ஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு இருக்கிறது. கவிஞனின் கற்பனையில் உதிக்கும் கவிதையாயினும் சரி, உண்மைச் சம்பவமாயினும் சரி இரண்டுமே வாசகனின் மனதில் நிறைந்துவிடக் கூடியதாக இருக்கின்றது.
இலக்கியத் துறையில் காலடி எடுத்துவைப்பவர்கள் எல்லோரும் பல்வேறு துறைகளிலும் தனித்துவமாக மிளர்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு இலக்கியவாதி கவிஞனாக, கணக்காளனாக, வைத்தியனாக, வியாபாரியாக, ஆசிரியனாக, சட்டத்தரணியாக என்றெல்லம் பல்தரப்பட்ட துறைகளிலிருந்தும் இலக்கியம் படைக்கின்றான்.
அந்தவகையில் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா அவர்களும் தனது தம்பியார் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் என்ற கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவரது கவிதை வீச்சு, வாள் வீச்சைப் போன்று வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர். அதேநேரம் கனிந்த இதயமும் உதவி செய்யக் கூடிய குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார்.
''தம்பியார்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்ப்பட்டுள்ளது.
இதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்தனைக்குள் சொருகி சிந்திக்க வைப்பதாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மைமக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின்;போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. அவர்களின் நலனுக்காக பாடுபட்டிருக்கின்றது.
இதுபற்றி நூலாசிரியர் தனது உரையில் ''சிறுபான்மை என்றால் அடிமைகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். இந்தநாட்டில் சிறுபான்மை இன மக்களின் இருப்பைப் படுகுழியில் போட்டு மூடிவிட்டு பெரும்பான்மையினர் என்று பெரிய அளவில் பட்டப் பகலில் அட்டூழியம் புரிபவர்களுக்கு எதிராக எனது கவிதைகள் பெரிய ஊசிபோடும்'' என்று தனது ஆழ்மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பிக்குகள் ஓதும் குர்ஆன் (பக்கம் 01) என்றமுதல் கவிதையின் தலைப்பே ஒரு வேகத்தோடும் விவேகத்தோடும் இடப்பட்டடிருப்பது நன்கு புலப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித வேத நூலான அல்குர்ஆனை விமர்சித்து அதற்கு எதிராகப் பேசியமையை எதிர்த்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.
துப்பாக்கியின் நிழலில்
என்னைஅமரச் செய்து
என் கையில்
பிரித் நூலைக் கட்டினர்...
அவர்களிடம்
விசிறிகளுக்கு பதிலாக
அல்குர்ஆன் இருந்தது..
..அங்கொன்றும் இங்கொன்றுமாக
அதில் பிழைகண்டனர்..
பால் அம்மா (பக்கம் 04)
என்ற கவிதை ஆகுமாக்கபட்ட உணவுகளை பசுவதை என்ற பெயரில் தடுத்துக்கொண்டிருக்கும் கும்பலின் இழிசெயல் பற்றிப் பேசுகின்றது. குவியல் குவியலாக மக்கள் இறந்துபோன இந்த நாட்டில் உணவுக்காக மாடுகளை அறுப்பது பற்றி போலிக் கண்ணீர் வடிக்கின்றவர்களைச் சாடி நிற்கின்றது இந்தக் கவிதை.
எத்தனையோ
எமது அம்மாக்களை
சும்மாக்கள் என்று
சுட்டுத் தள்ளியவர்கள்
ஷஷகிரி|| அம்மாவின்
முலையில் வாய் வைத்து
தாய்ப் பால் குடித்ததாய்க் கூறி
தமக்குத் தாமே
தீ மூட்டிக் கொள்கின்றார்கள்..
இன்பமயமான கதைகளைக் கேட்டுவளர வேண்டிய எமது எதிர்கால சந்ததியினருக்கு இரத்த வரலாற்றைப் பரிசளித்த தேசம் நம்முடையது. போர்க் காலத்தில் நடந்த அவலங்களின் எச்சசொச்சம் இன்னும் வடுக்களாக காணப்படுகின்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என்று ஒரு பெருங்கூட்டம் இன்னும்கூட கையறு நிலையில் தம் காலத்தைக் கடத்துகின்றது. அத்தகையவர்களுக்காய் எழுதப்பட்ட கவிதையாக மொழிபெயர்க்கப்படாத வலிகள் (பக்கம் 25)
காணப்படுகின்றது.
நிறம் மாறிய தேசத்தில்
நீதி மறுக்கப்பட்ட
யாருக்கும் புலப்படாத
மௌன ஜீவன்களின்
ஒவ்வொரு விடியலும்
வலி சுமக்கும் முடிவுகளில்
அப்பாவிகளாய் திக்கற்றுத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளுக்காக துணிந்து வந்து குரல் கொடுத்திருக்கும் ஒரு வைத்தியக் கவிஞன் அஸாத் எம். ஹனிபா அவர்கள். சாத்வீகப் போராட்டங்களால் பெறமுடியாத உரிமைகளால் துவண்டு போய்க் கிடக்கும் மக்களுக்காகக் கிடைத்த ஒரு புரட்சியாளன் இவர். இவரது இலக்கியப் பணியும் சமூகப் பணியும், வைத்தியப் பணியும் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!!!
நூல் - தம்பியார்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - அஸாத் எம். ஹனிபா
வுpலை - 400 ரூபாய்
வெளியீடு - ஏ.ஜே. பதிப்பகம்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|