கவிஞனின் ஆழ்மனக்கடலில் நிகழ்ந்த அதிர்வில் மேலெழுந்த அலை வீச்சே கவிதைமொழி. ஆழிப்பேரலையாய் கவிஞனிடமிருந்து வெளிப்பட்டு வாசகனை தம்வசப்படுத்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. கவிதை மானுடத்தின் ஈரத்தை மெல்ல தம் மௌன மொழிகளால் கசியச்செய்யும். தேவைப்படின் இரத்தத்தையும் கசியச் செய்யும். இரத்தக் கசிவினுள் மானுடத்தின் அடிமைச் சங்கிலிகளின் கண்ணிகள் நெகிழ்ந்து அவிழ்படும் ஓசையை கேட்கமுடியும். கவியின் மனதில் கன்னல்பட்டு கருக்கொண்ட நிகழ்வு / அனுபவங்களின் மொழியே கவிதையாகிறது. கவியின் மனச்சட்டகத்தைப் பொறுத்து வார்க்கப்படும் கவிதைகள் கவிக்கு கவி வேறுபடுமெனின் அது மிகையல்ல. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்ணோ முழுமையும் மானுட ஈரம் கசிந்து பெரும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
“எஞ்சோட்டுப் பெண்” தமிழச்சியின் முதல் கவிதைத் தொகுப்பாக அமைகிறது. முற்றிலும் தன்னைச் சுற்றியே நகரும் இக் கவிதைகள் அப்பா, அம்மா, அப்பத்தா, தோழி, அக்கா, காமாச்சிப்பாட்டி, சிலம்பாயி, சேத்தூர் சித்தப்பா, சித்தி, முடியனூர்க்கிழவி, கொத்தனார் பாக்கியம், கச்சம்மா, கருப்பையா, குழந்தை வேல் ஆசாரி எனும் மனிதச்சித்திரங்களோடு தமக்கிருந்த அன்பை, அவர்கள் தம்மீது கொண்டிருந்த அன்பை கவிதையில் பரிமாறுகிறது.
கவிதையில் ஒவ்வொரு மனிதனும் மானுட ஈரத்தை நேசமாய் கசிவிப்பது என்னமோ அருவி நீரின் குளிர்ச்சியாய் உள்ளுணரச் செய்கின்றது. கவிதையில் உலாவும் மனிதர்கள் கல்வியின் மூலம் சூட்சுமங்களை கற்றுக் கொள்ளாத, மனதில் கபடமற்ற, உண்மையான அன்பை ஒளிரச் செய்பவர்களாக காட்சிப்படுகின்றனர். நெஞ்சில் ஈரம் கசியும் அந்த மனிதர்கள் குறித்த காட்சிப் படிமங்களின் வழியாக தமிழச்சியின் மானுட ஈரமும் நம்மை கவர்கின்றன. இது ஒருநிலை.
இன்னொருபுறம் தீப்பெட்டி பொன்வண்டு, கம்பங்கூழ், பனைநுங்கு, பதனீர், பெயர் எழுதிப்பார்த்த நெட்டிலிங்கம் மரம், சினை வயிற்றோடு மேய்ந்த சிவப்பி, ஆலமரம், கனகாம்பரம், கலர்ப்பூந்தி, அணில், வெண்கலச் செம்பு, பாம்படம், மார்கழி காலையின் பூசணிப்பூ, மருதாணி விரல்கள், காத்து கருப்பு, மயிற்பீலி, பரண், பொங்கல், திண்ணை, கைக்கடிகாரம், வளையல், கிளி, சாமியாகிப்போன தங்கச்சிப்பாப்பா, சைக்கிள் என கவிஞரின் வாழ்வைக் கொண்டு செலுத்திய பலவும் கவிதையை சுவீகரித்து நிற்கின்றன.
