- "கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ,சர்வதேச அளவிலான சிறுகதைப் போட்டி - 2019 ல் இந்தச் சிறுகதை, மூன்றாவது பரிசு பெற்று, உலக அரங்கில் எழுத்தாளன் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதற்காக மாண்புடை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கு என் மனம் நிறை நன்றி! நன்றி!" - ஸ்ரீராம் விக்னேஷ்
பத்திரிகைத்துறையில் எனது பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு.கங்காதரன் போன்ற ஒரு விமர்சகரைப் பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், எனது பள்ளிக் காலத்திலிருந்து, பல்கலைக்கழக நாட்களிலும், பின் பத்திரிகை நிருபராகப் பணிபுரிந்த வேளையிலும், தொடர்ந்து அவரது விமர்சனங்களை அவ்வப்போ, பல பத்திரிகைகளில் படித்திருக்கின்றேன். ஆனால், தற்போது.... மூன்று ஆண்டுகளாகப், பொறுப்பாசிரியராய் நான் சென்னையிலே பணியாற்றும் “சிறகுப்பேனா” வாரப்பத்திரிகைக்கு அவரிடமிருந்து விமர்சனங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்தான், அவரைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது.
கங்காதரனுக்கு வயது எழுபது. மனைவியை இழந்தவர். திருநெல்வேலி மாவட்டம் – வீரவ நல்லூரில் ; மகன், மருமகள், பேத்தி என்ற உறவுகளுடன் வாழும் அவர், தனது மாதாந்த ஓய்வூதியப் பணத்திலே பாதிக்குமேல், தன்னுடைய இலக்கியப் பசிக்குத் தீனிபோடுவதில் செலவு செய்கின்றார். உள்ளூர் நூலகத்துப் புரவலர்களில் ஒருவராக இருக்கின்றார். அஞ்சல் அட்டை, அஞ்சல் உறை, மற்றும் தபால் தலை, ஆகியன வாங்கி வைத்துவிட்டு, பத்திரிகைகளுக்கும், அதிலே எழுதும் படைப்பாளிகளுக்கும் என, மாறிமாறித் தனது மனப்பூர்வமான பாராட்டுக்கள், கண்டனங்கள், சுயகருத்துக்கள் ஆகியவற்றை எழுதி அனுப்புகிறார்.
தமிழ் சம்பந்தமான மாநாடுகள், விழாக்கள் எங்காயினும் அங்கிருப்பார். நாலாவது தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது, அங்குசென்றவர் சிங்களப் போலீசின் தாக்குதலுக்குள்ளாகிப், பட்ட காயங்களைக் காட்டி, “வீரமண்ணில் கிடைத்த விழுப்புண்” என்று இப்போதும் பெருமை பேசுகின்றார்.
“சிறகுப்பேனா”வில், “மெய்க்கீர்த்தி” என்னும் புனைபெயரில், நான் எழுதிவரும், “அவள் ஒரு காவல்தெய்வம்” என்னும் தொடரில், இதுவரை வெளிவந்த நாற்பத்தி ஆறு தொடருக்கும், தவறாது விமர்சனக் கடிதங்கள் எழுதியிருந்தார். பேச்சளவிலேதான் அவை கடிதங்கள். ஒவ்வொன்றும் திறனாய்வுத் தீபங்கள். “யார் சார் அந்த மெய்க்கீர்த்தி? அவரை நேரிலே பார்க்கவேண்டும்போல இருக்கின்றது....” அடிக்கடி கேட்டு எழுதுவார்.
கதையின் நாயகி சுமித்ரா. வயது இருபத்தெட்டு. உறவினர் யாருமில்லை. எட்டு வயதில் பெற்றோரை இழந்து, “அநாதை” ஆகியவள். குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு, பம்பாயில் விற்கப்படுகின்றாள். ஆனால், அங்கிருந்து தப்பி, குழந்தையற்ற பணக்காரத் தம்பதிகள் ஒன்றால், தத்தெடுக்கப்படுகின்றாள். காலப்போக்கில், சுமித்ராவின் சுவீகாரப் பெற்றோரும் காலமாக, அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான அவள், அவற்றையெல்லாம் விற்றுவிட்டு ஊருக்கே வந்து, “அநாதை ஆசிரமம்” ஒன்றை நிறுவுகின்றாள். கணிசமான அளவு குழந்தைகள் – முதியோர்கள் சேருகின்றனர்.
