தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் - நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு பண்பாடுகளின் மதிப்பீடுகள்தான் மானுட தரிசனத்தை முன்வைக்கக் கூடியன.
அ.முத்துலிங்கம் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு. அங்கு தான் சந்திந்த - அவதானிந்த - மனிதர்களின் ஊடாக கண்டடைந்த தரிசனத்தை கதைகளாகப் புனைந்தார். ஏராளமான நுண்தகவல்களும் நகைச்சுவை உணர்வும் கதையை மேலோட்டமாக நகர்த்தினாலும் உள்ளே இருக்கும் மானுட நாடகீயம் அந்நியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவைதான்.
ஏறக்குறைய ஆசி.கந்தராஜவுக்கும், அ.முத்துலிங்கம் போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசித்த வாழ்க்கை அமைந்தது. அங்கு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஊடாக கிடைத்த தரிசனத்தை அ.முத்துலிங்கம் போன்று கதையாக எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. ஆசி.கந்தராஜாவின் கதைகளிலும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் போல ஏராளமான நுண்தகவல்கள் பின்னிப்பிணைந்து வரும். குறிப்பாக தாவரவியல், விவசாயம் சார்ந்த இடங்களில் ஆசி.கந்தராஜா ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குவார். சில நேரங்களில் வரைவிலக்கணம் போன்ற தன்மையை இந்த தகவல்கள் பெற்று விடுகின்றன. அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இந்த வரைவிலக்கணத் தன்மைகள் இருப்பதில்லை. கதையோடு இயல்பாக அவை பொருந்திப் போகின்றன.எஸ்.பொன்னுத்துரைக்குப் பின்னர் யாழ்ப்பாண வட்டார வழக்கின் செழுமையை ஆசி.கந்தராஜாவின் கதைகளில் நோக்க இயலுகிறது.
சமீபத்தில் வெளியாகிய ஆசி.கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று சிறுகதைகள் உள்ளன. புலம்பெயர் நிலங்களில் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவுஸ்ரேலியாவில்.
இத்தொகுப்பின் கதை சொல்லிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை வன்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோ அல்லது அந்தக் காலப்பகுதியை ஒட்டி நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையை நிறைவு செய்து தொழில் ரீதியாக முன்னே பாய முற்படுபவர்கள்.
கீழைத்தேய பண்பாட்டில் வளர்ந்த ஒருவன் மேலைத்தேய பண்பாட்டுக்கோ அல்லது வேறு பண்பாட்டுத் தளத்துக்குள்ளோ நுழையும்போது அவன் அடைகின்ற திகைப்பு என்பது கலாச்சார வேறுபாடுகளில் மிக முக்கியமானது. இந்த அனுபவம் வேடிக்கையை, குழப்பங்களை, தடுமாற்றங்களை முதலில் உருவாக்கும். இவற்றை சாதாரணமாக சிறுகதைகளில் சொல்ல முற்படுகின்றபோது எந்தவித ஆழமான உரையாடல்களுக்குள்ளும் செல்லாமல் வெறுமனே செய்திகளாக எஞ்சிவிடும். இத்தொகுப்பில் உள்ள ‘மிருகம்’ என்கிற சிறுகதையில், கொரியாவில் இருக்கும் ஹோட்டல்களை குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்ய பல நிறுவனங்கள் முயல்கின்றன. அதில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் போட்டியிடுகிறது. அந்த நிறுவனம் தனக்குக் கிடைக்கும் லாபத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும் இருக்கிறது. அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றில் புலம்பெயர்ந்து வேலை பார்க்கும் - இலங்கையை பூர்விகமாகக் கொண்ட - சதாசிவம், தொழில் விசுவாசத்துக்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தை தந்திரமாக வீழ்த்தி, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்காக வெற்றிவாகை சு10டுகிறார். சொந்த இனத்தின் நலனை தானே முன்னின்று அழிக்கிறார். இது மனிதனுக்கே உரிய குணம், அவனது சுயநலத்தால் உருவாவது. மிருகங்களுக்கு இந்தக் குணங்கள் இருப்பதில்லை. ஜிம்மி என்கிற சதாசிவத்தின் வளர்ப்பு நாயின் ஊடாக மிருக இயல்பின் உன்னதத்தையும், மனித இயல்பின் கொடூரத்தையும் புனைவின் ஊடாக வெளிப்படுத்தி இருப்பார் ஆசி கந்தராஜா. இந்தக்கதை தொட்டிருக்க வேண்டிய உச்சம் என்பது மிக அதிகம். சதாசிவத்தின் குற்றவுணர்வு வெளிப்படும் தருணங்கள் ஊடாக கதையின் வீச்சினை மேலும் மெருகூட்டியிருக்கலாம். ஆனால், சுற்றுலா கட்டுரைகளில் இருக்கவேண்டிய தரவுகளுடன் அந்தக்கதை முடங்கிப்போய்விடுகிறது.
