- அண்மையில் முகநூலிலும், பதிவுகள் இணைய இதழிலும் எழுத்தாளர் அமரர் அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் பற்றியொரு குறிப்பினையிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாக பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் மின்னஞ்சலொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -
அன்ப! எனது ஆசிரியப்பெருந்தகை அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் தொடர்பான தங்களது பதிவையும் அத்துடனமைந்த முகநூற்பதிவுகளையும் (20-07-2019) பார்த்து மிக மகிழ்ந்தேன். திரு. அப்பச்சி மகாலிங்கம் அவர்கள். ஏறத்தாழ1955-1964) காலகட்டத்தில்முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் அவரிடம் பயிலும் வாய்ப்புப் பெற்ற பலருள் நானும் ஒருவன். . எனக்குப் பல்கலை கழகம் செல்வதற்கான பாதையை அமைத்தளித்த பேராசான்கள் மூவரில் அவரும் ஒருவர். அவருடனிணைந்து என்னை இலங்கைப் பல்கலைக்கழகத்தை நோக்கி வழிநடத்திய . ஏனைய இருவருள் ஒருவர் வித்துவான் த. செல்லத்துரை. இவர் அளவெட்டியச் சார்ந்தவர்.இன்னொருவர் எனது ஊரான முள்ளியவலையைச்சேர்ந்தவரான முல்லைமணி வே. சுப்பிரமணியன் அவர்கள்.
வித்தியானந்தக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதரம் சித்தியெய்தியபின்னர் ஊர்ச் சூழலில் புரோஹிதனாகவும் கோயில் பூசனாகவும் பணியாற்றிக்கொண்டிருந்த என்னை மீண்டும் வித்தியானந்தக்கல்லூரிக்கு அழைத்து , என்னை முன்னிறுத்திக் க. பொ.த. உயர்தரவகுப்பை உருவாக்கிக் கற்பித்தவர்கள்,அவர்கள். இம்மூவரும் வித்தியானந்தாக் கல்லூரியில் அக்காலப்பகுதியில் பணியாற்றியிராவிட்டல் நான் பல்கலைகழகக் கல்வியைப் பற்றியோ தமிழியல் ஆய்வில் கால் பதிப்பது பற்றியோ கற்பனைகூடச் செய்திருக்கமுடியாது. அதனால் என்னுடைய நேர்காணல்கள் மற்றும் சுயவரலாற்றுப்பதிவுகள் ஆகியவற்றில் எனது வழிகாட்டிகளகிய மேற்படி மூவரையும் நான் தவறாது நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்துவருகிறேன்.
ஒரு ஆசிரியர் என்றவகையிலே அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் சிறந்தவொரு வழிகாட்டியாவார். தான் கற்றறிந்தவற்றை மாணவர்களுக்கு முழுவதுமாக அள்ளிவழங்கும் ஒரு அறிவு வள்ளலாகவே திகழ்ந்தவர், அவர். இலக்கியம், வரலாறு , அரசறிவியல்,பண்பாடு முதலான பல பாடத்துறைகளிலும் தனது பார்வைகளை விரிவுபடுத்திநின்ற அப்பெருமகன் வகுப்புக்கு வரும் ஒவ்வொரு நாளிலும் அறிவுசார் புதிய தகவல்களுடன் வருவார். அவரிடம் பாடங்கேட்பதே ஒரு சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து வகுப்புகளுக்குச்சென்று படித்த நாள்கள் எனது நினைவுகளில் மீள்கின்றன.
கடந்த ஏறத்தாழ எழுபது ஆண்டுகளில் நான் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களைத்தரிசித்துள்ளேன். பெருந்தொககையான பேராசிரியர்களுடன் நெருங்கிப் பழகியுமுள்ளேன். அவர்களுள், நல்லாசிரியர்கள் என்றவகையில் என் நெஞ்சில் இடம்பிடித்து நீங்காது நிலைபெற்றிருக்கும் சிலருள் முக்கியமான ஒருவர் அப்பச்சி மகலிங்கம் அவர்கள் என்பதை இங்கு மனநிறைவுடன் பதிவுசெய்கிறேன்.
அவர் ஒரு நல்லாசிரியராக மட்டுமன்றிப் பல்துறை ஈடுபாடுகள் கொண்ட சிறந்த கலைஞராகவும் சிந்தனையாளராகவுங்கூட த் திகழ்ந்தவர். கவிதை, சிறுகதை, நாவல்,நாடகம் ( எழுத்து,இயக்கம் , நடிப்பு) மற்றும் திறனாய்வு எனப் பல்வேறு துறைகளிலும் தன்னை அடையாளங் காட்டிக்கொண்ட அவர், அகில இலங்கை நிலையில் பல பரிசில்களை ஈட்டிக்கொண்டவருங்கூட.. 1960களின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் எழுதிய நீதிக்கு ஒருவன் என்ற நாடகப் பிரதி இலங்கைக் கலைக்கழகத்தின் முதற்பரிசைப் பெற்றது . அத்தொடர்பில் வித்தியானந்தக்கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் அவரைப் பாராட்டி மகிழ்ந்த நிகழ்வு எனது நினைவுகளில் மீள்கிறது.
