உம் என்ற இடைச்சொல்லை எட்டு நிலைகளில் பயன்படுத்தலாம் என்பார் தொல்காப்பியர் (எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம்). நூலாசிரியர் தொ.மு.சி. அவர்கள் சிறப்பு கருதி நூலின் தலைப்பினைக் கொடுத்துள்ளார். ஒப்புமை செய்ய எடுத்துக்கொண்ட இரு கவிஞர்களுமே சிறப்பு வாய்ந்தவர்கள். ஒப்புயர்வு அற்றவர்கள். ஒப்புமையாக்க நூல்களுள் ஆகச்சிறந்த படைப்பு இந்நூல் என்பது மிகையில்லை.
பாரதிக்கும் ஷெல்லிக்கும் கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டு இடைவெளி உள்ளது (90 ஆண்டுகள்). இதனால் ஷெல்லி காணத பல புரட்சிகளையும், வெற்றிகளையும், அவன் காணவிரும்பிய பல்வேறு நிகழ்வுகளையும் பாரதி கண்டான் என்பது தொ.மு.சி. அவர்களின் கூற்று. இரு கவிகளையும் ஒப்புமையாக்கம் செய்யும்போது ஷெல்லியின் கவிதைகளையும் முதலிலும் அதன்பின் பாரதியின் படைப்புகளை அதனோடு ஒப்பிட்டும் காட்டியுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளைப் பற்றிய விரிவான விளக்கச் செய்திகளாகப் பதிவு செய்துள்ளார்.
பாரதியையும், ஷெல்லியையும் பற்றிய அறிமுகம், அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் படைப்புப் பின்னணி போன்றவற்றை ஒப்புமையோடு விரிவாகக் கூறித்தொடங்கும் நூலாசிரியர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றில் இருவரின் மனப்பாங்கு எவ்வாறு இருந்தது என்பதை மிகவிரிவாக அழகாக எடுத்துக்காட்டுகிறார். அதேநேரத்தில் அவர்கள் எக்கருத்தில் மாறுபடுகிறார்கள் என்பதைக் காட்டி அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். காட்டாக, மன்னர்கள், மதகுருமார்கள் பற்றிய கருத்து நிலைப்பாடு இருவருக்கும் வெவ்வேறாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே அவரவர் காலத்தைக் காணும்போக்கில் மிகத்தீவிரமாக இருந்துள்ளனர்.
பெண்விடுதலை பற்றிய கருத்துநிலையில் ஒரேமாதிரியாக சிந்திக்கும் திறம்பெற்றும், குறிப்பாக, பாரதி அதில் தமிழக நிலையைக் கருத்தில்கொண்டு தம்முடைய படைப்புகளைப் படைத்துள்ளார் என்றும் பாரதியை உயர்த்திக் காட்டுகிறார் நூலாசிரியர். காதல் நிலையில் இருவரும் சற்று முரண்படுகின்றனர். அதற்கான காரணம், இயல்பிலேயே (இளமையிலேயே) ஷெல்லி கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருந்து, இயற்கையையே காதல் என்று கூறியதும், பாரதி பராசக்தியையே காதல் வடிவமாகக் கண்டதுமே இம்முரண்பாடு.
உருவகங்களையும் உவமைகளையும் பயன்படுத்துவதில் ஷெல்லி முன்னனியில் இருக்கிறார். அதனை அடியொற்றியே பல்வேறு இடங்களில் பாரதி தன்னுடைய உவமைகளையும், உருவகங்களையும் படைக்கிறான். ஷெல்லியின் கவிதைகளில் மனங்கசிந்த பாரதி, ஷெல்லியின் அனைத்துத் திறங்களையும் அப்படியே தமிழில் கொண்டுவர முயற்சித்திருக்கிறான்.
பொதுவுடைமை பேசும்போதும் அதற்கும் முன்னிற்பவன் ஷெல்லியே. அவன் ‘பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை’ எனவும், பாரதியை ‘ருஷ்யப் புரட்சியின் குழந்தை’ எனவும் குறிப்பிடுவார் நூலாசிரியர். ஷெல்லி காலத்தில் வாழ்ந்த பைரன், கீட்ஸ் போன்ற கவிஞர்களை விடவும் ஷெல்லி ‘மனித வர்க்கத்தையெல்லாம் அரவணைக்கும் மனிதாபிமானத்தோடு இலக்கியம் படைத்தவன்’ என்று குறிப்பிடுவார். அதேபோல்தான் பாரதியும் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த கவிஞர்களுக்கு நடுவில் ஒரு விடிவெள்ளியாய் தோன்றியவன் பாரதி. இருவருமே தங்களுக்கான வாரிசுகளை நிலைநிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்கள். இறுதியாக பாரதியை ஷெல்லியின் கவிதா பரம்பரையில் வந்த சிறந்த வாரிசாக முடிசூட்டுகிறார் தொ.மு.சி. ரகுநாதன்.
………… as in the splendor of the Sun.
All shapes look glorious which thou gazest on! (Eppipsychidion)
‘வெயிலொளி எந்தப்பொருள் மீது பட்டாலும் அந்தப்பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிறான். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையதாகத் தோன்றுகின்றன’ (பாரதி: காந்தா மணி – சிறுகதை தொடக்கம்).
இருவருமே வெயிலொளி படரும் அந்தப்பொருளாகவே நமக்குக் காட்சியளிக்கிறார்கள்.
பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன் –
'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' (NCBH), ₹ 100
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|