‘வெள்ளிக்கிழமை விரதம்’ என்கிற சிறுகதையில், விரிவுரையாளராக பணி செய்யும் வீரசிங்கம் ஆபிரிக்க நாடு ஒன்றுக்கு சிறப்பு விரிவுரை நிகழ்த்த வந்திருக்கிறார். கடுமையாக விரிவுரை பாடத் திட்டங்களுக்கு முன் தயாரிப்புகளில் ஈடுபடுகிறார். முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். இருந்தும் அவரது வெள்ளிகிழமை விரிவுரைக்கு பெண்களில் பலர் வருகிறார்கள் இல்லை. அதற்கான காரணம் என்னவென்று கண்டு கொள்ளும் இடத்தில் ஒரு சிறிய கலாசார அதிர்ச்சி நிகழ்கிறது. ஆபிரிக்க பெண்களுக்கு திருமணம் நிகழும்போது ‘மணப் பெண் கூலி’ என்கிற கூலியை திருமணம் செய்யப்போகிறவர் பெண்ணின் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும். பெண்ணை பெற்று வளர்த்து, இப்போது இன்னொரு குடும்பத்துக்காக உழைக்க அனுப்பிவைக்க உள்ளதால், இவற்றை எல்லாம் பெண்ணுக்கு கற்றுக் கொடுத்து வளர்த்ததற்கான நஷ்ட ஈடு போன்றது இது என்று விளக்கப்படுகிறது. வீரசிங்கம் தனது பண்பாட்டுடன் இணைத்து, தனது பண்பாட்டில் பெண்ணை பெற்றவர்தான் ஆணுக்கு சீர்வரிசை கொடுப்பார்கள். ஆனால், இங்கு மாறி நிகழ்கிறது என்று எண்ணுவார். அது சார்ந்தும் அதன் ஆணாதிக்க முறைகள் சார்ந்தும் அவர் விவாதிப்பார். ஆனால், கதையில் இவையனைத்தும் வெறும் தகவல்களாக எஞ்சுகின்றனவே தவிர ஆழமான பண்பாட்டு மதிப்பீட்டு விவாதங்களுக்குள் செல்லவில்லை. திருமணம் என்ற துணைத் தேர்வில் நிகழும் பெற்றோரின் அதிகார துஷ்பிரயோகங்கள் மீதான கண்டடைதலை நிகழ்த்தவில்லை. அதனால் இக்கதை கழிவிரக்கத்தை உண்டு செய்யும் புனைவாக மாத்திரம் தனக்குள் ஒடுங்கிவிடுகிறது. அதைத் தாண்டி செய்ய வேண்டிய கலாசார மதிப்பீடுகள் இக்கதையில் இல்லாமலே இருக்கிறது என்பதை முதன்மையான குறையாச் சுட்டலாம்.
‘காதல் ஒருவன்’ என்கிற சிறுகதை ஈரான் நாட்டில் இருந்து மேல்படிப்பைத் தொடர்வதற்காக அவுஸ்ரேலியா வந்த தம்பதிகள் பற்றிய சிறுகதை. இக்கதையும் வீரசிங்கம் என்ற பேராசிரியர் ஊடாக அவரின் மனப்பதிவுகள் ஊடாக நகரும் கதை. ஈரானிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புக்காக மனைவி ‘றோஸ்நாக்’ உடன் வந்திருக்கும் அமீர், வீரசிங்கத்திற்கு கீழ் ஆராய்ச்சி படிப்பை தொடர்கிறான். அவுஸ்திரேலிச் சூழலில் அந்நியப் பண்பாட்டை நோக்கும் றோஸ்நாக் பெண்ணியவாதிகளுடன் சேர்ந்து பெண்களின் உரிமை சார்ந்து சிந்திக்கிறாள். இதுவரை அணிந்திருந்த பர்தாவை வீசிவிட்டு வெளியே நடமாடத் தொடங்குகிறாள். கார் ஓட்டக் கற்றுக்கொண்டு பிறருடன் தங்கியிருக்காமல் சுயமாக வாழ முனைப்படைகிறாள். இது அவளது கணவர் அமீருக்கு கடுமையான அழுத்தத்தை அங்கு வசிக்கும் மற்றையை இஸ்லாமிய நண்பர்களின் மூலம் கிடைக்கிறது. இதனால் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்படுகின்ற சண்டை குடும்பத்தை சிதைக்கிறது. இவற்றை வெளியே இருந்து நோக்கும் வீரசிங்கம் பலவருடங்கள் கழிந்த பின்னர் மீண்டும் றோஸ்நாக்கை சந்திக்கும்போது மனம் திறந்து பேசுகிறார். அந்த உரையாடல்கள் மிக முக்கியமானவை. ‘அடிப்படைவாதச் சிந்தனை கொண்டவர்களைத்தான் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் கொடுக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மணம் முடித்த கடும்போக்காளர்களாக இருப்பார்கள். அதற்கான விசேட பரீட்சையில் சித்திபெற வேண்டும்’ - போன்ற தகவல்களை அப்போது ரோஸ்நாக் வீரசிங்கத்திடம் சொல்கிறாள். இவ்வாறு இக்கதை சென்று தொடும் முடிச்சுக்களுடன் உறைந்திருக்கும் தகவல்கள் இக்கதையை ஆழமான பண்பாட்டு விவாதத்திற்குள் இழுத்துச் செல்கிறது.
ஆசி.கந்தராஜாவின் பலம் என்பது தகவல்களும் புறவய சித்தரிப்பில் இருக்கும் யதார்த்தமும் என்று கொள்ளலாம். அனேகமான கதைகளில், கதை சொல்லி தனக்குத் தெரிந்த நண்பர்கள், நபர்களின் கதைகளை இணைக்கும் மையச் சரடாக இருக்கிறார். இதேவகை உத்தி தொடர்ந்து பயின்று வருவது ஓர் உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும் அபாயம் நிறைந்தது. இவற்றைக் கடந்து இன்னும் நிறைய எழுதுவதற்கான களம் ஆசி.கந்தராஜவுக்கு உண்டு.
- எதிரொலி சஞ்சிகையில் வெளியான கட்டுரையைப் பதிவுகளுக்கு அனுப்பி வைத்தவர்: ஆசி.கந்தராஜா -
•<• •Prev• | •Next• •>• |
---|