ஊருக்குள் பெரியமனிதர் என வாழும் ஒருவர் , இவளின் ஆசிரமத்துக்கு வந்து, ஒரு சிறு தொகையை “நன்கொடை”யாகக் கொடுத்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். அவரது முகத்தை சற்று பின் நோக்கி ஞாபகப்படுத்திய போது, அவர்தான் தன்னைச் சிறுவயதில் கடத்திப் பம்பாயில் விற்றவர் என்பது சுமித்ராவின் நினைவில் வருகிறது. ஆனால், அவரோ இவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியானால், அவரால் கொடுக்கப்பட்ட நன்கொடைக்கும், அதன் மூலம் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புக்கும் காரணம் என்னவென்பதை சுமித்ரா ஆராய்ந்தாள்….. கண்டுபிடித்தாள்!
ஓராண்டுக்கு முன்பு, வேறு ஒரு “அநாதை ஆசிரம’’ த்துக்கும் உதவி செய்வதுபோல செய்து, உள்ளே நுழைந்தார். ஆசிரம நிர்வாகிகளுக்கும் தனிப்பட்ட முறையில் நிதி கொடுத்துக் கைக்குள் போட்டார். மூன்று மாதங்களுக்குள் நான்கு குழந்தைகள் மாயம்
“சிறு வயதில் நான்தான் அநாதை ஆகிவிட்டேன்.... எனக்கென்று யாரும் இல்லை.... ஆனால், என்னிடம் தஞ்சம்கோரி வந்தவர்களுக்கு காவல் தெய்வமாக நான் இருப்பேன்.” உறுதி கொள்கின்றாள் சுமித்ரா. நாளடைவில் அந்த பெரிய மனிதர், இங்கும் தனது கைவரிசையை ஆரம்பிக்கின்றார். அதைச் சாதுரியமாக முறியடித்தபடி சமாளிக்கின்றாள் அவள். பனிப் போராக ஆரம்பித்த ஆட்டம், நாளடைவில் – பகிரங்க ஆட்டமாக வியாபித்து, அவ்வப்போ சூடாக…., காட்சிகள், இடைவேளைகள், வலிதரும் உச்சகட்டம் என நகர்வதிலேயே அத்தியாயங்கள் அலைமோதிப் பாய்ந்து பரிணமித்து,
மெதுவாக நிறைவை நோக்கி சரிந்து தரை தட்டுவதற்குத் தயாராக வெளியே எட்டிப் பார்க்கின்றது…..
ஆமாம்…. கதையின் நாயகி சுமித்ரா, வலிகளையும், வேதனைகளையும் சுமந்தபடி, தனது மோட்டார் வண்டியில் வெளியூர் பயணம் போய்விட்டு, அதோ வந்துகொண்டிருக்கின்றாள். நேரமோ இரவு பதினொன்று ஆகிவிட்டது. இலேசான மழைத்தூறல் விழுந்துகொண்டிருக்க, பெருமழைக்குத் தயாராக வானம் - வெடித்துச் சிதறியது. அதனை வெளிக்காட்டிய மின்னல்க் கீறல்கள், கணப்பொழுதுக்குள் தோன்றி மறைவதுபோல, நெஞ்சைத் தாக்கும் இன்னல்க் கீறல்களும் மறைந்துவிடும் எனவொரு உறுதியும் அவளைத் திடப்படுத்தியது.
தெருவோரமாக கூட்டமொன்று நின்றது. நாலைந்துபேர் சேர்ந்து ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டார்கள். குத்தப்பட்டவர், குழந்தைக் கடத்தல் பேர்வழியான பெரியமனிதர்தான். கண்கள் சொருகி குற்றுயிராகக் கிடந்தார் அவர். இந்த நேரத்தில் மனிதாபிமானம் காட்டாமலிருப்பது சரியாகப் படவில்லை சுமித்ராவுக்கு. அருகே நின்றவர்களின் உதவியோடு தூக்கி , ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகின்றாள். வழியிலேயே இறந்துவிடுகின்றார் அவர்.
“அவள் ஒரு காவல் தெய்வ” த்தின் இப்பகுதி முடிவடையும்போது, நாற்பத்தி ஏழாவது தொடர் முடிந்திருந்தது. “அடுத்த இதழில் முடியும்” அறிவிப்பையும் கொடுத்திருந்தேன். வழக்கமாகச் “சிறகுப்பேனா” வெளியான மறுநாளே, “அவள் ஒரு காவல் தெய்வம்” தொடருக்கான விமர்சனக் கடிதம் கங்காதரனிடமிருந்து வந்துவிடும்.
