- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -
முன்னுரை
எட்டுத்தொகை நூல்களில் அகவாழ்வுமுறையானது திருமணத்திற்கு முந்தைய ஆண் பெண் இணைவைக் 'களவு' என்றும் திருமணத்திற்குப்பின் ஆண் பெண் இணைவைக் 'கற்பு' என்றும் குறிப்பிட்டது. இவ்விரண்டும் ஏற்புடைய மரபுகளாகச் சங்க காலத்தில் இருந்தன. பெண்ணின் வாழ்வு, மகிழ்ச்சி, வாழ்வதன் அர்த்தம் அனைத்தும் ஆண் மகனை மையமிட்டதாக ஆண்வழிச் சமூகம் கட்டமைத்திருந்தன. இத்தகைய கட்டமைப்பின் வழி தமிழரின் அகமரபினுள் காணப்படுகின்ற குறிதன்மை (பகற்குறி, இரவுக்குறி), வெறியாடல், அலருக்கு அஞ்சுதல், அறத்;;தோடு நிற்றல் உள்ளிட்டவை என்று அகநூல்களில் சொல்லப்படுகின்ற அக வாழ்வு எனலாம். அத்தகைய அகவாழ்வுமுறையினைக் கட்டமைப்ப இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பகற்குறி இரவுக்குறி
பகற்குறி என்பது பகல்வேலையில் தலைவன் யாரும் அறியாது வந்து சந்தித்துச் செல்வதாகும். ஏனெனில் ஊரின் அலருக்கு அஞ்சுவதன் காரணமாக யாருக்கும் தெரியாது பகற்குறியும் இரவுக்குறியில் சந்திப்புகள் நிகழ்த்தினர். அவற்றுள் பகற்குறியினை,
'ஊதுவண்டு இமிரும் கோதை
.............. நகை மேவி நாம் ஆடிய பொழிலே'
இதனைப் போன்றே,
புணர்ச்சி வேண்டியனூர்
தலைமகன் வந்து இரவுக்குறியில் தலைவியை யாரும் பார்க்காத வண்ணம் வந்து சந்தித்துச் செல்லுதலைக்காட்டுகின்றது. இத்தகைய இரவுக்குறி பாடல்களே எட்டுத்தொகை பாடல்களில் அதிக அளவில் வந்துள்ளது. அவற்றுள்,
'அண்ணாய் வழி...........
.................. வரிக் கச்சினனே'
என்ற மேற்கண்ட அடிகள் பெருமழையையும் பொருட்படுத்தாது இரவுக்குறியில் வந்து பார்த்துச் செல்கின்ற தலைவனைக் காட்டுகின்றது. அதாவது பனிக்காலத்தில் பொழிந்த மழையினால் பாசிகள் படர்ந்துள்ளது. அவ்வேளையிலேயே கடும்குளிர் விசுகிறது. மழைப்பொழிவு தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் அந்த காட்டின்வழியே தலைவன் தலைவியைக் காண இரவுக்குறியில் வந்துசெல்கிறான்.
அலருக்குப் பயப்படுதல்:
இன்றைக்கு நடைமுறை போன்று பழங்காலத்திலும் காதலிப்பதை தவறாக பேசுகின்ற போக்கு இருந்துள்ளது. இதனால் ஊர்களின் முன் தங்கள் காதல் தெரிந்தால் பெண்ணைப் பற்றி வாய்க்கு வருவதை பேசுவார்கள் என்று தலைவி அஞ்சுவதைக் கூறுவது அலர்தூற்றல் என்று கூறப்படுகின்றது. இதனை,
'யானே ஈண்iடெயனெ: என்நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே
மறை மலர் ஆகி மன்றத்தஃதே' (குறுந்.97)
என்ற மேற்கண்ட அடிகள் ஊராருக்குத் தம் காதல் தெரிந்தது எண்ணி மனம் வருந்துகிறாள் என்பதை அறியமுடிகின்றது. ஊரர் தூற்றிப் பேசுவது அலர் என்று குறிப்பிடுவர். இத்தகைய அலரானது வாய்க்குள் முனங்குவதையும் வெளிப்படையாக பேசுவதையும் குறிப்பிடுகின்றது.