இவை வாழ்வியல், வட்டாரம், இனவரைவியல், புழங்கு பொருட்கள், பண்பாட்டுக்கூறுகள், நினைவுகள் என்பவைகளோடு முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் மானுடம், மானுடத்தோடு தொடர்புடைய மேற்சுட்டிய பறவைகள், விலங்குகள், மரங்கள், பொருட்கள், உணவு, உணர்வு எனும் இவ் இருமையங்களும் தமிழச்சியின் கவிதைகளின் உயிர்சக்தியாக விளங்குபவை. எனினும் ஊடாகவே இவையல்லாத வேறு சில கவிதைகளும் இடம்பெற்றிருப்பதும் கவனத்திற்கு உரியவையே ஆகும். இங்கு கலைஞனைப் பற்றி எர்னஸ்ட் ஃபிஷர் “ஒரு கலைஞனாக இருக்க வேண்டுமானால் அனுபவத்தைப் பற்றிப் பிடித்து நினைவாற்றலாக உருமாற்றுவதும் நினைவை உணர்ச்சி வெளிப்பாடாக பொருளை வடிவமாக ஆக்குவதும் இன்றியமையாதாகும். ஒரு கலைஞனுக்கு உணர்ச்சிப் பெருக்கு மட்டுமே எல்லாமாக ஆகிவிடாது. அவனுக்கு தன் தொழில் தெரியவும் வேண்டும் அதை ரசிக்கவும் வேண்டும். எல்லா விதிகளையும் திறமைகளையும் வடிவங்களையும் மரபுகளையும் அறிந்திருக்க வேண்டும். அதன் மூலம் கட்டுக்கடங்காத விலங்கான இயற்கையை அடக்கி கலையின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த முடியும். (கலையின் அவசியம், பக் – 10,11) என்பது முக்கியமானதாகிறது. இதனை தமிழச்சி தன் கவிதைக்குள் திறமையாக கையாண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் புதிய புதிய உறவுகளால் நெய்யப்பட்டுக் கொண்டே இருப்பது. அதற்கு முடிவென்பது மரணமேயாகும். நெய்யப்படும் உறவின் இழைகளில் இருந்து நாம் பல நேரங்களில் மீள முடியாதபடிக்கு பின்னப்பட்டு விடுகிறோம். குறிப்பாக பிறந்து வளர்ந்த ஊர், அல்லது இளமையில் நெடுநாட்கள் ஒருவர் வாழ்ந்த நிலமும் அங்குள்ள பிற யாவும் ஒரு மனிதனை பெரிதும் வசீகரித்து விடுகிறது. எனவே பின்நாளில் பணிநிமித்தமாகவோ அல்லது பெண்ணைப் பொறுத்தமட்டில் மணமுடித்து இன்னொரு இடத்திற்கு குடிபுகும்போதோ நிகழும் இடமாற்றத்தாலோ ஏற்படும் நிலம் உள்ளிட்ட பிற மாற்றங்கள் யாவும் ஒரு மனிதனுக்கு இயல்பின் முரணாகத் தெரிகிறது. எனவே மனம் இளமைக்காலத்தை நோக்கி விரைகிறது. அக்கால பழக்கவழக்கங்களோடு இக்கால பழக்கவழக்கங்களை ஒப்புமை செய்து பார்த்து புதிய வாழ்வை அங்கிகரிக்கத் தயங்குகிறது. பழமை நினைவுகளின் அடுக்குகளில் இருந்து மனம் பிரிய மறுக்கிற போது ஏற்படுகிற வலியிலும் கூட கவிதைகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள் பிறக்கின்றன. இதனை தமிழச்சி தன் கவிதைகளில் இப்படியாக பதிவு செய்கிறார்.
“பேருந்து இரைச்சலில்
செவிடாகவும்
தொலைக்காட்சிப் பெட்டிகளால்
அஜீரணித்தும்
கணிப்பொறி வடிவங்களில் முகம்
தொலைத்தும்
கூட்டுப்புழு வாழ்க்கையில்
முடமாகியும்
நகரத்தில் தொலைந்த என்னை
நடு இரவு உறக்கத்தில்
சிரிக்க வைத்து
மீண்டும் கண்டெடுக்கும்
சிறுவயதில் நான் சேகரித்த
தீப்பெட்டிப் பொன்வண்டாய்
என் பிறந்த ஊர் நினைவு” (எஞ்சோட்டுப்பெண், ப- 45)
இங்கு பிறந்த ஊரின் முக்கியத்துவத்தை பதிவு செய்யும் இன்னொரு கவிதையான “நீள் ஓட்டம்” தொங்கும் படிக்கட்டுகளிலோ, இறங்கி ஏறும் படிக்கட்டுகளிலோ, பயணம் செய்து எனதூர் திண்ணைப்படிக்கட்டுகளைத் தேடிப்போக வேண்டும் எனும் வரிகள் ஊர்த்திண்ணையின் முக்கியத்துவத்தை பிரபல்யப்படுத்துகிறது.