ஆனால், நான்கு நாட்களாகியும் எந்தத் தகவலும் இல்லை “மலை”யாகக் குவிந்தன மற்றவரின் விமர்சனங்கள்.... நானோ “மாலை”யாக எதிர்பார்த்தேன் .... அவரது விமர்சனத்தை...! “ஒரு வியாபாரிக்கு வாடிக்கையாளர்களே எஜமானர்” என்பார் காந்திஜி. என்னைப் பொறுத்தவரையில், ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்கு கங்காதரன் போன்ற விமர்சகர்களே எஜமானர்கள். அவர்களது விமர்சனக் கருத்துக்களே உற்சாக மூட்டும் மருந்துகள்.
வெட்கப்படாமல் ஒரு உண்மையைச் சொல்கின்றேன். ஒவ்வொரு விமர்சனத்திலும், அவ்வப்போ கதை ஓட்டத்தில் வரும் தவறுகளைச் சரிவரச் சுட்டிக்காட்டியும், அதன் திருத்தம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என கங்காதரன் தந்த கருத்துக்களைக், கவனத்தில் கொண்டும், ஏற்கனவே கதையின் கருவுக்கு பங்கம் ஏற்படாமல், கதை ஓட்டத்தின் கோணங்களை மாற்றியிருக்கின்றேன்.
நாளை பிரிண்டுக்கு ஏற்றியாக வேண்டும். நாற்பத்தி எட்டாவது தொடரும், இறுதி அத்தியாயமுமான பகுதியை, இன்று இரவுக்குள்ளே எழுதி முடிக்கவேண்டும். மனதிலே ஒரு பரபரப்பு. பேப்பரையும் ,பேனாவையும் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தபோது, ஆபீஸ் பையன் வந்து நின்றான்.
“சார்.... “யாழினி”ங்கிற சின்னப்பொண்ணு திருநெல்வேலிலயிருந்து வந்திருக்கா.... கங்காதரன் பேத்தின்னு சொல்றா....”
என்னுடலில் புதுரத்தம் ஓடுவது போன்ற பிரமை.
“யாரு.... கங்காதரன் பேத்தியா...? உள்ளை அனுப்புங்க....”
உள்ளே வந்த யாழினி , “வணக்கம்” தெரிவித்தாள் .
பத்து வயதிருக்கும். நெஞ்சிலே பணிவும், கண்ணிலே உறுதியும் தெரிந்தன. ஆனால், பேச்சிலே மட்டும் கவலையின் சாயல்.
“எங்க தாத்தாவுக்கு உடம்புக்கு சரியில்ல.... காச்சல் வந்து, படுத்தே கிடக்கிறாங்க.... சிறகுப்பேனால மெய்க்கீர்த்திங்கிற சார் எழுதிற தொடர்கதையை படிக்கமுடியல்லையேன்னு அழுதிட்டாங்க.... அப்புறமா நாங்கதான் படிச்சுக் காமிச்சோம்.... திரும்பத் திரும்ப மூணு, நாலு தரக்கா படிக்கச் சொல்லிக் கேட்டதுக்கு அப்புறம் - தான் சொல்லச் சொல்ல எழுதும்மான்னு சொல்லி இந்த லெட்டரை எழுதவச்சு தந்தாங்க....” கையிலே வைத்திருந்தத
கடிதத்தைக் கொடுத்தாள்.
“ஏம்மா.... திருநெல்வேலி ரொம்ப தூரமாச்சே.... யாருகூட வந்தே....?” கேட்டேன்.
“ பக்கத்து வூட்டு மாமாகூட தாத்தா அனுப்பிவச்சாங்க சாரு .... மாமா வெளிய கேட்கீப்பர்கூட பேசிக்கிட்டிருக்காங்க....”
“சரிம்மா.... இம்புட்டுத் தூரம் மெனைக்கேட்டு வந்திருக்கே.... தாத்தா எப்பவுமே லெட்டர்களை போஸ்ட்லதானே அனுப்புவாங்க ....”
“ ஆமா சாரு.... கதைய படிச்ச அன்னிக்கே, அனுப்பிடுன்னு சொன்னாங்க.... நான்தான் மறந்திட்டேன்.... அப்புறமா நேத்துத்தான் அனுப்பிட்டியான்னு கேட்டப்போ நான் அழுதிட்டேன்.... சரிசரி.... அழாத.... பக்கத்து வீட்டு மாமாவை கூட்டிக்கிட்டுப் போயி, எடிட்டர்கிட்ட நேரில லெட்டரைக் குடுத்திட்டு வா.... அடுத்த பிரிண்டு ஏத்துரதுக்குள்ள மெய்க்கீர்த்தி சாரு கையில இந்த லெட்டர் கிடைக்கணும்னு என்கிட்ட சொல்லி, பக்கத்து வீட்டு மாமா கையில துட்டுக்குடுத்து, ஏதோ வெவரங்களை சொல்லி ரண்டுபேரையும் அனுப்பி வெச்சாங்க... மெய்க்கீர்த்தி சாருகிட்ட குடுத்திடுங்க சார்….”
