குரு அரவிந்தன்: வணக்கம் கே. எஸ். சுதாகர், அவுஸ்ரேலியாவில் இருந்து கனடா வந்திருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஏதாவது இலக்கியச் சந்திப்புக்களை இங்கே ஏற்படுத்தி இருக்கிறீர்களா?
கே.எஸ்.சுதாகர் : நண்பர்கள் வ.ந.கிரிதரன், பாலமுரளி (கடல்புத்திரன்), எல்லாளன் ராஜசிங்கம், தேவகாந்தன் என்பவர்களை கிரிதரனின் முயற்சியால் சந்தித்தேன். மற்றும் மூத்த எழுத்தாளர் கதிர்.பாலசுந்தரம், `வெற்றிமணி’ ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் (ஜேர்மனி), இன்று தங்களையும் சந்தித்திருக்கின்றேன். ரொறன்ரோவில் பலரும் இருந்ததனால், போக்குவரத்து காரணமாக பிறம்ரனில் தங்கியிருந்த என்னால் சந்திக்க முடியவில்லை. பலரைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தும் முடியவில்லை. தொலைபேசி மூலம் நண்பர் அகில் நீண்ட நேரம் என்னுடன் உரையாடியிருந்தார்.
குரு அரவிந்தன்: அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள், இதழ்களின்; பெயர்களைக் குறிப்பிட முடியுமா?
கே.எஸ்.சுதாகர் : மெல்பேர்ணில் இருந்து `எதிரொலி’ என்ற பத்திரிகை, `அக்கினிக்குஞ்சு’ என்ற இணையமும் வெளிவருகின்றன. அதேபோல் சிட்னியில் இருந்து ‘உதயசூரியன்’, `தமிழ் ஓசை’, `தென்றல்’ என்ற சஞ்சிகைகளும், `தமிழ்முரசு’ என்ற இணையமும் வெளிவருகின்றன.
குரு அரவிந்தன்: ஏனைய புலம் பெயர் நாடுகளைப் போல வாசிப்புப் பழக்கம் தற்போது அங்கும் குறைந்து கொண்டு வருகிறதா?
கே.எஸ்.சுதாகர் : வாசிப்புப் பழக்கம் இங்கும் குறைந்துகொண்டுதான் வருகின்றது. `மெல்பேர்ண் வாசகர் வட்டம்’ என்றொரு அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. இதில் காலத்துக்குக் காலம் பலரும் இணைந்துகொண்டு வாசிப்புப் பழக்கத்தை ஊக்கி வருகின்றார்கள். சிட்னியில் `தமிழ் அறிவகம்’ என்னும் நூல் நிலையம் வாரத்தில் நான்கு நாட்கள் முழுநேரமாக தொழிற்படுகின்றது.
குரு அரவிந்தன்: கனடாவிலும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் தற்போது அடுத்த தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றோம். அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகள் தமிழ் வளர்ப்பதில் கொண்டுள்ள ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்.
கே.எஸ்.சுதாகர் : இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது பல மொழிகளில் இயங்கிவரும் SBS (Special Broadcasting Service) வானொலி. இது பிரதிவாரமும் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு மணித்தியால சேவையை வழங்கி வருகின்றது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதுபோல் பலவிதமான நிகழ்ச்சிகளை இவ்வானொலி தருகின்றது. தவிரவும் சிட்னியில் இருந்து 24 மணி நேரம் இயங்கும் இயங்கும் ATBC (Australian Tamil Broadcasting Corporation), இன்பத்தமிழ் வானொலி, தமிழ் முழக்கம், டிஜிட்டல் மூலம் இயங்கும் `தாயகம்’ என்பவற்றையும் குறிப்பிடலாம். இவற்றைத்தவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் பல தமிழ் வானொலிகள் இயங்கி வருகின்றன.
குரு அரவிந்தன்: தாய்மொழியாம் தமிழ்மொழி, அந்தத் தமிழ் கற்பிப்பதில் அங்குள்ள பாடசாலைகளின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிடுங்கள்.
கே.எஸ்.சுதாகர் :கனடா போன்று அவுஸ்திரேலியாவும் ஒரு பல்கலாச்சார நாடாக இருபதால், அரசு பல்வேறு வழிகளில் பிற மொழிகளும் வளர உதவி புரிகின்றது.
அவுஸ்திரேலியாவில் சிட்னி (நியூ சவுத்வேல்ஸ் மாநிலம்), மெல்பேர்ண் (விக்டோரியா மாநிலம்), பிற்ஸ்பேர்ன் (குவீன்ஸ்லாந்து) பள்ளிகள் தமிழ் கற்பிப்பதில் முன்னணியில் நிற்கின்றன. முதல் தமிழ்ப்பள்ளியாக 1977ஆம் ஆண்டு `பாலர் மலர் தமிழ்ப் பள்ளி’ சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து பலர் புலம்பெயர்ந்ததன் பின்னர், 1987 ஆம் ஆண்டு சிட்னியில் ஹோம்புஸ் என்ற இடத்தில் தமிழ்க்கல்வி நிலையம் ஒன்று ஆரம்பிக்கபட்டது. தற்போது 12 இற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் அங்கே உள்ளன.
