமென வையத் துயரைப் பழிக்கவல்ல
வீரக் கவிஞர் . விளைந்த சுவைத் தமிழின்
ஈரத்தில் ஊறி இனித்த இலக்கியத்தைக்
காய்ச்சி வடித்துக் கலையைப் படைத்து வைத்து
பாய்ச்சல் பயின்ற பழகு தமிழ் நடையில்
வெற்றியென நாள்தோறும் வீரம் முழங்கியவர்,
" பாட்டைப் படித்துப் பயனறிய மாட்டாத "
நாட்டினையா கண்டு நலிந்து தளர்வடைத்து
" வேண்டாம் கவிதை விடு " என்று கூறுபவர் ?
ஆகையினால் ...........
நீர் கண்ட தோற்றம் நிசமல்ல தான்தோன்றி ;
பாரதியை அல்ல ;பகல் வேடக் காரனையே
ஏமாந்தீர் பார்த்து ; இகமெங்கும் அதைச் சொன்னீர் .
சீமானே ! வாழ்க !! சிலவாரத் தின் முன்னர்
நான் கண்டேன் பாரதியை ; நமது தமிழ் மொழியில்
தேன் கண்டால் என்னச் சிறந்த கவிதைகளை ,
மேற்குத் திசை மொழிகள் வென்று சமைக்கின்ற
ஆற்றல் உடைய அரிய கவிஞர்களும்
வேண்டும் என்று சொன்னார் ; விருப்பம் அதுதானாம் .
மீண்டும் அதையே விளக்கி உரை செய்தார் .
பாட்டுத் திறத்தாலே பாரினையே பாலிக்கும்
மாட்சி படைத்த கவி மன்னர்களும் வேண்டும் என்றே
எம்முடைய பாரதியார் சொன்னார் ; இதனாலே ,
உம்முடைய பாரதியார் உண்மை அல்லர் என்பதனை
ஒப்புக் கொள் ஐயா, உணர்க இந்த உண்மை நிலை ;
தப்பிச் செல் ; ' அப்ப ' சரி.
பாரதி கவிதைச் சமர் - 4
[ அண்மையில் தமிழகமெங்கணும் கொண்டாடப் பெற்ற பாரதி நினைவு தினத்தையொட்டி தான்தோன்றிக் கவிராயர் ' பாரதி தரிசனம் ' என்ற மகுடத்தில் எழுதியிருந்தது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சென்ற வாரம் அந்தக் கவிதைக்கு எதிர்ப்பாட்டுப் பாடியிருந்தார் கவிஞர் முருகையன் - ' நீர் கண்ட தோற்றம் நிசமல்ல , தான்தோன்றீ ! ' என்று . அதற்கு இங்கு பதிலளிக்கிறார் தான்தோன்றி. கவிஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டு விட்டால் கேட்கவா வேண்டும் ! - ஆசிரியர் ]
ஏலே முருகையா ! ஏன் உமக்கு இந்தலுவல் ? - தான்தோன்றிக்கவிராயர் ( சில்லையூர் செல்வராசன் ) -
போட்டிக்குப் பாடவந்த போலிக் கவிராய !
ஓட்டமெடுக்காதீர் ! ஓயோய் ! ஓய் ! நில்லுமிங்கே !
என்னையா , பேப்பரிலே எழுதினீராமே நான்
சொன்னதெலாம் பொய்யென்று ! சூளுரைத்து பாரதியை
நான் கண்டு பேசியது நனவல்ல என்றீராம் !
தான்வந் துமக்கே தரிசனத்தை பாரதியும்
தந்தான் என்றேதேதோ தமுக்கடித்துச் சொன்னீராம் !
பிந்தித்தான் , பேப்பரில் உம் பேத்தலையும் பார்த்தேன். நீர்
கூவியதும் என்ன ? ஓ ஹோஹோ ! அப்பாரதியை
ஆவி உருவினில் உம் அறியாக் கவிக் கனவில்
கண்டீரே ? மெய்யே ? கவிக்கற்றுக் குட்டிஉமைக்
கண்டு மனம் விட்டுக் கதைத்தானோ பாரதியும் ?
என்னுரைக்கு ஈதோ எதிர்க்கவிதை என்றே உம்
புன்னுரைக்கு முன்னுரையில் போட்டுவிட்டார் ; பாட்டென்று
மேலே குறிப்புரைத்த மேதாவி யாரையா ?
ஏலே முருகையா ! ஏன் உமக்கு இந்தலுவல் ?
சரியான காரணங்கள் ஒவ்வொன்றாய்க் கூறி ,
' உருசு 'ப் படுத்துவதாய் ஓதினீர் ; பார்த்தால் , என்
ஈற்றடியின் தொங்கலிலே இறுக்கிப் பிடித்தபடி
சாற்றுகிறீர் ஓலம் ! சரிதான் நிறுத்துமையா !
பாரதியின் உள்ளம் பழசா ? நிலத் தூன்றா
வேரது போல்வானோ ? விளையாத் தரிசவனோ ?