கடிதத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
“மதிப்பிற்குரிய பத்திரிகை ஆசிரியருக்கு .....” எனத் தொடங்கி எழுதப்பட்ட கடிதத்தில், முக்கியமாக ......“குழந்தைகள் கடத்தியான அவன், சமூகத்துக்கும், தனக்கும் இளைத்த கொடுமைகளை மறந்து, அவனுக்கு உதவ முயன்றது, சுமித்ராவிடமுள்ள மனிதாபிமான உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம்.... ஆனால், அவன் தெருவினிலே பாதிக்கப்படுவதற்கான காரணம், ஏற்கனவே அவனால் பாதிக்கப் பட்டவர்களது வேதனையின் வெளிப்பாடு என்பதையும்,
சுமித்ரா உணரவேண்டும் அல்லவா...! அதை உணராமல், அவனுக்கு உதவும் பட்சத்தில், அடுத்தடுத்து சுமித்ரா எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள், அவளை தேவையில்லாத சிக்கல்களில் விடுவதுடன்..., தன்னையே நம்பியிருக்கும் ஆசிரமம்வாழ் ஜீவன்களையும் தவிக்கவிடும் சூழ்நிலைக்கு ஆக்கிவிடும் என்பதை அவள் உணரத் தவறக்கூடாது............! இந்தத் தொடரைப் படித்து முடிக்கும் வரையாவது, என்னுயிரை எடுத்துவிட வேண்டாமென்று இறைவனை இறைஞ்சுகின்றேன்...!
“இந்தளவுக்கு ஆர்வம்மிக்க வெறித்தனமான விமர்சகரா! ஒரு விமர்சனக் கடிதத்துக்காக மினைக்கெட்டு பணம் செலவைப் பாராது திருநெல்வேலியிலயிருந்து சென்னைக்கு…. அதுசரி.... மாநாட்டுக்காக யாழ்ப்பாணத்துக்கே போய்வந்த ஆளில்லியா.... ” என் கண்கள் பனித்தன. அவரை எண்ணி என் உள்ளம் விம்மியது.
“ கங்காதரனை நேரிலே பார்த்தே ஆகவேண்டும்....” இப்போது என் உள்ளம் ஆவலுற்றது .
“இந்தா பாரும்மா யாழினி.... தாத்தாகிட்ட நான் சொன்னேன்னு சொல்லும்மா.... அடுத்த தொடரோட இந்தக் கதை முடியப்போகுதுன்னு எல்லாத்துக்குமே தெரியும்…. கடைசித்தொடர் வந்த ரெண்டாம் நாள் மெய்க்கீர்த்தி சார் வீரவநல்லூருக்கே வந்து, உங்களை நேரில பாப்பாங்க…. ஒண்ணும் யோசிக்க வேணாம்.... உடம்பை பத்திரமா பாத்துக்கணும்னு நான் சொன்னதா சொல்லு....”
“மெய்க்கீர்த்தி சாரை கண்டிப்பா அனுப்பி வெச்சுடுங்க ...” அவள் புறப்பட்டாள்.
இறுதி அத்தியாயம் வெளிவந்துவிட்டது.
மறுநாள் வேலைகளை அவசரமாக முடித்தேன். சப்-எடிட்டரிடம், சில பொறுப்புகளைக் கவனிக்கும்படி கூறிவிட்டுக், கங்காதரனைச் சந்திக்கத் திருநெல்வேலி – வீரவ நல்லூருக்குப் புறப்பட்டேன். பஸ்சைவிட்டு இறங்கி வீட்டை விசாரித்தபோது, பேரதிர்ச்சி காத்திருந்தது. கங்காதரன் நேற்று காலமாகிவிட்டார்.
“சத்து நேரத்துக்கு முன்னாடிதான் தூக்கிட்டுப் போனாங்க.... ” தெருவிலே யாரோ சொன்னார்கள்.
“கொஞ்சம் முன்கூட்டியே, வந்திருந்தால் முகத்தையாவது பார்த்திருக்கலாமே..” உள்ளம் துடித்தது.
தகனக் கொட்டகையை அடைந்தபோது அனைவரும் சென்றுவிட்டனர்.