இவ்வாறான கல்விசார் பல்துறைத் திறன்கள் கொண்டிருந்த திரு அப்பச்சி மகாலிங்கமவர்கள் மாணவர்களுக்கான ஒரு Role model ஆகத் திகழ்ந்தவருமாவார்
- அமரர் அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் மனைவியுடன் -
நான் யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றியபோது எழுதிய ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற ஆய்வு நூலின் முதற்பதிப்பு 1978இல் யாழ். பல்கலைக் கழகத்தில் வளாகத்தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தலைமையில் வெளியிடடப்பட்டது. அந்நிகழ்வில் வெளியீட்டுரை நிகழ்த்துமாறு திரு. அப்பச்சி மகாலிங்கம் அவர்களையே கேட்டுக்கொண்டேன். அவரும் மனமுவந்து அதனை நிகழ்த்தி என்னை மகிழ்வித்தார்.
மேலும் கலை இலக்கிய அரங்குகள் பலவற்றில் அவருடன் நான் இணைந்து இயங்கிய நிகழ்வுகள் பலவுங்கூட மனத்திரையில் காட்சிக்குவருகின்றன.
இங்கு இந் நினைவுக்குறிப்பை நிறைவுசெய்யும் நிலையில் அப்பெருமகனைப்பற்றி நான் எழுதிய மூன்று பாடல்களை மட்டும்பதிவுசெய்ய விழைகிறேன். இவை, 1964-65 காலப்பகுதியில் வித்தியாநனந்தக்கல்லூரியினர் அவருக்களித்த பிரிவுபசாரத்தின்போது ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டபடி என்னால் எழுதப்பட்டவை. ஐந்து பாடல்கள் எழுதியிருந்தேன். அவை பிரிவுசாரப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தன. அப்போ அவற்றை நகலெடுத்து பேணும் சிந்தனை உருவாகியிருக்கவில்லை. இப்போ எனது நினைவிலிருந்தே இப்பாடல்களை இங்கு பதிவுசெய்கிறேன். ( அவருக்கு அப்பொழுத் அளித்த பிரிவுசாரப் பத்திரமானது அவருடைய மகனிடம் பேணப்பட்டநிலையில் இருப்பின் முழுப்பாடல்களையும் காணும் வாய்ப்பு கிடைக்கலாம்)
எப்பற்றும் விட்டவர்க்கு வீட்டைக்; காட்டும்
இறையருள்போல் நல்லவழி எமக்குக்காட்டி
ஒப்பற்ற ஆசிரியத் தகைமை பூண்ட
உத்தமனே! பழகுவதற் கினிய நண்பா!
இப்பத்து ஆண்டுகளாய் எம்மோடொன்றாய்
இருந்துவிட்டு இடமாற்றம் பெற்றுச்செல்லும்
அப்பச்சி மகாலிங்கம் என்னும் நாமத்து
ஆசிரிய! உமைப் பிரிதல் எமக்குத் துன்பம்.
ஆசிரியப் ..பெருந்தகையே வணக்கம் இங்கே
அகக்கல்வி புறக்கல்வி இரண்டும் உங்கள்
பேசரிய திறமையினால் மிளிரும். தாங்கள்
பிரிந்தெம்மைச் செல்வதனால் வித்யானந்தா
ஆசிரிய மணியொன்றை மட்டு மன்றி
அரியதொரு கலைஞனையும் இழக்கும். நெஞ்சில்
பாசமது நீங்காது என்றும் எங்கள்
மனத்திரையில் ஓவியமாய்த் திகழ்வீர் தாங்கள்
கலைக்கழக முதற்பரிசில் ஈழ நாட்டின்
கதைப்பரிசில் வள்ளுவர்க்குக் கவிதை தந்து
விலைக்கரிய பொற்பதக்கப் பரிசில் என்று
வேண்டுமட்டும் பரிசுகளால் உயர்ந்தீர். தங்கள்
மலைக்குநிகர் மனவுறுதி மாணாக்கர்க்கு
வழங்குமுயர் வள்ளன்மை இவற்றோடன்பு
தழைக்குமுயர் முறுவலொளி முகமுங்கண்டு
தணியாத அன்பென்னும் பரிசும் தந்தோம்.
முனைவர் நா. சுப்பிரமணியன் -
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
28-07-2019
முகநூல் எதிர்வினைகள் சில:
Vadakovay Varatha Rajan: அருமையான நினைவு கூரல்
Alex Paranthaman: நன்றி மறவாக் கடன்பணியிது!
Kanagaratnam Balendra: நல்ல பதிவு.
Sivanesaselvan Arumugam : A good note
Yazhkovan Balasundaram: நன்றி மறவா இருதயம்.
Kuppilan Shanmugan: அருமையான, இனிமையான பதிவு.வாழ்த்துக்கள்.
K S Sivakumaran : பேராசிரியர் நா,சுப்ரமணியஐயர் புகழ் ஓங்குக. அவர் இலக்கிய உலகுக்கு செய்த பங்களிப்புகள் அநேகம். பழகுவதற்கு நல்லதோர் நண்பர், அவர் சகோதரியின்,அவரின் மகன்களும் நான் விரும்பும் களைத்த திறன் வாய்ந்த இளைஞர்கள். அப்பச்சி மஹாலிங்கம் சிறுகதைகளை நான் விரும்பி படித்ததும் உண்டு. நண்பர் கிரிதரனவர்களுக்கும் நன்றி.
•<• •Prev• | •Next• •>• |
---|