மெல்பேர்ணில் 1979 ஆம் ஆண்டு ஈழம் தமிழ்க்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பாடசாலை இன்று பல கிளைகளுடன் தமிழ் கற்பிப்பதில் உதவி புரிகின்றது. மற்றும் மாவை நித்தியானந்தனால் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட `பாரதி பள்ளி’ இன்று பல கிளைகளுடன் விரிவடைந்திருக்கின்றது.
குயீன்ஸ்லாந்தில் `பிறிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி’, `பிறிஸ்பேர்ண் தமிழ்ப்பாடசாலை’ என்பனவும் ; மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் அடிலையிட் என்னுமிடத்திலும், மேற்கு அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்திலும், வடக்கில் டார்வினிலும், தலைநகர் கன்பராவிலும் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
குரு அரவிந்தன்: மெல்பேர்னிலா அல்லது சிட்னியிலா தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்?
கே.எஸ்.சுதாகர் : அவுஸ்திரேலியாவில் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் கூடுதலான தமிழர்கள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார்கள். குறிப்பிட்டுச் சொல்வதானால் மெல்பேர்ணில் சற்று அதிகம் என்பேன்.
குரு அரவிந்தன்: நூல் வடிவில் வெளிவந்த உங்களுடைய ஆக்கங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்.
கே.எஸ்.சுதாகர் : இரண்டு சிறுகதைத்தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.
’எங்கே போகின்றோம்’ என்ற சிறுகதைத்தொகுதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடாகவும், ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதி ‘அக்கினிக்குஞ்சு’ வெளீயீடாகவும் வந்திருக்கின்றன.
குரு அரவிந்தன்: உங்களுடைய சிறுகதைகளைப் `பதிவுகள்’ இணையத்திலும் வாசித்திருக்கின்றேன். ஆக்க இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், அறிவியற்கட்டுரைகள் போன்றவற்றில் எதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? எதை விரும்பி எழுதுகிறீர்கள்?
கே.எஸ்.சுதாகர் : சிறுகதை எழுதுவதில் தான் ஆர்வம் அதிகம். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். தவிர மூன்று குறுநாவல்கள், பல கட்டுரைகள், சில புனைவிலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். கவிதை ஒன்றிரண்டு எழுதியிருந்தேன். ஆர்வம் இல்லை.
குரு அரவிந்தன்: கனடா தமிழர்களுக்கும், அவுஸ்ரேலிய தமிழர்களுக்கும் இடையே என்ன ஒற்றுமை, என்ன வேற்றுமையைக் காண்கிறீர்கள்?
கே.எஸ்.சுதாகர் : பிரிந்து நின்று குழுக்களாகச் செயற்பட்டு தமிழ் வளர்ப்பதில், இரண்டு நாட்டிலும் உள்ளவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதுதான் நான் கண்ட ஒற்றுமை.
குரு அரவிந்தன்: நல்லதொரு பதிலைத் தந்திருக்கின்றீர்கள். ஒன்றுபடாமல் தமிழரால் எதையுமே சாதிக்கமுடியாது என்பதைத் தாயகத்திற்குச் சென்றபோது அங்கேயும் அவதானித்தேன். அவுஸ்திரேலியாவில் உள்ள அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியைத் தொடருவார்களா, அல்லது கைவிட்டு விடுவார்களா?
கே.எஸ்.சுதாகர் : தொடர வேண்டும் என்பதில் தான் பலரும் அக்கறை காட்டி வருகின்றோம். தராசு ஒருபுறம் சரிந்திருப்பதைத்தான் காணக்கூடியதாக உள்ளது.
குரு அரவிந்தன்: இதே நிலைதான் கனடாவிலும் இருக்கின்றது. எங்களால் முடிந்தளவு நாங்களும் தமிழ் வளர்ப்பதில் கடுமையாக ஈடுபட்டிருக்கின்றோம். அது சரி பிறந்த மண்ணுக்குச் சென்றீர்களா, அங்கே என்ன மாற்றங்களை அவதானித்தீர்கள்?
கே.எஸ்.சுதாகர் : பிறந்த மண்ணை விட்டுப் புறப்பட்டு இருபத்தி நான்கு வருடங்களாகிவிட்டன. போக வேண்டிய நேரங்களிலெல்லாம் போக முடியாத மனக்கவலை. போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.
கேள்வி: ஒரு எழுத்தாளன் என்ற வகையில் கனடிய இலக்கிய ஆர்வலர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கே.எஸ்.சுதாகர் : கனடிய இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டும் என்றல்ல, பலருக்கும் தான். நல்ல இலக்கியங்களைத் தூக்கிப் பிடியுங்கள். குழுக்களாகப் பிரிந்து நின்றாலும் மற்றவர்களது இலக்கியத்திற்கும் மதிப்புக் கொடுங்கள். நாம் எல்லோருமே மொழி வளர்க்கக் கடமைப்பட்டவர்கள்.
குரு அரவிந்தன்: உங்கள் பொன்னான நேரத்தை விளம்பரம் வாசகர்களுக்காகச் செலவிட்டுத் தங்களைப் பற்றியும், அவுஸ்திரேலியாவின் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றியும் அறியத் தந்தமைக்காக நன்றியைத் தெரிவிக்கின்றோம். தங்கள் இலக்கிய முயற்சியும், வளர்ச்சியும் மேலும் சிறப்படைய வாழ்த்துகின்றோம். நன்றி.
நன்றி : விளம்பரம் (கனடா, 15.08.2019)
•<• •Prev• | •Next• •>• |
---|