ஏற்கனவே சந்திக்காமல், கவி காளமேகத்தின்மீது பற்றுக் கொண்டிருந்த இரட்டைப் புலவர்கள், சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்து - ஆவலோடு வந்தபோது, காளமேகம் காலமாகி, இதேபோல உடல் தகனம் நடை ற்றுக்கொண்டிருந்ததாக இலக்கியத்தில் படித்திருக்கின்றேன் ! இலக்கியத்தில் படித்துக் கொள்ளும்போது இதயம் ரசிக்கிறது.. இயல்பிலே பட்டுக்கொள்ளும்போது வலிக்கிறதே...!
சுவாலை விட்டெரிந்த தீயின் கொழுந்து - காற்றோடு கலந்து தந்த ஒலியைவிட, என் இதயத்திலிருந்து எழுந்த தீயின் கொழுந்து – ஏக்கத்தோடு கலந்துவந்த பெருமூச்சு ஒலியே பலமாகக் கேட்டது. அவரது வீட்டுக்குச் சென்றபோது யாழினியே பேசினாள்.
“முந்தாநாத்து சிறகுப்பேனா வந்த ஒடனேயே தாத்தாக்குப் படிச்சுக் காமிச்சோம்.... ரண்டுதரக்கா திரும்பத்திரும்ப படிக்கச் சொன்னாங்க.... முடியாம படுத்துக்கிடந்த ஆளு , சிரிச்சுக்கிட்டே எந்திரிச்சு உக்காந்திட்டாங்கன்னா பாருங்களே....
ஆமா.... மெய்க்கீர்த்தி சார் வருவாங்கன்னு சொன்னீங்களே.... வரல்லியா....”
நெஞ்சில் ஈடியால் குத்தியதுபோல் இருந்தது.
“ கங்காதரனிடம் ஏற்கனவே என்னை அடையாளம் காட்டியிருக்கலாம், தப்பு பண்ணிட்டேனே….” மனச்சாட்சி உறுத்தியது.
சமாளித்துப் பேசினேன்.
“ஆமாம்மா.... அவங்களும் வர்ரதாத்தான் இருந்திச்சு.... ஆனா முடியல்ல....” கண்ணில் நீர்த் திரட்சி. நெஞ்சில் குறுகுறுப்பு.
“சாரு.... அந்தக் கதை முடிவைப் படிச்ச கையோட தாத்தா எந்திரிச்சு உக்காந்துகிட்டு ஒரு பேப்பரில தானே தட்டுத் தடுமாறிகிட்டு எழுதினாங்க.... மெய்க்கீர்த்தி சார் வர்றப்ப நேரில குடுத்து வாழ்த்தணும்.... பத்திரமா வச்சுக்க….”
அப்பிடீன்னு சொன்னாங்க.. ஆனா, பத்து நிமிசத்தில எங்களை விட்டுப் போய்ட்டாங்க .... இருங்கசாரு ... அதை எடுத்துகிட்டு வர்ரேன்..... பத்திரமா மெய்க்கீர்த்தி ஐயாகிட்ட சேத்திடுங்க…. .” கொண்டுவந்து கொடுத்தாள்.
இது - பக்கம், பக்கமாயுள்ள விமர்சனமல்ல ! ஒரே வரியில், பக்கா “ஆசீர்வாத” மாக , வாழ்த்தியது.
“மெய்க்கீர்த்தி பெறவேண்டும் பலகீர்த்தி..., – கங்காதரன்”
“என் எழுத்துலக வாழ்க்கைக்கு, என்றுமே கிடைக்க முடியாத , கோடிக்கணக்கான சாகித்ய அகாதமிகள் சேர்ந்த உணர்வு பூர்வமான விருது ! எழுத்துலக விமர்சகர், திறனாய்வாளர் ஒருவர், தனது இறுதி மூச்சோடு கலந்து
தந்த – இனிய முடிவுரை ! ”
“இத்தகைய உணர்வு பூர்வ விமர்சகருக்கு, நன்றிக் கடனாக என்ன செய்வது….?”
யோசித்து முடிவு எடுத்தபோது, உள்ளம் தெளிவு பெற்றது.
நாவல் இலக்கிய வரலாற்றில், இதுவரை அன்னை, தந்தைக்கும், ஆசானுக்கும் ஏற்றப்பட்ட “சமர்ப்பண” தீபம், அதற்கு நல்ல திரியாக இருந்து தூண்டிக்கொண்டிருக்கும், ஒரு விமர்சகருக்காக ஏற்றப்படுவதில் என்ன தவறு.
ஆமாம் : எனது முழு நாவல் “அவள் ஒரு காவல் தெய்வம்” நன்றியுடன் கங்காதரனுக்கே “சமர்ப்பணம்” ஆகிறது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|