வெறியாடல்
அகத்திணை மரபில் வேலன் வெறியாடல் என்னும் நோய் நீக்குச் சடங்கு முக்கியமானது. தலைவனின் மீதுகொண்ட அளப்பரிய காதலின் காரணமாகத் தலைவியின் உடலிலும், நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் காரணம் இன்னதென்று அறியாத தலைவியின் தாய் தீய சக்தி ஏதோ தலைவியைப் பிடித்திருக்கிறது என்று கருதினாள். எனவே முதுவாய் பெண்டிரை அழைத்து இது எதனால் ஏற்பட்டது. இதற்குரிய பரிகாரம் என்னவென்று கேட்டாள். அம்முதுவாய்ப் பெண் இது தெய்வத்தால் ஏற்பட்ட துன்பம் என்றாள். தன்னை வணங்காத 'சூரபத்மன்' முதலான பகைவர்களைக் கொன்று அழித்த பல்வகைப்புகழினை உடைய பெரிய கைகளைக் கொண்டிருக்கிற முருகனை வழிபட்டால் தலைவியின் நோய் தீரும் என்று கூறினாள். இதனை,
'பாடியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை
நெடு வேட் பேணத் தணிகுவள ; இவள். . . ' (அகம் 22: 5-6)
என்ற அகநானூற்றுப்பாடல் வரிகள் விளக்குகின்றன.
பிரிவின் வகை:
பொதுவாக பிரிவு இரண்டு வழிகளில் கூறலாம். கால்வழியாக நடந்து செல்லுதலும், கலத்தின்வழி பிரிதல் என இருவகையில் நிகழ்கிறது. இதனை,
'இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்
உரியதாகும் என்மனார் புலவர்' (தமிழண்ணல் மு.நூ.ப.62)
என்ற மேற்கண்ட தொல்காப்பிய நூற்பாவின்வழி தலைமகனைப் பிரிதலும், தலைமகளை உடனிருக்க பிரிதலும் என இருவகை பிரிவினதாகும். இதனையே,
'கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவன் இரங்கலும்
உண்டென மொழிப ஓரிடத்தான்' (மேலது, ப.83)
என்ற மேற்கண்ட அடிகள் பிரிவென்பது தலைவன் மட்டும் பிரிந்துசெல்வதும், தலைவன் தலைவி இருவரும் சேர்ந்து செல்வது என இரண்டுவகை பிரிவுகள் பொதுவில் சொல்லப்படுகின்றது.
பிரிவுத்துயர்
தலைவனின் மீதான தலைவியின் காமம் எல்லையற்ற நிலையில் பரவிச் செல்கிறது. தலைவி அடைந்திருக்கும் காமத்தின் வலியை அறிந்திராத தென்றல்காற்று அவளை அலைக்கழிக்கிறது. இவள் எத்தகு துயருற்றாள் என்பதை அறியாமல் ஊர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. ஊரார்க்குத் தனது நிலையை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று சிந்திக்கும் தலைவி முட்டுவதா? தாக்குவதா? அல்லது ஓவெனக் கதறுவதா? எதனைச் செய்வது என்பதை அறியாமல் திணறுவதை,
'முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு
'ஆஅ ஒல்' எனக் கூவுவேன் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே' (குறுந்: 28)
என்று பாடுகிறார். இதனைப் போன்றே தலைவன் பிரிந்துசென்று திரும்பி வராத நிலையில் தலைவி தனது மனவேதனையானது கன்று இழந்த பசுவின் பாலைப் போன்று பயனற்ற வாழ்வினை அடைந்ததாக உணர செய்துள்ளதை அறியமுடிகின்றது.
பசலைநோய்:
பசலை நோய் என்பது காதலைக் காணாதபோது தலைவிக்கு ஏற்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவு என்று கூறலாம். இந்நோயினால் தலைவி சரியாகச் சப்பிடுவதில்லை. உடல் மெலுதல் உள்ளிட்டவை நடக்கும். அத்தகைய பசலைநோய் பற்றி.
'கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாயைக் கவினே' (குறுந்.27)
பிரிவினைத்தாங்காது தலைவனைத் தேடிச்செல்லும் தலைவி
தலைவன் அருகில் இல்லாத காலத்துப் பெருவெள்ளமாய் பொங்கிப் பிரவாகிக்கும் காமம் அவன் அருகில் வந்தவுடன் முழுமையாக வற்றிப்போவதை,
'அனைப் பெருங்காமம் ஈண்டு கடைக்கொளவே' (குறுந் 99: 6)
எனத் தெளிவாக விளக்கி நிற்கின்றது. இதுபோன்றே குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள அள்ஙர் நன்முல்லையாரின் பிற பாடலில் தலைவனின் பிரிவால் ஏற்பட்டத் துயரின் வலியினைப் பேசுவதாக அமைந்துள்ளன. தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற பாதையோ வரட்சியான நிலப்பகுதி. அந்நிலத்தை வருணிக்கும் புலவரின் கற்பனைத்திறன் அழகுபட அமைந்துள்ளது.