மானுட வாழ்வு அல்லது இந்த உயிரினச் சமூகம் சிறப்புற வாழ்வதற்கு மானுடமனதிலே நேசம் எனும் ஈரத்தின் பகிர்வு தேவையாய் இருக்கிறது. அதனை தமிழச்சி தான் வாழ்ந்த சமகால மனிதர்களோடு கொண்டிருந்ததின் அடையாளமாகவும், அம்மக்கள் கவிஞரோடு அன்பை பகிர்ந்திருந்ததின் அடையாளமாகவுமே இந்த கவிதை ஆக்கம் நிகழ்ந்திருப்பதை உணர்தல் எளிது. இந்த அன்பு பரிமாற்றம் என்பது தாய், தந்தை, என்ற இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைத் தாண்டி சாதி, மதம், பொருள், வர்க்கம், என்ற பாகுபாடுகளையும் கடந்து வறண்ட நிலத்தில் பாய்ந்த நீராய் உள்ளிழுத்துக் கொள்வதோடு கால நகர்வில் எங்கும் வெள்ளக்காடாய் காட்சி அளிப்பதைப் போல அன்பெனும் பேரூற்று கவிதை எங்கும் பரவிக்கிடக்கிறது. பிற உயிர்கள் மீது கொண்ட கரிசனத்தை வள்ளலார்,
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோறிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றாரைக் கண்டுள்ளம் பதைத்தேன்
நீடிய பிணியில் வருந்துகின்றோர் என
நேர் உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சம்
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
(பிள்ளைப் பெருவிண்ணப்பம், பா-1)
என்று கூறுவார். இந்த உயிர்க் கோட்பாட்டை உயிர்த்துவமாக தமிழச்சியின் கவிதைகள் முன்மொழிகின்றன.
இத்தொகுப்பின் முத்தாய்ப்பான எஞ்சொட்டுப் பெண் கவிதை,
“எனக்காக வெல்லக்கட்டிகள்
முடிந்தே இருக்கின்ற
உன் சட்டைகள் இரண்டிலும்
நிரந்தரப் பழுப்புக்
கறை படிந்திருக்கும்” (எஞ்சோட்டுப்பெண், ப- 77)
“நான் மாடியிலும்
நீ ஊர்க்கோடியிலும்
வசித்தாலும் வர்க்கச் சாலைகள்
பிரவேசித்திராத
என் குழந்தமை நிலவின்
முதல் தோழமைச் சுவடு நீ” (எஞ்சோட்டுப்பெண், ப – 80)
என்பதுமாய் நீளும் கவிதை இருவரையும் காலங்கள் பிரித்து வைத்திருந்தாலும் ஊரில் நடைபெறும் மாசித் தேர்திருவிழாவில் மாவிளக்கு நேரத்தில் சந்திக்கச் செய்வதை நினைவுபடுத்துகிறது. குறிப்பிட்ட தேர்த் திருவிழாவில் சந்திப்பு நிகழாமை குறித்து மாவிளக்கு போட வந்த தோழியின் மகளிடம் விசாரிக்க நான்காவது பிரசவத்தில் அவள் இறந்த நிகழ்வறிய என் மனத்தேரின் கடையாணி கழன்று மகளின் மாவிளக்கில் புதைந்து போனது என்பதாய் தோழியுடனான அன்பை, நெருக்கத்தை பகிர்கின்றது இந்த கவிதை.
“முடியனூர்க் கிழவி” பற்றிய சித்திரமும் மனக்கண்ணிலிருந்து நீங்கா அன்பின் பேரூற்றாய், தியாகத்தின் திருவுருவாய் நம்முன் காட்சிப்படுத்தப் படுகின்றது.
“முழுக்க அம்மை வந்து
எனக்கு
மூன்று தண்ணீர் விட்டவுடன்
முத்தாலம்மனுக்குத்
தீச்சட்டி எடுத்த
அக்கிழவி
உதிர்ந்து விட்ட
என் கூந்தல்வளர
ஊருக்கொரு
வைத்தியம் கேட்டுவந்து
நான்கைந்து மாதங்கள்
நல்லெண்ணெய் முழுக்காட்டி
பிடறி ஈரம் காயச்
சாம்பிராணி காட்டிப்
பின்
பாண்டிமுனி கோயிலுக்கும்
தன் முடி எடுத்தாய்” (எஞ்சோட்டுப்பெண், பக் – 98, 99)
ஆக இத்தகையதாய் தொகுப்பில் இடம்பிடித்திருக்கும் மனிதச் சித்திரங்கள் யாவும் அன்பை கையளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. “கவிதை என்பது பனித்துளி போல தன்னளவில் முழுமையாகவும் ஈரமும் வசீகரமும் கொண்டதாகவும், தனக்குள் பெரிய உலகைப் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஜென் கவிஞர்கள்” (உலக இலக்கியப் பேரூரைகள், ப- 190) எனும் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்தும் இங்கு சிந்தனைக்கு உரியதாகிறது. மேலும் தமிழச்சியின் கவிதைகள் அக்கால கிராமத்துப் பண்பாட்டை, வாழ்வியல் முறையை, வாழ்வியல் நெறியையும் புலப்படுத்தி நிற்கின்றன. சில கவிதைகள் இவைகளை இக்கால வாழ்வியலோடு ஒப்புமைப் படுத்தி சலித்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.