ஏதோ அவன் அன்று எழுதியதைத் தூக்கி வைத்து
வாதேன் புரிகின்றீர் ? வருடங்கள் முப்பதுக்கு
முன்னிருந்த சிந்தனையே முன்னூறு ஆண்டுகளின்
பின்னும் இருக்குமெனப் பேசுகிறீர் வீண் வாதம் !
" பாட்டை விடு என்று பாரதியும் கூறுவனா ?
காட்டு விளக்கம் " எனின் காட்டிடுவேன் - உம்கவிதை !
வீற்றிருக்க வாணி , வெண்டாமரை பூக்க ,
ஆற்றில் இறங்கி , அரும்பை முதலாக
வீசித் துவைத்து வெறிகொண்ட வேழம் போல் ,
ஊசிப் போகின்ற உதவாக் கவியெழுதி
உம்மைப் போல் வாணி உயிரைப் பலி கொள்ளும்
பொம்மைக் கவிஞர்களின் போக்கினையும் நோக்கியவன் ;
இன்றைத் தமிழ்ப் புலவர் எகத் தாளம் பண்ணுவதைக்
கண்ட அவன் , உள்ளம் கசப்புற்றே எந்தனிடம்
" பாட்டைப் படித்துப் பயனறிய மாட்டாத
நாட்டிற் பிறந்தோம் ; நமக்கேன் கவிதை - விடு! "
என்றுரைக்க மாட்டானோ ? இன்னும் , அவன் வாழ்ந்த
அன்றும் , அவனுடைய அன்பருக்கு தன்னுடைய
உள்ளத் தகிப்புகளை ஒதியுள்ளான் ! பார் ! பரலி
நெல்லையப்பர் ; தன்னுடைய நேர் வரிசு , கனக
சுப்புரத்தினம் தனது சுய கவிதா மண்டலத்தில்
தப்பிப் பிறந்த தமிழ்ப் புலவர் யாவருக்கும்
தன்னுள்ளம் அப்பொழுதும் தமிழ் நாடு தன்னுடைய
பன்னுள் திளைக்காத பான்மையினால் நொந்ததனைக்
காட்டினான் ; ஆங்கிலத்தில் கவிதை எழுதிப் பேர்
ஈட்டினான் ; பின்பல்லோ , " எங்களுக்கும் தா " என்று
பாட்டறியா எங்கள் தமிழ்ப் பத்திரிகைக் காரர்களும்
கேட்டார்கள் ; இன்னும் நீர் கேட்பீரோ ; சொல்லுகிறேன் ?
வேண்டாமா ? மலிவு விலைக்குத்தான் நீர் அதுகால்
தீண்டாத பாரதியின் தீங்கவிகள் விற்கிறதே !
வாங்கிப் படித்து வடிவாக , பாரதியின்
போங்கை அறியும் ! புரியாவிடில் மீண்டும்
வந்தென்னைக் காணும் , வணக்கம் ; உமக்கிந்தச்
சிந்தனைகள் எட்டுவது சிரமந்தான் ; போய் வாரும்
பாரதி கவிதைச் சமர் - 5
[ பாரதி தினத்தை ஒட்டி அந்தக் கவிச் சக்கரவர்த்தியைக் கண்டு தரிசனம் பெற்றதாகத் தான்தோன்றிக் கவிராயர் பாடினார் ; அதன் பின்னர் கவிஞர் முருகையன் அதனை வெட்டிப் பாடியதும் தான்தோன்றி மீண்டும் ' தற்காப்பு 'ப் பாடியதும் நேயர்களுக்கு நினைவிருக்கும். கவிஞர் முருகையன் இங்கு தான்தோன்றிக்கு ' மங்களம் ' பாடுகிறார். - ஆசிரியர் ]
பாரதியில் எங்களுக்கும் பங்கு விடும் - முருகையன் -
ஐயா ! கவிராய ! அன்பு வணக்கங்கள்.
தெய்வமே , நாயேன் சிறிய பிழைகளினை
மன்னிக்க வேண்டும் ; மகாகவியே , மேலவரே!
உன்னத மான உமது மகிமைகளை
முன்பே அறியாது போனேனே மூர்க்கனேன்.
நல்ல சமயத்தில் நம்மைத் தடுத்தாள
வல்ல கவிதை வழங்கிவிட்ட உம்முடைய
பேனைத் தடிக்குப் பெரிய நல்ல கும்பிடுகள்.
நீர் கண்ட தோற்றம் நிசமல்ல என்பதனைக்
கேட்ட அதிர்ச்சி கிளறிவிட்ட கோபத்தை
' போலி 'என்றும் ' பொம்மை 'என்றும்
போற்றி எமைப் பாடி
வேலி அடைத்து விரட்டி விட்டீர் ; ஆகையினால் ,
உம்முடைய சொற்களினை ஒன்றும் பொருட்படுத்தாது
அம்மென் மலர்போல் அடியைச் சரணடைந்தேன்.