'உள்ளார் கொல்லோ – தோழி ! – கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேபப் ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வாள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்
நிலம்கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?' (குறுந் : 67)
இப்பாடலில் கிளி தன்னுடைய அலகில் வேப்பம் பழத்தைக் கொத்திக்கொண்டுள்ளது. இக்காட்சியானது, பொற்கொல்லர்கள் அணிகலன்களில் புதிய நூல் கோர்க்கும் போது அவர்களின் கைவிரல் நகங்களில் பிடித்திருக்கும் பொற்காசுகளைப் போன்ற தோற்றத்தைப் புலவருக்கு ஏற்படுத்துகின்றது.
மணப்பொருத்தம்:
மணப்பொருத்தம் என்பது சோதிடத்தில் கூறப்படுகின்ற பத்துவகை பொருத்தமன்று. சோதிடத்தில் கூறப்படுகின்ற பொருத்தமானது அறிவியல் தன்மையற்றது. மூடநம்பிக்கை சார்புடையது. உண்மையான மணப்பொருத்தம் என்பது தலைவனும் தலைவியும் ஒத்த அன்பில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பின்பு மணம்செய்துகொள்வதாகும். மேலும் திருமணத்திற்குப் பிறகும் அதே அன்பில் வாழ்வதையும் குறிப்பிட்டுச் சொல்லாம். இதனை,
'கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவைபோல
மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே'28
என்ற மேற்கண்ட பாடலடிகள் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வது எத்தகையது என அறியமுடிகின்றது. அதாவது கை கால் அசைவிற்கேற்ப ஆடும் பாவை போல ஒருவர் நினைப்பதை ஒருவர் செயல்படுத்துபவரக இருக்கவேண்டும். மேலும் தலைவியானவள் தலைவனுக்குத் தாய் போன்றவளாகவும் இருக்கவேண்டும் என்பதையும் அறியமுடிகின்றது.
தலைவன் தலைவி மனம் ஒன்றி வாழ்வதை சிறந்த மணப்பொருத்தமாக அறியலாம். அத்தகைய மனம் ஒத்து வாழ்பவரின் வாழ்வியல் எத்தகையது என்பதை,
'சாதல் அஞ்சேன்: அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே' (நற்.397)
என்ற மேற்கண்ட அடிகள் மனம் ஒத்து வாழ்பவர்கள் சாவுக்குகூட அஞ்சவில்லை. ஆனால் இறந்து மறுபிறவியில் ஒருவேளைப் பிறந்தால் அப்பிறவியில் காதலனை மறந்துவிடுவேனோ என்று காதலி வருந்துவதை மேற்கண்டவாறு அறியமுடிகின்றது.
பெண்கேட்டு வருதல்:
இன்றைய நாட்களைப் போன்றே பழங்காலத்திலும் பெற்றோர்களால் திருமணம் நடத்திவைக்கின்ற மரபு இருந்துள்ளது. இவ்வழக்கம் ஆரிய கருத்தாக்கம் நிலவிய சூழலில் இன்றைய முறைப்படி பெண் பார்க்கும் சடங்கு இருந்தது. அங்கு தலைவன் வீட்டார் பெண்கேட்டு சென்றனர். இதனை,
'நெறியறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவணை முந்துறீஇ
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக
சேய் உயர்வெற்பனும் வந்தனன்
பூஎழில் உண்கணும் பொலிகமா இனியே' (கலி.39)எ
ன்ற மேற்கண்ட அடிகள் இன்றைய நாட்களில் பெண்கேட்டு வருதலைப் போன்று பழங்காலத்திலும் தலைவி வீட்டிற்கு பெண்கேட்டு செல்லும் வழக்கத்திணை அறியமுடிகின்றது. மேலும் மணநாளுக்கு ஏற்ற முகூர்த்த நாளினை சோதிடம் மூலம் அறிய மணமகன் வீட்டார் அறிந்துகொண்டதை அறியமுடிகின்றது.