“வருகை” என்ற கவிதை காலையிலிருந்தே அன்று வீட்டிற்கு புதிய கணினி வருவது குறித்த கவிஞரின் சந்தோசப் பகிர்தலை வெளிப்படுத்துவதோடு கணினியை எங்கு வைக்கலாம் என்றும் இடம் தேடும் படலத்தையும் பேசிக்கொள்கிறது. கவிதை இறுதிப்பகுதியை எட்டும் தருணத்தில்
“சற்றுப் பழசாகிவிட்ட
திரைச்சீலைகளை விலக்கிச்
சன்னல்களைத் தூசி தட்ட
அதன் சட்டத்திலிருந்து
அதனோடு சேர்ந்து விழுந்த
மெலிதான இலவம்பஞ்சு
மெத்தை போலிருந்த
நைந்த நார்க் கூட்டை
அணிலின் கோடுகளுக்கு
அழகான கதை சொன்ன
அப்பாவின் நினைவோடு
கையிலெடுத்த
அந்தக் கணத்தில்
கணினி வரப்போகும்
சந்தோஷம்
முழுவதுமாய்க்
காணாமல் போயிருந்தது” (எஞ்சோட்டுப்பெண், பக் – 101, 102)
என்பதாக முடிவுக்கு கொண்டு வருகிறார். இங்கு அணிலுக்கு நேர்ந்த சிரமமும், அணில் குறித்த அப்பாவின் கதையின் நினைவுமாய் கணினியின் சந்தோசத்தை துடைத்தெறிந்து விடுகிறது. இங்கு கவிஞரின் மனம் எதில் லயித்துக் கிடக்கிறது. எதற்காக ஏக்கம் கொள்கிறது என்பதை அடையாளம் காண்கிற போது இன்று மெத்தப் படித்தவர்களிடம் காணப்படுகின்ற பொருள் சார் காதலை விட கிராமத்து மனிதர்களின் உயிர்க்காதலையே தமிழச்சி தன் கவிதையில் நிலை நிறுத்துவது முக்கியத்துவம் பெறுகின்றது.
மேலும் கதவுகளின் குணாம்சங்கள் குறித்து பேசும் “பேசாத மொழி” கவிதையும், பொய்த்துப் போன விளைச்சலைப் பேசும் “பொங்கல்” கவிதையும், விவசாயியின் நிலை அன்றும், இன்றும், என்றும் ஒரே மாதிரி தான் என்பதை நினைவுபடுத்தும் விவசாயியின் தோல்வியை பேசும் “பெருங்காயம்” கவிதையும், பாதங்களை பாதுகாப்பது குறித்த மருத்துவ தொழில் நுட்பத்தைப் பேசும் பாரம் கவிதையும், சமூகக் கரிசனத்தை புலப்படுத்தும் “பதிலிருக்கா” கவிதையும், தந்தையின் ஈடுசெய்ய இயலாத இழப்பை ஒப்புச் சொல்லிப் பேசும் அழுகை (ஒப்பாரி) கவிதையும், பாமரர் பலருக்கும் பலவிதமாய் பணிவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தேர்தலைப் பேசும் “பொழப்பு” கவிதையும் என பல கவிதைகள் முத்தாய்ப்பான கவிதைகளாகவே திகழ்கின்றன.
ஒரு பெண்ணின் வாழ்வினை திருமணத்திற்கு முன்பின் என பிரித்தறிந்து திருமணத்திற்குப் பின் ஒரு சலங்கையை இயல்பாக கட்ட முடியாத அல்லது கட்டிக் கொள்வதிலிருக்கின்ற சிரமத்தைப் பற்றிப் பேசும் “புதையல்” கவிதை சலங்கையோடு கவிஞருக்கிருந்த நெருக்கத்தைப் பறைசாற்றுவதோடு பெண்ணியம் சார்ந்தும் சிந்திக்க கூடியதாக விளங்குகிறது.
“வாழ்ந்திருந்த கணங்களைத்
தன்னுள் கோர்த்து
வைத்திருக்கின்ற
அந்தச் சலங்கையினைப்
பரணிலிருந்து சுமை
நீக்கி எடுக்க வேண்டும்.