காரணங்கள் எத்தனையோ காட்டவென்று தான் நினைத்தேன்.
சீருடைய உம்முடைய செய்யுள்களின் ' பீத்தல்களை '
ஒவ்வொன்றாய்ச் சொல்லிவர ஒண்ணுமோ ? ஈற்றடியை
அவ்வொன்றே போதுமென ஆய்ந்து தெரிந்தெடுத்தேன் .
புத்தித் திறன்கள் பொதிந்து வைத்த ஈற்றடிகள்
சத்தியமாய் இன்றைக்குச் சந்தி சிரிக்குதையா.
ஏனையா ? நேற்றைக் கிரண்டு மணி தொடங்கி
மோனையுடன் எதுகை முட்டித் ததும்புகிற
நல்ல வசனத்தில் நாக்குக் களைக்காது
சொல்லுப் பொழிந்த சுடர்க்கொழுந்துப் பண்டிதரும் ,
கீச்சொலியின் ஊடு ' கிறிச்சி ' கிளம்பியது
போற் சுதியாய்ப் பேசவல்ல பூமணியும் தாமரையும்
' பாரதியின் பாட்டில் ஒரு பாதி வரியறியார் '
என்றா நினைத்து விட்டீர் ? ஏதோ உமக்குத்தான்
பாரதியார் பாடிவைத்த பாட்டுவரும் என்பதுபோல்
ஊரறியச் சொல்லி உளறுகிறீர் ; போங்காணும் ,
நாட்டில் உமக்கு நடப்புக் குறைவென்றால் ,
பாட்டைப் படித்துப் பயனறிய மாட்டாதார்
வாழுகிறார் என்பது நும் வாதமா ? நல்லதுதான்!
ஊளை இடுவதிலும் ஒப்பாரி வைப்பதிலும்
ஆருக்கு நன்மை ? அதிலும் உயிருடனே
நீர் இருந்து கொண்டுமது நெற்றிக்கு நேர் புகழைக்
காண நினைக்கும் கருத்து நிறைவேற
வேணும் என்றா எண்ணி மினைக்கெட்டுக் கூவுகின்றீர் ?
காலம் வரட்டும் ; அந்தக் காலத்தின் பின் உமக்குச்
சீலையிலே ' ஒயில் பெயின்ற்றால் ' உமைக் கீறி
மாலைகள் சூட்டி மணி மண்டபம் கட்டி
மூலையிலே சந்திதொறும் மொய்த்துச் சிலைநாட்டி
காலைதொறும் மாலைதொறும் கைகூப்பு தற்குத்தான்
காத்து விழிமூடிக் காலம் வரட்டுமேனப்
பார்த்திருந்தார் நம்மவர்கள் ; பாவலரே ! நீர் என்ன
கற்பூரம் ஏற்றுதற்குக் கால் நிமிடம் தான் இருக்கச்
சற்றுப் பொறுக்காது சன்னதத்தை ஆடுதல் போல்
ஒப்பாரி வைக்க உளங்கொண்டீர் ? போவதன்முன்
பொற்பாரும் மேதாவிப் புண்ணியரே , கேளும் :
கவிக்கற்றுக் குட்டி எனக் கண்ணியமாய் என்னை
செவிக்கிதமாய்ச் சொன்னீர் , சிரிப்பு வருகுதையா !
ஈழத்தில் தானா இருக்கின்றீர் ? பாதலத்தின்
ஆழத் திருளில் அமிழ்ந்தி இருந்தீரோ ?
பேப்பர் படிப்பவரை ,பேசரிய றேடியோக்
கேட்பவரை , நாட்டைக் கிளர்த்தும் விழாக்களிலே
கூடும் கவியரங்கக் கொண்டாட்டம் பார்த்தவரைக்
கொஞ்சம் விசாரித்துப் பாரும் ஐயா !
நீரும் என் போல்
மிஞ்சும் சுவைகள் மிளிரத் தமிழ் பாடும்
பாவலரே ஆய் உள்ள பான்மையினால் , நீர் சொன்ன
கேவலமான ' கிலிசை ' கெட்ட சொல்லுகளை
நெஞ்சில் நிறுத்தவில்லை . நீக்கிவிட்டேன்; இன்னுமென்ன?
மட்டை வைத்துக் கட்டி வளைவு சுருள்களைக்
கொட்டொழியச் செய்தா கிடைக்கும் பயனேதும் ?
இந்த யுகத்தின் இனிய கவிஞரை நீர்
சொந்தம் என்று சொல்லிச் சுருட்டி மடித்துமது
' பொக்கற் ' றில் வைக்காதீர் . புத்தி விசாலத்தாற்
பாரதியில் எங்களுக்கும் பங்கு விடும் . செய்வீரா ?
நீர் இருக்கும் திக்கை நினைந்து வணங்குகின்றோம் .
எல்லா நலமும் இனிதே உறுக ; உமைப்
பல்லாரும் ஏத்தப் பணிந்து.
•<• •Prev• | •Next• •>• |
---|