கலப்புத் மணம்
கலப்பு மணம் என்பது இருவர் மனங்கள் கலந்துகொண்டதைக் கலப்பு மணம் என்று கூறலாம். கலப்பு மணம் என்பது சாதி, சமய வேறுபாடற்று இரண்டு மனம் கலப்பதைக் கூறலாம். இன்றைய நிலையில் பலரும் கலப்பு மணத்தை எதிர்க்கின்றனர். காரணம் வேத கருத்தாக்கம் நிரம்பியவர்களே இன்றும் காணப்படுகின்றனர். கல்யாணம் என்பதன் பொருள் பலருக்குத் தெரிவதில்லை. இருவர் சேர்வதுதான் இயல்பு. ஆனால் இயல்பில் இன்று எதுவும் நடப்பதில்லை. பலர்கூடி சேர்த்து வைக்கும் முறையே காணப்படுகிறது. இன்றைய இந்த மனநிலை போலவே சாதிய உணர்வு சங்க காலப் பெண்களிடையே இல்லை என்று கூறுவதை,
'பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்து
வெண்கல் உப்பின் கொள்ளை ....' ( அகம், 140:1-15)
நெய்தல் நிலப்பெண் உப்பு விற்கும் போது மருத நில ஆண் பார்த்து புரிந்துகொண்ட பின்பு இருவரிடையே வரைதல் என்ற மனநிலை உருவாகிறது. அந்த இருவரின் உணர்வில் ஏற்பட்ட புரிதலையே கலப்பு மனம் என்று கூறலாம். ஆனால் இன்றைய நிலையில் கலப்பு மணம் என்பதன் பொருள் சாதிவிட்டு சாதி மணம் செய்துகொள்வது என்ற கருத்துப் பிழை சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
உடன்போக்கு:
இன்றைய நாட்களைப் போன்றே பழந்தமிழகத்திலும் பெண்களின் காதல் மணச் சுதந்திரத்திற்குத் தடையிருந்துள்ளது. ஆனால் அந்தத் தடையை மீறி பெண்கள் காதல் மணம் செய்துகொண்டதை (உடன்போக்கு என்ற அக இலக்கணம் கூறுகிறது) தமிழ் இலக்கண இலக்கியங்களின் வழி அறியலாம். இதனை,
'கொடுப்போரின்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலையான'
என்ற தொல்காப்பிய நூற்பாவின் வழி இத்தகைய உடன்போக்கை அறிந்துகொள்ளலாம். இதனையே
'வெல்இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ்வடை
என்மகள் ஒருத்தியும் பிறர்மகன் ஒருவனும்
தம்துளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ – பெரும
காணோம் அல்லேம்: கண்டனம் சுரத்திடை' (கலி.9)
என்ற மேற்கண்ட அடிகள் இயற்கையிழைந்த உடன்போக்கை அறிந்துகொள்ள முடிகின்றது. இன்றைய நிலையில் உடன்போக்கு என்ற சொல் காலமாற்றத்தில் கொச்சையாக ஓடிபோய் மணம் செய்துகொள்ளல் என்று கூறப்படுகின்றது. சங்க காலத்து உடன்போக்கு பிற்கால ஆரிய சமய சடங்குகள் மிகுந்தமையின் காரணமாக காதல் மணம் ஒடுக்கப்பட்டன.
முடிவுரை:
மேற்கண்ட இக்கட்டுரையானது எட்டுத்தொகை நூல்களில் அக வாழ்வுமுறை என்ற அடிப்படையில் அமைந்துள்ள பழந்தமிழர்களின் வாழ்வியலில் இடம்பெறுகின்ற காதல்வயப்பட்ட வாழ்வியலில் தலைவனும் தலைவியும் காதல் செய்கின்ற நிகழ்வில் இடம்பெறுகின்ற குறித்தன்மையும் (பகற்குறி, இரவுக்குறி) தலைவியின் காதல் நிகழ்வு ஊருக்குத் தெரிந்து அலர்தூற்றக்கூடாத என்ற அச்சம், அதன் பிறகு வரைவினைக் காலம் கடத்தாமல் திருமணம் செய்துகொள்ள விழைவதும் அதற்கான எதிர்ப்பு வருகின்ற போது உடன்போக்கு செய்து காதல் மணத்தினை செய்வது பழந்தமிழர் வாழ்வியலில் அரங்கேறின. இன்றைய நாட்களில் நடக்கின்ற பெண்கேட்டு திருமணம் செய்துகொள்வது (ஆரிய பண்பாட்டிற்குப் பிறகு) பழந்தமிழகத்தில் இருந்துள்ளதை இக்கட்டுரையின் மூலம் அறியமுடிகின்றது.
*கட்டுரையாளர் : ஜெயபாரதி, முனைவர்பட்ட ஆய்வாளர், இராணிமேரிக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை.
•<• •Prev• | •Next• •>• |
---|