அடுத்த ஞாயிறோ
மற்றுமொரு
அவசியமானதாயிருந்து பின்
அர்த்தமற்றுப் போன வேறொன்றோ
அதன் மீது அமர்ந்து விடும் முன்” (எஞ்சோட்டுப்பெண், ப- 127)
பெண் எழுத்து என்றாலே பெண்ணியத்தின் குரலைத் தேடுவது இன்று வழக்கமாகி விட்டது. அதுவும் தீவிரவாதப் பெண்ணியம் சார்ந்த கவிதைகளோ கதைகளோ ஒரு தொகுப்பில் கண்டிப்பாக ஒரு சிலவேனும் இருந்தாக வேண்டும் என்பதும் பல பெண் எழுத்தாளர்களின் மனநிலையாக இன்று இருக்கிறது. அதுவே அவர்களுக்கான அங்கிகாரமாக அவர்கள் வரித்துக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகப் பெண் கவிகளில் ஒரு சிலர் இதன் தீவிரத்தை அங்கிகரிப்பதாக தெரிவதில்லை. மட்டுமல்லாது இவர்கள் குடும்ப அமைப்பினை / உறவினை வலிந்து சிதைக்க விரும்புவதில்லை.
சக்திஜோதி, வெண்ணிலா, தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்டோர் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்களின் படைப்புகளில் ஆணாதிக்கமும், பெண்விடுதலையும் பேசப்பட்டாலும் அதில் இயல்பும், மிதவாதமும் தலைதூக்கி நிற்பதைக் காணலாம். இந்த சாராம்சத்தில் பார்க்க வேண்டியதாக தமிழச்சியின் “அசையா ஊஞ்சல்” கவிதை இடம்பெற்றுள்ளது. இந்த கவிதை ஒரு குடும்பத்தில் ஆணின் சீற்றம் தூக்கலாய் நிற்க விக்கித்து எதிர்கொள்ள இயலாது போகும் ஒரு பெண்ணை அவளின் குழந்தை முகம் சரி செய்து விடுவதை காட்சிப்படுத்துகிறது. ஒரு துன்பத்தை இன்னொரு இன்பம் வந்து சமன் செய்யும் வாழ்வியல் தத்துவத்தை பெண்ணியக்குரலாக அல்லாமல் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிகிறது.
“பெருமூச்சின்
சுடுநாத் துருத்தி
வீடெங்கும் கருஞ்சீற்றமாய்ப்
படமெடுத்து
இறைந்து கிடக்கும்
விஷம் துப்பி.
பல் பதியப் பரவும்
பயத்தின் பரபரப்பில்
ஏறும் நீலம்
பாரித்த திணறலுடன்
விக்கித்து வாழ்வின் விளிம்பில்
அக் கணத்து அவள்
தெறித்த நச்சு பெருக்கித்
துடைத்து நிமிர
விரித்த பூச்சரமாய்க்
குழந்தை தாவுகையில் நஞ்
சினைச் சீரணித்த
களைப்பின் வெளுப்போடு
நலிந்த புன்னகை ஒட்டி
நாளைய ஓட்டத்திற்காய்
இக்கணத்து அவள்” (எஞ்சோட்டுப்பெண், பக் – 138, 139)
“கவிதை என்பது நீர் நிலையை நாடிவரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும், எது தரை இறங்கும் என்று தெரியாது. எவ்வழியே இப்பறவைகள் வந்தன. எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை. பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல அறிந்த அறியாத வித்தைகள் கொண்டது கவிதை. அங்கே சொற்கள் சிறகடிக்கின்றன. கரைந்து போகின்றன. நிமிர்ந்து எழுந்து உள்ளார்ந்த இசையைப் பாடுகின்றன. கனவை உருவாக்குகின்றன”. (எஸ். ராமகிருஷ்ணன், உலக இலக்கியப் பேரூரைகள், பக் – 189, 190) என்பது போல தமிழச்சியின் கவிதைகளும் பல்வேறு நினைவடுக்குகளிலிருந்து சிறகடித்து தரையிறங்குகின்றன. எனினும் அதனுள் மானுட ஈரம் மட்டும் எவ்வித வேறுபாடுமின்ற கசிந்து கொண்டே இருக்கிறது.
E.mail:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
* கட்டுரையாளர்: - முனைவர் சு. செல்வகுமாரன், இணைப் பேராசிரியர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர் – 608002 -
•<• •Prev• | •Next• •>• |
---|